மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
1948 இனப்படுகொலை குற்றத்தைத் தடுத்தல் மற்றும் தண்டனை ஒப்பந்தத்தை (Convention on the Prevention and Punishment of the Crime of Genocide) மீறி இஸ்ரேல் இனப்படுகொலையில் ஈடுபட்டதாக தென்னாப்பிரிக்க அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் தி ஹேக்கில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஒரு சிறப்பான வாதங்களை முன்வைத்தனர்.
விளக்கங்களில் உள்ள உண்மை உள்ளடக்கமானது, உலகெங்கிலும் பின்தொடரப்படும் வழக்கு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அரசாங்கங்கள் மற்றும் நிறுவனங்களின் தன்மை மற்றும் நோக்கங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. அக்டோபர் 7 முதல் இஸ்ரேலால் நிகழ்த்தப்பட்ட திட்டமிட்ட அட்டூழியங்கள் மற்றும் போர்க்குற்றங்களின் பட்டியலை ஒரே இடத்தில் சேகரித்தது, இதை முழு உலகமும் சமூக ஊடகங்களில் பல்வேறு அளவுகளில் பின்தொடர்ந்திருக்கிறது.
ஐரிஷ் வழக்கறிஞர் பிளின்னே நி க்ரலாக் தனது விளக்கத்தில் கூறியது போல, காஸா “வரலாற்றில் முதல் இனப்படுகொலையை பிரதிநிதித்துவப்படுத்துகிறது, அங்கு அதனால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் சொந்த அழிவை விரக்தியில் நேரலையில் ஒளிபரப்புகிறார்கள், ஆனால் உலகம் ஏதாவது செய்யக்கூடும் என்ற நம்பிக்கை இதுவரையிலும் வீணாகிப் போயுள்ளது.”
அட்டூழியங்கள் மற்றும் போர்க்குற்றங்களின் இந்த புறநிலை பட்டியல் இஸ்ரேலிய அரசு அதிகாரிகள், இராணுவத் தலைவர்கள் மற்றும் பிற முக்கிய பிரமுகர்களின் வாயிலிருந்து நேரடியாக வெளிவரும் இனப்படுகொலை வாய்வீச்சுக்களுடன் பிணைக்கப்பட்டிருந்தது.
ஒருபுறம் நாஜிக்களை நினைவுபடுத்தும் இரக்கமற்ற மற்றும் திட்டமிட்ட காட்டுமிராண்டித்தனத்தையும், மறுபுறம் நாஜிக்களை நினைவுபடுத்தும் இரத்தவெறி இனவெறி தூண்டுதலையும் அந்த விளக்கங்கள் விவரித்தன. இந்த அடிப்படையில், வழக்கறிஞர்கள் 1948 கொலைக் குற்ற தண்டனை மற்றும் தடுப்பு ஒப்பந்தத்தை பயன்படுத்தினர், இது இரண்டாம் உலகப் போர் மற்றும் யூத இனப்படுகொலைக்குப் (Holocaust) பிறகு அறிமுகப்படுத்தப்பட்டு அங்கீகரிக்கப்பட்டதாகும்.
தென்னாப்பிரிக்க உயர் நீதிமன்ற வழக்கறிஞரான அடிலா ஹாசிம், வியாழக்கிழமை முதல் முக்கிய விளக்கங்களை வழங்கினார். “கடந்த 96 நாட்களாக, நவீன போர் வரலாற்றில் மிகக் கடுமையான மரபுரீதியான குண்டுவீச்சு நடவடிக்கைகளில் ஒன்றாக இஸ்ரேல் காஸாவை உட்படுத்தியுள்ளது” என்று அவர் கூறினார்.
“காஸாவிலுள்ள பாலஸ்தீனியர்கள் எங்கு சென்றாலும் இடைவிடாத குண்டுவீச்சுக்கு உட்படுத்தப்படுகிறார்கள்” என்று வாதிட்ட அவர், “அவர்கள் தங்கள் வீடுகளிலும், அவர்கள் தஞ்சம் தேடும் இடங்களிலும், மருத்துவமனைகளிலும், பள்ளிகளிலும், மசூதிகளிலும், தேவாலயங்களிலும், தங்கள் குடும்பங்களுக்கு உணவு மற்றும் தண்ணீரைப் பெற முயற்சிக்கும்போதும் கொல்லப்படுகிறார்கள்” என்பதற்கான ஆதாரங்களை சுட்டிக்காட்டினார். அவர்கள் வெளியேறத் தவறும் போதும், அவர்கள் தப்பியோடிய இடங்களிலும் மற்றும் இஸ்ரேலால் அறிவிக்கப்பட்ட பாதுகாப்பான வழிகளில் தப்பிச் செல்ல முயன்றபோதும் கூட அவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.”
“இந்தக் கொலைகளின் மட்டத்தின் ஆழம் மிகவும் பரவலாக உள்ளது, இறந்தவர்களின் உடல்கள் பெரும்பாலும் அடையாளம் காணப்படாத பெரும் குழிகளில் அடிக்கடி புதைக்கப்படுகின்றன,” என்று அவர் தொடர்ந்தார். “காஸாவில் 1,800 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனிய குடும்பங்கள் பல குடும்ப உறுப்பினர்களை இழந்துள்ளன மற்றும் நூற்றுக்கணக்கான பல தலைமுறை குடும்பங்கள் அழிக்கப்பட்டுள்ளன, மீதமுள்ள உயிர் பிழைத்தவர்கள் - தாய்மார்கள், தந்தைகள், குழந்தைகள், உடன்பிறப்புகள், தாத்தா பாட்டிகள், அத்தைகள், உடன்பிறவா சகோதரங்கள் - பெரும்பாலும் கூட்டாக கொல்லப்பட்டுள்ளனர். இக்கொலைகளானது பாலஸ்தீன வாழ்வை அழிப்பதற்கு சற்றும் குறைந்ததல்ல. இது வேண்டுமென்றே திணிக்கப்படுகிறது. புதிதாகப் பிறந்த குழந்தைகளைக் கூட அவர்கள் விட்டுவைக்கவில்லை.
கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கானவர்களுடன், மேலும் பல்லாயிரக்கணக்கானோர் ஊனமுற்றவர்கள், உருச்சிதைந்தவர்கள் மற்றும் அதிர்ச்சிக்குள்ளானவர்கள் என்பதை அவர் சுட்டிக்காட்டினார். இதற்கிடையில், குழந்தைகள் உட்பட ஏராளமான பாலஸ்தீனிய குடிமக்கள் “கைது செய்யப்பட்டு, கண்கள் கட்டப்பட்டு, அவர்களின் ஆடைகளை அவிழ்க்க கட்டாயப்படுத்தப்பட்டு, டிரக்குகளில் ஏற்றப்பட்டு, அடையாளம் தெரியாத இடங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறார்கள்.”
இராணுவத் தாக்குதலின் ஆரம்ப கட்டங்களில் வடக்கு காஸாவிலிருந்து இஸ்ரேலின் “வெளியேற்றல்” உத்தரவைக் குறிப்பிட்டு, ஹாசிம் வாதிட்டார், “அந்த உத்தரவே இனப்படுகொலையானதாக இருக்கிறது. மனிதாபிமான உதவிகள் எதுவும் அனுமதிக்கப்படாத நிலையில், எரிபொருள், தண்ணீர், உணவு மற்றும் பிற வாழ்க்கைத் தேவைகள் வேண்டுமென்றே துண்டிக்கப்பட்ட நிலையில், எடுத்துச் செல்லக்கூடியவற்றை மட்டுமே எடுத்துக்கொண்டு உடனடியாக வெளியேற வேண்டியிருந்தது. இந்நிகழ்வு மக்கள்தொகையின் அழிவைக் கொண்டு வருவதற்காக தெளிவாக கணக்கிடப்பட்டிருக்கிறது.”
இஸ்ரேலின் இனப்படுகொலை நடவடிக்கையின் ஒரு முக்கிய அம்சமானது, அது வேண்டுமென்றே “காஸாவின் சுகாதார அமைப்பு மீதான தாக்குதல்” என்று ஹாசிம் வாதிட்டார்.
இஸ்ரேலிய முற்றுகையின் திட்டமிட்ட விளைவாக, தற்போது உலகில் கடுமையான பட்டினியால் வாடும் அனைத்து மக்களில், 80 சதவீதம் பேர் காஸாவில் உள்ளனர். குண்டுகளை விட பல்லாயிரக்கணக்கான மக்கள் பசி, தாகம், நோயால் உயிரிழக்கும் ஆபத்தில் உள்ளனர்.
கூடியிருந்த வழக்கறிஞர்கள் மற்றும் சட்ட வல்லுநர்கள் குழுவின் வாதங்கள், உண்மையான மற்றும் சட்டரீதியான துல்லியத்துடன் முன்வைக்கப்பட்டன. பாலஸ்தீனிய இறப்பு புள்ளிவிவரங்கள் “ஹமாஸ் மூலங்களிலிருந்து வந்தவை” என்று சந்தேகத்தை ஏற்படுத்த பைடென் மற்றும் நெதன்யாகு ஆட்சிகளின் முயற்சிகளை மறுத்த ஹாசிம், தனது விளக்கத்தில் உள்ள அனைத்து புள்ளிவிவரங்களும் ஐ.நா.விலிருந்து வந்தவை என்றும், அவைகள் “9 ஜனவரி 2024 நிலவரப்படி புதுப்பிக்கப்பட்டவை” என்றும் சுட்டிக்காட்டினார்.
இனப்படுகொலைக் குற்றச்சாட்டு இஸ்ரேலுக்கு எதிராக உத்தியோகபூர்வமாக முன்வைக்கப்பட்டாலும், இஸ்ரேலின் பிரதான ஏகாதிபத்திய புரவலராகவும், போர் உபகரணங்களை வழங்குபவராகவும் அமெரிக்க அரசாங்கமும் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது என்பது நன்கு புரிந்து கொள்ளப்படுகிறது. இஸ்ரேலின் ஆயுதப் படைகளை “உலகின் மிகவும் வளமான இராணுவங்களில் ஒன்று” என்று ஹாசிம் சூட்சுமமாகக் குறிப்பிட்டபோது, நீதிமன்றத்தில் இருந்த அனைவருக்கும் அவர் அமெரிக்காவைக் குறிக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டனர்.
தென்னாப்பிரிக்காவின் டிசம்பர் 27 முறைப்பாட்டில் சேர்க்கப்பட்ட இஸ்ரேலிய அதிகாரிகளின் இனப்படுகொலை அறிக்கைகளின் நீண்ட பட்டியலைக் குறிப்பிட்டு, தென்னாப்பிரிக்க உயர் நீதிமன்ற வழக்கறிஞர் தெம்பேகா என்குகைடோபி வாதிடுகையில், “இஸ்ரேலின் அரசியல் தலைவர்கள், இராணுவத் தளபதிகள் மற்றும் உத்தியோகபூர்வ பதவிகளை வகிக்கும் நபர்கள் தங்கள் இனப்படுகொலை நோக்கத்தை முறையாகவும் வெளிப்படையாகவும் அறிவித்துள்ளனர்; பாலஸ்தீனியர்கள் மற்றும் காஸாவின் பௌதீக உள்கட்டமைப்பை படைகள் அழிப்பதில் ஈடுபடும் போது, இந்த அறிக்கைகள் காஸாவில் தரையிலுள்ள படைகளால் பின்னர் மீண்டும் மீண்டும் குறிப்பிடப்படுகின்றன.”
பாலஸ்தீனியர்களை “மனித விலங்குகள்” என்று மீண்டும் மீண்டும் குறிப்பிடுவதும் இதில் அடங்கும், அவர்கள் “அமலேக்கர்களை” பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர் என்கின்ற இந்தக் குறிப்புகள் குறிப்பாக பாசிச சித்தாந்தம் மற்றும் இறையியலின் சிறப்பியல்புகளாகும். அமலேக்கர்கள் விவிலியக் கதையில், “ஆண்களும் பெண்களும், குழந்தைகளும் கைக்குழந்தைகளும், கால்நடைகளும் ஆடுகளும் ஒட்டகங்களும் கழுதைகளும் கொல்லப்பட வேண்டும்” என்று அறிவிக்கிறது. அமலேக்கியர்கள் என்று அழைக்கப்படும் ஒரு முழுக் குழுவினர்களையும் அழிக்குமாறு கடவுள் சவுலுக்குக் கட்டளையிடுகிறார் என்பது பாசிச சித்தாந்தம் ஆகும்.
“இந்த அறிக்கைகள் நடுநிலையான விளக்கங்களுக்கோ அல்லது இஸ்ரேலின் உண்மைக்குப் புறம்பான நியாயங்கள் மற்றும் மறுவிளக்கங்களுக்கோ திறந்திருக்கவில்லை” என்று என்குகைடோபி குறிப்பிட்டார். “அரசின் கட்டுப்பாட்டில் உள்ளவர்களால் இந்த அறிக்கைகள் வெளியிடப்பட்டன. அவர்கள் அரசின் கொள்கையை எடுத்துரைத்தனர். இது எளிமையானது. அறிக்கைகள் உள்நோக்கம் இல்லாமல் இருந்திருந்தால், அவைகள் வெளியிடப்பட்டிருக்காது” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இனப்படுகொலைக்கான இந்த தூண்டுதல்களை காஸாவில் “அமலேக்கியர்கள் விதையை துடைத்தெறிவோம்” என்று கோஷமிட்டபடி படமாக்கப்பட்ட இஸ்ரேலிய சிப்பாய்களின் இனப்படுகொலை நடவடிக்கைகளை என்குகைடோபி தனது விளக்கக்காட்சியில் இணைத்தார். “காஸாவில் பொதுமக்களுக்கு எதிராக தாங்கள் செய்யும் அட்டூழியங்களை ‘ஸ்நப்’ வீடியோ (‘snuff’ video) வடிவில் சிப்பாய்கள் படம்பிடிக்கும் போக்கு இப்போது சிப்பாய்களிடையே உள்ளது” என்று என்குகைடோபி கூறினார். “ஒருவர் ஷுஜையாவில் 50 க்கும் மேற்பட்ட வீடுகளை குண்டுவைத்து வெடிக்க வைத்ததும் அதில் பதிவு செய்யப்பட்டுள்ளது.”
“காஸாவில் பாலஸ்தீனிய மக்களின் வாழ்க்கையை அழிப்பது என்பது, அரசுக் கொள்கையாக இருப்பதால் இந்த மொழியும் அவர்களின் நடவடிக்கைகளும் ஏற்றுக்கொள்ளத்தக்கவை என்று சிப்பாய்கள் வெளிப்படையாக நம்புகிறார்கள்” என்று என்குகைடோபி கூறினார்.
என்குகைடோபி விவரித்த ஒரு குறிப்பிட்ட அத்தியாயம் முழுமையாக விவரிக்கிறது: அதாவது “1948 இல் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான டெய்ர் யாசின் படுகொலையை நடத்திய 95 வயதான முன்னாள் இஸ்ரேலிய இராணுவ ரிசர்வ் படை சிப்பாய் எஸ்ரா யாச்சினை மூத்த அரசியல் மற்றும் இராணுவ அதிகாரிகள் கண்டிக்காமல் ஊக்குவித்தனர்” என்று என்குகைடோபி கூறினார். இந்த நிகழ்வுப் பயணத்தில், யாச்சின் “இஸ்ரேலிய இராணுவ உடைகளை அணிந்து, ஒரு உத்தியோகபூர்வ இஸ்ரேலிய இராணுவ வாகனத்தில் சுற்றித் திரிந்தார்.”
யாச்சின் தனது உரையில், “வெற்றி பெற்று அவற்றை முடித்துக் கொள்ளுங்கள், யாரையும் விட்டுவிடாதீர்கள். அவர்களின் நினைவுகளை அழித்து விடுங்கள். அவர்களையும், அவர்களது குடும்பங்களையும், தாய்மார்களையும், குழந்தைகளையும் அழித்து விடுங்கள். இந்த மிருகங்கள் இனி வாழ முடியாது. . . உங்களுக்கு அரபு அண்டை வீட்டுக்காரர் இருந்தால், காத்திருக்க வேண்டாம், அவரது வீட்டிற்குச் சென்று அவரை சுடுங்கள் . . . நாம் படையெடுக்க விரும்புகிறோம், முன்பு போல அல்ல, நமக்கு முன்னால் உள்ளவற்றை உள்ளே நுழைந்து அழிக்க விரும்புகிறோம், வீடுகளை அழிக்க விரும்புகிறோம், பின்னர் அதற்குப் பிந்தைய ஒன்றை அழிக்க விரும்புகிறோம். எங்கள் படைகள் அனைத்தையும் கொண்டு, முழுமையான அழிவு, நுழைந்து அழிக்கவும். நாம் கனவிலும் நினைத்துப் பார்க்காத விஷயங்களைக் காண்போம். அவர்கள் மீது குண்டுகளை வீசி அழிப்போம்” என்று குறிப்பிட்டான்.
தென்னாப்பிரிக்க சட்டப் பேராசிரியரும் வழக்கறிஞருமான மேக்ஸ் டு பிளெசிஸ் தனது விளக்கக்காட்சியில், “இப்போது காஸாவில் நடப்பது இரண்டு தரப்பினருக்கு இடையிலான ஒரு சாதாரண மோதலாக சரியாக வடிவமைக்கப்பட்டதல்ல” என்று வாதிட்டார். இது அடிமைப்படுத்தப்பட்ட மற்றும் “ஒடுக்கப்பட்ட” மக்களுக்கு எதிராக “ஆக்கிரமிப்பு சக்தியால் நிகழ்த்தப்படும் அழிவுகரமான செயல்களை” உள்ளடக்கியது என்று அவர் கூறினார். பல ஆண்டுகளாக, இஸ்ரேல் “சட்டத்திற்கு அப்பாற்பட்டதாகவும், மேலானதாகவும் தன்னைக் கருதுகிறது” என்று அவர் கூறினார்.
“களத்தில் மரண தண்டனைகள்”, “சித்திரவதைகள்” மற்றும் “பாலஸ்தீனிய ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் சிதைந்த உடல்களின் படங்களானது, அவர்கள் கொல்லப்பட்ட இடத்திலேயே புதைக்கப்படாமல் விடப்பட்டதைக் காட்டுகின்றன – அவைகள் சில விலங்குகளால் எடுத்துச் செல்லப்படுகின்றன” என்ற அறிக்கைகளை டு பிளெசிஸ் முன்வைத்தார். “காஸாவின் பெரும் பகுதிகள் - முழு நகரங்கள், கிராமங்கள், அகதிகள் முகாம்கள் - வரைபடத்திலிருந்து அழிக்கப்பட்டு வருகின்றன என்பது மேலும் தெளிவாகி வருகிறது,” என்று அவர் தெரிவித்தார்.
சமர்ப்பிக்கப்பட்டுள்ள உண்மை ஆதாரங்கள் முழு இஸ்ரேலிய அரசாங்கத்தையும் உடனடியாக கைது செய்வதற்கும், குற்றஞ்சாட்டுவதற்கும், வழக்குத் தொடுப்பதற்கும் போதுமானவையாகும்.
ஆனால் இது, அதைவிட முக்கியமாக, அமெரிக்க அரசாங்கம் மற்றும் அமெரிக்க-நேட்டோ ஏகாதிபத்தியத்தின் மீதான ஒரு குற்றச்சாட்டாகும். நெதன்யாகு அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட கொடூரமான குற்றங்களுக்காக வழக்குத் தொடரப்பட வேண்டியவர்களில் இனப்படுகொலையை ஆதரித்தவர்கள், நிதியளித்தவர்கள், நியாயப்படுத்திய மற்றும் வழிநடத்திய ஏகாதிபத்திய சக்திகளின் தலைவர்களும் அடங்குவர்: அதாவது பிரிட்டனில் சுனக், ஜேர்மனியில் ஷோல்ஸ், பிரான்சில் மக்ரோன், இத்தாலியில் மெலோனி, மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக அமெரிக்காவில் “இனப்படுகொலை ஜோ” பைடென் ஆவார்.
கோடிக்கணக்கான மக்களின் மனதில், காஸாவில் நடந்து வரும் இனப்படுகொலை, ஏகாதிபத்தியம் மற்றும் பூகோளரீதியான முதலாளித்துவ அமைப்புமுறை மற்றும் அதன் அனைத்து அரசியல்வாதிகள், கட்சிகள் மற்றும் நிறுவனங்கள் மீதான ஒரு குற்றச்சாட்டாக மேலும் மேலும் பார்க்கப்படும்.
ஐ.சி.ஜே. (ICJ) வழக்கு விசாரணையே பல ஆண்டுகள் இழுத்தடிக்கப்படும். இந்த வார நடவடிக்கைகள் தென்னாபிரிக்காவின் “பூர்வாங்க நடவடிக்கைகள்” அல்லது இஸ்ரேல் போரை நிறுத்துவதற்கான செயல்படுத்த முடியாத “உத்தரவு” தொடர்பானது. இஸ்ரேலிய அரசாங்கம், அதன் பங்கிற்கு, பல ஆண்டுகளாக டசின் கணக்கானவர்களால் மேற்கொள்ளப்பட்ட ஐ.நா தீர்மானங்களை புறக்கணித்து வருகிறது. மேலும் இன்று அதன் சொந்த விளக்கத்தில் அதன் நடவடிக்கைகளுக்கு ஒரு முழு ஆற்றலுடன் பாதுகாப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த வியாழன் நடவடிக்கைகளில் இருந்து, குறிப்பாக, ஐக்கிய நாடுகள் சபையின் அரங்குகளில் ஜனநாயக, மனிதாபிமான மற்றும் பகுத்தறிவு உணர்வுகளின் மறுபிறப்பு அல்லது நன்கு தயாரிக்கப்பட்ட வழக்குகள் இனப்படுகொலையை நிறுத்துவதற்கான நம்பகமான வாகனமாக செயல்பட முடியும் என்ற மாயைகளை, இப்போது ஊக்குவிப்பவர்களிடம் இருந்து எதிர் முடிவை எடுக்க வேண்டியது அவசியமாகும்.
ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்புகளில் இத்தகைய பிரமைகளை வெளிப்படுத்துவது, குறைந்தபட்சம் வெறும் கற்பனையே ஆகும்.
“உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் இஸ்ரேலை பொறுப்பேற்கச் செய்வதற்கான தென்னாப்பிரிக்காவின் முயற்சிகளை ஆதரிக்கின்றனர்” என்று ஜெர்மி கோர்பின் திங்களன்று சர்வதேச நீதிமன்ற நடவடிக்கைகளைக் குறிப்பிட்டு பின்வருமாறு எழுதினார், “எங்கள் அரசாங்கத்தால் ஏன் முடியாது?” என்று கேட்டார். திரு கோர்பின் இந்த அபத்தமான அப்பாவியான கேள்வியைக் கூட கேட்கிறார் என்பது, 40 ஆண்டுகளுக்கும் மேலாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அவரது சொந்த மோசமான அனுபவம் மற்றும் தொழிற்கட்சியிலிருந்து அவர் வெளியேற்றப்பட்டது ஒருபுறம் இருக்க, வரலாற்றிலிருந்து அவர் எதையும் கற்றுக்கொள்ளவில்லை என்பதைக் காட்டுகிறது.
ஆனால் திரு கோர்பினின் கேள்விக்கு பதிலளிப்பதற்கு: பிரிட்டன் அரசாங்கம் உலகின் மிகப் பழமையான ஏகாதிபத்திய ஆளும் வர்க்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. மேலும், தற்போதைய சட்ட நடைமுறை தொடர்பாக, இஸ்ரேலிய போர்க்குற்றங்களுக்கு தாங்களே உடந்தையாக இருக்கக்கூடும் என்பதை அதன் முக்கிய அதிகாரிகள் நன்கு அறிவார்கள்.
சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே, அமெரிக்காவும் பிரிட்டனும் யேமன் மீதான குண்டுவீச்சுத் தாக்குதல் மூலம் மத்திய கிழக்கில் ஒரு பெரிய போர் விரிவாக்கத்தைத் தொடங்கியுள்ளன. காஸாவில் இனப்படுகொலைக்கு ஏகாதிபத்திய சக்திகளின் ஆதரவானது, ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போர் மற்றும் சீனாவிற்கு எதிரான போருக்கான தயாரிப்புகள் உட்பட விரிவடைந்து வரும் பூகோளரீதியான போருடன் பிணைந்துள்ளது.
தற்போதைய கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோய், தீவிரமடைந்து வருகின்ற பூகோளரீதியான போர், விரிவடைந்து வரும் சமூக சமத்துவமின்மை, விரைவான காலநிலை மாற்றம், ஜனநாயக உரிமைகள் இரத்து, மற்றும் அதிவலது மற்றும் பாசிச இயக்கங்கள் மற்றும் அரசாங்கங்களின் எழுச்சி ஆகியவற்றுடன் சேர்ந்து, உலக மக்கள் தொகையின் தொடர்ச்சியான, பாரிய அரசியல் தீவிரமயமாக்கலுக்கு காஸா இனப்படுகொலை ஒரு குறிப்பிடத்தக்க காரணியாக இருந்து வருகிறது.
சர்வதேச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டு பகிரப்பட வேண்டியவைகளாகும். கடந்த நூற்றாண்டின் ஏகாதிபத்திய காட்டுமிராண்டித்தனத்தின் மிகக் கொடூரமான வடிவங்கள் மீண்டும் இயல்பாக்கப்படுகின்றன என்பதற்கு இது ஒரு சான்றாகும். இது ஒரு எச்சரிக்கையாகும்: அதாவது “மனித உரிமைகள்” மற்றும் “ஜனநாயகம்” பற்றிய அவர்களின் சொற்றொடர்களுக்குப் பின்னால், ஏகாதிபத்திய அரசாங்கங்கள் காஸாவிலும் தங்கள் சொந்த எல்லைகளுக்குள்ளும் காட்டுமிராண்டித்தனத்தை மேற்கொள்வார்கள் என்பதை இவை எடுத்துக்காட்டுகின்றன.
காஸா இனப்படுகொலையை நிறுத்த முடியும், எதிர்கால இனப்படுகொலைகளைத் தடுக்க முடியும், ஏகாதிபத்திய போரை எதிர்க்க முடியும், மேலும் அனைத்து கசாப்புக் கடைக்காரர்கள் மற்றும் போர்க்குற்றவாளிகள் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன சக்தியை அணிதிரட்டுவதன் மூலம் மட்டுமே பொறுப்புக் கூற வைக்க முடியும். ஏகாதிபத்தியப் போர் மற்றும் முதலாளித்துவ ஒடுக்குமுறைக்கு புறநிலையாக எதிரான, பொதுவான நலன்களைக் கொண்ட ஒரே வர்க்கம் தொழிலாள வர்க்கமாகும். அது, உலகெங்கிலும் வெடித்துக்கொண்டிருக்கும் போராட்டங்களில் முதலாளித்துவ அமைப்புடன் மேலும் கூர்மையாகவும் கடுமையாகவும் மோதலில் ஈடுபட்டு வருகிறது.