மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
எகிப்துடனான காஸா எல்லையில் உள்ள ரபாவில் ஒரு தரைவழித் தாக்குதலுக்கும், இஸ்ரேலின் வடக்கே லெபனானுடன் ஒரு போருக்கும் இஸ்ரேல் தொடர்ந்து தயாரிப்புக்களை மேற்கொண்டு வருகிறது.
தற்போது ஒரு மில்லியன் இடம்பெயர்ந்த மற்றும் பட்டினியால் வாடும் பாலஸ்தீனியர்களின் இருப்பிடமாக உள்ள தெற்கு காஸா நகரத்தை “ஹமாஸின் குறிப்பிடத்தக்க கோட்டை” என்று விவரித்த பாதுகாப்பு மந்திரி யோவ் கேலண்ட், இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் “எதிர்கால நடவடிக்கைகளை முழுமையாக திட்டமிட்டு வருவதாக” அச்சுறுத்தினார்.
“நாங்கள் ஹமாஸை அங்கேயே விட்டுவிட முடியாது,” என்று முனிச் பாதுகாப்பு மாநாட்டில் கூறிய வெளியுறவு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், “இஸ்ரேல் அரசு ரஃபாவை சமாளிக்க வேண்டும்” என்று கூறினார். வான்வழித் தாக்குதல்கள் ஏற்கனவே அகதிகள் குவிந்துள்ள இந்த நகரத்தில் நூற்றுக்கணக்கான ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளைக் கொன்று வருகின்றன.
காஸாவின் மக்கள்தொகையில் பெரும்பான்மையினர் ஏற்கனவே அதன் பிராந்தியத்தில் 20 சதவீதத்திற்கும் குறைவான பகுதிக்குள் குவிந்துள்ள நிலையில், மற்ற ஒவ்வொரு பிரதான நகர்ப்புற மையமும் வெளியேற்றப்பட்டுவிட்ட நிலையில், பாலஸ்தீனியர்களுக்கு இஸ்ரேலின் “வெளியேற்ற” உத்தரவின் மீது செயல்பட எந்த வழியும் இல்லை. இப்பகுதியின் தென்மேற்கில் கடலை ஒட்டியுள்ள இன்னும் சிறிய மூலையில் தொடர்ச்சியான கூடார நகரங்களை அமைப்பதற்கான இஸ்ரேலிய திட்டங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
எகிப்தும், ஆயிரக்கணக்கான விரக்தியடைந்த மக்கள் எல்லையைக் கடந்து சினாய் பாலைவனத்திற்கு ஏராளமாக வெளியேறுவதைத் தடுக்கும் திட்டங்களைத் தயாரித்து வருகிறது. எல்லை வேலியை வலுப்படுத்தி, 23 அடி சுவர்களுடன் ஒரு நுழைவாயில் கட்டப்பட்டு வருகிறது, மேலும் எட்டு சதுர மைல் சுற்றளவில் முகாம் திட்டமிடப்பட்டுள்ளதாக பல புதிய முகவர்களின் அறிக்கை ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் குற்றச் செயல் பாலஸ்தீனிய மக்களுக்கு எதிரான சதியின் ஒரு பகுதியாகும். நூறாயிரக்கணக்கான மனிதர்களின் கட்டாய இடப்பெயர்வு ஏதோ ஒரு வகையில் கண்டிப்பாக கட்டுப்படுத்தப்படும் என்று இஸ்ரேல் எகிப்துக்கு உறுதியளிக்க முயல்கிறது. பாலஸ்தீனர்களை காசாவில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றும் நோக்கம் இஸ்ரேலுக்கு இல்லை என்றும், அந்நாடு அதன் நலன்களை —அதாவது உள்நாட்டு பாதுகாப்பு கவலைகள்— பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிப்படுத்த அந்நாடு “எகிப்துடன் ஒருங்கிணைந்து” செயல்படும் என்றும் வெளிவிவகார அமைச்சர் காட்ஸ் மூனிச்சில் செய்தியாளர்களுக்குத் தெரிவித்தார்.
எப்படியிருந்தபோதிலும், இஸ்ரேலின் பாசிச அரசாங்கம் பாலஸ்தீனியர்கள் சினாய் பாலைவனத்திற்குள் விரட்டப்படுவதையும், அது நிரந்தரமாக இணைத்துக்கொள்ள உத்தேசித்துள்ள ஆக்கிரமிக்கப்பட்ட பிராந்தியங்களில் இருந்து பாலஸ்தீனியர்கள் வெளியேற்றப்படுவதைக் காண விரும்புவதாக மீண்டும் மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளது.
“வெளியேற்றப்பட்ட” பாலஸ்தீனியர்கள் கான் யூனிஸ் நகரத்திற்கு செல்லலாம் என்ற காட்ஸின் ஆலோசனைகள் இந்த கொலைகார நோக்கங்களை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. காஸாவில் இன்னும் செயல்பட்டு வரும் மிகப்பெரிய நாசர் மருத்துவமனை இந்த நகரத்தில் உள்ளது. அங்கிருந்து கொடூரமான காட்சிகள் கடந்த இரண்டு நாட்களாக ஒளிபரப்பப்பட்டுள்ளன. இடிபாடுகள் மற்றும் தூசி சிதறிய தாழ்வாரங்களில் ஸ்ட்ரெச்சர்களில் நோயாளிகள் விரைந்து செல்வதையும், மேலும் சில மீட்டர் தூரத்தில் நேரடி துப்பாக்கிச் சூடு ஒலிப்பதையும் காணொளிகள் காட்டுகின்றன.
இந்த மருத்துவமனை பல நாட்களாக முற்றுகையிடப்பட்டு வியாழன் காலை இஸ்ரேலிய படையினரால் தாக்கப்பட்டது. நோயாளிகள் மட்டுமின்றி, நூற்றுக்கணக்கான இடம்பெயர்ந்த மக்களும் அந்த வளாகத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
“நாங்கள் உதவியற்றவர்களாக நிற்கிறோம்,” என்று நாசர் மருத்துவ வளாகத்தின் இயக்குனர் டாக்டர் நஹீத் அபு தைமா கூறினார். “மருத்துவமனைக்குள் இருக்கும் நோயாளிகளுக்கோ அல்லது ஒவ்வொரு நிமிடமும் மருத்துவமனைக்கு வெள்ளமென வந்து குவிபவர்களுக்கோ எந்த விதமான மருத்துவ உதவியையும் வழங்க முடியாமல் நாங்கள் நிற்கிறோம்” என்று கூறினார்.
ஊழியர்கள் “அனைத்து நோயாளிகளையும் காயமடைந்தவர்களையும் மருத்துவமனையின் பழைய கட்டிடத்திற்கு மாற்ற நிர்பந்திக்கப்பட்டனர்” என்று அல் ஜசீராவிடம் கூறிய அவர், இஸ்ரேலிய படைகள் மருத்துவமனையில் தஞ்சம் புகுந்துள்ள நோயாளிகள் மற்றும் பொதுமக்களை சுற்றி வளைத்து வருவதாகவும் கூறினார்.
“மருத்துவ வளாகம் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. ஐ.சி.யூவில் உள்ள பல நோயாளிகள் மற்றும் ஆக்ஸிஜன் விநியோகத்தில் உள்ளவர்கள் மற்றும் டயாலிசிஸில் (கூழ்மப்பிரிப்பு) உள்ளவர்கள் அதிகாலை 3 மணி முதல் [02:00 ஜிஎம்டி] உயிருக்குப் போராடுகிறார்கள்” என்று அவர் தெரிவித்தார்.
ஒளிபரப்பாளருக்கான செய்தியாளர் ஹானி மஹ்மூத் விளக்குகையில், “மருத்துவமனையில் மின்சாரம், ஆக்ஸிஜன், உணவு அல்லது வெப்பமூட்டல் எதுவும் இல்லை. இஸ்ரேலிய படைகளால் மற்றொரு சுகாதார நிலையம் சேவையில் இருந்து வெளியேற்றப்படுவதை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
“இது பாலஸ்தீனியர்களுக்கு காஸா பகுதி முழுவதும் பாதுகாப்பான இடம் இல்லை என்பதை வலியுறுத்தும் உளவியல் போரின் தொடர்ச்சியாகும்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி, மின்சாரத் தடையால் ஏற்பட்ட ஆக்ஸிஜன் வழங்கல் இல்லாததால் ஐந்து பேர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு, “நேற்று காலையில் நடந்த குண்டு வீச்சுகளுக்குப் பின்னர், எண்ணற்ற உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் என்ற குழப்பமான சூழ்நிலை இருந்ததாக எமது காரியாளர்கள் தெரிவித்தனர். தாக்குதலுக்குப் பின்னர் எங்கள் சக ஊழியர்களில் ஒருவரின் கதி என்னவென்று தெரியவில்லை” என்று குறிப்பிட்டது.
எல்லைகளற்ற மருத்துவர்கள் குழுவில் இருந்த ஒருவர் இராணுவ சோதனைச் சாவடியில் அதன் ஊழியர்கள் ஆஸ்பத்திரியை விட்டு வெளியேறத் தள்ளப்பட்டதால் கைது செய்யப்பட்டார். பாலஸ்தீனிய செம்பிறை சங்கம் (PRCS) கான் யூனிஸில் உள்ள அமல் மருத்துவமனையைச் சேர்ந்த அதன் 12 உறுப்பினர்களும் ஒரு வாரத்திற்கு முன்பு கைது செய்யப்பட்ட பின்னர் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று தகவல் கொடுத்துள்ளது.
செம்பிறை சங்க ஊழியர்கள் வெள்ளிக்கிழமை அமலில் நடத்தப்பட்ட சிசேரியன் பிரசவத்தை விவரிக்கையில், இது “போதுமான இரத்த அலகுகள், மயக்க மருந்து தொழில்நுட்ப வல்லுநர் (கைது செய்யப்பட்டவர்) மற்றும் ஒரு நியோனாட்டாலஜிஸ்ட் இல்லாமல்” மேற்கொள்ளப்பட்டது என்று தெரிவித்தது.
வடக்கில் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. அங்கு வாழும் 300,000 மக்கள் மனிதாபிமான உதவியில் இருந்து கிட்டத்தட்ட முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளனர் என்று ActionAid அமைப்பு வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. “ரொட்டிக்கு மாவாகப் பயன்படுத்துவதற்கு விலங்குத் தீவனத்தை அரைக்கும் அளவுக்கு விரக்தியடைந்த மக்கள், இப்போது இந்த மோசமான மாற்று கூட முற்றிலும் தீர்ந்துவிட்டதை காண்கிறார்கள்” என்று ActionAid பாலஸ்தீன வக்கீல் மற்றும் தகவல் தொடர்பு ஒருங்கிணைப்பாளர் ரிஹாம் ஜாஃபரி கூறினார்.
“நிலைமை இருண்ட நிலையில், இஸ்ரேல் ரஃபாவில் ஒரு முழு இராணுவ நடவடிக்கைக்கான அதன் திட்டங்களைத் தொடர்ந்தால் விஷயங்கள் கணிசமாக மோசமாகிவிடும். ரஃபா முழு பகுதிக்கும் உதவி விநியோகத்தின் முக்கிய மையமாக உள்ளது. உதவி நடவடிக்கைகள் முற்றிலுமாக ஸ்தம்பிதமடைந்து, நூறாயிரக்கணக்கான மக்களுக்கு உயிர் காக்கும் வழியும் மறுக்கப்படும்.“
“விளைவுகள் கற்பனை செய்ய முடியாதவை. உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் ரஃபாவில் மேலும் ஒரு தாக்குதலைத் தடுக்க அவற்றின் சக்திக்குட்பட்ட அனைத்தையும் செய்ய வேண்டும் மற்றும் ஒரு நிரந்தர மற்றும் உடனடி போர்நிறுத்தத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
தன்னுடைய படையினரை கட்டுப்படுத்துவதற்கு முற்றிலும் மாறாக, இஸ்ரேலிய அரசாங்கம் தாக்குதலை விரிவுபடுத்தி, லெபனானில் ஹிஸ்புல்லாவிற்கு எதிராக ஆக்கிரோஷத்தை முடுக்கிவிட்டுள்ளது. புதனன்று இஸ்ரேலிய தாக்குதல்களில், தெற்கு லெபனானில் ஐந்து குழந்தைகள் உட்பட குறைந்தது 10 குடிமக்கள் கொல்லப்பட்டனர். அக்டோபர் 8ம் தேதி இரு தரப்பினருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் தொடங்கியதில் இருந்து போரில் ஈடுபடாதவர்களில் இது மிக அதிக இறப்பு நாளாகும்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் லெபனான் புகார் அளித்துள்ளது. அதன் வெளியுறவு அமைச்சகம் “தங்கள் வீடுகளில் பாதுகாப்பாக இருந்த அப்பாவி மக்கள் மீது இஸ்ரேல் வேண்டுமென்றே மற்றும் நேரடியாக குண்டுவீசுவது” “சர்வதேச மனிதாபிமான சட்டத்தை மீறும் ஒரு போர்க்குற்ற நடவடிக்கையாகும்” என்று கண்டனம் செய்தது.
வெள்ளியன்று, இஸ்ரேலிய பாதுகாப்புப் படை வடக்கு இஸ்ரேலில் 146வது மற்றும் 210வது படைப்பிரிவுகளுடன் இருப்புப் படையினருடன் சேர்ந்து முக்கிய பயிற்சிகளை மேற்கொண்டது. கோலானி பிரிகேட் “வடக்கு எல்லையில் தயார்நிலையை அதிகரிப்பதற்கான நடைமுறையை” தொடங்கியுள்ளது. வடக்கு கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஓரி கோர்டின் இஸ்ரேலிய விமானப்படை அதிகாரிகளுடன் சந்திப்புகளை நடத்தினார்.
“தெற்கு லெபனானில் இருந்து வெளியேற ஈரான் மற்றும் ஹிஸ்புல்லா மீது உலகம் அழுத்தம் கொடுக்க வேண்டும்” என்று காட்ஸ் மூனிச்சில் பேசும்போது வலியுறுத்தினார்.
குறிப்பாக ரபாவில் இறப்புக்கள் அதிகரித்து வருகையில், இஸ்ரேலின் ஏகாதிபத்திய ஆதரவாளர்கள் எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாடுக்கான சிடுமூஞ்சித்தனமான அழைப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியுள்ளனர். வெள்ளியன்று ஜோர்டான் மன்னருடன் சேர்ந்து பேசுகையில், பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன், ரஃபா மீதான ஒரு தரைவழி படையெடுப்பு “முன்னொருபோதும் இல்லாத மனிதாபிமான பேரழிவுக்கு மட்டுமே இட்டுச் செல்லும் என்பதோடு, இந்த மோதலில் ஒரு திருப்புமுனையாக இருக்கும்” என்று எச்சரித்தார்.
பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா மற்றும் நியூசிலாந்து ஆகியவை ஏற்கனவே உச்சரித்த எச்சரிக்கைகளுடன் அவர் தனது எச்சரிக்கையையும் சேர்த்துக் கொண்டார். பைடன் அதே நாளில் கருத்து தெரிவிக்கையில், “கடந்த பல நாட்களாக இஸ்ரேல் பிரதமருடன் தலா ஒரு மணி நேரம் நான் விரிவான உரையாடல்களை நடத்தினேன். பணயக் கைதிகளை வெளியேற்ற ஒரு தற்காலிக போர் நிறுத்தம் இருக்க வேண்டும் என்று நான் மிகவும் வலுவாக உணர்கிறேன்.
“இதற்கிடையில், இஸ்ரேலியர்கள் ரஃபா மீது பாரிய நில ஆக்கிரமிப்பை மேற்கொள்ள மாட்டார்கள் என்று நான் எதிர்பார்க்கிறேன், நான் நம்புகிறேன்” என்று அவர் தெரிவித்தார்.
இரத்தம் தோய்ந்த இந்த குற்றவாளிகளின் கவலை என்னவென்றால், பாலஸ்தீனியர்களைப் பற்றியதல்ல, மாறாக ரபாவில் நடந்துவரும் படுகொலைகள் மத்திய கிழக்கிலும் ஏகாதிபத்திய மையங்களிலும் தூண்டிவிடும் வெகுஜன விடையிறுப்பைப் பற்றியதாகும். அவர்களுடையது முதன்மையாக திட்டமிட்ட படுகொலைகளுடனான மிகவும் வெளிப்படையான கூட்டுறவில் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்கும், நட்பு அரபு நாடுகளுக்கு அதைச் செய்வதை எளிதாக்குவதற்குமான முயற்சியாகும்.
காஸாவில் இஸ்ரேலிய இனப்படுகொலையானது மேற்குக் கரை, லெபனான், சிரியா, ஈராக் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுடனான ஒரு பிராந்தியப் போரின் முன்னோடியாக இருக்கிறது. அதன் பின்னால் அமெரிக்கா தனது அரபு நட்பு நாடுகளை அணிதிரட்ட நம்புகிறது. ஏகாதிபத்திய சக்திகள் தேவையான இராணுவ, பூகோளஅரசியல் மற்றும் அடக்குமுறை தயாரிப்புக்களை முழுமையாக செய்வதற்கு முன்னர் இஸ்ரேல் எதிர்ப்பு இயக்கத்தை தேவையற்ற முறையில் தூண்டிவிடக்கூடாது என்று விரும்புகின்றன.
இஸ்ரேலிய போர் அமைச்சரவை உறுப்பினர் பென்னி காண்ட்ஸ் தனது அரசாங்கத்தின் பதிலை வழங்கினார்: “பிணைக்கைதிகள் திருப்பி அனுப்பப்படும் வரை ஒரு நாள் கூட போர் நிறுத்தம் இருக்காது. எமது இலக்குகள் நிறைவேறும் வரை போர் தொடரும். இது ரமலான் மாதத்திலும் தொடரலாம். ஒன்று பிணைக்கைதிகள் திருப்பி அனுப்பப்படுவார்கள், அல்லது நாங்கள் சண்டையை ரஃபா வரை விரிவுபடுத்துவோம்.”