சம்பள உயர்வுக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைக்கு எதிராகவும் நடவடிக்கை குழுக்களை உருவாக்கு!

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

சுகாதாரத் தொழிற்சங்கக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் ஏப்ரல் 2 முதல் இடையூறு, கடமைக்கு காத்திருத்தல் மற்றும் போக்குவரத்து (DAT) கொடுப்பனவுக்கான வேலைநிறுத்தத்தை மீண்டும் தொடங்குவதாக அறிவித்ததுடன் நிதி அமைச்சு இந்தப் ‘பிரச்சினையில் பேச்சுவார்த்தையை தாமதப்படுத்துகிறது’ எனவும் குறிப்பிட்டார். சுகாதாரத் தொழிற்சங்கக் கூட்டணியானது இடை மருத்துவ சேவைகள் சங்கங்களின் சமாசம், சுகாதார தொழிலறிஞர்கள் கூட்டமைப்பு, பொது சுகாதார அதிகாரிகள் சங்கம் மற்றும் அரசாங்க மருத்துவச்சிகள் சங்கம் உட்பட 72 சுகாதாரத் துறை தொழிற்சங்கங்களின் கூட்டு ஆகும்.

2 ஏப்பிரல் 2024 அன்று கண்டி தேசிய வைத்தியசாலை ஊழியர்கள் பேரணி சென்ற போது [Photo: WSWS]

சுகாதார தொழிலாளர்கள் நடவடிக்கை குழு (HWAC) ஏப்ரல் 2 நடக்கின்ற சுகாதார ஊழியர்களின் போராட்டத்தை ஆதரிப்பதுடன் அனைத்து சுகாதார ஊழியர்களுக்கும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுமாறு அழைப்பு விடுத்துள்ளது. எவ்வாறாயினும், இந்த தொழிற்சங்கத் தலைவர்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டாம் என்று நாங்கள் எமது சகோதர சகோதரிகளை எச்சரிக்கிறோம். தங்கள் கோரிக்கைகளுக்கு அரசு பதிலளிக்காததால், சுகாதார ஊழியர்கள் மத்தியில் கோபம் அதிகரித்து வரும் நிலையிலேயே அவர்கள் இந்த நடவடிக்கைக்கு அழைப்பு விடுத்துள்ளனர். சுகாதாரத் தொழிற்சங்கக் கூட்டணியின் அதிகாரிகள் மீண்டும் நிதியமைச்சு அதிகாரிகளுடன் கலந்துரையாட முயல்வதுடன் அவர்களுக்கு கிடைக்கும் முதல் வாய்ப்பிலேயே வேலை நிறுத்தத்தை முடித்துக்கொள்வர்.

சுகாதார ஊழியர்களைப் பொறுத்தளவில் அவர்கள் ஆயிரக்கணக்கிலும் இலட்சக் கணக்கிலும் வேலை நிறுத்தங்களிலும் போராட்டங்களிலும் பங்குபற்றியுள்ளனர். சுகாதார தொழிற்சங்க கூட்டணியானது ஜனவரி முதல் நான்கு அடையாள வேலை நிறுத்தங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதோடு மார்ச் 12 அன்று தேர்வு செய்யப்பட்ட தீவின் 17 ஆஸ்பத்திரிகளில் ஆர்ப்பாட்டங்களுக்கு அழைப்பு விடுத்திருந்தது.

அந்த வேலைநிறுத்தங்களில் கதிரியக்கவியல் மற்றும் ஆய்வக தொழில்நுட்ப அறிஞர்கள், மருந்தாளர்கள், மருந்து கலவையாளர்கள், மருத்துவச்சிகள், பல் அறுவை சிகிச்சை நிபுணர்கள், பொது சுகாதார ஆய்வாளர்கள், பூச்சியியல் அதிகாரிகள், தாதிமார்கள் மற்றும் சிறுறூழியர்கள் உட்பட ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட சுகாதார ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால் இந்த தொழிற்சங்க தலைவர்கள் உறுப்பினர்களிடம் என்ன கூறினார்கள்? ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரனவும் DAT கொடுப்பனவு பிரச்சினையை 'தீர்ப்பதற்கு' தயாராக இருப்பதாக அவர்கள் பொய்யாக கூறினர். குமுதேஷ், எங்கள் பக்கம் உள்ள 'கொள்கையுள்ள அமைச்சர்', என பத்திரனுவுக்காக ஒத்து ஊதியதுடன் நிதி அமைச்சின் அதிகாரிகள்தான் குற்றவாளிகள் எனக் குறிப்பிட்டார்.

தொழிற்சங்கங்கள் 'ஒரு பவுன்டு சதையை' எதிர்பார்க்கவில்லை, 'பொருளாதார நீதியை மட்டுமே' கேட்கின்றோம் என அவர் அறிவித்தார். அதாவது அரசாங்கம் கொடுக்கும் எதையும் ஏற்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்பதாகும். “2020 முதல், நாட்டின் நிலைமையைக் கருத்தில் கொண்டு நாங்கள் அரசாங்கத்திடம் எதையும் கோரவில்லை” எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

உலக முதலாளித்துவத்துடன் பிணைக்கப்பட்ட இலங்கையின் முதலாளித்துவ அமைப்பின் முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடியானது தொடரும் கோவிட் 19 தொற்றுநோய், உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான போர் மற்றும் காசாவில் இஸ்ரேலிய இனப்படுகொலையினாலும் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

சுகாதாரத் தொழிற்சங்க கூட்டணியும் அனைத்து தொழிற்சங்கங்களும் தொழிலாளர்களின் போராட்டங்களை தடுத்து நிறுத்தி, இந்த நெருக்கடியின் சுமையை தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் மீது சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளின் வடிவத்தில் சுமத்துவதற்கு அரசாங்கத்திற்கு உதவி செய்தன.

2023 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இலங்கையில் அரசாங்க துறையின் உண்மையான சம்பளம் 52 புள்ளிகள் வரை குறைந்துள்ளது. இந்த எண்ணிக்கை 2013ஐ அதன் அடிப்படை ஆண்டாகக் கொண்டு பார்த்தால் 100 புள்ளிகளுக்கு சமமாக கணக்கிடப்படுகிறது. வெள்ளியன்று, அரசாங்கத்தின் மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் துறையானது 2019 முதல் மக்களின் வாழ்க்கைச் செலவு 144 சதவீதம் உயர்ந்துள்ளதாக அறிவித்தது. இந்த புள்ளிவிவரங்களை விட உண்மையான நிலைமை மோசமாக உள்ளது என்பதை நாங்கள் அறிவோம்.

முதலாளித்துவ வர்க்கத்தின் நெருக்கடிக்கு தொழிலாள வர்க்கம் பொறுப்பல்ல, மேலும் இந்த நெருக்கடியின் சுமையை தொழிலாளர்கள் பகிர்ந்து கொள்ள வேண்டிய அவசியமுமில்லை. நமது கோரிக்கைகளை இலாப நலன்களுக்கு அடிபணிய வைக்க வேண்டியதில்லை. செல்வத்தின் உண்மையான உற்பத்தியாளர்களான தொழிலாளர்கள், உயரும் பணவீக்கம் மற்றும் வாழ்க்கைச் செலவுக்கு இணங்க ஒரு கண்ணியமான சம்பளத்தை கோருவதற்கான முழு உரிமையையும் கொண்டுள்ளனர்.

நாம் நமது உரிமைகளைப் பாதுகாக்கப் போராடும்போது, சர்வதேச வர்க்கப் போராட்டங்களின் இதேபோன்ற எழுச்சியைக் காண்கிறோம். சமீபத்திய வாரங்களில், அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான துப்புரவு மற்றும் முதியோர் இல்லத் தொழிலாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் டெய்ம்லர் றக்ஸ் தொழிலாளர்களும் ஜேர்மனியில் புகையிரத சாரதிகளும் தங்கள் சம்பளங்கள் மற்றும் நிலைமைகளைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளைத் தொடங்கினர். டியூனிசியாவில், மோசமான வாழ்க்கை நிலைமைகள் மற்றும் அதிக வேலையின்மை தொடர்பாக ஆயிரக்கணக்கானவர்கள் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் இணைந்துகொண்டதோடு நைஜீரியாவில் தொழிலாளர்கள் தேசிய வேலைநிறுத்தத்தைத் தொடங்கினர்.

ஊதியக் கோரிக்கைகள் உட்பட சமூக உரிமைகள் மீதான தாக்குதல்கள் சர்வேச நாணய நிதியத்தால் கட்டளையிடப்பட்ட அரசாங்கத்தின் சிக்கனத் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

ஏனைய தொழிற்சங்கங்களைப் போலவே, சுகாதாரத் தொழிற்சங்கங்களும் சுகாதார ஊழியர்களை தரங்களின் அடிப்படையில் பிரிக்கின்றன.

அரசாங்க சார்பு பொதுச் சேவைகள் ஐக்கிய தாதியர் சங்கம் மற்றும் எதிர்க்கட்சியான மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) சார்பு அகில இலங்கை சுகாதார சேவை சங்கம் மற்றும் போலி இடது முன்னிலை சோசலிசக் கட்சியின் தலைமையிலான ஐக்கிய சுகாதார சேவை ஊழியர் சங்கமும் துறைசார் அடிப்படையில் இருந்து சுகாதாரத் தொழிற்சங்க கூட்டணியின் பிரச்சாரத்தை எதிர்க்கின்றன.

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கமானது DAT கொடுப்பனவு மருத்துவர்களுக்கு மட்டுமே என்று கூறி சுகாதார ஊழியர்களின் DAT கொடுப்பனவு கோரிக்கையை எதிர்ப்பது மட்டுமன்றி, அவர்களின் போராட்டத்தை ஒடுக்க அரசாங்கத்துடன் ஒத்துழைக்கிறது. இதேபோல், மருத்துவர் ருக்ஷான் பெல்லன தலைமையிலான அரச மருத்துவ அதிகாரிகள் மன்றம், சுகாதார தொழிலாளர்களின் எதிர்ப்புப் பிரச்சாரத்தை கடுமையாக எதிர்ப்பதுடன் DAT கொடுப்பனவு கோருவதற்கு சிறுறூழியர்களுக்கு உரிமை இல்லை எனக்கூறி அவர்களை அவமதித்து.

கடந்த பல தசாப்தங்களாக தொடர்ச்சியாக நிதிகளை திட்டமிட்டு வெட்டியதன் விளைவாக பொது சுகாதார சேவையானது வீழ்ச்சியின் விளிம்பிற்கு தள்ளப்பட்டுள்ளது.

பொது சுகாதாரத் துறையில் மருந்துகள், மருத்துவக் கருவிகள் மற்றும் மருத்துவர்கள் உட்பட சுகாதார தொழிளர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் மஹரகமவில் உள்ள புற்றுநோய் வைத்தியசாலையில் ஸ்கேன் இயந்திரம் பழுதடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார உள்கட்டமைப்பு குறைபாடு மற்றும் தொழிலாளர்கள், மருந்துகள் மற்றும் உபகரணங்களின் பற்றாக்குறை நோயாளிகளுக்கு கடுமையான சிரமங்களை ஏற்படுத்துகிறது.

விக்கிரமசிங்க அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன திட்டத்தை திணிப்பதை துரிதப்படுத்துகிறது. சுகாதாரம் மற்றும் கல்வி உட்பட அரச நிறுவனங்கள் மற்றும் சேவைகளை தனியார்மயமாக்குதல், வரி வலையமைப்பை விரிவுபடுத்துதல் மற்றும் பொதுச் செலவுகளைக் வெட்டித் தள்ளுவதும் இதில் அடங்கும். நாம் எதிர்கொள்ளும் நிலைமை இன்னும் மோசமடையும்.

விக்கிரமசிங்க அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எந்தவொரு எதிர்ப்பையும் பொறுத்துக்கொள்ளத் தயாராக இல்லாதது மட்டுமன்றி எதிர்ப்புகளை கொடூரமாக நசுக்கத் தீர்மானித்துள்ளது. தொழிலாளர்களின் தொழில்துறை போராட்டங்களை குற்றமாக்கும் அடக்குமுறை அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டம் அடிக்கடி பயன்படுத்தப்படுவதுடன் சமீபத்திய வேலைநிறுத்தங்களை உடைக்க மருத்துவமனைகளுக்கு இராணுவம் அனுப்பப்படுகிறது. ஜனவரியில், மின்சார ஊழியர்களுக்கு எதிராக அரசாங்கம் இந்த கொடூரமான சட்டத்தைப் பயன்படுத்தி 62 பேரை இடைநீக்கம் செய்துள்ளது.

சுகாதார ஊழியர்களின் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் எந்தப் பிரிவினரதும் உரிமைகளைப் பாதுகாக்க விக்கிரமசிங்க ஆட்சியின் மீது அழுத்தங்களைப் பிரயோகிப்பது பயனற்றது என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. 'எதையாவது பெறுவதற்காக' அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பது என்பது, நமது உரிமைகளைப் பாதுகாப்பதற்கான உண்மையான போராட்டத்தைத் தடுப்பதற்காக தொழிற்சங்கத் தலைவர்களால் வேண்டுமென்றே பரப்பப்படும் மாயையாகும்.

அரசாங்கத்தைப் போலவே, தொழிற்சங்க அதிகாரத்துவங்களும் தொழிலாள வர்க்கத்தின் வளர்ந்து வரும் போராட்டங்களைப் பற்றியும் தங்கள் வேலைகள் மற்றும் அடிப்படை உரிமைகளுக்காகப் போராடுவதற்கான தொழிலாளர்களின் உறுதிப்பாடு, அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவும் அவரது அரசாங்கமும் வெளியேறுவதற்கு வழிவகுத்த 2022 ஏப்ரல்-ஜூலை வெகுஜன எழுச்சி போன்ற ஒரு மக்கள் எழுச்சியாக விரைவாக வளர்ச்சியடையும் என்றும் பீதியடைந்துள்ளன.

தொழிற்சங்க அதிகாரத்துவங்களின் அரசாங்க சார்பு மற்றும் முதலாளித்துவ சார்பு கொள்கைகளை நிராகரித்து, கண்ணியமான வாழ்க்கைக்கு தேவையான சம்பளம் மற்றும் வேலை நிலைமைகளுக்காகவும் பரந்த மக்களுக்கு சிறந்த சேவை கிடைக்கச் செய்யவும் போராடுவதற்கு தொழிலாளர்கள் முன்முயற்சி எடுக்க வேண்டும்.

தொழிற்சங்க அதிகாரத்துவம் மற்றும் அனைத்து முதலாளித்துவக் கட்சிகளிலும் இருந்து சுயாதீனமாக மருத்துவமனைகள், சுகாதார நிறுவனங்கள் உட்பட அனைத்து வேலைத்தளங்களிலும் உள்ள தொழிலாளர்களால் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு ஜனநாயக முறையில் கட்டுப்படுத்தப்படும் நடவடிக்கைக் குழுக்களைக் கட்டமைக்க வேண்டும் என்று நாங்கள் பரிந்துரைக்கிறோம்.

ஆரம்ப கட்டமாக நாங்கள் சுகாதார தொழிலாளர் நடவடிக்கை குழுவை உருவாக்கியுள்ளதோடு இதேபோன்ற முயற்சியை மேற்கொள்ளுமாறு எங்கள் சக ஊழியர்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். இது தொடர்பாக உங்களுடன் கலந்துரையாட நாங்கள் தயாராக உள்ளோம்.

பொது சுகாதார சேவை ஊழியர்களின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதில் பின்வரும் கோரிக்கைகளை நாங்கள் முன்வைத்து உங்களுடன் கலந்துரையாடுவோம். அந்தக் கோரிக்கைகளாவன:

  • சீர்குலைந்து வரும் சுகாதார சேவையை சீரமைக்கவும் நவீனப்படுத்தவும் அதிக சுகாதார ஊழியர்களை நியமிக்கவும் பில்லியன் கணக்கான நிதியை ஒதுக்கு!
  • உயர்ந்து வரும் பணவீக்கம் மற்றும் வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப கண்ணியமான ஊதியம் வேண்டும்!.
  • உழைக்கும் மக்களின் ஜனநாயக உரிமைகள் மீது கைவைக்காதே! மின்சைர ஊழியர்களுக்கு எதிரான வேட்டையாடலை நிறுத்தி அவர்களை நிபந்தனையின்றி மீண்டும் வேலையில் அமர்த்து!

இந்த நடவடிக்கை குழுக்கள் தொழிலாளர்களை தர அடிப்படையில் பிரிக்கும் தொழிற்சங்கங்களின் முயற்சிகளை நிராகரித்து அனைத்து சுகாதார ஊழியர்களதும் ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தினதும் ஐக்கியத்துக்காகப் போராட வேண்டும்.

இந்தக் கோரிக்கைகளை அடைவதற்கான போராட்டத்திற்கு விக்கிரமசிங்க அரசாங்கத்திற்கு எதிரான மற்றும் சில செல்வந்தர்களின் நலன்களுக்காக அன்றி, பெரும்பான்மை மக்களின் நலன்களுக்காக பொருளாதாரத்தை மறுசீரமைப்பதற்குமான ஒரு அரசியல் போராட்டம் அவசியம் என்று சுகாதார தொழிலாளர் நடவடிக்கை குழு வலியுறுத்துகிறது.

Loading