தைவானின் தேர்தல் முடிவுகள் சீனாவுடன் அதிகரித்து வரும் பதட்டங்களை சமிக்கை செய்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஜனவரி 13 அன்று நடைபெற்ற தைவான் தேர்தலில் கோமிண்டாங்கிலிருந்து [Kuomintang (KMT)] ஹூ யு-ஐ (Hou Yu-ih) மற்றும் புதிதாக நிறுவப்பட்ட தைவான் மக்கள் கட்சி [Taiwan People’s Party (DPP)] கோ வென்-ஜே (Ko Wen-je) ஆகியோரைத் தோற்கடித்து சுதந்திர ஆதரவு ஜனநாயக முற்போக்குக் கட்சியின் [Democratic Progressive Party (DPP)] வேட்பாளரான லாய் சிங்-தே (Lai Ching-te) வெற்றி பெற்றுள்ளார். ஏற்கனவே DPP இல் இருந்த அவருக்கு முன்னோடியான சாய் இங்-வெனின் (Tsai Ing-wen) கொண்டிருந்த சீனாவுடனான ஆபத்தான மோதலை மட்டுமே அமெரிக்காவுடனான கூட்டணியில் லாய் துரிதப்படுத்துவார்.

தைவானின் துணைத் தலைவர் வில்லியம் லாய் என்று அழைக்கப்படும் லாய் சிங்-தே (Lai Ching-te), நடுவில் இருப்பவர், தைவானின் தைபேயில், சனிக்கிழமை, ஜனவரி 13, 2024 இல் தனது வெற்றியைக் கொண்டாடுகிறார். [AP Photo/Chiang Ying-ying]

மே மாதம் பதவியேற்கவிருக்கும் லாய், டிரம்ப் மற்றும் பைடென் நிர்வாகத்தின் கீழ் தீவின் நிலைகுறித்து சீனாவுடன் பதட்டங்களை அதிகரித்திருக்கிற அமெரிக்காவின் மறைமுக ஆதரவைக் பெற்றிருக்கிறார். பெய்ஜிங்கை தைவான் உட்பட அனைத்து சீனாவின் சட்டபூர்வமான அரசாங்கமாக நடைமுறையில் அங்கீகரிக்கும் ஒரே சீனா கொள்கைத்திட்டத்தை பெயரளவிற்கு கடைப்பிடிக்கும் வாஷிங்டன் அதே நேரத்தில், தைபேயுடனான அரசியல் மற்றும் இராணுவ உறவுகளை வலுப்படுத்துவதன் மூலம் அமெரிக்கா அந்தத் திட்டத்தை வேண்டுமென்றே குறைமதிப்பிற்கு உட்படுத்தியுள்ளது.

தேர்தலில் லாயின் வெற்றியை “சீன தலையீட்டிற்கு” மறுப்பு என்றும் ஜனநாயகத்திற்கான வெற்றி என்றும் அமெரிக்க மற்றும் சர்வதேச ஊடகங்கள் எக்காளமிட்டுள்ளன. உண்மையில், லாய் 40 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளுடன் தீவின் தேர்தலுக்குப் பிந்தைய விகிதாச்சார பிரதிநிதித்துவம் முறையின் அடிப்படையில் மட்டுமே ஜனாதிபதி பதவியை வென்றிருக்கிறார்.

2017 இல் தன்னை “தைவான் சுதந்திரத்திற்கான நடைமுறைத் தொழிலாளி” என்று விவரித்த லாய், பிரச்சாரத்தின்போது தனது சுதந்திர சார்பு நிலைப்பாட்டைக் குறைத்துக் காட்டியுள்ளார், ஏனெனில் பெரும்பான்மையான வாக்காளர்கள் சீனாவுடன் மேற்கொள்ளும் போருக்கான நடவடிக்கைக்காகப் அச்சப்படுகிறார்கள் என்பதை நன்கு அறிந்துவைத்திருந்தார். பெய்ஜிங் தைவானுடன் அமைதியான முறையில் மீண்டும் ஒன்றிணைவதை விரும்புவதாகப் பலமுறை அறிவித்துள்ளது, ஆனால் தைபே சீனாவிலிருந்து விலகிச் சுதந்திரத்தை அதிகாரபூர்வமாக அறிவித்தால் அது தனது பலத்தைக் காட்டும்.

தற்போதைய ஜனாதிபதியான சாய் இங்-வென், இரண்டுமுறை நான்கு ஆண்டுகள் பதவி வகித்தபிறகு மீண்டும் போட்டியிட தகுதியற்ற நிலையில், தைவான் ஏற்கனவே ஒரு இறையாண்மை கொண்ட நாடு என்றும் முறையான சுதந்திரத்தை அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறி உடனடியாக ஏற்படும் மோதலைத் தவிர்க்க முயன்றார். அதே நேரத்தில், சாய்  வாஷிங்டனின் ஆதரவுடன், சீனாவுடன் போருக்கான தயாரிப்புகளில் தைவான் இராணுவத்தை பலப்படுத்தினார்.

பிரச்சாரத்தின்போது, சாய் இன் சூத்திரங்களைக் கடைப்பிடித்து, தைவான் ஜலசந்தி முழுவதும் தற்போதைய நிலையைப் பேணுவதாக லாய் அறிவித்தார். எவ்வாறாயினும், அவர் சீனாவுடன் மீண்டும் ஒன்றிணைவதை எதிர்க்கிறார் மற்றும் அதிக சுதந்திரத்திற்காக முதன்மை வெற்றியாளராக காட்டிக்கொள்கிறார்.

ஜூலை மாதம் பிரச்சாரத்தின்போது, தைவான் வாஷிங்டனுடன் நெருக்கமான உறவுகளை விரும்புவதாக லாய் அறிவித்தார். “தைவானின் ஜனாதிபதி வெள்ளை மாளிகைக்குள் நுழையும்” நாளை எதிர்பார்த்திருப்பதாக அவர் ஆத்திரமூட்டும் வகையில் விருப்பத்தைத் தெரிவித்தார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தைவான் ஜனாதிபதி ஒரு சுதந்திர நாட்டின் தலைவராகக் கருதப்பட வேண்டும். இதே பாணியில், பெய்ஜிங் அத்தகைய நிபந்தனையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்பதை நன்கு அறிந்திருந்தும், சீனாவுடனான எந்தவொரு பேச்சுவார்த்தையும் “சமமாக” இருக்க வேண்டும் என்று லாய் அறிவிக்கிறார்.

லாய் தனது வெற்றிப் பேரணியை தைவானிய தேசியவாதத்தின் கொண்டாட்டமாக மாற்றி, ஆதரவாளர்களிடம் கூறினார்: “இது தைவானுக்குச் சொந்தமான இரவு. தைவானை உலக வரைபடத்தில் வைத்திருக்க எங்களால்தான் முடிந்தது”. நீரிணைப்புப் பகுதியைத் தக்கவைத்துக் கொள்வதாகக் கூறும்போது, அவர் மேலும் கூறுகையில்: “அதே நேரத்தில், சீனாவின் தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள் மற்றும் மிரட்டல்களிலிருந்து தைவானைப் பாதுகாப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.” 

லாயின் துணை ஜனாதிபதியாக வரும் சியாவோ பி-கிம் (Hsiao Bi-khim), அமெரிக்காவிற்கான தைவானின் உண்மையான தூதராகப் பணியாற்றியவர். அவரது ஆக்ரோஷமான சீன எதிர்ப்பு நிலைப்பாட்டில் பெயர் பெற்ற அவர், மேற்கத்திய ஊடகங்களில் “ஓநாய் வீரர்கள்” என்று முத்திரை குத்தப்பட்ட சீன இராஜதந்திரிகளுக்கு அளித்த அவரது நேரடியான பதில்களுக்காக “பூனை போர்வீரர்” என்ற புனைப்பெயரைப் பெற்றிருக்கிறார்.

பெய்ஜிங்கிற்கு எதிரான அதன் இராஜதந்திர மற்றும் பொருளாதாரத் தாக்குதலை வாஷிங்டன் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், போருக்கான தயாரிப்பில் பெரும் இராணுவக் கட்டமைப்புடன் சீனாவுடனான தைவான் மோதல் முன்னுக்கு வந்துள்ளது. அமெரிக்காவும் அதன் நேட்டோ நட்பு நாடுகளும் ரஷ்யாவை உக்ரேனை ஆக்கிரமிப்பதற்குத் தூண்டிய அதே வழியில், வாஷிங்டன் தைவானை சீனாவின் இராணுவப் பொறியாக மாற்ற முயல்கிறது, அது அதன் உலகளாவிய மேலாதிக்கத்திற்கு சீனா முக்கிய அச்சுறுத்தலாக இருப்பதாகக் கருதுகிறது.

சனிக்கிழமை தேர்தலுக்குச் சற்று முன்னதாக, முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்டீபன் ஹாட்லி மற்றும் முன்னாள் துணை அரச செயலாளர் ஜேம்ஸ் ஸ்டெய்ன்பெர்க் ஆகியோர் தலைமையில் ஒரு உயர்மட்டக் குழுவை அமெரிக்கா தைவானுக்கு அனுப்பும் என்று பைடென் நிர்வாகம் ஊடகங்களுக்குக் கசியவிட்டது. அந்த அணி ஞாயிற்றுக்கிழமை வரவிருந்தது.

லாயை ஒரு “தொந்தரவு செய்பவர்” என்று கருதும் சீனா, அவர் தேர்ந்தெடுக்கப்பட்டால் மோதலின் ஆபத்துகள் குறித்து எச்சரித்தது, ஒரே சீனா கொள்கையை மீண்டும் வலியுறுத்தியது மற்றும் தீவில் வெளிநாட்டு தலையீட்டை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்தது. இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “தைவானில் என்ன மாற்றங்கள் நடந்தாலும், உலகில் ஒரே ஒரு சீனா மட்டுமே உள்ளது, தைவான் சீனாவின் ஒரு பகுதியாகும் என்ற அடிப்படை உண்மை மாறாது” என்றார்.

காயத்தில் உப்பைத் தேய்க்கும் வகையில், கடந்த காலத்தில் தைவானின் தேர்தல்களைப் பெரிதும் புறக்கணித்திருந்த அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் இப்போது லாய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளன. அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் “மீண்டும் ஒருமுறை அவர்களின் வலுவான ஜனநாயக அமைப்பு மற்றும் தேர்தல் செயல்முறையின் வலிமையை நிரூபித்ததற்காக” தைவான் மக்களைப் பாராட்டியுள்ளார். அதற்குச் சீனாவின் வெளியுறவு அமைச்சகம், இந்த அறிக்கை “தைவானுடன் கலாச்சார, பொருளாதார மற்றும் பிற அதிகாரப்பூர்வமற்ற உறவுகளை மட்டுமே பராமரிக்கும் என்ற அமெரிக்க வாக்குறுதிகளைக் கடுமையாக மீறியுள்ளது” என்று அறிவித்துள்ளது.

லாய் மற்றும் DPP மூன்றாவது முறையாக ஜனாதிபதி பதவிக்கு வெற்றி பெற்றாலும், தேர்தல் முடிவு அவர்களின் கொள்கைகளுக்கு ஒரு பெரிய ஆதரவு இல்லை. KMT கட்சி வேட்பாளர் ஹூ (Hou) 33.5 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார், அதே சமயம் சுயேச்சையான TPP கட்சியின் கோ (Ko) மற்றும் 26.5 சதவீத வாக்குகளைப் பெற்றிருக்கிறார். சீனாவுடனான பதட்டத்தைத் தணிக்க விரும்பும் இவ் இரு வேட்பாளர்களும் சேர்ந்து 60 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளனர். 50 சதவீதத்திற்கும் குறைவான வாக்குகளுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஜனாதிபதி லாய் ஆவார்.

மேலும், DPP ஆனது சட்டமன்ற யுவான் அல்லது பாராளுமன்றத்தின் கட்டுப்பாட்டை இழந்துவிட்டது. 113 இடங்களில், DPP ஆனது 51 இடங்களையும், KMT ஆனது 52 இடங்களையும் கைப்பற்றியது, TPP ஆனது எட்டு இடங்களுடன் அதிகார சமநிலையை தக்கவைத்துள்ளது. நீண்டகால கட்சிகள் அனைத்திலிருந்தும் பரந்த அளவில் அந்நியப்பட்டதையும் இந்தத் தேர்தல் வெளிப்படுத்தியுள்ளது, இரண்டாவது வாக்குப்பதிவு மிகக் குறைந்த  வெறும் 71 சதவிகிதம்தான்.

KMT ஆனது 1949 சீனப் புரட்சியில் சீனாவிலிருந்து விரட்டியடிக்கப்பட்டது மற்றும் அமெரிக்க இராணுவத்தின் உதவி மற்றும் பாதுகாப்புடன் தைவானில் தஞ்சம் புகுந்தது. ஜெனரலிசிமோ சியாங் காய்-ஷேக்கின் கீழ், அது தீவின் மீது ஒரு மிருகத்தனமான இராணுவ சர்வாதிகாரத்தை நிறுவியிருந்தது, அது இராணுவச் சட்டத்தின் மூலம் அதன் ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது.

சீன கம்யூனிஸ்ட் கட்சியானது 1978 முதல் முதலாளித்துவ மறுசீரமைப்பிற்கு திரும்பியதால் பெய்ஜிங்குடனான கடுமையான போட்டி தணிந்தது மற்றும் தைவானிய பெருநிறுவனங்கள் சீன பெருநிலப்பகுதியில் மலிவான உழைப்பைச் சுரண்டுவதற்கான வாய்ப்புகள் திறக்கப்பட்டன. KMT ஆனது “1992 ஒருமித்த கருத்து” என்று அறியப்படுவதைக் கடைப்பிடிக்கிறது, இது “ஒரே சீனா” என்பதை ஒப்புக்கொள்கிறது, ஆனால் அதன் அர்த்தம் என்ன என்பதைப் பற்றிய பல்வேறு விளக்கங்களை அளிக்கிறது. DPP ஆனது 1992 ஒருமித்த கருத்தை முற்றிலுமாக நிராகரிக்கிறது.

1980 களின் பிற்பகுதியில் நடந்த எதிர்ப்பு மற்றும் வேலைநிறுத்த இயக்கத்தின் மத்தியில் DPP ஆனது முக்கியத்துவம் பெற்றது, இது இறுதியாக KMT யை பொதுத் தேர்தல்களை நடத்த ஒப்புக்கொள்ள நிர்ப்பந்தித்தது. அதன் தேர்தல் நிலைப்பாடு எட்டு ஆண்டுகள் ஆட்சியில் இருந்த பிறகு ஆழமான சமூக மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அதன் தேர்தல் ஆதரவு சரிந்துவிட்டது. குறிப்பாக இளைஞர்கள் வேலையின்மை, குறைந்த ஊதியங்கள் மற்றும் விலைவாசி உயர்வு, குறிப்பாக வீட்டுவசதி ஆகியவற்றிற்கு வழிவகுத்த பொருளாதார மந்தநிலையால் அந்நியப்படுத்தப்பட்டுள்ளனர். DPP ஆனது இந்த அதிருப்தியை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் அதேவேளை சமூகப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு மட்டுப்படுத்தப்பட்ட முன்மொழிவுகளை வழங்கியுள்ளது.

மே மாதம் பதவியேற்கும் புதிய லாய் நிர்வாகம் எடுக்கும் நிலைப்பாடு, தைவான் ஜலசந்தி முழுவதும் பதட்டங்களை நிச்சயமாக அதிகரிக்கும். எவ்வாறாயினும், ஏற்கனவே ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கில் போர்களில் சிக்கியுள்ள வாஷிங்டன் தான், இந்தோ-பசிபிக் முழுவதும் சீனாவிற்கு எதிரான போர் உந்துதலின் முக்கிய தூண்டுதலாக உள்ளது, இப்போது எல்லாவற்றிற்கும் மேலாகத் தைவான் மீது கவனம் செலுத்துகிறது.