முன்னோக்கு

நேட்டோவின் 75 ஆண்டுகள்: பனிப்போர் முதல் இன்றைய போர் வரை

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

ஏப்ரல் 4 அன்று, நேட்டோ இராணுவக் கூட்டணி அதன் 75வது ஆண்டு நிறைவைக் கொண்டாடியது. இரண்டாம் உலகப் போர் முடிந்து நான்கு ஆண்டுகளுக்குள், பனிப்போரின் ஆரம்ப ஆண்டுகளில், சோவியத் யூனியனுக்கு எதிரான ஒரு கூட்டணியாக நேட்டோ 1949 இல் நிறுவப்பட்டது. இன்று, அது மனித குலத்தை மூன்றாம் உலகப் போரில் ஆழ்த்துகிறது.

பிரஸ்ஸல்ஸில் உள்ள நேட்டோ தலைமையகத்தில் நேட்டோ-உக்ரேன் கவுன்சிலின் வட்டமேசைக் கூட்டம். Thursday, April 4, 2024.  [AP Photo/Geert Vanden Wijngaert]

பிரஸ்ஸல்ஸில் நடந்த நேட்டோவின் வெளியுறவு மந்திரிகளின் ஆண்டுவிழா கூட்டமானது, உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான போரின் ஒரு பெரிய புதிய விரிவாக்கத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டது. பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், ரஷ்யப் படைகளை எதிர்த்துப் போரிடுவதற்கு உக்ரேனுக்கு தரைப்படைகளை அனுப்ப முன்மொழிந்த சில வாரங்களுக்குப் பிறகு, உக்ரேனுக்கான உதவிகளை ஒருங்கிணைக்கும் உக்ரேன் பாதுகாப்புத் தொடர்புக் குழுவை நேட்டோ கையகப்படுத்த உள்ளது. ரஷ்யாவிற்கு எதிரான உக்ரேனின் போர், நேட்டோவால் கட்டளையிடப்பட்ட ஒரு நடவடிக்கையாக வெளிப்படுகிறது.

உக்ரேனுக்கான நேட்டோ ஆதரவு “உறுதியானது” என்றும், “உக்ரேன் நேட்டோவில் உறுப்பினராகிவிடும்” என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் கூறினார். ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் போலந்தின் வெளியுறவு அமைச்சர்கள் (அன்னலெனா பேர்பாக், ஸ்டீபன் செஜோர்னே மற்றும் ராடோஸ்லாவ் சிகோர்ஸ்கி ஆகியோர்) பொலிட்டிகோவில் நேட்டோ சக்திகள் உக்ரேனுக்கு 200 பில்லியன் யூரோக்களுக்கு மேல் கொடுத்துள்ளதாகக் கூறினர். அத்துடன், “எங்கள் ஆதரவு தேவைப்படும் காலம் வரை, அது தீவிரமாக தொடரும்” என்று அவர்கள் உறுதியளித்தனர்.

நேட்டோ சக்திகள், காஸாவில் பாலஸ்தீனியர்கள் மீதான இஸ்ரேலின் இனப்படுகொலையை ஆதரிக்கின்றன. தற்போது, 40,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனிய மக்கள் காஸாவில் கொல்லப்பட்டுள்ளனர். இது விரிவடையும் உலகளாவிய போரின் ஒரு பகுதியாக பார்க்கப்படுகிறது.

“நமது பாதுகாப்பு பிராந்தியங்கள் அல்ல, உலகளாவியது என்பதை நாங்கள் அறிவோம்” என்று நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் தனது ஆண்டுவிழா உரையில் குறிப்பிட்டார். “உக்ரேனில் நடந்து வருகின்ற போர் இதை தெளிவாக விளக்குகிறது. ஆசியாவில் ரஷ்யாவின் நண்பர்கள் அதன் ஆக்கிரமிப்புப் போரைத் தொடர்வதற்கு இன்றியமையாதவர்கள். ரஷ்யாவின் போர்ப் பொருளாதாரத்திற்கு சீனா முட்டுக் கொடுக்கிறது. பதிலுக்கு, மாஸ்கோ தனது எதிர்காலத்தை பெய்ஜிங்கிற்கு அடகு வைக்கிறது. வட கொரியாவும் ஈரானும் கணிசமான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை வழங்குகின்றன. பதிலுக்கு, பியோங்யாங் மற்றும் தெஹ்ரான் ரஷ்ய தொழில்நுட்பம் மற்றும் பொருட்களைப் பெற்று, அவற்றின் ஏவுகணை மற்றும் அணு ஆயுத திறன்களை மேம்படுத்த உதவுகின்றன” என்று அவர் குறிப்பிட்டார்.

நேட்டோ ஐரோப்பாவின் “தற்காப்பு” மற்றும் “பாதுகாப்பு” ஆகியவற்றிற்கு சேவை செய்கிறது என்ற கூற்று, அதன் தொடக்கத்தில் இருந்தே ஒரு பொய் பிரச்சாரமாகும். ட்ரொட்ஸ்கிச இயக்கம் எப்பொழுதும் வலியுறுத்துவது போல், நேட்டோ தொடக்கத்தில் இருந்தே பெரும் ஏகாதிபத்திய சக்திகளின் போர்க் கூட்டணியாக இருந்து வருகிறது.

75 ஆண்டுகளுக்கு முன்பு நேட்டோ ஸ்தாபிக்கப்பட்ட போது, ​​ஜேம்ஸ் பி. கேனனின் கீழ் அமெரிக்க சோசலிச தொழிலாளர் கட்சியால் வெளியிடப்பட்ட நான்காம் அகிலம் என்ற இதழ், “வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்தம் மற்றொரு இராணுவக் கூட்டணி அல்ல. … இந்த நிகழ்வின் மகத்தான முக்கியத்துவம், அது உடனடியாக வடிவமைக்கப்பட்ட பனிப்போர் மீதான அதன் தாக்கத்தைவிட வெகு தொலைவில் உள்ளது” என்று அறிவித்தது.

ஐரோப்பாவின் பழைய ஏகாதிபத்திய சக்திகளின் நெருக்கடி, (”கிழக்கின் கிளர்ச்சியாளர்களை சமாதானப்படுத்துவதற்கான முயற்சிகள், வரலாற்றில் மிகவும் விலையுயர்ந்த மற்றும் மிகப்பெரிய தோல்விகளில் ஒன்றாக நிரூபிக்கப்பட்டுள்ளன”. “அவர்களின் சொந்த வளங்களைக் கொண்டு மட்டும் உள் ஸ்திரத்தன்மையை அடைவது கிட்டத்தட்ட சாத்தியமற்றதாகிவிட்டது”. “சோவியத் யூனியனின் சக்தியை எதிர்கொள்வதற்கு அவர்கள் தனித்தனியாகவோ அல்லது கூட்டாகவோ வெளிப்புற உதவியின்றியோ நிச்சயமாக சக்தியற்றவர்களாக” இருந்தனர் என்று ஒப்புக்கொள்ளப்படுகிறது) “அமெரிக்க ஏகாதிபத்தியத்தை உலக முதலாளித்துவத்தின் பாதுகாவலராக ஆக்க வேண்டிய கட்டாயத்தில்” இருந்தது.

ஆனால், உலக அளவில் மட்டுமே இந்தப் பாத்திரத்தை திறம்பட நிறைவேற்ற முடியும் என்று நான்காம் அகிலத்தின் தலையங்கம் எச்சரித்தது. இந்த காரணத்திற்காக, உலக ஆதிக்கத்திற்கான பாதை உலகப் போருக்கான பாதையாக இருக்கிறது என்று நாங்கள் மீண்டும் மீண்டும் கணித்துள்ளோம். இந்த வரிகள் இன்று மீண்டும் மிகவும் பொருத்தமானவையாக உள்ளன. நேட்டோ உருவாக்கப்பட்டு எழுபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு, மூன்றாம் உலகப் போர் வெடிப்பதற்கு முன்னெப்போதையும் விட நெருக்கமாக உள்ளது.

1949 இல் நேட்டோ உருவாக்கப்பட்டபோது, ​​ஜேர்மனியின் பிளவு சீல் வைக்கப்பட்டு, சீனாவில் புரட்சி வெற்றிபெற்றதால், நேட்டோ ஒரு வன்முறை, எதிர்ப்புரட்சிக் கொள்கையைப் பின்பற்றியது. அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் பிற நேட்டோ ஏகாதிபத்திய சக்திகள் இந்தோசீனா, கொரியா, அல்ஜீரியா மற்றும் அதற்கு அப்பால் மிருகத்தனமான காலனித்துவ போர்களை நடத்தி வந்தன. நேட்டோ பின்னர் கிரீஸ் மற்றும் துருக்கியில் ஆட்சிக்கவிழ்ப்புகளை ஆதரித்ததோடு, சோவியத் ஒன்றியத்தின் செல்வாக்கைக் கட்டுப்படுத்த ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்காவில் இடதுசாரி தேசியவாத அரசாங்கங்களுக்கு எதிராக ஆதரவளித்தது.

எவ்வாறாயினும், அமெரிக்க ஆளும் உயரடுக்கில் சோவியத் யூனியனை “கட்டுப்படுத்துவதன்” மூலமாகவோ அல்லது இராணுவப் “பின்வாங்கல்” மூலமாகவோ, அணு ஆயுதப் போரை ஆபத்தில் ஆழ்த்துவதன் மூலம் போரிடலாமா என்பதில் ஒரு மோதல் வெடித்தது. பனிப்போரின் ஆரம்ப காலத்தில், கட்டுப்படுத்துவதற்கு ஆதரவாக இருந்தவர்கள் மேல் கையைப் பெற்றனர். எவ்வாறாயினும், அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது நீண்டகால இலக்கான அக்டோபர் புரட்சியின் சாதனைகளை மாற்றியமைத்து சோவியத் ஒன்றியத்தை அழிப்பதை ஒருபோதும் கைவிடவில்லை.

பனிப்போர் 1991 இல் முடிவுக்கு வந்தது, ஸ்ராலினிச அதிகாரத்துவம் அதன் வரலாற்று துரோகத்தின் இறுதி படியை எடுத்து, அக்டோபர் புரட்சியால் உருவாக்கப்பட்ட சொத்து உறவுகளை கலைத்து, முதலாளித்துவத்தை மீட்டெடுத்து, வார்சா ஒப்பந்தத்தையும் சோவியத் யூனியனையும் கலைத்தது.

சோவியத் யூனியனால் முன்வைக்கப்பட்டதாகக் கூறப்படும் ஆபத்துடன் தனது இருப்பை எப்போதும் நியாயப்படுத்தி வந்த நேட்டோ, தன்னைக் கலைக்கவில்லை. நான்காம் அகிலம் இதழ், 1949ல் எழுதியது போல், “நேட்டோவின் ஸ்தாபகமானது அது உடனடியாக வடிவமைக்கப்பட்ட ‘பனிப்போர்’ மீதான அதன் தாக்கத்தையும் கடந்து, உலக மேலாதிக்கத்திற்கான பாதை உலகப் போருக்கான பாதையில்” உள்ளது.

அமெரிக்க ஏகாதிபத்தியம், சோவியத் யூனியனின் கலைப்பை அதன் உலக மேலாதிக்கத்தை மீண்டும் நிலைநிறுத்துவதற்கும் கொரியா, வியட்நாம் மற்றும் பிற இடங்களில் தான் அடைந்த தோல்விகளைத் மாற்றியமைப்பதற்கும் ஒரு வாய்ப்பாகக் கண்டது. அத்தோடு, கோர்பச்சேவ், யெல்ட்சின் மற்றும் புட்டின் ஆகியோர் சோவியத் யூனியனை சர்வதேச மூலதனத்தின் சுரண்டலுக்குத் திறந்துவிட்டதில் திருப்தியடையாத அமெரிக்க ஏகாதிபத்தியம், ரஷ்யா மீதான காலனி ஆதிக்கத்தை விரும்பியது.

அமெரிக்காவின் ஐரோப்பிய கூட்டாளிகள் தங்கள் சொந்த ஏகாதிபத்திய நலன்களை பின்பற்றி, அதன் வழியை பின்பற்றினர். இந்த இலக்கை அடைவதுக்கு அவர்கள் தொடரும் கருவி நேட்டோ ஆகும். சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதில் இருந்து, நேட்டோ அல்லது அதன் உறுப்பு நாடுகள், எந்தவித இடையூறும் இல்லாமல் நடைமுறையில் போரை நடத்தி வருகின்றனர்.

அமெரிக்கா 1990 இல் ஈராக்கை முதன்முதலில் தாக்கியது. 1999 இல், நேட்டோ ஐ.நா ஆணை இல்லாமல் - சர்வதேச சட்டத்தை மீறி - சேர்பியா மீது குண்டுவீசி கொசோவோவை பிரிந்து செல்ல கட்டாயப்படுத்தியது. 2001 ஆம் ஆண்டில், நேட்டோ முதன்முறையாக பரஸ்பர பாதுகாப்பு விதியை செயல்படுத்தி ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்தது. இந்த நாட்டினை அழிவுக்கு உள்ளாக்கி, 20 ஆண்டுகள் நீடித்த இந்தப் போர் தலிபான்களின் வருகையுடன் முடிவுக்கு வந்தது. ஈராக், லிபியா மற்றும் சிரியாவிற்கு எதிரான அடுத்தடுத்த போர்கள் உத்தியோகபூர்வ நேட்டோ அமைப்பு நாடுகளுக்கு வெளியே நடந்தாலும், அவை பெரும்பாலான நேட்டோ உறுப்பு நாடுகளால் மேற்கொள்ளப்பட்டன.

மத்திய கிழக்கில் நடந்த போர்களுக்கு இணையாக, நேட்டோ ரஷ்யாவை நோக்கி திட்டமிட்டு முன்னேறி கிழக்கு ஐரோப்பா முழுவதையும் (பால்டிக் நாடுகளுடன்) மற்றும் முன்னாள் சோவியத் யூனியனின் சில பகுதிகளையும் இணைத்துக் கொண்டது.

உலகின் மிக சக்திவாய்ந்த நேட்டோ இராணுவக் கூட்டணி 12ல் இருந்து 32 உறுப்பினர்களாக வளர்ந்தது. கடந்த ஆண்டு, அதன் பாதுகாப்புக்காக $1.3 டிரில்லியன் டொலர்கள் அல்லது உலக இராணுவச் செலவில் 60 சதவிகிதத்தை நேட்டோ செலவழித்தது. அமெரிக்க இராணுவ வரவுசெலவுத் திட்டம் மட்டும் மொத்தம் $905 பில்லியன் டொலர்களாகும். இது, அடுத்த 15 நாடுகளை விட அதிகமாகும். மாறாக, சீனா $220 பில்லியன் மற்றும் ரஷ்யா $109 பில்லியன் பாதுகாப்புக்காக மட்டுமே செலவிட்டுள்ளது.

அமெரிக்காவும் ஜேர்மனியும் கியேவில் மேற்கத்திய சார்பு கைப்பாவை ஆட்சியை நிறுவுவதற்கான ஒரு சதியை ஆதரித்த போது, நேட்டோ 2014 முதல் ரஷ்யாவுடன் போருக்கு திட்டமிட்டு தயாராகி வந்தது. தொடர்ச்சியாக உக்ரேனுக்கு ஆயுதங்களை வழங்கி வந்த நேட்டோ, இறுதியில் 2022 இல் புட்டின் ஆட்சியின் அவநம்பிக்கையான பிற்போக்குத்தனமான தாக்குதலை மேற்கொள்ளத் தூண்டியது. இதன் பின்னர், ரஷ்யாவிற்கு எதிரான போரில் உக்ரேனியர்களை பீரங்கித் தீவனமாகப் பயன்படுத்தி, நூறாயிரக்கணக்கான உக்ரேனிய உயிர்களைப் பலி கொடுத்து வரும் நேட்டோ, அணுவாயுத மோதலாக அதிகரிக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பைத்தியக்காரத்தனம் சர்வதேச முதலாளித்துவ அமைப்பின் தீர்க்க முடியாத முரண்பாடுகளில் வேரூன்றியுள்ளது. உற்பத்தி சாதனங்களின் தனியார் உடைமை மற்றும் அதன் அடிப்படையிலான முதலாளித்துவ தேசிய அரசு ஆகியவை நவீன உற்பத்தியின் உலகளாவிய தன்மையுடன் சமரசம் செய்ய முடியாதுள்ளது. இது, பில்லியன் கணக்கான தொழிலாளர்களை ஒரே சமூக செயல்பாட்டில் இணைக்கிறது. இந்த நிலைமைக்கு ஏகாதிபத்தியம் அறிந்த ஒரே பதில், உலகினை வன்முறை ரீதியாக மறுபங்கீடு செய்வதாகும்.

இந்தப் போரை நடத்துவதற்கு, நேட்டோ ஏகாதிபத்திய சக்திகள் உள்நாட்டில் பாசிச பொலிஸ்-அரசு ஆட்சிகளை கட்டியெழுப்ப வேண்டும். இராணுவவாதத்தின் பிரமாண்டமான செலவுகள் மற்றும் போரின் விளைவுகளை எதிர்கொள்ளும் தொழிலாள வர்க்கத்தின் வளர்ந்து வரும் எதிர்ப்பை நசுக்க வேண்டும். டிரம்ப், மெலோனி, ஜேர்மனிக்கான அதிதீவிர வலதுசாரி மாற்றுக் கட்சி (AfD) மற்றும் இதர நவ-பாசிஸ்டுகளின் எழுச்சியானது, அனைத்து முதலாளித்துவக் கட்சிகளின் வலதுசாரி வளர்ச்சியின் கூர்மையான வெளிப்பாடுகளாகும்.

ஆனால், முதலாளித்துவ அமைப்பின் நெருக்கடி சோசலிசப் புரட்சிக்கான சூழ்நிலையையும் உருவாக்குகிறது. நான்காம் அகிலம் சர்வதேச இதழின் ஏப்ரல் 1949 தலையங்கம் இந்த வார்த்தைகளுடன் முடிந்தது: “பணியாளர்கள் அனைத்து தற்செயல்கள் மற்றும் நிகழ்வுகளை கவனமாகக் கணக்கிட்டனர், — ஒன்றைத் தவிர. எல்லாவற்றிற்கும் மேலாக, அமைதியை விரும்பும் உலக மக்களின் கூட்டணி அது. கிரெம்ளினின் சூழ்ச்சிகள் அல்ல, மாறாக ஷாங்காய் மற்றும் இந்தோனேஷியா, மிலன், ரூர் மற்றும் டெட்ராய்ட் ஆகிய இடங்களில் உள்ள வர்க்கப் போராட்டமானது, மரணம், பிற்போக்கு மற்றும் சர்வாதிகாரத்தின் இந்த புனிதமற்ற ஒப்பந்தத்தின் பலவீனம் என்பதை நிரூபிக்கும்”.

இந்த வார்த்தைகள் அன்று போலவே இன்றும் பொருந்துகின்றன. தொழிலாள வர்க்கத்தின் ஒரு பாரிய சர்வதேச இயக்கம் மட்டுமே, போருக்கு எதிரான போராட்டத்தை முதலாளித்துவ சுரண்டலுக்கு எதிரான போராட்டத்துடன் இணைத்து, உலகப் போர் மற்றும் அணுவாயுத பேரழிவுக்கான பாதையை நிறுத்த முடியும்.

Loading