மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
கடந்த சனிக்கிழமையன்று தனது சமூக ஊடக தளத்தில் வெளியிட்ட ஒரு அறிக்கையிலும், பின்னர் அன்று மாலை நியூ ஹாம்ப்ஷயரில் நடந்த ஒரு பிரச்சார கூட்ட உரையிலும், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், வெள்ளை மாளிகைக்குத் திரும்பினால், “ஜந்துக்களைப் போல வாழும் தீவிர இடதுசாரி குண்டர்களைக்” கண்டித்து, தனது அரசியல் எதிரிகளை சிறையில் அடைப்போம் அல்லது கொன்றுவிடுவோம் என்று மிகத் தெளிவான மிரட்டலை விடுத்தார்.
ஏறக்குறைய இரண்டு மணிநேர அவரது உரையின் இறுதி வார்த்தைகளில், டிரம்ப் கூறினார்: “நமது நாட்டின் எல்லைக்குள் ஜந்துக்களைப் போல பொய் சொல்லும் கம்யூனிஸ்டுகள், மார்க்சிஸ்டுகள், பாசிஸ்டுகள் மற்றும் தீவிர இடதுசாரி குண்டர்களை வேரறுப்போம் என்று உறுதியளிக்கிறோம். தேர்தலில் திருடுவதும் ஏமாற்றுவதும். அமெரிக்காவையும் அமெரிக்காவின் கனவையும் அழிக்க அவர்கள் சட்டப்பூர்வமாகவோ அல்லது சட்டவிரோதமாகவோ எதையும் செய்வார்கள்”.
அமெரிக்க முதலாளித்துவ வர்க்கத்தின் மிகவும் ஆபத்தான எதிரி அமெரிக்காவிற்குள்ளேயே இருக்கிறார், வெளியில் இல்லை என்ற உண்மையான அச்சத்தை ட்ரம்ப் வெளிப்படுத்தினார். “உண்மையான அச்சுறுத்தல் தீவிர வலதுசாரிகளிடம் இருந்து வரவில்லை, உண்மையான அச்சுறுத்தல் தீவிர இடதுசாரிகளிடம் இருந்து வருகிறது, அது ஒவ்வொரு நாளும் வளர்ந்து வருகிறது, வெளிப்புற சக்திகளின் அச்சுறுத்தல் உள்ளிருந்து வரும் அச்சுறுத்தலை விட மிகவும் குறைந்த ஆபத்தானது. எங்களுக்கு அச்சுறுத்தல்கள் உள்ளிருந்து வருகிறது” என்று ட்ரம்ப் குறிப்பிட்டார்.
உண்மை என்னவென்றால், ஒரு முன்னாள் ஜனாதிபதி மற்றும் தற்போதைய முன்னணி குடியரசுக் கட்சியின் முதன்மையாக உள்ள ஒரு நபரான டிரம்ப், ஜனாதிபதி சர்வாதிகாரத்தை நிறுவுவதற்கான தனது விருப்பத்தை பகிரங்கமாக அறிவித்திருப்பதை, தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் ஒரு எச்சரிக்கையாக பார்க்க வேண்டும். வளர்ந்து வரும் வேலைநிறுத்த அலை மற்றும் பாரிய போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை எதிர்கொள்ளும் அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் பிரிவுகள், ஒரு பாசிச சர்வாதிகாரத்தை உருவாக்குவதற்கு ஆதரவாக உள்ளன.
முன்னாள் படையினர் தின உரையின்போது, மீண்டும் ஆட்சிக்கு வந்தால் எதிரிகளை அழித்துவிடுவேன் என்று மிரட்டும் வகையில் ஹிட்லர் மொழியை ட்ரம்ப் மிகவும் வெளிப்படையாகப் பயன்படுத்தினார். 1930களின் பாசிசத் தலைவர்களின் பேச்சுக்களுக்கும், ட்ரம்ப்பினுடைய தற்போதைய பேச்சுக்களுக்கும் இடையே உள்ள ஒற்றுமைகளை காப்ரேட் பத்திரிகைகளில் வந்த தொடர்ச்சியான கருத்துக்கள் எடுத்துக்காட்டுகின்றன. வாஷிங்டன் போஸ்ட்டின் ஒரு பத்தியில், ஹிட்லரின் எனது போராட்டம் (Mein Kampf) என்ற புத்தகம் மற்றும் ட்ரம்பின் சமீபத்திய உரைகளில், எதிரிகளை “ஜந்துக்கள்” என வர்ணிப்பது, இலக்கு வைக்கப்பட்ட குழு (ஹிட்லருக்கு யூதர்கள், ட்ரம்பிற்கு குடிபெயர்ந்தவர்கள்) தேசத்தின் “இரத்தத்தை விஷமாக்குவது” மற்றும் தேசத்தின் மிகவும் ஆபத்தான எதிரி என்று எச்சரிப்பது உட்பட அவற்றின் இணையான பகுதிகளை மேற்கோள் காட்டியுள்ளது. மற்றும் தேசத்தின் மிக ஆபத்தான எதிரி சோசலிச மற்றும் கம்யூனிச இடதுகளில்தான் இருக்கிறது, வெளியில் இல்லை என்று எச்சரித்தார்.
எவ்வாறாயினும், இந்தக் கருத்துக்களை மற்றும் ஹிட்லரின் உரைகளை டிரம்ப் மீண்டும் கிளிப்பிள்ளைபோல் சொல்வது தற்செயல் நிகழ்வு அல்ல, ஆனால் அது நனவானது மற்றும் வேண்டுமென்றே கூறப்படுகிறது. டிரம்ப் 20 ஆம் நூற்றாண்டின் மிகவும் கொடூரமான ஒரு கதாபாத்திரத்தின் நீண்டகால அபிமானியாவர். ஹிட்லரின் உரைகள் அடங்கிய புத்தகத்தை டிரம்ப் தனது படுக்கைக்கு அருகில் வைத்திருந்ததாக அவரது முன்னாள் மனைவிகளில் ஒருவர் வாழ்க்கை வரலாற்றாசிரியரிடம் கூறினார். அவரது தந்தை பிரெட் KKK அமைப்பை (Ku Klux Klan-இது அமெரிக்காவில் இருந்த ஒரு வெள்ளை மேலாதிக்க பயங்கரவாத ரகசிய அமைப்பாகும்) சேர்ந்தவர் மற்றும் அவரது நாஜி அனுதாபங்களுக்காக அறியப்பட்டார். அவர் தனது மகனுக்கு (டிரம்ப்) ஒரு பில்லியன் டாலர்களை வழங்கினார்.
டிரம்ப், இதுபோன்ற கருத்துக்களை கடந்த சனிக்கிழமை மட்டும் தெரிவிக்கவில்லை. 2019 அக்டோபரில் மினசோட்டாவில் பெருமளவிலான பொலிசாரைக் கொண்ட பார்வையாளர்களிடம் அவர் ஆற்றிய உரையின் போது, அவர் தனது அரசியல் எதிரிகள் தேசத்துரோக குற்றவாளிகள் என்று அறிவித்தார், உள்நாட்டுப் போருக்கு அச்சுறுத்தினார், மேலும் 16 ஆண்டுகள் பதவியில் இருப்பேன் என்று பெருமையடித்துக் கொண்டார்.
2020 முழுவதும், மே 25 அன்று மினியாபோலிஸில் ஜோர்ஜ் பிலாய்ட் பொலிசாரால் கொல்லப்பட்டதற்கு எதிரான வெகுஜன எதிர்ப்புகளுக்கு பதிலளிக்கும் விதமாக, முதலில் அமெரிக்க மக்களுக்கு எதிராக ஒரு இராணுவ போலீஸ் சதியை நடத்த டிரம்ப் ஒரு சாக்குப்போக்கு தேடினார். அது, ஜனாதிபதித் தேர்தலில் அவர் தோல்வியடைவதற்கான சாத்தியக்கூறுகளையும், வாக்கெடுப்பின் முடிவையும் மாற்றியமைத்தன. தேர்தலுக்குப் பிறகு, இராணுவச் சட்டத்தை அறிவிக்க, கிளர்ச்சிச் சட்டத்தைப் பயன்படுத்தத் தயங்கிய பாதுகாப்புச் செயலாளரை, ட்ரம்ப் பதவி நீக்கம் செய்து, பென்டகனில் தனது விசுவாசிகளை நிறுவினார். அதிகாரத்தில் நீடிப்பதற்கான அவரது முயற்சிகள் ஜனவரி 6, 2021 அன்று கேபிடல் மீதான பாசிச தாக்குதலில் உச்சத்தை அடைந்தது, இது துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் அல்லது சபாநாயகர் நான்சி பெலோசியைக் கைப்பற்றுவதில் தோல்வியடைந்தது மற்றும் பைடெனுக்கு அதிகாரத்தை மாற்றுவதை சீர்குலைத்தது.
இந்த உண்மைகள் அனைத்தும் வாஷிங்டனில் உள்ள உத்தியோகபூர்வ நிர்வாகத்தில் நன்கு அறியப்பட்டவையாகும், மற்றும் சில நேரங்களில் முக்கிய ஊடகங்களில் இதுபற்றி கருத்து தெரிவிக்கப்படுகின்றன. ஆனால், இந்த விவாதங்களில் இருந்து முற்றிலும் விலக்கப்பட்டுள்ள மிக அடிப்படையான கேள்வி: டிரம்ப் போன்ற ஒரு பாசிச பிரமுகர் அரசியல் தளத்தில் இவ்வளவு முக்கிய பங்கு வகிக்கிறார் என்பது 2023 அமெரிக்காவைப் பற்றி என்ன சொல்கிறது? மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ஆட்சியில் நீடிப்பதற்காக அரசியலமைப்பை தூக்கியெறிய முற்பட்ட ஒரு முன்னாள் ஜனாதிபதி, குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருக்கான முன்னணி வேட்பாளராக இருந்து, 2024 தேர்தலில் தற்போது ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி ஜோ பைடெனை தோற்கடிக்க பல கருத்துக் கணிப்புகளில் சாதகமாக இருப்பது எப்படி சாத்தியமானது? அதுவும் ஒரு வருடத்திற்குள்?
இந்த நிலைமைக்கான முக்கியப் பொறுப்பு, ஜனநாயகக் கட்சி மற்றும் பைடெனையே சாரும். பைடென் நிர்வாகத்தின் மையக் குறிக்கோளுக்கு இரு கட்சிகளின் ஆதரவைப் பெறுவதற்காக, கடந்த மூன்று ஆண்டுகளாக குடியரசுக் கட்சிக்கு அவர்கள் சலுகைக்கு பின் சலுகை அளித்துள்ளனர்: அந்த குறிக்கோள், மனிதகுலத்தை மூன்றாம் உலகப் போரின் விளிம்பிற்கு கொண்டு வந்துள்ள இராணுவ ஆக்கிரமிப்பு திட்டத்தை தயாரித்து செயல்படுத்துவதாகும்.
ஜனாதிபதி பைடெனின் மிக முக்கியமான முடிவு அவர் வெள்ளை மாளிகையில் நுழைந்த சில நாட்களுக்குப் பிறகு வந்தது: ஜனவரி 6 அரசியல் சதி முயற்சி அல்லது ஜனநாயக உரிமைகள் மீதான பரந்த தாக்குதலுக்கு டிரம்ப் மற்றும் குடியரசுக் கட்சியினரை பொறுப்பாக்க எந்த தீவிர முயற்சியும் எடுக்கப்படவில்லை. அத்துடன், குடியரசுக் கட்சி பெருகிய முறையில் பாசிச அமைப்பாக மாறுவது பொறுத்துக் கொள்ளப்பட்டதுடன் அதற்கு இடமளிக்கப்பட்டது.
காங்கிரஸில் உள்ள மூன்றில் இரண்டு பங்கு குடியரசுக் கட்சியினர் பைடெனை 2020 தேர்தலில் வெற்றி பெற்றவர் என்று சான்றளிக்க வேண்டாம் என்று வாக்களித்தனர். சில மணிநேரங்களுக்குப் பிறகு டிரம்ப்பினால் ஈர்க்கப்பட்ட கும்பல் கேபிடல் பகுதியில் இருந்து கலைக்கப்பட்டது. ஆயினும், 2014 மைடான் சதியில், நேட்டோ சார்பு பாசிச அனுதாபிகளின் குண்டர்கள் உக்ரேனில் அதிகாரத்தைக் கைப்பற்றியதில் இருந்து, ஜனநாயகக் கட்சியின் மையப் புள்ளியாக இருக்கும் ரஷ்ய எதிர்ப்புக் கொள்கையை அவர்கள் ஆதரித்தால் மட்டுமே, உள்நாட்டுக் கொள்கையில் சலுகைகள் மூலம் காங்கிரஸில் குடியரசுக் கட்சியினருடன் உடன்பாட்டை எட்டுவதற்கு பைடென் முடிவில்லாமல் முயன்றார்.
அமெரிக்க ஆதரவுடன் நேட்டோவை ரஷ்யாவின் எல்லைகளுக்கு விரிவாக்கி, இறுதியாக 2022 இல் உக்ரேனில் புட்டினின் பிற்போக்குத்தனமான படையெடுப்பைத் தூண்டுவதில் அது வெற்றி பெற்றது. இது தற்போதைய இராணுவ முட்டுக்கட்டைக்கு வழிவகுத்தது. இஸ்ரேலுக்கும் காஸாவிற்கும் இடையே போர் வெடித்திருப்பது, அமெரிக்க இராணுவவாதத்தை மேலும் தீவிரப்படுத்துவதற்கான சாக்குப்போக்காக மாறியுள்ளது. இந்த முறை ஈரான் மற்றும் அதன் நட்பு நாடுகளான சிரியா, ஹூதிகள் உள்ள யேமன், மற்றும் ஹிஸ்புல்லா இருக்கும் லெபனான் உள்ளிட்ட நாடுகளுக்கு எதிராக இயக்கப்பட்டுள்ளது. ஒரு பிராந்திய போர் உருவாகிறது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இறுதி இலக்கு சீனாவாகும். உக்ரேன் மற்றும் காஸாவில் நடக்கும் போர்கள், மனித உயிர்வாழ்க்கைக்கு அச்சுறுத்தலாக இருக்கும் இன்னும் பயங்கரமான அமெரிக்க சீனப் போருக்கான கட்டுமானத் தொகுதிகள் மட்டுமே ஆகும்.
ட்ரம்ப் சர்வாதிகாரத்திற்கான தனது முயற்சியில் குறிப்பாக முரட்டுத்தனமானவர். ஆனால், இது வர்க்க அரசியல், தனிப்பட்ட அரசியல் அல்ல. உரத்த குரலில் பேசும் இந்த பில்லியனர், ஜனநாயகக் கட்சியின் மூலமாகவும் வெளிப்படும் ஆழமான போக்குகளுக்கு மட்டுமே குரல் கொடுக்கிறார். போரை நோக்கிய உந்துதலுக்கு, உள்நாட்டில் ஜனநாயக உரிமைகளை நசுக்குவதும், தொழிலாள வர்க்கத்தின் மீது போர்ச் செலவுகளை சுமத்துவதும் தேவைப்படுகிறது.
பைடென் நிர்வாகமும் ஜனநாயகக் கட்சியினரும் தற்போது இஸ்ரேலிய அரசாங்கத்தின் மீதான எந்தவொரு விமர்சனத்தையும் யூத-விரோதக் கொள்கை என்று கண்டித்து, அதைத் தடை செய்யக் கோருகின்றனர். யூத-எதிர்ப்பு குற்றச்சாட்டு முற்றிலும் போலியானது மற்றும் அரசியல் மறைப்பாக செயல்படுகிறது. இத்தகைய வாதங்களின் உண்மையான அர்த்தம், அமெரிக்க அரசின் வெளியுறவுக் கொள்கையை விமர்சிக்கும் அமெரிக்க மக்களின் ஜனநாயக உரிமையைத் தாக்குவதாகும். போர்க்கால விமர்சனங்கள் தேசத் துரோகம் என்றும் குற்றம் சாட்டப்படும்.
இறுதிப் பகுப்பாய்வில், அமெரிக்க ஆளும் வர்க்கம், பெஞ்சமின் நெதன்யாகு தற்போது காஸாவில் கையாண்டு வரும் வழிமுறைகளைக் கொண்டு அதன் மிக சக்திவாய்ந்த உள்நாட்டு எதிரியை (தொழிலாள வர்க்கம்) எதிர்கொள்ள முற்படும். உள்நாட்டு அடக்குமுறையில் பொலிஸ் மற்றும் இராணுவத்தின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த 'சிவப்பு கோடுகள்' இருக்காது. ஜனநாயகக் கட்சியானது, ட்ரம்புக்கு உண்மையான எதிர்ப்பை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. ஆனால், சர்வாதிகார ஆட்சி மற்றும் ஜனநாயக உரிமைகளை வன்முறையாக ஒடுக்குதல் என்ற ஒரே இலக்கை நோக்கிய, இரு வேறு பாதைகள் மட்டுமே இரு கட்சிக்குமான வேறுபாடாகும்.
தற்போதைக்கு, முதலாளித்துவ ஆளும் உயரடுக்கின் நலன்களைப் பாதுகாக்கப் பயன்படுத்தப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து பைடெனுக்கும் டிரம்புக்கும் இடையே வேறுபாடுகள் உள்ளன. இரத்தம் தோய்ந்த மட்டங்களில், உடனடியாக பலாத்காரத்தை பயன்படுத்துவதை டிரம்ப் ஆதரிக்கிறார். பைடென் ஒரு பாதுகாப்பான பாதையாக, வர்க்கப் போராட்டத்தை அடக்குவதற்கும் ஒடுக்குவதற்கும் தொழிற்சங்கங்களை நம்பியிருப்பதையும், தொழிலாள வர்க்கத்தை ஜனநாயகக் கட்சியுடனும், முதலாளித்துவத்துவ அமைப்பு முறையுடனும் அரசியல் ரீதியாக பிணைக்க, பேர்னி சாண்டர்ஸ் மற்றும் அலெக்ஸாண்டிரியா ஒகாசியோ-கோர்டெஸ் போன்ற 'இடதுகளின்' பாதுகாப்பு வழிகளை நம்பியிருக்க வேண்டும் என்று வாதிடுகிறார்.
ஆனால், வர்க்கப் போராட்டத்தை கட்டுப்படுத்தும் மற்றும் திசைதிருப்பும் இந்தக் கருவிகள் பெருகிய முறையில் மதிப்பிழந்து வருகின்றன. ஒப்பந்தங்களை நிராகரிப்பதன் மூலமும் வேலைநிறுத்தங்களை கட்டாயப்படுத்துவதன் மூலமும் தொழிலாளர்கள், தொழிற்சங்கங்களை மீறி வருகின்றனர். உலக ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் முன்முயற்சியின் பேரில் உருவாக்கப்பட்ட சாமானிய தொழிலாளர்களின் சர்வதேச கூட்டணி (IWA-RFC) வழங்கி வருகின்ற தலைமையைத் தொடர்ந்து தொழிலாளர்கள் சுயாதீனமாக ஒழுங்கமைக்கத் தொடங்கியுள்ளனர்.
ஜனநாயகக் கட்சி, 80 வயதில் பதவியில் இருக்கும் பரவலாக வெறுக்கப்படும் ஒருவருடன் ஜனாதிபதித் தேர்தல் ஆண்டில் நுழைகிறது. அவரது தனிப்பட்ட நலிவு, ஒட்டுமொத்தமாக இரு கட்சி முதலாளித்துவ அமைப்பின் நிலையையும், குறிப்பாக ஜனநாயகக் கட்சியினரின் சீர்திருத்தவாத பாசாங்குகளையும் பிரதிபலிக்கிறது. தேர்தலில், பைடென்-ட்ரம்ப் மறுபோட்டியின் வாய்ப்பை கடும் வெறுப்புடன் பார்க்கும் மில்லியன் கணக்கான உழைக்கும் மக்களும் இளைஞர்களும், சோசலிச சமத்துவக் கட்சியால் வழங்கப்படும் உண்மையான மாற்றீட்டை விரும்புகிறார்கள்.