மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
ஏப்ரல் 7 ஆம் தேதி, காஸாவில் அமெரிக்க-இஸ்ரேல் இனப்படுகொலை தொடங்கி ஆறாவது மாதத்தை குறிக்கிறது.
வெறும் ஆறே மாதங்களில், காஸாவின் 2.2 மில்லியன் மக்களில் 1.9 மில்லியன் மக்களை இடம்பெயரச் செய்துள்ள இஸ்ரேல், ஒட்டுமொத்த மக்களுக்கும் உணவு, குடிநீர் மற்றும் மருத்துவ கவனிப்பு ஆகியவற்றை மறுத்து வருவதோடு, பத்தாயிரக் கணக்கானவர்களின் உயிரிழப்புகளை விளைவித்த அன்றாட திட்டமிட்ட படுகொலைகளை மேற்கொண்டு வருகிறது.
காஸாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 33,137 ஆக உயர்ந்துள்ளது. காணாமல் ஆக்கப்பட்டவர்களையும் சேர்த்துக்கொண்டால், உண்மையான எண்ணிக்கை 44,000 க்கும் அதிகமாக இருக்கும். மேலும் 75,815 பேர் காயமடைந்துள்ளனர்.
ஆறே மாத காலத்தில், காஸாவின் மக்கள் தொகையில் 5.45 சதவிகிதத்தினர் கொல்லப்பட்டுள்ளனர், காயமுற்றுள்ளனர் அல்லது காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். அமெரிக்க மக்கள்தொகையில் ஒப்பிடக்கூடிய சதவீதம் 18 மில்லியனுக்கும் அதிகமான மக்களாக இருக்கும்.
கொல்லப்பட்டவர்களில் மூன்றில் இரண்டு பங்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் என்பது எல்லாவற்றையும் விட அதிர்ச்சியளிக்கிறது. மருத்துவப் பணியாளர்கள், மனிதாபிமானப் பணியாளர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் கலைஞர்களை இஸ்ரேல் வேண்டுமென்றே குறிவைத்துள்ளது. உலக மத்திய சமையலறை நிறுவனர் ஜோஸ் ஆண்ட்ரெஸ் ஞாயிற்றுக்கிழமை கூறியது போல், இஸ்ரேல் “மனிதகுலத்திற்கு எதிரான போரை” நடத்துகிறது.
கடந்த ஆறு மாத காலத்தில், காஸா மீதான குண்டுவீச்சு, படையெடுப்பு மற்றும் முற்றுகையை நியாயப்படுத்தும் அமெரிக்க-இஸ்ரேலிய நியாயப்படுத்தலின் ஒவ்வொரு கூறுபாடும் பொய் என்று அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஹமாஸ் எல்லை தாண்டிய தாக்குதலுக்கு சில வாரங்களுக்குப் பிறகு, போருக்கான சாக்குப்போக்காக செயல்பட்ட அக்டோபர் 7 தாக்குதலுக்கான முழு ஹமாஸ் செயல்பாட்டுத் திட்டத்தையும் இஸ்ரேல் தன் வசம் வைத்திருந்தது என்பது தெரியவந்தது. இது தெரிந்திருந்தும், இஸ்ரேலிய உளவுத்துறை மற்றும் இராணுவப் படைகள் தாக்குதலுக்கு முன்னதாக உடனடியாக காசா எல்லையில் இருந்து பின்வாங்கவும் மறுநிலைநிறுத்தப்படவும் உத்தரவிடப்பட்டன.
ஒரு சில நாட்களுக்குள், இஸ்ரேலிய இராணுவம் காஸா மக்களுக்கு எதிரான ஒரு இனப்படுகொலை போருக்கான நீண்டகால திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. “நாங்கள் மனித விலங்குகளுடன் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறோம், அதற்கேற்ப நாங்கள் செயல்படுகிறோம்” என்று அக்டோபர் 9 அன்று இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலண்ட் அறிவித்தார். “காஸா பகுதியை முற்றுகையிட நான் உத்தரவிட்டுள்ளேன். மின்சாரம் இருக்காது, உணவு இருக்காது, எரிபொருள் இருக்காது” என்று அவர் அறிவித்தார்.
வெறும் நான்கு நாட்களுக்குப் பின்னர், இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் அறிவித்தார்: “இதற்கு முழு நாடும் பொறுப்பாகும். பொதுமக்கள் விழிப்புடன் இல்லை, சம்பந்தப்படவில்லை என்ற இந்த வாய்வீச்சு உண்மையல்ல... அவர்களின் முதுகெலும்பை முறிக்கும் வரை போராடுவோம்” என்று குறிப்பிட்டார். விவசாய அமைச்சர் அவி டிக்டர் “நாங்கள் காஸா நக்பாவை உருவாக்குகிறோம்” அறிவித்தார். (1947-48ல் இஸ்ரேல் அரசு நிறுவப்பட்டபோது பாலஸ்தீனியர்களின் அசல் இனச் சுத்திகரிப்பு பற்றிய குறிப்பு).
இனப்படுகொலை நோக்கத்துடன் இத்தகைய அறிக்கைகளை வெளியிட்ட பின்னர், நெத்தன்யாகு அரசாங்கம் திட்டமிட்டு காஸாவில் சமூக, பொருளாதார மற்றும் கலாச்சார வாழ்வின் அனைத்து அம்சங்களையும் இலக்கில் வைத்து, அனைத்து மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் வீடுகளை தரைமட்டமாக்க வேலை செய்தது. அத்துடன் முடிந்தவரை அதிகமான ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளைக் கொன்று குவித்தது.
சியோனிசத்தின் முன்னோக்கு திவாலானது மற்றும் பிற்போக்குத்தனமானது என்பதை இந்த இனப்படுகொலை மறுக்கமுடியாமல் எடுத்துக்காட்டியது. இஸ்ரேல் என்றென்றும் பாரிய கொலைகளுடன் அதன் தொடர்பினால் குறிக்கப்படும். இது பல தசாப்தங்களாக பாலஸ்தீனியர்கள் மீதான மிருகத்தனமான ஒடுக்குமுறை, மற்றும் யூத மக்கள் அனைவரின் நலன்களும் இஸ்ரேலிய அரசுடன் தவறாக அடையாளம் காணப்பட்டதன் இறுதி விளைபொருளாகும்.
இஸ்ரேலுக்கு அப்பால், இனப்படுகொலை முழு ஏகாதிபத்திய ஒழுங்கையும் கண்டனம் செய்வதாக அமைகிறது. அமெரிக்க-நேட்டோ அச்சில் உள்ள முதலாளித்துவ சக்திகள் நவீன சகாப்தத்தின் மிகப்பெரிய குற்றங்களில் ஒன்றை ஆதரித்து, ஆயுதம் கொடுத்து, நிதியுதவி செய்து, அரசியல் ரீதியாக நியாயப்படுத்தியுள்ளன.
இஸ்ரேலிய அரசாங்கம் பகிரங்கமாக காஸா மக்களைப் படுகொலை செய்து வெளியேற்றும் அதன் விருப்பத்தை அறிவிக்கையில், பைடென் நிர்வாகம் மோதலுக்கு பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காண்பதற்கு அதன் எதிர்ப்பை மீண்டும் மீண்டும் அறிவித்தது. போர் நிறுத்தத்திற்கு “எந்த வாய்ப்பும் இல்லை” என்று பைடென் நவம்பர் 9 அன்று அறிவித்தார்.
ஒரு சில நாட்களுக்குப் பின்னர், செனட் பெரும்பான்மை தலைவர் சார்ல்ஸ் சூமர் வாஷிங்டன் டி.சி.யில் இனப்படுகொலைக்கு ஆதரவான ஒரு பேரணியில் உரையாற்றினார். “நாங்கள் உங்களுடன் நிற்கிறோம்... உங்களுக்குத் தேவையான உதவி கிடைக்கும் வரை நாங்கள் ஓய மாட்டோம்” என்று அவர் முழங்கினார்,
ஆறு மாத காலத்தில், பைடென் நிர்வாகம் இஸ்ரேலுக்கு 100க்கும் மேற்பட்ட தனித்தனி ஆயுத பரிமாற்றங்களை செய்துள்ளது, இது நெதன்யாகு அரசாங்கம் விருப்பப்படி காசா மக்களை பட்டினி போடவும், கொல்லவும், சித்திரவதை செய்யவும் பச்சை விளக்கு காட்டியுள்ளது என்பதைத் தெளிவாக்கியுள்ளது.
இந்த யதார்த்தம், அப்பாவி மக்களைப் பாதுகாக்க நெதன்யாகு அரசாங்கத்திற்கு வெள்ளை மாளிகை “அழுத்தம்” கொடுக்க முனைந்ததாக பைடென் நிர்வாகம் மற்றும் அமெரிக்க ஊடகங்களின் கூற்றுக்களுக்கு பதிலளிக்க முடியாத மறுப்பாக உள்ளது.
உண்மையில், பைடென் நிர்வாகத்தின் கொள்கை இஸ்ரேலுக்கு ஒரு பாரிய வெற்றுக் காசோலையாக உள்ளது. இந்தக் கொள்கை வெள்ளை மாளிகையால் நெதன்யாகு மீது முற்றிலும் வாய்மொழி விமர்சனம் இருந்தபோதிலும் இன்றுவரை தொடர்கிறது.
இஸ்ரேலிய இனப்படுகொலைக்கு பைடென் நிர்வாகத்தின் வெளிப்படையான ஆதரவு, ரஷ்யா மற்றும் சீனாவை இலக்காகக் கொண்ட உலகளாவிய மேலாதிக்கத்திற்கான ஒரு பரந்த போராட்டத்தின் பாகமாக, ஈரான் உட்பட மத்திய கிழக்கு எங்கிலும் அமெரிக்க இராணுவவாதத்தின் வெடிப்பின் ஒரு பகுதியாக உள்ளது.
காஸா இனப்படுகொலை பரந்த மற்றும் நீண்டகால சமூக மற்றும் அரசியல் விளைவுகளைக் கொண்டிருக்கும். ஏற்கனவே காஸாவில் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள பாரிய படுகொலை ஈராக் போருக்குப் பின்னர் மிகப் பெரிய உலகந்தழுவிய வெகுஜன எதிர்ப்புக்களை தூண்டியுள்ளது. தமது போர்களை நியாயப்படுத்த “மனித உரிமைகளை” இடைவிடாது கையிலெடுக்கும் ஏகாதிபத்திய சக்திகள், இனப்படுகொலைக்கு அனுசரணையாளர்களாகவும் உடந்தையாகவும் இருக்கின்றன என்பதை அது எடுத்துக்காட்டியுள்ளது.
எல்லாவற்றிற்கும் மேலாக, காஸா மீதான இனப்படுகொலை முதலாளித்துவத்தின் ஒரு குற்றமாகும். முதலாளித்துவ சமூக ஒழுங்கமைப்பு, சமூக காட்டுமிராண்டித்தனத்தின் ஒவ்வொரு வடிவத்தையும் நியாயப்படுத்தி வருகிறது: அணு ஆயுதப் போரிலிருந்து, தடுக்கக்கூடிய தொற்றுநோய்களில் நிரந்தரமான வெகுஜன மரணம், இனப்படுகொலை வரை. எதிர்கால தலைமுறையினர் காஸா இனப்படுகொலையை முதலாளித்துவ சமூக ஒழுங்கிற்கு எதிரான சக்திவாய்ந்த நீரோட்டங்களின் வளர்ச்சியை உந்தும் ஒரு திருப்புமுனையாக காண்பார்கள்.
உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழு தலைவர் டேவிட் நோர்த் சியோனிசத்தின் தர்க்கம்: தேசியவாத கட்டுக்கதையிலிருந்து காஸா இனப்படுகொலை வரை என்ற நூலில் விளக்குவதைப் போல:
நடந்துகொண்டிருக்கும் போர், அதன் அத்தனை பயங்கரங்களுக்கும் மேலாக, ஒரு குறிப்பிடத்தக்க அரசியல் பங்களிப்பை வழங்கியுள்ளது. இது இளைஞர்களை விழிப்படையச் செய்துள்ளது. இது உலகின் கண்களைத் திறந்துள்ளது. இது சியோனிச ஆட்சியையும் அதன் ஏகாதிபத்திய கூட்டாளிகளையும் குற்றவாளிகளாக அம்பலப்படுத்தியுள்ளது. இது உலகம் முழுவதும் பரவி வரும் சீற்ற அலையை உருவாக்கி, இந்த இனப்படுகொலைக்கு காரணமானவர்கள் மீது பாய்ந்துவிடும்.
அரசியல் ரீதியாக உருவமற்ற தன்மையைக் கொண்ட இந்த வளர்ந்து வரும் எதிர்ப்பை, தொழிலாள வர்க்கத்தை நோக்கிய ஒரு சோசலிச முன்னோக்கை அடிப்படையாகக் கொண்ட ஒரு நனவான இயக்கமாக மாற்றுவது அவசியமாகும்.