மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
கடந்த வியாழக்கிழமை பிற்பகல், பல்கலைக்கழக வளாகங்களில் பாலஸ்தீனிய சார்பு ஆர்ப்பாட்டங்கள் மீதான ஒரு கொடூரமான அரசு ஒடுக்குமுறையில், நியூயோர்க் பொலிஸ் (NYPD) அதிகாரிகளின் ஒரு கும்பல், நூற்றுக்கும் அதிகமான அமைதியான மாணவர் ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்ய நியூயோர்க் நகரில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்தது. அரை நூற்றாண்டுக்கும் மேலான காலத்தில், கொலம்பியாப் பல்கலைக்கழகம் மாணவர்களைக் கைது செய்ய நியூயோர்க் பொலிசை வளாகத்தில் அனுமதித்தது இதுவே முதல் முறையாகும்.
கொலம்பியா துணைவேந்தர் டாக்டர் மினூச் (நெமட்) ஷாபிக் இயக்கிய பொலிஸ் அரசு நடவடிக்கையானது, மெக்கார்த்திய காங்கிரஸ் விசாரணையின் முன் அவர் சாட்சியமளித்த மறுநாள் கொண்டுவரப்பட்டது. காஸாவில் அமெரிக்க ஆதரவிலான இனப்படுகொலைக்கு பரந்த எதிர்ப்பை மையமாகக் கொண்டு, சர்வதேச அளவில் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களில் இது ஒரு புதிய மற்றும் அபாயகரமான கட்டத்தைக் குறிக்கிறது.
பாலஸ்தீனத்தில் நீதிக்கான கொலம்பியா மாணவர்கள் (SJP) வியாழக்கிழமை மாலை வெளியிட்ட செய்திக்குறிப்பின்படி, 120 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். மாணவர்கள் முகாமிட்டிருந்த புல்வெளியானது கொலம்பியாவின் சமீபத்திய எதிர்ப்புக் கொள்கையால் “சுதந்திர பேச்சுரிமை மண்டலம்” என்று அறிவிக்கப்பட்டதாக அந்த அறிக்கை கூறியது.
SJP அறிக்கையானது பின்வருமாறு விளக்கியது,
இஸ்ரேலிய இனவெறி, இனப்படுகொலை மற்றும் பாலஸ்தீனத்தில் இராணுவ ஆக்கிரமிப்பு ஆகியவற்றிலிருந்து இலாபம் பெறும் நிறுவனங்களிடமிருந்து அனைத்து நிதிகளையும், கொலம்பியாவை விலக்கிக் கொள்ளுமாறு கொலம்பியாவிற்கு அழுத்தம் கொடுப்பதற்காக காஸா ஒற்றுமை முகாம் உருவாக்கப்பட்டது. கொலம்பியாவின் அனைத்து நிதி முதலீடுகளுக்கும் அதிக பொறுப்புக்கூறல் மற்றும் முழு வெளிப்படைத்தன்மைக்கு அவர்கள் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம்.
கொலம்பியா பல்கலைக்கழகத்தை மையமாகக் கொண்ட பிரதிநிதிகள் கமிட்டியின் விசாரணைக்கு முன்னதாக, புதன்கிழமை அதிகாலை 4 மணியிலிருந்து 50 கூடாரங்களுடன் கொலம்பியா மாணவர்கள் தெற்கு புல்வெளியில் “காஸா ஒற்றுமை முகாமை” அமைத்தனர்.
பாலஸ்தீனத்தில் நீதிக்கான மாணவர்கள் (SJP), சமாதானத்திற்கான யூதர்களின் குரல் (JVP) —இவை இரண்டும் கடந்த நவம்பரில் பல்கலைக்கழகத்தால் தடை செய்யப்பட்டிருந்தன— மற்றும் கொலம்பியா பல்கலைக்கழக இனவெறி அகற்றும் பிரிவினர் (CUAD) ஆகியவற்றால் இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதி தீவிர வலதுசாரி காங்கிரஸ் பிரதிநிதிகள் முன்னிலையில் துணைவேந்தர் ஷாபிக் மண்டியிட்டு தோன்றியதைத் தொடர்ந்து பாரிய வெளியேற்றங்கள் மற்றும் கைதுகள் நிர்வாகத்தின் அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், மாலைக்குள் நூற்றுக்கணக்கான மாணவர்களும் ஆதரவாளர்களும் வளாகத்தில் கூடியிருந்தனர்.
சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர்கள் (IYSSE) அமைப்பு நேற்று பின்வருமாறு பகுப்பாய்வு செய்தது:
அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் இலக்கு, உயர்கல்வியை போர் இயந்திரத்திற்கு முற்றிலும் கீழ்ப்படுத்தும் பொருட்டு, பல்கலைக்கழகங்களில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவர் அமைப்பை களையெடுப்பது என்பதைத் தவிர வேறொன்றுமில்லை என்பதை விசாரணை தெளிவுபடுத்தியது. அமெரிக்க வெளியுறவு கொள்கைக்கு எதிராக குரல் கொடுக்க துணியும் ஒவ்வொருவரும் தூக்கியெறியப்பட்டு, கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டு, சியோனிசவாதிகள் மற்றும் அதிவலது கூறுகளின் தாக்குதல்களுக்கு பகிரங்கமாக இலக்காக்கப்பட வேண்டும்.
புதன்கிழமை முதல் வியாழன் வரை இரவு முழுவதும் மாணவர்கள் அங்கு முகாமிட்டிடிருந்தனர், வியாழனன்றும் எதிர்ப்பு போராட்டங்கள் தொடர்ந்து அதிகரித்தன.
வியாழக்கிழமை பிற்பகல், ஷபிக் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றினார். வளாகம் முழுவதும் ஒரு மின்னஞ்சலை அனுப்பிய பல்கலைக்கழக துணைவேந்தர், அதில் “முகாமை அகற்ற ஆரம்பிப்பதற்கு” நியூயோர்க் பொலிசுக்கு உத்தரவிட்டார். ஷபிக் நியூயோர்க் போலீஸ் துறைக்கு எழுதிய தனிக் கடிதத்தில், “முகாமில் பங்கேற்கும் அனைத்து பல்கலைக்கழக மாணவர்களுக்கும் அவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நேரத்தில், முகாமில் போராட்டத்தில் பங்கேற்பவர்கள் பல்கலைக்கழக சொத்துக்களில் இருக்க அனுமதிக்கப்படவில்லை மற்றும் அத்துமீறி நுழைகின்றனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷபிக் நியூயோர்க் போலீசாருக்கு எழுதிய தனி கடிதத்தில் கூறியிருப்பதாவது:
முகாமில் பங்கேற்கும் அனைத்து பல்கலைக்கழக மாணவர்களும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில், முகாமில் பங்கேற்பாளர்கள் பல்கலைக்கழக சொத்துக்களில் இருக்க அனுமதிக்கப்படவில்லை மற்றும் அத்துமீறி நுழைகிறீர்கள்.
மினசோட்டா பிரதிநிதி இல்ஹான் ஒமரின் மகள் இஸ்ரா ஹிர்சி உட்பட, வளாக ஆக்கிரமிப்பின் மாணவர் தலைவர்கள் வியாழக்கிழமை காலை தாங்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதாக குறிப்பிடும் மின்னஞ்சல்களைப் பெற்றதாக தெரிவித்தனர். கொலம்பியா மற்றும் நியூயோர்க் நகர பல்கலைக்கழகங்களில் மாணவர் வெளியேற்றங்கள் மற்றும் இடைநீக்கங்களின் அலையைத் தொடர்ந்து இது வந்துள்ளது.
இந்தத் தாக்குதல்களுக்கு விடையிறுப்பாக பாரிய மாணவர் ஆதரவுக்கு அழைப்பு விடுத்து பரவலாக பகிரப்பட்ட சமூக ஊடக பதிவுகள், கோஷமிட்ட ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்களை முகாமைச் சுற்றி ஒன்றுதிரட்டின.
டசின் கணக்கான நியூயோர்க் போலீசாரின் பேருந்துகளும், கலகம் அடக்கும் கவசம் அணிந்த நூற்றுக்கணக்கான போலீசாரும் வளாகத்திற்கு அருகிலுள்ள தெருக்களுக்கு செல்லும் வழியை தடுத்து, பின்னர் முகாமுக்குள் புகுந்து, பிற்பகல் 1 மணிக்கு ஏராளமான மாணவர்களை பிளாஸ்டிக் கீற்றுக்களால் கைகளைக் கட்டி கைது செய்தனர்.
“நீங்கள் தற்போது அங்கீகரிக்கப்படாத முகாமில் பங்கேற்கிறீர்கள். நீங்கள் கைது செய்யப்பட்டு அத்துமீறி நுழைந்ததாக குற்றம் சாட்டப்படுவீர்கள்” என்று நியூயோர்க் போலீஸ் ஒலிபெருக்கியில் இருந்து பதிவு செய்யப்பட்ட ஒரு அறிவிப்பை விடுத்தது.
நியூயோர்க் போலீஸ் ஆணையர் எட்வர்ட் கபான், ரோந்து தலைவர் ஜோன் செல் மற்றும் நியூயோர்க் போலீசாரின் ட்ரோன் திட்டத்தின் தலைவரான துணை ஆணையர் காஸ் டௌட்ரி ஆகியோர் இந்தக் குற்றச்சாட்டை முன்னின்று நடத்துவதை வீடியோ காட்சிகள் காட்டுகின்றன. SJP இன் கூற்றுப்படி, “NYPD தொழில்நுட்ப உதவி நடவடிக்கைப் பிரிவு, மூலோபாய நடவடிக்கைக் குழு மற்றும் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு ஆகியவை வளாகத்தில் உறுதிப்படுத்தப்பட்டன.”
பெருந்திரளான கைதுகளில் யூத மாணவர்களும் சட்ட ஆலோசகர்களும் அடங்குவர். முகாம் கிழித்துத் தகர்க்கப்பட்ட பின்னர், நூற்றுக்கணக்கான மாணவ ஆர்ப்பாட்டக்காரர்கள் அந்த இடத்திலிருந்த நகர்ந்து வளாகத்தின் புல்வெளியை ஆக்கிரமிக்கத் தொடங்கினர், அதேவேளையில் பாலஸ்தீனிய ஆதரவு மற்றும் NYPD எதிர்ப்பு கோஷங்களை எழுப்பினர். நூற்றுக்கணக்கான மாணவர்களும் ஆதரவாளர்களும் கொலம்பியாவின் பிரதான வளாகத்திற்கு வெளியே தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சோசலிச சமத்துவக் கட்சியின் 2024 ஜனாதிபதி வேட்பாளர் ஜோசப் கிஷோர் வியாழக்கிழமை பிற்பகல் X/Twitter இல் ஓர் அறிக்கையை வெளியிட்டார்:
கொலம்பியா பல்கலைக்கழக மாணவர்களின் கைது என்பது பைடென் நிர்வாகம் மற்றும் ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி இரண்டினதும் ஆதரவுடன், காஸா இனப்படுகொலையை எதிர்ப்பவர்கள் மீது விரிவடைந்து வரும் பொலிஸ் அரசு தாக்குதலின் ஒரு பகுதியாகும். காஸாவில் இனப்படுகொலையை எதிர்ப்பவர்கள் மீது நடத்தப்பட்ட ஒரு மூர்க்கத்தனமான அவதூறான “யூத-எதிர்ப்பால்” பல்கலைக்கழகங்கள் கடந்து செல்லப்பட்டுள்ளன என்ற பொய்யான சாக்குபோக்கின் மீது கொலம்பியா துணைவேந்தர் நெமத் ஷாபிக் காங்கிரஸின் முன்னால் அளித்த சாட்சியத்தைத் தொடர்ந்து இந்த கைதுகள் நடந்துள்ளன.
இனப்படுகொலையின் எதிர்ப்பாளர்கள் “எங்கள் மாணவர்களில் பலருக்கு துன்புறுத்தும் மற்றும் அச்சுறுத்தும் சூழலை” உருவாக்கி வருவதால் NYPD கெஸ்டாபோ பொலிஸை வளாகத்திற்கு அழைத்ததாக ஷபிக் ஒரு அறிக்கையை வெளியிட்டார்.
இவைகள் பெரும் பொய்கள்!
இனப்படுகொலையை எதிர்த்து போராடும் அனைத்து மாணவர்களும் விடுதலை செய்யப்பட வேண்டும்! இனப்படுகொலையை நடத்துபவர்கள் மற்றும் அதற்கு ஆயுதம் மற்றும் நிதியுதவி அதாவது, நெத்தன்யாகு அரசாங்கம் மற்றும் பைடென் நிர்வாகத்தில் உள்ள அதன் கூட்டாளிகள் சிறையில் அடைக்கப்பட வேண்டும்.
மாணவர்கள், அத்துடன் கொலம்பியா ஆசிரியர்கள் மற்றும் உள்ளூர்வாசிகள், அமைதியான எதிர்ப்பாளர்கள் மீது வன்முறையான அரசத் தாக்குதலை எதிர்கொள்வது குறித்து அதிர்ச்சி, கோபம் மற்றும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். ஒரு மாணவர் அமைப்பாளர் கீழ்வருமாறு ட்வீட் செய்தார்:
“கொலம்பியா 100+ மாணவர்களை மொத்தமாக கைது செய்ய NYPD ஐ அழைத்த பின்னர் சிறையில் இருந்து வெளியே வந்தேன். நான் பெர்னார்டால் இடைநீக்கம் செய்யப்பட்டு வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டேன். இது பாலஸ்தீனிய விடுதலைக்கான இயக்கத்திற்கான எனது அர்ப்பணிப்பை வலுப்படுத்தியுள்ளது, மேலும் நான் தொடர்ந்து போராடுவேன் என்று உறுதியளிக்கிறேன்.”
கொலம்பியாவின் முன்னாள் மாணவர் ஒருவர் வியாழனன்று இரவு வளாகத்திற்கு அருகில் நடந்த ஒரு ஆர்ப்பாட்டத்தில் உலக சோசலிச வலைத் தளத்துடன் பேசினார், அந்த விசாரணையையும் போராட்டக்காரர்கள் மீதான ஒடுக்குமுறையையும் ஒரு “புதிய மெக்கார்த்தியிசம்” என்று கண்டித்தார்: “இது வெறுக்கத்தக்கது, உண்மையில் பல்கலைக்கழகத்தின் கோட்பாடுகளுக்கு எதிரானது, பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்து வெளிப்பாடு மற்றும் சிந்தனையின் பன்முகத்தன்மை இரண்டிற்கும் எதிரானது என்று நான் நினைக்கிறேன்.”
நியூ யோர்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸின் ஜனநாயகக் கட்சி நிர்வாகம் மற்றும் வெள்ளை மாளிகையுடன் நெருக்கமான ஒருங்கிணைப்புடன் கொலம்பியா பல்கலைக்கழக நிர்வாகம் போலீஸ் சோதனையை நடத்தியது என்பதில் கேள்விக்கு இடமில்லை. உயர்மட்ட NYPD அதிகாரிகளுடன் புடைசூழ வியாழன் மாலை ஆடம்ஸ் ஒரு சுருக்கமான செய்தியாளர் கூட்டத்தை நடத்தி, ஒடுக்குமுறையை நியாயப்படுத்தினார்.
செய்தி இங்கே தெளிவாக உள்ளது: அதாவது அமெரிக்காவால் பணம் கொடுத்து தயாரிக்கப்பட்ட ஆளில்லா விமானங்கள், ஆயுதங்கள் மற்றும் விமானங்களைக் கொண்டு நடத்தப்பட்டு வருகின்ற ஒரு இனப்படுகொலைக்கு எதிராக பகிரங்கமாக போராடத் துணியும் எவரொருவரும் கைது செய்யப்படலாம், அவர்களின் பள்ளி அல்லது வேலையிடத்தில் இருந்து வெளியேற்றப்படலாம், மேலும் பொதுமக்கள் துன்புறுத்தல் மற்றும் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்படலாம்.
கொலம்பியாவில் பொலிஸ் சோதனைக்கு ஒரு நாள் முன்னர், இஸ்ரேலின் இனப்படுகொலையில் தங்கள் நிறுவனத்தின் ஈடுபாட்டை எதிர்த்து ஒன்பது கூகுள் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர் மற்றும் இருபதுக்கும் மேற்பட்டவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். 900 ஜேர்மன் பொலிஸ் பேர்லினில் போர்-எதிர்ப்பு பாலஸ்தீன காங்கிரஸை சோதனை நடத்தி மூடிய ஒரு வாரத்திற்கும் குறைவான காலத்திற்குப் பின்னர் கொலம்பியா சோதனை நடந்துள்ளது. இதில் யூத நடவடிக்கையாளர்களை கைது செய்தல் மற்றும் முக்கிய அரசியல்வாதிகள் மற்றும் கல்வியாளர்கள் ஜேர்மனிக்குள் நுழைந்து ஜேர்மன் பார்வையாளர்களிடையே இணையத்தில் உரையாற்றுவதற்கு தடை விதித்தமை ஆகியவை உள்ளடங்கும்.
சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர்கள் அமைப்பு, வளாகங்கள் மற்றும் வேலையிடங்களில் பேச்சு சுதந்திரத்தின் மீதான ஒடுக்குமுறையை உடனடியாக நிறுத்துமாறு கோருகிறது. கைது செய்யப்பட்ட, இடைநீக்கம் செய்யப்பட்ட மற்றும் வெளியேற்றப்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அமைப்புகள் அனைவரும் உடனடியாக விடுவிக்கப்பட்டு மீண்டும் பணியில் அமர்த்தப்பட வேண்டும். மாணவர்களின் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல் முழுத் தொழிலாள வர்க்கத்தின் மீதும் நடத்தப்படும் தாக்குதல் ஆகும்.
நியூயோர்க், அமெரிக்கா மற்றும் சர்வதேச அளவில் உள்ள தொழிலாளர்கள் அரசின் தாக்குதலுக்கு எதிராக இந்த மாணவர்களின் பாதுகாப்பை முன்னெடுக்க வேண்டும்.
ஜனநாயக உரிமைகள் மீதான இந்த கொடூரமான தாக்குதலை எதிர்த்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வெளிநடப்பு அழைப்புகளை நாங்கள் ஆதரிக்கிறோம், மேலும் காஸாவில் இனப்படுகொலை மற்றும் அதற்கு பல்கலைக்கழகங்கள் உடந்தையாக இருப்பதை நிறுத்தக் கோருகிறோம்.
ஆனால் எதிர்ப்புக்களை அபிவிருத்தி செய்வதற்கும் விரிவுபடுத்துவதற்கும், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தங்கள் மீதான தாக்குதல்களின் பின்னணியில் என்ன உள்ளது, அவர்களுடைய எதிரிகள், கூட்டாளிகள் யார் என்பது பற்றிய தெளிவான புரிதல் தேவையாக இருக்கிறது.
கொலம்பியா பல்கலைக்கழக மாணவர்கள் அரசின் முழு சக்தியையும் எதிர்கொள்கின்றனர் ஏனெனில் அவர்கள் காஸாவில் இனப்படுகொலை தொடர்பான அரசாங்கக் கொள்கையை இப்பொழுது பிரகடனப்படுத்தியுள்ளதை எதிர்க்கின்றனர். ஆனால் இந்த இனப்படுகொலையை, ரஷ்யா மற்றும் ஈரானை மட்டுமல்ல, மாறாக சீனாவையும் இலக்கில் வைத்து, உலகின் ஒரு புதிய ஏகாதிபத்திய மறுபங்கீடு வெளிப்படுவதற்கு வெளியில் புரிந்து கொள்ள முடியாது. இந்தப் போரை தொடர்வது முதலாளித்துவ ஜனநாயக ஆட்சி வடிவங்களை தக்க வைத்துக் கொள்வதுடன் இயைந்து இருக்க முடியாது.
கொலம்பியா பல்கலைக்கழகத்தின் நிர்வாகமானது வால் ஸ்ட்ரீட் மற்றும் ஜனநாயகக் கட்சியுடன் ஆயிரம் இழைகளால் பின்னிப்பிணைக்கப்பட்டுள்ளது. இதனால்தான் அது தனது சொந்த மாணவர்களையே ஈவிரக்கமின்றி ஒடுக்குகிறது.
இதிலிருந்து இரண்டு அடிப்படை அரசியல் முடிவுகள் வருகின்றன: அதாவது ஜனநாயகக் கட்சிக்கு முறையிடுவது என்பது ஒரு முட்டுச்சந்தாகும். அது போராட்டங்களை விரக்தியடையச் செய்வதற்கும் தனிமைப்படுத்துவதற்கும் மட்டுமே இட்டுச் செல்லும். இரண்டாவதாக, ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், ஏகாதிபத்தியப் போர் மற்றும் இனப்படுகொலைக்கு எதிரான போராட்டமும் பல்கலைக் கழகங்களுடன் மட்டுப்படுத்தப்பட முடியாது. அது தொழிலாள வர்க்கத்தில் வேரூன்றி இருக்க வேண்டும், வர்க்கப் போராட்ட வழிமுறைகளின் மூலமாக நடத்தப்பட வேண்டும், ஒரு புரட்சிகர சோசலிச வேலைத்திட்டத்தை அடித்தளமாக கொண்டிருக்க வேண்டும்.