முன்னோக்கு

வூஹான் ஆய்வகப் பொய்யும், அமெரிக்க போர் பிரச்சாரமும்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

ஜூலை 20, 2021, செவ்வாய்க்கிழமை, வாஷிங்டனின் தலைமை செயலகத்தில், செனட் சபையின் சுகாதாரம், கல்வி, தொழிலாளர் மற்றும் ஓய்வூதியக் குழு விசாரணையின் போது, கென்டக்கியின் குடியரசுக் கட்சி செனட்டர் ராண்ட் பால், தொற்றுநோய் நிபுணர் டாக்டர் அந்தோனி பௌசியிடம் கேள்வி எழுப்புகிறார். [AP Photo/J. Scott Applewhite]

கோவிட்-19 வூஹான் நுண்கிருமியியல் ஆய்வகத்தில் (Wuhan Institute of Virology) இருந்து விடுவிக்கப்பட்டது என்ற சதிக் கோட்பாட்டைப் பரப்பும் வகையில் ஞாயிற்றுக்கிழமை வாஷிங்டன் போஸ்ட் ஒரு தலையங்கம் வெளியிட்டது. 

ஆனால், “வூஹான் மர்மத்தில் புதிய வெளிச்சமும், நீடிக்கும் கேள்விகளும் எழுகின்றன,” என்ற தலைப்பில் போஸ்ட் வெளியிட்ட சமீபத்திய தலையங்கம், அதன் முந்தைய அறிக்கைகளை விட ஒருபடி மேலே செல்கிறது. இதில், அதன் ஆதாரமற்ற பல குற்றச்சாட்டுக்களை ஒரு விஞ்ஞானப்பூர்வ கேள்வியாக கருதும் கோவிட்-19 இன் தோற்றுவாய்கள் மீதான எந்தவொரு ஆய்வில் இருந்தும் முற்றிலுமாக துண்டித்துக் கொள்கிறது.

முந்தைய தலையங்கங்களில், போஸ்ட் இன் ஆசிரியர் குழு, பெருவாரியான விஞ்ஞான கருத்தொற்றுமை “ஆய்வக கசிவு” சதிக் கோட்பாட்டை நிராகரிக்கிறது என்ற உண்மையைக் குறைந்தபட்சம் குறிப்பிட நிர்பந்திக்கப்பட்டிருந்ததாக உணர்ந்தது. ஆனால் விஞ்ஞான ஆதாரங்களின் பலம் கோவிட்-19 இயற்கையாக தோன்றியது என்பதற்கு ஆதரவாக திரண்டுள்ளதால், பெருவாரியான விஞ்ஞான கருத்தொற்றுமை போக்குக்கு எதிராக செல்லும் போஸ்ட் இன் பணி இன்னும் அதிக சிக்கலாகி உள்ளது.

விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு நேரடியாக எந்த செயல்முறையின் மூலமாக Sars-CoV-2 கொண்டு செல்லப்படுகிறது என்பதைக் கடந்த மாதம் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்த செயல்முறையே வரலாற்றில் ஒவ்வொரு மனித தொற்றுநோய்களுக்கும் காரணமாக இருந்துள்ளது. பிரெஞ்சு தேசிய விஞ்ஞான ஆராய்ச்சி மையத்தின் பரிணாம உயிரியல் துறை நிபுணர் டாக்டர் Florence Débarre இன் மிகச் சமீபத்திய ஆய்வு, வூஹான் உயிரி சந்தையில் இருந்து எடுக்கப்பட்ட Sars-CoV-2 உள்ள பரிசோதனை மாதிரிகளில் ரக்கூன் நாய்கள் போன்ற சுலபமாக பாதிக்கப்படக்கூடிய விலங்குகளின் DNA உம் இருந்ததை வெளிப்படுத்தின.

போஸ்ட் இன் வாதங்களை மறுத்தளிக்கும் அதிகரித்து வரும் விஞ்ஞான ஆதாரங்களை அது சர்வசாதாரணமாக புறக்கணித்து விடுகிறது.

போஸ்ட் தலையங்கத்தை விஞ்ஞானிகள் கடுமையாக கண்டித்திருந்தனர். 'ஒன்று விஷயம் தெளிவாகிறது: உண்மையில் இந்த விவகாரத்தில் 'புதிய வெளிச்சம்' கிடைக்கிறது என்றால், அது வாஷிங்டன் போஸ்டில் இருந்து வருவதில்லை,' என்று தடுப்பூசிகள் ஆய்வுத்துறை நிபுணர் பீட்டர் ஹோடெஸ் எழுதினார். 'எல்லா பொறுப்பற்ற ஊகங்களும், முக்கிய ஆய்விதழ்களில் வெளியிடப்பட்ட பெரும்பாலான விஞ்ஞான ஆதாரங்களை புறக்கணிக்கின்றன,' என்றார்.

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter

ஹோடெஸ் தொடர்ந்து எழுதினார்,

இந்தத் தலையங்க ஆசிரியர் குழு அறிக்கையை ஆதரிக்கும் விதமான விஞ்ஞான ஆய்வின் ஒரேயொரு இணைப்பாவது கொடுக்கப்பட்டிருந்ததா? எதுவும் இல்லை. ஏன் தெரியுமா? ஏனென்றால் அப்படி எதுவுமே இல்லை.

இந்தக் குறிப்பிட்ட பிரச்சினையில் இது 3 ஆவது அல்லது 4 வது முறையாக வாஷிங்டன் போஸ்ட் இவ்வாறு செய்கிறது. ஆகவே இது ஏதோ தெரியாமல் நடந்து விட்ட சிறு தவறோ அல்லது தற்செயலான நிகழ்வோ அல்ல. இதில் ஒரு திட்டநிரல் உள்ளது. அது பழைய ஹெர்ஸ்ட்-புலிட்ஜர் மஞ்சள் பத்திரிகை முறையை அல்லது பரபரப்பு ஊடகத்துறையை நெருங்கத் தொடங்கி உள்ளது. அது அதை நுகர்ந்து வருகிறது. … 

இது நியூ யோர்க் ஜேர்னலின் உரிமையாளரான வில்லியம் ராண்டால்ஃப் ஹார்ஸ்ட் வகித்த பாத்திரத்தைக் குறித்த ஒரு குறிப்பாகும். இவர் பரபரப்பான வாய்சவுடால் செய்திகள் மூலமாக 1898 ஸ்பானிஷ்-அமெரிக்கப் போருக்குள் அமெரிக்கா நுழைவதைத் திட்டமிட்டு தூண்டிவிட்டார்.

ஓவியக் கலைஞரான பிரெட்ரிக் ரெமிங்டனுக்கு ஹார்ஸ்ட் தந்திச் செய்தி அனுப்பியதாகக் கூறப்படும் விவகாரத்தில் ஹார்ஸ்ட் வகித்த பாத்திரம் எடுத்துக்காட்டப்பட்டது, “நீங்கள் படத்தை வரைந்து காட்டுங்கள், நான் போரை ஏற்படுத்திக் காட்டுவேன்,” என்று அவர் குறிப்பிட்டிருந்தார். ஸ்பெயின் மீது அமெரிக்கா போர் பிரகடனம் செய்து ஒரு வாரத்திற்குப் பின்னர், 'ஜேர்னலின் போர் எப்படி இருக்கிறது?” என்று ஹார்ஸ்ட் முதல் பக்கத்தில் எழுதினார்.

ஹார்ஸ்டின் பிரச்சாரத்தைப் போலவே, கோவிட்-19 பெருந்தொற்றுக்குச் சீனா மீது பழி போடுவதற்கான முயற்சியும், ஊடகங்கள் முடுக்கிவிட்டுள்ள ஒரு வெறுப்பு பிரச்சாரமாகும். இது போரை நியாயப்படுத்தும் நோக்கில் சீன விரோத வெறுப்பை பரப்புவதற்காக வடிவமைக்கப்படுகிறது.

ஹோடெஸ் சரியாகக் கூறுவது போல, இது ஒரு தவறு அல்ல, மாறாக ஒரு திட்டமிட்ட கொள்கையாகும். ஆனால் வாஷிங்டன் போஸ்ட் தனக்காகவோ அல்லது அதன் உரிமையாளரான பில்லியனர் ஜெஃப் பெசோஸ் சார்பாகவோ மட்டும் பேசவில்லை. இது அமெரிக்க அரசுக்காக பேசுகிறது.

பெப்ரவரியில், அமெரிக்க மத்தியப் புலனாய்வுத்துறை இயக்குனர் கிறிஸ்டோபர் ரே கூறுகையில், “இந்தப் பெருந்தொற்று பெரும்பாலும் வூஹானில் ஏற்பட்ட ஆய்வக விபத்தால் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது,” என்று பகிரங்கமாக வலியுறுத்தினார்.

தைவான் விவகாரத்தில் சீனாவுடன் மோதலைத் தூண்டுவதற்கு அமெரிக்கா வேண்டுமென்றே முயன்று வரும் வேளையில், ரே இந்த அறிக்கையை வெளியிட்டார். கடந்த மூன்று மாதங்களில், அமெரிக்கா தைவானில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க துருப்புக்களின் எண்ணிக்கையை நான்கு மடங்கு உயர்த்தி இருப்பதுடன், 'ஒரே-சீனா கொள்கையை' முடிவுக்குக் கொண்டு வந்ததுள்ளது. அது தைவானை நேரடியாக ஆயுதமயப்படுத்தி அந்தத் தீவு மீது சீனாவைப் படையெடுக்கத் தூண்டி வருகிறது. பின்னர் இதை, சீன-அமெரிக்க போரில் சீனா தான் “முதல் சுட்டது” என்பதாகச் சித்தரிக்க அமெரிக்கா பயன்படுத்திக் கொள்ளும்.  

2003 ஈராக் படையெடுப்பை நியாயப்படுத்த புஷ் நிர்வாகம் பயன்படுத்திய பொய்களுக்கு நிகராக, ரேயின் குற்றச்சாட்டும், உண்மையில், ஒரு திட்டமிட்ட பொய்யாகும். 

ஒட்டுமொத்த அமெரிக்க மற்றும் மேற்கத்திய ஊடகங்களும், பொதுமக்களிடம் பொய்யுரைக்க அரசுக்கு உரிமை உண்டு என்ற கொள்கையைப் பகிரங்கமாக தழுவியதன் பின்புலத்தில், போஸ்ட் வூஹான் ஆய்வகப் பொய்யை மீண்டும் பரப்பி வருகிறது.

இம்மாதத் தொடக்கத்தில் தொடர்ச்சியாக கசியவிடப்பட்ட பல பென்டகன் ஆவணங்கள், உக்ரேன் போரில் அமெரிக்கா ஈடுபட்டிருப்பதைக் குறித்து அமெரிக்க அரசாங்கம் திட்டமிட்ட முறையில் அமெரிக்க மக்களை தவறாக வழிநடத்துவதை அம்பலப்படுத்தியது. உக்ரேனில் 150 இக்கும் அதிகமான நேட்டோ துருப்புக்கள் நிறுத்தப்பட்டிருப்பதாகவும், உக்ரேனிய ஆயுதப் படைகளின் செயல்பாடுகளை நேட்டோ அதன் சொந்தப் படைகளுடன் இணைந்து இயங்கும் செயல்பாடாக பார்க்கிறது என்பதையும் அந்த ஆவணங்கள் எடுத்துக்காட்டி உள்ளன.

இதற்கு விடையிறுப்பாக, நியூ யோர்க் டைம்ஸ் அந்த ஆவணங்களை வெளியிட்ட நபரை பகிரங்கமாக அடையாளம் காட்டியது. பின்னர் அவர் ஒருசில மணிநேரங்களில் கைது செய்யப்பட்டார். அதேவேளையில் வாஷிங்டன் போஸ்ட், 'ஓர் அரசு செயல்பட இரகசியங்களைப் பேணுவது இன்றியமையாததாகும்,” என்று அறிவித்தது — இந்தக் கருத்து தோமஸ் ஜெபர்சனாலும் மற்றும் அமெரிக்க புரட்சியின் மற்ற தலைவர்களாலும் வரையப்பட்ட ஜனநாயகக் கோட்பாடுகளை முற்றிலுமாக கைத்துறக்கிறது.

ஆனால் சொல்லப் போனால் அரசின் பொய்களை மிகவும் அதிர்ச்சியூட்டும் அளவிற்கு பிரிட்டிஷ் கார்டியன் பாதுகாத்தது. அது ஒரு தலையங்கத்தில் குறிப்பிடுகையில், அரசின் பொய்களை அம்பலப்படுத்தி உண்மை விபரங்களை வெளியிடுவது “உயிர்களை ஆபத்திற்குட்படுத்துகிறது”, “இதுவரை இவ்வாறு பார்த்ததில்லை” என்றது அறிவித்தது.

குறிப்பாக ஒரு குறிப்பிட்ட முக்கியமான விஷயத்தில், அல்லது ஒரு போர் போன்ற ஒரு குறிப்பிட்ட முக்கிய காலக்கட்டத்தில், கசியவிடப்பட்ட ஆவணங்கள் ஓர் எதிரிக்கு உதவ முடியும், கூட்டாளிகளை நிலைகுலைக்க வைக்கும், தார்மீகத் தன்மையைப் பலவீனப்படுத்தலாம், இராணுவ சமநிலையை மாற்றி உயிர்களை ஆபத்திற்குட்படுத்தும் குறைந்தபட்ச சாத்தியக்கூறும் உள்ளது.

“பயங்கரவாதத்திற்கு எதிரான போர்” என்ற மூடுமறைப்பின் கீழ் புஷ் நிர்வாகம் உத்தரவாணையின்றி மிகப் பெரியளவில் நடத்திய உள்நாட்டு உளவுபார்ப்பு திட்டத்தை வெளியிட 2013 இல் எட்வார்ட் ஸ்னொவ்டனுடன் இணைந்து பணியாற்றிய கார்டியன், உண்மை விபரங்களை வெளியிடுவது “தார்மீகத் தன்மையைப் பலவீனப்படுத்தும்” என்று அறிவிப்பது ஊடகங்கள் எந்தளவுக்கு அரசின் தொங்குதசையாக மாறி உள்ளன என்பதற்குச் சாட்சியமளிக்கிறது.

'ஒரு போரின் போது' உண்மைத் தகவலை வெளியிட அனுமதிக்கக் கூடாது என்ற தகுதிப்பாடு அர்த்தமற்றது, ஏனென்றால் அமெரிக்கா தொடர்ந்து தசாப்தங்களாக போரில் ஈடுபட்டு வந்துள்ளது. இன்னும் சொல்லப் போனால் ஸ்னொவ்டனின் வெளியீடுகளைக் கார்டியன் அறிவித்த போது அமெரிக்கா போரில் ஈடுபட்டிருந்தது. இந்த தர்க்கத்தின்படி பார்த்தால், 2013 இல் கார்டியனின் வெளியீடுகளே “ஒருபோதும் பார்த்திருக்க முடியாது” ஏனென்றால் அவையும், “தார்மீகத்தன்மையை” பலவீனப்படுத்தி இருக்கும்.

பின்வருமாறு குறிப்பிட்டு கார்டியன் அந்த தலையங்கத்தை நிறைவு செய்கிறது:

ரஷ்ய விமானப்படை பலத்திற்கு எதிராக தன்னைத் தற்காத்துக் கொள்ளும் உக்ரேனின் திறன் குறித்து ஆவணப்படுத்தப்பட்ட சந்தேகங்கள் தான் ஐரோப்பியக் கண்ணோட்டத்தில் மிக முக்கியமான அம்சமாக உள்ளன. இத்தகைய விபரங்கள் இந்த விதத்தில் பகிரங்கமாக ஒருபோதும் பார்க்கப்பட்டதில்லை. அது என்ன அறிவுறுத்துகிறது என்றால், உக்ரேனிடம் ஆயுதக் கையிருப்பு குறைவாக இருக்கிறது என்றால் எதிர்பார்க்கப்படும் அதன் வசந்தகால தாக்குதலை நடத்துவது சிரமமாக இருக்கும் என்பதோடு, ரஷ்ய எதிர்தாக்குதலுக்கு கியேவ் மிகப்பெரியளவில் பலவீனமாக உள்ளது என்பதையே அர்த்தப்படுத்துகிறது. தீர்க்கமான தாக்குதல் இருக்காது என்பதையும், அதற்கு மாறாக, ஒரு தீவிரம் குறைந்த மோதல் நீடிக்கும் என்பதை இது அர்த்தப்படுத்தலாம். அது தான் விளைவாக இருந்தால், பின் இந்தக் கசிவுகள் வரலாற்றின் போக்கையே மாற்றி உள்ளன எனலாம்.

வேறு வார்த்தைகளில் கூறினால், போருக்கு ஓர் இராணுவத் தீர்வு இல்லாத வாய்ப்பை அந்தக் கசிவுகள் எடுத்துக்காட்டுவதன் மூலம், போருக்கு ஒரு சமாதானத் தீர்வை ஆதரிக்க மக்களை ஊக்கப்படுத்தி 'தார்மீகத்தன்மையை பலவீனப்படுத்தி' விடும்.

இது பொய்யைப் பெருமைப்படுத்துவதைத் தவிர வேறொன்றுமில்லை. “கசிவுகள்” மற்றும் “அரசு இரகசியங்கள்” குறித்த அனைத்து ஆரவாரங்களுக்குப் பின்னால், என்ன நடந்த கொண்டிருக்கிறது என்பதை மக்கள் தெரிந்து கொள்ளக் கூடாது என்ற கொள்கையை ஊடகங்கள் பாதுகாக்கின்றன.

அதே நேரத்தில், போரைக் கூடுதலாக விரிவாக்குவதை நியாயப்படுத்த அந்த ஊடகம் அந்தக் கசிவுகள் பற்றிய அதன் சொந்த செய்திகளைச் சுழற்றிவிட முயன்று வருகிறது. அந்தக் கசிவுகள் குறித்து சனிக்கிழமை வெளியிட்ட ஒரு கட்டுரையில் நியூ யோர்க் டைம்ஸ் குறிப்பிடுகையில், “பல மாதங்களாக அவர்கள் கூறி வருவதை அந்த வெளியீடுகள் உறுதிப்படுத்தி இருப்பதாக உக்ரேனில் சிலர் அவற்றை வரவேற்றனர் — அதன் படைகளுக்கு இன்னும் அதிக ஆயுதங்களும் வெடிகுண்டுகளும் தேவைப்படுகின்றன,” என்று எழுதியது.

இது மீண்டும் நம்மை வூஹான் ஆய்வக பொய்க்குக் கொண்டு வருகிறது. உக்ரேன் போர் குறித்த உண்மையான விபரங்களின் கசிவுக்கு எதிராக ஊடகங்கள் எதிர்த்து நிற்பது ரஷ்யாவுடனான மோதலை வலுப்படுத்த நோக்கம் கொண்டது என்றால், வூஹான் ஆய்வகப் பொய்யானது சீனாவுடனான ஒரு போரை ஊக்குவிக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது.

இதில், 'உக்ரேனில் சண்டையிட அமெரிக்கப் படையினரை அனுப்பமாட்டேன்' என்ற பைடெனின் பொய்யை விட, அல்லது உக்ரேன் போரில் 'நேட்டோ ஈடுபடவில்லை' என்ற வெள்ளை மாளிகையின் பொய்யை விட, இது அடிப்படையில் வேறுபட்டதல்ல.

ஆனால், அமெரிக்க அரசாங்கமும் ஊடகங்களும் இணையம் மற்றும் சமூக ஊடகங்களை அணுகும் மக்களிடையே திட்டமிட்டு பொய் கூற முயலும் முயற்சிகள் இருந்தாலும், அரசாங்கத்தின் பிரச்சாரக் கதைக்கு முரணான உண்மையான அறிக்கைகள், தகவல்கள் மற்றும் ஆவணங்கள் இணையத்தில் அணுகக்கூடியதாக உள்ளன.

இந்த யதார்த்தம், இணையத்தைத் தணிக்கை செய்து, அமெரிக்கப் போர் குற்றங்களை அம்பலப்படுத்துபவர்களை இன்னலுக்கு உள்ளாக்க, அமெரிக்க அரசாங்கமும் முன்னணி ஊடக நிறுவனங்களும் மேற்கொள்ளும் திட்டமிட்ட முயற்சிகளை விவரிக்கிறது. விக்கிலீக்ஸ் பதிப்பாசிரியர் ஜூலியன் அசான்ஜ் நான்கு ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளதுடன், உளவுச் சட்டத்தின் கீழ் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டு வழக்கில் இழுக்கப்படுவதை எதிர்கொண்டுள்ளார். இடதுசாரி போர் எதிர்ப்பாளர்கள் ஒரு இடைவிடாத தணிக்கை நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

ஒரு நூற்றாண்டுக்கு முன்னர், விளாடிமிர் லெனின் எழுதினார், 'வடிவியல் அடிப்படை உண்மைகள் (geometrical axioms) மனித நலன்களைப் பாதித்தால், நிச்சயமாக அவற்றை மறுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.' இப்போது, சீனாவுடனான ஒரு போரைத் தூண்டுவதற்கான அரசின் நலன்களுக்கு, பெருவாரியான விஞ்ஞானப்பூர்வ கருத்தொற்றுமை இருந்தாலும் கூட, வூஹான் ஆய்வக சதி கோட்பாட்டைப் பரப்ப வேண்டிய தேவை உள்ளது.

அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் போர் முனைவானது, அதைக் கொண்டு சமூக வாழ்வு அனைத்தையும் அரசுக்கு அடிபணிய செய்வதற்கான வழிவகையாக உள்ளது. அமெரிக்க ஊடகங்களால் அதிகரித்தளவில் சர்வாதிகார கொள்கைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஆளும் வர்க்கத்தின் நலன்களும் விஞ்ஞானமும் மோதுமானால், விஞ்ஞான உண்மையே போர் பலிபீடத்தில் பலியிடப்பட வேண்டும் என்பதை அமெரிக்க ஊடகங்கள் தெளிவுபடுத்திவிட்டன.