இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
ஞாயிற்றுக்கிழமை, காஸா பகுதியில் தடைகளை ஏற்படுத்தியிருக்கின்ற இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகளுக்கு எதிராக பாலஸ்தீனிய போராளிகள் தாக்குதலை முன்னெடுத்து மூன்று நாட்களின் பின்னர், இஸ்ரேலிய பிரதமர் பென்ஜமின் நெதன்யாகுவின் ஆட்சி, காஸா பகுதியை முற்றுகையிடுவதாக அறிவித்துள்ளது. காஸாவில் வாழும் பாலஸ்தீனியர்களை “முன்னெப்போதும் இல்லாதளவு” உயிர்ப்பலி வாங்குவதாக நெதன்யாகு சபதமெடுத்த பின்னர், சியோனிச ஆட்சி இரத்தக்களரி வெகுஜன அடக்குமுறைக்கு தயாராகி வருகிறது.
உயர்மட்ட இஸ்ரேலிய அதிகாரிகளின் பாசிசக் கண்ணோட்டம் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கலண்டால் அப்பட்டமாக வெளிப்படுத்தப்பட்டது. திங்கட்கிழமை காலை, பீர்ஷேபாவில் தற்போது காஸா மீது பெரிய அளவிலான குண்டுவீச்சுகளை நடத்தி வருகின்ற இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் (IDF) தெற்குக் கட்டளையகத்தில் நடந்த கூட்டத்திற்குப் பிறகு, “நான் காஸா பகுதியில் முழு முற்றுகைக்கு உத்தரவிட்டுள்ளேன். மின்சாரம் இருக்காது, உணவு இருக்காது, எரிபொருள் இருக்காது, அனைத்தும் மூடப்பட்டுள்ளன,” என காலண்ட் அறிவித்தார்.
காலண்ட், காஸாவின் 2 மில்லியன் மொத்த மக்கள்தொகையை குறி வைப்பதற்கான தனது முடிவை நியாயப்படுத்த, அவர்களை விலங்குகளுடன் ஒப்பிட்டு, “நாங்கள் மனித விலங்குகளுடன் போராடுகிறோம், அதன்படி செயல்படுகிறோம்” என்றார்.
நேற்று ஒரு தேசிய தொலைக்காட்சி உரையில், காஸா மீதான இஸ்ரேலின் தற்போதைய குண்டுத் தாக்குதல்கள் காஸாவிற்கு எதிரான திட்டமிட்ட தாக்குதலின் “ஆரம்பம்” என்று நெதன்யாகு வலியுறுத்தினார். “ஹமாஸ் செயல்படும் ஒவ்வொரு இடமும் சுக்குநூறாகும் என்று நான் கூறினேன். இது ஏற்கனவே இன்று நடந்துகொண்டிருக்கிறது, எதிர்காலத்தில் இது இன்னும் அதிகமாக நடக்கும்,” என அவர் அறிவித்தார். காலண்டின் பாஷையை எதிரொலித்த அவர், பாலஸ்தீனியர்களை “விலங்குகள்” என்று அழைத்தார்.
நெதன்யாகு ஒரு ட்விட்டர் பதிவில், “வரவிருக்கும் பல தசாப்தங்களுக்கு அவர்களும் இஸ்ரேலின் மற்ற எதிரிகளும் நினைவில் வைத்திருக்கும் அளவுக்கு நாம் பழிதீர்ப்போம். … அவர்கள் காட்டுமிராண்டிகள்,” என மேலும் கூறினார்.
நெதன்யாகு மற்றும் காலண்டின் சீரழிந்த அச்சுறுத்தல்கள் இஸ்ரேலில், மத்திய கிழக்கு மற்றும் சர்வதேச அளவில் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் சோசலிச எண்ணம் கொண்ட புத்திஜீவிகளால் ஒரு எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிற்கு எதிரான எதிர்ப்பை நசுக்க, காஸாவின் மக்கள்தொகையில் கணிசமான பகுதியைக் கொன்று அல்லது இடம்பெயரச் செய்ய மிகவும் ஈவிரக்கமற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள நெதன்யாகு விரும்புகிறார். இரத்த ஆறு பெருக்கெடுப்பதை நிறுத்துவதற்கு, இந்தத் தாக்குதலையும் பாலஸ்தீனியர்கள் மீதான இஸ்ரேலின் அடக்குமுறையையும் நிறுத்துவதற்கு, இஸ்ரேலிலும் மற்றும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்க இயக்கமொன்றைக் கட்டியெழுப்ப வேண்டியது அவசியமாகும்.
நெதன்யாகுவின் தீவிர வலதுசாரி ஆட்சி காஸா மீது அரசியல் ரீதியில் குற்றவியல் போரை நடத்த திட்டமிட்டுள்ளது. நேற்று, மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன பணிப்பாளர் உமர் ஷகிர் கூறியதாவது: “பாதுகாப்பு அமைச்சர் காலண்டின் அறிக்கைகள் அருவருப்பானவை. ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசத்தில் உள்ள மக்களுக்கு உணவு மற்றும் மின்சாரம் இல்லாமல் செய்வது கூட்டுத் தண்டனையாகும், இது பட்டினியை ஒரு போர் ஆயுதமாகப் பயன்படுத்துவதால் ஒரு போர்க்குற்றமாகும். போர்க்குற்றம் செய்வதற்கான இந்த அழைப்பை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும்”.
அண்டை நாடான எகிப்தில் உள்ள அதிகாரிகள் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் காஸாவின் முழு பாலஸ்தீனிய மக்களையும் படுகொலை செய்யலாம் அல்லது வெளியேற்றலாம் என்று எச்சரித்து வருகின்றனர். அரசுக்கு சொந்தமான Ahram Online, “பாலஸ்தீனிய குடிமக்களை எகிப்திய எல்லைகளை நோக்கித் தள்ளுவதற்கும், பாரிய இடப்பெயர்வு வேண்டுகோள்களை தூண்டுவதற்கும் எதிராக, உயர்மட்ட எகிப்திய வட்டாரங்கள் திங்களன்று எச்சரித்தன... ஆக்கிரமிப்பை நிறுத்தவும் பாலஸ்தீன மக்களின் உயிர்களைப் பாதுகாக்கவும் எகிப்து சர்வதேச சமூகத்தில் உள்ள அனைத்து தொடர்புடைய தரப்புகளுடனும் அதன் முயற்சிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது,” எழுதியுள்ளது.
உண்மையில், காஸா மீதான நெதன்யாகு அரசாங்கத்தின் தாக்குதலை ஆதரிக்கும் மற்றும் செயல்படுத்தும் மைய சக்திகள் முன்னணி நேட்டோ ஏகாதிபத்திய சக்திகளாகும். நேற்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன், ஜேர்மன் அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ், இத்தாலி பிரதமர் ஜோர்ஜியா மெலோனி, இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடெனும் காஸா மோதல் குறித்து கூட்டாக கலந்துரையாடினர். பின்னர் அவர்கள் நெத்தன்யாகுவை ஆதரித்தும் காசாவில் உள்ள ஹமாஸ் அதிகாரிகளை கண்டித்தும் ஒரு இழிந்த அறிக்கையை வெளியிட்டனர்.
அந்த அறிக்கை, “இஸ்ரேல் தேசத்திற்கு எங்களின் உறுதியான மற்றும் ஒன்றுபட்ட ஆதரவையும், ஹமாஸ் மற்றும் அதன் பயங்கரமான பயங்கரவாதச் செயல்களுக்கு எங்கள் தெளிவான கண்டனத்தையும்” வலியுறுத்தி, “வரவிருக்கும் நாட்களில், இஸ்ரேல் தன்னைத்தானே தற்காத்துக் கொள்ள முடியும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள, நாங்கள் ஒற்றுமையாகவும், ஒருங்கிணைந்து கூட்டாளிகளாகவும், இஸ்ரேலின் பொதுவான. நண்பர்களாகவும் இருப்போம்...” என உறுதியளித்தது.
காஸாவின் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது “பயங்கரவாதிகள்” என்று அவதூறு பரப்பி, பிரமாண்டளவு ஆயுதபாணியான நெதன்யாகு அரசாங்கம் வெறுமனே “தன்னைத் தற்காத்துக் கொள்கிறது” என்று கூறுவது ஒரு வெறுக்கத்தக்க அரசியல் பொய்யாகும். உலகெங்கிலும் உள்ள திரளான மக்கள், பல தசாப்தங்களாக பிரதான நேட்டோ சக்திகளால் பில்லியன் கணக்கான டாலர்களால் ஆயுதபாணியாக்கப்பட்ட சியோனிச ஆட்சியால் இரத்தக்களரி வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட பாலஸ்தீனியர்களின் எழுச்சிக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர்.
வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை வரை சண்டை தொடங்கியதில் இருந்து காஸாவில் 2,400 இலக்குகளை அதன் விமானப்படை தாக்கியதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை பெருமையாகக் கூறியது. மத்தியதரைக் கடலில் உள்ள இஸ்ரேலிய போர்க்கப்பல்களும் காஸா மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருவதுடன், இஸ்ரேலியப் படைகள் வெள்ளை பொஸ்பரஸ் குண்டுகளைப் பயன்படுத்துவதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன—இது பாதிக்கப்பட்டவர்களுக்கு வேதனையான தீக்காயங்களை ஏற்படுத்தும் தடைசெய்யப்பட்ட இரசாயன ஆயுதம் ஆகும். குண்டுவெடிப்புகளால் 123,000 க்கும் மேற்பட்ட மக்கள் ஏற்கனவே இடம்பெயர்ந்துள்ளனர் என்று காஸா அதிகாரிகள் நேற்று அறிவித்தனர்.
Le Monde ஊடகத்திடம் பேசிய முகமது சைதம், இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் தொடர்ந்து அடுக்குமாடி வளாகங்கள் மற்றும் மருத்துவமனைகளை குறிவைத்து வரும் நிலையில், இஸ்ரேலிய குண்டுத் தாக்குதலின் கீழ் உயிர் வாழ்க்கை பற்றி விளக்கினார். “ஆரம்பத்தில் இது வழமையான தாக்குதல் தீவிரமாவதை போன்றே இருந்தது.. ஆனால் பின்னர் அது பயங்கரமாக மாறியது. மிக அருகாமையில் வெடிக்கும் சத்தங்களை நாங்கள் கேட்கிறோம், பூகம்பத்தின் போது போல் சுவர்கள் அதிர்கின்றன, எங்களால் தூங்க முடியாது, சிறிதளவு சத்தம் கூட எங்களைத் திடுக்கிடச் செய்யும்,” என்று அவர் கூறினார்.
காஸாவில் இடம்பெயர்ந்த மக்களைப் பராமரிக்கும் ஐ.நா. நிவாரணம் மற்றும் வேலைகள் சங்கத்தின் (UNRWA) செய்தித் தொடர்பாளர் அட்னான் அபு ஹஸ்னா, தனது நிறுவனம் நிரம்பி வழிகிறது என்றார். “2014 அல்லது 2021 இல் நடந்த போர்களை எங்களால் இன்னும் சமாளிக்க முடியவில்லை. இவை அனைத்தும் UNRWA இன் திறன்களுக்கு அப்பாற்பட்டவை,” என்று அவர் கூறினார்.
காஸா மீதான இஸ்ரேலின் முற்றுகை 2007 இல் தொடங்கியதிலிருந்து, சியோனிச ஆட்சி மீண்டும் மீண்டும் காஸா மக்கள் மீது போரை நடத்தியது. 2014 ஆம் ஆண்டு காஸா மீது இஸ்ரேல் நடத்திய குண்டுத் தாக்குதலில் 2,251 பேர் கொல்லப்பட்டனர். 2018 ஆம் ஆண்டில், இஸ்ரேலின் தற்போதைய எல்லைகளுக்குள் தங்கள் மூதாதையர்களின் நிலத்திற்குத் திரும்புவதற்கான உரிமையைக் கோரி காஸா மக்களின் அமைதியான ஊர்வலத்தின் மீது இஸ்ரேலிய துருப்புக்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியபோது, குறைந்தது 270 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதுடன் 7,000 பேர் காயமடைந்தனர், அவர்களில் பலர் நிரந்தரமாக ஊனமுற்றனர்.
காஸாவில் தற்போதைய எழுச்சி ஒரு பயங்கரவாத செயல் அல்ல, மாறாக இந்த குற்றங்களுக்கு எதிரான ஒரு வீரச் செயலாக காஸாவில் உள்ள வெகுஜனங்களால் நியாயமாக பார்க்கப்படுகிறது.
“ஆயிரம் மடங்கு உயர்ந்த ஆயுதம் மற்றும் தொழில்நுட்பம் இருந்தாலும், பாலஸ்தீனிய எதிர்ப்பானது இஸ்ரேலிய இராணுவத்தின் மீது புதிய பலத்தை திணிக்க முடிந்தது” என்று திரைப்படத் தயாரிப்பாளர் இயாத் அலாஸ்டால் காஸாவின் உள்ளே இருந்து Le Monde ஊடகத்திடம் கூறினார். “இது ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அரபு நாடுகள் போன்றவை எங்களுக்கு கொடுக்க மறுத்துள்ள அதன் கண்ணியத்தில் கொஞ்சத்தை காஸாவிற்கு திருப்பிக் கொடுத்துள்ளது,” என அவர் தெரிவித்தார்.
இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு மற்றும் 2007 ஆம் ஆண்டு முதல் காசா பகுதியில் அது ஏற்படுத்தியுள்ள தடையை முடிவுக்குக் கொண்டு வருவதே தனது தாக்குதலின் நோக்கம் என கூறியுள்ள ஹமாஸ், இஸ்ரேலிய இலக்குகளைத் தொடர்ந்து தாக்கி வருகிறது. ஜெருசலேம், டெல் அவிவ், ஸ்டெரோட், அஷ்டோட், அஷ்கெலோன், ரிஷோன் லெசியோன் மற்றும் பீர்ஷெபா உள்ளிட்ட இஸ்ரேல் முழுவதும் உள்ள நகரங்கள் மீது அதன் ராக்கெட்டுகள் விழுகின்றன. ஏராளமான இஸ்ரேலியர்கள் வெடிகுண்டுகளில் இருந்து தப்பிக்க முகாம்களில் உள்ளதுடன், இஸ்ரேலிய பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள் நேற்றும் இன்றும் மூடப்பட்டுள்ளன.
காஸாவை இஸ்ரேலில் இருந்து பிரிக்கும் இழிவான எல்லைச் சுவரில் உள்ள பாதுகாப்பு கமராக்களை பாலஸ்தீனியர்கள் அழித்ததையும், ட்ரோன் தாக்குதல்களால் இஸ்ரேலிய டாங்கிகளை தாக்குவதையும் இணையவழி வீடியோக்கள் காட்டுகின்றன. இஸ்ரேலிய துருப்புக்கள் மூன்று ஹெஸ்பொல்லா போராளிகளை சுட்டுக் கொன்றதால், லெபனானுடனான இஸ்ரேலின் வடக்கு எல்லையிலும் மோதல் வெடித்ததுடன் ஹெஸ்பொல்லா பிரிவுகள் இஸ்ரேலிய இராணுவ நிலைகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தின.
இஸ்ரேலிய பாதுகாப்பு படை தெளிவாக காஸா பகுதிக்குள் தரைவழி தாக்குதலைத் தயார் செய்து வருகிறது. அவர்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் 300,000 படையினரை தயார்நிலையில் வைக்க அழைப்புவிடுத்துள்ளதுடன், இஸ்ரேல்-காஸா எல்லையில் ஆட்டிலரி தளவாடங்களைத் தயார்படுத்துவதோடு டாங்கிகள் மற்றும் சிப்பாய்களை காவும் கவச வாகனங்களையும் குவித்து வருகின்றனர். 2 மில்லியன் மக்கள் வசிக்கும் ஒரு சிறிய பகுதியில், அத்தகைய தாக்குதல் தவிர்க்க முடியாமல் கொடூரமான பொதுமக்கள் உயிரிழப்புகளுக்கு வழிவகுக்கும் -அது உலகின் மூன்றாவது அதிக மக்கள்தொகை கொண்ட ஒரு நாடாக இருந்தால் இன்னும் பேரழிவுகரமாக இருக்கும்.
காசாவிற்கு எதிரான இஸ்ரேலிய அரச வன்முறையின் அதிகரிப்பு உலகம் முழுவதும் பெருகிய எதிர்ப்பையும் கோபத்தையும் தூண்டுகிறது.
பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக மத்திய கிழக்கு மற்றும் சர்வதேச அளவில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. காஸா மீதான அடக்குமுறையை எதிர்த்து ஏமன் தலைநகர் சனாவில் பல்லாயிரக்கணக்கானவர்களும், பாக்தாத், இஸ்தான்புல் மற்றும் தெஹ்ரானிலும் ஆயிரக்கணக்கானோரும் பேரணி நடத்தினர். நியூயார்க், லண்டன், சிட்னி மற்றும் பிற நகரங்களிலும் வியாழன் அன்று பாரிஸிலும் காஸாவைப் பாதுகாக்கும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. ஈராக்கிய மதகுரு மொக்தாதா அல்-சதர் பாக்தாத்தில் வெள்ளிக்கிழமை “மில்லியன் பேர் கலந்துகொள்ளும் அணிவகுப்புக்கு” அழைப்பு விடுத்துள்ளார்.
பாலஸ்தீனிய மக்களைப் பாதுகாப்பதற்கான தீர்க்கமான பிரச்சினை, இந்த ஆண்டு தொடக்கத்தில் நெதன்யாகுவின் தீவிர வலதுசாரி அரசாங்கத்தின் ஜனநாயக விரோதக் கொள்கைகளுக்கு எதிராக வெகுஜன ஆர்ப்பாட்டங்கள் வெடித்த இஸ்ரேலில் உட்பட, தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் வளர்ந்து வரும் இயக்கத்தை, ஒரு சோசலிச மற்றும் சர்வதேசிய முன்னோக்குடன் ஆயுதபாணியாக்குவதே ஆகும்.