மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
காஸாவில் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இஸ்ரேலிய ஆட்சி மேற்கொண்டுவரும் இனப்படுகொலையில், 20,000 க்கும் மேற்பட்ட மக்களின் உயிர்கள் பலிவாங்கப்பட்டுள்ளதுடன், குறைந்தபட்சம் 85 சதவீதமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறத் தள்ளப்பட்டனர். இரண்டு மாதங்களுக்கும் மேலான நீண்ட தாக்குதல் காலம் முழுவதும், பாலஸ்தீனிய ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை கண்மூடித்தனமாக படுகொலை செய்ய இஸ்ரேல் பயன்படுத்திவரும் ஆயுதங்களை வழங்குவதன் மூலம், அமெரிக்க ஏகாதிபத்தியம் தீவிர வலதுசாரி நெதன்யாகு அரசாங்கத்தை இறுதிவரை ஆதரித்து வருகிறது.
சியோனிச அரசு அதன் ஏகாதிபத்திய ஆதரவாளர்களின் முழு ஆதரவுடன் தினசரி நடத்தும் கொடூரமான போர்க்குற்றங்கள் உலகம் முழுவதும் சீற்றத்தைத் தூண்டியுள்ளது. காஸா இனப்படுகொலையை கண்டித்து மக்கள் வசிக்கும் ஒவ்வொரு கண்டத்திலும் லட்சக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டங்கள் இந்தியாவிலும் நடந்துள்ளன, அங்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது இந்து மேலாதிக்க பாஜக அரசாங்கம் இஸ்ரேலுக்கு முழு ஆதரவை வழங்கியுள்ளன.
இந்தியாவின் முக்கிய ஸ்ராலினிச நாடாளுமன்றக் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அல்லது CPM மற்றும் அதன் இடது முன்னணி ஆகியவை காஸா போருக்கு எதிரான போராட்டங்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. நவம்பர் முதல் வாரத்தில் தொடங்கி, ஸ்ராலினிச தலைமையிலான இடது முன்னணி, தெற்கில் கேரளாவில் கோழிக்கோடு மற்றும் கிழக்கில் மேற்கு வங்கத்தில் கொல்கத்தா உள்ளிட்ட பல நகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகளை நடத்தின.
பல தசாப்த காலமாக, இந்திய ஸ்தாபனத்தின் “இடது” பக்க பாத்திரத்தை ஆற்றிவரும் இந்திய ஸ்ராலினிஸ்டுகள், முதலாளித்துவ அரசியலின் பிற்போக்கு கட்டமைப்பு மற்றும் பெரும் வல்லரசு இராஜதந்திரத்திற்குள், காஸாவில் வறிய பாலஸ்தீனியர்கள் படுகொலை செய்யப்படுவது குறித்த தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்ப்பை மட்டுப்படுத்த முயற்சிக்கின்றனர்.
அவர்கள் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக முழக்கங்களை எழுப்பும் அதே வேளையில், அவர்கள் ஏகாதிபத்திய உலக ஒழுங்கிற்கு எதிராக ஒரு பூகோளரீதியான தொழிலாள வர்க்கத்தின் தலைமையில் போர்-எதிர்ப்பு இயக்கத்தை கட்டியெழுப்புவதை விடாப்பிடியாக எதிர்க்கின்றனர்.
அவர்கள் இஸ்ரேலுக்கான இந்திய அரசாங்கத்தின் ஆதரவைத் திரும்பப் பெறும்படி அழுத்தம் கொடுக்க முற்படுகின்றனர், மேலும் காஸாவில் இனப்படுகொலையை ஆதரிக்கும் அதே ஏகாதிபத்திய சக்திகள் மேலாதிக்கம் செலுத்தும் ஒரு அமைப்பான ஐ.நா.வுக்கு அழைப்பு விடுக்கின்றனர். ஐ.நா.வின் முன்னோடியான தேசங்களின் கழகத்தை, லெனின் “திருடர்களின் சமையலறை” என்று முத்திரை குத்தினார். மற்றும் மத்திய கிழக்கில் “அமைதியை” பாதுகாக்க “இரண்டு-அரசுகளின் தீர்வை” அமல்படுத்த வேண்டும் என்று இந்திய ஸ்ராலினிஸ்டுகள் கூறுகின்றனர்.
இந்திய-அமெரிக்க கூட்டணி மற்றும் “சுயாதீன வெளியுறவுக் கொள்கை” மற்றும் “பன்முனை உலகம்” ஆகியவற்றுக்கு CPM இன் அறைகூவல்
நவம்பர் 8 அன்று கொல்கத்தாவில் நடைபெற்ற இடது முன்னணியின் எதிர்ப்புப் பேரணியில், ஸ்ராலினிஸ்டுகள் மோடி அரசாங்கம் “ஏகாதிபத்தியத்தின் கூட்டாளிகளாக இருப்பதை நிறுத்திவிட்டு முன்பு போல் ஒரு சுயாதீனமான வெளியுறவுக் கொள்கையை பின்பற்ற வேண்டும்” என்று அழைப்பு விடுத்தனர். இது இந்தியாவின் கெடுபிடி போர் காலத்தின் “அணி சேரா” கொள்கை பற்றிய குறிப்பாகும். இதில் புது டெல்லி சோவியத் ஒன்றியத்திற்கும் அமெரிக்காவிற்கும் மற்ற ஏகாதிபத்திய சக்திகளுக்கும் இடையில் தந்திரங்களை கையாண்டது. சோவியத் ஸ்ராலினிச அதிகாரத்துவம் முதலாளித்துவ மீட்சி மற்றும் சோவியத் ஒன்றியத்தைக் கலைப்பதில் ஈடுபட்டபோது, 1991ல் இந்தக் கொள்கையுடன் சேர்ந்து இந்திய முதலாளித்துவம் அதன் தோல்வி அடைந்த அரசினால் வழி நடத்தப்பட்ட முதலாளித்துவ மேம்பாட்டுத் திட்டத்தையும் குப்பை தொட்டியில் வீசியது.
கடந்த மூன்று தசாப்தங்களாக, இந்திய முதலாளித்துவம் இந்தியாவை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நெருங்கிய இராணுவ-மூலோபாய நட்பு நாடாக மாற்றி, ஏகாதிபத்தியம் மேலாதிக்கம் செய்யும் உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவை ஒருங்கிணைத்து, அதன் தொழிலாளர்கள், கிராமப்புற உழைப்பாளிகள் மற்றும் வளங்களைச் பூகோள மூலதனத்தின் பயன்பாட்டுக்காக திறந்து விடுவதன் மூலம் தன்னை வளப்படுத்திக் கொள்ள முயன்றது.
காஸா இனப்படுகொலைக்கு எதிரான போராட்டங்களுக்கு அழைப்பு விடுக்கும் இடது முன்னணியின் அறிக்கையானது, “பாலஸ்தீனியர்கள் மீதான அமெரிக்க-இஸ்ரேல் இனப்படுகொலைக்கு ஒப்புதல் அளிப்பதை மோடி அரசாங்கம் நிறுத்த வேண்டும் மற்றும் உடனடி போர்நிறுத்தத்திற்கான பூகோளரீதியான அறைகூவலுடன் ஒன்று சேர வேண்டும்” என்று அழைப்பு விடுத்தது.
பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இஸ்ரேலின் போருக்கு தங்கள் முழு ஆதரவை வெளிப்படுத்திய முதல் உலகத் தலைவர்களில் ஒருவராக மோடி இருந்த சூழ்நிலையில், இந்த வேண்டுகோள் இடது முன்னணியினால் விடுக்கப்பட்டுள்ளது. உலக சோசலிச வலைத் தளம் முன்பு விளக்கியது போல், மோடி அரசாங்கத்தின் இஸ்ரேலுக்கான உறுதியான ஆதரவு என்பது, அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனான இந்திய முதலாளித்துவத்தின் கூட்டணியில் இருந்து எழுகிறது. இது புது டெல்லியின் வாஷிங்டனுடனான பூகோளரீதியான மூலோபாய கூட்டு உறவில் குறியிடப்பட்டுள்ளது. ஜோர்ஜ் டபிள்யூ. புஷ்ஷின் நிர்வாகம் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் போரை நடத்திக் கொண்டிருந்த போது காங்கிரஸ் கட்சி தலைமையிலான UPA அரசாங்கத்திற்கும் புஷ்ஷின் நிர்வாகத்திற்கும் இடையே உருவாக்கப்பட்ட இந்திய-அமெரிக்க கூட்டணியானது, மோடியின் தசாப்த கால ஆட்சியில் பலமுறை மேம்படுத்தப்பட்டு விரிவாக்கப்பட்டது. இதன் விளைவாக, பெய்ஜிங்கிற்கு எதிரான வாஷிங்டனின் அனைத்துப் பக்க மூலோபாயத் தாக்குதல் மற்றும் சீனாவுடனான போருக்கான திட்டங்களில் இந்தியா ஒரு முன்னரங்க நாடாக மாற்றப்பட்டுள்ளது.
கிழக்கு ஐரோப்பாவில் ரஷ்யா, மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் ஆசியா-பசிபிக் பகுதியில் சீனாவுக்கு எதிராக, பெருகிய முறையில் வளர்ந்து வரும் மூன்றாம் உலகப் போராக அமெரிக்க ஏகாதிபத்தியம் முன்னெடுத்துச் செல்வதற்கு இந்தியாவுடனான அதன் கூட்டணி முக்கியமானது என்று வாஷிங்டன் கருதுகிறது.
இஸ்ரேலிய இனப்படுகொலைக்கு, இந்திய ஆளும் உயரடுக்கின் ஆதரவை இந்தப் பின்னணியில் பார்க்க வேண்டும். அது, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதரவை அதன் சொந்த கொள்ளையடிக்கும் பெரும்- வல்லரசாகும் இலட்சியங்களை முன்னெடுத்துச் செல்வதற்கும் இந்தியாவை சீனாவிற்கு மாற்றாக ஒரு மலிவு-தொழிலாளர் உற்பத்தி சங்கிலி மையமாக மாற்றுவதற்கும் முக்கியமானதாகக் கருதுகிறது.
இந்திய முதலாளித்துவம் ஒரு “சுயாதீனமான” வெளியுறவுக் கொள்கையைத் தொடர வேண்டும் என்ற அவர்களின் அழைப்பைப் புதுப்பித்து, அமெரிக்காவின் மேலாதிக்கம் கொண்ட “ஒற்றை முனை” அமைப்புக்கு எதிராக “பல்முனை உலகம்”, ஒரு முற்போக்கான மாற்றாக அமையும் என்றும் மேலும் இந்தியாவின் முதலாளித்துவ அரசாங்கத்தை உலக விவகாரங்களில் அதிக செல்வாக்கு செலுத்தக்கூடியதாக மாற்றியமைக்கும் என்றும் ஸ்ராலினிஸ்டுகள் கட்டற்ற கற்பனையை ஊக்குவிக்கின்றனர். இந்த நோக்கத்திற்காக, ஸ்ராலினிஸ்டுகள் இந்திய முதலாளித்துவ வர்க்கத்தை ஐரோப்பிய ஏகாதிபத்தியங்கள், ரஷ்யா மற்றும் சீனாவில் உள்ள முதலாளித்துவ-மீட்சிக்கான ஆட்சிகள் மற்றும் பிற BRICS நாடுகளுடன் அதன் உறவுகளை வலுப்படுத்தும்படி வலியுறுத்துகின்றனர்.
அவர்கள் மார்க்சிசம் ஒலிக்கும் வாய்வீச்சுக்களை பயன்படுத்தும் அதே வேளையில், CPM தலைவர்கள் சமூகப் புரட்சிக்கு விரோதமானவர்களாக இருக்கின்றனர் மற்றும் தொழிலாள வர்க்கத்தை முதலாளித்துவத்தின் அடிமைப்பிடியில் வைத்திருப்பதில் உறுதியாக உள்ளனர். “சர்வதேச உறவுகளில்” அதிக சமநிலை இருந்தால் மட்டுமே அது மேலும் சமூக முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளை வழங்க முடியும் என்று அவர்கள் கூறுகின்றனர்.
ஸ்ராலினிஸ்டுகளைப் பொறுத்தவரை, காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல் மற்றும் ரஷ்யா மீதான அமெரிக்க-நேட்டோவினால் தூண்டப்பட்ட போர் ஆகியவை, கடந்த நூற்றாண்டின் இரண்டு உலகப் போர்களைப் போலவே, முதலாளித்துவத்தின் அடிப்படை முரண்பாடுகளில் வேரூன்றியிருக்கும் வேகமாக வளரும் உலகப் போரின் ஒரு பகுதி அல்ல. இந்த அமைப்புமுறையின் நெருக்கடிக்கு ஒரே முற்போக்கான தீர்வு, இலாப முறை மற்றும் அது வரலாற்று ரீதியாக வேரூன்றியிருக்கும் போட்டி முதலாளித்துவ தேசிய அரசுகளின் காலாவதியான அமைப்புமுறைக்கு முடிவுகட்ட தொழிலாள வர்க்கத்தை சர்வதேச அளவில் அணிதிரட்ட வேண்டும்.
மாறாக, கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி மற்றும் அவரது முன்னோடியான பிரகாஷ் காரத் ஆகியோரின் கூற்றுப்படி, இந்தப் போர்கள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மிகையான வெறித்தனத்தின் விளைபொருள், ஆகவே, இவை மறுசீரமைக்கப்பட்ட உலக முதலாளித்துவ அரசுகளுக்கு இடையேயான அமைப்புமுறைக்குள் நன்றாக கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பதாகும்.
உலக விவகாரங்களில் ஒரு “முற்போக்கான” பாத்திரத்தை தொடர புது தில்லி “சுயாதீனமான வெளியுறவுக் கொள்கையை” ஏற்குமாறு அழுத்தம் கொடுக்கின்ற இந்திய ஸ்ராலினிஸ்டுகளின் முன்னோக்கு என்னவென்றால், இந்திய அரசு குறையுள்ளதாக இருந்தாலும் கூட, அது இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதியில் தெற்காசியாவை அதிர வைத்த வெகுஜன ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தின் விளைவாகும் அல்லது அதிலிருந்து அவதாரத்தை எடுத்தது என்பதாகும். உண்மையில், “சுதந்திர இந்தியா” என்பது தொழிலாள வர்க்கம் மற்றும் கிராமப்புற வெகுஜனங்களின் ஜனநாயக மற்றும் சமூக முயற்சிகளை ஒடுக்கியதன் விளைவாகத் தோன்றியது. வளர்ந்து வரும் புரட்சிகர புயலுக்கு அஞ்சி, காந்தி-நேரு தலைமையிலான இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டது, அதன் மூலம் தெற்காசியாவை வகுப்புவாத அடிப்படையில் பிரித்து, பெரும்பான்மை இந்துக்கள் வாழும் இந்தியா மற்றும் வெளிப்படையான முஸ்லீம் பாகிஸ்தானாக பிரித்தது, மற்றும் இந்திய முதலாளித்துவம் காலனித்துவ அரசு எந்திரத்தை கைப்பற்றியதுடன், வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு மூலதனத்தை பாதுகாப்பதற்கான நேரடி பொறுப்பை எடுத்துக் கொண்டது.
இந்திய ஸ்ராலினிஸ்டுகளினால் ஊக்குவிக்கப்பட்ட பிற்போக்குத்தனமான, ஏகாதிபத்தியத்தால் ஊக்குவிக்கப்பட்ட “இரு அரசுத் தீர்வு”
ஏகாதிபத்திய ஆதரவுடன் படுகொலை நடப்பது மற்றும் பாலஸ்தீனியர்கள் தொடர்ந்து வெளியேற்றப்படுவதற்கு எதிரான பூகோளரீதியான இயக்கத்தை திசைதிருப்பும் சிபிஎம் இன் முயற்சியானது, ஐ.நா, மோடி அரசாங்கம் மற்றும் மேற்கத்திய சக்திகளுக்கு அழுத்தம் கொடுப்பதற்கான பயனற்ற மற்றும் பிற்போக்கு முயற்சிகளை கொண்டிருக்கிறது. இந்திய முதலாளித்துவம் மற்றும் அதன் அரசுக்கு பல தசாப்தங்களாக, தொழிலாள வர்க்கத்தை காங்கிரஸ் கட்சி தலைமையிலான அரசாங்கங்களுடன், மற்றும் பல்வேறு பிராந்திய முதலாளித்துவக் கட்சிகளுடன் பிணைத்து, அவை வலது, இந்து மேலாதிக்க பா.ஜ.க.வுக்கு ஒரு “மதச்சார்பற்ற” மாற்றீடாக உள்ளன என்ற அடிப்படையில் சிபிஎம் ஆதரவளித்து வந்துள்ளது. காங்கிரஸ் கட்சி ஒரு தசாப்தத்திற்கு முன்பு வரை முதலாளித்துவத்தின் விருப்பமான தேசிய அரசாங்க கட்சியாக இருந்துள்ளது. உண்மையில், அதிகாரத்தில் இருக்கும்போது வலதுசாரிக் கொள்கைகளைச் செயல்படுத்துவதன் மூலமும், வர்க்கப் போராட்டத்தை நசுக்க ஸ்ராலினிஸ்டுகள் மற்றும் ஸ்ராலினிசக் கட்டுப்பாட்டில் உள்ள தொழிற்சங்கங்களுடன் ஒத்துழைப்பதன் மூலமும், காங்கிரஸும் அதன் மாநில கூட்டாளிகளும் இந்திய முதலாளித்துவ அரசியலில் ஆதிக்க சக்தியாக பா.ஜ.க. தோன்றுவதில் முக்கிய பங்கு வகித்துள்ளனர்.
இந்தியா எனப்படும் தேர்தல் கூட்டணியை ஊக்குவிப்பதன் மூலம், ஸ்ராலினிஸ்டுகள், 2024 வசந்த காலத்தில் நடைபெறவிருக்கும் அடுத்த பொதுத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஒரு மாற்று முதலாளித்துவ அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டுவர முயற்சிக்கின்றனர். காங்கிரஸ் மற்றும் அதன் பிராந்திய கூட்டாளிகளின் அரசியல் பதிவுகள் அத்தகைய அரசாங்கம், மோடியின் ஆட்சியில் இருந்து அடிப்படையில் வேறுபட்டதாக இருக்காது என்பதை நிரூபிக்கின்றன. அது முதலீட்டாளர்-சார்பு பொருளாதாரக் கொள்கைகளை செயல்படுத்துவதைத் தொடர்வதுடன், அமெரிக்க ஏகாதிபத்தியம் சீனாவுடனான போருக்குத் தயாராகி வருகையில் அதற்கு உதவி வழங்கும் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது தாக்குதல் தொடுக்கும்.
CPM இன் பிற்போக்கு அரசியல் ஸ்ராலினிசத்தின் விளைவாகும். ஸ்ராலினிசம், சோவியத் தொழிலாள வர்க்கத்திடம் இருந்து அதிகாரத்தை அபகரித்து, ரஷ்யப் புரட்சியில் லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கியின் தலைமையின் கீழ் நடத்தப்பட்ட உலக சோசலிசப் புரட்சியின் வேலைத்திட்டத்தை நிராகரித்த சலுகை பெற்ற அதிகாரத்துவத்தின் தேசியவாதக் கொள்கையும் சித்தாந்தமும் ஆகும். “தனி ஒரு நாட்டில் சோசலிசம்” என்ற பெயரில், ஸ்ராலினிச அதிகாரத்துவம் தவறான முறையில் எடுத்துக் கொண்ட சலுகைகளை தக்க வைத்துக் கொண்டது. அதற்காக ஏகாதிபத்திய சக்திகள் மற்றும் ஏகாதிபத்தியத்தினால் வரலாற்று ரீதியாக ஆதிக்கம் செய்யப்பட்டு வந்த நாடுகளிலுள்ள தேசிய முதலாளித்துவ வர்க்கத்துடனும் கூட்டணிகளை உருவாக்குவதன் மூலம் பூகோளத் தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களுக்கு எதிராக வேண்டுமென்றே நாசவேலை புரிந்தது.
ஏகாதிபத்திய ஆதரவுடன் பாலஸ்தீனப் பிரிவினையும் இஸ்ரேலிய சியோனிச அரசின் உருவாக்கமும் 1948ல் நடந்தது. இது, தெற்காசியாவின் வகுப்புவாதப் பிரிவினைக்கு ஒரு வருடம் கழித்து மற்றும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் என்ற பகையான “சுதந்திர” முதலாளித்துவ அரசுகளை உருவாக்கிய பிறகு நடந்தது.
பாலஸ்தீனத்தைப் பொறுத்தவரை, மாஸ்கோவில் உள்ள கிரெம்ளின் அதிகாரத்துவம் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) மற்றும் 1964 இல் CPI இலிருந்து தோன்றிய CPM உள்ளிட்ட பல்வேறு கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவுடன் – இஸ்ரேலின் உருவாக்கத்திற்கு ஆதரவளித்தது. அது இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் தொழிலாள வர்க்கத்தின் பூகோள புரட்சிகர எழுச்சியை ஒடுக்குவதன் மூலம் ஏகாதிபத்தியவாதிகளுடன் சேர்ந்து வாழும் ஒரு உடன்படிக்கையை அடைவதற்கான அதன் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாக அவ்வாறு செய்தது.
இந்தியாவில், ஸ்ராலினிச சிபிஐ, போரின் போது “இந்தியாவிலிருந்து வெளியேறு” இயக்கத்தை நாசப்படுத்த உதவிய பிறகு தேசிய முதலாளித்துவத்தின் அரசியல் பிரதிநிதிகள் என்ற அடிப்படையில் மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஜனநாயகப் புரட்சியின் சரியான தலைவர்கள் என்றும் கூறி தொழிலாள வர்க்கத்தை காங்கிரஸ் கட்சி மற்றும் முஸ்லீம் லீக்கிற்கு திட்டமிட்ட வகையில் அடிபணியச் செய்தது. CPI, இந்தியாவின் சட்டமன்றங்களில் அதன் பிரதிநிதிகள் இருந்த இடத்தில், பிரிட்டன், காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக் இடையே எட்டப்பட்ட “அதிகார பரிமாற்ற ஒப்பந்தம்” மற்றும் கண்டத்தை ஒரு வெளிப்படையான முஸ்லீம் பாகிஸ்தானாகவும், பெரும்பான்மையான இந்து இந்தியாவாகவும் பிரிப்பதற்கும் வாக்களித்தது. அதை அவர்கள் “சுய நிர்ணய உரிமை” அடையப்பட்டதாக பிரகடனம் செய்தனர்.
ஏகாதிபத்திங்களும், இந்திய முதலாளித்துவ வர்க்கம் சம்பந்தப்பட்டிருக்கும் காஸாவில் நடக்கும் இனப்படுகொலையை நிறுத்த வேண்டும் என்று கோரும் இந்திய ஸ்ராலினிஸ்டுகளின் பரிதாபகரமான மற்றும் பிற்போக்குத்தனமான முறையீடுகளுக்கு எதிராக, உலக சோசலிச வலைத் தளம், சர்வதேச தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதன் மூலம் மட்டுமே இந்தப் பணியை அடைய முடியும் என்று வலியுறுத்துகிறது.
உலகெங்கிலும் உள்ள போராட்டங்களில் இணைந்திருக்கும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள், இந்த முன்னோக்கிற்கு ஆதரவாக தொழிலாள வர்க்கத்தை நோக்கி திரும்புமாறு நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம். இஸ்ரேலுக்கு அனுப்புவதாக இருக்கும் அனைத்து இராணுவ கருவிகளின் விநியோகத்தையும் உற்பத்தியையும் நிறுத்த தொழிலாளர்கள் வேலைநிறுத்தங்கள் மற்றும் பிற நடவடிக்கைகளை ஏற்பாடு செய்ய வேண்டும். இது ஒரு சர்வதேச அரசியல் பொது வேலைநிறுத்தத்திற்கான போராட்டத்துடன் இணைக்கப்பட வேண்டும், ஏகாதிபத்திய போருக்கு எதிரான போராட்டத்தை முதலாளித்துவ சிக்கன நடவடிக்கைகள் மற்றும் அவர்களின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலுக்கு எதிராக உலகெங்கிலும் உள்ள உழைக்கும் மக்களின் பெருகிவரும் வெகுஜன எழுச்சியுடன் இணைக்க வேண்டும்.
நெருக்கடிக்குள் மூழ்கியுள்ள முதலாளித்துவம் மனிதகுலத்தை தூக்கி எறிய விரும்புகின்ற நிலையில், ஏகாதிபத்தியத்தின் காட்டுமிராண்டித்தனம் மற்றும் வளர்ந்து வரும் உலகளாவிய மோதலுக்கான ஒரே முற்போக்கான பதில், உலகளாவிய காஸா எதிர்ப்பு போராட்டங்கள் மற்றும் தொழிலாள வர்க்க எழுச்சியை ஒரு சோசலிச முன்னோக்குடன் ஆயுதபாணியாக்க வேண்டும்.
பிற்போக்குத்தனமான இரு-அரசு தீர்வுக்கு எதிராக, மத்திய கிழக்கு முழுவதிலும் உள்ள அரபு மற்றும் யூத தொழிலாளர்களின் ஒற்றுமைக்கும், ஏகாதிபத்தியம் மற்றும் அனைத்து வகையான தேசியவாதம், சியோனிசம் மற்றும் அரேபிய வகைகளுக்கு எதிராகவும், தொழிலாளர்களின் அதிகாரத்திற்காகவும் மத்திய கிழக்கின் ஐக்கிய சோசலிச அரசுகளை ஸ்தாபிப்பதற்காகவும் போராட வேண்டும்.