இலங்கை அரசாங்கம் தொழிலாளர்களின் ஓய்வூதிய நிதியை கொள்ளையடிக்க ஆரம்பித்துள்ளது

இந்த மொழிபெயர்ப்பின் மூலம் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கை பாராளுமன்றம் செப்டெம்பர் 7 அன்று தொழிலாளர்களின் ஓய்வுக்கால நிதிக்கு 30 சதவீத வரி விதிக்கும் மசோதாவை நிறைவேற்றியது. இந்த மசோதாவுக்கு 103 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாகவும் எதிராக 58 பேரும் வாக்களித்தனர். இந்த உள்நாட்டு இறைவரி (திருத்த) சட்டமூலம் மறுதினம் முதல் அமுலுக்கு வந்தது.

ரணில் விக்கிரமசிங்க [Photo: United National Party Facebook]

புதிய நடவடிக்கை, பிரதானமாக தனியார் மற்றும் அரை-அரச துறை ஊழியர்களுக்கான கட்டாய ஓய்வூதிய நிதியான ஊழியர் சேமலாப நிதியை (EPF) குறிவைக்கிறது. 2.5 மில்லியன் தொழிலாளர்களுக்கு உரிய நிதியில் தற்போது 3.4 டிரில்லியன் ரூபாய் (10.5 பில்லியன் டொலர்) உள்ளது.

புதிய 30 சதவீத வரி விகிதத்தை செலுத்துவதை தவிர்க்கவும், ஊழியர் சேமலாப நிதியின் தற்போதைய 14 சதவீத வரி விகிதத்தை பராமரிக்கவும், முழு நிதியும் 2024 முதல் 2032 வரை குறைந்த வட்டி விகிதத்தில் திறைசேரிப் பத்திரங்களில் முதலீடு செய்யப்பட வேண்டும். மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கவின் கூற்றுப்படி, இந்த வட்டி விகிதம் சந்தை விகிதத்துக்கு அப்பாட்பட்ட வகையில், சுமார் 9 சதவீதமாக மட்டுமே இருக்கும்.

இந்த கொடூரமான நடவடிக்கைகள், சர்வதேச நாணய நிதியத்தின் உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு மற்றும் பிற சிக்கனக் கோரிக்கைகளுக்கு இணங்க மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கு முன்னர் 3 பில்லியன் டொலர் பிணை எடுப்பு கடனுக்காக இந்தக் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் ஒப்புக்கொண்டதுடன் அவற்றை அமுல்படுத்தியுள்ளது.

புதன்கிழமையன்று பாராளுமன்றத்தில் சட்டமூலத்தை முன்வைத்து உரையாற்றிய, நிதி அமைச்சரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, “கடன் நிலைத்தன்மையை உறுதிப்படுத்த” இந்த நடவடிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்றார். அடுத்த தவணை பிணை எடுப்பு கடனை கொடுக்க அனுமதிப்பதற்கு முன்னர், அதன் சிக்கன நடவடிக்கைகளை மறுஆய்வு செய்ய சர்வதேச நாணய நிதிய குழு ஒன்று செப்டம்பர் 14 அன்று இலங்கை வந்துள்ளது.

2022 ஏப்ரலில், அப்போதைய இராஜபக்ஷ அரசாங்கம், இலங்கைப் பொருளாதாரத்தின் வரலாற்றுச் சரிவின் மத்தியில், அதன் வெளிநாட்டுக் கடன்களைத் திருப்பிச் செலுத்தவில்லை. சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளைகளுக்கு இணங்க, விக்கிரமசிங்க அரசாங்கம் அதன் வெளிநாட்டு கடப்பாடுகளை மறுசீரமைப்பதற்கு பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்னர் அதன் உள்நாட்டு கடனை மறுசீரமைக்க ஒப்புக்கொண்டது. அரசாங்கத்தின் உள்நாட்டுக் கடன்களானவை, உள்ளூர் வங்கிகள் மற்றும் தனிப்பட்ட வாடிக்கையாளர்களின் கையில் உள்ள திறைசேரி பத்திரங்கள் மற்றும் பிணை முறிகள், மத்திய வங்கி மற்றும் ஓய்வூதிய நிதிகளுக்கு மத்தியில் விநியோகிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கம், வணிக வங்கிகள் மற்றும் பிற கூட்டுத்தாபனத் துறை நிதி நிறுவனங்களை தவிர்த்துள்ள அதே நேரம், திறைசேரிப் பத்திரங்களில் கடன் மதிப்பைக் குறைப்பதற்காக ஓய்வூதிய நிதிகளை, குறிப்பாக நாட்டின் மிகப்பெரிய நிதியான ஊழியர் சேமலாப நிதியை தேர்வு செய்துகொண்டுள்ளது.

வெரைட் ரிசேர்ச் (Verite Research) சிந்தனைக் குழுவின் கூற்றுப்படி, “(வெளியிடப்பட்ட தரவுகளின் அடிப்படையில்) உள்ளூர் நாணயப் பத்திர மறுசீரமைப்பின் முழுச் சுமையையும் தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பு நிதியின் மீது பிரத்தியேகமாக சுமத்துகின்ற உலகில் உள்ள ஒரே நாடு இலங்கை,” ஆகும். அரசாங்கம், “இந்த சமத்துவமற்ற நடவடிக்கையின் அரசியலமைப்பிற்கு முரணான தன்மையைக் கடக்க” ஒரு “சுயவிருப்ப” கடன் பரிமாற்றமாக இந்த நடவடிக்கையை முன்வைக்க ஒரு இரட்டைத் தேர்வை வழங்கியுள்ளது, என்று அது தெரிவித்துள்ளது.

பிரதானமாக குறைந்த வருமானம் பெறுபவர்களின், அதாவது, மாதத்திற்கு 100,000 ரூபாய்க்கும் (310 டொலர்) குறைவாக ஊதியம் பெறுபவர்களின் சேமிப்பில் 90 சதவீதத்தை கொண்டுள்ள ஊழியர் சேமலாப நிதியின் பாதுகாவலராக மத்திய வங்கியே உள்ளது. இதில் இலட்சக்கணக்கான சுதந்திர வர்த்தக வலைய தொழிலாளர்கள், ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் மற்றும் தோட்டத் தொழிலாளர்களின் சேமிப்பு உள்ளது. அவர்களின் மாத வருமானம் அரசாங்கத்தால் விதிக்கப்பட்டுள்ள தற்போதைய வரி வரம்புக்குக் கீழானதாகும்.

தனியார் துறை ஊழியர்கள் ஓய்வு பெற்ற பிறகு ஓய்வூதியம் பெறுவதற்கான உரிமையை கோரி நடத்திய போராட்டத்திற்கு பிரதிபலிக்கும் வகையில் 1958 ஆம் ஆண்டு பிரதமர் S.W.R.D. பண்டாரநாயக்கவின் அரசாங்கத்தால் ஊழியர் சேமலாப நிதி ஸ்தாபிக்கப்பட்டது. அச்சமயத்தில் ஊழியர் சேமலாப நிதியானது எந்த வரிவிதிப்புக்கும் உட்பட்டிருக்கவில்லை. எவ்வாறாயினும், பின்னர் நிதி சிக்கல்களை எதிர்கொண்ட இலங்கை அரசாங்கங்கள் இந்த பொருளாதார சுமையை தொழிலாள வர்க்கத்தின் மீது சுமத்துவதற்கு ஊழியர் சேமலாப நிதி மீது வரி விதிக்க ஆரம்பித்தன.

1989 இல், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இனவாத யுத்தம் மற்றும் தெற்கில் கிராமப்புற இளைஞர்களின் எழுச்சியின் போது, தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தந்தையான ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் அரசாங்கம், ஊழியர் சேமலாப நிதி போன்ற ஓய்வூதிய நிதிக்கு 10 சதவீத வரியை விதித்தது.

2011 இல், மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கம் ஊழியர் சேமலாப நிதியை ஒரு அற்ப பங்களிப்பு மாதாந்திர ஓய்வூதியமாக மாற்றி இல்லாதொழிக்க முயற்சித்தது. இந்த அப்பட்டமான சமூகத் தாக்குதல் தொழிலாள வர்க்கத்தால் கடுமையாக எதிர்க்கப்பட்டது. அந்த ஆண்டு ஜூன் மாதம், ஊழியர் சேமலாப நிதியை ஒழிப்பதற்கான இராஜபக்ஷவின் திட்டங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 2,000 தொழிலாளர்கள் மீது பொலிசார் சுட்டதில் ரொஷான் சானக்க என்ற இளம் சுதந்திர வர்த்தக வலயத் தொழிலாளி கொல்லப்பட்டதுடன் 200 பேர் வரை காயமடைந்தனர். வன்முறைத் தாக்குதலின் மீதான வெகுஜனக் கோபம் அரசாங்கத்தை அதன் திட்டங்களை விலக்கிக்கொள்ள நிர்ப்பந்தித்தது.

2017 ஆம் ஆண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் ஊழியர் சேமலாப நிதி மீதான வரியை 14 சதவீதமாக அதிகரித்தது.

கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்கா தலைமையிலான போரினால் உக்கிரமடைந்த உலக முதலாளித்துவத்தின் நெருக்கடியின் ஒரு பகுதியாக இலங்கைப் பொருளாதாரத்தின் முன்னெப்போதும் இல்லாத வீழ்ச்சிக்கான பதிலிறுப்பே சர்வதேச நாணய நிதியத்தால் கட்டளையிடப்பட்டுள்ள தற்போதைய தாக்குதல் ஆகும்.

பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அவர்களின் ஒரே சேமிப்பான தொழிலாளர்களின் ஓய்வூதிய நிதியின் மீதான இந்த அப்பட்டமான அரசாங்க திருட்டின் உச்ச கட்டமாக, தனிப்பட்ட ஊழியர் சேமலாப நிதி வைப்பாளர்கள், பணத்தை வைப்பிலிடும் போதும் திரும்பப் பெறும்போதும் ஏற்கனவே வரி செலுத்தியிருக்க வேண்டும். மேலோங்கியுள்ள உயர் பணவீக்கத்தால் தொழிலாளர்களின் ஓய்வூதிய நிதிகளின் உண்மையான மதிப்பு கடந்த இரண்டு ஆண்டுகளில் கிட்டத்தட்ட பாதியாகக் குறைந்துள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், விக்கிரமசிங்க அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன கோரிக்கைகளை நடைமுறைப்படுத்துவதன் ஒரு பகுதியாக கொடூரமான வரி விகிதங்களை சுமத்தியது. ஏப்ரலில், அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான பெருமதி சேர் வரியை 15 சதவீதமாக உயர்த்தியதுடன் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் தொழில் அறிஞர்கள் மீது வருமானத்தை ஒத்த வரி என்ற புதிய அபரிமிதமான வரி விகிதங்களை சுமத்தியது. சுகாதாரம் மற்றும் கல்வி உட்பட சமூக நலனுக்கான அரசாங்க ஒதுக்கீடும் குறைக்கப்பட்டுள்ளதோடு இலட்சக்கணக்கான தொழில்களை அழிக்கக்கூடியவாறு அரசுக்கு சொந்தமான 430 நிறுவனங்களை தனியார்மயமாக்கும் / மறுசீரமைக்கும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கடந்த வாரம் இந்த மசோதா மீதான பாராளுமன்ற விவாதம் கேலிக்கூத்தாக இருந்தது. எதிர்க்கட்சிகள், பிரதானமாக ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணியும் (ஜே.வி.பி.) தொழிலாளர்களின் ஓய்வூதிய நிதி மீதான தாக்குதல் குறித்து முதலைக் கண்ணீர் வடித்தன. எவ்வாறாயினும், அவை ஆதரிக்கும் சர்வதேச நாணய நிதிய திட்டத்தின் மீதான எந்தவொரு விமர்சனத்தையும் கவனமாகத் தவிர்த்துக்கொண்டதோடு, மாறாக வரி ஏய்ப்பு மற்றும் ஊழல் தொடர்பாக அரசாங்கத்தின் கூட்டாளிகளை இழிந்த முறையில் கண்டனம் செய்தன.

28 ஆகஸ்ட் 2023 அன்று அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தின் முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒரு பகுதியினர்.

அவ்வப்போதான எதிர்ப்புகளுக்கு அழைப்பு விடுப்பதன் மூலம் ஓய்வூதியங்கள் மீதான அரசாங்கத்தின் தாக்குதல் சம்பந்தமான வெகுஜன கோபத்தை கலைத்துவிடுவதில் தொழிற்சங்கங்கள் முக்கிய பங்கு வகிக்கின்ற அதே நேரம், இந்த தாக்குதல் மற்றும் வேலை அழிப்பு, தனியார்மயமாக்கல் மற்றும் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதற்கும் எதிராக தொழிலாள வர்க்கத்தின் ஒருங்கிணைந்த அணிதிரட்டலை எதிர்க்கின்றன.

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.), தொழிலாள வர்க்கத்தை அனைத்து முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களில் இருந்து பிரிந்து, அதன் சொந்த சுயாதீன நலன்களுக்காக போராட அழைப்பு விடுத்தது இதனாலேயே ஆகும்.

இத்தகைய இயக்கத்திற்கு தொழிலாளர்கள் ஒவ்வொரு வேலைத் தளத்திலும் கிராமப்புறங்களிலும் நடவடிக்கை குழுக்களை உருவாக்க வேண்டும். சோசலிச சமத்துவக் கட்சி, தெற்காசியாவிலும் சர்வதேச அளவிலும் ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்காகப் போராடுவதற்காக, நடவடிக்கைக் குழுப் பிரதிநிதிகளைக் கொண்ட, ஜனநாயகத்துக்கும் சோசலிசத்துக்குமான தொழிலாளர்களதும் கிராமப்புற வெகுஜனங்களினதும் மாநாட்டைக் கட்டியெழுப்ப ஒரு பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.

அத்தகைய அரசாங்கம் வங்கிகள் மற்றும் இராட்சத கூட்டுத்தாபனங்களை தேசியமயமாக்கி, தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் வைக்கும். அது பெரும் பணக்காரர்களின் செல்வத்தைக் கைப்பற்றுவதோடு வெளிநாட்டுக் கடன்களை செலுத்துவதை நிராகரிக்கும் அதே வேளை, உழைக்கும் மக்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியங்கள் மீதான அனைத்து வரிகளையும் நீக்கும்.

Loading