இலங்கையில் இலவசக் கல்வி வெட்டுக்களுக்கு எதிராக போராட்டம் நடத்திய பல்கலைக்கழக மாணவர்களை பொலிசார் கொடூரமாக தாக்கினர்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

வியாழக்கிழமை கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில், அனைத்துப் பல்கலைக்கழ மாணவர் ஒன்றியத்தினால் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருந்த போராட்டத்தில் கலந்து கொள்ள வந்த பல்கலைக்கழக மாணவ மாணவிகள் மீது கொடூரமான தாக்குதல் நடத்திய பொலிஸ், பல்கலைக்கழக மாணவர்களில் 22 பேரை கைது செய்தது.

கொழும்பு பொது நூலக வளாகத்துக்குள் மாணவர்களை கைது செய்து இழுத்துச் செல்லும் பொலிசார்

மதியம் 12.30 மணிக்கு போராட்டம் தொடங்குவதாக இருந்த போதிலும், போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக பல்வேறு திசைகளில் இருந்து ஊர்வலமாக வந்த மாணவர்களை இடைவழியில் மறித்த ஆயுதம் தாங்கிய பொலிசார் தாக்கி விரட்டியதால், மாணவர்கள் லிப்டன் சுற்று வட்டத்துக்கு வருவது தாமதமாகியது. ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் மற்றும் நாவல திறந்த பல்கலைக்கழக மாணவர்கள், கிருலப்பனையிலிருந்து லிப்டன் சுற்றுவட்டத்தை நோக்கி பேரணியாகச் சென்ற போது, ​​பொலிஸார், ஹேவ்லாக் சிட்டிக்கு அருகில் வைத்து நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டு அவர்களை கலைத்துவிட்டனர். இறுதியாக, பிற்பகல் 3:00 மணியளவில், கிட்டத்தட்ட 200 மாணவர்கள் விகாரமஹாதேவி பூங்கா அருகே வந்து சேர்ந்தனர்.

எவ்வாறெனினும், நண்பகல் 12.00 மணி முதல், கிட்டத்தட்ட 500 கலகத் தடுப்புப் பொலிசார், பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மற்றும் இராணுவ சிப்பாய்களும் அந்தப் பிரதேசத்தைச் சுற்றி குவிக்கப்பட்டனர். அவர்கள் இயந்திர துப்பாக்கிகள், நீர் பீரங்கிகள் மற்றும் கண்ணீர் புகை குண்டுகளுடன் ஆயுதபாணிகளாகி இருந்தனர்.

விகாரமகாதேவி பூங்காவிற்கு அருகில் மாணவர்கள் போராட்டம் நடத்திய போது

விஹார மகாதேவி பூங்காவிற்கு அருகில், மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்த போது இருபுறமும் கலகத் தடுப்பு பொலிஸார் குவிக்கப்பட்டு நீர் பீரங்கியையும் நெருக்கமாக கொண்டு வந்து நிறுத்தினர். போராட்டக்காரர்கள் ஊர்வலமாக செல்ல முயன்றபோது, ​​போலீசார் அவர்களை நடைபாதையில் தள்ளி நிறுத்தியதுடன் அவர்கள் ஒரு அங்குலம் கூட நகரமுடியாதவாறு அவர்களுக்கு முன்னால் விசேட அதிரடிப்படையினர் நிறுத்தப்பட்டனர்.

மாணவர்கள் பூங்காவின் மறுபுறம் ஓடியபோது, ​​போலீசார் அவர்களை விரட்டிச் சென்றனர். பொலிஸ் மாணவர்கள் மீது ​​தண்ணீர் பீய்ச்சியடித்து விரட்டிய அதேவேளை, மாணவர்களை கைது செய்யுமாறு பொலிஸ் அதிகாரி உத்தரவிட்டார். கண்மூடித்தனமான தண்ணீர் தாக்குதலில் பத்திரிகையாளர்களின் கேமராக்கள் கூட சேதப்படுத்தப்பட்டன.

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் இந்த போராட்டத்தை தடுப்பதற்காக மாளிகாகந்த மற்றும் கோட்டை நீதவான் நீதிமன்றங்களில் போராட்டங்களை தடை செய்யும் உத்தரவையும் பொலிஸார் பெற்றிருந்தனர். இதன்படி, ஆர்ப்பாட்டக்காரர்கள் டீன்ஸ் வீதி, குலரத்ன மாவத்தை, டி.பி.ஜெயா மாவத்தை, டெக்னிக்கல் சந்தி, ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, பிரதமர் அலுவலகம், காலிமுகத் திடல் ஆகிய இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டதுடன், இந்த உத்தரவை மீறுபவர்களை கைது செய்ய பொலிஸாருக்கு அனுமதி வழங்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தின் போது மாணவர்களை நகர விடாமல் குவிந்திருக்கும் அதிரடிப் படையினர்

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள அரசாங்கம், தனது அடக்குமுறைக் கரத்தை பலப்படுத்துகின்றது. பல்கலைக்கழக மாணவர்கள் மீதான இந்தத் தாக்குதல் கடந்த இரண்டு மூன்று வாரங்களாக தீவிரமடைந்து வரும் அரச அடக்குமுறையின் உச்சக்கட்டமாகும்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) சிக்கன திட்டத்தின் கீழ் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் கல்வியை தனியார் மயமாக்குவதற்கு எதிராகவும், ஊழியர் சேமலாப நிதி (EPF) மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியை (ETF) வெட்டுவதற்கு எதிராகவும் மாணவர்கள் கோஷங்களை எழுப்பினர். 'இலவச கல்வியை நாசம் செய்யும் ரணில்-விஜேதாச அறிக்கையை கிழித்தெறி!; 'கல்வி-சுகாதாரத்தை சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளைகளுக்கு ஏற்ப விற்றுத்தள்ளி மக்களின் உரிமைகளைப் பறிக்கும் ரணில்-ராஜபக்ச ஆட்சியை தூக்கி எறி!; NSBM-லைணியம்-KDU உள்ளிட்ட பட்டங்களை விற்கும் கடை வேண்டாம் என கோஷங்களை மாணவர்கள் எழுப்பினர்.

தொழிலாளர்கள், மாணவர்கள் உட்பட பல்வேறு தரப்பினரின் தொடர் போராட்டங்களை அரசாங்கம் எதிர்கொள்கிறது. பயிரிடப்பட்ட வயல்களுக்கு தண்ணீர் இல்லாததால் கடும் அழுத்தத்திற்கு உள்ளான தீவின் பல்வேறு மாகாணங்களில் உள்ள விவசாயிகளின் தரப்பில் இருந்து எழுந்த போராட்டங்களால் அரசாங்கம் குழம்பிப்போனது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவினால் விதிக்கப்பட்ட விவசாய இரசாயன தடைக்கு எதிராக ஆரம்பித்த விவசாயிகளின் தொடர் போராட்டங்கள் எவ்வாறு மக்கள் எழுச்சியாக வளர்ந்தது என்பதும், அந்த எழுச்சியில் மில்லியன் கணக்கான தொழிலாள வர்க்கம் ஒன்றிணைந்து இராஜபக்ஷவும் அவரது அரசாங்கமும் எவ்வாறு அதிகாரத்தில் இருந்து அகற்றப்பட்டது என்பதும் ஜனாதிபதி விக்ரமசிங்கவுக்கு நன்றாகவே தெரியும். கொடூரமான அரச அடக்குமுறை மூலம் அத்தகைய எழுச்சியைத் தடுக்க விக்கிரமசிங்க உறுதிபூண்டுள்ளார்.

* ஜூலை 28 அன்று, முன்னிலை சோசலிசக் கட்சி (மு.சோ.க.) தலைமையிலான தொழிலாளர் போராட்ட மையம் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தின் மீது கொழும்பு தெமட்டகொட சஹஸ்ரபுர விளையாட்டு மைதானத்திற்கு அருகில் வைத்து பொலிசார் தண்ணீர் மற்றும் கண்ணீர் புகை தாக்குதல் நடத்தியதுடன், அதை செய்தியாக்க வந்த ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர பொலிசாரால் பலவந்தமாகக் கடத்தப்பட்டார்.

* ஜூலை 23 அன்று, மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) இளைஞர் அமைப்பான சோசலிச இளைஞர் சங்கம், 1983 ஜூலை தமிழர் இனப்படுகொலையை நினைவுகூரும் வகையில், கொழும்பு விஹார மகாதேவி பூங்காவில் உள்ள திறந்தவெளி அரங்கை நோக்கி பேரணியாகச் சென்றபோது, ​​பொலிசார் நீர்தாரை அடித்து கலைத்தனர். இதற்காக சுமார் ஆயிரம் பொலிஸ் படை குவிக்கப்பட்டது.

*அதே நாளில், ஐக்கிய சோசலிச கட்சி (யு.எஸ்.பி.) தலைமையிலான 'வடக்கு தெற்கு சகோதரத்துவம்' என்ற அமைப்பு, பொரளை கனத்தை மயாணத்துக்கு முன்னால் உள்ள சந்தியில் ஏற்பாடு செய்திருந்த ஜூலை 1983 படுகொலையை நினைவுகூரும் நிகழ்வுக்கும் எதிராக ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொலிஸ் துருப்புக்கள் திரட்டப்பட்டன.

* ஜூலை 25 அன்று, அரசாங்கத்தின் உத்தேச புதிய தொழிலாளர் சட்டங்களை விலக்கிக்கொள்ளக் கோரியும், ஓய்வூதிய வெட்டுக்களை நிறுத்தக் கோரியும் 2,000 தனியார் துறை ஊழியர்கள் மத்திய வங்கிக்கு பேரணியாகச் செல்ல எடுத்த முயற்சி, பொலிசார் பெற்றுக்கொண்ட தடை உத்தரவு மூலம் தடுத்து நிறுத்தப்பட்டது. தொழிலாளர்களுக்கு எதிராக இராணுவம், பொலிசார் மற்றும் தண்ணீர் பீரங்கிகளும் வரவழைக்கப்பட்டன.

வியாழக்கிழமை பல்கலைக்கழக மாணவர்களின் பேரணியை நசுக்குவதற்காக அணிதிரட்டப்பட்டிருந்த கலகம் அடக்கும் பொலிஸ் மற்றும் இராணுவத்தினர்

ஜூலை 23 முதல் மூன்று வாரங்களுக்குள் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்கள், சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன உத்தரவுகளை அமல்படுத்துவதில் உறுதியாக இருக்கும் அரசாங்கம், அதற்கு எதிரான எந்த விதமான எதிர்ப்பையும் பொறுத்துக்கொள்ளாது என்பதைக் காட்டுகிறது.

சோசலிச சமத்துவக் கட்சி, பொலிஸ் மற்றும் இராணுவத்தை நிலைநிறுத்தி இந்த ஆர்ப்பாட்டங்கள் மீது அரசாங்கம் நடத்திய கொடூரமான ஒடுக்குமுறையை கண்டிக்கின்றது. அதே நேரத்தில், இந்த அமைப்புகளின் முதலாளித்துவ சார்பு அரசியலுக்கு சோ.ச.க. எந்த அரசியல் ஆதரவும் வழங்கவில்லை. அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் உட்பட இந்தக் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் அரசியலானது அரசாங்கங்களுக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் அவற்றின் கொள்கைகளை மாற்ற முடியும் என்ற கட்டுக்கதையை பரப்புகின்ற எதிர்ப்பு அரசியலாகும். தொழிற்சங்கங்களும் இதே மாயையே பரப்புகின்றன.

முதலாளித்துவ அமைப்பில் உள்ள ஒரே புரட்சிகர வர்க்கமான தொழிலாள வர்க்கத்தின் பக்கம் மாணவர்களும் விவசாயிகளும் திரும்ப வேண்டும். ஆனால் மேற்கூறிய அமைப்புகள் அவர்களை தொழிலாள வர்க்கத்திலிருந்து ஒதுக்கி வைக்க உணர்வுப்பூர்வமாக முயற்சி செய்கின்றன.

தொழிலாள வர்க்கத்தின் மீதான தொடர் தாக்குதல்களின் ஒரு பகுதியாக, தொழிலாளர் சட்டங்களில் திருத்தம் செய்து வரும் அரசாங்கம், கருத்துச் சுதந்திரத்தையும் பேச்சுச் சுதந்திரத்தையும் இல்லாதொழிக்கும் சட்டங்களையும் கட்டளைகளையும் அறிமுகப்படுத்தி வருகின்றது.

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தவுள்ள தனது 'புதிய வேலைவாய்ப்பு சட்டமூலத்தின்' மூலம், தற்போதுள்ள 13 தொழில் சட்டங்கள் பதிலீடு செய்யப்படவுள்ளன. இதன் மூலம் சுரண்டல் தீவிரப்படுத்தப்படுவதுடன் தொழிலாளர்களின் கடுமையான போராட்டங்களால் வென்றெடுக்கப்பட்ட உரிமைகள் துடைத்தழிக்கப்படும். சுகாதாரப் பாதுகாப்பு நெருக்கடி மேலும் மேலும் அம்பலத்திற்கு வரும் நிலைமையின் மத்தியில், தொழிற்சங்கங்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் ஊடகங்களுக்கு அது பற்றிய தகவல்களை வழங்குவதைத் தணிக்கை செய்து, ஜூலை 20 அன்று சுகாதாரச் செயலாளர் ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டார்.

தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் பிற அரசியல் எதிர்ப்பாளர்களை தண்டிப்பதன் பேரில், இராணுவத்தால் நடத்தப்படும் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்க அனுமதிக்கும் புனர்வாழ்வு பணியக மசோதாவை பாராளுமன்றம் ஜனவரி மாதம் நிறைவேற்றியது.

சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கனக் கொள்கைகளுக்கு எதிராகப் போராடுபவர்களை 'பாசிஸ்டுகள்' மற்றும் 'பயங்கரவாதிகள்' என்று பகிரங்கமாக அவமதித்த விக்கிரமசிங்க, தொழிலாள வர்க்கம், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளின் அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீதான பாரிய தாக்குதலாக மார்ச் 22 அன்று பயங்கரவாத எதிர்ப்பு மசோதாவை வர்த்தமானியில் வெளியிட்டார்.

அரசாங்கத் தாக்குதல்களுக்கு எதிராகப் போராடும் தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் ஏனைய பிரிவினரை ஒடுக்குவதற்கு அரசாங்கம் ஏற்கனவே பொது மக்கள் பாதுகாப்புச் சட்டம், பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் புனர்வாழ்வு செயலகம் போன்ற கொடூரமான சட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

மாணவர்கள் மீதான அடக்குமுறை, உழைக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் ஜனநாயக உரிமைகள் மீதான ஒட்டுமொத்த தாக்குதலின் ஒரு பகுதியாகும். மாணவர்களின் பாதுகாப்புக்கு தொழிலாளர்கள் முன்வருவது அவசியமாகும்.

Loading