முன்னோக்கு

டிரம்ப் "லஞ்ச" விசாரணை தொடங்குகிறது — ஒரு அரசியல் திசைதிருப்பல்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

ஆபாச நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸுக்கு “லஞ்சம்” (hush money - விவகாரங்களை இரகசியமாக வைத்துக்கொள்ளச் செய்வதற்குப் பணத்தைத் தவறாக பிரயோகித்தல்) கொடுத்தது தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீதான குற்றவியல் விசாரணை திங்கள்கிழமை மன்ஹாட்டனில் தொடங்கியது. நீதிபதி ஜுவான் மெர்ச்சன் தொடர்ச்சியான நடைமுறைத் தீர்ப்புகளை வழங்கியதை தொடர்ந்து, ஜூரிகள் தொடர்பான சாத்தியமான கேள்விகளை எழுப்பினர். இதில் ஜூரியைத் தேர்ந்தெடுப்பதில் நீண்ட மற்றும் சர்ச்சைக்குரிய செயல்முறை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் நியூயோர்க்கில் நடுவர் தேர்வு தொடங்குவதற்கு முன்னதாக மன்ஹாட்டன் குற்றவியல் நீதிமன்றத்தில் தனது சட்டக் குழுவுடன் அமர்ந்திருக்கின்றார். Monday, April 15, 2024.  [AP Photo/Jabin Botsford/Pool]

மன்ஹாட்டன் மாவட்ட வழக்கறிஞர் ஆல்வின் ப்ராக் கொண்டு வந்த நியூயோர்க் வழக்கு, வெள்ளை மாளிகையில் ட்ரம்ப் நான்கு ஆண்டுகள் எழுப்பிய முக்கியமான அரசியல் கேள்விகளிலிருந்து திசைதிருப்பப்பட்டுள்ளது. அதற்கு அடுத்த மூன்று ஆண்டுகள் அவர் சதி செய்து அதிகாரத்திற்குத் திரும்புவதற்குத் தயார் செய்தார்.

இந்த வழக்கு, ட்ரம்பின் உண்மையான குற்றங்களுடன், குறிப்பாக ஜனவரி 6, 2021 இல் நடந்த சதி முயற்சியில் அவரது முக்கிய பங்கு குறித்து, எந்த வகையிலும் இணைக்கப்படவில்லை. ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடென் தேர்தலில் வென்று, அமெரிக்க மக்களால் ட்ரம்ப் நிராகரிக்கப்பட்ட போதிலும், ட்ரம்பின் ஆதரவாளர்கள் அமெரிக்க கேபிட்டலைத் தாக்கி, ​​​​2020 ஜனாதிபதித் தேர்தலுக்கான காங்கிரஸின் சான்றிதழைத் தடுத்து, அவரை ஜனாதிபதி பதவியில் தக்கவைக்க முயன்றனர்.

டேனியல்ஸுடனான ட்ரம்பின் பாலியல் உறவு என்பது அவரது மனைவி மற்றும் குடும்பத்தைப் பற்றிய விவகாரமாகும். 2016 தேர்தல் பிரச்சாரத்தின் போது, டேனியல்ஸ் தனது கதையை ஊடகங்களுக்கு விற்பதைத் தடுப்பதற்காக அவருக்குக் கொடுக்கப்பட்ட பணமும் சிறிய பலனைத் தரவில்லை. ட்ரம்ப்பிலிருந்து டேனியல்ஸுக்கு அவரது தனிப்பட்ட இடைத்தரகர் மைக்கேல் கோஹன் மூலம் நிதி அனுப்பப்பட்ட விதம், கூட்டாட்சி தேர்தல் சட்டங்களின் இயந்திர ரீதியிலான மீறலாகும். இது பொதுவாக அபராதம் செலுத்துவதன் மூலம் தீர்க்கப்படும்.

அரச சட்டத்தைப் பொறுத்தவரை, தவறான வணிக அறிக்கைகளை தாக்கல் செய்வது, கோஹனுக்கு வழங்கப்பட்ட பணத்தை சட்ட சேவைகளுக்கான கொடுப்பனவுகளாக சித்தரிப்பது ஒரு தவறான செயலாகும். மேலும் வரம்புகளின் சட்டம் நீண்ட காலமாக காலாவதியானது. எவ்வாறாயினும், வழக்கறிஞர் DA ப்ராக், தவறான அறிக்கைகள் கூட்டாட்சி சட்டத்தை மீறுவதற்கான சதியின் ஒரு அங்கம் என்று குற்றம் சாட்டினார். அத்தோடு, எந்தவொரு கூட்டாட்சி வழக்கறிஞரும் அத்தகைய வழக்கைக் கொண்டுவரத் தேர்வு செய்யவில்லை என்று குற்றம் சாட்டுவதன் மூலம் தவறான செயலை ஒரு குற்றமாக அவர் மேம்படுத்தினார். அவர் 34 தவறான அறிக்கைகள் ஒவ்வொன்றையும் நான்கு வருடக் குற்றம் என தனித்தனியாக குற்றம் சாட்டினார். இந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

வழக்கின் பொருள் மற்றும் நேரம் இரண்டும் 2024 தேர்தலில் ஜனநாயகக் கட்சிக்கு பயனளிக்கும் என்று தெளிவாகக் கணக்கிடப்படுகிறது. குறைந்த பட்சம் ட்ரம்பை மன்ஹாட்டன் நீதிமன்ற அறைக்குள் அடைத்து வைப்பதன் மூலம், அவரது சொந்த ஜனாதிபதி பிரச்சாரத்திலிருந்து விலக்கி வைக்க முயற்சிக்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் இடம்பெறும் விசாரணை, பல வாரங்கள் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அரசியல் கணக்கீடு முற்றிலும் தவறாக இருக்கலாம்.

நிச்சயமாக, கடந்த ஆண்டில், ட்ரம்ப் மன்ஹாட்டன் குற்றவியல் வழக்கின் அப்பட்டமான இட்டுக்கட்டப்பட்ட மற்றும் அரசியல் உந்துதல் இயல்பைப் பயன்படுத்தி, (குறிப்பாக ஜனவரி 6 தொடர்பானவை மற்றும் 2020 தேர்தல் முடிவுகளை மாற்றுவதற்கான பிற முயற்சிகள்) தனக்கு எதிரான மற்ற அனைத்துக் குற்றச்சாட்டுகளும் சமமாக பொய்யானவை என்று கூறுவதற்குப் பயன்படுத்தினார்.

ட்ரம்ப் தன்னை ஒரு அரசியல் கட்டமைப்பின் பலியாகக் காட்டிக் கொள்வதற்கும், குறைந்தபட்ச நம்பகத்தன்மையுடன் அவ்வாறு செய்வதற்கும் ஜனநாயகக் கட்சியால் மட்டுமே வாய்ப்பளிக்க முடியும். ட்ரம்ப் முதன்முதலில் வெள்ளை மாளிகையில் நுழைந்ததில் இருந்து இது ஜனநாயகக் கட்சியினரின் பொது நிலைப்பாட்டுடன் ஒத்துப்போகிறது. இது குடியரசுக் கட்சியை, ட்ரம்பின் அனுசரணையில், பெருகிய முறையில் பாசிசவாதமாக மாற்றுவதன் மூலம் எழுப்பப்பட்ட அனைத்து அடிப்படை ஜனநாயகப் பிரச்சினைகளையும் தவிர்க்கும்.

ஜனநாயகக் கட்சியினருக்கும், ட்ரம்புக்கும் இடையிலான வேறுபாடுகள் பெரும்பாலும், உக்ரேனை ரஷ்யாவிற்கு எதிரான அரசியல் மற்றும் இராணுவத் தலையீடாகப் பயன்படுத்தும் வெளியுறவுக் கொள்கையைச் சுற்றியே உள்ளன. இது, ஒபாமா-பைடென் நிர்வாகத்தின் கீழ், 2014 மைதான் சதிக்கு செல்கிறது. இது, தேர்ந்தெடுக்கப்பட்ட ரஷ்ய சார்பு ஜனாதிபதியைக் கவிழ்த்து, பாசிச மற்றும் நவ நாஜிக் குழுக்களால் ஆதரிக்கப்படும் கடுமையான ரஷ்ய-எதிர்ப்பு வலதுசாரி ஆட்சியை நிறுவியது.

2016 அமெரிக்கத் தேர்தல்களில் பரவலான ரஷ்ய தலையீடு பற்றிய தவறான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் முல்லர் விசாரணை மற்றும் உக்ரேனுக்கான அமெரிக்க இராணுவ உதவியை தற்காலிகமாக நிறுத்தியதன் அடிப்படையில் ட்ரம்ப் மீதான முதல் குற்றச்சாட்டு, இரண்டுமே வெளியுறவுக் கொள்கை மீதான இந்த மோதலின் எடுத்துக்காட்டுகளாகும். இன்று, வாஷிங்டனில் உள்ள மையக் கேள்வி என்னவென்றால், சில குடியரசுக் கட்சியினரின் எதிர்ப்பையும் மீறி, உக்ரேனுக்கு 60 பில்லியன் டாலர் அவசரகால இராணுவ உதவியை எவ்வாறு வழங்குவது என்பது தொடர்பாகும்.

இந்த அரசியல் யதார்த்தம் எதுவும் டிரம்ப் மீதான விசாரணை, முக்கிய ஊடகங்களின் செய்திகளில் ஒப்புக் கொள்ளப்படவில்லை. அதற்கு பதிலாக, அவை முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு எதிரான, முதல் குற்றவியல் விசாரணையின் “வரலாற்றுத்” தன்மை பற்றிய புனிதமான, மறைக்கப்பட்ட கருத்துக்களை கூறுகின்றன.

நிச்சயமாக, டிரம்ப் ஏன் முதலில் இருக்க வேண்டும் என்று நெட்வொர்க் செய்திகளில் வெளிப்படையான கேள்வி கேட்கப்படுவதில்லை. அமெரிக்க குடிமக்கள் உட்பட உலகெங்கிலும் உள்ள மக்களை உளவு பார்த்தல், சித்திரவதைக்கு அங்கீகாரம் அளித்தல், இராணுவ சதிப்புரட்சிகளை ஆதரித்தல், படுகொலைகளுக்கு ஒப்புதல் அளித்தல், சட்ட விரோதமான போர்களை நடத்துதல் போன்ற குற்றச்சாட்டுகளுக்காக ஒவ்வொரு முன்னாள் ஜனாதிபதியும் கிரிமினல் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இந்த நடவடிக்கைகள், அமெரிக்க ஆளும் உயரடுக்கின் உலகளாவிய நலன்களைப் பாதுகாப்பதற்காக செய்யப்பட்டவை, அவை அமெரிக்க “நீதித்துறை” அமைப்பால் குற்றங்களாகக் கருதப்படவில்லை.

ஜனாதிபதியாக இருந்து ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த குழந்தைகளை அவர்களின் பெற்றோரிடமிருந்து பிரித்து, பல குடும்பங்களை மீள முடியாத அளவுக்கு பிரித்து, தனது அரசியல் எதிரிகளுக்கு எதிராக பாசிச வன்முறையை வெளிப்படையாக தூண்டி, தோல்வியடைந்த தேர்தல் முடிவுகளை மீறிய முதல் ஜனாதிபதி டிரம்ப் மீது, இப்போது குற்றமே இல்லாத ஒன்றுக்காக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நாங்கள் எழுதியது போல்:

பாலியல் சந்திப்பு குறித்து மௌனமாக இருக்க ஒருவருக்கு பணம் கொடுப்பது அல்லது ஒருவரின் கதையை வெளியிடக்கூடாது என்பதற்காக வாங்குவது சட்டவிரோதமானது அல்ல. தேர்தல் பிரச்சாரத்தின் போது, ஒருவரின் தனிப்பட்ட நடத்தை பற்றி பொய் சொல்ல முடியாது. இவ்வாறான விவகாரங்களில் தொடர்புடைய ஒவ்வொரு அரசியல்வாதிகள் மீதும் வழக்குத் தொடரப்பட்டால், சிறைச்சாலைகள் நிரம்பி வழியும்.

பொதுவாக பாலியல் அவதூறுகளைப் போலவே தனிப்பட்ட பாலியல் நடத்தையை குற்றமாக்குவது அடிப்படையில் பிற்போக்குத்தனமானது. அவர்கள் மக்கள் உணர்வை இழிவுபடுத்துகிறார்கள் மற்றும் அரசியல் புரிதலை பரபரப்பான மற்றும் சோர்வுகளின் ஒரு எரிமலைக்குள் மூழ்கடிக்கிறார்கள். இத்தகைய குற்றச்சாட்டுகளைப் பயன்படுத்துவது, ஆளும் உயரடுக்கிற்குள் சண்டையிடப்படும் உண்மையான அரசியல் வேறுபாடுகளை மக்களிடம் இருந்து மறைக்கும் முயற்சியை உள்ளடக்குகிறது.

“இரகசியமாக பணம்” வழங்கும் பிரச்சினையைப் பொறுத்தவரை, ஜனநாயகக் கட்சித் தலைவர் பில் கிளிண்டன், பவுலா ஜோன்ஸ் உடனான முறையற்ற நடத்தைக்கான குற்றச்சாட்டைத் தீர்ப்பதற்காக $700,000 டாலர்களை கொடுக்க முன்வந்தார் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வழக்கில், வலதுசாரி குடியரசுக் கட்சி வழக்கறிஞர்கள், கிளின்டனின் பதவி நீக்கத்திற்கு வழிவகுத்த பொய்ச் சாட்சியப் பொறியை அமைப்பதற்காக, பணத்தை நிறுத்தி வைக்குமாறு ஜோன்ஸுக்கு அழுத்தம் கொடுத்தனர். தற்போது இந்த வழக்கில், ஒரு ஜனநாயக கட்சி வழக்கறிஞர் அதே சமமான வஞ்சகமான முறைகளைப் பயன்படுத்துகிறார். இத்தகைய அரசியல் சிடுமூஞ்சித்தனத்தில் முற்போக்கு அல்லது ஜனநாயகம் எதுவும் இல்லை.

உலக சோசலிச வலைத்தளம் மற்றும் சோசலிச சமத்துவக் கட்சி ஆகிய இரண்டும் ட்ரம்ப் மற்றும் அவரது ஜனநாயக கட்சி எதிர்ப்பாளர்களின் அரசியலை விட்டுக்கொடுப்பற்று எதிர்த்து வருகின்றன. குடியரசுக் கட்சியின் பாசிச மாற்றம் குறித்து நாங்கள் தொடர்ந்து எச்சரித்து வருகிறோம். பைடெனும் ஜனநாயகக் கட்சியினரும், தங்கள் குடியரசுக் கட்சியின் “சகாக்களிடம்” வெளிநாட்டில் இராணுவவாதம் மற்றும் உள்நாட்டில் சிக்கன நடவடிக்கை என்ற இரு கட்சிக் கொள்கையில் அவர்களுடன் இணைந்து கொள்ளுமாறு தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

நாங்கள் ஜனநாயகத்தின் பாதுகாப்பை, வோல் ஸ்ட்ரீட்டின் கட்சியும் இராணுவ-உளவுத்துறை எந்திரமுமான “இனப்படுகொலை ஜோ” மற்றும் ஜனநாயக கட்சிக்காரர்களுக்கு விட்டுக்கொடுக்கவில்லை. பெரும் மூலதனத்தின் இரு கட்சிகளுக்கு எதிராக, வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சி மற்றும் தொழிலாளர்களை ஒரு சுயாதீன அரசியல் சக்தியாக அமைப்பதன் மூலம் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதுதான் ட்ரம்ப்பால் பொதிந்துள்ள பாசிசத்தின் அச்சுறுத்தலை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரே பயனுள்ள வழிமுறையாகும்.

Loading