முன்னோக்கு

பல்கலைக் கழக வளாகங்களில் காஸா இனப்படுகொலை எதிர்ப்பாளர்களை மௌனமாக்குவதற்கான பிரச்சாரத்தை எதிர்!

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் (IYSSE) அமைப்பானது, தற்போது அமெரிக்கா முழுவதும் நடந்து வரும் காஸா இனப்படுகொலைக்கு எதிராக உள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீதான தாக்குதல்களை கண்டனம் செய்கிறது. பணிநீக்கம் செய்யப்பட்ட, வெளியேற்றப்பட்ட அல்லது இடைநீக்கம் செய்யப்பட்ட அனைத்து ஆசிரியர்களும், மாணவர்களும் மற்றும் அமைப்புகளும் உடனடியாக மீண்டும் பணியில் அமர்த்தப்பட வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம். இந்த கோரிக்கைக்காக போராட இளைஞர்கள் மற்றும் தொழிலாள வர்க்கம் மத்தியில் சாத்தியமான பரந்தளவிலான ஆதரவு திரட்டப்பட வேண்டும்.

வாஷிங்டனில் உள்ள கேபிடல் ஹில்லில் 'நெருக்கடியில் கொலம்பியா: யூத-எதிர்ப்புக்கு கொலம்பியா பல்கலைக்கழகத்தின் பதில்' என்ற தலைப்பில் கல்வி மற்றும் பணிக்குழு விசாரணைக்கான பிரதிநிதிகளின் கமிட்டியின் முன் கொலம்பியா பல்கலைக்கழக வேந்தர் நெமட் ஷபிக் சாட்சியமளிக்கின்றார். [AP Photo/Mariam Zuhaib]

கடந்த ஒரு மாதமாக, டென்னசியில் உள்ள வாண்டர்பில்ட் பல்கலைக்கழகம் மற்றும் நியூயோர்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகம் உட்பட அமெரிக்கா முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், பாலஸ்தீன ஆதரவு போராட்டங்களில் பங்கேற்றதற்காக மாணவர்களை கைது செய்து, வெளியேற்றி, இடைநீக்கம் செய்துள்ளன. கொலம்பியா பல்கலைக்கழகம் மற்றும் நியூயோர்க்கில் உள்ள ஜோன் ஜே கல்லூரி பேராசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் அல்லது விடுப்பில் வைக்கப்பட்டுள்ளனர். டெக்சாஸில், கவர்னர் கிரெக் அபோட், இனப்படுகொலையை எதிர்க்கும் மாணவர்களுக்கு 'நிறுவனத்தில் இருந்து வெளியேற்றுவது உட்பட பொருத்தமான தண்டனைகளை கொடுக்க வேண்டும்' என்று மாநில பல்கலைக்கழக அமைப்புக்கு ஒரு நிர்வாக உத்தரவை பிறப்பித்தார்.

செவ்வாயன்று, தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் வல்லுநரான அஸ்னா தபஸ்ஸும், அவரது இன்ஸ்டாகிராமில் இனப்படுகொலைக்கு எதிராகக் குரல் கொடுத்ததால், பல்கலைக்கழக நிர்வாகத்தால் அவர் திட்டமிட்ட தொடக்க உரையை ஆற்றுவதற்குத் தடை விதிக்கப்பட்டார்.

இனப்படுகொலையை எதிர்ப்பவர்களை தணிக்கை செய்யவும், அச்சுறுத்தவும், மௌனப்படுத்தவும் இந்த பிரச்சாரம் இப்போது முடுக்கிவிடப்பட்டு உள்ளது. புதன் கிழமையன்று நடைபெற்ற காங்கிரஸின் விசாரணை முதன்மையாக கொலம்பியா பல்கலைக்கழக நிர்வாகத்தை வலியுறுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்டது. பாலஸ்தீனிய சார்பு ஆசிரிய மற்றும் மாணவர்களை முழுவதுமாக அகற்றுவதற்காக, வளாகங்களில் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலுக்கு காங்கிரஸின் விசாரணை முன்னணியில் உள்ளது.

முந்தைய காங்கிரஸின் விசாரணைகளைப் போலவே, உயர்தர பல்கலைக்கழகங்களை குறிவைத்து, யூத-விரோத மற்றும் வெள்ளை மேலாதிக்க 'பெரும் மாற்றுக் கோட்பாட்டின்' ஆதரவாளரான எலிஸ் ஸ்டெபானிக் மற்றும் ஜனவரி 6 பாசிச சதி முயற்சியின் வெளிப்படையான பாதுகாவலரும் யூத-விரோத மார்ஜோரி டெய்லர் கிரீனின் கூட்டாளியுமான ஜிம் பேங்க்ஸ் போன்ற அதிதீவிர வலதுசாரி குடியரசுக் கட்சியினர் விசாரணைகளுக்கு தலைமை தாங்க அனுமதிக்கப்பட்டனர். பெரும்பாலான பேச்சாளர்கள் சியோனிசத்திற்கு எதிரான எதிர்ப்பு யூத-விரோதத்தை உருவாக்குகிறது என்ற பொய்யை மீண்டும் வலியுறுத்தி தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர். இந்தப் பொய் இப்போது பாசிசம், ஏகாதிபத்தியம் மற்றும் முதலாளித்துவத்திற்கு எதிரான அனைத்து எதிர்ப்பையும் குற்றமாக்குவதற்கான முக்கிய கருத்தியல் அடிப்படையாக செயல்படுகிறது.

காஸாவை அணுவாயுதங்களால் அழிக்க இஸ்ரேலுக்கு அழைப்பு விடுத்த காங்கிரஸ் உறுப்பினர் டிம் வால்பெர்க், கொலம்பியா பல்கலைக்கழகத்தில் அரபு அரசியலில் பணிபுரியும் பேராசிரியர் ஜோசப் மசாட்டை பல்கலைக்கழகம் 'ஒழுங்குபடுத்த வேண்டும்' என்று வலியுறுத்தினார். சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் இங்கிலாந்து வங்கியின் முன்னாள் முன்னணி அதிகாரியான கொலம்பியா பல்கலைக்கழக வேந்தர் நேமட் ஷபிக், மசாத் 'விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்' என்று பதிலளித்தார் - இது விசாரணை வரை பேராசிரியருக்குத் தெரிவிக்கப்படவில்லை. அதேநேரம், மொஹமட் அப்துவை வருகைதரு பேராசிரியராக பல்கலைக்கழகம் பணியமர்த்துவதை எதிர்கொண்டபோது, ​​'அவர் இனி கொலம்பியாவில் பணிபுரியமாட்டார்' என்று ஷாபிக் உறைய வைக்கும் விதத்தில் பதிலளித்தார்.

பல ஆசிரிய உறுப்பினர்களை பெயரிட்ட ஸ்டெபானிக் மற்றும் காங்கிரஸின் பிற பிரதிநிதிகள், அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட வேண்டும் மற்றும் கொலம்பியா பல்கலைக்கழகம் அதன் பணியமர்த்தல் நடைமுறைகளை திருத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர். இனப்படுகொலையை எதிர்த்த ஒரு ஆசிரிய உறுப்பினரை 'தாழ்ந்த வாழ்க்கையை' கொண்டிருக்கிறார் என்று ஒரு காங்கிரஸ்காரர் விவரித்தார். காங்கிரஸ் உறுப்பினர் ஜோ வில்சன் (குடியரசு-தென் கரோலினா) முதலாளித்துவம் 'பொருளாதார ஒடுக்குமுறை அமைப்பு' என்று கருதும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை தணிக்கை செய்யுமாறு அழைப்பு விடுத்தார்.

முன்னாள் கோல்ட்மேன் சாக்ஸ் நிர்வாகி, முன்னாள் முன்னணி CNN, ABC மற்றும் NBC பத்திரிக்கையாளர் மற்றும் வலதுசாரி கூட்டாட்சி வழக்கறிஞர்கள் சங்கத்தின் உறுப்பினர் ஆகியோரை உள்ளடக்கிய கொலம்பியா பல்கலைக்கழக நிர்வாகத்தின் பிரதிநிதிகள், பேச்சுரிமை மீதான தாக்குதலில் தாங்கள் தகுதியான கூட்டாளிகள் என்பதை காங்கிரஸுக்கு நிரூபிக்க முற்பட்டனர்.

பல்கலைக்கழகம் 'நியூயோர்க் பொலிஸ் மற்றும் FBI உடன் வழக்கமான தொடர்பில் உள்ளது' என்றும், கருத்து வேறுபாடுள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எதிராக மேலும் 'ஒழுங்கு நடவடிக்கைகள்' எடுக்கப்படும் என்றும் ஷபிக் அறிவித்தார்.

பல்கலைக்கழகம் ஏற்கனவே பாலஸ்தீனத்தில் நீதிக்கான மாணவர்கள் மற்றும் அமைதிக்கான யூத குரல் ஆகியவற்றின் செயற்பாட்டை இடைநிறுத்தியுள்ளது மற்றும் அதன் வளாகத்தில் ஆர்ப்பாட்டங்களை தடை செய்துள்ளது. விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, இனப்படுகொலையை நிறுத்தக் கோரி புல்வெளியில் போராட்ட முகாமைத் தொடங்கிய மாணவர்களை ​​நியூயோர்க் நகர பொலிசார் கொலம்பியா பல்கலைக்கழக வளாகத்தின் நுழைவாயிலில் தடுத்து நிறுத்தினர்.

ஏப்ரல் 17, 2024 அன்று, கொலம்பியா பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயிலில் நியூயோர்க் பொலிஸ் தடுத்து நிற்கிறது.

அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் குறிக்கோள், உயர்கல்வியை முற்றிலும் போர் இயந்திரத்திற்கு அடிபணியச் செய்வதற்காக, பல்கலைக் கழகங்களில் உள்ள ஆசிரியர்களையும் மாணவர் அமைப்பையும் சுத்தப்படுத்துவதைத் தவிர வேறொன்றுமில்லை என்பதை இந்த விசாரணைகள் தெளிவாக்குகின்றன. அமெரிக்க வெளியுறவுக் கொள்கைக்கு எதிராகக் குரல் கொடுக்கத் துணிந்த ஒவ்வொருவரும் தூக்கி எறியப்பட்டு, கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டு, சியோனிஸ்டுகள் மற்றும் அதிதீவிர வலதுசாரிக் கூறுகளின் தாக்குதல்களின் பொது இலக்காக ஆக்கப்படுவார்கள்.

இதுபோன்ற தாக்குதல்கள் ஏற்கனவே நடைபெற்று வருகின்றன. கொலம்பியா பல்கலைக்கழக வளாகத்தில் முன்னாள் IDF (இஸ்ரேலிய பாதுகாப்புப் படை) படையினர்களால் இரசாயன ஆயுதங்களால் தாக்கப்பட்ட மாணவர் எதிர்ப்பாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கடந்த இரண்டு வாரங்களில் மட்டும், ஆஸ்டினில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழக வளாகத்தில் இரண்டு இளம் முஸ்லீம்கள் தாக்கப்பட்டனர். மேலும் பெர்க்லி பல்கலைக்கழக சட்ட பீடத்தின் ஒரு முஸ்லீம் மாணவ எதிர்ப்பாளரை உடல் ரீதியாக அவர்கள் தாக்கினார்.

செவ்வாயன்று, இனப்படுகொலை எதிர்ப்பாளர்களுக்கு எதிரான வன்முறையைத் தூண்டும் வகையில், குடியரசுக் கட்சியை சேர்ந்த அதி தீவிர வலதுசாரி டொம் காட்டன், 'போக்குவரத்தைத் தடுக்கும் ஹமாஸ் சார்பு கும்பல்களுக்குப் பின்னால் சிக்கித் தவிக்கும் மக்களை' 'விஷயங்களை உங்கள் கைகளில் எடுத்துக் கொள்ளுமாறு' ஊக்குவித்தார். 'இந்த முட்டாள்தனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம் இது' என்று அவர் குறிப்பிட்டார்.

இந்தப் பிரச்சாரத்தில் ஜனநாயகக் கட்சி முழுமையாக உடந்தையாக உள்ளது. பைடென் நிர்வாகத்தின் கொள்கையானது, வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் போரை நடத்துவதற்கு ஒரு ஐக்கிய முன்னணியை அமைப்பதற்காக அதிதீவிர வலதுசாரி குடியரசுக் கட்சியினருடன் நெருக்கமாக உள்ளது. பல்கலைக்கழக வளாகங்களில் சுதந்திரமான பேச்சுரிமையை ஒழிக்க குடியரசுக் கட்சியினருடன் நெருக்கமாக பணியாற்றும் அதே வேளையில், ஜனநாயக மற்றும் சமூக உரிமைகள் மீதான தாக்குதல்கள் மற்றும் காஸாவில் போர் மற்றும் இனப்படுகொலை ஆகியவற்றிற்கு தொழிலாள வர்க்க எதிர்ப்பின் சுயாதீன வெளிப்பாட்டைத் தடுக்க ஜனநாயகக் கட்சி தொழிற்சங்க அதிகாரத்துவங்களை நம்பியுள்ளது.

இந்த இரண்டு கட்சிகளும் (ஜனநாயக கட்சி மற்றும் குடியரசுக் கட்சி) ஒரே மூலோபாயத்தின் பகுதியாக உள்ளன: ஆளும் வர்க்கத்தின் கண்ணோட்டத்தில், உள்நாட்டில் வர்க்கப் போராட்டத்தையும் அரசியல் எதிர்ப்பையும் அடக்குவது, வெளிநாடுகளில் போரை நடத்துவதற்கான மிக முக்கியமான முன்நிபந்தனையாக இருக்கிறது.

இந்த மூலோபாயத்தில், பைடென் நிர்வாகம் 'இடது' ஜனநாயகக் கட்சியினரிடமிருந்து விமர்சன ஆதரவைப் பெறுகிறது. அலெக்ஸாண்ட்ரியா ஒகாசியோ-கோர்டெஸ், ஆசிரிய மற்றும் மாணவர்கள் மீதான சுத்திகரிப்பு நடவடிக்கை குறித்து மௌனமாக இருக்கும் அதே வேளையில், 'இனப்படுகொலை ஜோ'வின் மறுதேர்தல் பிரச்சாரத்திற்கான முக்கிய நிதி சேகரிப்பாளராக உருவெடுத்துள்ளார்.

இதேபோல், அமெரிக்காவின் ஜனநாயக சோசலிஸ்டுகளின் முதன்மை இதழான ஜேக்கபின், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் வேந்தராக இருந்த கிளாடின் கேயை வெளியேற்றுவதற்கு வழிவகுத்த அதிதீவிர வலதுசாரி பிரச்சாரத்தை சட்டப்பூர்வமாக்குவதற்கு முன்பு, வளாகங்களில் இடம்பெற்ற சூனிய வேட்டை பற்றி பல மாதங்கள் அமைதியாக இருந்தது.

ஜனநாயக உரிமைகள் மீதான இந்த தாக்குதல் சர்வதேச அளவில் உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை, ஜேர்மனியின் தலைநகர் பேர்லினில் பாலஸ்தீன காங்கிரஸின் கூட்ட நிகழ்வில் போலீசார் சோதனை நடத்தினர். முன்னாள் கிரேக்க நிதியமைச்சர் யானிஸ் வரூஃபாகிஸ் உட்பட பிரபல கல்வியாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் ஜேர்மனிக்குள் நுழைவதற்கும் ஜேர்மன் பார்வையாளர்களுடன் ஆன்லைனில் பேசுவதற்கும் தடை விதிக்கப்பட்டனர். இரண்டு உலகப் போர்கள் மற்றும் படுகொலைகளுக்குப் பிறகு, அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் போன்று, ஜேர்மன் ஏகாதிபத்தியமும் இப்போது காஸாவில் இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு முக்கியமான நிதிகளையும் ஆயுதங்களையும் வழங்கி வருகிறது.

ஆளும் வர்க்கத்தின் அனைத்துப் பிரிவுகளாலும் சர்வதேச அளவில் பேச்சு சுதந்திரத்தின் மீதான தாக்குதலுக்கு அடித்தளமாக இருப்பது, வளர்ந்து வரும் உலகப் போரை விரிவுபடுத்துவதும் தீவிரப்படுத்துவதும் ஆகும். கடந்த வாரத்தில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகள் மத்திய கிழக்கில் ஈரானுடன் நேரடி மோதலுக்கு முன்னெப்போதையும் விட நெருக்கமாக நகர்ந்துள்ளன. ஐரோப்பாவில், நேட்டோ உக்ரேனுக்கு துருப்புக்களை அனுப்புவது பற்றி விவாதித்து வருகிறது. அங்கு உக்ரேனிய இராணுவத்தின் பினாமிப் படைகள் ரஷ்யாவிற்கு எதிரான போரில் பேரழிவுகரமான சூழ்நிலையை எதிர்கொள்கின்றன. இரண்டு போர் முனைகளும் உள்ளார்ந்த முறையில் இணைக்கப்பட்டுள்ளன: இந்த இரண்டும் உலகின் ஒரு புதிய ஏகாதிபத்திய மறுபங்கீட்டின் ஒரு பகுதியாக இருக்கின்றன. இது ரஷ்யா மற்றும் ஈரான் மட்டுமல்ல, சீனாவையும் குறிவைக்கிறது.

காஸாவில் இனப்படுகொலைக்கு எதிரான எந்தவொரு எதிர்ப்பையும் நசுக்குவதற்கான அதன் வெறித்தனமான பிரச்சாரத்துடன், ஆளும் வர்க்கம் எழுச்சியை முன்கூட்டியே தடுக்கவும், போருக்கு எதிராகவும் முதலாளித்துவத்திற்கு எதிராகவும் இன்னும் பரந்த மற்றும் சக்திவாய்ந்த வெகுஜன இயக்கத்தை வன்முறையில் ஒடுக்குவதற்குத் தயாராக உள்ளது. காஸா இனப்படுகொலைக்கு எதிரான போராட்டங்கள் அத்தகைய இயக்கத்தின் முன்னோடி மட்டுமே என்பதை அது கூர்ந்து கவனிக்கிறது. இதனால்தான், 1950களின் முற்பகுதியில் மெக்கார்தியிசத்தின் போது, அமெரிக்க ட்ரொட்ஸ்கிசத் தலைவர் ஜேம்ஸ் பி. கேனன், 'சுதந்திர சிந்தனை மற்றும் மாறுபட்ட கருத்துக்கு எதிரான உளவியல் யுத்தம், அதன் சட்டரீதியான ஒடுக்குமுறைக்கு அப்பாற்பட்ட அளவில்' மீண்டும் தலைதூக்கிறது என்று விவரித்தார்.

ஆனால், ஆளும் வர்க்கம் ஏற்கனவே இந்த 'உளவியல் போரை' இழந்து வருகிறது என்பதை அனைத்து நிலைமைகளும் சுட்டிக்காட்டுகின்றன. எதிர்ப்பாளர்கள் அரசின் முன்னோடித் தாக்குதலுக்கு முகங்கொடுத்து எதிர்த்து வருகிறார்கள் என்ற உண்மையே தீவிரமயமாக்கலின் பரந்த செயல்முறையின் அறிகுறியாகும்: மில்லியன் கணக்கான மக்களின் பார்வையில், முதலாளித்துவ அமைப்புமுறை, குறிப்பாக அதன் முக்கிய அரணாக நீண்ட காலமாக செயல்பட்டு வருகின்ற அமெரிக்க ஏகாதிபத்தியம், அனைத்து வரலாற்று, அரசியல் மற்றும் தார்மீக நியாயத்தன்மையை இழந்துவிட்டது.

ஆனால், எவ்வளவுதான் உறுதியும் துணிச்சலும் இருந்தாலும், இளைஞர்களால் இனப்படுகொலையைத் தடுக்கவோ, ஏகாதிபத்தியத்துக்கு எதிராகப் போராடவோ அல்லது முதலாளித்துவ அமைப்பு முறையை தூக்கியெறியவோ முடியாது. உண்மையில், கடந்த அரையாண்டு போராட்டங்களின் அனுபவம் ஒரு புதிய அரசியல் மற்றும் சமூக நோக்குநிலை அவசரமாகத் தேவை என்பதைக் எடுத்துக் காட்டுகிறது.

இதுவரை, சோசலிசம் மற்றும் விடுதலைக்கான நவ-ஸ்ராலினிசக் கட்சி (PSL) போன்ற மத்தியதர வர்க்க தேசியவாத சக்திகளாலும், தொழில்முறை சந்தர்ப்பவாதியும், நடைமுறைவாதியுமான கார்னல் வெஸ்டின் ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தை நோக்கிய சோசலிச மாற்று போன்ற போக்குகளாலும் போராட்ட எதிர்ப்புகள் ஆதிக்கம் செலுத்துகின்றன.

இந்தப் போக்குகள், பைடென் நிர்வாகம் மற்றும் ஜனநாயகக் கட்சி மீது கீழிருந்து கொடுக்கப்படும் அழுத்தம், ஆளும் வர்க்கத்தின் 'போக்கை மாற்ற' கட்டாயப்படுத்தலாம் என்ற மாயையை ஊக்குவிக்க முயல்கின்றன. இந்த முன்னோக்கு ஒரு முட்டுச்சந்தாகும். கடந்த கால போர்-எதிர்ப்பு இயக்கங்களின் கசப்பான பாடம் என்னவென்றால், -அது வியட்நாம் போராக இருந்தாலும் சரி அல்லது ஈராக் போராக இருந்தாலும் சரி - ஜனநாயகக் கட்சிக்கு அடிபணிந்து, நடுத்தர வர்க்க எதிர்ப்பு அரசியலின் கட்டமைப்பிற்குள் மட்டுப்படுத்தப்பட்ட எந்தவொரு இயக்கமும் தவிர்க்க முடியாமல் வீழ்ச்சியடையும் மற்றும் முதலாளித்துவத்தால் கையாளப்படும்.

ஆனால், 20 ஆம் நூற்றாண்டு மற்றொரு பாடத்தையும் கொண்டுள்ளது: ரஷ்யாவில் 1917 அக்டோபர் புரட்சியானது, முதலாம் உலகப் போரின் முடிவின் தொடக்கத்தைக் குறித்தது. அத்துடன் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் முழு வரலாறும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டமும், போருக்கு எதிரான போராட்டமும் தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீன இயக்கத்தில் வேரூன்றி இருந்தால் மட்டுமே வெற்றிபெற முடியும் என்பதை நிரூபிக்கிறது. இதனால்தான் IYSSE ஒரு புதிய சோசலிச போர்-எதிர்ப்பு இயக்கமானது, புரட்சிகர மார்க்சிசத்தின் வேலைத்திட்டம் மற்றும் கோட்பாடு மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தை சமூகத்தில் முக்கிய புரட்சிகர சக்தியாக அணிதிரட்டுவதற்கான தெளிவான நோக்குநிலையுடன் கட்டியெழுப்பப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

Loading