மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
நவம்பர் 2ம் திகதி, ஐக்கிய வாகன தொழிலாளர்கள் (UAW) சங்கத்தின் தலைவருக்கான சாமானிய தொழிலார்களின் சோசலிச வேட்பாளரான வில் லேமன், இஸ்ரேலிய இராணுவம் பயன்படுத்தும் தளபாட உபகரணங்கள் அல்லது வெடிபொருட்களின் உற்பத்தியை UAW நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து பின்வரும் அறிக்கையை வெளியிட்டுள்ளார். டெட்ராய்டிலுள்ள வெய்ன் மாநில பல்கலைக்கழகத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட பேரணியில் இந்த அறிக்கை வாசிக்கப்பட்டது.
அமெரிக்க அரசாங்கம் மற்றும் இரு முதலாளித்துவ அரசியல் கட்சிகளின் முழு ஆதரவையும் கொண்டுள்ள இஸ்ரேலிய அரசாங்கமானது, பாலஸ்தீன மக்களை தொடர்ந்து படுகொலை செய்து வருவதை நான் ஐயத்திற்கிடமின்றி கண்டிக்கிறேன். நடப்பது ஒரு போர்க் குற்றத்திற்கு சற்றும் குறைந்ததல்ல, அதை தடுக்க தொழிலாள வர்க்கம் விழிப்பூட்டப்பட்டு அணிதிரட்டப்பட வேண்டும்.
இரண்டு வாரங்களுக்கு முன்பு, பாலஸ்தீனிய தொழிற்சங்கங்களின் பொதுக் கூட்டமைப்பு “தொடர்புடைய தொழிற்துறைகளிலுள்ள தொழிற்சங்கங்களுக்கு” ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில், உலகத் தொழிலாளர்களை “இஸ்ரேலுக்கு முடிவுசெய்யப்பட்ட ஆயுதங்களை தயாரிக்க மறுக்க வேண்டும் ... இஸ்ரேலுக்கு ஆயுதங்களை கொண்டு செல்ல மறுப்பது ... இஸ்ரேலின் மிருகத்தனமான மற்றும் சட்டவிரோத முற்றுகையை செயல்படுத்துவதில் ஈடுபட்டு உடந்தையாகவுள்ள நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தது.
இந்த வேண்டுகோளை நான் முழுமையாக ஆமோதிப்பதோடு, இஸ்ரேலிய இராணுவத்திற்கான அனைத்து உபகரணங்களையும் உற்பத்தி செய்வதை நிறுத்துமாறு ஐக்கிய வாகனத் தொழிலாளர்களை கோருகிறேன். இஸ்ரேலுக்கான வெடிபொருட்கள் மற்றும் இராணுவ உபகரணங்களின் உற்பத்தி நிறுத்தப்படும் போது, பாதிக்கப்பட்ட தொழிற்சாலைகளிலுள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் அவர்களின் சம்பளத்தில் 100 சதவீதம் போர்க் குற்றங்களில் ஈடுபட்டவர்களுடனான ஒப்பந்தங்களிலிருந்து இலாபம் அடைந்த பெருநிறுவனங்களால் வழங்கப்பட வேண்டும்.
காஸாவில் நடந்து வரும் இனப்படுகொலை குறித்து முழு UAW உறுப்பினர்களுக்கும் தெரிவிக்க ஒரு ஒருங்கிணைந்த கல்வி நடவடிக்கை தொடங்கப்பட வேண்டும், பாலஸ்தீனத்திலுள்ள நமது சகோதர சகோதரிகளின் வேண்டுகோளுக்கு ஆதரவான தீர்மானங்கள் ஒவ்வொரு கிளைகளிலும் நிறைவேற்றப்பட வேண்டும்.
எவ்வாறெனினும், UAW இன் தலைமையானது, பாலஸ்தீனிய தொழிற்சங்கங்களின் வேண்டுகோளை புறக்கணித்துள்ளது. செப்டம்பரில், UAW தலைவரான ஷோன் ஃபைன் ஜோ பைடெனை மிச்சிகனிலுள்ள வெய்னுக்கு உழைக்கும் மக்களின் நண்பராக காட்டிக் கொள்ள அழைத்தார். ஃபைன் கூறினார்: “பொருளாதார மற்றும் சமூக நீதிக்கான எங்கள் போராட்டத்தில் தொழிலாளர்களுடன் நிற்க எங்கள் ஜனாதிபதி தேர்வு செய்துள்ளார் ... நன்றி திருவாளர் ஜனாதிபதி அவர்களே.”
பைடென் தொழிலாளர்களுக்கு ஆதரவாக நிற்கவில்லை, நெதன்யாகு மற்றும் இஸ்ரேலிய இராணுவம் பொதுமக்களை படுகொலை செய்து மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகள் மீது குண்டு வீசும் போது அவர் அவர்களுடன் நிற்கிறார். ஏகாதிபத்திய போரை நிறுத்தப்போவது ஜனநாயகக் கட்சியோ அல்லது தொழிற்சங்க அதிகாரத்துவமோ அல்ல. சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான மற்றும் ஐக்கியப்பட்ட முன்முயற்சியின் மூலம் மட்டுமே போர் நிறுத்தப்படும். அதற்காகத்தான் நாம் போராடுகின்றோம்.