முன்னோக்கு

காஸாவை, "நாகசாகி மற்றும் ஹிரோஷிமாவைப்" போன்று அழிக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் டிம் வால்பெர்க் அழைப்பு விடுத்துள்ளார்

காஸாவின் அழிவும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இனப்படுகொலை உலகப் போரும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

கடந்த வாரம், மிச்சிகன் குடியரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான டிம் வால்பெர்க், இரண்டாம் உலகப் போரின் முடிவில் 1945 இல், அணுகுண்டுகளால் அமெரிக்கா அழித்த ஜப்பானிய நகரங்களான “நாகசாகி மற்றும் ஹிரோஷிமாவைப்” போன்று காஸாவை முழுவதுமாக அழிக்க வலியுறுத்தியுள்ளார்.

“மனிதாபிமான உதவிக்காக நாம் ஒரு காசு கூட செலவழிக்கக் கூடாது” என்று வால்பெர்க் ஆன் ஆர்பருக்கு தெற்கே உள்ள டண்டீயில் ஒரு பொதுக் கூட்டத்தில் கூறினார். “நாகசாகி, ஹிரோஷிமா மாதிரி காஸா இருக்க வேண்டும். சீக்கிரம் அதனை முடித்து விடுங்கள்” என்று வால்பெர்க் குறிப்பிட்டார்.

காஸாவில் உள்ள ரஃபாவில் உள்ள குடியிருப்பு கட்டிடங்கள் மற்றும் மசூதி மீது இஸ்ரேலிய தாக்குதல் நடத்திய பின்னர் ஏற்பட்ட அழிவை பாலஸ்தீனியர்கள் பார்க்கின்றனர். Thursday, Feb. 22, 2024. [AP Photo/Fatima Shbair]

முற்றிலும் பாதுகாப்பற்ற மற்றும் திறந்தவெளி சிறைக்குள் அடைபட்டிருக்கும் மக்களை அழித்தொழிப்பதற்கான ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் அழைப்பு, அமெரிக்க ஆளும் வர்க்கத்தைப் பற்றிக்கொண்டிருக்கும் கொலைவெறி உணர்வுகளை வெளிப்படுத்துகிறது. பல தசாப்தங்களாக நீடித்துவரும் போர்களுக்கு பிறகு அமெரிக்கா, முன்பு நாஜி ஜேர்மனியுடன் மட்டுமே தொடர்புடைய குற்றத்தின் அளவை நெருங்குகிறது.

ஜனநாயகக் கட்சி அதிகாரிகளிடமிருந்து போலியான சீற்றத்தின் வெளிப்பாடுகள் பாசாங்குத்தனத்தின் உச்சம். ஒரு முன்னணி “சிஐஏ ஜனநாயகக் கட்சி” பிரதிநிதி எலிசா ஸ்லாட்கின், வால்பெர்க்கின் கருத்துகளை “யாரும் பரிந்துரைப்பது கண்டிக்கத்தக்க விஷயம்” என்று கூறினார். உண்மையாக, காஸா மீதான பைடென் நிர்வாகத்தின் கொள்கையின் அடிப்படை உள்ளடக்கத்தையே குடியரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வெளிப்படுத்தியுள்ளார்.

நெதன்யாகு அரசாங்கம், வெள்ளை மாளிகையின் ஆதரவுடன், பாலஸ்தீனப் பிரச்சினைக்கான அதன் “இறுதித் தீர்வின்” ஒரு பகுதியாக, காஸாவை தரைமட்டமாக்கவும், அதன் மக்களைப் பட்டினியால் மரணமடையச் செய்யவும், உயிருடன் இருப்பவர்களை இடம்பெயரச் செய்யவும், முடிவை எடுத்துள்ளது.

இஸ்ரேலுக்கு கூடுதலாக 1,800 2,000 பவுண்டு குண்டுகளை அனுப்ப கடந்த வாரம் பைடென் எடுத்த முடிவின் அர்த்தம் இதுதான்.

காஸாவின் சிறிய பகுதியில் இஸ்ரேல் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தாது. அது, இஸ்ரேலை வாழத் தகுதியற்றதாக்குவதோடு, பாலஸ்தீனியர்கள் இடம்பெயர்ந்தவுடன் இஸ்ரேல் கைப்பற்ற நினைக்கும் கடற்கரையோர குடியிருப்பு பகுதியை கதிர்வீச்சுக்கு உள்ளாக்கும். இருந்தபோதிலும், இஸ்ரேல் ஏற்கனவே 65,000ம் டன் ஆயுதங்களை காஸா மீது வீசியுள்ளது. இது, யப்பானிலுள்ள ஹிரோஷிமா மற்றும் நாகசாகியை தரைமட்டமாக்கிய அணுகுண்டுகளின் வெடிக்கும் சக்தியை விட மூன்று மடங்குகள் அதிகமாகும்.

இதன் விளைவாக, நாகசாகி குண்டுவெடிப்பைத் தொடர்ந்து 40 சதவீதத்துடன் ஒப்பிடும்போது, ​​காஸா பகுதியில் உள்ள 54 சதவீத கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன அல்லது அழிக்கப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், பாலஸ்தீனியர்களை அழித்தொழிப்பதற்கான வால்பெர்க்கின் வெளிப்படையான அழைப்பைப் போலவே, காஸா மீதான இனப்படுகொலை, உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்காவின் பினாமி யுத்தம் மற்றும் சீனாவுடனான அதன் உடனடி மோதல் ஆகியவற்றுக்கு இடையேயான உறவைப் பற்றி அவர் கூறுவது குறிப்பிடத்தக்கது.

காஸாவிற்கான “நாகசாகி மற்றும் ஹிரோஷிமா” தீர்வை முன்மொழிந்த பிறகு, வால்பெர்க் உடனடியாக, “உக்ரேனிலும் இதே நிலைதான் இருக்க வேண்டும்” என்றும், “ரஷ்ய படைகளை அழிப்பதே” அமெரிக்காவின் இலக்கு என்றும் அறிவித்தார்.

அத்தோடு, “ஹமாஸ் மற்றும் ரஷ்யா எவ்வளவு விரைவில் சரணடைகின்றனவோ, அவ்வளவு எளிதாக முன்னேறும்” என்று வால்பெர்க் பின்னர் ஒரு விளக்கத்தை வெளியிட்டார்.

இதனை வேறு வார்த்தைகளில் கூறுவதானால், காஸாவில் நடந்து வருகின்ற இனப்படுகொலைக்கு வால்பெர்க்கின் வெளிப்படையான ஆதரவு, மற்றும் “ரஷ்யப் படைகளை அழித்து”, ரஷ்யாவை “சரணடைய” கட்டாயப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, ரஷ்யாவுடன் முழுமையான போருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்பதாகும்.

முழு அமெரிக்க அரசியல் ஸ்தாபனமும் ஊடகங்களும் எதை மறைக்க முயல்கின்றன என்பதை வால்பெர்க் இதன் மூலம் தெளிவாகக் கூறுகிறார். பைடென் நிர்வாகம், அமெரிக்கா ரஷ்யாவுடன் போரில் ஈடுபடவில்லை என்றும் சீனாவுடன் “மோதலை” நாடவில்லை என்றும் பலமுறை கூறியுள்ளது. இதற்கிடையில், நேட்டோவின் நிதியுதவிகளை பெற்றுவரும் பயங்கரவாதக் குழுக்கள், ரஷ்யாவிற்குள் நுழைவதற்கான டாங்கிகளை, உக்ரேனுக்கு நேட்டோ அனுப்புகிறது.

அடால்ஃப் ஹிட்லர் தோல்வியுற்ற இடத்திலிருந்து ரஷ்யாவை சரணடையச் செய்து வெற்றிபெறச் செய்வதற்காக அமெரிக்கா ரஷ்யாவிற்கு எதிராக ஒரு தாக்குதல் யுத்தத்தை நடத்த முற்பட்டால், அதற்கு தவிர்க்க முடியாமல் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு காணப்படாத பாரியளவிலான மரணம் மற்றும் பேரழிவு தேவைப்படும்.

இந்தச் சூழலில், காஸா இனப்படுகொலை என்பது ஒரு உலகளாவிய மோதலின் தொடக்கச் செயலாகும், இதில் பலியாகும் எண்ணிக்கை நூற்றுக்கணக்கான மில்லியன்களில் கணக்கிடப்படும்.

20 ஆம் நூற்றாண்டின் மிகப் பெரிய பயங்கரங்கள்: உலகப் போர், இனப்படுகொலை மற்றும் அணு ஆயுதப் படுகொலையின் சாத்தியங்கள் மீண்டும் தலை தூக்குகின்றன.

உலக சோசலிச வலைத் தளம் (WSWS), தனது புத்தாண்டு அறிக்கையில், பின்வரும் எச்சரிக்கையை விடுத்தது:

காஸாவில் நடந்துவரும் போரானது, இனப்படுகொலையை ஏகாதிபத்திய கொள்கையின் ஏற்றுக்கொள்ளக்கூடிய கருவியாக இயல்பாக்கியுள்ளது. இந்த நிலையில், ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போரின் இடைவிடாத விரிவாக்கமானது, இந்த மோதல் தந்திரோபாய மற்றும் மூலோபாய அணுஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கு வழிவகுக்கும் ஒரு உயர்ந்த மட்டத்திலான சாத்தியத்தையும், வாய்ப்பையும் கூட நடைமுறையில் ஏற்றுக்கொள்வதுடன் சேர்ந்துள்ளது. 

WSWS மேலும் தெரிவிக்கையில்:

ஒட்டுமொத்தமாக எடுத்துக்கொண்டால், சமூக காட்டுமிராண்டித்தனத்தின் பல்வேறு வடிவங்களின் இயல்பாக்கம், முதலாளித்துவ வர்க்கம் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது என்பதைக் குறிக்கிறது. பல்வேறு வகையான சமூகக் கொலைக் கொள்கைகளைக் கொண்ட ஒரு வர்க்கம் அதன் வரலாற்று, பொருளாதார, சமூக மற்றும் அரசியல் சட்டபூர்வத்தன்மையை தெளிவாக இழந்துவிட்டது.

காஸா இனப்படுகொலையை ஆதரிப்பதன் மூலம், பைடென் முழு அமெரிக்க அரசியல் ஸ்தாபனத்திற்காகவும் பேசுகிறார். கடந்த வாரம், முன்னாள் ஜனாதிபதிகளான பராக் ஒபாமா மற்றும் பில் கிளிண்டன் ஆகியோருடன் கலந்து கொண்டு நிதி திரட்டலை பைடென் மேற்கொண்டார். முன்னாள் ஜனாதிபதிகளான அவர்கள் இருவரும் காஸாவில் இடம்பெற்றுவரும் இனப்படுகொலை போருக்கு பைடெனின் ஆதரவை சந்தேகத்திற்கு இடமின்றி பாராட்டினர். “இஸ்ரேலின் இருப்பைப் பாதுகாப்பதில் அவர் உண்மையிலேயே அக்கறை கொண்டுள்ளார்” என்று பைடெனுக்கு கிளின்டன் புகழாரம் வழங்கினார்.

இனப்படுகொலைக்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்கள், வானொலி நகர இசை மண்டபத்தில் (Radio City Music-Hall) நடந்த இந்த நிகழ்வில் அமெரிக்க கொள்கைகளுக்கு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். அத்தோடு, இஸ்ரேலிய இனப்படுகொலையை பாதுகாக்கும் பைடெனின் பேச்சை “செவிகொடுத்து” கேட்க தயாராக இல்லை என்று எதிர்ப்பாளர்கள் விமர்சித்தபோது, ​​ஒபாமா பைடெனை பாதுகாக்க தலையீடு செய்தார்.

காஸா இனப்படுகொலைக்கு ஒட்டுமொத்த அமெரிக்க அரசியல் ஸ்தாபனத்தின் உலகளாவிய அங்கீகாரம், உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே பெருகி வரும் பாரிய எதிர்ப்போடு முரண்படுகிறது. கடந்த வார இறுதியில், நூறாயிரக்கணக்கான மக்கள் இனப்படுகொலைக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்றனர். அத்தோடு, இஸ்ரேலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் நெதன்யாகு பதவி விலகக் கோரி மாபெரும் எதிர்ப்பு போராட்டங்களில் கலந்து கொண்டனர்.

இனப்படுகொலை மற்றும் போருக்கு எதிராக வளர்ந்து வரும் இயக்கத்தை ஒரு சோசலிச வேலைத்திட்டத்துடன் ஆயுதபாணியாக்குவதற்கான அவசரத் தேவை உள்ளது. வால்பெர்க்கின் அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் twitterX இல் பதிவிட்ட ஒரு அறிக்கையில், சோசலிச சமத்துவக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோசப் கிஷோர் பின்வருமாறு கூறினார்:

இனப்படுகொலைக்கான எதிர்ப்பை, அமெரிக்க மற்றும் நேட்டோ ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டமாக வளர்க்க வேண்டும். இதற்கு, இனப்படுகொலை மற்றும் அணு ஆயுதப் போரை இயல்பாக்கியுள்ள முதலாளித்துவ ஆளும் உயரடுக்கிற்கு எதிராக, தொழிலாள வர்க்கத்தின் அணிதிரட்டல் அவசியமாக தேவைப்படுகிறது. சோசலிச சமத்துவக் கட்சி, தனது தேர்தல் பிரசாரத்தின் மூலமாக, தொழிலாள வர்க்கத்தில் ஒரு தலைமையை கட்டியெழுப்பி வருகிறது. இது போருக்கு எதிரான போராட்டத்தை சமத்துவமின்மை மற்றும் முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான போராட்டத்துடன் இணைக்கிறது. ஆகவே, இது மிகவும் அடிப்படையான அவசரமான பணியாகும்.

Loading