மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
மூன்று ஆண்டுகால கொரியப் போரில் சண்டையை முடித்து, கொரிய தீபகற்பத்தின் பனிப்போர் பிரிவை நிலைநிறுத்திய போர்நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதைக் குறிக்கும் இரண்டு பகுதி கட்டுரையின் இரண்டாம் பகுதி இதுவாகும். பகுதி ஒன்றை இங்கே அழுத்தி வாசிக்கவும்.
ஆரம்பத்தில் இருந்தே, அமெரிக்க ஆக்கிரமிப்புப் படைகள் கொரிய தொழிலாள வர்க்கம் மற்றும் விவசாயிகளின் எதிர்ப்பை நசுக்க வேண்டியிருந்தது. 1946 இன் இரண்டாம் பாதியில் தொழிலாளர்களின் கோபம் வெடித்தது, செப்டம்பர் 23 அன்று பூசானில் சுமார் 8,000ம் ரயில்வே தொழிலாளர்களின் பொது வேலைநிறுத்தத்தில் தொடங்கி 251,000ம் தொழிலாளர்களை உள்ளடக்கியதாக நாடு முழுவதும் வேலைநிறுத்தம் பரவியது. அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் உணவுப் பொருட்களின் விலைகள் மற்றும் வேலையின்மை ஆகியவை அதிருப்தியை தூண்டின.
அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கான எதிர்ப்பும் தொழிலாளர்களின் கோபத்தை தூண்டியது. அக்டோபர் 1 அன்று டேகு நகரில் ஒரு ஆர்ப்பாட்டக்காரர் பொலிசாரால் கொல்லப்பட்டார், இது பாரிய ஆர்ப்பாட்டங்களையும் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் ஒடுக்குமுறையின் சின்னங்களான போலிஸ், நிலப்பிரபுக்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளிற்கு எதிரான தாக்குதல்களையும் தூண்டியது, அவர்களில் பலர் ஜப்பானியர்களுடன் ஒத்துழைத்திருந்தனர். அமெரிக்க இராணுவம், மற்றும் நடைமுறையில் தென் கொரிய இராணுவப் படையாக இருந்த கொரிய பொலிஸ்துறை மற்றும் வலதுசாரி பயங்கரவாத அமைப்புகளால் வன்முறையாக ஒடுக்கப்படுவதற்கு முன்பு இந்த எழுச்சி நவம்பர் நடுப்பகுதி வரை நீடித்தது.
அமெரிக்க ஆக்கிரமிப்பு மற்றும் அது நிறுவிய வலதுசாரி ஆட்சிக்கு எதிரான விரோதம், முன்னாள் ஜப்பானிய ஒத்துழைப்பாளர்களால் நிரம்பியிருந்தது, மேலும் அது மக்கள் எழுச்சிகளைத் தூண்டியது. 1948ல் தனித் தேர்தல் நடத்துவதற்கான அமெரிக்கத் திட்டங்களுக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்திய ஜெஜு தீவில் மிகப் பெரிய ஒன்றாக அது இருந்தது. தீவை அடக்குவதற்கான இராணுவ நடவடிக்கை ஏப்ரல் 3, 1948 முதல் மே 1949 வரை நடந்தது. துல்லியமான எண்ணிக்கையைப் பொறுத்த வரையில் மதிப்பீடுகள் வேறுபடுகின்றன. ஆனால், அங்கு பத்தாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இன்னும் பலர் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டனர், அனைத்துமே அமெரிக்க இராணுவ அரசாங்கத்தின் ஆதரவுடன் நடந்தது.
மொத்தத்தில், அமெரிக்க ஆக்கிரமிப்பு மற்றும் தனி நாடு அமைப்பதை எதிர்த்த 100,000 முதல் 200,000 கொரியர்கள் கொரியப் போர் தொடங்குவதற்கு முன்பே கொல்லப்பட்டனர். இடதுசாரிகள் என்று குற்றம் சாட்டப்பட்ட 200,000 பேர், போரின் ஆரம்ப நாட்களில் கொல்லப்பட்டதாக வரலாற்றாசிரியர்கள் மதிப்பிடுகின்றனர்.
ஆழ்ந்த செல்வாக்கற்ற ரீ ஆட்சி, தெற்கில் உள்ள தொழிலாள வர்க்கம் மற்றும் விவசாயிகளின் முற்றுகையின் கீழ், அனைத்து கொரியாவின் சட்டபூர்வமான அரசாங்கம் என்று கூறிக்கொண்டு வடக்குடன் போருக்குத் துணிந்து கொண்டிருந்தது. 1949 கோடை மற்றும் இலையுதிர் காலம் முழுவதும் எல்லையில் பல மோதல்கள் நடந்தன, இவை அனைத்தும் தெற்கு பகுதியிலிருந்து தொடங்கப்பட்டன. 1950 வரை சண்டை தொடர்ந்தது.
போருக்கான தயாரிப்பில் ரீ இராணுவத்தையும் விரிவுபடுத்தினார். ஜப்பானின் குவான்துங் இராணுவத்தில் ஒத்துழைப்பாளர்களாகப் பணியாற்றிய ஏராளமான கொரிய அதிகாரிகளை அவர் கொண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது, அவர்களில் பலர் கொரிய சுதந்திரப் போராளிகள் மீதான தாக்குதல்களுக்குப் பொறுப்பாக இருந்தனர்.
ஜூன் 1950 இல் தென் கொரியாவில் வட கொரியா இராணுவத் தலையீடு தூண்டுதலற்று நடத்தப்பட்டது என்று அமெரிக்கா கூறுவது முற்றிலும் பொய்யானது மற்றும் அபத்தமானது.
ட்ரூமன் சீனாவை “இழக்கிறார்” மற்றும் தலைகீழ் மாற்றத்திற்கு திரும்புகிறார்
அமெரிக்க ஆக்கிரமிப்பின் மிருகத்தனமான செயல் ஆசியாவில் அதன் மேலாதிக்க நிலையை இழக்கும் வாஷிங்டனின் கவலையுடன் கைகோர்த்துச் சென்றது. அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிரான பலத்த அடியாக இருந்த சீனப் புரட்சியால் அந்த அச்சம் பெரிதும் அதிகரித்தது மற்றும் ஆசியா முழுவதும் எதிரொலித்தது.
1949 இல், ஸ்ராலினிச சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (CCP) படைகளுக்கும் மற்றும் ஜெனரலிசிமோ சியாங் காய்-ஷேக்கின் ஆளும் குவோமின்டாங் (KMT) படைகளுக்கும் இடையிலான உள்நாட்டுப் போர் அதன் இறுதி முக்கியமான கட்டத்தை எட்டியது, அப்போது அமெரிக்க சார்பு KMT ஆட்சி சிதைந்து சியாங் தைவானுக்கு தப்பி ஓடினார். இது அக்டோபர் புரட்சி போன்ற தொழிலாள வர்க்கத்தின் கிளர்ச்சி அல்ல, மாறாக 1949 அக்டோபரில் சீன மக்கள் குடியரசை நிறுவிய உச்சக்கட்ட இராணுவ வெற்றியாகும்.
ட்ரூமன் நிர்வாகத்தின் “சீன இழப்பு” ஒரு கட்டுப்படுத்தும் கொள்கையிலிருந்து தலைகீழ் மாற்றத்திற்குச் திரும்பச் செய்வது குறித்து முடிவு எடுப்பதில் மற்றும் அதன் நட்பு நாடுகளுடன் சேர்ந்து 1950 இல் கொரியா மீது படையெடுப்பதில் குறிப்பிடத்தக்க பங்கை வகித்தது. இது டிசம்பர் 1948 இல் சோவியத் யூனியன் துருப்புக்களை திரும்பப் பெற்றதை தொடர்ந்து ஜூன் 1949 இல் அமெரிக்கா படைகளை விலக்கிக் கொண்டிருந்தது.
ட்ரூமன் வாஷிங்டனில் குறிப்பிடத்தக்க தாக்குதலுக்கு உள்ளானார். கலிபோர்னியாவைச் சேர்ந்த குடியரசுக் கட்சி செனட்டரும், சியாங் கை ஷேக் மற்றும் சீன தேசியவாதிகளின் வலுவான ஆதரவாளருமான வில்லியம் நோலண்ட் ட்ரூமனைக் கண்டித்தார். சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக மேலும் நடவடிக்கை எடுக்கத் தவறியதற்காக அவரது நிர்வாகம் “ஆசியாவில் கம்யூனிசம் பரவுவதற்கு உதவுகிறது, தூண்டுகிறது மற்றும் ஆதரவளிக்கிறது” என்று கூறினார். [1]
ட்ரூமனின் அரசாங்கம் ஏப்ரல் 1950 இல் தேசிய பாதுகாப்பு கவுன்சில் அறிக்கை-68 (NSC 68) ஐ இறுதி செய்வதன் மூலம் பதிலளித்தது, இது சோவியத் யூனியனுடனான போருக்கான தயாரிப்பில் அமெரிக்க இராணுவத்தை பெருமளவில் கட்டமைக்க அழைப்பு விடுத்தது. “சுதந்திர உலகில் கணிசமான மற்றும் விரைவான வலிமையைக் கட்டியெழுப்புவது ஒரு உறுதியான கொள்கையை ஆதரிக்க வேண்டியது அவசியம் என்பது தெளிவாகிறது. உலக மேலாதிக்கத்திற்கான கிரெம்ளினின் உந்துதலை கண்காணித்து அதனை பழைய நிலைக்கு திரும்ப செய்ய வேண்டும்” என்று கூறி [2] அது குறிப்பாக அன்றைய நாள் நடப்பாக தலைகீழ் மாற்றத்திற்குத் திரும்பியது மற்றும் சோவியத்-அணிசேர்ந்த அரசாங்கங்களைத் தூக்கியெறிய இராணுவத்தைப் பயன்படுத்தியது.
போர் வெடிக்கிறது
ஜூன் 25, 1950 அன்று கொரியாவில் முழு அளவிலான சண்டை வெடித்தபோது, தெற்கில் ரீயின் ஆட்சிக்கு முழுமையான ஆதரவு இல்லாதது விரைவில் வெளிப்பட்டது. வட கொரிய இராணுவம் தெற்கே, தென் கொரிய இராணுவத்தை தீபகற்பத்தின் தென்கிழக்கு மூலையை நோக்கி திணறடிக்கும் வகையில் பின்தள்ளியது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களின் போர்வையின் கீழ் படையெடுப்பதற்கான காரணமாக அமெரிக்கா முந்தைய ஐந்து ஆண்டுகளில் தூண்டிவிட்ட போரை சாதகமாக்கி கொண்டது. வாஷிங்டனின் இலக்கு, சீனாவின் மீது படையெடுத்து அங்குள்ள புரட்சியை நசுக்குவதற்கு முன்னோட்டமாக வட கொரியாவை அழிப்பதாகும்.
அதே நேரத்தில், சோவியத் யூனியனானது, வட கொரியாவிற்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டது, அதன் மூலம் அமெரிக்கா முழு தீபகற்பத்தையும் கைப்பற்ற அனுமதித்தது. உண்மையில், போர் தொடங்குவதற்கு சில வாரங்களுக்கு முன்பு, கொரியாவை ஒருங்கிணைக்கும் போரில் மாஸ்கோவின் ஆதரவைக் கோரிய வட கொரியத் தலைவர் கிம் இல்-சுங்கிடம் ஸ்டாலின் இவ்வாறு கூறினார், “உங்கள் பல்லை உடைப்பார்களாயின் நான் ஒரு சுண்டு விரலை கூட தூக்க மாட்டேன்.”[3]
கொரியாவிற்கு இராணுவப் படைகளை நிலைநிறுத்துவது குறித்த ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் வாக்கெடுப்பின் போது, தீர்மானங்களை வீட்டோ அதிகாரம் செய்யக்கூடிய சோவியத் யூனியன் அங்கு இருக்கவில்லை. சோவியத் புறக்கணிப்புக்கான சாக்குப்போக்கு என்னவென்றால், பாதுகாப்பு கவுன்சிலில் சீன மக்கள் குடியரசுக்கு இடம் வழங்குவதை காட்டிலும், தோற்கடிக்கப்பட்ட கோமிண்டாங்கின் படைகளால் தைவானில் நிறுவப்பட்ட ஆட்சிக்கு அமர்வு கொடுத்ததற்கு எதிர்ப்பு என்பதாகும்.
செப்டம்பர் 15, 1950 இல் இன்சியான் (Incheon) மீது அமெரிக்கா படையெடுத்து போரின் திசையை மாற்றியது. அக்டோபர் 7 திகதியன்று, அமெரிக்கப் படைகள் வட கொரிய இராணுவத்தை 38 வது அட்சரேகைக் கோட்டுக்கு பின்னுக்குத் தள்ளின, பின்னர் சீனாவின் மீது படையெடுப்பதற்கான தெளிவான அச்சுறுத்தலுடன் வடக்கு எல்லையில் ஓடிய யாலு நதியை நோக்கி நகர்ந்தன. ஒரு வருடத்திற்கும் குறைவான சீன மக்கள் குடியரசு மரண அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதை அறிந்த CCP வடக்கைப் பாதுகாக்க கொரியாவிற்குள் நுழைந்த மக்கள் தன்னார்வ இராணுவத்திற்கு மக்கள் ஆதரவைத் திரட்ட முடிந்தது.
அமெரிக்க மற்றும் சீனப் படைகள் சாங்ஜின் ஏரியில் (அதன் ஜப்பானியப் பெயர் சோசின் நீர்த்தேக்கம்) போரிட்டன, இது நவம்பர் 27 முதல் டிசம்பர் 13, 1950 வரை ஆக்ரோசத்துடன் நடந்தது. இதன் விளைவாக அமெரிக்க இராணுவத்திற்கு பெரும் தோல்வி ஏற்பட்டது, அது வட கொரியாவில் உள்ள ஹங்னாம் நகரத்திலுள்ள துறைமுகத்திற்குத் பின் தள்ளப்பட்டது மற்றும் கடல் வழியாக வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த தோல்வியானது அதன் திட்டங்களை கொரியாவில் மட்டுமல்லாமல், தலைகீழ் மாற்றத்திற்கு திரும்புவதற்கான அமெரிக்காவின் முழு மூலோபாயத்தையும் கடுமையாக சீர்குலைத்தது. அமெரிக்க ஸ்தாபகத்திலுள்ள சில பிரிவுகள் இதற்கு பதிலடியாக அணு ஆயுதப் போருக்கு அழைப்பு விடுத்தன.
அப்போது அமெரிக்கப் படைகளுக்குத் தலைமை தாங்கிய ஜெனரல் டக்ளஸ் மக்ஆர்தர், தனக்கு சரியென்று படும் பட்சத்தில் அணுகுண்டுகளை வீசுவதற்கான உரிமையைக் கோரினார். சீனப் பெருநிலப் பகுதியில் சீன தேசியவாதப் படைகளை தரையிறக்கும் போது, “மஞ்சூரியாவின் கழுத்தை சுற்றிய பகுதியில் …30 முதல் 50 அணுகுண்டுகளை வீசிவதற்கு முயற்சித்ததாக” அவர் பின்னர் கூறினார்.[4]
இவை வெறுமனே ஒரு பைத்தியக்காரனின் ஆவேசங்கள் அல்ல. ட்ரூமன் நிர்வாகம், போரின் போது வட கொரியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளின் மீதும் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதைப்பற்றி பரிசீலித்தது. ஏப்ரல் 1951 இல் உண்மையில் அவ்வாறு செய்வதற்கு மிக அருகில் வந்ததாகக் கூறப்படுகிறது. ஒகினாவாவுக்கு தயார் நிலையில் ஒருங்கிணைக்கப்படாத குண்டுகள் கொண்டு செல்லப்பட்டன, ஏப்ரல் 6 இல் ட்ரூமன் அணுகுண்டுகளை ஜனாதிபதியிடமிலிருந்து இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிக்கு மாற்ற ஒப்புதல் அளித்தார். ஆனால் அந்த நிகழ்வில் ஒரு தாக்குதல் நடக்கவில்லை.
எவ்வாறாயினும், ஆகஸ்ட் 1949 இல் தனது சொந்த அணுகுண்டை வெற்றிகரமாக பரிசோதித்த சோவியத் யூனியனுடன் அணுவாயுதப் போரை வாஷிங்டன் விரும்பவில்லை. போருக்கு முன்பு ஸ்டாலின் வடக்கில் இருந்து ஆதரவை வாபஸ் பெற்றிருந்தாலும், கொரியா மீதான அமெரிக்க படையெடுப்பின் தீவிரம் கண்டு அதிர்ச்சியடைந்தார். ஆசியாவில் அமெரிக்காவிற்கும் சோவியத் யூனியனுக்கும் இடையே ஒரு முக்கியமான இடைத்தடை நாடாக கருதப்படும் சீனாவை அமெரிக்கா வீழ்த்தாது என்பதை உறுதிப்படுத்த வட கொரிய மற்றும் சீன இராணுவங்களுக்கு அவர் உதவி மற்றும் ஆயுதங்களை வழங்கினார். இதில் போர் விமானங்கள் மற்றும் விமானிகள் வடிவிலான பங்களிப்புகளும் அடங்கும்.
அமெரிக்கா மற்றும் தென் கொரியாவின் அட்டூழியங்கள்
அணுகுண்டுகள் வீசப்படவில்லை என்றாலும், அமெரிக்கா மற்றும் தென் கொரியப் படைகளின் அட்டூழியங்கள் சர்வசாதாரணமாக இருந்தன. ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் - போர்க் கைதிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் சுடப்படுவதற்கு முன்பு தங்கள் கல்லறைகளைத் தோண்டி எடுக்கும்படி கட்டாயப்படுத்தப்பட்டனர். இந்த கொலைகளில் பல அமெரிக்கப் படைகளின் மேற்பார்வையில் தென் கொரிய துருப்புக்களால் செய்யப்பட்டது, மக்களைப் பயமுறுத்தும் மோசமான வேலையை செய்வதில் தங்கள் கூட்டாளியை அனுமதிப்பதில் அவர்கள் திருப்தி அடைந்தனர்.
வாஷிங்டன் மற்றும் சியோல் மற்றும் அதைத் தொடர்ந்து வந்த தென் கொரிய அரசாங்கங்களால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்த சரியான புள்ளிவிவரங்கள் தெரியவில்லை. இருப்பினும், பல படுகொலைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. ஒரு உதாரணமாக, தென் கொரிய படைகள் ஜூலை 4-6, 1950 க்கு இடையில் டேஜியோனில் 7,000 அரசியல் கைதிகளைக் கொன்றனர். ஒப்பீட்டளவில் மிகவும் நன்கு அறியப்பட்ட மற்றொரு படுகொலையில், அதே மாதத்தில் நோ குன்ரியில் (நோஜியுன்-ரி) அமெரிக்க படைகள் டேஜியோன் அருகில் 400 அகதிகளைக் கொன்றனர்.
இந்த அட்டூழியங்கள் பல பத்திரிகையாளர்களால் பதிவு செய்யப்பட்டன, அவர்களின் போர் பற்றிய செய்தி சர்வதேச சீற்றத்தை உருவாக்கியது மற்றும் மோதல் பற்றிய அமெரிக்க பொய்களை அம்பலப்படுத்தியது. ஜனவரி 1951 இல், வாஷிங்டன் அமெரிக்கப் பத்திரிகையாளர்களை இராணுவத்தின் அதிகார வரம்பிற்குள் வைப்பதன் மூலம் பதிலளித்தது, இது எந்தவொரு சாதகமற்ற செய்திகளை தடுத்தது மற்றும் தணிக்கை செய்தது.
ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் பதில்
போரின் தொடக்கத்திலிருந்தே, ட்ரொட்ஸ்கிச இயக்கம் போரை எதிர்த்தது மற்றும் கொரியாவில் இருந்து அமெரிக்க மற்றும் நேசப் படைகளை உடனடியாக திரும்பப் பெறுமாறு கோரியது. அமெரிக்காவில் சோசலிஸ்ட் தொழிலாளர் கட்சியின் (SWP) தலைவரான ஜேம்ஸ் பி. கேனன், ஜூலை 1950 இல் ட்ரூமன் நிர்வாகத்திற்கும் காங்கிரசுக்கும் ஒரு வெளிப்படையான கடிதம் எழுதினார். அதில் அவர்களை “ஒரு கயவர்களின் கூட்டம்” மற்றும் “மனித இனத்தின் துரோகிகள்” என்று கண்டனம் செய்தார். கேனன் மேலும் தொடர்ந்து கூறியதாவது:
கொரியாவில் அமெரிக்கத் தலையீடு ஒரு மிருகத்தனமான ஏகாதிபத்தியப் படையெடுப்பு ஆகும், இது இந்தோ-சீனா மீதான பிரெஞ்சுப் போர் அல்லது இந்தோனேசியா மீதான டச்சுத் தாக்குதலிலிருந்து வேறுபட்டதல்ல. அமெரிக்க இளைஞர்கள் 10,000 மைல்களுக்கு அப்பால் அனுப்பப்படுவது கொரிய மக்களை விடுவிப்பதற்காக அல்ல, மாறாக அவர்களைக் கைப்பற்றி அடிபணியச் செய்வதற்காகவும் கொல்லவும் கொல்லப்படுவதற்கும் அனுப்பப்படுகிறார்கள். இது மூர்க்கத்தனமானது. இது பயங்கரமானது.
ரீ பொம்மை ஆட்சியின் ஒரு சில வாங்கப்பட்ட மற்றும் விற்கப்பட்ட முகவர்களைத் தவிர ஒட்டுமொத்த கொரிய மக்களும் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்துப் போராடி வருகின்றனர். அதனால்தான் கொரியாவிலிருந்து வெளிவரும் பத்திரிகைகள் ‘ஊடுருவல்’ தந்திரோபாயங்கள், ‘கொரில்லாக்களின்’ அதிகரித்து வரும் நடவடிக்கைகள், ‘திரவ’ சண்டை முனை, ‘பூர்வீக மக்களின்’ ‘எரிச்சல்’ மற்றும் ‘நம்பகத்தன்மையின்மை’ பற்றி மேலும் மேலும் குறை கூறுகின்றன...
ஜூன் 25 அன்று கொரியாவில் நடந்த வெடிப்பின் நிகழ்வுகள் நிரூபித்தபடி, கொரியர்கள் தங்கள் நாட்டை ஒருங்கிணைக்கவும், அந்நிய ஆதிக்கத்திலிருந்து தங்களை விடுவித்து, தங்கள் முழுமையான தேசிய சுதந்திரத்தை வென்றெடுக்கவும் ஆழ்ந்த விருப்பத்தை வெளிப்படுத்தினர். கிரெம்ளின் இந்த போராட்டத்தை தனது சொந்த பிற்போக்குத்தனமான நோக்கங்களுக்காக பயன்படுத்திக் கொள்ள முயல்கிறது என்பதும், வாஷிங்டனுடன் மற்றொரு ஒப்பந்தம் கிடைத்தால் நாளை அதை விற்றுவிடும் என்பதும் உண்மை. ஆனால், இந்தப் போராட்டம் கொரிய மக்களின் அமோக மற்றும் முழு மனதுடன் ஆதரவைப் பெற்றுள்ளது. இது மேற்கத்திய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ஆசியா முழுவதிலும் உள்ள நூற்றுக்கணக்கான மில்லியன் காலனித்துவ மக்களின் வலிமையான எழுச்சியின் ஒரு பகுதியாகும். இதுதான் யதார்த்தமான உண்மை, காலனிய அடிமைகள் இனி அடிமைகளாக இருக்க விரும்பவில்லை.[5]
அதே நேரத்தில், கொரியப் போரானது மக்ஸ் ஷாக்ட்மன் மற்றும் 1940ல் சோசலிச தொழிலாளர் கட்சி மற்றும் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் இருந்து சோவியத் ஒன்றியம் இனி ஒரு தொழிலாளர் அரசு அல்ல என்று கூறி பிரிந்து சென்றவர்கள் பற்றிய ஒரு தெளிவான வெளிப்பாட்டை வழங்கியது, இதன் விளைவாக ஏகாதிபத்தியத்திடமிருந்து ரஷ்யப் புரட்சியின் ஆதாயங்களில் எஞ்சியிருந்தவற்றைப் பாதுகாக்க மறுத்தது. லியோன் ட்ரொட்ஸ்கி 1939-40ல் அரசியல் போராட்டத்தின் போக்கில் ஸ்தாபிக்கப்பட்ட சோசலிச தொழிலாளர் கட்சி தலைமையுடன் சேர்ந்து சோவியத் ஒன்றியத்தை அரச முதலாளித்துவம் என பிரகடனம் செய்தவர்கள் ஏகாதிபத்தியத்திற்கு தங்களைத் தகவமைத்துக் கொள்வதாகக் கூறினார்.
ஒரு தசாப்தத்திற்குப் பின்னர் ஷாக்ட்மனும் அவரது தொழிலாளர் கட்சியும் அமெரிக்கா தலைமையிலான கொரியா மீதான படையெடுப்பை வெளிப்படையாக ஆதரித்தனர், அது ஸ்ராலினிச சர்வாதிகாரத்திற்கு எதிராக “ஜனநாயகத்தை” பாதுகாப்பதாக அறிவித்து, அமெரிக்க இராணுவத்திற்காக “சோசலிச” துண்டுப்பிரசுரங்களை எழுதினார்கள், அவற்றை வட கொரிய மற்றும் சீனர்களின் நிலைகள் மீது விநியோகம் செய்து அவர்களை சரணடையும்படி அழைப்பு விடுத்தனர்.
சமாதானப் பேச்சுவார்த்தைகள்
வடக்கிலிருந்து அமெரிக்கா பின்வாங்கியதைத் தொடர்ந்து, போர் இன்னும் இரண்டரை ஆண்டுகளுக்கு நீடித்தது, முன்னணி நிலைகள் பெரும்பாலும் 38வது அட்சரேகைக் கோட்டை (38th parallel) சுற்றியே இருந்தது. ஐ.நா.வுக்கான சோவியத் பிரதிநிதி ஆடம் மாலிக்கால் ஜூலை 10, 1951 இல் பன்முன்ஜியோமில் போர் நிறுத்தப் பேச்சுக்கள் தொடங்கியது. சில வரலாற்றாசிரியர்கள் போர் அந்த ஆண்டே முடிவடைந்திருக்கலாம் என்று வாதிட்டனர். ஆனால், அமெரிக்கா மோதலைத் தக்கவைத்துக்கொள்வதில் ஆர்வம் கொண்டிருந்தது. அமெரிக்காவில் மெக்கார்த்திய (McCarthyite) பழிவாங்கல் வேட்டை நிலைமைகளின் கீழ், போர் ஒரு திட்டவட்டமான நோக்கத்தை நிறைவேற்றியது, அது முதலாளித்துவத்திற்கு எதிரான அரசியல் எதிர்ப்பு மற்றும் உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ தொழிலாளர் இயக்கங்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிர்ப்பு ஆகியவை குறித்து கம்யூனிச விரோதிகளின் தாக்குதல்களை நியாயப்படுத்தியது.
வடக்கில், இடைவிடாத விமானத் தாக்குதல்களின் விளைவாக, பெரும்பாலான மக்கள் குகைகளில் வாழ்ந்தனர். போரின் இறுதி வாரங்களில், வடக்கின் உணவு உற்பத்தியில் 75 சதவீதத்திற்கு தண்ணீர் வழங்கும் நீர்ப்பாசன அணைகள் மீதும் அமெரிக்கா குண்டுவீசித் தாக்கியது. கொரியாவின் கொடூரமான போர் (Korea’s Grievous War) என்ற தனது புத்தகத்தில், வரலாற்றாசிரியர் சு-கியோங் ஹ்வாங் எழுதுகிறார், “கொரியாவில் நடந்த வான்வழிப் போர் அடிப்படை மனித அச்ச உணர்வுகளை மூலதனமாக்கியது. வட கொரிய நகரங்கள் மற்றும் கிராமங்கள் மீது அமெரிக்க போர் விமானங்கள் தொடர்ந்து பயங்கரவாத குண்டுவீச்சுக்களில் ஈடுபட்டு, உள்ளூர் மக்களிடையே சர்வ வல்லமையுள்ள பயத்தை தூண்ட சபதமெடுத்தது”.[6]
அமெரிக்காவில், போரின் மீதான பொது அதிருப்தி பெருகியது. ஜனவரி 1953 இல், ஜனாதிபதி டுவைட் ஐசனோவர் பதவிக்கு வந்தார், போரை முடிவுக்கு கொண்டுவருவதாக உறுதியளித்தார். இறுதியாக ஜூலை 27, 1953 இல் போர் நிறுத்தத்துடன் சண்டை நிறுத்தப்பட்டது. கொரிய மக்களுக்கு எதிராக அமெரிக்கா ஒரு இனப்படுகொலைப் போரை நடத்தி, தீபகற்பத்தை அழித்தது. 4 மில்லியன் முதல் 5 மில்லியன் மக்கள் இப்போரில் கொல்லப்பட்டனர், அவர்களில் பாதி பேர் பொதுமக்கள். மொத்தத்தில், அமெரிக்கா 635,000 டன் குண்டுகளையும் 32,000 டன் நேபாம் எரி குண்டுகளையும் கொரியா மீது வீசியது, இது வரலாற்றில் அதிக குண்டுவீச்சு நடத்தப்பட்ட நாடுகளில் ஒன்றாகும். இதற்கு நேர்மாறாக, இரண்டாம் உலகப் போரின்போது பசிபிக் பிராந்தியம் முழுவதும் அமெரிக்கா சுமார் 500,000 டன் குண்டுகளை வீசியது.
முடிவுரை
போர்நிறுத்தத்தைத் தொடர்ந்து, அமெரிக்க ஏகாதிபத்தியம் தென் கொரியாவை வட கொரியாவிற்கு எதிராக மட்டுமல்ல, சீனா மற்றும் சோவியத் யூனியனுக்கும் எதிரான நடவடிக்கைகளின் முக்கியமான தளமாகத் தொடர்ந்து கருதியது. அது சர்வாதிகார ரீ ஆட்சிக்கு முட்டுக் கொடுத்தது, பின்னர் மூன்று தசாப்தங்களாக பார்க் சுங்-ஹீயின் கீழ் 1961 இல் அதிகாரத்தைக் கைப்பற்றிய இராணுவ சர்வாதிகாரம், மலிவு உழைப்பைச் சுரண்டுவதற்காக தென் கொரியாவில் ஒரு தொழில்துறை தளத்தை உருவாக்க அமெரிக்கா உதவியது, அதே நேரத்தில், வட கொரியாவின் இராஜதந்திர மற்றும் பொருளாதார தனிமைப்படுத்தலையும் பராமரித்தது.
1980 களில் வேலைநிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்புகளின் பெருகிய அலைக்கு மத்தியில், ஆட்சியானது மட்டுப்படுத்தப்பட்ட சீர்திருத்தங்களை அமல்படுத்தியது. அது வெளிப்படையான தேர்தல்களுக்கு வழி வகுத்தது மற்றும் சர்வாதிகாரத்திற்கு எதிராக முதலாளித்துவ தாராளவாத எதிர்ப்பை சட்டப்பூர்வமாக்கியது. தென் கொரியா இப்போது ஒரு துடிப்பான ஜனநாயகம் என்ற அனைத்து கூற்றுகளுக்கும் மாறாக சர்வாதிகாரத்தின் அரசு எந்திரம், குறிப்பாக இராணுவம், பொலிஸ் மற்றும் உளவுத்துறை அமைப்புகள், கொடிய கம்யூனிச எதிர்ப்புகளில் மூழ்கியிருப்பவை பெரும்பாலும் அப்படியே இருக்கின்றன. தற்போதைய தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக்-யோலை ஆதரிக்கும் வலதுசாரி மக்கள் சக்தி கட்சியின் (PPP) தோற்றமானது பார்க் சுங்-ஹீ (Park Chung-hee) சர்வாதிகாரத்தின் கட்சியில் இருந்து வருகிறது.
கிழக்கு ஐரோப்பாவில் ஸ்ராலினிச ஆட்சிகளின் சரிவு, 1991ல் சோவியத் யூனியன் கலைப்பு மற்றும் சீனாவின் சந்தை சார்பு மறுசீரமைப்பை சீன கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்தோசீனாவிலுள்ள அவர்களது சகாக்களும் வெளிப்படையாக ஏற்றுக்கொண்டதன் மூலம், ஸ்ராலினிசத்தின் நெருக்கடிக்குப் பின் வட கொரியா இன்னும் தனிமைப்படுத்தப்பட்டு முதலாளித்துவ மறுசீரமைப்புக்கு திரும்பியுள்ளது. குறிப்பாக சோவியத் யூனியனின் பொருளாதார ஆதரவு வேகமாக வறண்டு போய் வடகொரியாவை ஆழமான பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளியது.
முதலாளித்துவ மறுசீரமைப்பை கைவிடாமல், மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள வட கொரிய ஆட்சியானது, வெளிநாட்டு முதலீட்டை ஊக்குவிப்பதில் பெரும் முயற்சியை மேற்கொண்டுள்ளது, மேலும் பெரும்பாலும் காலியாக இருக்கும் தடையற்ற வர்த்தக மண்டலங்களின் சரத்தை அமைக்கிறது. மிகவும் மலிவான வட கொரிய உழைப்பு கவர்ச்சிகரமானதாக இருந்தாலும், தென் கொரியா உட்பட உலக நிறுவனங்கள், அமெரிக்கா தனது பொருளாதார மற்றும் இராஜதந்திர முற்றுகையை பராமரித்து பலப்படுத்தி வருகின்ற நிலையில் முதலீடுகளை செய்ய தயங்குகின்றன.
வடகிழக்கு ஆசியாவில் அமெரிக்காவின் மூலோபாயத்தில் கொரியா முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு பிளவுபட்ட கொரியா மற்றும் வட கொரிய “அச்சுறுத்தல்” என்று அழைக்கப்படுவது ஜப்பான் மற்றும் தென் கொரியாவில் உள்ள தளங்களில் ஒரு பெரிய அமெரிக்க இராணுவ இருப்பை பராமரிக்க ஒரு பயனுள்ள சாக்குப்போக்கை வழங்குகிறது. 1990 களில், தென் கொரிய ஜனாதிபதி கிம் டே-ஜங்கின் நிர்வாகம் வட கொரியாவை வெளிநாட்டு முதலீட்டிற்கும், கொரிய தீபகற்பம் வழியாக போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் குழாய் வழிகளை அமைப்பதற்கும் அவரது சன்ஷைன் கொள்கையை முன்வைத்தது.
சன்ஷைன் கொள்கையானது எப்போதும் வாஷிங்டனின் நிபந்தனைகளுக்கு உட்பட்டது. கிளின்டன் நிர்வாகம் இந்த அணுகுமுறையை தற்காலிகமாக ஏற்றுக்கொண்டாலும், வட கொரியா ஒருதலைப்பட்சமாக அதன் அணுசக்தி திட்டம் மற்றும் வசதிகளை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தியது, அதற்கு பதிலாக அமைதி பேச்சுவார்த்தைகள் மற்றும் பல தசாப்தங்களாக தனிமைப்படுத்தப்பட்ட ஒரு முடிவுக்கான தெளிவற்ற வாக்குறுதிகளை மட்டுமே அளித்தது. இருப்பினும், 2001 இல் பதவியேற்ற புஷ் நிர்வாகம் சன்ஷைன் கொள்கையை திறம்பட நாசமாக்கியது. வட கொரியாவை அணு ஆயுதங்களை உருவாக்கும் பாதையில் தள்ளியது. ஜனாதிபதிகள் ஒபாமா, டிரம்ப் மற்றும் பைடென் ஆகியோரால் பராமரிக்கப்பட்டு பலப்படுத்தப்பட்ட முடக்கும் பொருளாதார தடைகளுடன் வாஷிங்டன் இதற்கு பதிலளித்துள்ளது.
அமெரிக்க ஏகாதிபத்தியம்-ஏற்கனவே உக்ரேனில் ரஷ்யாவுடன் போரில் ஈடுபட்டுள்ள நிலையில்-இன்று, தனது உலகளாவிய மேலாதிக்கத்தைத் தக்கவைத்துக் கொள்ள ஆற்றொணா நிலையில் மற்றும் பொறுப்பற்ற முறையில் முயற்சித்து வரும் நிலையில், தென் கொரியா, சீனாவுடன் ஒரு போர் முனையில் உள்ளது. தென் கொரியாவில் உள்ள அமெரிக்க தளங்கள் சீனா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளுக்கும் எதிரான போருக்காக மூலோபாய ரீதியாக அமைந்துள்ளன. இன்று ஒரு போர் ஏற்பட்டால், தென் கொரியாவின் அபார இராணுவத்தின் மீது வாஷிங்டன் செயல்பாட்டுக் கட்டுப்பாட்டை எடுக்கும்.
மேலும், வட கொரிய அச்சுறுத்தலை அமெரிக்கா சாக்குப்போக்காக பயன்படுத்தி, தென் கொரியா மற்றும் ஜப்பானை ஆசியாவில் அதன் கண்டம் விட்டு கண்டம் பாயும் எதிர்ப்பு ஏவுகணை அமைப்பில் ஒருங்கிணைத்துள்ளது. தென் கொரியாவில், சீனாவுடனான அணுசக்திப் போருக்கான அதன் மூலோபாயத் திட்டத்தின் ஒருங்கிணைந்த அங்கமான ஒரு அதிஉயர் முனையப் பகுதிக்கான பாதுகாப்பு (Terminal High Altitude Area Defense -THAAD) ஏவுகணைத் தளத்தை அது நிலைநிறுத்தியுள்ளது.
கடந்த தசாப்தத்தில், அமெரிக்க ஏகாதிபத்தியம் வடகிழக்கு ஆசியாவை, கொரிய தீபகற்பத்தில் பதட்டங்களை அதிகப்படுத்தி, கிழக்கு மற்றும் தென் சீனக் கடல்களில் நிலப்பிரதேச பூசல்களைத் தூண்டிவிட்டுள்ளது. ரஷ்யாவிற்கு எதிரான அதன் போரைத் தீவிரப்படுத்தினாலும் கூட, அமெரிக்கா ஒற்றை சீனா கொள்கையை கேள்விக்கு உட்படுத்துவதன் மூலமாக வேண்டுமென்றே தைவானைத் தாக்குவதற்கு சீனாவைத் தூண்டுகிறது – இந்த ஒற்றை சீனா கொள்கை -அமெரிக்க-சீனா இராஜதந்திர உறவுகளின் அடிப்படையாக இருக்கிறது – இது சீனாவின் ஒரு பகுதியாக தைவானை அங்கீகரிக்கிறது.
கொரியப் போரின் படிப்பினைகளை மறந்துவிடக் கூடாது. அமெரிக்க ஏகாதிபத்தியமானது, அதன் பொருளாதார மற்றும் மூலோபாய நலன்களை மனித வாழ்வு மற்றும் துன்பங்களை முற்றிலும் புறக்கணிக்கும் இரக்கமற்ற தன்மையின் வெளிப்படையான நிரூபணம் ஆக இருக்கிறது. ஒரு புதிய உலகப் போருக்கு அமெரிக்கா களம் அமைத்து வருகிறது. அது ஏற்கனவே ரஷ்யாவை உள்ளடக்கியதோடு, சீனாவை அதன் இலக்கில் குறி வைத்துள்ளது. அணு ஆயுத சக்திகளுக்கு இடையிலான இத்தகைய மோதல், ஒப்பிடுகையில் கொரியப் போரின் பயங்கரத்தை வெளிறியதாக்கும்.
மிகப்பெரிய அணுவாயுத போரை, ஒரேயொரு சமூக சக்திதான் தடுப்பதற்கான திறனைக் கொண்டிருக்கிறது. ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில், சர்வதேச தொழிலாள வர்க்கமானது, முதலாளித்துவத்தையும் மற்றும் போட்டி தேசிய அரசுகளாக உலகை அதன் திவாலான பிரிவினையில் வைத்திருப்பதையும் ஒழிக்க வேண்டும். இந்த அரசியல் முன்னோக்கிற்காக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மட்டும் தான் போராடுகிறது.
முற்றும்.