முன்னோக்கு

மூன்றாவது இடத்திலுள்ள கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் மீதான ஜனநாயகக் கட்சியினரின் "முழுமையான போர்"

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

ஜனாதிபதி ஜோ பைடென் வெள்ளிக்கிழமை ஜனநாயக தேசியக் குழு குளிர்கால கூட்டத்தில் உரையாற்றிய பின்னர் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸுடன் பேசுகிறார் [AP Photo/Patrick Semansky]

2024 அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில், காஸாவில் நடந்துவரும் இனப்படுகொலைக்கு காரணமாக இருக்கும் ஜோ பைடென் மற்றும் சர்வாதிகாரியாக இருக்க ஆசைப்படும் டொனால்ட் ட்ரம்ப், ஆகியோரைத் தவிர தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு வேறு வழியில்லை என்பதை உறுதிப்படுத்த ஜனநாயகக் கட்சி மில்லியன் கணக்கான டாலர்களை வழக்கறிஞர்கள், செயல்பாட்டாளர்கள் மற்றும் பிரச்சாரத்திற்காக செலவழிக்கிறது.

கடந்த இரண்டு வாரங்களில், ஊடகங்களில் வெளியான முக்கிய கட்டுரைகள், இந்த நவம்பரில் எந்தவொரு மூன்றாம் இடத்திலுள்ள கட்சிகள் அல்லது சுயேட்சை வேட்பாளர்கள் வாக்குச் சீட்டில் தோன்றுவதை முடிந்தவரை தடுக்கும் ஜனநாயகக் கட்சியின் திட்டத்தை விவரித்துள்ளன. ஜோசப் கிஷோர் மற்றும் ஜெர்ரி வைட்டின் சோசலிச சமத்துவக் கட்சியின் (SEP) பிரச்சாரமும் இதில் அடங்கும்.

ஊடக அறிக்கைகள், ஒரு இராணுவத் தாக்குதலின் மொழியைப் பயன்படுத்துகின்றன, ஜனநாயக கட்சி தயாராகிக்கொண்டிருக்கும் “முழுமையான போரையும்”, அது அணிதிரட்டிக்கொண்டிருக்கும் “வழக்கறிஞர்களின் இராணுவத்தையும்”, அது செயல்படுத்திவரும் “மாநிலம் வாரியான கிளர்ச்சி எதிர்ப்புத் திட்டத்தையும்” குறிப்பிடுகின்றன.

வார்த்தைகளின் தேர்வு வெளிப்படுத்துகிறது. உண்மையில், ஜனநாயகக் கட்சியும் ஒட்டுமொத்த ஆளும் வர்க்கமும் தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளுக்கு எதிராக ஒரு “போரை” நடத்தி வருகின்றன. 330 மில்லியன் மக்கள் வசிக்கும் ஒரு நாட்டில், நிதிய தன்னலக்குழு, பெருநிறுவன ஆதிக்கம் செலுத்தும் கட்சிகளுக்கு மட்டுமே, வாக்களிக்கும் அணுகல் இருக்க வேண்டும் என்று கோருகிறது.

அடிப்படை ஜனநாயகக் கோட்பாடுகள் மீதான அதீத அவமதிப்பு அப்பட்டமாக உள்ளது. “[ஜனநாயகக் கட்சிக்குள்] மக்கள் வாக்குச் சீட்டில் அதிக விருப்பத்தை வழங்குவது திரு. பைடெனை காயப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்ற கவலைகள் உள்ளன” என்று நியூயோர்க் டைம்ஸ் எழுதுகிறது, இது சர்வாதிகாரத்திற்கு தகுதியான வாதமாகும். ஜனநாயகக் கட்சிக்கு வெளியில் உள்ள வழக்கறிஞரான ரொபர்ட் லென்ஹார்ட், வாக்குச் சீட்டுக்கான அணுகலைக் கட்டுப்படுத்தும் முயற்சியின் அர்த்தம், பெருநிறுவன மற்றும் நிதி தன்னலக்குழுவின் ஆதரவின் மூலம், “வாக்கெடுப்பில் இருக்கும் மக்களுக்கு நியாயமான ஆதரவுத் தளங்கள் இருப்பதை உறுதி செய்வதே” என்று கூறியதாக டைம்ஸ் மேற்கோளிட்டுள்ளது.

2022 இல் நடத்தப்பட்ட பியூ ஆய்வுக் கருத்துக் கணிப்பில், ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியினர் மீதான வெறுப்பு “இரண்டு தசாப்தங்களுக்கும் மேலான வாக்கெடுப்பில் இருந்ததை விட அதிகமாக உள்ளது” என்று கண்டறிந்துள்ளது. இந்த நிலைமைகளின் கீழ், ஜனநாயகக் கட்சியின் வழக்கறிஞர் டைம்ஸுக்கு விளக்குகையில், வாக்காளர்கள் “வாக்குச்சீட்டில் அதிக விருப்பத்தை” கொண்டிருப்பதைத் தடுப்பது, அதாவது அவர்கள் உண்மையில் ஆதரிக்கும் வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதற்கான சாத்தியக்கூறுகளைக் தடுப்பது அவசியம் என்று கூறுகிறரார்.

அமெரிக்க தேர்தல் முறை உண்மையில் எவ்வளவு ஆழமான ஜனநாயக விரோதமானது என்பது அமெரிக்காவில் உள்ள தொழிலாளர்கள் உட்பட, பரந்த அளவில் புரிந்து கொள்ளப்படவில்லை.

சில மாநிலங்களில் மூன்றாம் இடத்திலுள்ள கட்சிகள் சேகரிக்க வேண்டிய கையொப்பங்களின் எண்ணிக்கை மிகப்பெரியது: கலிபோர்னியாவில் 219,403, புளோரிடாவில் 145,040, டெக்சாஸில் 113,151, வட கரோலினாவில் 82,452, நியூயோர்க்கில் 45,000, அரிசோனாவில் 43,000, இந்தியானாவில் 36,944, இல்லினாய்ஸில் 25,000, ஓரிகானில் 23,737, மற்றும் மாசசூசெட்ஸ், மிசோரி, மேரிலாந்து, மிச்சிகன், நெவாடா, தென் கரோலினா மற்றும் கொலராடோவில் குறைந்தது 10,000 என்று உள்ளது. ஒட்டுமொத்தமாக, ஒவ்வொரு மாநிலத்திலும் வாஷிங்டன் டி.சி.யிலும் வாக்களிக்கத் தகுதிபெற சுயேச்சை வேட்பாளர்களும் மூன்றாம் இடத்திலுள்ள கட்சிகளும் 900,000க்கும் அதிகமான கையெழுத்துகளைச் சேகரிக்க வேண்டும்.

மேலும், சேகரிக்கப்பட்ட கையொப்பங்களுக்கு ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியினரின் இரக்கமற்ற சவால்களை சமாளிக்க, மூன்றாம் இடத்திலுள்ள கட்சியினர் உத்தியோகபூர்வ தேவையை விட குறைந்தபட்சம் 50 சதவிகிதம் அல்லது தேசிய அளவில் சுமார் 1.5 மில்லியன் கையெழுத்துக்களை சேகரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதற்கு நேர்மாறாக, ரஷ்யாவில் தேசிய தேர்தல்களில் போட்டியிட (உலகிலேயே மிகவும் சர்வாதிகார மற்றும் ஜனநாயகமற்ற நாடு என்று அமெரிக்க ஊடகங்களால் தொடர்ந்து கண்டனம் செய்யப்படுகிறது) 100,000ம் கையெழுத்துக்களை மட்டுமே சேகரிக்க வேண்டும்.

இந்த நடவடிக்கைகள் இரு கட்சிகளாலும் தங்கள் மேலாதிக்கத்திற்கு இடதுசாரி எதிர்ப்பை விலக்கும் குறிப்பிட்ட நோக்கத்துடன் செயல்படுத்தப்படுகின்றன. வாக்குச்சீட்டு அணுகல் நிபுணர் ரிச்சர்ட் விங்கர் குறிப்பிட்டுள்ளபடி, 1930 களுக்குப் பிறகு, பெரும் மந்தநிலை மற்றும் அதைத் தொடர்ந்து வந்த காலகட்டத்தில், கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பிற இடதுசாரிக் கட்சிகள் தேர்தலில் பங்கேற்பதைத் தடுக்க கடுமையான தேவைகள் பல இயற்றப்பட்டன.

1929 மற்றும் 1960 க்கு இடையில், 10 மாநிலங்கள் வாக்குப்பதிவில் இடம் பெறுவதற்கு கட்டுப்பாடுகளை “கடுமையாக” அதிகரித்தன. “வாக்குச்சீட்டு அணுகல் சட்டங்கள் எப்படி அமெரிக்க கட்சி அமைப்பை பாதிக்கின்றன” என்றும், அதே நேரத்தில் மூன்று மாநிலங்கள் மட்டுமே அணுகலைத் திறந்தன என்றும் விங்கர் தனது கட்டுரையில் குறிப்பிடுகிறார். 1961 மற்றும் 1983 க்கு இடையில், இந்த செயல்முறை துரிதப்படுத்தப்பட்டதோடு, 25 மாநிலங்கள் வாக்குச்சீட்டு அணுகலைக் கட்டுப்படுத்தின.

மூன்றாம் இடத்திலுள்ள கட்சியினரின் தொடர்ச்சியான மற்றும் விலையுயர்ந்த நீதிமன்ற சவால்கள் இருந்தபோதிலும், மாநில மற்றும் அமெரிக்க உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் ஜனநாயக விரோத வாக்குச் சீட்டு அணுகல் சட்டங்களை அடிக்கடி நிலைநிறுத்துகின்றன அல்லது அதே விளைவை அடைய சட்டங்களை மீண்டும் எழுத அனுமதிக்கும் குறுகிய பாணியில் ஆட்சி செய்தன. 2020 தேர்தல்களின் போது, மிச்சிகன் மற்றும் கலிபோர்னியாவில் உள்ள நீதிமன்றங்கள், உலகளாவிய பெருந்தொற்று நோய்களின் நிலைமைகளின் கீழ் பாரிய கையெழுத்து தேவைகள் அரசியலமைப்பிற்கு முரணானது என்று வாதிட்டு சோசலிச சமத்துவக் கட்சியின் வேட்பாளர்கள் கொண்டு வந்த வழக்குகளை நிராகரித்தன.

வாக்குச்சீட்டு அணுகல் சட்டங்களுக்கு அப்பால், ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியினரின் நிறுவனக் கட்டுப்பாட்டைப் பராமரிக்க அரசு மற்றும் ஊடகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கூகுள் மற்றும் அனைத்து சமூக ஊடகங்களும் பில்லியனர் தன்னலக்குழுக்களால் கட்டுப்படுத்தப்படுகின்றன. இவை, உலக சோசலிச வலைத் தளத்தை குறிவைப்பது உட்பட இணைய தணிக்கையின் வளர்ந்து வரும் பிரச்சாரம் போன்ற பிற ஜனநாயக விரோத நடவடிக்கைகளுடன் இணைந்து பயணிக்கின்றன.

மூன்றாம் இடத்திலுள்ள கட்சிகள் மற்றும் சுதந்திரமான பிரச்சாரங்களை முறியடிக்க, ஜனநாயகக் கட்சியினரின் தற்போதைய முயற்சிகள் இந்த செயல்முறையின் கணிசமான முடுக்கத்தைக் குறிக்கின்றன.

டிரம்ப் மற்றும் குடியரசுக் கட்சியினரைத் தடுக்க ஜனநாயக விரோத சதிகள் அவசியம் என்று ஜனநாயகவாதிகள் நிச்சயமாகக் கூறுகின்றனர். இது ஒரு சிடுமூஞ்சித்தனமான மோசடியாகும்.

முதலில், ஜனவரி 6, 2021 பாசிச சதிக்கு ஜனநாயகக் கட்சியினர் மற்றும் பைடென் நிர்வாகத்தின் பதில், “வலுவான” குடியரசுக் கட்சியின் தேவையை வலியுறுத்துவதாகும். நவம்பரில் “ஜனநாயகம் வாக்கெடுப்பில் உள்ளது” என்று பைடென் எப்போதாவது அறிவிக்கும் அதே வேளையில், உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போருக்கு நிதியளிப்பதற்கான இரு கட்சி ஒப்பந்தத்திற்கு ஈடாக, அவர் தனது குடியரசுக் கட்சி “நண்பர்களின்” குடியேற்ற எதிர்ப்பு நிகழ்ச்சி நிரல் முழுவதையும் ஏற்க மீண்டும் மீண்டும் முன்வந்தார்.

மேலும், சமூகக் குறைகளை சுரண்டிக் கொள்ளும் ட்ரம்பின் இயலுமையானது, ஜனநாயகக் கட்சியினரால் திணிக்கப்பட்ட, தொழிலாள வர்க்கத்தின் பெரும் திரளான சமூக நலன்களின் எந்தவொரு உண்மையான வெளிப்பாட்டையும் அரசியல் அமைப்பில் இருந்து முறையாக விலக்குவதுடன் இணைக்கப்பட்டுள்ளது.

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter

கடந்த வெள்ளியன்று, Twitter/X இல் வெளியிடப்பட்ட அறிக்கையில், சோசலிச சமத்துவக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோசப் கிஷோர் மூன்றாம் இடத்திலுள்ள கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் மீதான ஜனநாயகக் கட்சியினரின் “முழுமையான போரை” கண்டனம் செய்தார்.

சோசலிச சமத்துவக் கட்சியின் (SEP) பிரச்சாரம் மற்றும் ஜில் ஸ்டெயின், கார்னல் வெஸ்ட் மற்றும் பிறரின் பிரச்சாரங்கள் உட்பட அனைத்து சுயேச்சை மற்றும் மூன்றாம் இடத்திலிருக்கும் வேட்பாளர்களுக்கும் வாக்குச் சீட்டில் தோன்றும் உரிமையை SEP ஆதரிக்கிறது.

கிஷோர் மேலும் கூறியதாவது:

சர்வாதிகாரத்தின் மூல காரணத்தைத் தீர்க்காமல் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பது என்பது சாத்தியமற்றது: திகைப்பூட்டும் வகையில், முதலாளித்துவ தன்னலக்குழுவின் கைகளில் செல்வம் குவிந்துள்ளது. பில்லியனர்களின் செல்வம் அபகரிக்கப்பட வேண்டும். மேலும் பிரம்மாண்டமான பெருநிறுவனங்கள் தனியார் இலாபத்துக்காக அல்லாமல், சமூகத் தேவையின் அடிப்படையில் இயங்கும் பொதுக் கட்டுப்பாட்டிலுள்ள நிறுவனங்களாக மாற்றப்பட வேண்டும்.

மூன்றாம் இடத்திலுள்ள கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் மீதான ஜனநாயகக் கட்சியினர் கட்டவிழ்த்துள்ள போர், உண்மையில் மிக அடிப்படையான ஜனநாயக உரிமையான வாக்களிக்கும் உரிமையின் மீதான போர் ஆகும். இது ஜனநாயக உரிமைகள் மீதான பரந்த தாக்குதலின் ஒரு பகுதியாகும் மற்றும் சர்வாதிகாரம் மற்றும் பாசிசத்தை நோக்கி ஆளும் வர்க்கத்தின் திருப்பம் ஆகும். ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியினர் மற்றும் அவர்கள் பாதுகாக்கும் முதலாளித்துவ அமைப்பு முறைக்கு எதிரான அரசியல் தாக்குதலால் மட்டுமே இந்த உரிமைகளுக்கு உத்தரவாதம் அளிக்க முடியும். ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பது என்பது சோசலிசத்திற்கான போராட்டத்தில் இருந்து பிரிக்க முடியாததாகும்.

Loading