மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
ஜப்பானிய பிரதமர் புமியோ கிஷிடா இந்த மாதம் 3ம் திகதி ஆபிரிக்க சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டிருக்கிறார். இப்பயணத்தில் அவர் எகிப்து, கானா, கென்யா மற்றும் மொசாம்பிக் ஆகிய நாடுகளுக்கு சென்றார். அவரது இந்தப் பயணம் பிராந்தியத்தில் சீனா மற்றும் ரஷ்யாவின் செல்வாக்கைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது. அதேவேளை, பிராந்தியத்தில் ஜப்பானின் பிரசன்னத்தை அதிகரிப்பதும், உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிராக அமெரிக்க/நேட்டோ தலைமையிலான போருக்கு ஆதரவைத் திரட்டுவதும் இந்தப் பயனத்தின் நோக்கமாக இருந்தது.
கடந்த சனிக்கிழமை தனது சுற்றுப்பயணத்தின் முதல் கட்டமாக எகிப்திற்கு வருவதற்கு முன், கிஷிடா, “உக்ரேன் நிலைமை மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவும், [பிராந்தியத்திலுள்ள நாடுகளுடன்] எங்கள் ஒத்துழைப்பை உறுதிப்படுத்தவும் நான் விரும்புகிறேன்” என்று கூறி, அவர் தனது பயணத்திற்கான குறிக்கோளைத் தெளிவாக்கினார். ஏழு ஆண்டுகளில் ஒரு ஜப்பானிய பிரதமர் ஆப்பிரிக்காவிலுள்ள எந்தவொரு நாட்டிற்கும் செல்வது இதுவே முதல் முறையாகும், மேலும் ஒன்பது ஆண்டுகளில் கண்டத்தில் மேற்கொள்ளும் முதல் பன்னாட்டு சுற்றுப் பயணமும் இதுவாகும்.
கிஷிடா, ஞாயிற்றுக்கிழமை எகிப்திய சர்வாதிகார ஜனாதிபதி அப்தெல் பத்தாஹ் அல்-சிசியை சந்தித்தார். அப்போது, “ஜப்பானும் எகிப்தும் பிராந்தியத்திலும் சர்வதேச சமூகத்திலும் ஒத்துழைக்கும் மிக முக்கியமான பங்காளர்கள் ஆவர். இந்த சூழ்நிலைகளின் அடிப்படையில், இருதரப்பு உறவை ஒரு மூலோபாய கூட்டாண்மையாக மேம்படுத்த நாங்கள் ஒப்புக்கொண்டுள்ளோம்” என்று அவர் கூறினார். இரு தலைவர்களும் “சட்டத்தின் ஆட்சியின் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கு” என்று அழைக்கப்படுவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை உறுதிப்படுத்தினர்.
கிஷிடா மற்ற தலைவர்களையும் அதிகாரிகளையும் சந்தித்த சமயத்திலும், அமெரிக்கா/நேட்டோ போர் முயற்சிக்கு ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தாக்குதல் நாயாக செயல்பட்டு இதே கருத்துக்களை மீண்டும் மீண்டும் கூறினார். உக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பைக் கண்டிப்பதில் இருந்து பல ஆபிரிக்க நாடுகள் ஒதுங்கியிருக்கும் நிலையில், டோக்கியோ ரஷ்யாவை தனிமைப்படுத்த முயற்சிக்கிறது. இந்த நாடுகள் எண்ணெய், தானியங்கள் மற்றும் பிற வர்த்தகத்திற்கு மாஸ்கோவை நம்பியுள்ளன. இந்த பிராந்தியத்தில் இறுதியாக கிஷிடா மொசாம்பிக்கிற்கு விஜயம் செய்தார்.
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலத்தில் வாஷிங்டனால் நிறுவப்பட்ட ஒழுங்குமுறைக்கு இணங்க மறுத்ததற்காக ரஷ்யா மற்றும் சீனாவைக் கண்டிக்க ஜப்பான், அமெரிக்கா மற்றும் அவற்றின் நட்பு நாடுகள் “சட்டத்தின் ஆட்சி” என்று வார்த்தைஜாலங்களை இழிந்த முறையில் பயன்படுத்துகின்றன. குறிப்பாக, எகிப்து போன்ற நாடுகளில் “சட்டத்தின் ஆட்சி” குறித்து டோக்கியோ வலியுறுத்துவது முற்றிலும் பாசாங்குத்தனமானது. அல்-சிசி 2013 இல் ஒரு இரத்தக்களரியான இராணுவ சதியையும் மற்றும் அரசியல் அடக்குமுறையையும் பயன்படுத்தி ஆட்சிக்கு வந்தவராவார்.
மேலும், ஏப்ரல் தொடக்கத்தில் கசிந்த அமெரிக்க இராணுவ ஆவணங்கள், உக்ரேனில் நடந்த போர் குறித்த அமெரிக்காவின் பொய்களை அம்பலப்படுத்தியுள்ளன, பெப்ரவரியில் எகிப்து ரஷ்யாவிற்கு 40,000 ராக்கெட்டுகளை இரகசியமாக வழங்கத் திட்டமிட்டுள்ளதைக் காட்டுகிறது. இருப்பினும் கெய்ரோ இதை மறுத்தது. மாஸ்கோவுடன் நல்லுறவைக் கொண்டுள்ள அதேவேளை அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளியாகவும் உள்ள அல்-சிசி ஆட்சியானது, வாஷிங்டனின் அழுத்தத்தின் கீழ், மார்ச் மாதத்தில் தலைகீழாக மாறி உக்ரேனுக்கு ஆயுதங்களை வழங்குவதாக உறுதியளித்துள்ளது. கிஷிடாவின் விஜயம் அமெரிக்க தலைமையிலான போருக்கு கெய்ரோவின் மேலதிக ஆதரவை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
கூடுதலாக, ஜப்பான், அதன் முதலீடு மற்றும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு அமைப்பு (JICA) போன்ற உதவி நிறுவனங்களின் ஈடுபாடு ஆகியவற்றின் மூலம் இந்தப் பிராந்தியத்திலுள்ள வளங்களை அணுக முயற்சிக்கிறது.
ஆபிரிக்காவில் சீனாவின் முதலீடு பிராந்தியத்தில் அதன் நலன்களை மறைத்துவிடும் என்று டோக்கியோ அஞ்சுகிறது. ஆபிரிக்காவில் சீன முதலீடானது கடந்த இருபது ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. அதாவது 2003 இல் 75 மில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது 2021 இல் 5 பில்லியன் அமெரிக்க டாலராக வியத்தகு முறையில் உயர்ந்துள்ளது. இதில் பெரும்பகுதி பெய்ஜிங்கின் ஒரே இணைப்பு ஒரே பாதை முன்முயற்சியின் (Belt and Road Initiative) ஒரு பகுதியாக நடக்கிறது. அதாவது, இந்தக் கண்டம் முழுவதும் உள்கட்டமைப்பு மற்றும் பிற பொருளாதார திட்டங்களில் சீனா அதிக முதலீடு செய்கிறது. சீனா ஆபிரிக்காவுடன் அதிக வர்த்தகம் செய்கிறது. 2019 ஆம் ஆண்டில் ஆபிரிக்க கண்டத்தின் மொத்த ஏற்றுமதி மற்றும் இறக்குமதிகளில் 20 சதவீதத்திற்கும் மேலானதை சீனா செய்துள்ளது. அதேவேளை, ஜப்பான் இந்த கண்டத்தில் 3 சதவீதத்திற்கும் குறைவாகவே வர்த்தகம் செய்துள்ளது.
கானாவில் பிரதமர் கிஷிடா இருந்தபோது, சஹேல் பிராந்தியத்தில் “அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை” ஊக்குவிப்பதாக கூறி அடுத்த மூன்று ஆண்டுகளில் 500 மில்லியன் டாலர் வர்த்தகத்திற்கு கிஷிடா உறுதியளித்தார். “பொருளாதாரம், மேம்பாடு மற்றும் மக்கள் தொடர்புகள் உட்பட பலதரப்பட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த இந்த விஜயத்தை ஒரு உத்வேகமாக நாங்கள் பயன்படுத்துவோம்” என்று கிஷிடா கூறினார்.
ஜப்பான் தனது வளங்களின் தேவையை பூர்த்தி செய்ய இறக்குமதியை பெரிதும் நம்பியுள்ளது. கானா பல கனிம வளங்களைக் கொண்டுள்ளது மற்றும் ஆபிரிக்காவில் இரண்டாவது பெரிய தங்க உற்பத்தியாளராக உள்ளது. அத்துடன் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு இருப்புக்களையும் கொண்டுள்ளது. கென்யா ஜப்பானிய நிறுவனங்களுக்கு ஒரு முக்கிய தளமாக இருப்பதோடு, JICA வலைத் தளத்தின்படி, “கிழக்கு ஆபிரிக்க பிராந்தியத்திற்கான நுழைவாயிலாக” உள்ளது.
மொசாம்பிக் கூட ஆபிரிக்காவின் அதிக வளம் நிறைந்த நாடுகளில் ஒன்றாகும். மொசாம்பிக்கின் இயற்கை எரிவாயு இருப்புக்களைப் பிரித்தெடுப்பது உட்பட, ஆபிரிக்க நாட்டில் சீனா மிகப்பெரிய முதலீட்டாளர்களில் ஒன்றாக உள்ளது. மற்ற நாடுகளுடன் சேர்ந்து, மொசாம்பிக்கின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள பவள தெற்கு மிதக்கும் திரவ இயற்கை எரிவாயு (Coral South Floating Liquefied Natural Gas - FLNG) திட்டத்தில் முதலீடு செய்துள்ளது. இது ஆபிரிக்காவின் மிகப்பெரிய FLNG முயற்சியாகும் மற்றும் உலகின் இரண்டாவது மிகப்பெரிய முயற்சியாகும். இது கடந்த நவம்பர் மாதம் திரவ இயற்கை எரிவாயுவை ஏற்றுமதி செய்யத் தொடங்கியுள்ளது.
ஜப்பானிய வெளியுறவுக் கொள்கையில் பொருளாதார உதவியும் JICA போன்ற அமைப்புகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன. உத்தியோகபூர்வ அபிவிருத்தி உதவி சாசனத்தில் டோக்கியோவின் 2015 ஆம் ஆண்டு திருத்தம் மற்றும் அபிவிருத்தி ஒத்துழைப்பு சாசனத்தை உருவாக்குவதன் மூலம், அவைகள் இராணுவம், தற்காப்புப் படைகளுடன் மிகவும் நெருக்கமாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
டோக்கியோ, இந்த வளர்ச்சித் திட்டங்கள் என்று அழைக்கப்படுவதை ஆதரிக்க வெளிநாடுகளில் தனது ஆயுதப் படைகளை நிலைநிறுத்துவது உட்பட, தனது வெளிநாட்டு “உதவியை” மறுஇராணுவமயமாக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இதைப் பயன்படுத்துகிறது. இது சமீபத்தில் சூடானில் மிகத் தெளிவாகக் காட்சிப்படுத்தப்பட்டது. மோதலில் சிக்கியுள்ள இந்த நாட்டிலிருந்து ஜப்பானியர்களை வெளியேற்றுவதற்காக டோக்கியோ விமானப்படைகளையும் தரைப்படைகளையும் அங்கு அனுப்பியுள்ளது. சூடானில் இருந்து வெளியேறியவர்களில் பலர் JICA ஊழியர்களாவர்.
இன்னும் பரந்த அளவில், ஆபிரிக்கா, இலத்தீன் அமெரிக்கா மற்றும் பசிபிக் தீவுகள் உட்பட பூமத்திய ரேகைக்கு அருகிலும் கீழும் உள்ள வளர்ந்துவரும் நாடுகளைக் குறிக்கும் “பூகோள தெற்கு” என்பதை வெல்வதற்கான அதன் மூலோபாயத்தின் ஒரு பகுதியாக டோக்கியோ ஆபிரிக்காவின் மீது கவனம் செலுத்துகிறது. மார்ச் மாதம், ஜப்பான் அரசாங்கம் அபிவிருத்தி ஒத்துழைப்புக்கான அதன் வருடாந்திர வெள்ளை அறிக்கையை வெளியிட்டது. அதில், இந்த பிராந்தியத்தில் அதன் கவனத்தையும் மற்றும் பூகோள அரசியலில் அது வகிக்கும் பங்கையும் வலியுறுத்தியுள்ளது.
அப்போது தலைமை அமைச்சரவை செயலாளர் ஹிரோகாசு மாட்சுனோ, “ஏழு முக்கிய நாடுகளின் குழுவின் இந்த ஆண்டு தலைவராக, காலநிலை மாற்றம், எரிசக்தி, உணவு, சுகாதாரம் மற்றும் மேம்பாடு போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு தீவிரமாக பங்களிப்பதன் மூலம் பூகோள தெற்கில் தனது ஈடுபாட்டை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளை ஜப்பான் வழிநடத்தும்” என்று தெரிவித்தார். மே 19 முதல் 21 ஆம் திகதி வரை ஜப்பானின் ஹிரோஷிமாவில் நடைபெறவிருக்கும் G7 உச்சிமாநாடு, ரஷ்யாவிற்கு எதிரான போருக்கும், மற்றும் சீனாவுடனான அதையொத்த மோதலைத் தூண்டுவதற்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கும்.
பூகோள தெற்கு குறித்து கவனம் செலுத்துவதன் ஒரு பகுதியாக, ஜப்பானிய வெளியுறவு அமைச்சர் யோஷிமாசா ஹயாஷி தற்போது பராகுவே, பெரு, சிலி மற்றும் பார்படோஸ் ஆகிய நாடுகளுக்கு தனது சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். பெய்ஜிங்கை விட தைபேயை சீனாவின் சட்டப்பூர்வமான அரசாங்கமாக அங்கீகரிக்கும் 13 நாடுகளில் பராகுவேயும் ஒன்றாகும். ஹயாஷி கடந்த ஜனவரி மாதம் மெக்சிகோ, ஈக்வடோர், பிரேசில் மற்றும் ஆர்ஜென்டினா ஆகிய நாடுகளுக்கும் விஜயம் செய்தார்.
யப்பான் பூகோள தெற்கு நாடுகளில் கவனம் செலுத்துவது என்பது, அணு ஆயுதப் போராக வெடிப்பதற்கு சாத்தியமுள்ள ரஷ்யா மீதான தாக்குதலை விரிவுபடுத்துவது மற்றும் சீனாவிற்கு எதிராக ஒரு போரைத் தொடங்குவது போன்ற குறிக்கோள்கள் உட்பட, அமெரிக்கா தலைமையிலான போர்த் திட்டங்களுக்குள் உலகெங்கிலுமுள்ள அனைத்து நாடுகளும் வேகமாக உந்தித் தள்ளப்படுகின்றன என்பதை நிரூபிக்கிறது.