இலங்கைத் தமிழ்த் தேசியவாதிகள், காஸாவில் நெதன்யாகுவின் இனப்படுகொலைப் போர் வரிசையில் நிற்கின்றனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் பிற நேட்டோ ஏகாதிபத்திய சக்திகளின் ஆதரவுடன், காஸாவில் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேலிய நெதன்யாகு ஆட்சி நடத்திவரும் இனப்படுகொலைப் போர், இலங்கையிலுள்ள தமிழ் தேசியவாதிகளின் திவால்நிலையை அம்பலப்படுத்துகிறது.

காஸாவில் அக்டோபர் 7-ம் தேதி சண்டை தொடங்கிய பிறகு, கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் இந்த அமைப்புகள் அமைதியாக இருந்தன. 2009 இல், இலங்கையில் இனவாத யுத்தம் முடிவடைந்த பின்னர், கிட்டத்தட்ட 15 வருடங்களாக அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் நெருக்கமாகப் பணியாற்றி வருகின்ற தமிழ் தேசியவாதிகள், இஸ்ரேலின் பிரதான ஆதரவாளர்களுடனான தங்கள் உறவுப் பாலங்களை எரிக்க விரும்பவில்லை.

எம்.ஏ.சுமந்திரன்

காஸாவில் உள்ள அல்-அஹ்லி அரபு மருத்துவமனை மீதான அக்டோபர் 17 இஸ்ரேலிய குண்டுத் தாக்குதலுக்கு பிறகு, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (ITAK) முக்கிய தலைவரான எம்.ஏ. சுமந்திரன், இது தொடர்பாக ட்வீட் செய்தார். அதில், “மிகவும் வெறுக்கத்தக்க போர்க்குற்றம்! ஆத்திரமூட்டல் இருந்தாலும், மருத்துவமனைகளைத் தொட முடியாது. ஏற்கனவே பார்த்த உணர்வைக் கொண்டிருக்க முடியாது. 2009 இல், புதுக்குடியிருப்பு வைத்தியசாலை மீதான இலங்கை இராணுவத்தின் தாக்குதலும், அதே நோய்வாய்ப்பட்ட மற்றும் நொண்டிச் சாட்டுகளால் நியாயப்படுத்தப்பட்டது! பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் இனி நிறுத்தப்பட வேண்டும்!” என்று குறிப்பிட்டிருந்தார்.

ஒக்டோபர் 20ஆம் திகதி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இலங்கை நாடாளுமன்றத்தில் இஸ்ரேலுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்தார். “யூதர்களுக்கு அவர்களின் நாடு கொடுக்கப்பட வேண்டும். அவர்கள் நிம்மதியாக வாழ வேண்டும். அதேபோன்று பாலஸ்தீனத்திற்கும் அநீதி நடந்துள்ளது. தமிழ் மக்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் நாங்கள் இஸ்ரேல் அரசுக்கு எதிரானவர்கள் அல்ல” என்று அவர் குறிப்பிட்டார்.

மற்றொரு தமிழ் முதலாளித்துவ தேசியவாத அமைப்பான தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE) காஸாவில் நடந்துவரும் போர் தொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டது. ஏகாதிபத்திய ஊடகங்களில் பாலஸ்தீனியர்கள் இஸ்லாமிய வெறியர்கள் என்று கண்டனம் செய்வதை எதிரொலிக்கும் வகையில், “முற்போக்கு சிந்தனைகளையும் செயற்பாடுகளையும் கொண்டிருந்த பலஸ்தீன சக்திகள் பிராந்திய போட்டிச் சுழியில் சிக்கி, கடும்போக்கு இஸ்லாமிய அமைப்புகளுடன் இணங்கி, இணைந்து செயற்படும் நிலைக்கு தற்போது சென்றுவிட்டன” என்று PLOTE கூறியது.

அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிற ஏகாதிபத்திய சக்திகளின் கைக்கூலிகளாக வேலை செய்யும் இந்த முதலாளித்துவ அரசியல்வாதிகளின் பேச்சுகளும் அறிக்கைகளும் அரசியல் ரீதியாக மோசடியானவை. பாலஸ்தீனியர்கள் மீதான அதீத மக்கள் அனுதாபத்தையும், இலங்கை மற்றும் ஆசியா முழுவதிலும் பெருகிவரும் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் (IDF) இனப்படுகொலைக் கொள்கை மீதான சீற்றத்தையும் குழப்பி, மனச்சோர்வடையச் செய்வதே இவர்களின் நோக்கமாகும்.

தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்கள், தமிழ் தேசியவாதிகளின் இந்த திவாலான அறிக்கைகளை நிராகரிக்க வேண்டும். இஸ்ரேலிய இராணுவத்தின் இனப்படுகொலைப் போரை கண்டித்து, பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகப் போராட வேண்டும்.

இன்று காஸாவில் என்ன நடக்கிறது என்பதில், இலங்கைத் தொழிலாளர்களுக்கு கசப்பான மற்றும் இரத்தம் தோய்ந்த அனுபவம் உள்ளது.

தமிழ் மக்கள் மீதான இலங்கை முதலாளித்துவ ஆட்சியின் இனவாதப் போர் 2009 இல் முடிவுக்கு வந்தது. சிறிலங்கா இராணுவத்தால் சூழப்பட்ட ஒரு குறுகிய பகுதிக்குள் தமிழீழ விடுதலைப் புலிப் (LTTE) போராளிகள் மற்றும் அவர்களுடன் சிக்கியிருந்த தமிழ் பொதுமக்கள் திட்டமிட்ட முறையில் படுகொலை செய்யப்பட்டனர். குறைந்தது 40,000ம் பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 250,000 பேர்களுக்கு மேல் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டனர்.

பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இனப்படுகொலையை கண்டிக்க மறுக்கும் இலங்கையின் தமிழ் தேசியவாதிகள், அதே காரணத்திற்காக படுகொலை செய்யப்பட்டு பாதிக்கப்பட்ட விடுதலைப் புலிகளுக்கு புறமுதுகு காட்டுகின்றனர். முதலாளித்துவ தேசிய-அரசு அமைப்பு முறையை நோக்கி இருக்கும் இவர்கள், 2009 இல் விடுதலைப் புலிகளின் தோல்விக்கு எதிர்வினையாற்றி, இலங்கை முதலாளித்துவ அரசு இயந்திரத்தில் சலுகை பெற்ற பதவிகளை தேடுவதற்கு விளைவதோடு, தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக ஏகாதிபத்தியத்தை தழுவியுள்ளனர். வாஷிங்டன், லண்டன் மற்றும் இந்து மேலாதிக்க இந்திய ஆட்சியுடன் இணைந்து செயல்படும் இவர்கள், இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனாவுக்கு எதிரான அமெரிக்க ஏகாதிபத்திய நலன்களின் முக்கிய பாதுகாவலர்களாக உள்ளனர்.

காஸாவில் அல்-அஹ்லி அரபு மருத்துவமனை மீதான குண்டுவீச்சைப் பற்றிய சுமந்திரனின் விமர்சனத்தின் பாசாங்குத்தனம் இதில் உள்ளது: அவர் போர்க்குற்றம் குறித்து புலம்புகிறார். ஆனால், போர்க்குற்றவாளிகளுடன் நட்புரீதியான சந்திப்புகளை நடத்துகிறார்.

இந்தக் கொடூரமான குண்டுவெடிப்பில் பலியான நூற்றுக்கணக்கான அப்பாவிகளின் தலைவிதி குறித்து முதலைக் கண்ணீர் வடிப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு, சுமந்திரன் இலங்கையில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பிரதிநிதிகளுடன் தனது நட்புரீதியான கலந்துரையாடல்களை X/Twitter இல் பகிர்ந்து கொண்டதுடன், அதுபற்றி பகிரங்கமாக பெருமையடித்துக்கொண்டார். “தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க உதவிச் செயலாளர் அஃப்ரின் அக்தருடன் இன்று கொழும்பில் நல்ல சந்திப்பு நடந்தது” என்று சுமந்திரன் டுவிட்டரில் எழுதினார்.

ஏனைய தமிழ் தேசியவாதக் குழுக்களும் இதேபோன்ற பாத்திரத்தையே வகிக்கின்றன. புளொட் தலைவர் த.சித்தார்த்தன், தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன், தமிழ் மக்கள் தேசியக் கூட்டமைப்பு (TPNA) கட்சித் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகிய மூவரும், பிரித்தானியாவின் இந்தோ-பசிபிக் அமைச்சர் அன்னி-மேரி ட்ரெவல்யன் மற்றும் இலங்கைக்கான பிரித்தானியத் தூதுவர் ஆன்ட்ரூ பேட்ரிக் ஆகியோரை அக்டோபர் 10ஆம் தேதி யாழ்ப்பாணத்தில் சந்தித்தனர். இந்த சந்திப்பில், “முக்கியமான தமிழ் அக்கறைகள் குறித்து அவர்கள் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர், மேலும் எதிர்பார்ப்புகள் மற்றும் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் குறித்து நாங்கள் விவாதித்தோம்” என்று பிரிட்டிஷ் தூதர் ஆண்ட்ரூ பேட்ரிக் இந்த சந்திப்புபற்றி ட்வீட் செய்துள்ளார்.

ஏகாதிபத்தியம் உலகை மூன்றாம் உலகப் போருக்குள் மூழ்கடித்து வருகிறது. உக்ரேனில் ரஷ்யா மீது போரை நடத்துவது மற்றும் சிரியாவில் ரஷ்யா மற்றும் ஈரானுடனான நேட்டோ பினாமி போரை, சீனாவை இலக்காகக் கொண்ட யூரேசியாவின் ஆதிக்கத்திற்கான உலகளாவிய மோதலாக அதிகரிக்க ஏகாதிபத்தியம் அச்சுறுத்துகிறது. இந்தப் போரில், இலங்கைத் தமிழ் முதலாளித்துவ தேசியவாதிகள், ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிராகவும் குறிப்பாக தொழிலாள வர்க்கத்திற்கு எதிராகவும், ஏகாதிபத்தியத்துடன் கூட்டு வைத்து தங்கள் முதலாளித்துவ நலன்களைப் பாதுகாக்கின்றனர்.

பிப்ரவரி 1, 2023 அன்று, அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நுலாண்ட் இலங்கைக்கு விஜயம் செய்து, இலங்கையில் உள்ள அனைத்து முக்கிய தமிழ் மற்றும் முஸ்லிம் தேசியவாத கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்தார். இந்த சந்திப்பில், சுமந்திரன், பொன்னம்பலம், தமிழ் முற்போக்குக் கூட்டமைப்பின் தலைவர் மனோ கணேசன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதுயிதீன் மற்றும் புளொட் தலைவர் த.சித்தார்த்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான போரின் முக்கிய மூளையாக இருந்து செயற்பட்ட நுலாண்ட், வாஷிங்டனின் உலகளாவிய போர் நிகழ்ச்சி நிரலை ஆக்ரோஷமாக பின்பற்றுவதில் இழிபுகழ் பெற்றவராவர். 2014 ஆம் ஆண்டு, ஜனாதிபதி விக்டர் யானுகோவிச்சின் ரஷ்ய சார்பு உக்ரேனிய அரசாங்கத்தினை கவிழ்ப்பதற்கு, ஸ்வோபோடா போன்ற நவபாசிச சக்திகளுடன் அவர் முக்கிய பங்கு வகித்திருந்தார். ஜூலை 26 அன்று, நைஜரில் முகமது பாஸூமின் நேட்டோ-சார்பு ஆட்சி இராணுவப் புரட்சி மூலம் கவிழ்க்கப்பட்ட பின்பு, ஆகஸ்ட் 7 அன்று அவர் நைஜரில் உள்ள பிரமாண்டமான அகடெஸ் விமான தளத்தில் அமெரிக்க இராணுவ பிரசன்னத்தைத் தொடர்வது குறித்து இராணுவ ஆட்சித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நியாமிக்குச் சென்றார்.

கடந்த ஒரு ஆண்டில் மட்டும், சிரேஷ்ட அமெரிக்க அதிகாரிகள் ஆறு முறை இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர். இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலகளாவிய போர் மூலோபாயத்திற்கு இலங்கை கேந்திர முக்கியமானது என்பதை இந்த விஜயங்கள் எடுத்துக் காட்டுகின்றன. ஏகாதிபத்தியத்துடனான இந்தக் கூட்டணி தமிழ் தேசியவாத அரசியலின் இதயத்தில் இருக்கிறது.

இதன் காரணமாகத்தான், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இருக்கும் தமிழ் தேசியவாத சிந்தனைக் குழுக்களும், புலம்பெயர் நாடுகளில் உள்ள புலிகளுக்கு ஆதரவான பிரிவினைவாதக் குழுக்களும் காஸாவிற்கு எதிரான இனப்படுகொலைப் போர் குறித்து இதுவரை மௌனம் காத்து வருகின்றன. அமெரிக்காவை தளமாக கொண்டுள்ள நாடுகடந்த தமிழீழ அரசு, உலகத் தமிழர் பேரவை, பிரித்தானிய தமிழர் பேரவை, மற்றும் பிரான்ஸ், ஜேர்மனி, கனடா, ஆஸ்திரேலியா உட்பட புலம் பெயர் நாடுகளிலுள்ள தமிழர் பேரவைகள் பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் நடத்தி வருகின்ற இனப்படுகொலை போர் பற்றி வாய் திறக்கவில்லை.

இனப்படுகொலைக்கான வாஷிங்டன் மற்றும் பிற நேட்டோ ஏகாதிபத்திய சக்திகளின் ஆதரவானது, தமிழ் தேசியவாதிகளை முற்றிலும் அம்பலப்படுத்துகிறது. 2009ஆம் ஆண்டு, இறுதி யுத்தத்தில், விடுதலைப் புலிகள் இலங்கை இராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்ட நிலையில், ஏகாதிபத்திய நாடுகளில் இருந்த புலிகளும் அதன் ஆதரவாளர்களும், அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, இங்கிலாந்து பிரதமர் கோர்டன் பிரவுன், ஜேர்மன் அதிபர் ஏஞ்சலா மேர்க்கெல், பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலா சார்கோசி ஆகியோரின் படங்களையும், “எங்களுக்கு உதவுங்கள்” என்ற பதாகைகளையும் கைகளில் ஏந்தியவாறு போராட்டங்களை நடத்தினர். அப்போதிருந்து, ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கையின் போர்க்குற்றங்களை விசாரிக்குமாறு பெரும் வல்லரசுகளுக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம், அவர்கள் தமிழ் மக்களின் நண்பர்களாக தங்களைக் காட்டிக் கொள்ள முற்பட்டனர்.

காஸாவில் நேட்டோவின் ஆதரவுடனான இனப்படுகொலை, 2009 முதல் 14 ஆண்டுகளில், இலங்கையில் ஏகாதிபத்திய சக்திகள் எந்த ஒரு தீவிர விசாரணையையும் மேற்கொள்ளாது விட்டதற்கான அடிப்படைக் காரணத்தை அம்பலப்படுத்துகிறது. நேட்டோ ஏகாதிபத்திய சக்திகள் இலங்கை அதிகாரிகளை பாரிய படுகொலைகளுக்கு பொறுப்பாக்கவில்லை. ஏனெனில், இந்த சக்திகளே பாரிய படுகொலைகளை ஆதரிக்கின்றன. ஆகவே, தமிழ் தேசியவாதத்தின் எதிர்ப்புரட்சிகர அரசியலில் இருந்து ஒரு அரசியல் முறிவின் அவசரத் தேவையின் மிகக் கூர்மையான எச்சரிக்கை இதுவாகும்.

காஸா இனப்படுகொலைக்கு எதிராக பெரும் போராட்ட அலைகள் தற்போது உலகம் முழுவதும் கட்டவிழ்ந்து வருகின்றன. ஏகாதிபத்தியம், இனப்படுகொலை மற்றும் போருக்கு எதிராக ஐக்கியப்பட்ட தொழிலாள வர்க்கப் போராட்டத்திற்கு ஒவ்வொரு நாட்டிலும் ஆதரவைக் கட்டியெழுப்புவதே இந்த இயக்கத்தின் முன்னோக்கிய வழியாகும். பாலஸ்தீனத்தில் அரபு மற்றும் யூத தொழிலாளர்களின் ஒற்றுமைக்காகவும் இலங்கையில் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் தொழிலாளர்களின் ஒற்றுமைக்காகவும் போராடும் சோசலிச சர்வதேசியம் அத்தகைய போராட்டத்தின் இன்றியமையாத அடிப்படையாகும்.

Loading