முன்னோக்கு

சோசலிச சமத்துவக் கட்சியின் கோடைக்காலப் பாடசாலை: சோசலிசத்திற்கான இன்றைய போராட்டத்தில் வரலாற்றின் படிப்பினைகள்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

சோசலிச சமத்துவக் கட்சி (அமெரிக்கா), இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தும் அதன் சர்வதேச கோடைக்காலப் பாடசாலையை ஜூலை 30 ஞாயிறு முதல் ஆகஸ்ட் 4 வரை நடத்தியது. ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாற்றை, குறிப்பாக 1953ல் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) ஸ்தாபிக்கப்பட்டது முதல் 1985-86ல் தொழிலாளர் புரட்சிக் கட்சியில் (WRP) இருந்த தேசிய சந்தர்ப்பவாதிகளுடன் பிளவுபட்டது வரையான, 33 ஆண்டு காலகட்டத்திற்கு இடைப்பட்ட வரலாற்றை விரிவாக ஆய்வு செய்வதற்கு இந்த பாடசாலை அர்ப்பணிக்கப்பட்டது.

அனைத்துலகக் குழுவில் உள்ள அனைத்துப் பிரிவுகள் மற்றும் ஆதரவுக் குழுக்களைச் சேர்ந்த உறுப்பினர்களும் பங்கேற்பதை அனுமதிக்கும் வகையில், இந்த பாடசாலை இணையவழியில் நடத்தப்பட்டது. அனைத்து விரிவுரைகளும் கலந்துரையாடல்களும் ஒரே நேரத்தில் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி எட்டு வெவ்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு உபதலைப்பு செய்யப்பட்டன. எல்லாவற்றுக்கும் மேலாக, சோசலிச சமத்துவக் கட்சியின் தலைமைத்துவம், பாதுகாப்பான மற்றும் பயனுள்ள இணையவழி மாற்றீடு இருக்கும் போது, ஒரு தொற்றுநோய்க்கு மத்தியில், ஒரு பெரிய, ஒரு வாரகால நேரடி சந்திப்பை நடத்துவது, பொறுப்பற்றதும், பொருத்தமானதும் அல்ல என்று கருதுகிறது.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் முன்னணி உறுப்பினர்கள் மற்றும் 10 நாடுகளைச் சேர்ந்த ஆதரவுக் குழுக்களால் மொத்தம் 12 விரிவுரைகள் ஆறு நாட்களில் நிகழ்த்தப்பட்டன. விரைவில் வெளியிடப்படவுள்ள 'லியோன் ட்ரொட்ஸ்கியும் ஏகாதிபத்திய போர் மற்றும் சோசலிசப் புரட்சியின் சகாப்தத்தில் சோசலிசத்திற்கான போராட்டமும்' என்ற தலைப்பிலான WSWS இன் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவர் மற்றும் சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய தலைவர் டேவிட் நோர்த் ஆற்றிய அறிமுக விரிவுரையில் தொடங்கி, இந்த விரிவுரைகள் வரும் வாரங்களில் உலக சோசலிச வலைத் தளத்தில் வெளியிடப்படும்,

தொடக்க அறிக்கை 2019 கோடைகால பாடசாலையில் வழங்கப்பட்ட ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாற்றின் மேலோட்டத்தை நினைவுபடுத்தியது. ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாற்றில் ஐந்து தனித்துவமான கட்டங்கள் பற்றி 2019 தொடக்க அறிக்கையில் அடையாளம் காணப்பட்டன. அவற்றில் முதல் நான்கு: 1) 1923 இல் இடதுசாரி எதிர்ப்பு இயக்கம் ஸ்தாபிக்கப்பட்டதற்கும் 1938 இல் நான்காம் அகிலம் ஸ்தாபிக்கப்பட்டதற்கும் இடையிலானது; 2) நான்காம் அகிலம் ஸ்தாபிக்கப்பதற்கும் 1953 நவம்பரில் அனைத்துலகக் குழு ஸ்தாபிக்க்கப்பட்டதற்கும் இடையிலானது; 3) நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு உருவாக்கப்பட்டதற்கும் 1986ல் தொழிலாளர் புரட்சிக் கட்சியில் இருந்த தேசிய சந்தர்ப்பவாதிகளுடன் இறுதியான பிளவடையும் வரையிலான காலப்பகுதியாகும்; மற்றும் 4) தொழிலாளர் புரட்சிக் கட்சி உடன் முறித்துக்கொண்டதற்குப் பின்னரான காலம் ஆகும்.

2019 ஆரம்ப அறிக்கை, இப்போது நடந்து கொண்டிருக்கும் ஐந்தாவது கட்டமானது முதலாளித்துவ நெருக்கடியின் பிரமாண்டமான தீவிரமடைதல், வர்க்கப் போராட்டத்தின் அதிகரிப்பு மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அரசியல் செல்வாக்கின் வளர்ச்சியினாலும் வகைப்படுத்தப்படும் என்று கூறியது.

2023 பாடசாலையின் விரிவுரைகள், ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாற்றில் மூன்றாம் கட்டத்தை மையமாகக் கொண்டிருந்தன. இது நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிற்குள் கடுமையான மோதல்களின் காலகட்டமாக இருந்தது. இந்த காலகட்டத்தில், தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர பாத்திரத்தை நிராகரித்து, நான்காம் அகிலத்தை ஸ்ராலினிச, சமூக ஜனநாயக மற்றும் முதலாளித்துவ தேசியவாத இயக்கங்களுக்கு அடிபணியச் செய்ய முயன்ற பல்வேறு வகையான பப்லோவாத கலைப்புவாதத்திற்கு எதிராக, ட்ரொட்ஸ்கிஸ்டுகள் நீடித்த போராட்டத்தை நடத்தினர்.

டேவிட் நோர்த்தின் ஆரம்ப அறிக்கை, முழு வாரத்திற்குமான விரிவுரைகளின் தொனியை அமைத்தது. அது, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பிரிவின் பொதுச் செயலாளராக 2022 ஜூலை 27 அன்று இறக்கும் வரை 35 ஆண்டுகள் பதவி வகித்த விஜே டயஸின் வாழ்க்கை மற்றும் அவரின் நினைவாகப் பாடசாலையை சமர்ப்பிப்பதன் மூலம் இது தொடங்கியது. தோழர் விஜேவுக்கு புகழஞ்சலி செலுத்தும் வகையில், ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கை ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் தலைமைப் பொறுப்பில் அவர் வகித்த முக்கிய பங்கு குறித்து நோர்த் கவனம் செலுத்தினார். 'வரம்பற்ற மற்றும் பாதிக்கப்படாத தனிப்பட்ட தைரியம் மற்றும் அரசியல் கொள்கைகளுக்கு தளராத அர்ப்பணிப்பும் விஜேயின் சிறப்பான குணாதிசயங்கள்' என்று நோர்த் கூறினார். 'இது, அவர் முன்னிலையில் நிற்கும்போது தங்கள் சொந்த சந்தர்ப்பவாதத்தைப் பற்றி வெட்கப்படுவதைத் தவிர்க்க முடியாமல் தவித்த அவரது அரசியல் எதிரிகளால் கூட அங்கீகரிக்கப்பட்டது.'

நோர்த் பின்னர் கேள்வி ஒன்றை எழுப்பினார்: ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் ஒரு புதிய கட்டம் பற்றிய 2019 ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மதிப்பீடு, எந்த அளவிற்கு திருத்தமானது? 'கடந்த நான்கு வருடங்களை திரும்பிப் பார்க்கையில், 2019 பாடசாலையானது ஏகாதிபத்தியத்தின் பொருளாதார, அரசியல் மற்றும் சமூக நெருக்கடியின் பாரிய விரிவாக்கத்திற்கு சற்று முன்னதாகவே நடந்தது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்' என்று அவர் கூறினார். இந்த நெருக்கடியின் முக்கிய அம்சங்கள், 2020 இன் ஆரம்ப மாதங்களில் உலகளாவிய கோவிட்-19 தொற்றுநோயின் தொடக்கத்தை; 6 ஜனவரி 2021 அன்று அமெரிக்காவில் பாசிச சதி முயற்சியை; அமெரிக்க-நேட்டோ ஏகாதிபத்திய சக்திகளால் தூண்டப்பட்டு இடைவிடாமல் தீவிரப்படுத்தப்பட்டு வரும் 24 பெப்ரவரி 2022 அன்று தொடங்கிய உக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பை; மற்றும் உலகம் முழுவதும் தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களில் பெரும் எழுச்சியையும் உள்ளடக்கியதாகும்.

ரஷ்யாவுடனான போரை நடத்துவதில் பைடன் நிர்வாகத்தின் அதீத பொறுப்பற்ற தன்மை பற்றி கவனத்தை திருப்பிய நோர்த், அமெரிக்க ஆளும் வர்க்கம் தனது மோசமடைந்து வரும் உலகப் பொருளாதார நிலையை இராணுவ பலத்துடன் ஈடுசெய்யும் அதன் நீண்ட கால முயற்சியின் ஒரு பகுதியாக புரிந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். 'உலகளாவிய புவிசார் அரசியலில் அமெரிக்காவின் மையப் பாத்திரத்தை பாதுகாப்பது, மேலாதிக்கத்திற்கான அதன் முயற்சி ஒருபுறமிருக்க, அமெரிக்க டொலரை மறுக்க முடியாத உலக இருப்பு நாணயமாக பராமரிப்பதுடன் முற்றிலும் பிணைந்துள்ளது' என்று அவர் விளக்கினார்.

முதலாளித்துவ நெருக்கடியின் அளவை மட்டுமன்றி, தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு முன்னோக்கு மற்றும் நோக்குநிலையை வழங்குவதில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் அதன் வெளியீட்டான உலக சோசலிச வலைத் தளமும் ஆற்றும் இன்றியமையாத பங்கையும் நோர்த் வலியுறுத்தினார். நியூ யோர்க் டைம்ஸின் 1619 திட்டத்தை அம்பலப்படுத்துவதில் அது ஆற்றிய மைய பாத்திரத்தில்; கோவிட்-19 தொற்றுநோய் சம்பந்தமான உலகளாவிய தொழிலாளர் விசாரணையை நடத்துதல் உட்பட ஆளும் வர்க்கத்தின் தொற்றுநோய்க் கொள்கைக்கு விரோதமாக எதிர்ப்பை அணிதிரட்டுவதில்; உக்ரேன் மீதான ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போருக்கும் சர்வதேச அளவில் பாசிசத்தின் மீள் எழுச்சிக்கும் எதிராக தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் முன்னெடுக்கும் பிரச்சாரத்தில்; மற்றும் 2021 இல் அனைத்துலகக் குழுவால் தொடங்கி வைக்கப்பட்ட நடவடிக்கை குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணிக்கு (IWA-RFC) வளர்ந்து வரும் ஆதரவிலும் கடந்த நான்கு ஆண்டுகளில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அரசியல் அதிகாரத்தின் விரிவாக்கத்தை காண முடியும்.

பின்னர் அவர் பாடசாலையை ஊக்குவிக்கும் அடிப்படை அரசியல் கருத்தை சுருக்கமாகக் கூறினார். 'உற்பத்தி செயல்பாட்டில் அதன் புறநிலை பாத்திரத்தின் மூலம், தொழிலாள வர்க்கமே சமூகத்தில் முதலாளித்துவ அமைப்பை தூக்கியெறியும் திறன் கொண்ட அடிப்படை புரட்சிகர சக்தியாகும், என்ற அடிப்படை மற்றும் வரலாற்று ரீதியாக நிரூபிக்கப்பட்ட முன்மாதிரியில் இருந்தே எங்கள் பணி தொடர்கிறது. தொழிலாள வர்க்கம் அரசியல் சுய-நனவை மற்றும் அதன் வரலாற்றுப் பணிகளைப் புரிந்து கொள்ளும் நிலையை அடைய முடியுமா இல்லையா என்பது வெறும் ஊகத்திற்குரிய விஷயமல்ல. எதைச் சாதிக்க முடியும் அல்லது சாதிக்க முடியாது என்பது நடைமுறையிலே தீர்மானிக்கப்படும். புரட்சிகள் தோல்விகளைச் சந்தித்துள்ளன என்பதில் சந்தேகமில்லை. ஆனால், எல்லாவற்றிற்கும் மேலாக, 1917 அக்டோபர் புரட்சியின் அனுபவத்தில், தொழிலாள வர்க்கம் தேவையான தலைமைத்துவத்தைப் பெற்றால், அதனால் ஆளும் வர்க்கத்தை தூக்கி எறிய முடியும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாற்றில் நனவாக மறுபரிசீலனை செய்யப்பட்டு மற்றும் போராடிய, 20ம் நூற்றாண்டில் தொழிலாள வர்க்கத்தின் மகத்தான அனுபவங்கள் பற்றிய புரிதலை அத்தகைய தலைமை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்.

ஒரு புரட்சிகர காலத்தின் சவால்களை எதிர்கொண்டுள்ள நிலையில், “கட்சி உறுப்பினர்களின் கல்வியில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இந்தக் கல்வியின் மிக முக்கியமான அம்சம், காரியாளர்களின் அறிவை பெருக்குவதும் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாற்றைப் பற்றிய புரிதலையும் வளர்ப்பதாகும்” என நோர்த் கூறினார். அவர் மேலும் கூறியதாவது:

மார்க்சிய இயக்கத்தைப் பொறுத்தவரை, வரலாற்று அறிவு எப்போதும் புரட்சிகர நடைமுறையின் அடித்தளமாக இருந்து வருகிறது. பொதுவான தனிநபர் அனுபவத்தையும் தனிப்பட்ட எண்ணங்களையும் அரசியல் செயல்பாட்டின் தொடக்க புள்ளியாக எடுத்துக்கொள்கின்ற அரசியல் சம்பந்தப்பட்ட நடைமுறைவாத அனுகுமுறையில் இருந்து விலகி, கோட்பாட்டு ரீதியாக வழிநடத்தப்பட்ட நடைமுறையை பின்பற்றுவதற்கு, வரலாற்று அனுபவத்தை கிரகிப்பது மிகவும் அடிப்படையாகும்.

முழுப் பாடசாலையும் இந்தக் கண்ணோட்டத்தால் வடிவமைப்புச் செய்யப்பட்டது. புரட்சிகர நடைமுறைக்கும் வரலாறுக்கும் இடையிலான உறவே பாடசாலையின் கருப்பொருளாக தொடர்ந்து இருந்தது. இந்த அர்த்தத்தில் பாடசாலை முற்றிலும் தனித்துவமானதாகும். கடந்த நூற்றாண்டு ஒருபுறம் இருக்க, கடந்த தசாப்தத்தில் தனது பாத்திரம் மற்றும் அரசியல் நிலைப்பாடுகள் பற்றிய புறநிலை மற்றும் நேர்மையான கணக்கை காட்டக்கூடிய வேறு எந்த அரசியல் போக்கும் கிடையாது. கிரேக்கத்தில் சிரிசா, ஸ்பெயினில் பொடெமோஸ், ஜேர்மனியில் இடது கட்சி மற்றும் அமெரிக்காவில் உள்ள ஜனநாயக சோசலிஸ்டுகள் போன்ற அமைப்புகள் அடுத்தடுத்த நடைமுறைச் சூழ்ச்சிகளுக்கே தங்கள் அரசியலை அடித்தளமாகக் கொண்டுள்ளன. ஒவ்வொரு காட்டிக்கொடுப்பின் பின்னரும் அவை மேலும் மேலும் வலது பக்கம் திரும்புகின்றன.

1938 இல் நான்காம் அகிலத்தை ட்ரொட்ஸ்கி ஸ்தாபித்தமைக்கான அரசியல் அடிப்படை; 1953ல் பப்லோவாத கலைப்புவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவை நிறுவுதல்; கியூபப் புரட்சியும் காஸ்ட்ரோயிசம் மற்றும் குட்டி முதலாளித்துவ தேசியவாதத்திற்கு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் எதிர்ப்பு; 1964 இல் லங்கா சமசமாஜக் கட்சி ஒரு முதலாளித்துவ அரசாங்கத்துடன் இணைந்த இலங்கையில் செய்த 'பெரும் காட்டிக்கொடுப்பு'; 1971 இல் பிரான்சில் சர்வதேச கம்யூனிச அமைப்பு (OCI) உடனான பிளவிலான சிக்கலான அரசியல் பிரச்சினைகள்; எர்னஸ்ட் மண்டேலின் 'நவ-முதலாளித்துவ' பொருளாதாரக் கோட்பாடுகள் பற்றிய மார்க்சிய விமர்சனம்; 1974ல் டிம் வுல்ஃபோர்த்துடனான முறிவும் சோ.ச.க.யின் முன்னோடியான வேர்க்கர்ஸ் லீக்கில் பப்லோவாதத்திற்கு எதிரான போராட்டத்தை புதுப்பித்தலும்; 1975ல் ஆரம்பிக்கப்பட்ட ட்ரொட்ஸ்கியின் படுகொலை பற்றிய பாதுகாப்பும் நான்காம் அகிலமும் என்ற விசாரணையின் தோற்றம் மற்றும் வளர்ச்சி; மற்றும் 1985-86ல் தொழிலாளர் புரட்சிக் கட்சியுடனான பிளவு சம்பந்தப்பட்ட மெய்யியல் மற்றும் அரசியல் பிரச்சினைகள் உட்பட, ஒரு தொடர் தீர்க்கமான அனுபவங்களை இந்த விரிவுரைகள் மீளாய்வு செய்தன

இந்த வரலாற்றின் கூட்டு மறுஆய்வு செயலற்ற சிந்தனையின் நிலைப்பாட்டில் இருந்து அன்றி, மாறாக புரட்சிகர நடவடிக்கையாகும். பாடசாலையில் நிகழ்த்தப்பட்ட அனைத்து விரிவுரைகளும் கலந்துரையாடல்களும், கடந்த கால அனுபவங்களே நிகழ்காலத்தில் தொழிலாள வர்க்கத்தை நோக்குநிலைப்படுத்துவதற்கான அடிப்படை என்ற புரிதலில் வேரூண்றியவையாகும். அந்த வகையில் வரலாறானது, அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கும், சமத்துவமின்மையை ஒழிப்பதற்கும், ஏகாதிபத்தியப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும், சோசலிசத்தின் அடிப்படையில் சமூக மற்றும் பொருளாதார வாழ்க்கையை மறுசீரமைப்பதற்கும் தொழிலாள வர்க்கத்தில் ஒரு அரசியல் இயக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான போராட்டத்தில் ஒரு செயலூக்கமான சக்தியாகும்.

சோசலிச சமத்துவ சமத்துவக் கட்சியின் சர்வதேச கோடைக்காலப் பாடசாலையின் அறிக்கைகளை கவனமாகப் படித்து அவற்றை உங்கள் சொந்த அரசியல் கல்விக்கான அடிப்படையாக மாற்றிக்கொள்ளுமாறு எங்கள் வாசகர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கின்றோம்.

Loading