இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
கடந்த வாரம் உக்ரேனிய “எதிர்தாக்குதல்” தொடங்கப்பட்ட போது, அது ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போரில் ஒரு தீர்க்கமான திருப்புமுனையாக இருக்குமென அமெரிக்க ஊடகங்களால் புகழப்பட்டது.
'உக்ரேனுக்கான இறுதி ஆட்டம்' என்று நியூயோர்க் டைம்ஸில் அறிவித்த பிரட் ஸ்டீபன்ஸ், இது ரஷ்யாவை 'தகர்த்து, தவறுக்கிடமின்றி தோல்வியை” ஏற்படுத்தும் என்றார். வாஷிங்டன் போஸ்ட் கட்டுரையாளர் மேக்ஸ் பூட், “உக்ரேனியர்கள் குறிப்பிடத்தக்க வெற்றிகளை எட்டுவார்கள் மற்றும் பெரும்பாலான பகுப்பாய்வாளர்கள் கணித்து வருவதைக் காட்டிலும் நிறைய சாதிப்பார்கள்” என்று எதிர்பார்ப்பதாக ஜெனரல் டேவிட் பெட்ரேயஸ் குறிப்பிட்டதை மேற்கோளிட்டார்.
இந்த அறிக்கைகள் அனைத்தும் வெறும் பிரமைகள் என்பதோடு தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்வதாக நிரூபணமாகி உள்ளன.
பத்து நாட்களில், இந்தத் தாக்குதல் உக்ரேனிய சிப்பாய்களுக்கு ஓர் இரத்த ஆறாக மாறியுள்ளது. அவர்களில் பலர் சிறிதளவு பயிற்சியோடு அல்லது பயிற்சியே இல்லாமல் புதிதாக நியமிக்கப்பட்டிருந்தார்கள். ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலி கொடுத்து, எல்லையில் கடந்த வாரம் வெறும் 40 சதுர மைல்களை மட்டுமே கைப்பற்றி இருப்பதாக உக்ரேனிய அரசாங்கம் வாதிடுகிறது. ஒரு சிறிய முக்கியத்துவமற்ற கிராமத்தை ஒரு சில மணி நேரங்களுக்குப் பிடித்து வைத்திருக்கும் உக்ரேனியப் படைகளின் திறமையை, அமெரிக்க ஊடகங்கள் ஒரு மிகப் பெரிய வெற்றியாக வர்ணிக்கும் இடத்துக்கு அது வந்துவிட்டது.
போரின் தற்போதைய நிலை, முதலாம் உலகப் போரின் படுகொலைகளை நினைவூட்டுகிறது. சோம் (Somme) போர் போன்ற பயங்கர இரத்தக்களரியான போரின் முதல் நாளில் ஏறக்குறைய 60,000 பேர் உயிரிழந்தார்கள். உக்ரேனில் மரண எண்ணிக்கை இன்னும் இந்த மட்டத்திற்கு வரவில்லை என்றாலும், இந்த நவீன காலத்தில் அகழிப் போர் (trench warfare) படுகொலைக்கு நிகராக, உக்ரேனிய சிப்பாய்கள் பெரும் எண்ணிக்கையில் கொல்லப்பட்டு வருகிறார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
ரஷ்ய அதிகாரிகள் வழங்கும் விபரங்களுடன் உக்ரேன் முரண்படாத நிலையில், இந்தத் தாக்குதலில் நாளொன்றுக்கு 1,000 உக்ரேனியர்களுக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்து வருவதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இது இந்தத் தாக்குதலில் இதுவரையிலான மொத்த உக்ரேனிய மரண எண்ணிக்கையை குறைந்தபட்சம் 10,000 ஆக ஆக்கும்.
இந்தப் போரின் பயங்கரம் பொதுவாக ஊடகங்களில் மூடிமறைக்கப்பட்டிருந்தாலும், அந்த யதார்த்தத்தின் மீது சில ஒப்புதல்கள் வெளிவந்துள்ளன. “வரவிருக்கும் இன்னும் பல மாதங்களுக்கு அனேகமாக கடுமையான விலை கொடுக்கும் போர்முறை” இருக்கலாம் என்று ஓர் அமெரிக்க அதிகாரி கூறியதைக் கார்டியன் மேற்கோளிட்டது. ரஷ்யப் படைகளுக்கு ஏற்பட்ட உயிரிழப்புகள் 'குறிப்பிடத்தக்கதாக இல்லை' என்று கூறிய அந்த அதிகாரிகள், 'ரஷ்யர்கள் விரைவிலேயே கரையப் போகிறார்கள் என்றும், உக்ரேனியர்கள் அவர்களின் பாதுகாப்பு நிலைப்பாட்டின் மூலமாக நேராக முன்நகரப் போகிறார்கள் என்றும் கூறப்பட்ட கருத்து, மக்களின் மிக மோசமான கனவுகளாகி விட்டன,” என்பதையும் சேர்த்துக் கொண்டார்கள்.
நியூயோர்க் டைம்ஸில் ஹெலீன் கூப்பர் எழுதிய ஒரு கட்டுரையில், “இந்த எதிர்தாக்குதலில் உக்ரேன் பெரும் உயிரிழப்புகளைச் சந்திக்குமா?” என்று அப்பட்டமாக கேள்வி எழுப்புகிறார். பதில் பின்வருவதாக இருந்தது: “ஏற்கனவே இது தான் நடந்து வருகிறது. இந்த சண்டையின் ஆரம்பத்திலேயே உக்ரேனிய துருப்புகள் உயிரிழப்புகளையும் தளவாடங்களின் இழப்புகளையும் சந்தித்துள்ளதை அமெரிக்க அதிகாரிகள் உறுதிப்படுத்தி உள்ளனர். ரஷ்ய இழப்புகள் குறித்து விபரங்கள் பெரிதாக இல்லை, ஆனால் முன்னரே விவரிக்கப்பட்ட அந்தக் காரணங்களைப் பொறுத்த வரையில், இயல்பாகவே பதுங்குக்குழியில் பாதுகாப்பில் ஈடுபட்டிருப்பவர்களை விட தாக்குபவர்களே ஆரம்பத்தில் அதிகமான உயிரிழப்புகளைச் சந்திக்கிறார்கள்,” என்பதை அந்த அதிகாரிகள் சுட்டிக் காட்டினார்கள்.
பின்னர் டைம்ஸ் பின்வருமாறு கேள்வி எழுப்புகிறது, “எதிர்தாக்குதல் தோல்வியடைகிறது என்பதே இதன் அர்த்தமா?' பதில் இவ்வாறு இருந்தது: “இல்லை. இந்த எதிர்தாக்குதலின் முக்கிய முனைவு அனேகமாக இன்னும் தொடங்கவே இல்லை என்று திங்கட்கிழமை இரண்டு அமெரிக்க அதிகாரிகள் கூறினார்கள்.”
வேறு வார்த்தைகளில் கூறினால், இந்த இறப்பு எண்ணிக்கை வெறும் முன்தொகை தான். அமெரிக்காவும் நேட்டோ அதிகாரங்களும், அவர்களின் ஊடக செய்தித் தொடர்பாளர்களுடன் சேர்ந்து, முழு அலட்சியத்துடன், உக்ரேனியர்களின் உயிர்களைப் பெரிதும் பிரங்கிக்குத் தீனியாகக் கையாள்கின்றன. “உக்ரேனுக்குப் பெருமை” (Slava Ukraini) என்ற பாசிச முழக்கம் யதார்த்தத்தில் “உக்ரேனியர்கள் படுகொலை” என்று உருமாறி உள்ளது.
ஆனால் எது வரை? இந்தப் போரில் நேட்டோவைக் கூடுதலாக ஈடுபடுத்துவதற்கான அரசியல் நிலைமைகளை உருவாக்குவதே, ஆரம்பத்தில் இருந்து இந்த உக்ரேனிய தாக்குதலின் உண்மையான நோக்கமாக இருந்தது.
சனிக்கிழமை நியூயோர்க் டைம்ஸ் பின்வருமாறு எழுதியது:
ரஷ்யாவின் இராணுவத்தை அழிப்பதன் மூலமோ, சில பகுதிகளைக் கைப்பற்றுவதன் மூலமோ, அல்லது இரண்டும் நடந்தாலோ, சில போர்க்கள வெற்றி, கியெவுக்கு ஒரு வித நீண்டகால பாதுகாப்பு உத்தரவாதத்திற்கு ஐரோப்பாவில் கூடுதல் ஆதரவை உருவாக்கும்.
உக்ரேனும் மேற்கத்திய கூட்டாளிகளும் இரண்டு தரப்புமே இந்த எதிர்தாக்குதலில் முதலீடு செய்துள்ளன, ஏனென்றால், குறிப்பிட்ட விளைவைப் பொருட்படுத்தாமல், இது அடுத்த கட்டப் போருக்குக் களம் அமைக்கும். உக்ரேன் பாதுகாப்புக்கு உதவ அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் திட்டத்தில், அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகளிடம் இருந்து வேகமான பாதுகாப்பு உத்தரவாதங்களைப் பெறுவதும் உள்ளடங்கும்…
வியாழக்கிழமை, பாதுகாப்பு செயலர் லாயிட் ஆஸ்டின் மற்றும் கூட்டுப் படைகளின் தலைமை தளபதி மார்க் மில்லி ரம்ஸ்டீன் விமானப் படைத்தளத்தில் உக்ரேன் பாதுகாப்புத்துறை தொடர்பு குழுவுடன் ஒரு கூட்டம் நடத்துவார். இதைத் தொடர்ந்து ஜூன் 16 இல் நேட்டோ பாதுகாப்புத்துறை அமைச்சர்களின் உச்சி மாநாடு நடக்க உள்ளது.
இந்தக் கூட்டங்கள் ஜூலை 11-12 இல் லிதுவேனியாவின் வில்னியஸில் நடைபெறும் நேட்டோ உச்சிமாநாட்டுக்குக் களம் அமைக்கும். இதில் நேட்டோ சக்திகள் உக்ரேனுடன் சில விதமான முறையான இராணுவக் கூட்டணியை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்த மோதலில் நேட்டோ துருப்புகளின் நேரடி தலையீட்டுக்குக் களம் அமைக்கும்.
ஒரு வெற்றிகரமான தாக்குதலின் பின்புலத்தில் ரஷ்யாவின் பின்னடைவு மீது அதற்கு இறுதி எச்சரிக்கைகள் விடுக்கும் உத்தேசத்தில், வில்னியஸ் கூட்டம் வெற்றியாளர்களின் உச்சிமாநாடாக இருக்குமென கருதப்பட்டது. ஆனால் முற்றிலுமாக வேறு விதமான சூழ்நிலை உருவெடுத்து வருகிறது: அதாவது, ஓர் இராணுவ தோல்வியை முகங்கொடுத்து, அமெரிக்கா இந்தப் போரில் அதன் தலையீட்டை விரிவாக்கி வருகிறது.
புற்றுநோயை உண்டாக்கும் என அறியப்பட்ட, வீரியம் குறைக்கப்பட்ட யுரேனியம் ஆயுதங்களை உக்ரேனுக்கு அனுப்ப பைடென் நிர்வாகம் முடிவெடுத்திருப்பதாகவும், சரமாரியாக குண்டுகளைப் பரப்பி வீசும் வெடிகுண்டுகளை (cluster munitions) அனுப்புவது குறித்தும் மும்முரமாக விவாதிக்கப்பட்டு வருவதாக செவ்வாய்கிழமை வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் அறிவித்தது.
வெள்ளிக்கிழமை, அமெரிக்கன் எண்டர்பிரைஸ் பயிலகம், அதன் மூத்த ஆய்வாளர்களில் ஒருவரான மிக்கெல் ரூபியின் பொது-தலையங்கம் ஒன்றை வெளியிட்டது. அமெரிக்கா உக்ரேனுக்கு அணு ஆயுதங்களை அனுப்ப வேண்டுமென அவர் அதில் அறிவுறுத்தி இருந்தார். “உக்ரேன் மீது ரஷ்யா அணுஆயுதத் தாக்குதல் நடத்துவதை பைடெனால் தடுக்க முடியுமா? ஆம், அவர் உக்ரேனுக்கு தந்திரோபாய அணுகுண்டுகளை வழங்கினால் முடியும்,” என்ற அந்த பொது-தலையங்கத்திற்கு அவர் தலைப்பிட்டிருந்தார்.
'உக்ரேன் அணு ஆயுதங்களை எங்கே எப்படி பயன்படுத்தலாம் என்பதில் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல்' உக்ரேனுக்கு அணு ஆயுதங்களை வழங்க அச்சுறுத்துமாறு ரூபின் வெள்ளை மாளிகையைக் கேட்டுக் கொண்டார். இறுதியாக, நேட்டோ சக்திகள் உக்ரேனை நேட்டோவில் இணைப்பதை நோக்கி அல்லது இந்த மோதலில் நேரடி நேட்டோ தலையீட்டுக்குக் களம் அமைக்கும் விதத்தில் ஏதோவொரு வடிவில் முறையான இராணுவக் கூட்டணியை நோக்கி வேகமாக நகர்ந்து வருகின்றன.
உக்ரேனில் இந்தப் போரானது, பைடென் நிர்வாகத்திற்கும் நேட்டோவுக்கும் ஒரு வாழ்வா சாவா பிரச்சினையாக மாறி உள்ளது. உக்ரேனின் மொத்தத்தையும் பிழிந்தெடுத்து வரும் ஏகாதிபத்தியவாதிகள், ரஷ்ய பீரங்கிகளுக்குத் தீனியாக்க இன்னும் அதிக உடல்களைக் காண வேண்டியிருக்கும்.
இராணுவத் தோல்விகளுக்கு, போரை விரிவாக்குவதன் மூலம் விடையிறுக்கும் அமெரிக்காவின் நீண்டகால வடிவத்தையே பைடென் நிர்வாகமும் மீண்டும் தொடர்கிறது. இந்தப் போரை நிறுத்தாவிட்டால், இது மனிதகுலம் மொத்தத்தையும் ஒரு மிகப் பெரிய பேரழிவில் ஆழ்த்தி விடும்.
இந்த எதிர்தாக்குதலின் முதல் நாளை அடுத்து, ஜூன் 5 இல் உலக சோசலிச வலைத் தளம் பின்வருமாறு எழுதியது:
தொழிலாள வர்க்கத்தின் அபிவிருத்தி அடைந்து வரும் இயக்கத்தை ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்துடன் இணைப்பது அதிக அவசர தேவையாகும். ஏகாதிபத்தியம் ஒட்டுமொத்த மனிதகுலத்தையும் அணுஆயுத பிரளயத்தை நோக்கி இழுத்துச் சென்று கொண்டிருக்கிறது. இராணுவவாதம் மற்றும் போருக்கு எதிரான எதிர்ப்பை, சமத்துவமின்மை, சுரண்டல் மற்றும் மனிதகுலம் எதிர்கொண்டு வரும் அனைத்து நெருக்கடிகளுக்கும் மூலவேராக உள்ள இந்த முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான போராட்டத்துடன் இணைப்பது அவசியமாகும்.
இப்போது இந்த உக்ரேனிய எதிர்தாக்குதல் ஓர் இரத்தக்களரியான தோல்வியை உருவாக்கி உள்ளதால், அத்தகைய ஒரு இயக்கத்தைக் கட்டியெழுப்புவது எல்லாவற்றையும் விட மிக அவசரமாகும்.