வாஷிங்டனின் உத்தரவின் பேரில், சீனா மீது போர் தொடுப்பதில் அமெரிக்காவுக்கு இந்திய இராணுவம் எவ்வாறு உதவ முடியும் என்பதை பரிசீலனை செய்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

தைவான் விவகாரத்தில் சீனாவுடனான போரில் அமெரிக்காவிற்கும் அதன் கூட்டாளிகளுக்கும் என்ன ஆதரவை வழங்க முடியும் மற்றும் வழங்கும் என்பதை இந்திய இராணுவம் அவசரமாகவும் உயர் மட்டத்திலும் பரிசீலித்து வருகிறது.

இராணுவம் அடையாளம் காணும் “விருப்பத் தேர்வுகள்” விரைவில் இந்தியாவின் தீவிர வலதுசாரி, நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கத்தின் முன் வைக்கப்படும் மற்றும் சந்தேகத்திற்கு இடமின்றி, பின்னர் வெள்ளை மாளிகை மற்றும் பென்டகனுக்கும் ஏதோ ஒரு வடிவத்தில் தெரிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

சீனா மீது போர் தொடுப்பதில் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு இந்தியாவின் முப்படைகளான  தரைப்படை, கடற்படை மற்றும் விமானப்படை எவ்வாறு உதவக்கூடும் என்பது குறித்த தற்போதைய ஆய்வுக்காக அமெரிக்க அதிகாரிகள் பல மன்றங்களில் இந்த பிரச்சினையை எழுப்பிய பின்னர், இந்தியாவின் பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் அனில் சவுகான் உத்தரவிட்டதாக கடந்த மாத தொடக்கத்தில் இருந்து பல செய்தி அறிக்கைகள் கூறுகின்றன.

கடந்த வாரம், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் ஜி 20 உச்சிமாநாட்டிற்காக இந்தியாவுக்கு வருகை தந்தபோது, ப்ளூம்பெர்க் மற்றும் டைம்ஸ் ஆஃப் இந்தியா “மூத்த இந்திய அதிகாரிகளை” மேற்கோள் காட்டி ஒரு அறிக்கையை வெளியிட்டன, இரண்டு “விருப்பத்தேர்வுகள்” அடையாளம் காணப்பட்டுள்ளன மற்றும் அவை இப்போது விரிவான ஆய்வுக்கு உட்படுத்தப்பட உள்ளன.

“இந்திய இராணுவம் ஆய்வு செய்யும் ஒரு விருப்பத்தேர்வில் நேச நாட்டு போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்களுக்கான பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு வசதிகளை வழங்குவதற்கான தளவாட மையமாக செயல்படுவதும், அதேபோல் சீனாவை எதிர்க்கும் இராணுவங்களுக்கு உணவு, எரிபொருள் மற்றும் மருத்துவ உபகரணங்களை வழங்குவதும் அடங்கும்” என்று ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.

அமெரிக்க இராணுவத்துடன் கூட்டு நடவடிக்கையை செயல்படுத்துவதற்கும் எளிதாக்குவதற்கும் இந்தியா ஏற்கனவே தொடர்ச்சியான “அடிப்படை” ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. அமெரிக்க போர் விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்கள் இந்திய துறைமுகங்கள் மற்றும் தளங்களை மறு விநியோகம் மற்றும் பழுதுபார்ப்புக்கு வழக்கமாகப் பயன்படுத்தக்கூடிய போக்குவரத்து திட்டமுறை புரிந்துணர்வு ஒப்பந்தம் (LEMOA) இதில் அடங்கும். இருப்பினும் இந்தியா அமெரிக்காவின் நட்பு நாடாக இல்லாததால், இது போர்க்காலத்தில் தானாக பொருந்தாது.

கடந்த ஜூன் மாதம் வாஷிங்டனில் நடந்த உச்சிமாநாட்டில் மோடியும் பைடெனும் அறிவித்த பல ஒப்பந்தங்களில் அமெரிக்க கடற்படைக்கும் மூன்று இந்திய கப்பல் கட்டும் தளங்களுக்கும் இடையிலான ஒரு ஒப்பந்தம் அமெரிக்க போர்க்கப்பல்களுக்கு சேவை மற்றும் பழுதுபார்ப்பு ஆகியவற்றை வழங்குகிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பாங்காங் ஆற்றங்கரையில் உள்ள டாங்கிகள், இந்தியா-சீனா எல்லையில் லடாக்கில் உள்ள சோ ஏரி பகுதி, 10 பிப்ரவரி 2021 புதன்கிழமை [AP Photo/India Army via AP]

இரண்டாவது “விருப்பத் தேர்வு” இன்னும் ஆத்திரமூட்டும் வகையில் உள்ளதுடன், அமெரிக்க-சீனப் போருக்கான, அதன் ஆரம்ப தூண்டுதல் எதுவாக இருந்தாலும், ஒரு பூகோளரீதியான மோதலாக விரைவாக தீவிரமடையும் என்பதை தெளிவுபடுத்துகிறது.

ப்ளூம்பெர்க் அறிக்கை, “மிகவும் தீவிரமான சூழ்நிலையில், இந்தியா தங்கள் வடக்கு எல்லையில் நேரடியாக ஈடுபடுவதற்கான சாத்தியக்கூறுகளை மதிப்பிடும், இது சீனாவுக்கான ஒரு புதிய போர் அரங்கை திறக்கும்” என்று குறிப்பிடுகிறது.

இத்தகைய அச்சுறுத்தல் குறித்து பெய்ஜிங் சந்தேகத்திற்கு இடமின்றி நீண்ட காலமாகவே அறிந்திருக்கிறது. இது இப்போது இந்தியாவின் இராணுவ மற்றும் அரசியல் தலைவர்களினால் தீவிர பரிசீலனையில் இருப்பதாக பகிரங்கமாக விவாதிக்கப்படுவது என்பது புதியது, மேலும் உக்ரேனைப் போலவே தைவானையும் பயன்படுத்தி சீனாவுடன் ஒரு போரை தூண்டுவதற்கான அமெரிக்க திட்டங்கள் எவ்வளவு முன்னேறியுள்ளன என்பதை இது எடுத்துக்காட்டுகிறது.

ப்ளூம்பெர்க்கின் கூற்றுப்படி, “இந்திய இராணுவம் அதன் ஆய்வை “விரைவில் முடிக்க” உத்தரவிடப்பட்டுள்ளது.

சீனாவின் “மென்மையான அடிவயிறு” என்று அமெரிக்க போர் திட்டமிடுபவர்களால் அடிக்கடி வர்ணிக்கப்படும் இந்தியா, சீனாவுடன் ஒரு நீண்டகால எல்லை மோதலைக் கொண்டுள்ளது, இது 2020 முதல் வியத்தகு முறையில் அதிகரித்துள்ளது, இதில் வாஷிங்டன் பிடிவாதமாக தன்னை நுழைத்துள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளாக, இந்தியாவும் சீனாவும் தங்கள் வரையறுக்கப்படாத இமயமலை எல்லையில் பல்லாயிரக்கணக்கான துருப்புக்கள், டாங்கிகள் மற்றும் போர் விமானங்களை “முன்னோக்கி நிலைநிறுத்தியுள்ளன”, அதே நேரத்தில் அரண்களை கட்டுவது மற்றும் விமான தளங்கள், போக்குவரத்து இணைப்புகள் மற்றும் பிற போர் தொடர்பான உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கான விபத்து திட்டங்களையும் மேற்கொள்கின்றன.

2020 வரை, வாஷிங்டன் இந்திய-சீன எல்லைப் பிரச்சினையில் நடுநிலையான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தது. அப்போதிருந்து, ட்ரம்பின் கீழ் தொடங்கப்பட்டு பைடெனால் தீவிரப்படுத்தப்பட்ட சீனாவுக்கு எதிராக அனைத்து பக்கங்களிலிருந்தும், குறிப்பாக இராஜதந்திர, பொருளாதார மற்றும் இராணுவ-மூலோபாய தாக்குதலின் ஒரு பகுதியாக, அது முன்னெப்போதையும் விட நேரடியாக மோதலில் தன்னை நுழைத்துள்ளது.

அமெரிக்க அரசாங்கமும் காங்கிரஸும் இப்போது இந்திய-சீன எல்லைப் பிரச்சினையை தென் சீனக் கடல் தொடர்பாக சீனாவிற்கும் அதன் அண்டை நாடுகளுக்கும் இடையே அமெரிக்கா தூண்டிவிடும் பிராந்திய மோதல்களுடன் இணைப்பதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளன. அவை பெய்ஜிங்கின் “வலுத்தாக்குதலுக்கு” சான்றாக உள்ளன என்று கூறுகின்றன.

சீனாவுடனான இந்தியாவின் எல்லையிலிருந்து 100 கிலோமீட்டருக்கும் குறைவான தூரத்தில் “உயரமான இடத்தில் போர் முறைக்கான “ ஒரு கூட்டு இந்திய-அமெரிக்க இராணுவப் பயிற்சி முடிந்த சிறிது நேரத்திற்குப் பிறகு, இந்திய அதிகாரிகள் வாஷிங்டனால் வழங்கப்பட்ட “நிகழ்நேர” உளவுத்துறை தகவலை பயன்படுத்தி மக்கள் விடுதலை இராணுவத்தின் “எல்லை ஊடுருவலை” தடுத்ததாக கூறி அதற்கு நன்றி தெரிவித்து பெருமையடித்துக் கொண்டனர்.

அமெரிக்க-சீனப் போர் ஏற்பட்டால் இரண்டாவது போர்முனையைத் திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இந்திய இராணுவம் எடை பார்க்கிறது என்பதை “கசிவுகள்” மூலம் ஒப்புக்கொள்வது பெய்ஜிங்குடனான உறவுகளை மேலும் பற்றி எரியச்செய்யும்.

இந்த “கசிவுகள்”, சமீபத்தில் ஓய்வு பெற்ற மூன்று இந்திய படைத் தலைவர்கள் - இராணுவத் தளபதி மனோஜ் நரவானே, கடற்படைத் தலைவர் கரம்பீர் சிங் மற்றும் விமானப்படைத் தலைவர் ஆர்.கே.எஸ் பதௌரியா ஆகியோர் தைவான் அரசாங்கத்தின் ஆதரவுடன் இந்தோ-பசிபிக் பாதுகாப்பு உரையாடல் குறித்து கேட்டகலான் மன்றம் மற்றும் தைவானின் முக்கிய பாதுகாப்பு சிந்தனைக் குழுவான தேசிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனத்தின் அதிகாரிகளைச் சந்திக்க தைபேயிற்கு விஜயம் செய்து சிறிது நேரத்திற்குப் பிறகு வந்துள்ளன.

மூவரின் ஓய்வு பெற்ற அந்தஸ்து என்பது அது தைவானுடன் நெருக்கமான இராணுவ உறவுகளை நாடவில்லை அல்லது ஒற்றை சீனா கொள்கையை கடைப்பிடிப்பதை மீறவில்லை என்ற பாசாங்குத்தனத்தை அதிகாரப்பூர்வமாக பராமரிக்க புது தில்லிக்கு உதவியது. இருப்பினும், மோடி அரசின் உத்தரவின் பேரில் இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

ப்ளூம்பெர்க் அல்லது டைம்ஸ் ஆஃப் இந்தியா அறிக்கைகள், சீனா மற்றும் இந்தியா இரண்டுமே அணுஆயுத வல்லரசுகள் என்ற உண்மை குறித்து எந்த கவலையையும் எழுப்பவில்லை என்பது ஒருபுறம் இருக்க, அதன் முக்கிய மூலோபாய அச்சுறுத்தலாக இருப்பது சீனா தான் என்ற கூற்றுக்களுடன் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் பொருத்தப்பட்ட ஒரு அணுசக்தி முக்கோணத்தின் வளர்ச்சியை புது தில்லி நியாயப்படுத்தியுள்ளது.

அதேபோல், சீனா மீதான அமெரிக்கப் போரில் ஒரு முன்னணி நாடாக இந்தியாவின் பாத்திரம் தெற்காசியா சக்திகளுக்கு இடையேயான சமநிலை குறித்த தாக்கங்களை இந்த அறிக்கைகள் புறக்கணித்துள்ளன. இந்தியாவின் வரலாற்றுரீதியான மூலோபாய போட்டியாளராக கருதப்படும் பாகிஸ்தான், கடந்த ஒன்றரை தசாப்தங்களாக சீனாவுடன் முன்னெப்போதையும் விட ஆழமான இராணுவ-பாதுகாப்பு உறவுகளை உருவாக்கியுள்ளது. இது புது தில்லிக்கு வாஷிங்டன் மூலோபாய உதவிகளை பொழிந்து வருவதற்கான பதிலிறுப்பாக உள்ளது.

சீனாவை மூலோபாய ரீதியாக தனிமைப்படுத்துவதற்கும், சுற்றி வளைப்பதற்கும் மற்றும் கீழ்ப்படிய செய்வதற்குமான அதன் உந்துதலுக்கு இந்தியாவை இன்னும் இறுக்கமாகப் பயன்படுத்தும் நோக்கத்துடன், அமெரிக்கா புது தில்லிக்கு உயர் தொழில்நுட்ப ஆயுதங்கள் மற்றும் சிவிலியன் அணுசக்தி தொழில்நுட்பம் கிடைப்பதற்கான வசதியை வழங்கியுள்ளது, மேலும் பாகிஸ்தானுக்குள் அதன் சட்டவிரோத மற்றும் ஆத்திரமூட்டும் “மின்னல்” இராணுவத் தாக்குதல்களை அங்கீகரித்துள்ளது.

சீனா மீது அமெரிக்கா போர் தொடுக்கும் போது இன்னும் சொல்லப்போனால், இந்தியா சீனாவை நேரடியாகத் தாக்கினால், பாகிஸ்தானின் ஆளும் வர்க்கம் அதன் இராணுவப் படைகளையும், அத்துடன் அணு ஆயுதங்களையும் சமநிலைக்கு தள்ளும்படியான மாபெரும் பூகோள மூலோபாய நிர்பந்தங்களை எதிர்கொள்ள நேரிடும்.

சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு எதிராக இருமுனைப் போரை நடத்தும் திறன் கொண்டதாக இருக்க வேண்டும் என்று இந்திய இராணுவக் கோட்பாடு அழைப்பு விடுக்கிறது, மேலும் அதன் தளபதிகள் அவ்வாறு நடத்துவதற்கான ஆயுதங்களும் வலிமையும் தங்களிடம் இருப்பதாக அடிக்கடி பெருமையடித்துக் கொள்கின்றனர்.

“விருப்பத் தேர்வுகளை” இந்தியா பரிசீலனை செய்வதாக கூறுவது பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. சீனா மீதான அமெரிக்கப் போருக்கு புது தில்லி உதவி வழங்கவும் தூண்டுதல் அளிக்கவும் முடியும். இந்தியாவின் விரிவடைந்து வரும் வடக்கு விமான தளங்களின் வலையமைப்புகளிலிருந்து, அமெரிக்க போர் விமானங்கள் சீனாவுக்குள் ஆழமாக உள்செல்ல முடியும்.

இந்தியாவிடம் ஒரு பெரிய மற்றும் வளர்ந்து வரும் “ஆழ்கடல்” கடற்படை உள்ளது மற்றும் அது இந்தியப் பெருங்கடலில் “பாதுகாப்பை வழங்குவதில்” ஒரு பெரிய பாத்திரத்தை ஏற்றுக்கொள்ள ஆர்வமாக உள்ளது. இந்தியப் பெருங்கடல் வழியாக உலகின் மிக முக்கியமான கடல் பாதைகள் கடந்து செல்கின்றன, இதில் சீனாவின் ஏற்றுமதி வர்த்தகத்தின் பெரும்பகுதி மற்றும் அதன் பொருளாதாரத்திற்கு எரிபொருளாக இருக்கும் எரிசக்தி மற்றும் பிற வளங்களும் அடங்கும்.

தென்சீனக் கடலில் அமெரிக்காவுடன் கூட்டுக் கடற்படை ரோந்துப் பணிகளை மேற்கொள்வதை இந்தியா இதுவரை தவிர்த்து வந்த நிலையில், அதன் கப்பல்கள் இப்போது அங்கு “கொடியைக் காட்டுவது” வழக்கமாகி உள்ளது. அது அமெரிக்கா மற்றும் அதன் முக்கிய ஆசிய-பசிபிக் கூட்டாளிகளான ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவுடன் நாற்கர கூட்டு கடற்படை பயிற்சிகளை ஒழுங்கு முறையாக மேற்கொண்டு வருகிறது, சமீபத்திய மாதங்களில் வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் இரண்டுடனும் அதன் இராணுவ-பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்தியுள்ளது.

கோவிட்-19 பெரும் தொற்றுநோயால் தூண்டப்பட்ட பூகோளரீதியான முதலாளித்துவ நெருக்கடி தீவிரமடைந்ததற்கு பதிலிறுப்பாக மோடி அரசாங்கம், கடந்த மூன்று தசாப்தங்களாக இந்திய முதலாளித்துவம் பின்பற்றி வரும் வர்க்க மூலோபாயத்தின் இரட்டைத் தூண்களை இரட்டிப்பாக்கியது. இவை பூகோள மூலதனத்தை ஈர்ப்பதற்கும் இந்திய-அமெரிக்க “பூகோள மூலோபாய” கூட்டாண்மையை வலுப்படுத்துவதற்கும் தொழிலாள வர்க்கத்தின் மீதான சுரண்டலை உக்கிரப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட முதலீட்டாளர் சார்பு சீர்திருத்தங்களாகும்.

கடந்த மூன்றரை ஆண்டுகளில், புது தில்லி வியத்தகு முறையில் சீனாவுக்கு எதிரான அமெரிக்க போர் உந்துதலில் அதன் ஒருங்கிணைப்பை அதிகரித்துள்ளது, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவுடனான இருதரப்பு, முத்தரப்பு மற்றும் நாற்கர மூலோபாய உறவுகளை வலுப்படுத்தியுள்ளது.

ஆயினும்கூட, உக்ரேன் போரின் தொடக்கத்தில் ரஷ்யாவுடனான அதன் பல தசாப்தகால நெருக்கமான இராணுவ-மூலோபாய மற்றும் வர்த்தக உறவுகளை முறித்துக் கொள்ள வேண்டும் என்ற அமெரிக்கா மற்றும் அதன் நேட்டோ கூட்டாளிகளின் கோரிக்கைகளை புது தில்லி நிராகரித்தது. மலிவான ரஷ்ய எண்ணெய் இந்திய பொருளாதாரத்தின் மீது அதிகரித்து வரும் அழுத்தத்தை தணிக்க உதவுகிறது. மேலும் புது தில்லி அதன் இராணுவப் படைகளை தயார்படுத்துவதற்கும், அதன் சிவிலியன் அணுசக்தி திட்டத்திற்கு உதவுவதற்கும் மற்றும் மேற்கத்திய சக்திகளிடமிருந்து சில “மூலோபாய சுயாட்சியை” வழங்குவதற்கும் மாஸ்கோவுடனான அதன் உறவுகளில் தொடர்ந்து சார்ந்துள்ளது.

ஒரு புரட்சிகர சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் போருக்கு எதிராக பூகோள தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்கான போராட்டத்தை எதிர்க்கும் பல்வேறு குட்டி முதலாளித்துவ போலி-இடது சக்திகள் —அமெரிக்காவை தளமாகக் கொண்ட இந்திய ஸ்ராலினிச கல்வியாளர் விஜய் பிரசாத் போன்றோர்— ரஷ்யா மீதான அமெரிக்க-நேட்டோ போரின் பின்னால் மோடி அரசாங்கம் அணி திரள உறுதியாக மறுத்ததை கொண்டாடியுள்ளன.

இவை அனைத்தும் வேண்டுமென்றே கண்மூடித்தனமானவை. கீழ்த்தரமான இந்து மேலாதிக்கவாதியான நரேந்திர மோடியின் அரசியல் தலைமையின் கீழும், ரஷ்யா மீதான நேட்டோ போர் மேற்கத்திய சக்திகள் தங்கள் ஏகாதிபத்திய நலன்களைப் பின்தொடர்வதற்காக அணுஆயுதப் போர் அபாயத்தை எதிர்கொள்ள தயாராக இருப்பதை எடுத்துக்காட்டியுள்ள நிலைமைகளின் கீழும், இந்திய முதலாளித்துவம் சீனாவுக்கு எதிரான அமெரிக்க போர் உந்துதலில் இன்னும் முழுமையாக தன்னை ஒருங்கிணைத்து வருகிறது.

பூகோள மூலதனத்தின் பிரதான மலிவு-உழைப்பு உற்பத்தி சங்கிலி மையமாக சீனாவுக்கு மாற்றாக இந்தியாவை மாற்றுவதற்கான மோடி அரசின் லட்சியம் உள்ளிட்ட அதன் சொந்த பிற்போக்குத்தனமான முடிவுகளை எட்டுவதற்காகவும், ரஷ்யாவுடனான அதன் உறவுகள் குறித்து வாஷிங்டனின் அழுத்தத்தை ஈடுகட்டுவதற்காகவும் அவ்வாறு செய்கிறது.

இந்தியாவின் மிகவும் தற்பெருமை அடிக்கும் “மூலோபாய சுயாட்சி” கொள்கையைப் பொறுத்தவரை, அதில் “முற்போக்கானது” எதுவும் கிடையாது. “ஏகாதிபத்திய எதிர்ப்பு” இல்லை என்பது ஒருபுறம் இருக்கட்டும். அதன் நோக்கம் இந்திய ஆளும் வர்க்கம் தனது சொந்த சூறையாடும் நலன்களை சிறப்பாகப் பின்பற்ற உதவுவதாகும். அவற்றுள் முதன்மையானவை, சீனாவுக்கு எதிரான அமெரிக்காவின் சிற்றரசாக அது வகிக்கும் பாத்திரத்திற்கு அதிக விலை கேட்டு பேரம் பேசுவதும், சீனாவுக்கு எதிரான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் போர் உந்துதலில் அது எவ்வளவு ஆழமாக உடந்தையாகவும், சம்பந்தப்பட்டும் இருக்கிறது என்பது குறித்து இந்திய தொழிலாளர்கள் மற்றும் உழைக்கும் மக்களை ஏமாற்றுவதற்குமாகும்.

கடந்த நூற்றாண்டில் இரண்டு முறை போலவே, பூகோள முதலாளித்துவ முறிவு உலகப் போரின் மூலம் உலகை மீண்டும் பிரிப்பதற்கான ஒரு ஏகாதிபத்திய உந்துதலுக்கு இட்டுச் செல்கிறது. ஆனால் அதே நெருக்கடி பூகோளரீதியான தொழிலாள வர்க்கத்தின் ஒரு மகத்தான எழுச்சிக்கு எரியூட்டி, அதன் மூலம் ஒரு பிரமாண்டமான போர்-எதிர்ப்பு இயக்கத்தின் வளர்ச்சிக்கான புறநிலை அடித்தளத்தை உருவாக்கி வருகிறது. போட்டி தேசிய அடிப்படையிலான முதலாளித்துவக் குழுக்களின் அனைத்து அரசியல் பிரதிநிதிகளுக்கும் அவர்களின் அரசாங்கங்களுக்கும் எதிராக - மற்றும் அனைத்துப் போர்கள், ஏகாதிபத்திய ஒடுக்குமுறை மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகளின் மூலமான இலாப அமைப்புமுறையை தூக்கி வீசுவது அவசியமானதாகும்.

Loading