இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
நவம்பரில் மூன்றாவது இடத்திலுள்ள கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் வாக்குச்சீட்டில் இடம்பெறுவதைத் தடுக்கும் முயற்சிகளை ஜனநாயகக் கட்சி தீவிரப்படுத்தி வருகிறது, இந்தப் பிரச்சாரம் குறிப்பாக சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளரான ஜோசப் கிஷோர், பசுமைக் கட்சி வேட்பாளரான ஜில் ஸ்டெய்ன் மற்றும் சுயேட்சை வேட்பாளரான கார்னெல் வெஸ்ட் உட்பட பைடென் நிர்வாகத்திற்கு இடதுசாரி எதிர்ப்புக்கு முறையீடு செய்யும் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு எதிராக இயக்கப்படுகிறது.
புதன்கிழமையன்று, “அதிகரித்தளவில் எச்சரிக்கையடைந்த” ஜனநாயகக் கட்சி “மூன்றாவது இடத்திலுள்ள கட்சி வேட்பாளர்கள்” வாக்குச்சீட்டில் இடம்பெறுவதைத் தடுக்கும் பொருட்டு “அச்சுறுத்தலைக் கண்காணிக்கும் நோக்கில் வழக்கறிஞர்களின் ஒரு புதிய குழுவை ஒன்றிணைத்துள்ளது” என்று நியூ யோர்க் டைம்ஸ் அறிவித்தது.
ஒரு இராணுவ நடவடிக்கையின் மொழியில், டைம்ஸ் பத்திரிகை குறிப்பிட்டது, இந்தச் “சட்டபூர்வத் தாக்குதலானது 2022 வரையில் ஜனாதிபதி பைடெனின் வெள்ளை மாளிகை ஆலோசகராக சேவையாற்றிய டானா ரெமுஸ் மற்றும் கட்சியின் ஒரு வெளியிலுள்ள வழக்கறிஞரான ரோபர்ட் லென்ஹார்ட் ஆகியோரால் வழிநடத்தப்படும்...”
அவர்கள் “ஊசலாடும் மாநிலங்களில் வெறும் ஒரு சில ஆயிரக் கணக்கான வாக்குகளைச் சார்ந்திருக்கக் கூடிய ஒரு தேர்தல் முடிவிற்கு முன்னதாக மாநிலங்கள் வாரியாக கிளர்ச்சி எதிர்ப்பு திட்டத்தில் ஈடுபடுவார்கள்” என்று டைம்ஸ் எழுதியது.
“திரு. பைடெனுக்கு அளிக்கப்படாத எந்தவொரு வாக்கும் திரு. ட்ரம்புக்கு ஆதாயமளிக்கிறது என்பதும், வாக்குச்சீட்டில் மக்களுக்கு கூடுதல் தெரிவுகளை வழங்குவது திரு. பைடெனைப் பாதிக்கும் என்ற கவலைகளும் உள்ளன என்பதே இப்போது ஜனநாயகக் கட்சிக்குள் உள்ள வழக்கமான ஞானமாகும்,” என்பதையும் டைம்ஸ் சேர்த்துக் கொண்டது. ஜனநாயகக் கட்சி விரும்பாத கடைசி விடயம் யாதெனில் “அதிக தெரிவுகள்” ஆகும், பெரும்பாலும் இது ‘ஜனநாயகம்’ என்று அழைக்கப்படுகிறது.
ஜனநாயகக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற பத்திரிகை அங்கமான டைம்ஸ் பத்திரிகையால் சாதகமாக மேற்கோளிடப்பட்ட லென்ஹார்ட், இந்தச் சட்டபூர்வ தாக்குதலின் நோக்கம் “அனைத்து வேட்பாளர்களும் விதிகளின்படி செயல்படுவதை உறுதிப்படுத்துவதும், அவர்கள் அவ்வாறு செய்யாதபோது அவர்களை பொறுப்பாக்க முனைவதும்” என்றார்.
பிரச்சார நிதி மற்றும் வாக்குப்பதிவு அணுகல் தொடர்பான “விதிகள்” ஜனநாயகக் கட்சியினராலும் குடியரசுக் கட்சியினராலும் இருகட்சி முறையின் ஏகபோக உரிமையைப் பாதுகாப்பதற்காக ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. சுயேட்சை வேட்பாளர்கள் வாக்குச்சீட்டில் இடம்பெறுவதை இன்னும் கடினமாக்க அவைகள் தொடர்ந்து மாற்றப்பட்டு வருகின்றன.
பணக்கார நன்கொடையாளர்களிடமிருந்து பில்லியன்களைக் கொண்ட ஜனநாயகக் கட்சியினர் அல்லது குடியரசுக் கட்சியினர் போன்ற பெரிய கட்சிகளுக்கு, சிறிய சிக்கல்களைக் கையாள எளிதானது. ஆனால் பணக்கார ஆதரவாளர்கள் இல்லாத மூன்றாம் இடத்திலுள்ள கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் பிரச்சாரங்களுக்கும், பிரச்சார நிதி விதிகளை மீறுவது பெரிய அபராதங்களுக்கு வழிவகுத்து ஒரு அமைப்பை முடக்க முடியும்.
வாக்குப்பதிவு வசதியைப் பொறுத்தவரை, ஒவ்வொரு மாநிலத்திற்கும் வெவ்வேறு வாக்குச்சீட்டுக்கள் மற்றும் நிதித் தேவைகள் உள்ளன; கலிபோர்னியா, டெக்சாஸ் போன்ற சில மாநிலங்களில் வாக்குப்பதிவு அந்தஸ்தை பெறுவதற்கு 100,000 கையெழுத்துக்களுக்கு மேல் தேவைப்படுகின்றன. ஆச்சரியத்திற்கிடமின்றி, லென்ஹார்ட் இந்த ஜனநாயக-விரோத நடவடிக்கைகளை டைம்ஸ் பத்திரிகைக்காக பாதுகாத்தார். அவைகள் “வாக்குச்சீட்டில் உள்ள மக்கள் ஆதரவுக்கான சட்டபூர்வமான அடித்தளங்களைக் கொண்டிருப்பதை உறுதிப்படுத்துவதற்கான ஒரு வழியாகும், மேலும் இது வெறுமனே ஒரு வீண் திட்டம் அல்ல” என்று அவர் கூறினார்.
“மூன்றாவது இடத்திலுள்ள கட்சிகள் மற்றும் சுயேட்சை ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு எதிராக ஆராய்வு செய்தல் மற்றும் சட்டபூர்வமாக சவால்களில்” ஈடுபடவும் ஜனநாயகக் கட்சியினர் ஏற்கனவே வழக்கறிஞர்கள் மற்றும் அரசியல் செயல்பாட்டாளர்களின் ஒரு குழுவை நியமித்திருப்பதாக இந்த மாத தொடக்கத்தில் என்பிசி நியூஸ் மற்றும் வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்ட பின்னர் டைம்ஸ் அறிக்கை வருகிறது.
பிரதான மூன்றாவது இடத்திலுள்ள கட்சிகளின் பிரச்சாரங்கள் எதுவும் இதுவரை அனைத்து 50 மாநிலங்களிலும் வாக்குச்சீட்டு அணுகலை எட்டவில்லை. 2016 இல் கணிசமான வாக்குகளைப் பெற்ற பசுமைக் கட்சியானது, தற்போது 20 மாநிலங்களில் வாக்குச்சீட்டில் இடம்பெற்றுள்ளதுடன், இன்னும் 20 மாநிலங்களில் வாக்குச்சீட்டில் இடம்பெற செயலூக்கத்துடன் மனுதாக்கல் அளித்து வருகிறது.
ஜில் ஸ்ரைன், கார்னெல் வெஸ்ட் மற்றும் பல ஜனநாயகக் கட்சி அரசியல்வாதிகளின் பிரச்சாரங்களை அணுகி, இரண்டு பெரிய வணிக கட்சிகளுக்கு வெளியே வாக்காளர்கள் ஒரு தெரிவை பெறுவதை தடுப்பதற்கான ஜனநாயகக் கட்சியின் முயற்சிகளுக்கு அவர்களின் பதிலை இந்த நிருபர் பெற்றுக்கொண்டார்.
ஜில் ஸ்டெய்ன் 2024 க்கான பிரச்சார மேலாளரான ஜேசன் கால் இவ்வாறு கூறினார்:
அமெரிக்க மக்களின் நலன்களை சிறப்பாக பிரதிநிதித்துவப்படுத்தும் வாக்குச்சீட்டு விருப்பங்களை பறிக்க முயற்சிப்பதற்குப் பதிலாக, ஒருவேளை ஜனநாயகக் கட்சி போராடும் மக்களுக்கு உண்மையில் உதவும் சட்டத்தை இயற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும், அதாவது அனைவருக்குமான ஒற்றை செலுத்துகைச் சுகாதாரத் திட்டம் அல்லது வீட்டுவசதி உத்தரவாதம் போன்றவைகளாகும். துரதிர்ஷ்டவசமாக, அமெரிக்காவில் உள்ள இரண்டு பெரிய அரசியல் கட்சிகளும் அரசியல் அமைப்புமுறைக்கு நிதியளிக்கும் பெருநிறுவன நலன்களுக்கு முழுமையாக கடமைப்பட்டிருக்கின்றன. மூன்றாவது கட்சிகள், குறிப்பாக பசுமைக் கட்சி, பொதுமக்களுக்கு தங்கள் சொந்த கூட்டுச் சக்தியை மறுக்க முற்படும் பெருநிறுவன மேலாதிக்க முறைக்கு ஒரு சவாலாக உள்ளன.
கால் மேலும் இவ்வாறு கூறினார்:
2022 இல் வட கரோலினா செனட்டுக்கு போட்டியிடும் பசுமைக் கட்சி வேட்பாளர் மத்தேயு ஹோ, வாக்குச்சீட்டில் சட்டப்பூர்வமாக பெற்றுக்கொண்ட இடத்தை மறுக்க முயன்றபோது [வட கரோலினா] தேர்தல் வாரியத்தை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல வேண்டியிருந்தபோது, ஜனநாயகக் கட்சியானது விதிகளின்படி விளையாடுவதில் நிலைப்பாடுகளைக் கொண்டிருப்பதை நான் நகைப்புக்குரியதாகக் காண்கிறேன். மேலும், ஸ்தாபனக் கட்டுப்பாட்டில் உள்ள [கூட்டாட்சி தேர்தல்கள் ஆணையம்] ஜில் ஸ்டெயினை முதன்மைத் தேர்தலுக்கு நியமிக்கப்பட்ட பொருத்தமான நிதியை “முறையற்றதாக” பயன்படுத்தியதற்காக நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றது, ஆனால் அவர் 2012 க்கு பொருந்தக்கூடிய அதே விதிகளைப் பின்பற்றினார்.
விதிக்கப்பட்ட அபராதம் $175,000 டாலர்கள் ஆகும். இதுதான் ஜனநாயகக் கட்சியினர் பயன்படுத்த உத்தேசித்துள்ள திட்டம் என்றால், மூன்றாவது கட்சிப் பிரச்சாரங்களை இட்டுக்கட்டப்பட்ட சட்ட நெறிமுறைகளுடன் முடிச்சுப் போடுவது, அல்லது தங்கள் மதிப்புக்கள், முன்னுரிமைகள் ஆகியவற்றை சிறப்பாக பிரதிநிதித்துவப்படுத்தும் வேட்பாளர்களிடம் வாக்காளர்களை இழந்துவிடுவோம் என்ற அச்சத்தில் விதிகளை மாற்றுவது என்றால், அதை எப்படி ஜனநாயகத்தில் ஒரு பயிற்சி என்று கருத முடியும் என்று எனக்குத் தெரியவில்லை. ஜனநாயகக் கட்சியினர் ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்காக அதைக் கொல்ல விரும்புவதாகத் தெரிகிறது என்றார்.
சோசலிச சமத்துவக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான ஜோசப் கிஷோர் ட்டுவிட்டர்/எக்ஸ் இல் மூன்றாவது இடத்திலுள்ள கட்சிகளைத் தடுப்பதற்கான தீவிரமடைந்து வரும் முயற்சிகளுக்கு விடையிறுத்து, கீழ்கண்டவாறு எழுதினார், அதாவது “மூன்றாவது இடத்திலுள்ள கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் மீதான ஜனநாயகக் கட்சியினரின் ‘முழுவீச்சிலான போரை’ நான் கண்டனம் செய்கிறேன், எதிர்க்கிறேன். சோசலிச சமத்துவக் கட்சியின் பிரச்சாரம் மற்றும் ஜில் ஸ்டெயின், கார்னெல் வெஸ்ட் மற்றும் ஏனையவர்களின் பிரச்சாரங்கள் உட்பட அனைத்து சுயேட்சை மற்றும் மூன்றாவது கட்சி வேட்பாளர்களும் வாக்குச்சீட்டில் இடம்பெறும் உரிமையை சோசலிச சமத்துவக் கட்சி ஆதரிக்கிறது.”
கிஷோர் மேலும் கூறியதாவது:
ஜனநாயகக் கட்சியினரின் “முழு அளவிலான போர்”, பாசிசவாத ட்ரம்புக்கு எதிராக ஜனநாயகத்தைப் பாதுகாக்கிறது என்ற பாசாங்கையும் அம்பலப்படுத்துகிறது. ஜனநாயகக் கட்சியினர் “வாக்களிக்கும் உரிமை” குறித்து பேசும் போது, உண்மையில் அவர்கள் என்ன அர்த்தப்படுத்துகிறார்கள் என்றால், பெருநிறுவன-நிதியச் செல்வந்த தட்டுக்களின் இரண்டு பிரதிநிதிகளில் ஒருவரைத் தேர்ந்தெடுப்பதற்கான உரிமை என்பதாகும். உக்ரேன் தொடர்பாக ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போர் மற்றும் காஸா இனப்படுகொலை உட்பட, தீவிரமடைந்து வரும் பூகோளரீதியான போரின் வழியில் எதுவும் குறுக்கிடாமல் பார்த்துக் கொள்வதே அவர்களின் பிரதான கவலையாக உள்ளது.
முதலாளித்துவ செல்வந்த தட்டுக்களின் கரங்களில் மலைப்பூட்டும் அளவிற்கு செல்வவளம் குவிந்திருப்பதான சர்வாதிகாரத்தின் மூலகாரணத்தை நிவர்த்தி செய்யாமல் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பது சாத்தியமில்லை. பில்லியனர்களின் செல்வவளம் பறிமுதல் செய்யப்பட வேண்டும், பிரம்மாண்டமான பெருநிறுவனங்கள் தனியார் இலாபத்திற்காக அல்லாமல் சமூக தேவையின் அடிப்படையில் நடத்தப்படும் பொதுத்துறை நிறுவனங்களாக மாற்றப்பட வேண்டும்.
இது குறித்து கருத்து தெரிவிக்குமாறு உலக சோசலிச வலைத் தளம் விடுத்த வேண்டுகோளுக்கு கார்னெல் வெஸ்ட்டின் பிரச்சாரமானது இதுவரை பதிலளிக்கவில்லை. செனட்டர் பேர்ணி சாண்டர்ஸ் (சுயேட்சை-வெர்மான்ட்), மற்றும் ஜனநாயகக் கட்சி பிரதிநிதிகளான அலெக்ஸாண்ட்ரியா ஒக்காசியோ-கோர்டெஸ் (நியூ யோர்க்), ரஷிதா திலைப் (மிச்சிகன்), பிரமிளா ஜெயபால் (வாஷிங்டன்) மற்றும் ரூபன் கலேகோ (அரிசோனா) ஆகியோரிடம் இருந்தும் இதேபோன்ற கருத்துக்களைப் பெறுவதற்கான முயற்சிகளுக்கு பதில் கிடைக்கவில்லை.