மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகு, ரஃபா மீதான தாக்குதல் பற்றி விவாதிக்க வாஷிங்டனுக்கு “அதிகாரிகளின் குழுவை” அனுப்ப ஒப்புக்கொண்டதாக திங்களன்று வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிவிப்பு, பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இனப்படுகொலையில் அமெரிக்க ஏகாதிபத்தியம் நேரடிப் பங்காளி என்பதை மீண்டும் நிரூபிக்கிறது. அசோசியேட்டட் பிரஸ் இந்த சந்திப்பு வரும் நாட்களில் நடைபெறும் என்றும், அதில் “இராணுவம், உளவுத்துறை மற்றும் மனிதாபிமான நிபுணர்கள்” உள்ளடங்குவார்கள் என்றும், ரஃபாவில் திரண்டிருக்கும் 1.5 மில்லியன் பாலஸ்தீனியர்கள் மீது இரத்தம் தோய்ந்த தாக்குதலை எவ்வாறு நடத்துவது என்பதுதான் விவாதிக்கப்படுகிறது என்பதற்கான தெளிவான அறிகுறியாகும் என்று தெரிவித்துள்ளது.
காஸாவில் பாலஸ்தீனியர்களுக்கு கடைசியாக எஞ்சியிருக்கும் புகலிடத்தைத் தாக்குவதிலிருந்து தனது பாசிச அரசாங்கத்தை எந்த சர்வதேச அழுத்தமும் தடுக்காது என்று நெதன்யாகு இஸ்ரேலிய போர் அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதியளித்த ஒரு நாள் கழித்து இந்த சந்திப்பு பற்றிய செய்தி வெளிவந்தது. “நாங்கள் ரஃபாவில் செயல்படுவோம்,” “இது பல வாரங்கள் எடுக்கும், அது நடக்கும்” என்று நெதன்யாகு கூறினார். இதற்கு பதிலளிக்கும் விதமாக, இஸ்ரேலுக்கான தனது நிர்வாகத்தின் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்த ஜனாதிபதி ஜோ பைடென் திங்களன்று நெதன்யாகுவுடன் பேசினார்.
நெத்தன்யாகுவின் காட்டுமிராண்டித்தனமான நோக்கங்களை அடிக்கோடிட்டுக் காட்டும் வகையில், இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) திங்களன்று அல்-ஷிஃபா மருத்துவமனையில் ஒரு மிருகத்தனமான சோதனையை நடத்தியது. இந்த மருத்துவமனை, இனப்படுகொலை தொடங்கும் வரை காஸா பகுதியில் மிகப்பெரிய மருத்துவ வசதியாக இருந்து வந்தது. இந்த கட்டிடத்தின் மீதான புயல் தாக்குதலால் டசின் கணக்கானவர்கள் இறந்தனர் மற்றும் குறைந்தது 200 பேர் கைது செய்யப்பட்டனர்.
வாஷிங்டனில் உள்ள ஏகாதிபத்திய போர்க் குற்றவாளிகள் தங்கள் பாசிச இஸ்ரேலிய கூட்டாளிகளுடன் அமர்ந்து ரஃபாவின் அழிவு பற்றி விவாதிக்க உள்ளனர். திங்களன்று வெளியிடப்பட்ட ஒரு டசின் ஐ.நா. ஏஜென்சிகள் மற்றும் உதவி அமைப்புகளால் தயாரிக்கப்பட்ட ஒருங்கிணைந்த உணவுப் பாதுகாப்பு கட்ட வகைப்பாடு அறிக்கை, வடக்கு காஸாவில் மீதமுள்ள அனைத்து குடியிருப்பாளர்களில் 70 சதவீதம் பேர் “பேரழிவுகரமான” பட்டினியை எதிர்கொள்வதையும், பஞ்சம் “உடனடியாக ஏற்பட” இருப்பதையும் கண்டறிந்துள்ளது. வடக்கு காஸாவில் இப்போது மற்றும் மே மாதங்களுக்கு இடையில் எந்த நேரத்திலும் பஞ்சம் வெடிக்கலாம் என்று அந்த அறிக்கை எச்சரித்துள்ளது. மேலும் ரஃபா மீதான தாக்குதல் தெற்கில் பஞ்சத்தை ஏற்படுத்தும்.
“இன்று உலகிலேயே அதிக மக்கள் பட்டினியை எதிர்கொள்வது இங்குதான்” என்று அறிக்கை கூறுகிறது. மக்கள் தொகையில் 20 சதவீதம் பேர் உணவுப் பற்றாக்குறையால் பாதிக்கப்படுகின்றனர், 30 சதவீதமான குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர், மேலும் 10,000 பெரியவர்களில் இருவர் ஒவ்வொரு நாளும் பசியால் இறக்கின்றனர் என பஞ்சம் வரையறுக்கப்படுகிறது.
ஏகாதிபத்திய சக்திகள் இந்த மனிதாபிமானப் பேரழிவைப் பற்றி வெறுமனே அலட்சியமாக இல்லை. அவர்களே இதனை சாத்தியமாக்கினர். காஸாவின் உள்கட்டமைப்பை திட்டமிட்டு அழித்து, அதன் மக்கள் தொகையில் 80 சதவிகிதம் பேர்களை கட்டாயமாக இடம்பெயர வைப்பதற்கு, அமெரிக்கா மற்றும் அதன் ஐரோப்பிய கூட்டாளிகளால் வழங்கப்பட்ட ஆயுதங்களே இதற்கு காரணமாகும். பல தசாப்தங்களாக, வாஷிங்டனில் இருந்து டெல் அவிவ் வரை வழங்கப்பட்ட வருடாந்த உதவி $3 பில்லியனுக்கும் மேலானதாகும். உணவு, மருத்துவப் பொருட்கள், மின்சாரம், தண்ணீர் மற்றும் எரிபொருள் போன்றவை, இஸ்ரேல் மற்றும் எகிப்தால் கடுமையாகச் செயல்படுத்தப்பட்டு, வேண்டுமென்றே தடுக்கப்படுகிறது. இப்பகுதியில் ஏகாதிபத்தியத்துடன் நெருங்கிய உறவுகளை இந்த இரண்டு ஆட்சிகளும் கொண்டிருக்கின்றன. ஞாயிற்றுக்கிழமை, ஐரோப்பிய ஒன்றியம் எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்தவும், எகிப்திய சர்வாதிகாரி அப்துல் ஃபதா அல்-சிஸ்ஸியுடன் பொருளாதார முதலீட்டை அதிகரிக்கவும் 7 பில்லியன் யூரோ ஒப்பந்தத்தை செய்து முடித்தது.
பாதுகாப்பற்ற ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை பெருமளவில் படுகொலை செய்வது இஸ்ரேலால் ஆரம்பத்தில் இருந்தே வெளிப்படையாக அறிவிக்கப்பட்ட கொள்கையாக இருந்து வருகிறது. தாக்குதலின் ஆரம்ப நாட்களில், பாலஸ்தீனியர்களை “மனித விலங்குகள்” என்று விவரித்த பாதுகாப்பு அமைச்சர் யோவ் கலெண்ட், இஸ்ரேல் அதற்கேற்ப செயல்படும் என்று அச்சுறுத்தும் வகையில் கூறினார். நெதன்யாகு உட்பட பல உயர் அரசாங்க அதிகாரிகள், காஸாவில் வசிப்பவர்களைக் கொன்று அல்லது கட்டாயமாக வெளியேற்றுவதன் மூலம், அதன் மக்கள்தொகையை அகற்றுவதே இறுதி இலக்கு என்று கூறியுள்ளனர். நவம்பரில், பட்டினி மற்றும் நோய்களை போர் ஆயுதங்களாக பயன்படுத்துவதற்கான அழைப்பு இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் முன்னாள் தலைவரான ஜியோரா ஐலாண்டால் வெளியிடப்பட்டது. “காஸாவில் மனிதாபிமான பேரழிவு மற்றும் கடுமையான தொற்றுநோய்கள் குறித்து சர்வதேச சமூகம் எம்மை எச்சரிக்கிறது. எவ்வளவு கடினமாக இருந்தாலும் நாம் இதிலிருந்து பின்வாங்கக் கூடாது. எல்லாவற்றிற்கும் மேலாக, காஸா பகுதியின் தெற்கில் ஏற்பட்டுள்ள கடுமையான தொற்றுநோய்கள், வெற்றியை நெருங்கி வரும் இஸ்ரேலிய துருப்புக்களிடையே உயிரிழப்புகளைக் குறைக்கும்” என்று அவர் எழுதினார்.
இத்தகைய கட்டுக்கடங்காத காட்டுமிராண்டித்தனத்தை தடுக்க அமெரிக்க ஏகாதிபத்தியம் செயல்பட முடியும் என்று நினைக்கும் எவரும் தங்களைத் தாங்களே முட்டாளாக்கிக் கொள்கிறார்கள். கண்மூடித்தனமான குண்டுவீச்சு மூலம் பொதுமக்களை படுகொலை செய்வதும், மனித வாழ்வின் அடிப்படைத் தேவைகளைப் பறிப்பதன் மூலம் மக்களை பட்டினிக்கு உள்ளாக்குவதும், சியோனிச ஆட்சியின் திவால்தன்மை மற்றும் பல தசாப்தங்களாக பாலஸ்தீனியப் பிரதேசத்தில் சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஆகியவற்றின் விளைவுகளாகும். மனித குலத்திற்கு எதிரான இத்தகைய குற்றங்கள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக தொடர்ச்சியான ஆக்கிரமிப்புப் போர்களில் இருந்து எழுகின்றன. இதில் வாஷிங்டன் அதன் விரைவான பொருளாதார வீழ்ச்சியை ஈடுசெய்ய, இரக்கமற்ற இராணுவப் படையை நிலைநிறுத்துவதன் மூலம், முழு சமூகங்களையும் அழித்தது.
கடந்த மூன்றரை தசாப்தங்களாக அமெரிக்க ஏகாதிபத்தியம் செய்த காட்டுமிராண்டித்தனமான குற்றங்கள் ஆவணப்படுத்த முடியாத அளவுக்கு ஏராளமாக உள்ளன. முதல் வளைகுடாப் போரின் போது ஈராக் குடிமக்கள் மற்றும் அதன் பலமற்ற ஆயுதம் ஏந்திய படையினர்களின் இரத்தக்களரியிலிருந்து, 1999 இல் யூகோஸ்லாவியா மீதான நேட்டோவின் காட்டுமிராண்டித்தனமான வான்வழிப் போர், 2001 இல் ஆப்கானிஸ்தானில் நவ காலனித்துவ ஆக்கிரமிப்பு, 2003 இல் ஈராக் மீதான சட்டவிரோத ஆக்கிரமிப்பு, 2011 இல் லிபியாவை நேட்டோ அழித்தது, மற்றும் 2014 இல் சிரியாவில் இரத்தக்களரி தலையீடு வரை, அமெரிக்க ஏகாதிபத்தியம் உலகெங்கிலும் உள்ள வறிய மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களை கொடூரமான முறையில் ஒடுக்குவதில் நிகரற்ற சாதனையைக் கொண்டுள்ளது. இந்த நடவடிக்கைகளில் பலவற்றில் முக்கிய பங்கு வகித்த ஜனாதிபதி பைடென், ரஃபா தாக்குதல் பற்றிய விவாதங்களை மேற்பார்வையிடுவார்.
இந்த காட்டுமிராண்டித்தனம் இப்போது ஒரு புதிய கட்டத்தை எட்டியுள்ளது. இது உலகினை மறுபங்கீடு செய்வதற்கு ஈடுபட்டுள்ள பெரும் வல்லரசுகளுக்கு இடையே வளர்ந்து வரும் மூன்றாம் உலகப் போரை உருவாக்குகிறது. உக்ரேனில் ரஷ்யா மீது போரை நடத்தி வரும் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியவாதிகள், அங்கு ரஷ்யாவின் மூலப்பொருட்கள் மற்றும் யூரேசிய நிலப்பரப்பின் மீது தங்கள் மேலாதிக்கத்தை உறுதி செய்வதற்காக அரை மில்லியன் உக்ரேனியர்களை விருப்பத்துடன் தியாகம் செய்ய வைத்துள்ளனர். ரஷ்யாவுடனான போரை தீவிரப்படுத்திவரும் அவர்கள், பூமியில் மனித நாகரிகத்தின் முடிவை உச்சரிக்கக்கூடிய அணுவாயுத மோதலைத் தூண்டும் அபாயத்திலும் கூட சீனாவுடன் போருக்குத் தயாராகி வருகின்றனர். பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இஸ்ரேலின் இனப்படுகொலையை வாஷிங்டன் சாதகமாகப் பயன்படுத்தி, ஈரானை எதிர்கொள்ள மத்திய கிழக்கு முழுவதும் பிராந்திய ரீதியில் மோதலை விரிவுபடுத்துவதற்கான களத்தை அமைத்து வருகிறது. ஆதலால், அமெரிக்க ஆளும் வர்க்கம் தனது பிராந்திய மேலாதிக்கத்திற்கு ஈரானை ஒரு தடையாக கருதுகிறது.
இந்த பைத்தியக்காரத்தனமான கொள்கைகள், நெருக்கடி நிறைந்த முதலாளித்துவத்தின் முரண்பாடுகளில் வேரூன்றியுள்ளன. இதற்கு உலகப் போரின் வேலைத்திட்டத்தைத் தவிர ஏகாதிபத்தியவாதிகளிடம் பதில் இல்லை. 20 ஆம் நூற்றாண்டில் நாஜி ஆட்சியின் கீழ் ஜேர்மன் ஏகாதிபத்தியம் தனது பொருளாதார மற்றும் பூகோள மூலோபாய அபிலாஷைகளை முன்னேற்றுவதற்கு ஐரோப்பிய யூதர்களை அழித்தொழிப்பது அவசியம் என்று பார்த்தது போல், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியம் 21 ஆம் நூற்றாண்டில் பாலஸ்தீனிய பிரச்சினைக்கு “இறுதி தீர்வு” அவசியம் என்று முடிவு செய்ததுள்ளன.
உலக சோசலிச வலைத் தளம் தனது புத்தாண்டு அறிக்கையில் விளக்கியது போல், “காஸா இனப்படுகொலை என்பது ஒரு தனித்துவமான அத்தியாயம் அல்ல. இது இஸ்ரேலிய-பாலஸ்தீனிய மோதல் மற்றும் சியோனிச திட்டத்தின் உள்ளார்ந்த பிற்போக்குத்தனமான தன்மை, அதன் இனவாத மற்றும் இனவெறி-தேசியவாத சித்தாந்தத்துடன் தொடர்புடைய விதிவிலக்கான சூழ்நிலைகளின் விளைவாக நன்றாக புரிந்து கொள்ளப்படுகிறது. பிந்தைய கூறுகள் நிச்சயமாக இஸ்ரேலிய ஆட்சியின் நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளன. ஆனால், தற்போதைய போரின் கட்டுப்பாடற்ற மூர்க்கத்தனம், அதன் ஏகாதிபத்திய ஊதியம் வழங்குபவர்கள் மற்றும் ஆயுத விநியோகஸ்தர்களின் முழு ஆதரவுடன் நடத்தப்படுகிறது. உலக ஏகாதிபத்திய மற்றும் தேசிய-அரசு அமைப்பின் சிதைவின் பின்னணியில் மட்டுமே இதனை புரிந்து கொள்ள முடியும் மற்றும் விளக்க முடியும்”.
ஏகாதிபத்திய மிருகத்தனத்தை உருவாக்கும் அதே நெருக்கடி, அதை தூக்கியெறிவதற்கான சூழ்நிலையையும் உருவாக்குகிறது. அனைத்து முக்கிய ஏகாதிபத்திய மையங்களிலும் சிக்கனக் கொள்கைகள் மற்றும் அவர்களது வாழ்க்கைத் தரங்கள் மீதான தாக்குதல்களுக்கு எதிரான தொழிலாளர்களின் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், காஸா இனப்படுகொலைக்கு எதிரான பாரிய எதிர்ப்பு போராட்டங்கள் உலகம் முழுவதும் பரவியுள்ளன.
காஸா இனப்படுகொலைக்கு எதிரான போராட்டம் ஏகாதிபத்திய போருக்கு எதிரான போராட்டம் என்பதை அங்கீகரிப்பது தொழிலாள வர்க்கம் எதிர்கொள்ளும் அவசர பணியாகும். 20 ஆம் நூற்றாண்டின் முதல் நான்கு தசாப்தங்களில் இருந்து முன்னோடியில்லாத வகையில், ஆளும் வர்க்கத்தின் காட்டுமிராண்டித்தனம் மற்றும் அராஜகத்திற்கு ஒரு சோசலிச மற்றும் சர்வதேச முன்னோக்கின் அடிப்படையில் மட்டுமே இதற்கு பதிலளிக்க முடியும். சமீபத்திய மாதங்களில் உலகம் முழுவதும் இனப்படுகொலைக்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்துவரும் மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் உலக சோசலிசப் புரட்சியின் வேலைத்திட்டத்துடன் முதலாளித்துவ காட்டுமிராண்டித்தனத்தை எதிர்க்க வேண்டும். காஸாவில் ஏற்கனவே கட்டவிழ்ந்துவரும் மனிதப் பேரழிவை நிறுத்துவதற்கு இதுவே ஒரே வழியாகும்.