முன்னோக்கு

காஸாவில், இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு எதிரான உலகளாவிய எதிர்ப்பு போராட்டங்கள் தொழிலாள வர்க்கத்தின் பக்கம் திரும்ப வேண்டும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

பாலஸ்தீனியர்கள் மீதான இஸ்ரேலின் இனப்படுகொலையை எதிர்த்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, மக்கள் அமெரிக்க தலைநகரை நோக்கி அணிவகுத்துச் செல்கின்றனர். சனிக்கிழமை, அக்டோபர் 21, 2023, வாஷிங்டன் [AP Photo]

காஸாவில் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இஸ்ரேலிய இனப்படுகொலையின் தீவிரம், உலகில் ஒவ்வொரு கண்டத்திலும் வாழும் மில்லியன் கணக்கான மக்களை உள்ளடக்கிய பாரிய ஆர்ப்பாட்டங்களைத் தூண்டியுள்ளன.

உலக சோசலிச வலைத் தளமானது, இந்த ஆர்ப்பாட்டங்களை இஸ்ரேலில் நெதன்யாகு அரசாங்கத்தால் நடத்தப்படும் கொடூரமான குற்றங்களுக்கு எதிரான மகத்தான எதிர்ப்பின் வெளிப்பாடாக வரவேற்கிறது. ஆளும் வர்க்கங்கள் தங்கள் போர்க் கொள்கைகள் மற்றும் அரசியல் பிற்போக்குத்தனத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்திய நீண்ட கால அரசியல் தேக்கநிலை முடிவுக்கு வருகிறது.

இங்கிலாந்து, லண்டனில் சனிக்கிழமையன்று நடந்த பேரணியில் 300,000 க்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்றனர். இது, 2003 இல் ஈராக் ஆக்கிரமிப்பிற்குப் பிறகு நடந்த மிகப்பெரிய போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமாக இருப்பதோடு, லண்டனின் வரலாற்றில் மிகப்பெரிய ஒன்றாக இருக்கிறது. நியூயோர்க், சிக்காகோ, லொஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் வாஷிங்டன் டி.சி ஆகிய இடங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் அணிவகுத்துச் சென்றனர். பாரிஸில் உள்ள குடியரசு சதுக்கத்தில், ஞாயிற்றுக்கிழமை 15,000 க்கும் மேற்பட்ட மக்கள் ஒன்று கூடினர். ஜேர்மனியின் நகரங்களான கொலோன், பிராங்பேர்ட், ஹனோவர், கார்ல்ஸ்ரூ, முன்ஸ்டர் மற்றும் ஸ்டுட்கார்ட் ஆகிய நகரங்களில் ஆயிரக்கணக்கானோர் அணிவகுத்துச் சென்றனர், மேலும் 7,000ம் பேர்கள் டுசுல்டோர்ஃப் நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்பெயின், ஆஸ்திரேலியா, கனடா உட்பட பல நாடுகளில் பாரிய போராட்டங்கள் நடந்தன.

மத்திய கிழக்கிலுள்ள நாடுகள் முழுவதிலும் போராட்டங்கள் பரவி வருகின்றன. அல்-சிசி சர்வாதிகாரத்தின் உத்தரவுகளை மீறி, 2011 இல் வெகுஜன ஆர்ப்பாட்டங்களின் மையப் புள்ளியான எகிப்தின் தஹ்ரிர் சதுக்கத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் சனிக்கிழமையன்று திரண்டனர். கடந்த வாரத்தில், லெபனான், துருக்கி, ஈராக், ஜோர்டான், ஏமன், மொராக்கோ, மலேசியா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. பாக்கிஸ்தான் மற்றும் அல்ஜியர்ஸில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களும், மொராக்கோவின் ரபாத்தில் நூறாயிரக்கணக்கான மக்களும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

இந்தப் போராட்டங்கள் அனைத்தும் உலகெங்கிலும் உள்ள பல்வேறு தேசங்களைச் சேர்ந்த மக்களை ஒன்றிணைத்துள்ளன. அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில், இஸ்ரேலிய அரசாங்கம் இனப்படுகொலை செய்வதைக் கண்டித்து ஏராளமான யூத மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். ஐக்கிய அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு முழுவதும் எதிர்ப்பு போராட்டங்கள் மற்றும் பள்ளி வெளிநடப்புகளில் இளையோர் பங்கேற்றனர், மேலும் ஒரு முழுத் தலைமுறையும் அரசியல்மாயமாக்கப்படுகிறது.

இந்த உலகளாவிய இயக்கத்தினை எதிர்கொண்டு, பெருநிறுவன ஊடகங்கள் ஆர்ப்பாட்டங்கள் இல்லை என்று பாசாங்கு செய்கின்றன. நியூயோர்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட் மற்றும் கார்டியன் ஆகியவற்றின் முதல் பக்கங்கள் அனைத்தும் இந்த ஆர்ப்பாட்டங்களை பற்றி குறிப்பிடுவதை புறக்கணித்துள்ளன, மேலும் அவை மாலை செய்திகளில் தெரிவிக்கப்படவில்லை.

“இஸ்ரேல் மற்றும் உக்ரேன் போர்களுக்கான அமெரிக்க ஆதரவைப் பற்றி வாக்காளர்கள் என்ன நினைக்கிறார்கள்” என்று டைம்ஸில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரை, போருக்கு எதிரான வெகுஜன எதிர்ப்பு போராட்டங்கள் தினசரி அடிப்படையில் நிகழ்ந்து வருவதைப் பற்றி குறிப்பிடவில்லை. உள்ளூர் ஊடகங்களும் தரமாக இல்லை. கடந்த வார இறுதியில் பல்லாயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம் நடத்திய சிக்காகோவில், சிக்காகோ சன்-டைம்ஸ் மற்றும் சிக்காகோ ட்ரிப்யூன் ஆகிய முக்கிய செய்தித்தாள்கள் எதுவும் இது தொடர்பாக கட்டுரைகளை வெளியிடவில்லை.

இந்த பாரிய போர்-எதிர்ப்பு இயக்கம் இஸ்ரேலிய இனப்படுகொலையின் பெரும் விரிவாக்கத்தின் மத்தியில் வளர்ந்து வருகிறது. பைடென் நிர்வாகம் மற்றும் அமெரிக்க-நேட்டோ அச்சு நாடுகளின் ஆதரவுடன், இஸ்ரேல் ஒரு படையெடுப்புக்கான தயாரிப்பில், அதன் குண்டுவீச்சு தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. வெளியேறாத எவரும் பயங்கரவாதியாகக் கருதப்படுவார்கள் என்று அறிவித்த துண்டுப் பிரசுரங்களை வடக்கு காஸாவில் வீசினார். கடந்த வாரம் மருத்துவமனை மீது குண்டுவீசி 500 பேரைக் கொன்ற பின்னர், வடக்கில் எஞ்சியிருக்கும் அனைத்து மருத்துவமனைகளையும் மூட வேண்டும் என்று இஸ்ரேல் கோரியுள்ளது. அது மக்கள் குடியிருப்பு கட்டிடங்கள் மீது ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வருவதுடன், இந்த அழிவுகளை ஆவணப்படுத்தும் பத்திரிகையாளர்களை குறிவைத்து தாக்கியும் வருகிறது.

அல் ஜசீராவின் கூற்றுப்படி, கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலின் இடைவிடாத வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து காஸா முழுவதும் குறைந்தது 400 பேர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது, அக்டோபர் 7, ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு பாலஸ்தீனிய ஊடகங்கள் இதை மிகக் கடுமையான குண்டுவீச்சுகள் என்று வர்ணித்துள்ளன. இஸ்ரேல் மேற்குக் கரையில் உள்ள ஜெனின் மீதும் மற்றும் தெற்கு காஸா நகரமான ரஃபாவிலும் தாக்குதல்களை நடத்தியது, அங்கு பாலஸ்தீனியர்கள் எகிப்தினுடைய எல்லையைக் கடக்கும் முயற்சியில் தப்பி செல்கின்றனர்.

ஞாயிறன்று, முன்னாள் துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் அமெரிக்க தரைப்படைகளை காசாவில் நிலைநிறுத்த வேண்டும் என்று வாதிட்டார். அதே நேரத்தில், செனட்டர் லிண்ட்சே கிரஹாம் நேரடியாக ஈரானைக் குறிவைத்து யுத்தத்தில் மூன்றாவது போர்முனையைத் திறக்க வேண்டுமென வெளிப்படையாக அச்சுறுத்தினார்.

காசா மக்களுக்கு எதிரான இஸ்ரேலின் போர், ஏகாதிபத்திய வன்முறையின் உலகளாவிய வெடிப்பின் ஒரு பகுதி மட்டுமே ஆகும். அமெரிக்க ஆளும் வர்க்கம் மத்திய கிழக்கில் உள்ள மோதலை ரஷ்யா மற்றும் சீனா உட்பட ஒரு உலகளாவிய போரின் முனைகளில் ஒன்றாகக் கருதுகிறது. பைடென் நிர்வாகம் அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீதான ஹமாஸ்ஸின் தாக்குதலைப் பயன்படுத்தி உலகளாவிய இராணுவ விரிவாக்கத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. மத்திய கிழக்கின் போருக்காக 14 பில்லியன் டொலர்களையும், உக்ரேனில் நடக்கும் போருக்காக பைடென் 60 பில்லியன் டொலர்களையும் கோருகிறார்.

பைடென் நிர்வாகம், உக்ரேனுடைய வசந்தகாலத் தாக்குதலின் தோல்வியுடன் சந்தித்த வீழ்ச்சியை மாற்றியமைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இராணுவ ஆயுத உபகரணங்களை வழங்குவதற்கான அனைத்து கட்டுப்பாடுகளையும் அமெரிக்கா நீக்கியுள்ளது, மேலும் போர் மண்டலத்திற்கு அமெரிக்க துருப்புக்களை அனுப்புவதற்கான திட்டங்கள் திரைக்குப் பின்னால் நடந்து வருகின்றன. ரஷ்யாவிற்கு எதிரான போர், சீனாவுடனான மோதலுக்கான தயாரிப்பின் ஒரு பகுதியாகவே இது பார்க்கப்படுகிறது.

காஸா போருக்கு விடையிறுக்கும் வகையில், வெடித்துள்ள ஆர்ப்பாட்டங்கள் உலகம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். ஆனால், பாரிய வெகுஜன எதிர்ப்பின் தோற்றமானது, அரசியல் முன்னோக்கு மற்றும் வேலைத்திட்டம் தொடர்பான முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது.

இந்த வெகுஜன இயக்கத்தின் வளர்ச்சியில் உள்ள மைய சவால், அதை தொழிலாள வர்க்கத்தை நோக்கி செலுத்துவதாகும். உலகின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் அனைத்துத் துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்களின் உலகளாவிய வேலைநிறுத்த இயக்கத்தின் மத்தியில் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் வந்துள்ளன.

இந்த வருடம், இஸ்ரேலிய இனப்படுகொலையை ஆதரிக்கும் அனைத்து அரசாங்கங்களும், தமது சொந்த நாட்டுக்குள் வெகுஜன எதிர்ப்பை எதிர்கொண்டுள்ளன. பிரான்சில், ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் ஓய்வூதியங்கள் மீதான தாக்குதல்களுக்கு எதிராக ஒரு பாரிய வேலைநிறுத்த இயக்கத்தில் மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்றனர். இங்கிலாந்தில், பல்லாயிரக்கணக்கான இரயில்வே மற்றும் தபால் ஊழியர்கள் தங்கள் வேலைகள் மற்றும் ஊதியங்களுக்காக கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அமெரிக்காவில் பல தசாப்தங்களில், எழுத்தாளர்கள், கல்வித் தொழிலாளர்கள் மற்றும் நூறாயிரக்கணக்கான வாகனத் தொழிலாளர்களை உள்ளடக்கிய மிகப்பெரிய வேலைநிறுத்த இயக்கம் நடந்து கொண்டிருக்கிறது. பைடென் நிர்வாகத்துடன் நெருக்கமாகப் பணியாற்றும் தொழிற்சங்க எந்திரம், அதைக் கட்டுப்படுத்த தீவிரமாக முயன்று வருகிறது.

ஆளும் உயரடுக்கு இரண்டு முனைகளில் போரை நடத்துகிறது: உலகத்தை முழுமையாக மறுபங்கீடு செய்வது மற்றும் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக உள்நாட்டுக்குள் போரை மேற்கொள்வது. போருக்காக ஒதுக்கப்படும் நூற்றுக்கணக்கான பில்லியன் டொலர்கள், உள்நாட்டில் தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதலை அதிகரிப்பதன் மூலம் செலுத்தப்படும். மேலும், ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள், இஸ்ரேல் செய்துவரும் அட்டூழியங்களுக்கு எதிரான எதிர்ப்பை குற்றமாக்கும் முயற்சிகள், ஆளும் உயரடுக்கின் கொள்கைகளுக்கான எதிர்ப்பின் அனைத்து வெளிப்பாடுகளுக்கும் எதிராக இயக்கப்படும்.

காசாவில் இனப்படுகொலை மற்றும் ஆளும் உயரடுக்கின் பரந்த போர்க் கொள்கைகளுக்கு முடிவுகட்ட தொழிலாள வர்க்கம் அணிதிரட்டப்பட வேண்டும். இஸ்ரேலின் போரில் பயன்படுத்தக்கூடிய அனைத்து வளங்களையும் பறிக்க தொழிலாளர்கள் தொழில்துறை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். உலகெங்கிலும் உள்ள கப்பல்துறை தொழிலாளர்கள், விமான நிலைய ஊழியர்கள் மற்றும் போக்குவரத்து தொழிலாளர்கள் இஸ்ரேலை நோக்கி கொண்டு செல்லப்படும் ஆயுதங்களைக் கையாள மறுக்க வேண்டும்.

காசாவிற்கு எதிரான இனப்படுகொலை தாக்குதலின் ஒரு பகுதியாக இருக்கும் ஏகாதிபத்திய வன்முறை வெடிப்புக்கு எதிரான போராட்டம், முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டமாக இருக்க வேண்டும்.

மனிதகுலம் எதிர்கொள்ளும் ஆழமான நெருக்கடிக்கான தீர்வு, தொழிலாள வர்க்கத்தில் வேரூன்றிய ஒரு சக்திவாய்ந்த சோசலிச இயக்கத்தின் வளர்ச்சியாகும். இந்த வார இறுதியில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்கள், ஒரு வெகுஜன போர்-எதிர்ப்பு இயக்கத்தின் வளர்ச்சியில் ஒரு முக்கியமான மைல்கல்லாக இருக்க வேண்டும். அத்தோடு, அதனை ஆழப்படுத்தி விரிவாக்கப்பட வேண்டும், அனைத்திற்கும் மேலாக, ஒரு சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தை நோக்கி திரும்ப வேண்டும்.

Loading