இலங்கை மின்சார சபை ஊழியர்கள் மீதான இலங்கை அரசாங்கத்தின் வேட்டையாடலை எதிர்த்திடு!

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கை மின்சார சபையை (இ.மி.ச.) தனியார் மயமாக்குவதற்கு எதிராக ஜனவரி தொடக்கத்தில் மூன்று நாள் சுகயீன விடுமுறைப் போராட்டத்தில் ஈடுபட்ட இ.மி.ச. ஊழியர்களுக்கு எதிராக இலங்கை அரசாங்கத்தின் கட்டளையின் பேரில் நடக்கும் வேட்டையாடலை எதிர்க்குமாறு தொழிலாள வர்க்கத்திற்கு சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.), அழைப்பு விடுக்கிறது.

இலங்கை மின்சார சபை ஊழியர்கள் 4 ஜனவரி 2024 அன்று கொழும்பு தலைமை அலுவலகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டம் செய்த போது.

நாடு முழுவதிலுமிருந்து பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள் ஜனவரி 3 முதல் 5 வரை தொழிற்சங்க நடவடிக்கையில் பங்குபற்றியதுடன் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் தொழில் அழிப்பை எதிர்த்து கொழும்பில் உள்ள இ.மி.ச. தலைமை அலுவலகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.

கடந்த வாரம் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவின் உத்தரவை அடுத்து, நிறுவனத்தின் அந்தந்த கிளைகளில் உள்ள இ.மி.ச. முகைமையாளர்கள், போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து தொழிலாளர்களிடமிருந்தும் விளக்கங்களைக் கோரி கடிதங்களைத் தயாரித்துள்ளனர்.

இ.மி.ச. தொழிலாளர்கள் உலக சோசலிச வலைத் தளத்திடம் (WSWS) பேசும்போது, ஏற்கனவே சில கடிதங்கள் அனுப்பப்பட்டிருந்தாலும், எஞ்சியவை இன்று அரசாங்க விடுமுறை என்பதால் செவ்வாய் கிழமை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது எனத் தெரிவித்தனர்.

அரசாங்கத்தின் கட்டளையிலான இந்த கடிதங்கள் தொழிலாளர்களின் தொழில்கள், ஊதியங்கள் மற்றும் வேலை நிலைமைகளைப் பாதுகாக்க தொழில்துறை போராட்ட நடவடிக்கையை எடுப்பதற்கான அடிப்படை உரிமையின் மீதான பெரும் தாக்குதல் ஆகும். தொழிலாள வர்க்கம் தனது சொந்த ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தின் ஒரு பகுதியாக அனைத்து மின்சார ஊழியர்களுக்கும் ஆதரவாக முன்னோக்கி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒருவர் மீதான தாக்குதல் அனைவரின் மீதான தாக்குதல் ஆகும்!

அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் மூலம் தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு முகாமைத்துவத்துக்கு அறிவுறுத்தி இ.மி.ச. தலைவர் வழங்கிய கடிதத்தின் நகல். [Photo]

அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் (EPSA) கீழ் மின்சார விநியோகம் மற்றும் பெட்ரோலிய பொருட்கள் மற்றும் எரிபொருளின் விநியோகம் அனைத்து அத்தியாவசிய சேவைகள் என்று பிரகடனப்படுத்தும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் டிசம்பர் 18 வர்த்தமானியையே இ.மி.ச. நிர்வாகத்தின் “காரணம் கோரும்” கடிதங்கள் குறிப்பிடுகின்றன. அனைத்து ஊழியர்களுக்கும் விடுமுறையை இரத்து செய்து ஜனவரி 1 அன்று நிர்வாகம் வெளியிட்ட சுற்றறிக்கையையும் இ.மி.ச. கடிதங்கள் குறிப்பிடுகின்றன.

ஜனவரி 3 முதல் ஜனவரி 5 வரை வேலை செய்யத் தவறிய அனைத்து ஊழியர்களும் மூன்று வேலை நாட்களுக்குள், தங்கள் மீது “ஒழுங்கு நடவடிக்கை” ஏன் எடுக்கக்கூடாது என்பதை விளக்கி தங்கள் மேலதிகாரிகளுக்கு உடனடியாக கடிதம் எழுத வேண்டும் என்று கடிதங்கள் கோருகின்றன.

“நீங்கள் அவ்வாறு செய்யத் தவறினால்... நீங்கள் குற்றத்தை ஏற்றுக்கொண்டீர்கள் என்று கருதி உங்கள் சேவை நிறுத்தப்படும்” என்று அது மேலும் கூறியது. இ.மி.ச.யில் 26,000ம் அளவு பலமான தொழிலாளர் படையில் பெரும்பாலோர் எதிர்ப்புக்களில் ஈடுபட்டுள்ளதால் இந்தக் கடிதம் ஆயிரக்கணக்கான ஊழியர்களுக்கு அனுப்பப்படும்.

இ.மி.ச. ஊழியர்கள் இப்போது விளக்கமளிக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டமானது வேலைநிறுத்தம் மற்றும் ஏனைய தொழில்துறை போராட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான உரிமையை தடை செய்கின்ற ஒரு கொடூரமான வழிமுறையாகும். இந்தச் சட்டங்களை மீறியதாகக் கருதப்படுபவர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டு கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படலாம். சிறைத்தண்டனை, அபராதம் மற்றும் அவர்களது சொத்துக்களை பறிமுதல் செய்தல் உட்பட கடுமையான தண்டனைகளை விதிக்கும் அதிகாரம் கொண்ட நீதிமன்றங்களுக்கு முன் அவர்கள் நிறுத்தப்படக் கூடும்.

இ.மி.ச. ஊழியர்களின் அத்தியாவசிய சட்டங்களை மீறி மூன்று நாள் போராட்டத்தை நடத்துவதற்கு தீர்மானித்தமை, 2024 இல் இலங்கை தொழிலாளர்களின் முதல் தொழில்துறை நடவடிக்கை ஆவதோடு, ஆளும் வர்க்கம் மற்றும் அதன் பரவலாக வெறுக்கப்படும் விக்கிரமசிங்க அரசாங்கத்தினதும் மத்தியில் அதிர்ச்சி அலைகளை அனுப்பியுள்ளது.

தனியார்மயமாக்கல், வெட்டுக்கள் மற்றும் பிற சிக்கன நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் ஏனைய தொழிலாளர்களும் இந்த போராட்ட நடவடிக்கையை மேற்கொள்வர் என்று பீதியடைந்துள்ள கொழும்பு அரசாங்கம், இ.மி.ச. ஊழியர்களை தண்டிக்கவும், ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தையும் ஒழுக்கப்படுத்தவும் சபதம் எடுத்துள்ளது.

அடுத்த சில வாரங்களில் இ.மி.ச.யை 14 தனித்தனி நிறுவனங்களாகப் பிரித்து, சில தனியார் நிறுவனங்களுக்கு விற்கவும், ஏனையவற்றை வணிகமயமாக்கவும் வசதியளிக்கும் சட்டமூலம் ஒன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.

பல்லாயிரக்கணக்கான தொழில்களை அழிப்பதை பெறுபேறாக்கும் தனியார்மயமாக்கல் அல்லது வணிகமயமாக்கலுக்கு ஒதுக்கப்பட்ட நூற்றுக்கணக்கான அரசுக்கு சொந்தமான நிறுவனங்களில் இ.மி.ச. ஒன்றாகும். ஸ்ரீலங்கா டெலிகொம், இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம், இலங்கைத் துறைமுகத்தின் எஞ்சிய பிரிவுகள், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை, புகையிரதம் மற்றும் பல அரச வங்கிகளும் இந்த ஆண்டு இலக்கு வைக்கப்பட்ட ஏனைய பிரதான நிறுவனங்களாகும்.

சர்வதேச நாணய நிதியம் கட்டளையிட்டபடி விக்கிரமசிங்க அரசாங்கத்தால் சுமத்தப்படும் வெட்டுக்களில் இந்த பரந்த “மறுசீரமைப்பு” இன்றியமையாத பகுதியாகும். அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலையை உயர்த்தும் வரிகள், கட்டணங்களின் அதிகரிப்பு மற்றும் சமூக நலத்திட்டங்கள், பொது சுகாதாரம், கல்வி ஆகியவற்றில் கடுமையான வெட்டுக்களை அமுல்படுத்துவது மற்ற நடவடிக்கைகளில் அடங்கும்.

சர்வதேச நாணய நிதியம் தனது கோரிக்கைகளை நடைமுறைப்படுத்தத் தவறினால், அதன் 3 பில்லியன் அமெரிக்க டொலர் பிணை எடுப்பு கடனின் எஞ்சிய தவணைகள் செலுத்தப்படமாட்டாது என்று கொழும்பை எச்சரித்துள்ளது. கடந்த ஆண்டு சர்வதேச நாணய நிதியமானது செப்டம்பர் மாதம் கொடுக்க வேண்டிய இரண்டாவது தவணையை, அரசாங்கம் டிசம்பரில் அதன் 2024 தேசிய வரவு செலவுத் திட்டத்தில் கடுமையான சிக்கன நடவடிக்கைகளை அமுல்படுத்தும் வரை கொடுக்காமல் தாமதப்படுத்தியது.

உலக சோசலிச வலைத் தளம் உடன் பேசிய இ.மி.ச. ஊழியர்கள், தொழிற்சங்கத் தலைமையானது, நிறுவனத்தின் அச்சுறுத்தல் கடிதங்களுக்கு மெத்தனமாக பிரதிபலித்துள்ளதாகவும், தாம் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகக் கூறி நிர்வாகத்திற்கு பதில் எழுதுமாறு தொழிற்சங்க உறுப்பினர்களுக்கு அறிவுறுத்துவதாகவும் தெரிவித்தனர்.

ஜனவரி 3-5 எதிர்ப்பு பிரச்சாரமானது இ.மி.ச.யின் ஒன்றிணைந்த தொழிற்சங்கக் கூட்டினால் (JTUC) ஆரம்பிக்கப்பட்டது. இதில் எதிர்க்கட்சியான மக்கள் விடுதலை முன்னணி, ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் உள்ள தொழிற்சங்கங்கள் பங்காளிகளாக உள்ளன.

தொழிலாளர்களின் எழுச்சி மற்றும் போராடுவதற்கான உறுதிப்பாட்டிற்கு மத்தியில் தொழிற்சங்க கூட்டு இந்த எதிர்ப்புக்கு அழைப்பு விடுக்க நிர்ப்பந்திக்கப்பட்ட போதிலும், பல ஆண்டுகளாக இந்த தொழில் அழிப்புத் திட்டம் வெளிப்படையானதாக இருந்த போதிலும், தொழிற்சங்க அதிகாரத்துவம் தனியார்மயமாக்கலுக்கு எதிரான எந்தவொரு உண்மையான போராட்டத்தையும் முன்னெடுப்பதை தடுத்து வந்துள்ளது.

கடந்த ஆண்டு, அரசுக்கு சொந்தமான துறையில் தொழிலாளர்களை அங்கத்தவர்களாகக் கொண்ட தொழிற்சங்கங்கள் நூற்றுக்கணக்கான தொழில்கள் அழிக்கப்படுவதை வெறுமனே பார்த்துக்கொண்டிருந்தன.

* செப்டம்பர் 30 அன்று, கூட்டுறவு மொத்த விற்பனை நிறுவனத்தில் அனைத்து 292 தொழில்களையும் நீக்கிய அரசாங்கம், தொழிலாளர்களை கட்டாய ஓய்வு திட்டத்தை ஏற்க நிர்ப்பந்தித்தது.

* 2023 ஜூனில், இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாகம், காப்புறுதிப் பொது ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளரையும், மற்றுமொரு தொழிற்சங்கத் தலைவரையும், அந்த நிறுவனத்தின் தனியார்மயமாக்கலுக்கு எதிராக தொழிலாளர்களை அணிதிரட்டத் துணிந்ததற்காக பலவந்தமாக இடமாற்றம் செய்தது.

* 2023 மார்ச் மாதம், மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சானது இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வேலைநிறுத்த நடவடிக்கையை ஒடுக்க 20 தொழிற்சங்கத் தலைவர்களையும் இன்னும் பல ஊழியர்களையும் கட்டாய விடுமுறையில் வைத்தது. ஏறக்குறைய ஒரு வருடம் ஆகியும் இன்னும் அவர்கள் மீண்டும் வேலையில் சேர்க்கப்படவில்லை. இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன தொழிற்சங்கங்கள் இந்த ஜனநாயக விரோத தாக்குதலை தோற்கடிக்க தொழிற்சங்க நடவடிக்கைக்கு அழைப்பது ஒருபுறம் இருக்க, இந்த பாதிப்புகள் பற்றி தங்கள் உறுப்பினர்களுக்கு முழுமையாக தெரிவிக்கத் தவறிவிட்டன.

இந்த அப்பட்டமான பழிவாங்கல்களுக்கு எதிராக இலங்கை தொழிற்சங்கங்கள் போராட மறுத்தமை, இந்த வாரம் இ.மி.ச. ஊழியர்கள் மீதான தாக்குதலுக்கான நிலைமையை உருவாக்கியுள்ளது.

இ.மி.ச. தொழிற்சங்கத் தலைவர்கள் அரசாங்கத்தின் தாக்குதல்களுக்கு எதிராகப் போராடும் தொழிலாளர்களை நிராயுதபாணியாக்கித் தடுக்கிறார்கள் என்று மின்சார ஊழியர்களையும், ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தையும் நாம் எச்சரிக்கிறோம்.

சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன உத்தரவுகளுக்கு விக்கிரமசிங்க நிர்வாகம் ஒப்புக்கொண்டு ஒன்பது மாதங்கள்தான் ஆகின்றன. இலங்கை தொழிற்சங்க அதிகாரத்துவம் மற்றும் அவற்றைக் கட்டுப்படுத்தும் அரசியல் கட்சிகள் இந்த கொடூரமான சமூக நடவடிக்கைகளுடன் எந்த அடிப்படை வேறுபாடுகளையும் கொண்டிருக்கவில்லை. அரசாங்கத்திற்கு எதிரான அரசியல் மற்றும் தொழில்துறை போராட்டத்தில் தொழிலாளர்களை அணிதிரட்டுவதற்குப் பதிலாக, அவை தொழிலாளர்களின் கோபத்தைக் கலைக்க தனிமைப்படுத்தப்பட்ட போராட்டங்களுக்கு அழைப்பு விடுக்கின்றன.

இ.மி.ச. தொழிலாளர்கள் தங்கள் வர்க்க சகோதர சகோதரிகளின் பக்கம் திரும்ப வேண்டுமென நாம் வலியுறுத்தி, தொழிலாளர்கள் மீதான ஒவ்வொரு அரசாங்கத் தாக்குதலையும் தோற்கடிக்க ஐக்கியப்பட்ட நடவடிக்கையை ஒழுங்கமைக்க அழைப்பு விடுக்கிறோம். அரச மற்றும் தனியார் துறைகளில் உள்ள அனைத்து தொழிலாளர்களும், “எங்கள் இ.மி.ச சகாக்களுக்கு எதிரான பழிவாங்கல் வேண்டாம்!” மற்றும் “அத்தியாவசிய சேவைகள் சட்டத்தை இரத்துச் செய்!” என்று கோருவதற்கு ஒத்துழைப்பு நடவடிக்கைகளைத் தயாரிக்க வேண்டும்.

இ.மி.ச. போராட்டம், தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாகி, தங்களுடைய அனைத்து அடிப்படை உரிமைகளையும் பாதுகாக்க போராடுவதற்கு, தொழிலாளர்கள் தங்களுடைய சொந்த நடவடிக்கை குழுக்களை ஸ்தாபிப்பதன் மூலம் விஷயங்களை தங்கள் கைகளில் எடுத்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை மீண்டும் வெளிப்படுத்துகிறது. இந்தக் குழுக்களை அமைப்பதில் தொழிலாளர்களுக்கு உதவ சோ.ச.க. தயாராக உள்ளது.

அதே நேரத்தில், சர்வதேச சோசலிசத்திற்கான போராட்டத்தின் ஒரு பகுதியாக சோசலிசக் கொள்கைகளை நடைமுறைப்படுத்த ஒரு தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் அரசாங்கத்திற்கான போராட்டத்தில் மட்டுமே தொழிலாள வர்க்கம் அதன் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க முடியும் என்று சோ.ச.க. வலியுறுத்துகிறது.

Loading