மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் (US) தேசியத் தலைவரான டேவிட் நோர்த், 2024 ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தில் சோசலிச சமத்துவக் கட்சியின் வேட்பாளர்களாக ஜோசப் கிஷோர் மற்றும் ஜெரி வைட் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக இன்று அறிவித்தார். தேர்தல் பிரச்சாரத்துக்கான இணையத் தளத்தை socialism2024.org என்னும் இணைப்பில் அணுகலாம். உலக சோசலிச வலைத் தளமானது 2024 அமெரிக்க தேர்தல்கள் குறித்த அதன் முன்னோக்கின் பாகமாக, நோர்த்தின் அறிவிப்பின் உரையை இன்றைய முன்னோக்கில் பதிவிடுகிறது.
சோசலிச சமத்துவக் கட்சியின் சார்பில், சோசலிச சமத்துவக் கட்சி 2024 ஜனாதிபதித் தேர்தல்களில் வேட்பாளர்களை நிறுத்துகிறது என்பதை அறிவிப்பதில் நான் பெருமைப்படுகிறேன்.
சோசலிச சமத்துவக் கட்சியின் தேசியச் செயலாளரான ஜோ கிஷோர் ஜனாதிபதி பதவிக்கான எங்களது வேட்பாளராக இருப்பார்.
உலக சோசலிச வலைத் தளத்தின் தொழிலாளர் பிரிவு ஆசிரியரான ஜெரி வைட் சோசலிச சமத்துவக் கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஜோ கிஷோர் மற்றும் ஜெர்ரி வைட் இருவருமே சோசலிசம் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் நலன்களுக்கான போராளிகளாக நீண்டகாலமாகவும் மற்றும் தனிச்சிறப்பு வாய்ந்த வரலாறுகளையும் கொண்டுள்ளனர்.
44 வயதான ஜோ, கால் நூற்றாண்டாக சோசலிச இயக்கத்தில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். 2008ல் இருந்து சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய செயலாளராக இருந்து வரும் அவர், சோசலிச சமத்துவக் கட்சியின் அரசியல் வேலைத்திட்டத்தை அபிவிருத்தி செய்வதிலும் சோசலிச சமத்துவக் கட்சியை கட்டியெழுப்புவதிலும் ஒரு மத்திய பாத்திரம் வகித்துள்ளார். அவர் 2020 இல் சோசலிச சமத்துவக் கட்சியை அதன் ஜனாதிபதி வேட்பாளராக பிரதிநிதித்துவப்படுத்தினார்.
64 வயதான ஜெர்ரி, 45 ஆண்டுகளுக்கு முன்னர் சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடி அமைப்பான வேர்க்கர்ஸ் லீக்கில் (தொழிலாளர் கழகம்) இணைந்தார். இந்த நீண்டகால ஆண்டுகளில், அதாவது 1981 இன் வரலாற்று PATCO வேலைநிறுத்தம் தொடங்கி இதுவரை ஒரு புரட்சிகர பத்திரிகையாளராக, தொழிலாள வர்க்கத்தின் எண்ணற்ற போராட்டங்களில் தலையிட்டு ஜெர்ரி செய்திகளை அளித்துள்ளார் மற்றும் தலையீடு செய்துள்ளார். அவர் முந்தைய தேசிய தேர்தல்களில் சோசலிச சமத்துவக் கட்சியையும் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார், மிக சமீபத்தில் 2016 இல் அதன் ஜனாதிபதி வேட்பாளராகவும் இருந்தார்.
சோசலிச சமத்துவக் கட்சியானது இந்தத் தேர்தலில் தலையீடு செய்வது தொழிலாள வர்க்கத்தின் அரசியல் நனவை உயர்த்துவதற்காகும். உழைக்கும் மக்கள் எதிர்கொண்டுள்ள எந்தவொரு பிரச்சினைக்கும் முதலாளித்துவ அமைப்புமுறைக்கு முற்றுப்புள்ளி வைத்து அதை சோசலிசத்தால் பதிலீடு செய்வதன் மூலமே தவிர வேறு எந்தப் வழியிலும் தீர்வு காண முடியாது என்ற அதன் புரிதலை அபிவிருத்தி செய்வதற்காகும். இந்த மாபெரும் வரலாற்றுப் பணியானது உலக முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான ஒரு ஐக்கியப்பட்ட போராட்டத்தில் அமெரிக்க மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் சக்தியை அணிதிரட்டுவதை நோக்கமாகக் கொண்டதாகும். இது ஒரு உலகளாவிய மூலோபாயத்தை பின்பற்றுவதன் மூலமேதான் அடையப்பட முடியும்.
சோசலிச சமத்துவக் கட்சியின் வேலைத்திட்டமானது ஒரு கற்பனாவாத வேலைத்திட்டம் அல்ல. இது ஒரு அவசியமானதாக இருக்கிறது. மனிதகுலம் ஒரு உயிர்பிழைப்பு இருத்தலியல் நெருக்கடியை எதிர்கொள்கிறது. முதலாளித்துவ அமைப்புமுறை வரலாற்றுரீதியில் காலாவதியாகிவிட்டது. உலக மக்களின் பரந்த பெரும்பான்மையினரின் வாழ்க்கை நிலைமைகளை முன்னேற்றுவதற்கு அது இலாயக்கற்றது என்பது மட்டுமல்ல, இது மனிதகுலத்தை ஒரு பேரழிவுக்கு இட்டுச் செல்கிறது. மனிதகுலம் முகம்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு மாற்றீடாக சோசலிசமா அல்லது முதலாளித்துவ காட்டுமிராண்டித்தனமா என்பதாக உள்ளது.
2024 இல் முதலாளித்துவத்தின் யதார்த்த நிலை என்ன?
இரண்டாம் உலகப் போர் முடிந்து 1945 க்குப் பின்னர், ஒரு பிரளயகரமான மூன்றாம் உலகப் போரின் அபாயம் இந்தளவுக்கு மாபெரும் அளவில் தோன்றியதில்லை. உண்மையில், ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கில் இப்போது நடந்து வரும் மோதல்களும், ஆபிரிக்காவில் சாஹெல் பிராந்தியம் மற்றும் மத்திய ஆசியாவில் காகசஸ் பிராந்தியம் முழுவதிலும் பரவி வருகின்ற மோதல்களும், துரிதமாக அபிவிருத்தி அடைந்து வரும் ஓர் உலகப் போரின் ஆரம்ப சுற்றுகளாகும்.
சீனாவுடன் வரவிருக்கும் மோதலுக்கான தயாரிப்பில், ரஷ்யாவை பலவீனப்படுத்தும் மற்றும் யூரேசியா மீது அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் அதன் நேட்டோ கூட்டணிகளின் பிடியை இறுக்கும் நோக்கத்துடன் பைடென் நிர்வாகம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வேண்டுமென்றே தூண்டிவிட்ட உக்ரேனிய போர், ஒரு அணுஆயுத மோதலாக தீவிரமடைய அச்சுறுத்துகிறது. ஜேர்மனி மீண்டும் போர்ப் பாதையில் இறங்கியுள்ளது. அணுஆயுத தாக்குதல் பரிமாற்ற அச்சுறுத்தலால் போரைத் தொடர்வதில் இருந்து தாங்கள் தடுக்கப்பட மாட்டோம் என்று நேட்டோ சக்திகள் பலமுறையும் கூறியுள்ளன. தந்திரோபாய மற்றும் மூலோபாய அணுஆயுதங்களை வேண்டுமென்றே பயன்படுத்துவது, அதாவது இது பைத்தியக்காரத்தனத்திற்கு ஒத்ததாக பல தசாப்தங்களாக நிராகரிக்கப்பட்டிருந்த நிலையில், இப்போது ஏகாதிபத்திய புவிசார் அரசியல் மூலோபாயத்தின் ஒரு சட்டபூர்வமான அங்கமாக “இயல்பாக்கப்பட்டு வருகிறது”.
உக்ரேனில் போர் உக்கிரமடைந்து வருகின்ற நிலையில், பாசிசவாத இஸ்ரேலிய ஆட்சியானது, வெள்ளை மாளிகை மற்றும் ஐரோப்பாவின் கூட்டணி அரசாங்கங்களின் முழு ஆதரவுடன், காஸா மக்களுக்கு எதிரான அதன் கொலைகாரத் தாக்குதலைத் தொடர்கிறது. இறப்பு எண்ணிக்கையானது 30,000 ஐ நெருங்குகிறது. பைடென் நிர்வாகத்தால் வழங்கப்பட்ட இரண்டாயிரம் பவுண்டு அளவு கொண்ட ஒவ்வொரு குண்டும் (கிட்டத்தட்ட 907 கிலோகிராம்) பாதுகாப்பற்ற மக்கள் மீது கண்மூடித்தனமாக வீசப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான பெண்களும் குழந்தைகளும் கொல்லப்பட்டாலும், பைடென் நிர்வாகம் போர் நிறுத்தத்தைக் கோர மறுக்கிறது. இனப்படுகொலை “இயல்பாக்கப்பட்டு வருகிறது”.
கோவிட்-19 பெருந்தொற்று நோய் இப்போது அதன் ஐந்தாவது ஆண்டில் நுழைந்துள்ளது. 1 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்கர்கள் தொற்றினால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர். இப்போது உலகளாவிய அளவில், இந்தப் பெருந்தொற்று நோயால் ஏற்பட்ட அதிகப்படியான இறப்புக்களின் மொத்த எண்ணிக்கை இப்போது 28 மில்லியனைத் கடந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. எண்ணற்ற மில்லியன் கணக்கானவர்கள் பல முறை பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் ஒரு அபாயகரமான விளைவைத் தவிர்த்தாலும், நெடுங் கோவிட்டின் (Long COVID) துயரத்தையும் பலவீனத்தையும் தாங்கிக் கொள்கிறார்கள். ஒவ்வொரு முதலாளித்துவ அரசாங்கமும் நோய் பரவுவதைத் தடுக்க மிகவும் குறைந்தபட்ச நடவடிக்கைகளைக் கூட அகற்றிவிட்டுள்ளன.
முகக்கவசங்களின் பயன்பாடு கூட எதிர்க்கப்படுகிறது என்பதோடு, சில சந்தர்ப்பங்களில், குற்றவியல் தடைகளைக் கொண்டு அச்சுறுத்தப்படுகிறது. முன்னாள் பிரிட்டிஷ் பிரதம மந்திரி போரிஸ் ஜோன்சனால் ஆரம்பத்தில் பிரகடனப்படுத்தப்பட்ட ஆளும் உயரடுக்கின் சுலோகமான, “சடலங்கள் மலைபோல் குவியட்டும்” என்பதாகும். வைரஸ் பரவுவதைத் தடுக்க நன்கு அறியப்பட்ட மற்றும் திறம்பட்ட பொது சுகாதார நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதை எதிர்த்து நிற்பதால், வைரஸ் தொடர்ந்து பரவுகிறது மற்றும் திரிபடைகிறது, ஒவ்வொரு நாளும் மில்லியன் கணக்கான மக்களைப் பாதிக்கிறது. வெகுஜன இறப்பு மற்றும் உடல் பலவீனமடைதல் இயல்பாக்கப்பட்டு வருகிறது.
உலக மக்களின் உயிர்கள் குறித்த முதலாளித்துவ அரசாங்கங்களின் குற்றகரமான அலட்சியமானது, இந்தப் பூமிக் கிரகத்தின் உயிர்வாழ்வு குறித்த அவர்களின் அணுகுமுறையில் பிரதிபலிக்கிறது. பூகோள வெப்பமயமாதலின் பேரழிவுகரமான விளைவுகளை பெரும் ஆதாரங்களுடன் உறுதிப்படுத்தும் தகவல்களும், இந்தப் பூமிக் கிரகத்தின் பேரழிவைத் தவிர்க்க உடனடியாக அவசியம் என்று விஞ்ஞானிகள் பரிந்துரைக்கின்ற கொள்கைகளை செயற்படுத்த ஆளும் வர்க்கத்தை கட்டாயப்படுத்தாது.
பாரிய இலாபங்களுக்கான உந்துதலுக்கும் மற்றும் சமூகத்தை ஆட்சி செய்யும் நிதிப்-பெருநிறுவன செல்வந்த தட்டுக்களின் வங்கிக் கணக்குகளில் மலைப்பூட்டும் அளவிற்கு செல்வ வளத்தை குவிப்பதற்கும், மனித சமூகத்தின் தேவைகளை பாரிய இலாபங்களுக்கான உந்துதலுக்கு முற்றிலுமாக அடிபணியச் செய்வதுமே முதலாளித்துவ அமைப்புமுறையின் பிற்போக்குத்தனத்தின் சமூக சாராம்சமாகும்.
19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் முதலாளித்துவ வர்க்கத்தின் எழுச்சியை விமர்சனக் கண்நோக்குடன் அவதானித்த பிரெஞ்சு நாவலாசிரியர் பால்சாக் (Balzac), “ஒவ்வொரு பெரும் செல்வத்திற்கும் பின்னால் ஒரு மாபெரும் குற்றம் உள்ளது” என்று குறிப்பிட்டார். ஆனால் இன்றைய தன்னலக்குழுக்களால் (oligarchs) கட்டுப்படுத்தப்படும் வானளாவிய மாபெரும் தொகைகளால் அவரது பொன்மொழி எந்த அளவிற்கு உறுதிப்படுத்தப்படும் என்பதை இந்த அற்புதமான எழுத்தாளர் கற்பனை செய்திருக்க மாட்டார். பால்சாக் குறிப்பிடும் “பெரும் செல்வங்கள்” பல மில்லியன்கள் ஆகும். நவீன பெருநிறுவன-நிதிச் செல்வந்த தட்டுக்களின் செல்வ அளவு பல பத்து மற்றும் பல நூறு பில்லியன்களில் அளவிடப்படுகிறது.
ஒரு சமூகத்தின் முற்போக்கான அல்லது பிற்போக்குத் தன்மையின் மிக அடிப்படையான அறிகுறியானது அது மேலும் சமத்துவமாக மாறுகிறதா அல்லது அதிக சமத்துவமின்மையாக மாறுகிறதா என்பதுதான். இந்த அளவுகோலின்படி, அமெரிக்க மற்றும் உலக முதலாளித்துவ சமூகத்தின் பிற்போக்குத் தன்மையானது விவாதத்திற்கு அப்பாற்பட்டது. சமூக சமத்துவமின்மை குறைந்தபட்சம் ஒரு நூற்றாண்டில் நிலவியதையும் விட அதிகமான மட்டங்களை எட்டியுள்ளது.
உலக மக்கள்தொகையில் மிகச் செல்வந்த 1 சதவீதத்தினர் இப்போது உலகின் செல்வ வளத்தில் ஏறத்தாழ பாதியளவு செல்வத்தைக் கொண்டிருக்கின்றனர், அதேவேளையில் மிக வறிய 50 சதவீதத்தினர் மிகச் சிறிய பகுதியாக குறிப்பாக 1 சதவீதத்திற்கும் குறைவாக வெறும் 0.75 பங்கை மட்டுமே கொண்டுள்ளனர். 81 பில்லியனர்கள் உலக மக்கள்தொகையில் பாதிக்கும் அதிகமான செல்வத்தைக் கொண்டுள்ளனர். 1990 களின் நடுப்பகுதியில் இருந்து குவிக்கப்பட்ட அனைத்து கூடுதல் செல்வங்களில் 38 சதவீதத்தை செல்வந்த 1 சதவீதத்தினர் பெற்றுள்ளனர், அதே நேரத்தில் அடிமட்டத்திலுள்ள 50 சதவீதத்தினர் வெறும் 2 சதவீதத்தையே பெற்றுள்ளனர்.
உலகிலேயே மிக அதிகமான பில்லியனர்களைக் கொண்ட நாடாக அமெரிக்கா உள்ளது, அவர்களின் கூட்டு செல்வவளம் 2023 இல் 5.2 டிரில்லியன் டாலர்களாக அதிகரித்தன. இந்தப் பரந்த செல்வக் குவிப்பும் அதற்கேற்ப சமூக சமத்துவமின்மையின் அளவும் ஜனநாயகத்துடன் முற்றிலும் பொருத்தமற்றதாகும்.
செய்தி ஊடகங்களில் அமெரிக்க ஜனநாயகத்திற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் குறித்து அதிகம் பேசப்படுகிறது. ட்ரம்ப் தலைமையிலான ஒரு சர்வாதிகாரத்திற்கு எல்லா வழியிலும் தடையாக நிற்கிறேன் என்று ஜனாதிபதி பைடென் அறிவிக்கிறார் அல்லது தள்ளாடுகிறார் என்று நான் சொல்ல வேண்டும், அது உண்மையாக இருந்தால், ஜனநாயகம் நிச்சயமாக அழிந்துவிடும்.
ஆனால், சர்வாதிகாரம் மற்றும் பாசிசத்திற்கு எதிரான போராட்டமானது அதன் காரணங்கள் புரிந்து கொள்ளப்படும் மட்டத்திற்கு மட்டுமே வெற்றிபெற முடியும்.
நியூ யோர்க் மற்றும் நியூ ஜெர்சி ரியல் எஸ்டேட் மற்றும் சூதாட்ட தொழிற்துறைகளின் துர்நாற்றம் வீசும் சாக்கடைகளில் இருந்து வெளிவந்த ட்ரம்ப், அமெரிக்க முதலாளித்துவத்தின் குற்றத்தை மட்டுமே உருவகப்படுத்துகிறார்.
பாரிய சமூக சமத்துவமின்மையுடன் இணைந்து ஜனநாயகம் உயிர்வாழ முடியாது. முதலாளித்துவ செல்வந்த தட்டுக்கள், அதிகரித்து வரும் சமூக அதிருப்தி மற்றும் வர்க்க போராட்டத்தின் எழுச்சி அலைக்கு எதிராக தங்களின் செல்வவளத்தைப் பாதுகாப்பதற்காக, 1930 களில் ஜேர்மனியில் அவர்கள் செய்ததைப் போலவே, இன்று எதேச்சாதிகாரத்தையும் மற்றும் பாசிசத்தை நோக்கியும் திரும்புகின்றனர். இது ஒரு அமெரிக்க நிகழ்வுப்போக்கு மட்டுமல்ல. இது உலகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. 2023 இல் அமெரிக்கா முழுவதிலும் வீசிய வேலைநிறுத்த அலையானது ஒரு சர்வதேச இயக்கத்தின் பாகமாக இருந்தது.
இது பூகோளரீதியான எழுச்சியாக 2024 ஆம் ஆண்டில் தொடரும் மற்றும் வலுவாக வளர்ச்சியடையும்.
இரண்டு பிரதான முதலாளித்துவ கட்சிகளான ஜனநாயகக் கட்சியும் குடியரசுக் கட்சியும் தொழிலாள வர்க்கத்திற்கு வறுமை, அரசியல் ஒடுக்குமுறை மற்றும் போர் இவற்றைத் தவிர வேறெதையும் வழங்க முடியாது. ஜனவரி 6, 2021 ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி ஒரு தனிமைப்படுத்தப்பட்ட அத்தியாயம் அல்ல. சொல்லப்போனால் அது ஒரு ஆடை அணிவதற்கு முன்னாலான ஒரு ஒத்திகையின் தன்மையைக் கொண்டிருந்தது. அமெரிக்க ஜனநாயகமானது அதன் கடைசிக் கட்டத்தில் உள்ளது. முதலாளித்துவத்தின் அடிப்படையில் அதனால் உயிர்வாழ முடியாது.
ஆகவே, பெருநிறுவன-நிதிச் சர்வாதிகாரத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும், நிதி-பெருநிறுவன பல்கூட்டு பெருநிறுவனங்களை ஜனநாயகரீதியில் கட்டுப்படுத்தப்பட்ட பொது உடைமையாக நிறுவுவதற்கும், மற்றும் பரந்த இராணுவ-உற்பத்தி தொழிற்துறை கூட்டமைப்பைக் கலைப்பதற்கும் அழைப்பு விடுக்கும் ஒரு வேலைத்திட்டத்தை சோசலிச சமத்துவக் கட்சி முன்னெடுக்கும்.
பெரும் செல்வந்தர்களிடம் இருந்து பரந்த வெகுஜன மக்களுக்கு செல்வத்தை விரிவானதாகவும் தொலைநோக்குடனும் செல்வத்தை மறுபகிர்வு செய்ய சோசலிச சமத்துவக் கட்சி ஒப்புதலளிக்கும்.
முதலாளித்துவ கட்சிகளின் விஷமத்தனமான பேரினவாதத்திற்கு எதிராகவும் சோசலிச சமத்துவக் கட்சி (SEP) போராடும். இலத்தீன் அமெரிக்காவில் இருந்துவரும் புலம்பெயர்ந்தோர் மிருகத்தனமாக நடத்தப்படுவதை நாங்கள் கண்டனம் செய்வதோடு, அவற்றை அம்பலப்படுத்துவோம், அனைத்து உழைக்கும் மக்களும் எங்கு விரும்பினாலும் கெளரவமாக வாழ்வதற்கான அடிப்படை ஜனநாயக உரிமையை நிலைநிறுத்துவோம்.
இந்த வேலைத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு தொழிலாள வர்க்கத்திற்கு அரசியல் அதிகாரம் மாற்றப்படுவது அவசியமாகும் என்பதை சோசலிச சமத்துவக் கட்சி தெளிவுபடுத்தும்.
அமெரிக்க தேர்தலானது ஒரு உலக நிகழ்வாக இருக்கிறது. அமெரிக்காவில் என்ன நடக்கிறதோ அது உலகின் ஒவ்வொரு நாட்டையும் பாதிக்கிறது. அமெரிக்கத் தேர்தல்களின் உலக அளவிலான தாக்கத்தைக் கருத்தில் கொண்டு, உலகிலுள்ள ஒவ்வொரு நபருக்கும் நவம்பரில் வாக்களிக்க உரிமை இருக்க வேண்டும்.
சோசலிச சமத்துவக் கட்சியானது 2024 ஜனாதிபதித் தேர்தலில் தலையீடு செய்கிறது. ஏனென்றால் தற்போதைய நெருக்கடியின் முக்கியத்துவம் வாய்ந்த தன்மைக்கு தொழிலாள வர்க்கத்திற்கு வர்க்க நனவின் வளர்ச்சி சோசலிச இயக்கத்தை கட்டியெழுப்புவதற்கு தேவைப்படுகிறது.
முதலாளித்துவ அமைப்புமுறையின் பொருளாதார, அரசியல் மற்றும் சமூக நெருக்கடியானது 2024 முழுவதிலும் தீவிரமடையும். இதையொட்டி, தொழிலாள வர்க்கத்தின் பூகோளரீதியான எதிர்ப்பு இன்னும் உறுதியாகவும் அரசியல் நனவுடனும் வளரும். இந்த வழிவகையில், சோசலிச சமத்துவக் கட்சியும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பகுதியாகவுள்ள கட்சிகளின் சக சிந்தனையாளர்களும் அதிகரித்தளவில் தீர்க்ககரமான பாத்திரத்தை ஆற்றுவார்கள்.
சோசலிச சமத்துவக் கட்சியானது, வாய்வீச்சு கோஷங்களை எழுப்பி, வெற்று வார்த்தைகளை உதிர்த்து, மற்றும் அதன் வேலைத்திட்டத்தை மிகத் தாழ்ந்த அடிப்படைப் புரிதலுக்கு ஏற்ப மாற்றியமைக்கும் வெறுமனே வாக்குகளை கவரும் கட்சி அல்ல. ஜனநாயகக் கட்சியின் அனுமதியுடனும், அதனுடன் கூட்டணியுடனும் சிறிய மற்றும் முக்கியத்துவமற்ற சீர்திருத்தங்களை சாதிக்க நம்பிக்கை கொண்டுள்ள போலி-இடது அமைப்புகளின் அரசியல் பாசாங்குக்காரர்களிடம் நாம் அதை விட்டுவிடுகிறோம். அனைத்திற்கும் மேலாக, சோசலிச சமத்துவக் கட்சியானது (SEP), இனம், நிறம், பாலினம் மற்றும் பாலியல் விருப்பம் போன்ற வெவ்வேறு முரண்பட்ட தனிப்பட்ட அடையாளங்களுக்குள் மக்களை துண்டு துண்டாகவோ உடைப்பதில்லை. இந்த ஒவ்வொன்றும் முதலாளித்துவ கட்டமைப்பிற்குள் செல்வவளத்தை மிகவும் தனிப்பட்ட முறையில் தங்களின் சாதகமான மறுபகிர்வுக்காக போராடுகின்றன.
சோசலிச சமத்துவக் கட்சியின் வேலைத்திட்டமானது, சமூகத்தின் அடிப்படை மோதல்கள் வர்க்கங்களுக்கு இடையிலானது என்பதை ஏற்று அங்கீகரித்து அதை அடித்தளமாக கொண்டுள்ளது.
சோசலிச சமத்துவக் கட்சியானது ஒரு வரலாற்றுக் கட்சியாகும். அதன் தத்துவார்த்த, அரசியல் மற்றும் நடைமுறை பணிகளானது ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக நீடித்து விரிவடைந்து செல்லும் புரட்சிகரப் போராட்டத்தின் பரந்த அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். ஸ்ராலினிசம், சமூக ஜனநாயகம், பிற்போக்குத் தேசியவாதம் மற்றும் எண்ணற்ற மத்தியதர வர்க்க அரசியலுக்கு எதிராக, 1923 இல் நிறுவப்பட்ட ட்ரொட்ஸ்கிச இயக்கத்தால் பாதுகாக்கப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்டு வந்துள்ள மார்க்சிச சோசலிசத்தின் சர்வதேச கோட்பாடுகள் மற்றும் வேலைத்திட்டத்தில் நமது மரபுகள் வேரூன்றியிருக்கின்றன.
சோசலிச சமத்துவக் கட்சியானது முதலாளித்துவ நெருக்கடியின் பூகோளரீதியான அளவையும், உலகை மாற்ற முற்படும் ஒரு இயக்கம் எதிர்கொள்ளும் ஆழமான பணிகளையும் நன்கு அறிந்துள்ளது. ஆனால், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண முன்னேற்றங்கள் மனிதகுலத்தின் நலன்களுக்காக உலகப் பொருளாதாரத்தை பகுத்தறிவார்ந்த மற்றும் முற்போக்கான மறுஒழுங்கமைப்பை முழுமையாக சாத்தியமாக்குகின்றன என்ற உண்மையில் இருந்து மட்டுமல்ல, மாறாக உலகின் புரட்சிகர உருமாற்றத்தை மேற்கொள்வதற்கு போதுமானளவு சக்திவாய்ந்த ஒரு சமூக சக்தியான அமெரிக்க மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கம் அங்கே இருக்கிறது என்ற உண்மையில் இருந்தும் கூட நாம் உறுதிப்பாட்டையும் நம்பிக்கையையும் பெறுகிறோம்.
முதலாளித்துவம் காட்டுமிராண்டித்தனத்திற்குள் இறங்குவதற்கு எதிராக உலகந்தழுவிய ஒரு ஐக்கியப்பட்ட போராட்டத்தின் அவசியத்தை தொழிலாளர்களுக்கு விளக்குவதற்காக, சோசலிச சமத்துவக் கட்சியானது சர்வதேச அளவில் தனது பிரச்சாரத்தை முன்னெடுக்கும்.
ஆனால் அதன் வெற்றியானது, எமது பிரச்சாரத்தின் வெற்றியாகும், சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தில் நீங்கள் பங்கு பெறுவதிலும் ஆதரவு அளிப்பதிலும் தங்கியுள்ளது. ஜோசப் கிஷோர் மற்றும் ஜெர்ரி வைட் ஆகியோரை முடிந்தவரை பல மாநிலங்களில் வாக்குச்சீட்டில் இடம்பெறச் செய்ய எங்களுக்கு உதவுங்கள். தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் —உண்மையில், முதலாளித்துவம் ஒரு முட்டுச்சந்தை அடைந்துவிட்டது என்பதை அங்கீகரிக்கும் அனைவரையும்— இந்தப் போராட்டத்தில் இணையுமாறு நாங்கள் வலியுறுத்துகிறோம். தொழிலாள வர்க்கத்திற்காக முன்னோக்கி அடியெடுத்து வையுங்கள். நிதி ரீதியாக பங்களியுங்கள் மற்றும் எங்கள் பிரச்சாரத்தில் தீவிரமாக பங்கேற்றுக் கொள்ளுங்கள். உங்கள் தொழிற்சாலைகள், வேலைத் தளங்கள், பள்ளிகள் மற்றும் சுற்றுப்புறங்களிலும் சோசலிச சமத்துவக் கட்சியின் பிரச்சாரக் குழுக்களைக் கட்டியெழுப்புங்கள்.
வறுமை, அடக்குமுறை மற்றும் மூன்றாம் உலகப் போருக்கு எதிரான போராட்டமானது உலக சோசலிசத்திற்கான போராட்டமாகும்!