இலங்கையில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகள் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்குடன் ஜூலை 17 அன்று அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தியிருந்தனர்.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழீழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) தலைவர் செல்வம் அடைக்கலநாதன், தமிழீழ மக்கள் விடுதலை இயக்கத்தின் (புளொன்) தலைவர் டி. சித்தார்த்தன். வடமாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான சி.வி. விக்னேஸ்வரன் ஆகியோர் சுமார் இரண்டு மணித்தியாலங்கள் நீடித்த கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜூலை மாத இறுதியில் இந்தியாவிற்கு விஜயம் செய்வதற்கு சற்று முன்னர் தமிழ் கட்சிகளுடன் சங் இந்த கலந்துரையாடலை நடத்தியமை, சீனாவுக்கு எதிரான- அமெரிக்க-இந்திய மூலோபாய கூட்டணியில் இலங்கையை ஒருங்கிணைப்பதற்கு அவர்களின் ஆதரவைப் பெறுவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாகும்.
ஒரு மோதல் வெடித்தால் அது பேரழிவுகரமான அணுவாயுதப் போராக மாறக்கூடிய அச்சுறுத்தலுக்கு மத்தியில் சீனாவிற்கு எதிரான வாஷிங்டனின் போர் தயாரிப்புகள் நன்கு நடந்து வருகின்றன. செப்டம்பர் 08 அன்று டைம்ஸ் ஒஃப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தி, இந்தியா ஒரு போரில் எவ்வாறு பங்கேற்க கூடும் என்பது குறித்த அமெரிக்காவின் விவேகமான கேள்விகளைத் தொடர்ந்து, எதிர்காலத்தில் தாய்வான் மீதான சீனப் படையெடுப்பிற்குப் பல்வேறு பிரதிபலிப்புகளை புது தில்லி பரிசீலித்து வருகிறது.
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமெரிக்க சார்பு கைக்கூலியாக இருக்கும் அதே வேளை, அவரது நிர்வாகம் சீனாவுக்கு ஆதரவானதாகக் கருதப்படும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியை (ஸ்ரீ.ல.பொ.ஜ.மு) நம்பியிருப்பது குறித்து அமெரிக்கா விழிப்புடன் இருக்கின்றது. இதன் காரணமாக, வாஷிங்டன் அமெரிக்க ஆதரவு, இந்திய ஆதரவு தமிழ் முதலாளித்துவ தலைவர்களுடன் தனது உறவுகளை வலுப்படுத்த விரும்புகிறது.
இந்தியப் பெருங்கடலில் இந்தியத் துணைக்கண்டத்தின் தெற்கே மிக முக்கியமான கடல் பாதைகளை அண்டியதாக இலங்கை மூலோபாய ரீதியில் அமைந்திருப்பது, வாஷிங்டனின் போர்த் திட்டங்களுக்கு இன்றியமையாததாகும். இலங்கையுடன் மட்டுமன்றி, தெற்காசியாவிலுள்ள ஏனைய நாடுகளுடனும் வாஷிங்டன் மூலோபாய பங்களிப்புகளை வலுப்படுத்தி வருகிறது. போர் ஏற்பட்டால், வளங்கள், குறிப்பாக எண்ணெய் வளம், சீனாவை அடைவதைத் தடுப்பதற்கு இந்தியப் பெருங்கடலைக் கட்டுப்படுத்துவது அவசியம் என்று அமெரிக்கா நம்புகிறது.
கலந்துரையாடலை ஆரம்பித்து வைத்த அமெரிக்கத் தூதுவர், அரசியல் தீர்வு விடயத்தில் தமிழ் அரசியல் கட்சிகளின் பல்வேறு நிலைப்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.
'ஒரு சமஷ்ட்டி தீர்வு தேவை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை' என்றும் தமிழரசுக் கட்சி “அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வைக் கோருகிறது” என்றும் சுமந்திரன் கூறினார்.
அடைக்கலநாதன், சித்தார்த்தன் மற்றும் விக்னேஸ்வரனும் சமஷ்டி தீர்வு அவசியம் என்பதே தமது நிலைப்பாடாகும் எனவும், ஆனால் தற்போதைய நிலைமையை நாம் கைவிடக் கூடாது என்பதால் 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டுமென வலியுறுத்துவதாகவும் தெரிவித்தனர்.
13வது திருத்தம் ஒற்றையாட்சி கட்டமைப்பின் அடிப்படையிலானது என்றும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை அதன் கீழ் கோரவோ பேச்சுவார்த்தை நடத்தவோ முடியாது என்றும் தெரிவித்த பொன்னம்பலம் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைப் பெறுவதற்கு சமஷ்டி முறைமை அவசியம் என வலியுறுத்தினார்.
13வது திருத்தம் என்பது இந்தியா மற்றும் இலங்கை அரசாங்கங்களுக்கு இடையில் 1987 ஜூலை 29 அன்று கைச்சாத்திடப்பட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகும். தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வாக முன்வைக்கப்பட்டாலும், இந்த ஒப்பந்தத்தின் உண்மையான நோக்கம் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளை நிராயுதபாணியாக்குவதாகும்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஒப்பந்தத்தில் இருந்து பின்வாங்கிய போது, ஒப்பந்தத்தின் கீழ் புதுடில்லி இலங்கைக்கு அனுப்பியிருந்த இலட்சக்கணக்கான இந்திய இராணுவம் புலிகளை நசுக்குவதற்கும், கிளர்ச்சி செய்த தமிழ் மக்களை ஒடுக்குவதற்கும் செயற்பட்டது. கொழும்பு அரசாங்கம் வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட இராணுவத்தை, தெற்கில் கிராமப்புற அமைதியின்மை மீதான இரத்தம் தோய்ந்த ஒடுக்குமுறைக்கு பயன்படுத்தியது. இதில் குறைந்தபட்சம் 60,000ம் இளைஞர்கள் கொல்லப்பட்டனர்.
தமிழ்க் கட்சித் தலைவர்களைச் சந்திப்பதற்கு முன்னதாக, ஜூலை 16 அன்று, 'தமிழ் மக்களின் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு' குறித்து ஆலோசிக்க, சங், கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில், தமிழரசு கட்சித் தலைவர் ஆர். சம்பந்தனைச் சந்தித்தார். கலந்துரையாடலின் போது, “தமிழர்களுக்கு எதிராக நாட்டில் என்ன நடக்கிறது என்பதை அமெரிக்கா பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது” என்று வேண்டுகோள் விடுத்த சம்பந்தன், தமிழ் வெகுஜனங்களின் எதிர்காலம் அமெரிக்காவின் தலையீட்டில் தங்கியுள்ளது என்றும் கூறினார்.
1948ல் இருந்து அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த கொழும்பு அரசாங்கங்கள் தமிழ் சிறுபான்மையினரின் ஜனநாயக உரிமைகளை நசுக்கும் தமிழ்-விரோத பாகுபாட்டைப் பின்பற்றின. இது தமிழ் வெகுஜனங்களுக்கு எதிரான ஒரு இனப்படுகொலை போருக்கு வழிவகுத்தது.
எவ்வாறாயினும், சம்பந்தன் வாஷிங்டனுக்கு விடுத்த அடிமைத்தனமான வேண்டுகோளுக்கும் தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. கொழும்பை தளமாகக் கொண்ட சிங்கள பௌத்த ஆளும் உயரடுக்குடன், தமிழ் தொழிலாளர்களை சுரண்டுவதில் தமிழ் உயரடுக்கு பெரும் பங்கைக் கொண்டிருக்க கூடிய அதிகாரப் பகிர்வு உடன்படிக்கையை அவர் வலியுறுத்திக் கொண்டிருக்கிறார். 'அரசாங்கத்தின் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும், தமிழ் பேசும் மக்கள் சுயமரியாதையுடன், அனைத்து உரிமைகளுடன் மகிழ்ச்சியாக வாழ வழிவகுக்க வேண்டும்' என்று அவர் விடுத்த வேண்டுகோளின் பொருள் இதுதான்.
அமெரிக்கா உலகளாவிய மேலாதிக்கத்திற்கான அதன் உந்துதலில் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக தொடர்ச்சியான போர்களில் ஈடுபட்டுள்ள உலகின் மிகவும் பிற்போக்கு சக்தியாகும். கடந்த ஆண்டு பெப்ரவரியில் ரஷ்யா உக்ரேன் மீது படையெடுத்ததில் இருந்து, அமெரிக்காவும் நேட்டோவும் அவற்றின் துருப்புக்கள், போர் விமானங்கள், ஏவுகணைகள் மற்றும் கடற்படை படைகளை அப்பகுதிக்கு அனுப்பியுள்ளன.
தமது புவிசார் மூலோபாய நலன்களை முன்னேற்றுவதும், தற்போதைய ரஷ்ய அரசாங்கத்தை தூக்கியெறிந்து அதன் பெரிய இயற்கை வளங்களை கொள்ளையடிப்பதுமே இந்த முன்னெடுப்பின் நோக்கம் ஆகும். பிறவுன் பல்கலைக்கழகத்தின் போரின் இழப்புகள் திட்டம் என்பதன் கணிப்பின்படி, 2001ல் 9/11 தாக்குதல்களுக்குப் பின்னர் அமெரிக்காவால் தொடங்கப்பட்ட போர்களால் குறைந்தது 4.5 மில்லியன் மக்கள் இறந்துள்ளனர்.
வாஷிங்டன் தனது மூலோபாய நலன்களை முன்னேற்றுவதற்காக உலகம் முழுவதும் “ஆட்சி மாற்ற” நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறது. இலங்கையில் 2015 ஜனாதிபதித் தேர்தலில், மகிந்த இராஜபக்சவை வெளியேற்றி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாகவும் மற்றும் ரணில் விக்கிரமசிங்காவை பிரதமராகவும் நியமிக்க வாஷிங்டனும் புதுடில்லியும் இணைந்து செயல்பட்டன.
ஏனைய தமிழ் கட்சி தலைவர்களும் தமிழரசுக் கட்சியின் நிலைப்பாட்டையே பின்பற்றுகின்றனர். ஜூலை 2 அன்று டெயிலி தமிழ் நாளிதழுக்கு பொன்னம்பலம் அளித்த பேட்டியில், “இன்று இலங்கையை மையமாக வைத்து உலகளாவிய போட்டி நிலவுகிறது. எனவே, அது இந்தியாவாக இருந்தாலும் சரி, சீனாவாக இருந்தாலும் சரி, எந்தத் தரப்பாக இருந்தாலும் சரி, அவர்கள் இலங்கையைக் கைவிடப் போவதில்லை. ஏனென்றால் அவர்கள் தங்கள் உலகளாவிய நலன்களை அடைய அதிக அளவில் முதலீடு செய்துள்ளனர்” என்றார்.
“அதிகாரப் பகிர்வு தொடர்பில் இணக்கப்பாட்டுக்கு வரவில்லையென்றால் இராஜதந்திரப் போட்டிக்கு மத்தியில் நாடு பிளவுபடும் அபாயம் உள்ளது” என பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். அதையே அடைக்கலநாதனும் சொன்னதை ஜூலை 30 அன்று வீரகேசரி செய்தி கூறியது. “இலங்கைக்குள் தமிழர்களுக்கு தீர்வு கிடைக்காவிட்டால், வடக்கு-கிழக்கை இந்தியாவுடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழும்,” என அவர் கூறியிருந்தார். இவை எமக்கு பரந்த அதிகாரப் பகிர்வு கிடைக்காவிட்டால், அமைதியின்மையை எதிர்கொள்ள வேண்டிவரும் என கொழும்பிற்கு விடுக்கும் எச்சரிக்கைகளாகும்,
இக்கட்சிகள், இனப் பாகுபாடுகளுக்கு முடிவுகட்டவேண்டும் மற்றும் ஜனநாயக உரிமைகளில் சமத்துவம் வழங்கப்பட வேண்டும் என்ற தமிழ் சிறுபான்மையினரின் உண்மையான கோரிக்கையை தங்கள் முதலாளித்துவ வர்க்க நலன்களுக்காக அழுத்தம் கொடுக்க இழிந்த முறையில் கையாள்கின்றன.
தமிழ் முதலாளிகளின் நலன்கள், சிங்கள மற்றும் இந்திய சகோதரர்களுடன் ஐக்கியப்பட விரும்பும் தமிழ் மக்களின் நலன்களுக்கு முற்றிலும் எதிரானதாகும்.
இருப்பினும், 'சர்வதேசத்திடம் இருந்து அனைத்தையும் எதிர்பார்க்க வேண்டாம். சர்வதேச சக்திகளுக்கு செய்யக்கூடிவற்றுக்கு வரம்புகள் உள்ளன' என அமெரிக்க தூதர் எச்சரித்தார்
இந்த இராஜதந்திர வாசகங்களில் உள்ளடங்கி இருப்பது, தமிழ்த் தலைவர்கள் அதிகம் கேட்காமல், விக்கிரமசிங்க அரசாங்கத்திடம் இருந்து கிடைப்பதை கொண்டு திருப்தியடைவதோடு அரசாங்கத்துடன் நெருக்கமாக பணியாற்றுவதற்கான வழியைக் கண்டறிய வேண்டும், என்பதாகும்.
வட-கிழக்கு இலங்கையில் உள்ள தமிழ் மக்களுடன் வரலாற்று ரீதியிலான மொழி மற்றும் கலாச்சார உறவுகளைக் கொண்டுள்ள தமிழ் நாட்டில் பிரிவினைவாதப் போக்குகளை வலுப்படுத்தும் என்று ஐயம்கொண்டுள்ள இந்தியா, இலங்கையின் வட-கிழக்கில் எந்தவொரு தனி அரசையும் ஆதரிக்கத் தயாராக இல்லை. கொழும்பு அரசாங்கத்தின் மீதான எந்தவொரு பாதகமான அழுத்தமும் அதன் மூலோபாய எதிரியான சீனாவை நோக்கித் தள்ளும் என்று புது டெல்லி அஞ்சுகிறது.
விக்கிரமசிங்கவை “தாரான்மைவாதியாக” தமிழ் தலைவர்கள் எப்போதும் வர்ணிக்கிறார்கள். அவர்கள், 1983 ஜூலை தமிழ் விரோத படுகொலைகள், தமிழ் வெகுஜனங்களுக்கு எதிரான போரைத் தொடங்கியமை மற்றும் தெற்கில் கிராமப்புற இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கும் பொறுப்பாளியான, ஆளும் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் மூத்த அமைச்சரவை அமைச்சராக பதிவகித்த விக்கிரமசிங்கவை வெளிச்சமான நிறங்களில் பூசி மெழுகுகின்றனர்.
ஒடுக்கப்பட்ட தமிழ் சிறுபான்மையினர், கிராமப்புற ஏழைகளை ஒன்று திரட்டும் தமிழ் மற்றும் சிங்கள தொழிலாளர்களின் ஐக்கியப் போராட்டத்தின் மூலம் மட்டுமே இனப் பாகுபாடு மற்றும் இராணுவ ஆக்கிரமிப்புக்கு முடிவுகட்டவும், ஜனநாயக உரிமைகளை வெல்வும் முடியும். இது, ஒடுக்குமுறையின் மூலகாரணியான அமெரிக்கா உட்பட ஏகாதிபத்திய சக்திகளால் பராமரிக்கப்படும் முதலாளித்துவ ஆட்சியின் தூக்கியெறிவதற்கான போராட்டம் ஆகும். இது தெற்காசியாவிலும் சர்வதேச அளவிலும் சோசலிசத்திற்கான போராட்டத்தின் ஒரு பகுதியாக ஸ்ரீலங்கா- ஈழம் சோசலிச குடியரசுக்கான போராட்டமாகும்.