ஜப்பானில் அலுவலகத்தைத் திறப்பதன் மூலம் ஆசிய-பசிபிக் பகுதியில் நேட்டோ தனது இருப்பை விரிவுபடுத்துகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

கடந்த வாரம், நேட்டோ அடுத்த ஆண்டு டோக்கியோவில் ஒரு தொடர்பு அலுவலகத்தை திறக்க உத்தேசித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இந்த அலுவலகம், ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் நேட்டோவின் முதல் அலுவலகமாக இருக்கும். அத்துடன், சீனாவிற்கு எதிரான அமெரிக்க தலைமையிலான போருக்கான தயாரிப்பில், நேட்டோ அமைப்பின் வளர்ந்து வரும் பங்கை இது பிரதிபலிக்கிறது. டோக்கியோவும் நேட்டோவும் இதற்கான திட்டங்களை உறுதிப்படுத்தியுள்ளன.

நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க், இடது மற்றும் ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா டோக்கியோவில் செவ்வாய்கிழமை, ஜன. 31, 2023. [AP Photo/Takashi Aoyama]

நேட்டோவின் பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க், ஜனவரி மாதம் ஸ்டோல்டன்பேர்க்கின் ஜப்பான் விஜயத்தின் போது ஜப்பானிய பிரதம மந்திரி ஃபுமியோ கிஷிடாவுடன் அலுவலகத்தை திறப்பது குறித்து விவாதித்ததாக மே 3 அன்று Nikkei Asia செய்தி ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. இதேபோன்ற அலுவலகங்கள் நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையிலும், வியன்னாவில் உள்ள ஐரோப்பாவில் பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்புக்கான அமைப்பிலும், உக்ரேன், மோல்டோவா, ஜோர்ஜியா, பொஸ்னியா, ஹெர்சகோவினா மற்றும் குவைத்திலும் உள்ளன. டோக்கியோ, பெல்ஜியத்தில் உள்ள நேட்டோ தூதரகத்திலிருந்து அதன் தற்போதைய பணியை பிரித்து ஒரு புதிய தூதரை அனுப்புவதன் மூலம் நேட்டோவிற்கு ஒரு சுயாதீனமான பணியை உருவாக்க நோக்கத்தை கொண்டிருக்கின்றது.

இந்த நடவடிக்கை ஜப்பான் நேட்டோ கூட்டணியில் இணைகிறது என்று அர்த்தம் இல்லை என்றாலும், டோக்கியோவில் உள்ள புதிய அதன் அலுவலகம் சீனாவை நோக்கிய ஒரு பெரிய ஆத்திரமூட்டலாகும். உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க - நேட்டோ போரின் ஒரு பகுதியாக, ரஷ்யாவை நோக்கி நேட்டோவின் எல்லைகளை அத்துமீறி நுழைத்ததன் மூலம் தூண்டப்பட்டது. ஜப்பான் போன்ற நாடுகளுடனான நேட்டோவின் ஒத்துழைப்புடன், தைவான் மீதான 'ஒரே சீனா' கொள்கையை சவால் செய்வதன் மூலம் பெய்ஜிங்கைத் தாக்கும் முயற்சிகளானது போர் ஆபத்தை மேலும் அதிகரிக்கிறது.

டோக்கியோவிற்கும் நேட்டோவிற்கும் இடையிலான தொடர்புப் புள்ளியாக பணியாற்றும் ஜப்பானுக்கான டென்மார்க் தூதர் பீட்டர் டாக்சோ-ஜென்சன், டோக்கியோவில் தொடர்பு அலுவலகத்தைத் திறக்கும் முடிவு சீனாவுக்கு எதிராகவும், மேற்குலகிற்கு பொருளாதார சவாலாக அது மாறுவதை தடுக்கவும் எடுக்கப்பட்டது என்பதை தெளிவுபடுத்தினார்.

''2022 ஆம் ஆண்டில், மாட்ரிட்டில் நடந்த அதன் உச்சிமாநாட்டில், நேட்டோ நாட்டுத் தலைவர்கள் ரஷ்யா இனி ஒரு பங்காளி அல்ல, எதிரி என்று முடிவு செய்தனர், மேலும், சீனாவின் எழுச்சி நாடுகடந்த ஐரோப்பிய பாதுகாப்பில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று ஒப்புக்கொண்டனர்'' என்று அவர் தெரிவித்தார்.

பெய்ஜிங் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவோ நிங், டோக்கியோவில் புதிய தொடர்பு அலுவலகத்தை திறப்பதற்கான திட்டங்களை விமர்சித்தார்: ''ஆசிய-பசிபிக் பகுதியில் நேட்டோவின் தொடர்ச்சியான கிழக்கு நோக்கிய விரிவாக்கம், பிராந்திய விவகாரங்களில் தலையிடுதல், பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை அழிக்கும் முயற்சிகள் என்பன, இப் பிராந்தியத்தில் உள்ள நாடுகளில் இருந்து அதிக விழிப்புணர்வுக்கு அழைப்பு விடுக்கிறது'' என்று தெரிவித்தார்.

நேட்டோவும் ஜப்பானும் ஜூலை 11-12 தேதிகளில் லித்துவேனியா தலைநகர் வில்னியஸ் நகரில் நடைபெறவுள்ள நேட்டோ உச்சி மாநாட்டிற்கு முன்னதாக, வடிவமைக்கப்பட்ட கூட்டுத் திட்டத்தில் (ITPP) கையெழுத்திட உத்தேசித்துள்ளன. ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் இந்த உச்சிமாநாட்டில் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேட்டோவின் ஆசிய-பசிபிக் கூட்டாளிகள் அல்லது AP4 என அழைக்கப்படும் இந்த நான்கு நாடுகளுக்கும் மற்றும் நேட்டோவிற்கும் இடையே அதிகரித்த ஒத்துழைப்பு தொடர்புகளை டோக்கியோ இணைப்பு அலுவலகம் எளிதாக்கும். கடந்த ஆண்டு மாட்ரிட்டில் நடந்த நேட்டோ உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள இந்த நான்கு நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.

ஜப்பான் மற்றும் நேட்டோ ஆகியவை தங்கள் ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக, ''இணைய அச்சுறுத்தல்கள், சீர்குலைக்கும் தொழில்நுட்பங்கள் மற்றும் தவறான தகவல் நடவடிக்கைகள்'' என்பனவற்றில் இணைந்து செயல்படும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சோசலிச, ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் போர் எதிர்ப்பு கண்ணோட்டங்கள் உட்பட 'தவறான தகவல்களை' அணுகுவதை தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களைத் தடுக்கும் அதே வேளையில், இணையம் மற்றும் சமூக ஊடகங்கள் ஏகாதிபத்திய பிரச்சாரத்தை பரப்புவதற்கு பயன்படுத்தப்படுவதை உறுதி செய்வதில் இருதரப்பினரும் ஒன்றிணைந்து செயல்படுவார்கள் என்பதாகும்.

டோக்கியோவில் அலுவலகம் திறப்பு என்பது ஒரு பரந்த நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாகும். இதில் அமெரிக்கா சீனாவை சுற்றி வளைக்கும் வகையில், இப்பிராந்தியத்தில் தொடர்ச்சியான கூட்டணிகளை உருவாக்கி ஒருங்கிணைத்து வருகிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகியவற்றை உள்ளடக்கிய நாற்கர பாதுகாப்பு கூட்டணி (குவாட்) மற்றும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவைக் கொண்ட AUKUS கூட்டணி ஆகியவை இதில் அடங்கும். வாஷிங்டனும் தென் கொரியாவும் சமீபத்தில் வாஷிங்டனின் அணு ஆயுதக் களஞ்சியத்தைத் திட்டமிடல் மற்றும் பயன்படுத்துவதில் அதிகரித்த ஒத்துழைப்புக்களை அறிவித்துள்ளன.

மேலும், வாஷிங்டனின் அழுத்தத்தின் கீழ், டோக்கியோ மற்றும் சியோல் பல ஆண்டுகளாக, இரு நாடுகளுக்கு இடையே நிலவும் பதட்டங்களைத் தணிக்க வேலை செய்து வந்தன. கடந்த மார்ச் மாதம் டோக்கியோவில் கிஷிடாவிற்கும், தென் கொரிய அதிபர் யூன் சுக்-யோலுக்கும் இடையே நடந்த உச்சிமாநாட்டைத் தொடர்ந்து, இரு தரப்பினரும் ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கும், இராணுவ உளவுத்துறை பகிர்வு ஒப்பந்தத்தை இயல்பாக்குவதற்கும், அமெரிக்காவுடன் இணைந்து மேலும் இராணுவப் பயிற்சிகளை மேற்கொள்வதற்கும் ஒப்புக்கொண்டனர்.

இங்கிலாந்து உள்ளிட்ட பிற நாடுகளுடனும் ஜப்பான் தனது ஒத்துழைப்பை வலுப்படுத்தி வருகிறது. கடந்த ஜனவரி மாதம் லண்டனுடன் ஒரு பரஸ்பர அணுகல் உடன்படிக்கையில் (Reciprocal Access Agreement) கையெழுத்திட்ட டோக்கியோ, பிலிப்பைன்ஸுடன் இதேபோன்ற ஒப்பந்தத்தை எட்டுவதற்கு பரிசீலித்து வருகிறது. 2014 ஆம் ஆண்டில், அப்போதைய ஷின்சோ அபே நிர்வாகம் 'கூட்டு தற்காப்பு' என்று அழைக்கப்படுவதை அனுமதிக்க அரசியலமைப்பின் 'மறு திருத்தத்தை' அறிவித்தது. அடுத்த ஆண்டு, ஜப்பானின் ஆளும் தாராளவாத ஜனநாயகக் கட்சி (LDP) இந்த மாற்றத்தை குறியீடாக்க பாராளுமன்றத்தில் ஒரு சட்டத்தை இயற்றுகிறது. டோக்கியோவின் வாதப்படி, இது ஜப்பானை 'தற்காப்பு' என்ற பெயரில் ஒரு நேச நாட்டுடன் இணைந்து யுத்தத்துக்கு செல்ல அனுமதிக்கிறது. இதன் மூலம் ஜப்பான் இராணுவத்தை பராமரிக்கவோ அல்லது போரை நடத்துவதையோ வெளிப்படையாக தடுக்கும் அரசியலமைப்பின் 9 வது பிரிவை புறக்கணிக்கிறது.

நேட்டோவுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம், டோக்கியோ அதன் வளர்ந்து வரும் இராணுவ உறுதிப்பாடு மற்றும் ஆக்கிரமிப்பு ஆகியவை ''கூட்டுத் தற்காப்பு'' என்ற இந்த போலியான மற்றும் அரசியலமைப்பிற்கு முரணான கருத்துடன் ஒத்துப்போகின்றன என்று பாசாங்கு செய்யும்.

இந்த வழிகளில், கடந்த ஏப்ரல் 24-26 வரை ஜப்பானுக்கு விஜயம் செய்த நேட்டோவின் கூட்டுப் பாதுகாப்புப் பிரிவு இயக்குநர் லெப்டினன்ட் ஜெனரல் பிரான்செஸ்கோ டியெல்லா தலைமையிலான பிரதிநிதிகள், ஜப்பானிய இராணுவ அதிகாரிகளைச் சந்தித்தனர். அங்கு நடந்த கலந்துரையாடலின் போது, 'எங்கள் பாதுகாப்பு ஆழமாக ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன, எனவே நமது பகிரப்பட்ட மதிப்புகளில் வேரூன்றியிருக்கும் நமது ஒத்துழைப்பும், சுதந்திரமான, அமைதியான மற்றும் வளமான உலகத்தைப் பற்றிய நமது பார்வைகளும் இருக்க வேண்டும்'' என்று டியெல்லா கூறினார்.

நேட்டோ மற்றும் அதன் உறுப்பு நாடுகள் மற்றும் ஜப்பான் ஆகியவை 'பகிரப்பட்ட மதிப்புகளை' பிரதிநிதித்துவப்படுத்துகின்றன என்ற கூற்றுகள் ரஷ்யா மற்றும் சீனாவிற்கு எதிரானவை ஆகும். வாஷிங்டன், டோக்கியோ மற்றும் அவற்றின் கூட்டாளிகள் ஆசியாவில், 'சுதந்திரமான மற்றும் திறந்த' இந்தோ-பசிபிக் பகுதிக்கு சீனா அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறுகின்றன. உண்மையில், அமெரிக்காவால் நிறுவப்பட்டு, ஆதிக்கம் செலுத்தி வந்த இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஒழுங்குகளை பெய்ஜிங் ஏற்காததற்காக ஏகாதிபத்திய சக்திகள் அதனை கண்டனம் செய்கின்றன. வாஷிங்டன் சீனாவின் வாசலில் ஆத்திரமூட்டும் மற்றும் ஆபத்தான ''சுதந்திர கடல் போக்குவரத்தை'' நடத்தும் அதே வேளையில், பெய்ஜிங்கில் இருந்து வரும் எந்த எதிர்வினையும் சீன 'ஆக்கிரமிப்புக்கான' ஆதாரமாக கண்டிக்கப்படும்.

மேலும், நேட்டோ மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக, அமெரிக்கா 'ஜனநாயக மதிப்புகளை' பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்று கூறுவது யதார்த்தத்திற்கு எதிரானது ஆகும். புலம்பெயர்ந்தோருக்கு புகலிடம் மறுக்கும் அமெரிக்காவில், போலீசார் தொடர்ந்தும் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளை சுட்டுக் கொல்கின்றனர். பிரான்சில், செல்வந்தர்களின் ஜனாதிபதியான இம்மானுவேல் மக்ரோன், வேலைநிறுத்தம் மற்றும் எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக பொலிஸ் அரச அடக்குமுறையை கட்டவிழ்த்து ஆட்சி செய்து வருகிறார். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் குற்றங்களை அம்பலப்படுத்தியதற்காக பத்திரிகையாளர் ஜூலியன் அசாஞ் பெல்மார்ஷ் சிறையில் தடுப்புக் காவலில் இருக்கும் அதே வேளையில், மன்னன் சார்லஸின் சமீபத்திய முடிசூட்டு விழாவில் அரசாங்கம் நூற்றுக்கணக்கான மில்லியன் பவுண்டுகளை வீணடித்துள்ளது.

ஜப்பானின் கடந்தகால போர்க்குற்றங்கள் மீள்இராணுவமயமாக்கலை ஊக்குவிப்பதற்காக மறைக்கப்படுகின்றன. ஆளும் LDP ஆனது, இதர கட்சிகளிடமிருந்து உண்மையான எதிர்ப்பு இல்லாமல், பத்திரிகையாளர்கள் தடைகளையும் துன்புறுத்தலையும் சந்தித்துவரும் ஒரு நிலையில், ஜனநாயக உரிமைகளை கடுமையாக கட்டுப்படுத்தும் அரசியலமைப்பு திருத்தங்களை நாடுகிறது.

இறுதியில், வாஷிங்டன், டோக்கியோ மற்றும் நேட்டோவின் குறிக்கோள் 'ஜனநாயக விழுமியங்களை' பாதுகாப்பது அல்ல. மாறாக, சீனாவின் இழப்பில் இந்தோ பசிபிக் பிராந்தியத்தை மறுபங்கீடு செய்வதாகும். இது, அணு ஆயுதங்களுடன் போரிடும் ஒரு புதிய உலகப் போருக்கான ஆபத்தில் ஆழ்த்துகிறது.

Loading