முன்னோக்கு

அமெரிக்க ஏகாதிபத்தியம் மத்திய கிழக்கை தீக்கிரையாக்குகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

கடந்த வியாழன் அன்று, பலூச்சி பிரிவினைவாத கிளர்ச்சியாளர்களின் தளங்கள் என்று கூறியதை இலக்காகக் கொண்டு, அணு ஆயுதம் ஏந்திய பாகிஸ்தான் அண்டை நாடான ஈரானுக்குள் குறைந்தது ஏழு தனித்தனி இடங்கள் மீது வான்வழியால் ஏவப்பட்ட ராக்கெட் மற்றும் ட்ரோன்-ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளது.

அதன் தேசிய இறையாண்மையை மீறுவதாகக் கண்டித்துள்ள ஈரான், இந்த தாக்குதல்களில், நான்கு குழந்தைகள் உட்பட ஒன்பது வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டதாக கூறியுள்ளது. பலூச் விடுதலை இராணுவம் தனது படைகள் தாக்குதலுக்கு உள்ளானதை உறுதிப்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் மிக ஏழ்மையான மற்றும் குறைந்த மக்கள்தொகை கொண்ட மேற்குப் பகுதியில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தில், பல தசாப்தங்களாக எல்லை தாண்டிய கிளர்ச்சியை பலூச் விடுதலை இராணுவம் நடத்தி வருகிறது.

பாகிஸ்தான் இதுபற்றி வெளிப்படையாக கூறவில்லை என்றாலும், வியாழன் தாக்குதல்கள் ஈரான் பாகிஸ்தானுக்குள் சுமார் 48 மணி நேரத்திற்கு முன்பு நடத்திய தாக்குதலுக்கு ஒரு பகுதி பதிலடியாக இருந்தது.

ஈரானின் கூற்றுப்படி, இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை (IRGC) ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களைப் பயன்படுத்தி, ஈரானின் பெரும்பான்மையான பலூச்சி தென்கிழக்கு பகுதியில் தாக்குதல்களை நடத்திய ஜெய்ஷ் அல்-அட்ல் என்ற பலூச்சி ஆயுதப் பிரிவினைவாதக் குழுவின் முகாம்களைத் தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, பாகிஸ்தானுடனான சகோதர உறவுகளை சீர்குலைக்க விரும்பவில்லை என்று தெஹ்ரான் வலியுறுத்தியது. ஆனால் வாஷிங்டன் மற்றும் இஸ்ரேலுக்கான ஒரு செய்தியில், ஈரான் தன்னைத் தற்காத்துக் கொள்ள தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க உரிமை உள்ளது என்று கூறியுள்ளது.

ஈரானுக்கும் பாக்கிஸ்தானுக்கும் இடையிலான பதில் தாக்குதல்கள், ஏற்கனவே அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் அதன் கூட்டாளிகளால் தீ வைக்கப்பட்டுள்ள ஒரு பிராந்தியத்தில் மேலும் எரிபொருளை ஊற்றுகின்றன. அவை காஸாவில் பாலஸ்தீனியர்கள் மீதான இஸ்ரேலின் இனப்படுகொலைப் போரைப் பயன்படுத்தி ஈரானுடன் ஒரு பரந்த போரைத் தயாரிக்கவும் தூண்டவும் செய்கின்றன.

கடந்த புதன் மற்றும் வியாழன் மாலையில், அமெரிக்கா ஒரு வாரத்தில் யேமன் மீது ஏவுகணைத் தாக்குதல்களின் நான்காவது மற்றும் ஐந்தாவது அலைகளை நடத்தியது. ஈரானிய ஆதரவு ஹவுதி நிலைகள் என்று குறிப்பிட்டு, நாடு முழுவதும் வேறுபட்ட பகுதிகளில் இந்த தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. முன்னதாக வியாழன் அன்று செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடென், ஹவுதிகளுக்கு எதிரான அமெரிக்க-பிரிட்டன் வான்வழித் தாக்குதல் தொடரும் என்று உறுதியளித்தார்.

யேமன் மக்களின் பரந்த பிரிவினரின் ஆதரவுடன், காஸா மீதான இஸ்ரேலிய படுகொலைத் தாக்குதலை நிறுத்த அழுத்தம் கொடுப்பதற்காக ஹவுதி போராளிகள் செங்கடலில் கப்பல் போக்குவரத்தை சீர்குலைத்துள்ளனர்.

மேலும் புதன்கிழமை, பைடென் நிர்வாகம் ஹூதிகளை “சிறப்பாக வடிவமைக்கப்பட்ட உலகளாவிய பயங்கரவாதக் குழுவாக” முத்திரை குத்தியுள்ளது. இது யேமன் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை சுமத்துவதற்கான கதவைத் திறந்துள்ளது. இதற்கு உடனடியாக பதிலளித்துள்ள மனிதாபிமான குழுக்கள், இந்த முத்திரை குத்தல், யேமனில் மனிதாபிமான நெருக்கடியை கணிசமாக தீவிரப்படுத்தும் அபாயத்தை எச்சரித்துள்ளது. அமெரிக்காவின் ஆயுதங்கள் மற்றும் தளவாட ஆதரவுடன் ஏறக்குறைய ஒரு தசாப்த காலமாக சவூதி ஆட்சி யேமனில் நடத்தி வரும் போரின் விளைவாக, நாட்டின் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் தொகையில், 18 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு உணவு மற்றும் பிற உதவிகள் தேவைப்படுகின்றன.

இதற்கிடையில், செங்கடலில் தனது சொந்த கடற்படை நடவடிக்கையை திட்டமிடுவதில் முன்னேறிய நிலையில் உள்ள ஐரோப்பிய ஒன்றியம், யேமன் மீதான அமெரிக்க/பிரிட்டன் தாக்குதல்களை ஆதரிக்கும் அதே வேளையில், ஒரு பிராந்திய போலீஸ்காரராக தனது சொந்த பங்கை உறுதிப்படுத்த முயற்சி செய்து வருகிறது. Welt am Sontag செய்தித்தாளின் அறிக்கையின்படி, பிப்ரவரி தொடக்கத்தில், பிராந்தியத்திற்கு ஒரு போர்க்கப்பலை அனுப்புவதன் மூலம் ஜேர்மன் அரசாங்கம் இந்த பணியைத் தொடங்குவதற்கு தலைமை தாங்குகிறது. மத்திய கிழக்கில் ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் பெரிய இராணுவ விரிவாக்கத்தை அடிக்கோடிட்டுக் காட்டும் வகையில், காஸாவில் இஸ்ரேலிய இனப்படுகொலைக்கு ஆதரவாக 10,000ம் பீரங்கி குண்டுகளை வழங்குவதற்கு பேர்லின் தயாராகி வருகிறது.

வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளிடம் இருந்து இஸ்ரேலுக்கு கிடைத்து வரும் உறுதியான ஆதரவால் தைரியமடைந்துள்ள இஸ்ரேலின் பாசிச பிரதம மந்திரி பெஞ்சமின் நேதன்யாகு, வியாழனன்று, நிரந்தரமாக அகண்ட இஸ்ரேல் என்ற தனது மொட்டை இலக்கை மீண்டும் வலியுறுத்தினார். மேற்குக் கரையின் எந்தப் பகுதியிலும் தமது இறையாண்மையை அவரது அரசாங்கம் விட்டுக்கொடுக்க ஒருபோதும் உடன்படாது என்று அவர் கூறினார்.

தன் பங்கிற்கு, இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக், உலகின் பெருநிறுவன மற்றும் அரசியல் உயரடுக்கின் டாவோஸ் உச்சிமாநாட்டில் “ஈரானில் இருந்து வெளிப்படும் தீய சாம்ராஜ்யத்தையும்” பிராந்தியம் முழுவதிலும் உள்ள அவர்களின் பினாமிகளையும் எதிர்கொள்ள “மிகவும் வலுவான கூட்டணி” தேவை என்று கூறினார். இஸ்ரேல், லெபனான் முழுவதுமாக ஆக்கிரமிப்பைத் தொடங்கத் தயாராகி வரும் சூழ்நிலையில், கடந்த மூன்று மாதங்களில் மீண்டும் மீண்டும் ஊடுருவல் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்திய நிலையில், ஹெர்சாக், “ஈரானால் கழுத்துவரை ஆயுதம் ஏந்திய, நிதியளிக்கப்பட்ட ஹெஸ்பொல்லாவின் தாக்குதல்களுக்கு” எதிராக குற்றம் சாட்டினார்.

தானியங்கி ஹோவிட்ஸ் ரக பீரங்கியால்  இஸ்ரேலிய படையினர்கள் சுடுகின்றனர். [AP Photo/Ohad Zwigenberg]

நாளுக்கு நாள், இஸ்ரேல் பாலஸ்தீனியர்களை படுகொலை செய்வதைத் “தடுக்க” பைடென் முயன்று வருவதாக மேற்கத்திய ஊடகங்கள் பொய்களை பரப்பி வருகின்றன. இருப்பினும் அவரது நிர்வாகம் இஸ்ரேலை ஆயுதம் ஏந்த வைத்திருப்பதோடு, அவரது உத்தரவின் பேரில், அமெரிக்க இராணுவம் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளுக்கு நேரடியான உதவிகளை வழங்கி வருகிறது. மத்திய கிழக்கில் ஒரு பரந்த போரைத் தடுப்பதற்காக பைடெனும், அவருக்கு பக்கபலமாக இருக்கும் உதவியாளரான வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கனும், வேலை செய்து வருகிறார்கள் என்ற அவர்களின் கூற்றுக்கள் குறைவான மோசடி அல்ல.

காஸா போரின் தொடக்கத்திலிருந்தே, (வாஷிங்டன் இரண்டு விமானம் தாங்கிக் கப்பல் அணிகளுடன், அணுசக்தியால் இயங்கும் மற்றும் அணு ஆயுதம் கொண்ட நீர்மூழ்கிக் கப்பல்கள் பின்பு இணைத்துக் கொள்ளப்பட்டன) ஈரான் மற்றும் அதன் நட்பு நாடுகள் மீது இராணுவ அழுத்தத்தை அதிகரிக்கும் கொள்கையை அமெரிக்கா பின்பற்றி வருகிறது. இஸ்ரேலுடன் இணைந்து, ஈராக் மற்றும் சிரியாவில் தொடர்ச்சியான தாக்குதல்கள் மற்றும் இப்போது யேமனுக்கு எதிராக வேகமாக விரிவடைந்து வரும் வான்வழிப் போர் உட்பட, ஈரானின் நட்பு நாடுகள் மற்றும் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையின் ஆயுத பலத்தை பிராந்தியம் முழுவதும் “சீரழிக்க” அமெரிக்கா முயன்று வருகிறது.

விமானம் தாங்கி கப்பலான யுஎஸ்எஸ் டுவைட் டி. ஐசனோவர் மற்றும் வேகமான போர் ஆதரவு விநியோகக் கப்பலான யுஎஸ்என்எஸ் ஆகியவை ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கின்றன, Dec. 14, 2023. [Photo: Navy Petty Officer 2nd Class Keith Nowak]

இந்த நடவடிக்கைகள், ஈரானுடன் எந்த நேரத்திலும் வரக்கூடிய நேருக்கு நேர் மோதலுக்கான ஆயத்த நடவடிக்கைகளாகும். பென்டகன் பல தசாப்தங்களாக இத்தகைய போருக்குத் திட்டமிட்டு வருவது மட்டுமல்லாமல், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பார்வையில், (உலகின் முதன்மையான எண்ணெய்-ஏற்றுமதி பிராந்தியத்தின் மீது கட்டுப்பாடற்ற மேலாதிக்கத்தைப் பாதுகாத்தல், யூரேசியா, ஆப்பிரிக்கா மற்றும் முழு இந்தியப் பெருங்கடல் பகுதியிலும் புவிசார் அரசியல் அதிகாரத்தை முன்னிறுத்துவதற்கு தனித்துவமான ஒரு பகுதி) அதன் மூலோபாய நோக்கங்கள், ரஷ்யாவுடன் ஒரு நடைமுறைப் போரில் ஈடுபட்டு, சீனாவுடன் போருக்கு சதி செய்து வருவதாகும். இது முன்னரைவிட இன்று முக்கியமானதாக ஆகியுள்ளது.

மாஸ்கோவும் பெய்ஜிங்கும் ஈரானுடன் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளன, அவை அனைத்தையும் குறிவைக்கும் அமெரிக்க மூலோபாயத் தாக்குதல்களுக்கு விடையிறுக்கும் வகையில், ஈரானை எதிர்கொள்ளும் வாஷிங்டனின் உறுதியை இது அதிகப்படுத்தியுள்ளது.

காஸா மற்றும் உக்ரேனில் நடந்துவரும் போர்கள் மற்றும் வளர்ந்துவரும் அமெரிக்க-சீனா மோதலுக்கு இடையேயான தொடர்பை பைடென் மற்றும் பிளிங்கன் ஆகிய இருவரும் உருவாக்கியுள்ளனர். உண்மை என்னவென்றால், இவை வேகமாக வளர்ந்து வரும் உலகளாவிய மோதலில் வெவ்வேறு களங்களாக இருக்கின்றன. ஏனெனில் அமெரிக்க ஏகாதிபத்தியம், அதன் பொருளாதார சக்தியின் வீழ்ச்சியை ஈடுகட்ட, போர், கொள்ளை மற்றும் காலனித்துவ அடிமைத்தனத்தினை மீளக் கொண்டுவருவதன் மூலம் உலகளாவிய மேலாதிக்கத்தை நிலைநாட்ட தீவிரமாக முயன்று வருகிறது. அதே, அத்தியாவசிய காரணங்களுக்காக, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய சக்திகள் வாஷிங்டனைப் பின்பற்றுகின்றன, அதே நேரத்தில் இராணுவப் படைகள் உட்பட, தங்கள் சொந்த நலன்களை ஆக்கிரோஷமாக வலியுறுத்துவதற்கான அடிப்படையை நிறுவ முயற்சிக்கின்றன.

ஈரான்-பாகிஸ்தானுக்கு இடையே நடந்த தாக்குதலுக்கு பதில் ஏவுகணைத் தாக்குதல்கள் மற்றும் வடக்கு ஈராக் மற்றும் சிரியாவில் குர்திஷ் போராளிகளுக்கு எதிராக இந்த வார தொடக்கத்தில் துருக்கி நடத்திய தாக்குதல்களுடன் சேர்ந்து, மத்திய கிழக்கில் ஏகாதிபத்தியப் போரின் தீவிரம் பல்வேறு பிராந்திய மோதல்களுடன் குறுக்கிடுகிறது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இவை அனைத்தும் மிகவும் வெடிக்கும் ஆற்றல் வாய்ந்தவை. இந்த மோதல்கள் வரலாற்று ரீதியாக ஏகாதிபத்திய அடக்குமுறையில் வேரூன்றியவையாகும். இவற்றில் இருந்துதான், முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்களின் முடிவில் மத்திய கிழக்கு மக்கள் மீது தன்னிச்சையாக எல்லைகள் திணிக்கப்பட்டன.

பாக்கிஸ்தான் மற்றும் ஈரான் ஆகிய இரண்டும் அவரவர் மேற்கொண்ட தாக்குதல்கள் முழுவதுமாக வெளிநாட்டு அடிப்படையிலான கிளர்ச்சியாளர்களுக்கு எதிரானவை என்று காட்ட முற்பட்டுள்ளன. ஆனால், அத்தகைய விளக்கங்கள் இதுவரை மட்டுமே செல்ல முடியும்.

பாகிஸ்தான் அரசியல் ஸ்தாபனத்தில் மிக முக்கியமான பாத்திரத்தை வகித்துவரும் அதன் ராணுவம், ஈரானின் எல்லை மீறலுக்கு பதிலளிக்கத் தவறினால், இந்தியாவுடனான அதன் மூலோபாய போட்டி மற்றும் அதன் உள்நாட்டு நிலைப்பாட்டில் ஏற்படும் தாக்கம் குறித்து சந்தேகத்திற்கு இடமின்றி கவலைப்பட்டிருக்கும். 2019 இல், இந்திய எல்லை தாண்டிய தாக்குதலுக்கு பாகிஸ்தான் தனது சொந்த தாக்குதலின் மூலம் பதிலடி கொடுத்தபோது இந்தியாவும் பாகிஸ்தானும் ஆபத்தான போருக்கு நெருங்கி வந்தன.

இருப்பினும், பாகிஸ்தான் பதிலடி கொடுத்ததில் ஈரான் அதிர்ச்சியமடைந்ததாக பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன. பாக்கிஸ்தானுடனான உறவுகள் பெரும்பாலும் அதன் இராணுவத்தை அடிப்படையாகக் கொண்டிருப்பதால், வாஷிங்டன் இதற்கு ஊக்கத்தையும் முன் அனுமதியையும் வழங்கியிருக்கும் என்று நம்புவதற்கு எல்லா காரணங்களும் உள்ளன.

தங்களின் சமீபத்திய அறிக்கைகளில் தெஹ்ரான் மற்றும் இஸ்லாமாபாத் ஆகியவை, தங்கள் உறவுகளை மீட்டெடுக்க விரும்புவதாக சுட்டிக்காட்டியுள்ள அதே நேரத்தில், இந்த மோதலுக்கு சீனா மத்தியஸ்தம் செய்ய முன்வந்துள்ளது.

எவ்வாறாயினும், வாஷிங்டன், அதன் ஏகாதிபத்திய கூட்டாளிகள் மற்றும் அவர்களின் முக்கிய பிராந்திய வாடிக்கையாளரான இஸ்ரேலின் தலைமையில் ஒரு பிராந்திய மோதலை நோக்கிய வேகமான விரிவாக்கத்தில் மத்திய கிழக்கு முழுவதிலும் இயங்கி வருகிறது.

அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள், யேமன் மீதான தாக்குதல்கள் மற்றும் ஈரானுக்கு எதிரான ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு பிரச்சாரத்தின் தீவிரத்தை சந்தேகத்திற்கு இடமின்றி எதிர்க்க வேண்டும், இந்த இரு நாடுகளும் இரண்டு வரலாற்று ரீதியாக ஒடுக்கப்பட்ட நாடுகளாகும், மேலும் இந்த தாக்குதல்களுக்கு எதிராக அணிதிரள வேண்டும்.

ரஷ்யா மற்றும் சீனாவில் முறையே புட்டின் மற்றும் ஷி தலைமையிலான முதலாளித்துவ மறுசீரமைப்பு ஆட்சிகளைப் போலவே, ஈரானின் முதலாளித்துவ தேசியவாத ஆட்சி, ஏகாதிபத்திய சக்திகளின் இரத்தக்களரியான மறுபகிர்வு மூலம் தங்கள் உலக மேலாதிக்கத்தை மீண்டும் நிலைநிறுத்துவதற்கான உந்துதலுக்கு எந்தவிதமான முற்போக்கான பதிலையும் வழங்குவதற்கு இயல்பிலேயே இலாயக்கற்று இருக்கிறது.

ஏகாதிபத்திய போருக்கு நிதியளிப்பதற்காக தொழிலாள வர்க்கத்தை சுரண்டுவதை வியத்தகு முறையில் தீவிரப்படுத்தும் உந்துதல் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான பரந்த தாக்குதல்கள் என்பன, உலகத் தொழிலாளர்கள் மற்றும் உழைக்கும் மக்களுக்கு எதிரான போரின் வடிவத்தை எடுக்கிறது.

உலக சோசலிச வலைத் தளம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் அதன் அறிக்கையில் விளக்கியது போல், முதலாளித்துவ காட்டுமிராண்டித்தனத்திற்கான பதில் (இனப்படுகொலை, அணுவாயுத யுத்தம், பாசிச எதிர்வினை மற்றும் இணையற்ற சமூக சமத்துவமின்மையை “இயல்பாக்குதல்”) “தொழிலாள வர்க்கத்தின் அரசியல் முன்னோக்கிலிருந்து சோசலிசத்தை இயல்பாக்குவதாக” இருக்க வேண்டும். அதன் வாழ்க்கைத் தரங்கள் மற்றும் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான இடைவிடாத தாக்குதலுக்கு எதிராகவும், தொழிலாள வர்க்கத்தின் உலகளாவிய எழுச்சியுடன் காஸாவில் நடந்துவரும் இனப்படுகொலைக்கு பாரிய எதிர்ப்புகளும் வளர்ச்சியடைந்து வருகிறது. இது முதலாளித்துவத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும் தொழிலாளர்களின் அதிகாரத்தை ஸ்தாபிப்பதற்கும் ஒரு ஒருங்கிணைந்த போராட்டத்தை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்ட, ஒரு புரட்சிகர சோசலிச முன்னோக்கை உட்செலுத்துவது அவசியமானதாகும்.

Loading