மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
கடந்த வெள்ளிக்கிழமை, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், காஸாவின் இதர பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டு தெற்கு நகரமான ரஃபாவுக்கு வந்துள்ள ஒரு மில்லியன் அகதிகளை, வலுக்கட்டாயமாக அங்கிருந்து வெளியேற்றுவதற்கான திட்டத்தை சமர்ப்பிக்குமாறு இஸ்ரேலிய இராணுவத்திற்கு நெதன்யாகு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
ரஃபா மீதான இஸ்ரேலிய தாக்குதல் “பாரிய இராணுவ நடவடிக்கையாக” இருக்கும் என நெதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
காஸாவிலுள்ள மக்களை, அப்பிராந்தியத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் திறம்பட வெளியேற்றுமாறு இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது. எகிப்தின் அனுமதியுடனோ அல்லது இல்லாமலோ காஸா மக்கள் சினாய் பாலைவனத்திற்கு வெளியேற்றப்படுவார்கள் என்பதை இது தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.
ஐ.நா.வுக்கான பாலஸ்தீனிய நிரந்தர கண்காணிப்பாளர் ரியாத் மன்சூர் கடந்த வெள்ளிக்கிழமை கூறுகையில், “இஸ்ரேலிய இராணுவம் ரஃபா குடியிருப்பாளர்களை வெளியேற்றுவதை தொடங்கினால், அவர்கள் எங்கு செல்வார்கள்? என்று கேட்டிருந்தார்.
“அவர்களை வடக்கிற்கு செல்ல அனுமதிக்கவில்லை என்று கூறுகின்றனர். அவர்கள் ரஃபாவில் தங்குவதை அவர்கள் விரும்பவில்லை - ஒரே ஒரு இடம் தான் சினாய் தீபகற்பம் என்ற முடிவுக்கு ஒரு அணு இயற்பியலாளர் வர வேண்டிய அவசியமில்லை” என்று அவர் கூறினார்.
கடந்த அக்டோபரில், வடக்கு காஸாவில் உள்ள ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களை தெற்கே வெளியேற உத்தரவிட்ட இஸ்ரேல், அதை ஒரு “பாதுகாப்பான மண்டலம்” என்று அழைத்ததோடு, அங்கு குண்டுகளை வீச மாட்டோம் என்று அவர்களுக்கு உறுதியளித்தது. பின்னர் நவம்பர் மாதம், கான் யூனிஸ் நகரை காலி செய்ய இஸ்ரேலியப் படைகள் உத்தரவிட்டதால், அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தெற்கே ரஃபாவிற்கு தப்பிச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஒன்றன் பின் ஒன்றாக, இந்த “பாதுகாப்பான பகுதிகள்” ஒவ்வொன்றும் குண்டுவீசி தாக்கப்பட்டு, தரைப்படையினரால் அழிக்கப்பட்டன.
இதன் விளைவாக, காஸாவின் 2.3 மில்லியன் மக்கள்தொகையில் 1.7 மில்லியன் பேர்கள், ஏறத்தாழ 86 சதவீதம் பேர் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் ரஃபாவில் தங்கியுள்ளனர். இப்பகுதியில் சிக்கிய அகதிகள் கடும் பஞ்சத்தை எதிர்கொள்வதுடன், சுத்தமான குடிதண்ணீர், சுகாதாரம் மற்றும் மருத்துவ வசதிகள் இன்றி உள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், “சர்வதேச சட்டத்திற்கு எதிரான வலுக்கட்டாய இடப்பெயர்வை நாங்கள் எந்த வகையிலும் ஆதரிக்க மாட்டோம். நெதன்யாகு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை, அவரது அரசாங்கம் இனச் சுத்திகரிப்பு செய்யும் நோக்கத்தை வெளிப்படுத்தியுள்ளது என்பதை திறம்பட அறிவிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
ரஃபாவிலிருந்து பாலஸ்தீனியர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதற்கான நெதன்யாகு அரசாங்கத்தின் உறுதிப்பாடு இஸ்ரேலிய இனப்படுகொலையின் ஏகாதிபத்திய ஆதரவாளர்களிடமிருந்து பாசாங்குத்தனமான அறிக்கைகளுக்கு வழிவகுத்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடென், “காஸா பகுதியில் நெதன்யாகுவின் பதிலடி நடவடிக்கை மிகைப்படுத்தப்பட்டுள்ளது” என்று கூறினார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைத் தலைவர் ஜோசப் பொரெல் வெளியிட்டுள்ள அறிக்கையானது, “ரஃபா மீது இஸ்ரேலிய இராணுவத்தின் தாக்குதல் ஆபத்தானது. … இது பேரழிவுகரமான விளைவுகளை ஏற்படுத்தும், ஏற்கனவே மோசமாகியுள்ள மனிதாபிமான நிலைமையை மேலும் மோசமாக்கும் மற்றும் தாங்க முடியாதளவில் பொதுமக்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும்” என்று தெரிவித்துள்ளது.
இந்த அறிக்கைகளைப் பொருட்படுத்தாமல், அமெரிக்காவும் ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளும், இஸ்ரேலை இனப்படுகொலை மற்றும் காஸாவில் இனச் சுத்திகரிப்பு செய்வதற்கு திட்டமிட்டு அனுமதித்துள்ளன. கொல்லப்படுவதற்கு அனுமதிக்கப்பட்ட பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கையில் “சிவப்புக் கோடு” எதுவும் இல்லை என்று அமெரிக்கா திரும்பத் திரும்ப அறிவித்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம், எகிப்து காஸாவுடனான அதன் எல்லைகளில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர்களின் எண்ணிக்கையை பாரியளவில் விரிவுபடுத்தியுள்ளதுடன், கடந்த இரண்டு வாரங்களாக அப்பகுதியில் 40 டாங்கிகள் மற்றும் துருப்புக்காவி கவச வாகனங்களை நிலைநிறுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ளது.
எதிர்பார்க்கப்படும் தரைத் தாக்குதலுக்கு முன்னதாக, இஸ்ரேலியப் படைகள் இந்த நகரத்தின் மீது வான்வழி குண்டுவீச்சுக்களை தீவிரப்படுத்தியுள்ளது.
“ரஃபாவில் கவலை மற்றும் பீதியின் உணர்வு அதிகரித்து வருகிறது, மக்களுக்கு எங்கு செல்வது என்று தெரியவில்லை” என்று UNRWA ஏஜென்சியின் இயக்குனர் பிலிப் லாஸரினி கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
கடந்த மூன்று மாதங்களில் 27,947 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், ஆயிரக்கணக்கானோர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாகவும் காஸாவின் சுகாதார அமைச்சு கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. பிப்ரவரி 8 மற்றும் 9 பிற்பகல்களுக்கு இடையில், 107 பாலஸ்தீனியர்கள் காஸாவில் கொல்லப்பட்டதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல், காஸா மீதான தாக்குதலைத் தொடர்ந்தாலும், அது திட்டமிட்ட முறையில் காஸா பகுதி முழுவதிலும் உள்ள கட்டிடங்களை தரைமட்டமாக்கி வருகிறது. குறிப்பாக, இஸ்ரேலிய எல்லைக்கு அருகில் உள்ள அனைத்து கட்டமைப்புகளையும் அது குறிவைத்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க், “இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (IDF) இஸ்ரேல்-காஸா எல்லையில் இருந்து ஒரு கிலோமீட்டருக்குள் உள்ள காஸா பகுதிக்குள் உள்ள அனைத்துக் கட்டிடங்களையும் அழித்து, ஒரு இடையக மண்டலத்தை உருவாக்கும் நோக்கத்துடன் அப்பகுதியை சுத்தம் செய்வதாக கூறப்படுகிறது. பொது பாதுகாப்பு நோக்கங்களுக்காக ஒரு இடையக மண்டலத்தை உருவாக்குவதற்காக மேற்கொள்ளப்பட்டுவரும் இந்த அழிவுகள் சர்வதேச மனிதாபிமான சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள குறுகிய ‘இராணுவ நடவடிக்கைகள்’ விதிவிலக்குடன் ஒத்துப்போவதில்லை. அக்டோபர் 2023 இன் பிற்பகுதியிலிருந்து, சண்டைகள் நடைபெறாத அல்லது இனி நடக்காத பகுதிகளில் குடியிருப்பு கட்டிடங்கள், பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் உட்பட பொதுமக்கள் மற்றும் பிற உள்கட்டமைப்புகளின் பரவலான அழிவுகள் மற்றும் தகர்ப்புக்களை எனது அலுவலகம் பதிவு செய்துள்ளது” என்று அறிவித்தார்.
“சிவிலியன் உள்கட்டமைப்பின் இத்தகைய விரிவான அழிவை நியாயப்படுத்த இஸ்ரேல் உறுதியான காரணங்களை வழங்கவில்லை” என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இத்தகைய வீடுகள் மற்றும் பிற அத்தியாவசிய சிவிலியன் உள்கட்டமைப்புகளை அழிப்பது என்பது, இந்த பகுதிகளில் பகைமையை அதிகரிப்பதற்கு முன்னர், இப்பகுதிகளில் வாழ்ந்த சமூகங்களின் இடப்பெயர்ச்சியை உறுதிப்படுத்துகிறது. பொதுமக்களை வலுக்கட்டாயமாக இடமாற்றம் செய்வது போர்க்குற்றமாக இருக்கும் என்பதை அதிகாரிகளுக்கு நினைவூட்டுகிறேன்” என்று அந்த அறிக்கை மேலும் தெரிவித்துள்ளது.
ஆனால், இது துல்லியமாக இஸ்ரேலிய அரசாங்கத்தின் திட்டமாக இருக்கிறது. இது பைடென் நிர்வாகம் மற்றும் ஐரோப்பிய அரசாங்கங்களின் முழு இராணுவ மற்றும் தளவாட ஆதரவுடன் செயல்படுகிறது. கடந்த அக்டோபர் 7 தாக்குதல்களை ஒரு சாக்குப்போக்காகப் பயன்படுத்தி, இஸ்ரேல் காஸாவை வாழத் தகுதியற்ற பகுதியாக்கி, அதன் மக்களைக் கொன்று அல்லது வெளியேற்றுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு நீண்ட கால திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளது. ரஃபா மீதான தாக்குதல் இந்த பரந்த குற்றத்தில் ஒரு புதிய கட்டத்தை குறிக்கும்.