முன்னோக்கு

இஸ்ரேல் மற்றும் காஸாவில் நடக்கும் வன்முறைக்கு யார் பொறுப்பு?

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

ரஃபா அகதிகள் முகாம் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள அபு ஹெலால் குடும்பத்தை பாலஸ்தீனியர்கள் காப்பாற்றுகின்றனர். காசா பகுதி, Monday, Oct. 9, 2023.  [AP Photo/Rahmez Mahmoud]

அனைத்து ஏகாதிபத்திய நாடுகளின் அரசாங்கங்களும், ஊடகங்களும் காஸாவில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிற்கு எதிராக நடந்து வரும் மக்கள் எழுச்சியைப் பற்றிய பொதுக் கருத்தை விஷமாக்கி, இஸ்ரேலின் தீவிர அதி வலதுசாரி ஆட்சியால் பாலஸ்தீனியர்களை பழிவாங்கும் அழிவை நியாயப்படுத்த ஒரு பாரிய பிரச்சார நடவடிக்கைக்கு அணிதிரட்டப்பட்டுள்ளன.

இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகுவின் ஒரு அழைப்பைத் தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென், “காசாவில் இருந்து ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேலுக்கு எதிராக நடத்திய பயங்கரமான தாக்குதலை” கண்டித்து, “இஸ்ரேலின் பாதுகாப்பிற்கான அவரது ஆதரவு உறுதியானது மற்றும் அசைக்க முடியாதது”  என்ற தொனியில் சனிக்கிழமை அறிவித்தார். இஸ்ரேலிய குடிமக்கள் மத்தியில் மரணங்கள் பற்றிய அறிக்கைகளில் தங்கள் “திகில் மற்றும் சீற்றத்தை”  வெளிப்படுத்தும் அதே வேளையில், இதைத் தொடர்ந்து அமெரிக்க அரசியல் ஸ்தாபனத்தை உள்ளடக்கிய ஒட்டுமொத்த பட்டியலில் உள்ள நபர்கள், கடந்த வார இறுதியில் தோன்றி “பயங்கரவாதிகளின்”  இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு கண்டன அறிக்கைகளை வெளியிட்டனர்.

அனைத்து ஏகாதிபத்திய தலைநகரங்களிலும், இஸ்ரேலின் தேசியக் கொடி பொது நினைவுச்சின்னங்களில் காட்டப்பட்டது. உடனடியாக இந்த நிலைப்பாட்டிலிருந்து ஏதேனும் ஒப்பீடு அல்லது விலகலானது, “யூத எதிர்ப்பு அல்லது பயங்கரவாதத்தை ஆதரிப்பதற்கு ஒப்பானது” என்று முத்திரை குத்தப்பட்டது.

குறிப்பாக காசாவில் இருந்து போர் வெடித்த முதல் மணிநேரங்களில், இஸ்ரேலிய குடிமக்கள் மத்தியில் குறிப்பிடத்தக்க உயிரிழப்புகள் ஏற்பட்டதாகத் தோன்றுகிறது, அவர்களில் பலர் சந்தேகத்திற்கு இடமின்றி பாலஸ்தீனியர்கள் மீதான அடக்குமுறைக்கு தனிப்பட்ட பொறுப்பை கொண்டிருக்கவில்லை. ஆயினும், இவர்களில் பலரின் தலைவிதியில் சோகத்தின் ஒரு கூறு உள்ளது, அவர்கள் தவறான இடத்தில், தவறான நேரத்தில் தாங்கள் இருப்பதை கண்டுகொண்டனர். இஸ்ரேலிய ஆக்கிரமிப்பின் கீழ், காசாவில் வாழ்நாள் முழுவதும் கடினமான அட்டூழியங்களுக்கு முகம்கொடுத்து வந்த போராளிகள், தாங்கள் உயிருடன் காசாவுக்குத் திரும்பப் போவதில்லை என்பதை ஏற்றுக்கொண்டனர். ஆதலால், வதை முகாமின் புறநகரில் ஒரு நடன நிகழ்ச்சி நடத்தியவர்கள் உட்பட முதலில் தென்பட்ட இஸ்ரேலியர்களை அவர்கள் பழிவாங்கினார்கள்.

ஆனால் இங்கே கேள்வி கேட்கப்பட வேண்டும்: அவர்களின் மரணத்திற்கு யார் இறுதி பொறுப்பு? இந்த அவலங்களுக்கான பொறுப்பை அது சார்ந்த இடத்தில் வைக்க வேண்டும்: முதல் இடத்தில், குற்றவியல் இஸ்ரேலிய நிறவெறி ஆட்சி மற்றும் அதன் அமெரிக்க ஆதரவாளர்களும், அதேபோல் பாலஸ்தீனியர்களை வெளியேற்றுவதன் மூலம் ஒரு பிரத்யேக யூத அரசை நிறுவும் முழு பிற்போக்குத்தனமான சியோனிச திட்டத்திற்கும் மற்றும் தொடர்ந்து குறுகிய திறந்தவெளி சிறைச்சாலைகள் மற்றும் கெட்டோக்களில் அவர்களை அடைத்து வைத்திருப்பவர்களில் அடங்கியிருக்கிறது.

ஏகாதிபத்திய சக்திகளின் “பயங்கரவாதம்” மற்றும் எழுச்சியின் “வன்முறை” ஆகியவற்றின் ஒருமித்த கண்டனங்கள் மிகவும் உச்சகட்டத்தில் பாசாங்குத்தனமானவை. பாலஸ்தீனியர்கள் மீதான வன்முறை மற்றும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களின் சார்பாக ஒப்பிடக்கூடிய அளவு “திகில்” மற்றும் “கோபத்தின்”  உத்தியோகபூர்வ வெளிப்பாடு இதுவரை எதுவும் இல்லை.

பைடெனின் உரையாசிரியர்கள் சனிக்கிழமை “இந்த வன்முறையால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்காகவும்” அவரது “பிரார்த்தனைகளை” வழங்கினாலும், ஒரு போர்க் குற்றவாளியான பைடென் வன்முறைகளுக்கு புதியவர் அல்ல. 2003 இல், அவர் ஈராக் மீதான சட்டவிரோத தலையீடு மற்றும் ஆக்கிரமிப்புக்கு செனட்டில் வாக்களித்ததின் விளைவாக, ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களின் இறப்புகள் ஏற்பட்டன.

நடந்துவரும் நிகழ்வுகளின் தலைகீழான உத்தியோகபூர்வ சித்திரத்தில், பாலஸ்தீனியர்கள் ஆக்கிரமிப்பாளர்கள் என்றும் இஸ்ரேல் அரசு அதற்கு பலியாகிறது என்று கூறப்படுவதற்கு மாறாக, ஏகாதிபத்தியத்தால் பாலஸ்தீனிய மக்களை ஒடுக்குவது முற்றிலும் ஒருதலைப்பட்சமாக இருக்கிறது. இதில் முக்கால் நூற்றாண்டுகளாக இஸ்ரேலிய அரசாங்கம் (ஏகாதிபத்திய சக்திகளால் ஆயுதம் ஏந்தப்பட்டது) அனைத்து எதிர்ப்பையும் மிருகத்தனமாக அடக்கி வைத்துள்ளது. எடுத்துக்காட்டாக 2008-09ல், மூன்று வாரங்களில் காஸா மீதான வான்வழி குண்டுவீச்சில், நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர், பாலஸ்தீனியர்களின் உயிரிழப்புகள் இஸ்ரேலிய உயிரிழப்புகளை விட 100 க்கு 1 என்ற விகிதத்தில் அதிகமாக இருந்தது.

மேற்குக் கரையில் உள்ள பாலஸ்தீனியர்கள் நூற்றுக்கணக்கான தனித்தனி கெட்டோக்களில், நூற்றுக்கணக்கான கூடுதல் இஸ்ரேலிய இராணுவ சோதனைச் சாவடிகளால் சூழப்பட்டு வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அதே நேரத்தில், காசா ஒரு பெரிய திறந்தவெளி சிறைச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது: காசா பகுதி, ஒரு சில மைல்கள் அகலமும் 25 மைல் நீளமும் கொண்டது. ஒவ்வொரு தேவைக்கும் இஸ்ரேலிய அரசாங்கத்தின் தயவில், 2 மில்லியனுக்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் இந்த திறந்தவெளி சிறையில், பூமியில் மிகவும் அடர்த்தியான மற்றும் அவநம்பிக்கையான சூழ்நிலைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்தச் சூழலில், காஸாவில் கடந்த வார இறுதியில் வெடித்த எழுச்சியானது ஒரு “தாக்குதலை” விட சிறை உடைப்பைப் போன்றது மற்றும் ஒரு நீண்ட கதையின் சமீபத்திய அத்தியாயம் மட்டுமே ஆகும்.

ஏகாதிபத்திய தலைநகரங்களில், “வன்முறை மற்றும் பயங்கரவாதத்தின்” மீதான பாசாங்குத்தனமான கண்டனங்கள் எதிரொலிக்கும் நிலையில், காஸாவின் மக்களை பயமுறுத்துவதற்கான பதிலடித் தாக்குதல் ஏற்கனவே கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது.

இஸ்ரேலின் பாதுகாப்பு மந்திரி யோவ் கலாண்ட் தனது ஆட்சியின் தன்மையையும் அதன் அடிப்படையான சித்தாந்தத்தையும் முழுமையாக அம்பலப்படுத்தும் மொழியைப் பயன்படுத்தி “காசா மீது ஒரு முழுமையான முற்றுகையை” அறிவித்துள்ளார். “மின்சாரம் இருக்காது, உணவு இல்லை, தண்ணீர் இல்லை, எரிபொருள் இருக்காது, அனைத்தும் மூடப்படும், நாங்கள் மனித விலங்குகளுடன் போராடுகிறோம், அதன்படி செயல்படுகிறோம்” என்று கலாண்ட் குறிப்பிட்டார்.

ஐ.நா.வுக்கான முன்னாள் அமெரிக்க தூதரும், குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருமான நிக்கி ஹேலி, இந்த எழுச்சி “இஸ்ரேலின் மீதான தாக்குதல் மட்டுமல்ல, அமெரிக்கா மீதான தாக்குதல்” என்று அறிவித்தார், நெதன்யாகு இவற்றை ஒழிக்க வேண்டும் என்று நேரடியாகக் கோரினார். “அடுத்த சில நாட்களில் எதிரிகளுக்கு நாம் என்ன செய்வோம் என்பது தலைமுறை தலைமுறையாக எதிரொலிக்கும்” என்று நெதன்யாகு தனது பங்கிற்கு நேற்று அச்சுறுத்தலாக அறிவித்தார்.

காஸாவிலோ அல்லது வேறு எந்த இடத்திலோ, ஒடுக்கப்பட்டவர்களின் எந்த எதிர்ப்பிற்கும் ஒடுக்குமுறையாளர்களின் அடிப்படை வர்க்க அணுகுமுறையே இந்த மூர்க்கமான ஏகாதிபத்திய பாசாங்குத்தனத்தின் பின்னணியில் உள்ளது. “அடக்குமுறையாளர்களான நாம், அது நமது நலன்களுக்குச் சேவை செய்யும் என்று முடிவு செய்யும் போதெல்லாம் பலத்தை பயன்படுத்த சுதந்திரமாக இருக்கிறோம். கண்மூடித்தனமாக வெடிகுண்டு வைக்கலாம், முற்றுகையிட்டு பட்டினி போடலாம், கொள்ளையடித்து சிறையில் அடைக்கலாம், கழுத்தை காலால் நெரிக்கலாம் ஆனால், படை என்பது நமது ஏகபோகம் மற்றும் நமது தனிச் சிறப்பு, ஒடுக்கப்பட்ட நீங்கள், எந்த சூழ்நிலையிலும் பதிலுக்கு பலத்தை பயன்படுத்த அனுமதிக்கப்படமாட்டீர்கள்”. ஆக்கிரமிப்பிற்கு எதிராக ஆயுதம் ஏந்துபவர்களை விவரிக்க “பயங்கரவாதி” என்ற வார்த்தையை மீண்டும் மீண்டும் பயன்படுத்த தூண்டுவது இந்த வர்க்க மனப்பான்மையே ஆகும்.

இதில் உள்ள பாசாங்குத்தனத்தின் அளவை எடுத்துக்காட்டும் வகையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளிவந்த “எதிரியின் எல்லைகளுக்கு பின்னால்” என்ற கட்டுரையில், உக்ரேனியர்கள் ரஷ்யர்களிடம் நீங்கள் ஒருபோதும் பாதுகாப்பாக இல்லை என்று கூறுகின்றனர் என்று நிருபர் ஆண்ட்ரூ கிராமர், ரஷ்ய எல்லைகளுக்குப் பின்னால் கார் குண்டுகள் மூலம் படுகொலைகளை நடத்தும் உக்ரேனிய பயங்கரவாதப் படைகளின் வேலையைக் கொண்டாடினார். “அவர்கள் வெடிபொருட்களை வைப்பதற்காக சந்துகளில் பதுங்கியிருக்கிறார்கள். அவர்கள் உக்ரேனிய பீரங்கிகள் மற்றும் அமெரிக்காவின் நீண்ட தூர ராக்கெட்டுகளுக்கான ரஷ்ய இலக்குகளை அடையாளம் காண்கின்றனர். அவர்கள் இரயில் பாதைகளை தகர்த்து, ரஷ்யர்களுடன் ஒத்துழைப்பதாக அவர்கள் கருதும் அதிகாரிகளை படுகொலை செய்கிறார்கள்” என்று அவர் குறிப்பிட்டார். இத்தகைய வழிமுறைகள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பினாமிகளுக்கு அனுமதிக்கப்படுகின்றன, ஆனால் அந்த பினாமிகளை எதிர்ப்பவர்களுக்கு அனுமதிக்கப்படவில்லை.

1831 இல், வேர்ஜீனியாவின் சவுத்தாம்ப்டன் கவுண்டியில் நாட் டர்னர் தலைமையில் ஒரு அடிமை எழுச்சி நடந்தது. தப்பி ஓடிய அடிமைகள் கத்திகள், கோடாரிகள் மற்றும் தடிகளைப் பயன்படுத்தி டஜன் கணக்கான வெள்ளை ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளைக் கொன்றனர். இந்தக் கிளர்ச்சி இன்னும் தீவிர காட்டுமிராண்டித்தனத்துடன் அடக்கப்பட்டது. அலைந்து திரிந்த ஆயுதக்குழு மற்றும் கும்பல்கள் கறுப்பின மக்களை அவர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டிருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர்களைக் கொன்றனர். டர்னரின் உடலில் இருந்து உரிக்கப்பட்ட அவரது தோல் நினைவு பரிசு பைகளாக உருவாக்கப்பட்டன.

எந்தவொரு புறநிலை வரலாற்றாசிரியரும், பின்னோக்கிப் பார்த்தால், இத்தகைய எழுச்சிகளின் கொடூரமான வன்முறைக்கான பழியை அடிமைகள் மீது அல்ல, மாறாக அடிமை அமைப்பின் மீது, அதன் அனைத்து பிரமாண்டமான, மனிதாபிமானமற்ற தன்மையின் மீது பழி சுமத்துவார். டர்னர் எழுச்சியை வன்முறையானது என்ற அடிப்படையில் கண்டனம் செய்வது, பாசாங்குத்தனமானதாகவும், வரலாற்று ரீதியாக அடிமைத்தனத்திற்கு மறைமுகமாக மன்னிப்பு கேட்பதாகும்.

தந்திரத்தாலும், வன்முறையாலும் ஒரு அடிமையை சங்கிலியால் பிணைக்கும் அடிமை உரிமையாளரும், தந்திரத்தினாலோ அல்லது வன்முறையினாலோ சங்கிலிகளை உடைத்தெறியும் ஒரு அடிமையும், அறநெறி நீதிமன்றத்தில் சமமானவர்கள் என்று இழிவான அயோக்கியர்கள் எமக்கு சொல்ல வேண்டாம்!  என்று லியோன் ட்ரொட்ஸ்கி, 1938ல் எழுதினார்.

அமெரிக்க உள்நாட்டுப் போருக்கு மத்தியில் தனது இரண்டாவது தொடக்க உரையில், நாடு துன்புறுத்தப்பட்ட மிகப்பெரிய வன்முறை, அடிமைத்தனத்தை நிறுவுவதற்கான தவிர்க்க முடியாத வரலாற்றுக் கணக்கீடு என்று தனது கருத்தை வெளிப்படுத்திய ஆப்ரகாம் லிங்கன், “கசையடியால் எடுக்கப்பட்ட ஒவ்வொரு துளி இரத்தமும் வாள் எடுத்த மற்றொருவரால் செலுத்தப்படும்” என்று குறிப்பிட்டார்.

அதே நேரத்தில், காசாவிலுள்ள மக்களுக்கு எதிராக இப்போது இஸ்ரேலிய அரசாங்கம் கட்டவிழ்த்துவரும் அடக்குமுறை, கென்யாவில் மௌ மாவ் கிளர்ச்சிக்கு எதிராக பிரிட்டனும், அல்ஜீரிய சுதந்திரப் போரில் பிரான்சும், நிறவெறி ஆட்சிக்கு எதிராகப் போராடிய தென்னாப்பிரிக்கர்களுக்கு எதிராகப் பயன்படுத்திய அடக்குமுறையிலிருந்து அடிப்படையில் வேறுபட்டதல்ல. அல்லது ஈராக் மீதான அதன் ஆக்கிரமிப்புக்கு எதிரான மக்கள் எதிர்ப்பிற்கு எதிராக அமெரிக்க இராணுவத்தால் எப்பொழுதும் போல், ஒடுக்குமுறையாளர்களிடையே உள்ள அரசியல் உயரடுக்குகள் ஆயுதமேந்திய எதிர்ப்பை பயங்கரவாதம் என்று கண்டித்து, இரக்கமற்ற பழிவாங்கலை ஆயிரம் மடங்கு அழிவுகரமானதாகச் செய்கிறார்கள்.

தற்போதைய பிரச்சார வெள்ளத்தில் இருந்து ஒரு அரிய விலகலாக, பாலஸ்தீனிய தேசிய முன்முயற்சியின் தலைவர் முஸ்தபா பர்கௌதி நேற்று CNN இல் ஃபரீத் ஜகாரியாவினால் நேர்காணல் செய்யப்பட்டார், அதில் பாலஸ்தீனியர்களின் வேறு எந்த விதமான எதிர்ப்பையும் இஸ்ரேல் அரசாங்கம் அங்கீகரிக்க மறுத்ததன் தவிர்க்க முடியாத விளைவே ஆயுதமேந்திய எதிர்ப்பு என்பதை அவர் சுட்டிக்காட்ட அனுமதிக்கப்பட்டார். “நாம் ராணுவ வடிவில் போராடினால், நாங்கள் பயங்கரவாதிகள். நாம் அகிம்சை வழியில் போராடினால், நாம் வன்முறையாளர்கள், நாம் வார்த்தைகளால் கூட எதிர்த்தால், நாம் ஆத்திரமூட்டுபவர்கள் என்று வர்ணிக்கப்படுகிறோம்” என்று குறிப்பிட்டார்.

உண்மையில் 2018-19 இல், 1948-1949 மற்றும் 1967 போர்களின் போது விரட்டியடிக்கப்பட்ட பாலஸ்தீனியர்கள் தமது வீடுகளுக்குத் திரும்புவதற்கான உரிமையைக் கோரி, “வீடு திரும்புவதற்கான பெரும் அணிவகுப்பு” என்ற பதாகையின் கீழ் காசாவில் பாரிய போராட்டங்கள் நடைபெற்றன. இஸ்ரேலிய இராணுவம் பாலஸ்தீனிய ஆர்ப்பாட்டக்காரர்களை சுட்டுக் கொன்றதன் மூலம் இந்தப் போராட்டங்களுக்கு பதிலளித்தது. அவர்கள் காசா பகுதியில் அவர்களைச் சுற்றியுள்ள சுவர்கள் மற்றும் வேலிகளை நெருங்கினர். இந்த சம்பவத்தில், குறைந்தது 223 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர், 9,200 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர், இன்று பாலஸ்தீனியர்களுக்கு ஒழுக்கத்தைப் போதிக்கும் நபர்கள் எவரும் இந்த தாக்குதலுக்கு கண்ணிமைக்கவில்லை.

உண்மையில், இந்த புதிய இரத்தம் தோய்ந்த வன்முறை வெடிப்பின் முக்கிய தூண்டுதலாகக் கருதப்படும் குற்றவாளியான நெதன்யாகு ஆட்சிக்கு இஸ்ரேலுக்குள்ளேயே தொழிலாள வர்க்கத்தில் ஆழ்ந்த எதிர்ப்பு உள்ளது. இந்த எதிர்ப்பானது, இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஆட்சியின் முயற்சிகள் சவாலுக்குட்படுத்த முடியாத மற்றும் சட்டரீதியாக மறுபரிசீலனை செய்ய முடியாத அதிகாரங்களை வழங்குவதற்கு எதிராக, ஏற்கனவே பாரிய போராட்ட எதிர்ப்புக்கள் மற்றும் ஒரு பொது வேலைநிறுத்தம் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால், காசாவில் எழுச்சி எடுத்த வன்முறை வடிவம் இஸ்ரேலுக்குள் ஒரு உண்மையான மற்றும் கொள்கை ரீதியான சோசலிச மற்றும் இடதுசாரி தலைமை இல்லாததுடன் தொடர்பில்லாதது அல்ல. இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடந்த வெகுஜன எதிர்ப்புக்களின் போது, தங்களைத் தாங்களே அறிவித்துக் கொண்ட தலைவர்கள் சியோனிச அரசின் பாதுகாவலர்களாகவும், அதன் இயற்கையான கூட்டாளிகளாகவும் இருந்த அவர்கள், பாலஸ்தீனிய மக்களின் போராட்டங்களை நோக்கிய எந்தத் திருப்பத்தையும் மிகக் கவனமாகத் தவிர்த்தனர்.

உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை ஏற்குமாறு மக்களை வற்புறுத்துவதற்கு இப்போது நடந்து வரும் பாரிய பிரச்சாரம், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உட்பட உலகெங்கிலும் உள்ள நூற்றுக்கணக்கான மில்லியன் மக்கள் அந்தக் கொள்கையை ஏற்க விரும்ப மாட்டார்கள் என்ற அச்சத்தை பிரதிபலிக்கிறது. பாலஸ்தீன எழுச்சிக்கு ஆதரவாக உலகம் முழுவதும் தன்னெழுச்சியான ஆர்ப்பாட்டங்கள் ஏற்கனவே நடந்து வருகின்றன.

இந்த மூலோபாயத்தை செயல்படுத்துவதில் சவால்கள் மற்றும் தடைகள் எவ்வளவு பெரியதாக இருந்தாலும், அமைதியான எதிர்காலத்திற்கான ஒரே பாதை மற்றும் சியோனிச ஆட்சியுடன் கணக்குகளை தீர்ப்பதற்கான ஒரே வழி இஸ்ரேலிய மற்றும் பாலஸ்தீனிய தொழிலாளர்களின் ஒற்றுமை ஆகும், அவர்கள் ஒன்றாக காசாவிற்கு எதிரான இரத்தக்களரி தாக்குதலை எதிர்க்க வேண்டும். நெதன்யாகுவின் ஆட்சியை வீழ்த்தி, ஒருங்கிணைந்த சோசலிச சமுதாயத்திற்கான போராட்டத்தில் அவர்கள் ஒன்று சேர வேண்டும்.

Loading