முன்னோக்கு

அமெரிக்கா-ஜப்பான் உச்சிமாநாடு: சீனாவுடனான போரை நோக்கிய ஒரு முக்கிய படி

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

இந்த வாரம், ஜப்பானிய பிரதம மந்திரி ஃபுமியோ கிஷிடாவின் அமெரிக்க விஜயம், இந்தோ-பசிபிக் முழுவதும் வாஷிங்டனின் கூட்டணிகளை ஒருங்கிணைப்பதிலும், சீனாவுடனான போருக்கான அதன் தயாரிப்புகளை துரிதப்படுத்துவதிலும் ஒரு முக்கிய படியைக் குறிக்கிறது. இது உலகப் போரின் ஒரு பகுதியாகும். இது, உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான போரிலிருந்து மத்திய கிழக்கு காஸாவில் நடந்துவரும் இனப்படுகொலை மற்றும் ஈரானுடனான போருக்கான திட்டங்கள் மற்றும் பசிபிக் வரை நீண்டுள்ளது.

ஜனாதிபதி ஜோ பைடென் மற்றும் ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா ஆகியோர், 3வது அமெரிக்க காலாட்படை படைப்பிரிவின் தளபதி, பழைய காவலர், கேர்னல் டேவிட் ரோலண்ட் உடன் வெள்ளை மாளிகையின் தெற்கு புல்வெளியில் அணிவகுப்பில் நடந்து செல்கின்றனர். Wednesday, April 10, 2024, in Washington. [AP Photo/Evan Vucci]

கடந்த புதன்கிழமை ஒரு கூட்டு செய்தியாளர் கூட்டத்தில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் 1960 இல் கையெழுத்திட்ட பிறகு முதல் முறையாக அமெரிக்க-ஜப்பான் பாதுகாப்பு ஒப்பந்தத்தின் ஒரு பெரிய விரிவாக்கத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

பைடென் அறிவித்தார்:

தற்காப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த நமது நாடுகள் இணைந்து முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. நாங்கள் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு கட்டமைப்புகளை நவீனமயமாக்கி வருகிறோம், மேலும் எங்கள் இராணுவத்தின் இயங்குதன்மை மற்றும் திட்டமிடலை அதிகரித்து வருகிறோம், இதனால் அவர்கள் தடையின்றி மற்றும் திறம்பட ஒன்றிணைந்து செயல்பட முடியும்.

மூடிய கதவுகளுக்குப் பின்னால் நடக்கும் இதர கூட்டங்களில் விவரங்கள் உருவாக்கப்படும் என்றாலும், பைடெனின் கருத்துகளின் அர்த்தம் தெளிவாக உள்ளது. “ஒரு தடையற்ற மற்றும் பயனுள்ள வழியில்” செயல்படும் மட்டத்தில் இராணுவப் படைகளை ஒருங்கிணைத்தல் என்பது ஜப்பானும் அமெரிக்காவும் தங்கள் இராணுவத்தை போருக்கு தயார்படுத்தி வருவதை குறிக்கிறது.

அமெரிக்க-ஜப்பான் பாதுகாப்பு ஒப்பந்தத்தின் கீழ், ஜப்பானில் ஏற்கனவே உலகின் எந்த நாட்டிலும் இல்லாத அளவில், மிகப்பெரிய அமெரிக்க இராணுவப் படையணிகள் நிலைகொண்டிருக்கின்றன. சுமார் 55,000ம் அமெரிக்க பணியாளர்கள் ஜப்பான் முழுவதும் உள்ள தளங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கூடுதலாக, அமெரிக்கா அதன் கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் எதிர்ப்பு ஏவுகணை அமைப்பின் முக்கிய கூறுகளை ஜப்பானில் நிறுவியுள்ளது, இது தென் கொரியா மற்றும் அலாஸ்காவில் உள்ளவற்றுடன் சேர்ந்து, சீனாவிற்கு எதிராக அணு ஆயுதப் போரை நடத்துவதற்கு இன்றியமையாததாக இருக்கும்.

பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது ​​பைடென், அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகியவை “வான், ஏவுகணை மற்றும் பாதுகாப்பு கட்டமைப்பின் நெட்வொர்க் அமைப்பை” உருவாக்கும் என்றும் அறிவித்தார். செயற்கை நுண்ணறிவு மற்றும் குவாண்டம் கம்ப்யூட்டர் முதற்கொண்டு, கடலுக்கடியில் திறன்கள் மற்றும் ஹைப்பர்சோனிக் ஆயுதங்கள் வரையிலான உயர் தொழில்நுட்ப இராணுவ அமைப்புகளின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக, ஜப்பானை ஒப்பந்தத்தின் தூண் II க்குள் கொண்டுவர அவர்கள் முயல்வார்கள் என்று AUKUS கூட்டாளிகள் (ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா) இந்த வாரம் அறிவித்துள்ளனர்.

சீனாவிற்கு எதிரான அமெரிக்காவின் போர் திட்டங்களுக்கு ஜப்பான் இன்றியமையாததாக இருப்பதால், இந்த இராணுவ ஒருங்கிணைப்பு துரிதப்படுத்தப்படுகிறது. தைவான் மீதான மரபு ரீதியான போரில் அமெரிக்கப் படைகளை சீனா தோற்கடிக்காத நிகழ்வுவரை மட்டுமே அமெரிக்கப் படைகளுக்கு ஜப்பானிய உதவி இருக்கிறது என்பதை பென்டகனின் சமீபத்திய போர் பயிற்சிகளின் தொகுப்பு எடுத்துக் காட்டுகிறது.

சீனாவுடனான போருக்குத் தயாராகும் அவசரத்தில், பைடெனும் கிஷிடாவும் சட்டப்பூர்வத்தை காலடியில் மிதிக்கிறார்கள். அவர்களின் நடவடிக்கைகள், ஜப்பானின் 1947 அரசியலமைப்பின் 9 வது பிரிவை அப்பட்டமாக மீறுகின்றன. இது, ஜப்பானிய அரசாங்கங்களை “தேசத்தின் இறையாண்மை உரிமையாகவும், சர்வதேச தகராறுகளைத் தீர்ப்பதற்கான வழிமுறையாக அச்சுறுத்தல் அல்லது பலத்தைப் பயன்படுத்துவதையும் என்றென்றும் கைவிட வேண்டும்” என்று உறுதியளிக்கிறது. எவ்வாறாயினும், ஜப்பான் AUKUS இல் ஒருங்கிணைக்கப்படுதவன் மூலம், இந்த ஏகாதிபத்திய இராணுவக் கூட்டணியின் ஒரே நோக்கம் சீனாவுடன் போருக்குத் தயார் செய்வதாகும்.

இது தவிர்க்க முடியாமல் சீனாவிலும் சர்வதேச அளவிலும் ஆழமான, வரலாற்று ரீதியாக வேரூன்றிய பாரிய எதிர்ப்பைத் தூண்டிவிடும். 1937 முதல் 1945 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போர் முடியும் வரை, சீனாவிற்கு எதிராக ஜப்பான் கடைசியாக மேற்கொண்ட ஆக்கிரமிப்புப் போரில் இருபது மில்லியன் சீனர்கள் இறந்தனர். 1937 ஆம் ஆண்டு நான்ஜிங் வன்புணர்வுகள் மற்றும் 1940ல் “அனைவரையும் கொன்று, அனைத்தையும் எரிக்கவும், கொள்ளையடிக்கவும்” போன்ற ஜப்பானிய போர்க்குற்றங்கள், வடக்கு சீனாவில் அழிப்புத் தாக்குதல்கள் என்பன, சோவியத் யூனியனுக்கு எதிரான நாஜி போர்க்குற்றங்களுடன் மட்டுமே அளவிலும் கொடுமையிலும் ஒப்பிடத்தக்கது.

அவருக்கு முன் இருந்த தாராளவாத ஜனநாயகக் கட்சி (LDP) பிரதம மந்திரிகளைப் போலவே, கிஷிடாவும் இரண்டாம் உலகப் போரின் போது சீனாவிற்கு எதிரான போர்க்குற்றங்களை பாதுகாக்கும் ஜப்பானிய அதிதீவிர வலதுசாரி குழுக்களுடன் தனது ஒற்றுமையை தெளிவாக்கியுள்ளார். 2021 இல், கிஷிடா தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து ஒவ்வொரு ஆண்டும், “A தரத்திலிருக்கும்” 14 ஜப்பானிய போர் குற்றவாளிகள் புதைக்கப்பட்டுள்ள மதிப்பிழந்துபோயிருக்கும் யசுகுனி ஆலயத்திற்கு சடங்கு பிரசாதத்தை அனுப்பி வருகிறார்.

டோக்கியோவை AUKUS கூட்டணியில் ஒருங்கிணைக்க வாஷிங்டன், லண்டன் மற்றும் கான்பெர்ராவின் நகர்வுகள், சீனாவிற்கு எதிரான இனப்படுகொலை வன்முறை மற்றும் ஜப்பானில் உள்ள மிகவும் பிற்போக்குத்தனமான அரசியல் மரபுகளை ஜப்பானிய அரசாங்கத்தின் பாதுகாப்பிற்கு ஒப்புதல் அளிப்பதாகும்.

கடந்த வியாழன் அன்று அமெரிக்க காங்கிரஸின் கூட்டு அமர்விற்கு முன், கிஷிடா ஒரு வலுவூட்டப்பட்ட அமெரிக்க-ஜப்பான் கூட்டணியின் கவனம் வெறுமனே பிராந்தியம் அல்ல, மாறாக உலகளாவியது என்று தெளிவுபடுத்தினார். “அமெரிக்க ஆதரவு இல்லாமல், மாஸ்கோவில் இருந்து வரும் தாக்குதலின் கீழ் உக்ரேனின் நம்பிக்கைகள் வீழ்ச்சியடையாமல் எவ்வளவு காலத்திற்கு இருக்கும்?” மேலும், “அமெரிக்காவின் பிரசன்னம் இல்லாமல், இந்தோ-பசிபிக் இன்னும் எவ்வளவு காலம் கடுமையான யதார்த்தங்களை எதிர்கொள்ளும்?” என்று கிஷிடா கேள்விகளை எழுப்பினார்.

“இன்றைய உக்ரேன் நாளைய கிழக்கு ஆசியாவாக இருக்கலாம். ஆகவே, ஜப்பான் தொடர்ந்து உக்ரேனுடன் நிற்கும்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

அமெரிக்க ஏகாதிபத்தியம், அது தூண்டிவிட்ட ரஷ்யாவுடனான போரை, சீனாவுடனான மோதலுக்கு முன் தயாரிப்பாக பார்க்கிறது. ஏகாதிபத்திய சக்திகள், காஸாவில் இஸ்ரேல் மேற்கொண்டுவரும் இனப்படுகொலையை முழுமையாக ஆதரித்துவரும் போதே இவையெல்லாம் நடக்கின்றன. சீனாவுடனான போருக்கு சதித்திட்டம் தீட்டிவரும் ​​கிஷிடாவும் பைடெனும், தங்கள் கூட்டு செய்தியாளர் கூட்டத்தில், ஒரே பாடல் புத்தகத்திலிருந்து ரஷ்ய ஆக்கிரமிப்பை கண்டித்தும், பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனியர்களை படுகொலை செய்துவரும் இஸ்ரேலின் “தற்காப்பு உரிமையை” ஆதரித்தும் பாடினர்.

அனைத்து பெரிய ஏகாதிபத்திய சக்திகளும், கொள்ளையில் பங்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இணைகின்றன. வாஷிங்டனைப் போலவே, டோக்கியோவும் ஒரு தசாப்தத்தில் உலகின் இரண்டாவது பொருளாதாரத்திலிருந்து நான்காவது பொருளாதாரத்திற்கு நழுவி, அதன் பொருளாதார வீழ்ச்சியை நிறுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கடந்த ஆண்டு, அதன் இராணுவ செலவினங்களை இரட்டிப்பாக்கியது. ஜப்பானிய முதலாளித்துவம் வாஷிங்டனுக்கு விசுவாசமாக இருப்பதாக உறுதியளிக்கும் அதே வேளையில், இரண்டாம் உலகப் போரின் போது மோதிய அமெரிக்க மற்றும் ஜப்பானிய ஏகாதிபத்தியத்தின் நலன்கள் ஒரே மாதிரியானவை அல்ல.

ஏகாதிபத்திய சக்திகள் உலகளாவிய போரின் ஒரு பரந்த விரிவாக்கத்திற்கு சதி செய்துவரும் போது, ஆளும் வர்க்கங்கள் பாரிய இராணுவ வரவு செலவுத் திட்டங்களுக்கு தொழிலாளர்கள் விலைகொடுக்க வேண்டும் என்று கோரி வரும் நிலையில், வர்க்கப் பதட்டங்கள் வெடித்துச் சிதறுகின்றன.

உலகத்தை போட்டி தேசிய அரசுகளாக பிரித்து வைத்திருக்கும் காலாவதியான முதலாளித்துவ அமைப்பு முறையை ஒழித்துக்கட்டுவதற்கு சோசலிசத்துக்கான போராட்டத்தின் முன்னோக்கின் அடிப்படையில், தொழிலாள வர்க்கத்தில் ஒரு சர்வதேச போர்-எதிர்ப்பு இயக்கத்தை கட்டியெழுப்புவதற்கான நிலைமைகள் உருவாகியுள்ளன. அமெரிக்கா, ஜப்பான், சீனா, ரஷ்யா, ஐரோப்பா மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு, இதுவே பேரழிவுகரமான உலகப் போரை நோக்கி மூழ்குவதை தடுக்கக்கூடிய ஒரே சாத்தியமான வேலைத் திட்டமாகும்.

Loading