இராணுவ-தொழில்நுட்ப ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட பைடனும் மோடியும் மேம்படுத்தப்பட்ட இந்திய-அமெரிக்க கூட்டணியை வரவேற்கின்றனர்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியின், ஜூன் 20 முதல் 23 வரையான நான்கு நாள் அமெரிக்க அரசுப் பயணம், ஆயுத விற்பனை மற்றும் கூட்டு ராணுவ உற்பத்தியில் இருந்து முக்கியமான கனிமங்கள் மற்றும் விரிவாற்றல் உற்பத்திச் சங்கிலிகள் (resilient production chains) வரை, அனைத்துடனும் தொடர்புபட்ட பரபரப்பான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதுடன் முடிவடைந்தது.

மோடி, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், அவர்களின் உதவியாளர்கள் மற்றும் இந்தியாவிலும் அமெரிக்காவிலும் உள்ள ஊடகங்களுமாக அனைவரும், இந்த உச்சிமாநாடும் அதனுடன் இணைந்த ஒப்பந்தங்களும் இந்திய-அமெரிக்க உறவுகளில் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிக்கும் என்று பாராட்டியுள்ளனர்.

உண்மையில் அவை அத்தகையவைதான். வாஷிங்டன் இன்னும் முழுமையாக சீனாவிற்கு எதிரான அதன் அனைத்துப்பக்க, இராஜதந்திர, பொருளாதார, மூலோபாய மற்றும் இராணுவ தாக்குதலில் இந்தியாவை ஒருங்கிணைத்து வருகிறது. மேலும், மோடி ஆட்சியும் இந்திய ஆளும் வர்க்கமும் மூலோபாய 'நன்மைகளுக்கு' ஈடாக சீனாவின் 'எழுச்சியை' முறியடிக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முயற்சிகளுக்கு வசதியளிக்க தயாராக உள்ளன. இந்திய முதலாளித்துவம் நாட்டின் 'உலகை முந்தும் வளர்ச்சி' பற்றி பெருமை பேசும் அதேவேளை, பெரும் வல்லரசாகும் அதன் அபிலாஷைகளை அடைவதற்கான வழிகள் விரைவாக மூடப்படும் என்றும், அது விரைவில் நாட்டின் வேகமாக வளர்ந்து வரும், கொடூரமாக சுரண்டப்படுகின்ற தொழிலாள வர்க்கத்தின் சீற்றத்தை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அஞ்சுகிறது.

ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, வியாழன், 22 ஜூன் 2023 அன்று வாஷிங்டனில். [AP Photo/Evan Vucci]

அரசு விருந்துபசாரம், பைடனுடன் இரண்டு மணி நேர நேருக்கு நேர் சந்திப்பு, காங்கிரஸின் கூட்டு அமர்விலான உரை மற்றும் எலோன்மஸ்க் மற்றும் பிற பில்லியனர்கள் மற்றும் கார்ப்பரேட் தலைமை நிர்வாக அதிகாரிகளுடனான சந்திப்புகள் உட்பட, மோடி அமெரிக்காவில் இருந்த நான்கு நாட்களில், இந்திய-அமெரிக்க 'பூகோள மூலோபாய கூட்டாண்மை' எவ்வாறு 'ஜனநாயகம்' மற்றும் 'பகிர்ந்துகொள்ள வேண்டிய மதிப்புகளை' அடிப்படையாகக் கொண்டது என்பது பற்றி நிறைய ஆரவாரம் காணப்பட்டது. ஏகாதிபத்தியப் போர்கள் மற்றும் சூழ்ச்சிகளுக்குத் தலைமை தாங்கி பல தசாப்த காலமாக பதவிகளில் இருந்துவரும் பைடன், இந்து வகுப்புவாதத்தை இடைவிடாமல் தூண்டிவிட்டு வருகின்ற, 2002 இல் குஜராத்தில் முஸ்லீம்-விரோத படுகொலையில் அவரது பங்கிற்காக அமெரிக்காவிற்குள் நுழையவிடாமல் நீண்டகாலமாகத் தடை விதிக்கப்பட்டிருந்த மற்றும் தீவிர வலதுசாரி சர்வாதிகார ஆட்சிக்கு தலைமை தாங்கும் மோடிக்கு விருந்து அளிக்கும் போது வெட்கப்படவோ முகம் சுழிக்கவோ இல்லை.

உச்சிமாநாட்டின் முடிவில், மோடியும் பைடனும் 6,000 வார்த்தைகள், 58 பத்திகள் கொண்ட கூட்டு அறிக்கையை வெளியிட்டனர். இது பல கூட்டு முயற்சிகளை பட்டியலிட்டதுடன் ஜனநாயகம், பன்முகத்தன்மை மற்றும் மனித உரிமைகளுக்கான பொதுவான உறுதிப்பாட்டின் போலியான மற்றும் மோசடியான அழைப்புகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

ஆனால் எப்போதும், நெருக்கமான இந்திய-அமெரிக்க கூட்டணிக்கான உண்மையான அடித்தளமும் உத்வேகமும் அறிக்கையின் முதல் பத்தியின் முடிவில் வெளிப்படையாக உச்சரிக்கப்பட்டிருந்தது. அது, இந்தியா, அமெரிக்கா மற்றும் அதன் பிரதான ஆசிய-பசிபிக் நட்பு நாடுகளான ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான சீன-விரோத, அரை-இராணுவக் கூட்டணியான குவாட்டின் (Quad) முக்கியத்துவத்தை அது வலியுறுத்தியதுடன், சீனாவை சுற்றி வளைக்கின்ற மற்றும் ஆசியா மீது அதன் சொந்த மேலாதிக்கத்தை சட்டப்பூர்வமாக்குகின்ற அதன் மூலோபாய உந்துதலை நியாயப்படுத்த வாஷிங்டன் வழக்கமாகப் பயன்படுத்தும் மொழியிலேயே அதை செய்தது. 'எங்கள் ஒத்துழைப்பானது ஒரு சுதந்திரமான, திறந்த, உள்ளடக்கம் கொண்ட, மற்றும் விரிவாற்றலுடைய இந்தோ-பசிபிக்கிற்கு பங்களிக்கும் வகையில், பலதரப்பு மற்றும் பிராந்திய குழுக்களின் -குறிப்பாக குவாட்- உலகளாவிய நன்மைக்கு உதவும். இது கடல்கள் முதல் நட்சத்திரங்கள் வரை பரவியுள்ள நமது இரு பெரும் நாடுகளுக்கிடையேயான கூட்டாண்மையால் மனித நிறுவனங்களின் எந்தவொரு மூலையையும் தொடாமல் விடவில்லை,” என்று அந்த கூட்டு அறிக்கை அறிவித்தது.

உச்சிமாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட அல்லது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்ட முன்முயற்சிகளும் ஒப்பந்தங்களும், சீனாவின் செல்வாக்கை எதிர்த்து நிற்பதையும், அதை மூலோபாய ரீதியாக தனிமைப்படுத்துவதையும், இராணுவ ரீதியாக அழுத்தம் கொடுப்பதையும், பொருளாதார ரீதியாக பலவீனப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டவை -மற்றும் அதன் பிரதான மூலோபாய எதிரி என்று முத்திரை குத்தியுள்ள ஒரு அரசுக்கு எதிராக பகிரங்கமாக போர் தொடுப்பதற்கான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் திட்டமிடலை இலக்காகக் கொண்டதாகும்.

இந்த முன்முயற்சிகளில் பல, நேரடியாக இந்திய-அமெரிக்க இராணுவ உறவுகளை வலுப்படுத்துதலுடனும் அவற்றின் ஆயுதப்படைகளின் இடையேயான இயங்குதன்மையுடனும் பிணைந்துள்ளன. மற்றவை, 'நட்புரீதியான' உற்பத்திகளை மேற்கொள்வதற்கான அமெரிக்க முயற்சிகளின் ஒரு பகுதியாக, சீனாவிற்கு ஒரு மாற்று உற்பத்தி-சங்கிலி மையமாக இந்தியாவை மேம்படுத்துவதற்கும் -மற்றும் உயர் தொழில்நுட்ப பொருட்கள் மற்றும் ஆயுதங்களின் உற்பத்தியில் தேவையான வளங்களைப் பாதுகாக்கவும்- உதவுகின்றன.

புதிய அல்லது சமீபத்தில் தொடங்கப்பட்ட முயற்சிகளில் பின்வருவன அடங்கும்:

  • மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் 2.75 பில்லியன் டாலர் மதிப்பிலான மைக்ரோசிப் தயாரிப்பு மற்றும் சோதனை வசதி அமெரிக்காவைச் சேர்ந்த மைக்ரோன் டெக்னாலஜிஸ் நிறுவனத்தால் கட்டப்படவுள்ளது. மைக்ரோன் நிறுவனம் 825 மில்லியன் டொலர்களை முதலீடு செய்ய உள்ளது. மீதமுள்ள நிதியுதவி இந்திய மற்றும் குஜராத் அரசாங்கங்களிடமிருந்து கிடைக்கவுள்ளது.

  • அரிதான கனிம குழுமங்கள் உட்பட, இன்றியமையாத கனிமங்களைப் பெறுவதையும், சுத்திகரிப்பு திறனை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு அமெரிக்கா தலைமையிலான கனிம பாதுகாப்பு பங்காண்மையில் இந்தியா இணைகிறது. ஜி-7 சக்திகளான ஐரோப்பிய ஒன்றியம், சுவீடன், பின்லாந்து, தென் கொரியா மற்றும் ஆஸ்திரேலியாவும் இந்த கனிம பாதுகாப்பு பங்காண்மையில் தற்போதைய உறுப்பினர்கள் ஆகும்.

  • விண்வெளி ஒத்துழைப்புக்கான அமெரிக்க தலைமையிலான ஆர்ட்டெமிஸ் உடன்படிக்கையில் இந்தியாவின் ஒத்துழைப்பு, ரொக்கெட்டரி மற்றும் விண்வெளி தொடர்பான பிற தொழில்நுட்பங்களில் இந்திய-அமெரிக்க ஒத்துழைப்பை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டதாகும். அவற்றில் பல இராணுவ பயன்பாடுகளுக்கு உரியவையாகும்.

  • அமெரிக்க கடற்படைக்கும் மூன்று இந்திய கப்பல் கட்டும் தளங்களுக்கும் இடையேயான ஒப்பந்தங்கள், பயணத்தின் நடுவில் அமெரிக்க போர்க்கப்பல்களுக்கு சேவை வழங்கவும் பழுதுபார்ப்பதற்குமானதாகும். இவற்றில் ஒன்று இந்தியாவின் மேற்கு கடற்கரையிலும் (அரபிக் கடல்) மற்றையது இந்தியாவின் கிழக்கு கடற்கரையிலும் (வங்காள விரிகுடா) அமையும்.

  • ஆயுதங்கள் மற்றும் ஆயுத அமைப்பின் இணை உற்பத்தி மற்றும் மேம்பாட்டை வளர்ப்பதற்கான பல வழிமுறைகள். இவை பின்வருவனவற்றை உள்ளடக்குகின்றன: ஒரு பாதுகாப்பு தொழில்துறை ஒத்துழைப்பு வரைபடம்; 'எதிர்பாராத விநியோக சங்கிலி சீர்குலைவுகள் ஏற்பட்டால் பாதுகாப்பு பொருட்களை வழங்குவதற்கு உதவும்' வகையில் பாதுகாப்பு வழங்கல் ஏற்பாடு மற்றும் பரஸ்பர பாதுகாப்பு கொள்முதல் ஏற்பாடு; மற்றும் இந்திய-அமெரிக்க பாதுகாப்பு துரிதப்படுத்தலுக்கான சூழல் மண்டலம் (INDUS-X). பிந்தையது 'பல்கலைக்கழகம், காப்பு மீள்உற்பத்தி அமைப்பு, கூட்டுத்தாபனம், சிந்தனைக் குழு மற்றும் தனியார் முதலீட்டு பங்குதாரர்களின் வலையமைப்பு' என்று விவரிக்கப்படுகிறது. இது புதிய இராணுவ தொழில்நுட்பங்களை அபிவிருத்தி செய்வதற்கும், 'அமெரிக்க பாதுகாப்புத் துறையுடன் இந்தியாவின் வளர்ந்து வரும் தனியார் பாதுகாப்புத் தொழிற்துறையின் ஒருங்கிணைப்பை விரைவுபடுத்துவதற்கும்' ஆனதாகும்.

3 பில்லியன் டாலருக்கும் அதிகமான செலவில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ஆயுதமேந்திய MQ-9B சீகார்டியன் (SeaGuardian UAV) ஆளில்லா விமானங்களை வாங்குவதற்கான திட்டங்களை இந்தியா இப்போது இறுதி செய்துள்ளது.

இந்திய மற்றும் அமெரிக்க அரசாங்க செய்தித் தொடர்பாளர்கள் மற்றும் இராணுவ-பாதுகாப்பு ஆய்வாளர்களும், ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்தின் F414 ஜெட் எஞ்சினை இந்தியாவில் பகுதியளவு தனியார்மயமாக்கப்பட்ட ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) உடன் இணைந்து தயாரிக்கும் முன்மொழிவின் சிறப்பு முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளனர். இந்தியாவில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தேஜாஸ் மார்க் 2 போர் விமானத்தில் இந்த எஞ்சின் பயன்படுத்தப்படுவதோடு இது 2026 இல் உற்பத்தியைத் தொடங்க உள்ளது. அமெரிக்கா தனது ஜெட் எஞ்சின் தொழில்நுட்பத்தை ஆர்வத்துடன் பாதுகாத்து, இதுவரை தனது நெருங்கிய ஒப்பந்தக் கூட்டாளிகளுடன் மட்டுமே பகிர்ந்து கொண்டது. செய்திகளின்படி, இந்த ஒப்பந்தத்தின் கீழ், F414 இல் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களின் '80 சதவிகித மதிப்பை' ஜெனரல் இலக்றிக்ஸ் அதன் இந்திய கூட்டாளர்களுடன் பகிர்ந்து கொள்ளும்.

கடந்த வியாழன் அன்று வாஷிங்டனில் மோடியுடன் இணைந்து ஜெனரல் எலக்ட்ரிக்- ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் உடன்படிக்கையை அறிவித்த ஜெனரல் எலக்ட்ரிக்கின் பிரதம நிறைவேற்று அதிகாரி, எச். லோரன்ஸ் கல்ப் ஜேஆர்., இதை 'வரலாற்று' ரீதியானது என்று அழைத்ததுடன் 'இரு நாடுகளுக்கும் இடையிலான நெருக்கமான ஒத்துழைப்பு பற்றிய ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் பிரதமர் மோடியினதும் நோக்கத்தை முன்னேற்றுவதற்கு பங்காற்றுவது பற்றி ஜெனரல் எலக்ரிக் பெருமிதம் கொள்கிறது' என்றார்.

வாஷிங்டனின் நிலைப்பாட்டில், ஆயுத விற்பனை, இணை தயாரிப்பு ஒப்பந்தங்கள் மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றங்கள் பல நோக்கங்களுக்காக சேவை செய்கின்றன. அவை சீனாவுக்கு எதிராக இந்தியாவின் இராணுவத் திறன்களை வலுப்படுத்துகின்றன; நீண்டகாலமாக இருந்து வரும் இந்திய-ரஷ்ய மூலோபாய பங்காண்மையை குறைத்து இறுதியில் உடைக்கும் நோக்கில், ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் ஆயுத கட்டமைப்புகளை சார்ந்திருப்பதில் இருந்து இந்தியாவை அகற்ற உதவும்; மற்றும் இந்தியாவையும் அதன் இராணுவத்தையும் பெருகிய முறையில் அமெரிக்காவை சார்ந்திருக்கச் செய்யும்.

வாஷிங்டனும் புது தில்லியும், இந்தியாவை அமெரிக்க ஆயுதத் தொழில்துறையின் பிரதான துணை ஒப்பந்தக்காரராகவும், அமெரிக்கா வடிவமைக்கும் ஆயுதங்களை உற்பத்தி செய்ய மலிவு-தொழிலாளர்களின் வழங்குனராகவும் ஆக்கும் நோக்கத்தைப் பகிர்ந்து கொள்கின்றன. பென்டகன் அதன் சொந்த செலவுகளைக் குறைத்து, அமெரிக்க ஆயுத உற்பத்தியாளர்களின் அடிமட்டத்தை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அமெரிக்க முதலீட்டை அதிகரிப்பதும் தனது இராணுவத் தொழில்களுக்கு ஒரு பெரிய ஊக்கத்தைப் பெறுவதுமே இந்தியாவின் இலக்குகள் ஆகும். தற்போது, பிஜேபியின் கீழ் உலகின் மிகப்பெரிய ஆயுத இறக்குமதியாளர்களில் ஒருவராக இருக்கும் இந்தியா, உள்நாட்டு ஆயுத உற்பத்தியை பெருமளவில் விரிவுபடுத்துவதையும், 2025 ஆம் ஆண்டுக்குள் அதன் ஆயுத ஏற்றுமதியை ஆண்டுதோறும் 5 பில்லியன் டொலர்களாக உயர்த்துவதையும் இலக்காகக் கொண்டுள்ளது.

சீனாவிற்கு எதிரான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மூலோபாயத் தாக்குதலுக்கு இந்தியாவைப் பயன்படுத்துவதற்கான பைடன் நிர்வாகத்தின் உந்துதல், முந்தைய நான்கு ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சி நிர்வாகங்களால் பின்பற்றப்பட்ட கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டதாகும்.

இந்தக் கொள்கைகள், இந்தியாவை சீனாவுக்கு எதிராக, தரையிலும் கடலிலும் அமெரிக்காவின் முன்னரங்க நாடாக மாற்றுவதில் இன்னும் வெளிப்படையாக இயக்கப்படுகின்றன. சீனாவின் அண்டை நாடாக உள்ள இந்தியா, இந்திய நிலப்பரப்பில் எங்கிருந்தும் சீனாவின் அனைத்து பகுதிகளையும் தாக்கக்கூடிய அணுசக்தி திறன் கொண்ட ஏவுகணைகளை உருவாக்கியுள்ளது என்று பெருமை கொள்கிறது. சீனாவின் எண்ணெய் இறக்குமதி மற்றும் ஏற்றுமதியின் பெரும்பகுதி இடம்பெறுகின்ற இந்த சமுத்திரத்தில் ஆதிக்கம் செலுத்துவதற்கான புவியியல் ரீதியாக சிறந்த வாய்ப்புப் புள்ளியாகும். அமெரிக்க ஊக்கப்படுத்தலுடன், இந்தியா ஒரு சமுத்திரக் கடற்படையை உருவாக்கி வருவதுடன் இந்தியப் பெருங்கடலை நிர்வகிப்பதில் வளர்ந்து வரும் பங்கிற்கு உரிமை கோரியுள்ளது.

அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவுடனான இருதரப்பு, முத்தரப்பு மற்றும் நாற்கர இராணுவ-பாதுகாப்பு ஒப்பந்தங்கள் மற்றும் பயிற்சிகளின், எப்போதும் விரிவடைந்து வரும் வலையமைப்பின் மூலம், சீனாவிற்கு எதிரான வாஷிங்டனின் போர் தயாரிப்புகளில் புது டெல்லி சிக்கிக்கொண்டுள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளில், சீன-இந்திய எல்லைப் பிரச்சினையில் வாஷிங்டன் அனுமதியின்றி தலையிட்டுள்ளது. நடக்கவேண்டியவாறு, சீனாவிற்கும் அதன் தென்சீனக் கடல் அண்டை நாடுகளுக்கும் இடையே மூட்டிவிடுவதற்கு உதவியாக அமெரிக்கா இப்போது இமயமலையிலான முரண்பாடுகளை பெய்ஜிங்கின் 'ஆக்கிரமிப்புக்கு' எடுத்துக்காட்டுகளாக முடிச்சுப்போட்டு விடுகின்றது.

இன்னும் அச்சுறுத்தலாக, இந்திய இராணுவம் இப்போது சீன துருப்புக்களின் நடமாட்டம் பற்றிய அமெரிக்க உளவுத்துறையின் 'நிகழ்நேர' உளவுத் தகவல்களைப் பெறுகிறது. இந்த உளவுத் தகவல்கள் இந்திய மற்றும் சீனத் துருப்புக்களுக்கு இடையே சர்ச்சைக்குரிய எல்லையில் நடக்கும் மோதல்களில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அது பெருமையாகக் கூறிக்கொள்கின்றது. இந்த எல்லைப் பிரதேசங்களில் இரு நாடுகளும் ஆயிரக்கணக்கான துருப்புக்கள், டாங்கிகள் மற்றும் போர் விமானங்களை நிலைநிறுத்தியுள்ளன.

உறுதிப்படுத்திக்கொள்வதற்காக, உக்ரேன் மீது ரஷ்யாவுக்கு எதிராக நேட்டோ தூண்டிவிட்டுள்ள போரில், ரஷ்யாவை 'ஆக்கிரமிப்பாளர்' என்று கண்டிக்கவும் பொருளாதாரத் தடைகளை விதிப்பதில் சேர்ந்து கொள்வதற்குமான மேற்குலகக் கோரிக்கைகளை புது டெல்லி மறுத்தபோது வாஷிங்டன் பற்களை கடித்துக்கொண்டது. ஆனாலும், சீனாவிற்கு எதிராக தங்கள் கைகளைப் பலப்படுத்திக்கொள்வதில் மிக முக்கியமான மூலோபாய பரிசாக அவர்கள் கருதுவதை தக்கவைத்துக்கொள்வதன் பேரில், பைடன் நிர்வாகமும் பென்டகனும் தங்கள் கோபத்தைத் தணித்துக் கொண்டுள்ளதுடன், தள்ளுபடி விலையில் ரஷ்ய எண்ணெய் இறக்குமதிகளை இந்தியா கூர்மையாக அதிகரித்துள்ளதை கண்டும் கணாதது போல் இருந்துவிட்டன. மாஸ்கோவுடனான புதுடெல்லியின் மூலோபாய பங்காண்மைக்கு குழிபறிக்கவும் இறுதியில் உடைப்பதற்கும் வாஷிங்டன் நீண்டகாலமாக வேலை செய்யவில்லை என்பதை இது நிச்சயமாக அர்த்தப்படுத்தவில்லை.

மோடி அரசாங்கமானது காங்கிரஸ் கட்சி மற்றும் பிற முதலாளித்துவ எதிர் சக்திகளின் முழு உடந்தையுடன், இது ஏனைய நாடுகளுக்கு எதிராக இலக்கு வைக்கப்பட்டதல்ல என்ற அவ்வப்போதான வாக்குறுதிகளுடன், இந்திய-அமெரிக்க கூட்டணியின் ஆக்கிரோஷமான மற்றும் மேலும் மேலும் போர்க்குணமிக்க தன்மையை மூடி மறைக்க முயற்சிக்கிறது.

இது வாஷிங்டனாலும் புது டெல்லியாலும் தினசரி அடிப்படையில், வார்த்தையிலும் குறிப்பாக செயலிலும் பொய்யாக்கப்படுகிறது.

இந்திய-அமெரிக்க கூட்டணி பிற்போக்குத்தனமானது, ஈவிரக்கற்றது மற்றும் பற்றியெரிய வைக்கக் கூடியதும் ஆகும். இது பிராந்தியத்தையும் உலகையும் ஒரு பேரழிவுகரமான இராணுவ மோதலுக்கு நெருக்கமாக கொண்டுவருகிறது. இது அணு ஆயுதம் கொண்ட ரஷ்யா மற்றும் சீனாவுடன் ஒரே நேரத்தில் மோதுவதற்கு வாஷிங்டனை ஊக்குவித்துள்ளதுடன் சீனாவுடனான இந்தியாவின் எல்லை மோதலையும், பாகிஸ்தானுடனான வரலாற்றுப் போட்டியையும் அமெரிக்க-சீனா மோதலுடன் முடிச்சுப்போட்டுவிட்டு, ஒவ்வொன்றுக்கும் மேலும் மேலும் எண்ணெய் வார்த்து வெடிக்கும் நிலைக்கு கொண்டுவருகின்றது.

ஏகாதிபத்தியம், போட்டி முதலாளித்துவ அரசாங்கங்கள் மற்றும் முதலாளித்துவத்தின் அனைத்து அரசியல் பிரதிநிதிகளுக்கும் எதிராக தெற்காசியா, சீனா, அமெரிக்கா மற்றும் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களை ஒன்றிணைக்கும் ஒரு போர்-எதிர்ப்பு இயக்கத்தை கட்டியெழுப்ப வேண்டியது ஒரு மூலோபாய கட்டாயமாகும்.

இந்தியாவின் அதிவலது பிரமத மந்திரி மோடியை வரவேற்பதில் பைடென் வாஷிங்டனை வழி நடத்துகிறார்

மோடி வாஷிங்டனுக்கு விஜயம் செய்கையில், இந்தியா-சீனா இடையேயான எல்லை மோதல் நாலாவது ஆண்டை எட்டியுள்ளது

சீனாவுடன் எல்லை மோதலில் இந்தியாவுக்கு நிகழ்நேர ராணுவ உளவுத்தகவலை அமெரிக்கா வழங்கியுள்ளது

வாஷிங்டன் ரஷ்யா மீது போர் தொடுத்துள்ள நிலையில் அமெரிக்காவுடன் சீனாவுக்கு எதிரான கூட்டணியை இந்தியா வலுப்படுத்துகிறது

2002 ஆம் ஆண்டு முஸ்லிம் விரோத குஜராத் படுகொலைகளுக்காக மோடி மீது பிபிசி ஆவணப்படம் குற்றம் சாட்டுகிறது

Loading