இலங்கை அரசாங்கம் தேர்தல் வேட்பாளர்கள் மீது முன்னெப்போதும் இல்லாத ஜனநாயக விரோத கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கை அமைச்சரவை, செப்டெம்பர் 17 மற்றும் ஒக்டோபர் 18 ஆம் திகதிகளுக்கு இடையில் நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் அடுத்த ஆண்டு தேசியத் தேர்தல்கள் உட்பட எதிர்கால அனைத்து தேர்தல்களிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் கட்டுப் பணத் தொகையை பாரியளவில் அதிகரிப்பதற்கான முன்மொழிவுக்கு ஏப்ரல் 9 அன்று அங்கீகாரம் வழங்கியது.

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, 3 ஆகஸ்ட் 2022 அன்று இலங்கையின் கொழும்பில் உள்ள பாராளுமன்ற வளாகத்திற்கு வருகிறார். [AP Photo/Eranga Jayawardena]

அரசியல் எதிரிகளை, குறிப்பாக சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) மற்றும் சுயேட்சை குழுக்களை தேர்தலில் போட்டியிட விடாமல் தடுப்பதற்கும், இதன் மூலம் வாக்காளர்களை பணக்காரர்களின் அரசியல் கட்சிகளுக்கும் அவற்றின் வேட்பாளர்களுக்கும் மட்டும் வாக்களிக்க மட்டுப்படுத்துவதற்கும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கமும் ஆளும் உயரடுக்கும் மேற்கொள்ளும் முயற்சியே இந்த திட்டமிடப்பட்ட சட்டமாகும்.

கோவிட்-19 தொற்றுநோய், உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போர் மற்றும் காஸாவில் இஸ்ரேலின் ஏகாதிபத்திய ஆதரவு இனப்படுகொலைப் போரினாலும் தீவிரமடைந்துள்ள முதலாளித்துவத்தின் ஆழமான பூகோள நெருக்கடிக்கு மத்தியில், ஒவ்வொரு நாட்டிலும் ஆளும் வர்க்கங்கள் ஜனநாயக உரிமைகள் மீது மேற்கொள்ளும் கடுமையான தாக்குதலின் ஒரு பகுதியே இந்த நடவடிக்கை ஆகும்.

முன்மொழியப்பட்ட மாற்றங்களின் கீழ், உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் 2.6 மில்லியன் ரூபாவை ($8,667) கட்டுப்பணமாக செலுத்த வேண்டும், இது தற்போதைய தொகையான 50,000 ரூபாயில் 52 மடங்கு அதிகமாகும். சுயேட்சை வேட்பாளர்கள் தற்போதைய 75,000 ரூபாயில் இருந்து அதிகரிக்கப்பட்ட 3.1 மில்லியன் ரூபா ஆகக் கூடிய தொகையை கட்டுப்பணமாக செலுத்த வேண்டும்.

பாராளுமன்ற, மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களுக்கான கட்டுப்பணமும் அதிகரிக்கப்பட்டுள்ளன. பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியின் வேட்பாளர்கள் தலா 11,000 ரூபாயும், சுயேச்சை வேட்பாளர்கள் 16,000 ரூபாயும் செலுத்த வேண்டும். விகிதாசார தேர்தல் முறையின் கீழ் நடைபெறும் ஏனைய இலங்கைத் தேர்தல்களைப் போலவே, கட்சி அல்லது சுயேச்சைக் குழுவினால் ஒவ்வொரு மாவட்டத்திற்குமான வேட்பாளர்களின் பட்டியலையும் பாதுகாப்புக்காக இலட்சக்கணக்கான ரூபாய்களையும் தேர்தல்கள் ஆணைக்குழுவில் ஒப்படைக்க வேண்டும்.

வேட்பாளர்களின் வைப்புத்தொகையில் முன்னெப்போதும் இல்லாத வகையிலான இந்த அதிகரிப்பு, ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் ஆசீர்வாதத்துடன் நீதி அமைச்சர் விஜயதாச இராஜபக்ஷவினால் முன்மொழியப்பட்டதோடு, இது பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட வேண்டும். எவ்வாறாயினும், எந்த ஒரு எதிர்க்கட்சியும் -ஐக்கிய மக்கள் சக்தி (ஐ.ம.ச.), மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி (தே.ம.ச.) அல்லது இலங்கைத் தமிழ் அரசு கட்சியோ - இந்த ஜனநாயக விரோத நகர்வுகளை எதிர்க்கவில்லை.

இந்த நடவடிக்கைகளின் நோக்கம், அரசியல் கட்சிகள் மீது, குறிப்பாக தொழிலாள வர்க்கம் மற்றும் ஏழைகளின் நிதிப் பங்களிப்பை நம்பியிருக்கும் கட்சிகள் மீது பெரும் நிதிச் சுமையைத் திணிப்பதாகும்.

அரசாங்கமும் உண்மையில் முழு அரசியல் ஸ்தாபனமும் தங்களின் பெருவணிகக் கொள்கைகளுக்கு விரோதமான அனைத்து எதிர்க் கட்சிகளையும், குறிப்பாக உண்மையான சோசலிஸ்டுகளை தேர்தல்களில் பங்கேற்பதில் இருந்து ஒதுக்கி வைப்பதில் உறுதியாக உள்ளன. வாக்காளர்கள் செல்வந்த ஆளும் உயரடுக்கின் வேட்பாளர்கள் அல்லது அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு நிதியுதவி பெறுபவர்களுக்கு மட்டுமே வாக்களிக்க மட்டுப்படுத்தப்படுவார்கள்.

தேர்தல் வேட்பாளர்களுக்கான கட்டுப்பணத் தொகையை பாரியளவில் அதிகரிக்க இலங்கை அரசாங்கங்களும் தேர்தல் ஆணைக்குழுவும் இதற்கு முன்னர் பல முயற்சிகளை மேற்கொண்டிருந்தாலும், இந்த நகர்வுகள் பரவலாக விமர்சிக்கப்பட்டதுடன் கைவிடப்பட்டன.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) சிக்கனத் தாக்குதல்களுக்கு விரோதமாக அதிகரித்து வரும் வெகுஜன எதிர்ப்புக்கு பிரதிபலிக்கும் வகையில், அரசாங்கம் இப்போது வேட்பாளர்களின் கட்டுப்பணத் தொகையில் பெரும் அதிகரிப்புடன் முன்செல்கின்றது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, 2022 ஏப்ரல்-ஜூலையில், மில்லியன் கணக்கான இலங்கைத் தொழிலாளர்களும் நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்களும் ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவினதும் அவரது அரசாங்கத்தினதும் கொடூரமான சமூகத் தாக்குதல்களுக்கு எதிராக கிளர்ந்தெழுந்தனர். அவர் நாட்டைவிட்டு வெளியேறி பதவியை இராஜினாமா செய்யத் தள்ளப்பட்டார். 

இந்த வெகுஜன இயக்கமானது போலி-இடது முன்னிலை சோசலிசக் கட்சியின் (FSP) ஆதரவுடன் எதிர்க்கட்சியான ஐ.ம.ச., ஜே.வி.பி. மற்றும் தொழிற்சங்கங்களும் இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு விடுத்த அழைப்பின் பக்கம் திசைதிருப்பப்பட்டு, மதிப்பிழந்த பாராளுமன்றம் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாகப் பதவியில் அமர்த்துவதற்கான வழியைத் திறந்து விட்டது. ஆளும் வர்க்கம் மற்றொரு வெகுஜன எழுச்சி பற்றிய பீதியால் பீடிக்கப்பட்டுள்ளது.

இந்த அரசியல் சூழ்ச்சிகள் மூலம் முதலாளித்துவ வர்க்கம் பெற்ற தற்காலிக அரசியல் ஸ்திரத்தன்மை விரைவில் முடிவுக்கு வருகிறது. சில தொழிற்சங்கங்கள் மட்டுப்படுத்தப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கும் மறியல் போராட்டங்களுக்கும் அழைப்பு விடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டாலும், சர்வதேச நாணய நிதியம் கட்டளையிட்டுள்ள அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கை திட்ட நிரலுக்கு எதிராக போராடுவதற்கான தொழிலாளர்களின் உறுதியை சிதறடிக்க தங்களால் முடிந்த அனைத்தையும் செய்கின்றன. தங்களின் சீரழிந்து வரும் சமூக நிலைமைகள் மற்றும் பொதுக் கல்விக்கான அரசாங்க வெட்டுக்களாலும் கிராமப்புற ஏழைகள் மற்றும் மாணவர்கள் மத்தியில் கோபம் அதிகரித்து வருகிறது.

1931 ஆம் ஆண்டு சர்வஜன வாக்குரிமை ஏற்றுக்கொள்ளப்பட்டதை மேற்கோள் காட்டி, இந்த தீவு ஆசியாவிலேயே மிக நீண்ட கால ஜனநாயக நாடு என்று அரசியல் மற்றும் ஊடக ஸ்தாபனமும் தூக்கிப் பிடிக்கின்றன. இது ஒரு முழு மோசடி ஆகும்.

கோழைத்தனமான மற்றும் பலவீனமான இலங்கை முதலாளித்துவம் எந்த ஜனநாயக மரபுகளையும் கொண்டிருக்காததோடு அது எப்போதும் அதன் காலனித்துவ மற்றும் ஏகாதிபத்திய எஜமானர்களுக்காக தொழிலாள வர்க்க-விரோத கைக்கூலியாகவே இயங்கி வருகின்றது. பாராளுமன்ற ஆட்சி இருக்கின்ற போதும், மக்களுக்கு உண்மையான ஜனநாயக உரிமைகள் இல்லை. ஆரம்பம் முதலே தமிழ், முஸ்லிம் சிறுபான்மையினர் இரண்டாம் தர பிரஜைகளாகவே நடத்தப்பட்டனர்.

1948 இல் முறையான சுதந்திரம் வழங்கப்பட்ட உடனேயே, ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.) அரசாங்கம் இந்திய வம்சாவளி தோட்டத் தொழிலாளர்களின் குடியுரிமையை ஒரே அடியில் ரத்து செய்தது, அடுத்த ஆண்டு அவர்களின் வாக்களிக்கும் உரிமையை இரத்து செய்தது. இந்த பிற்போக்கு தாக்குதலின் நோக்கம் தொழிலாள வர்க்கத்தை இன ரீதியாக பிளவுபடுத்துவதன் மூலம் பலவீனப்படுத்துவதாகும். அடுத்த தசாப்தங்களில், இலங்கையின் ஆளும் உயரடுக்கு சிங்களத்தை நாட்டின் உத்தியோகபூர்வ மொழியாக மாற்றி, பௌத்தத்தை முதன்மை மதமாக ஆக்கியதுடன் இன முரண்பாடுகளை வேண்டுமென்றே தூண்டியது.

1983 இல், ஐ.தே.க. அரசாங்கம் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான 26 ஆண்டுகால இனவாதப் போரைத் தூண்டியதுடன் 2009  மே மாதம் வரைத் தொடர்ந்த இரத்தக்களரி அடுத்து வந்த அனைத்து அரசாங்கங்களும் முன்னெடுத்தன. போரின் விளைவாக 100,000 தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் மோசமான சமூக அழிவு, தொழில்கள், ஊதியங்கள் மற்றும் சமூக நிலைமைகள் மீதான அரசாங்கத்தின் தாக்குதல்களுக்கு விரோதமான தொழிலாளர்களின் எதிர்ப்பை உடைக்கவும் அது பயன்படுத்தப்பட்டது.

1978 இல், ஐ.தே.க. அரசாங்கம் நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சியை நிறுவியதோடு திறந்த சந்தை பொருளாதார கொள்கைகளை திணிக்க ஏனைய எதேச்சதிகார முறைகளை பயன்படுத்தியது. தமிழர்களை ஒடுக்குவதற்காக பயங்கரவாதத் தடைச் சட்டம் இயற்றப்பட்டு, பின்னர் தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டது. சமீபத்தில், விக்கிரமசிங்க அரசாங்கம் சமூக ஊடகங்களுக்கு தடை விதிக்க அதன் ஜனநாயக விரோத நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தை அறிமுகப்படுத்தியதுடன் ஏற்கனவே இருக்கும் அடக்குமுறைச் சட்டங்களுக்கு மேலே புதிய பயங்கரவாத எதிர்ப்பு மசோதாவை அறிமுகப்படுத்த முன்நகர்ந்தது.

பரந்த சமூக சமத்துவமின்மை மற்றும் பாரிய வறுமையின் மத்தியிலேயே இலங்கையின் அரசியல் உயரடுக்கினால் ஜனநாயக உரிமைகள் மீதான சமீபத்திய நசுக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இலங்கை பற்றிய சமீபத்திய உலக வங்கி அறிக்கை, கடந்த நான்கு ஆண்டுகளில் வறுமையானது 2019 இல் 11 சதவீதத்திலிருந்து 2024 இல் கிட்டத்தட்ட 26 சதவீதமாக அதிகரித்துள்ளது எனக் கூறுகிறது. வேறுவிதமாகக் கூறினால், மக்கள்தொகையில் கால் பகுதிக்கும் அதிகமானோர் வறுமையில் வாழ்கின்றனர். இலங்கையில் 60 வீதமான குடும்பங்களின் வருமானம் குறைந்துள்ளதுடன் உணவுப் பாதுகாப்பின்மை, ஊட்டச் சத்து குறைபாடு மற்றும் வளர்ச்சித் தடங்கலை எதிர்கொள்கின்றன.

இந்த சமூகப் பேரழிவிற்கு மத்தியில், சோசலிச சமத்துவக் கட்சியால் முன்மொழியப்பட்ட சோசலிச மாற்றீடு பற்றிய கலந்துரையாடல் ஒருபுறம் இருக்க, முதலாளித்துவ வர்க்கம் அதன் பிற்போக்கு நடவடிக்கைகள் பற்றிய எந்த விமர்சனத்தையும் அனுமதிக்க முடியாதுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் சந்தை சார்பு திட்ட நிரலை அமைதியான முறையில் செயல்படுத்த முடியாது என்பதை விக்கிரமசிங்க அரசாங்கம் நன்கு அறிந்திருக்கிறது.

விக்கிரமசிங்க அரசாங்கத்தின் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல் ஒரு சர்வதேச செயல்முறையின் பகுதியாகும். ஜனவரியில் WSWS இன் சர்வதேச ஆசிரியர் குழுவின் புத்தாண்டு அறிக்கை கூறியது போல்: “ஜனநாயக ஆட்சி வடிவங்களை கீழறுக்கும் இன்றியமையாத வர்க்க முரண்பாடுகள், எல்லாவற்றிற்கும் மேலாக சமூக சமத்துவமின்மையின் தீவிர வளர்ச்சியில் வெளிப்படுகின்றன. முதலாளித்துவ சமூகம் ஒரு தன்னலக்குழுவின் வடிவத்தை எடுத்துள்ளது. இதில் அனைத்து பொருளாதார, சமூக மற்றும் அரசியல் வாழ்க்கைகளும் ஒரு மிகச் சிறிய உயரடுக்கினால் கட்டுப்படுத்தப்படுகின்றன. மற்றொரு ஒப்பீட்டை இதற்குச் செய்வதற்கு, அதாவது செல்வத்தின் அதீத ஒன்றுகுவிப்புகள் கட்டுப்படுத்தமுடியாத பெருக்கமுறும் கட்டியைப் போல உருமாற்றமடைந்து, அரசின் ஒவ்வொரு நிறுவனத்தையும், நீதிமன்றங்களையும், ஊடகங்களையும் பாதிக்கின்றன.”

இந்தப் போக்குகள் ஒவ்வொரு நாட்டிலும் செயல்படும் அதே வேளையில், உலக முதலாளித்துவத்தின் மையமான அமெரிக்காவில் அவை கூர்மையாக வெளிப்படுத்தப்படுகின்றன. நவம்பர் ஜனாதிபதித் தேர்தல்களுக்கு முன்னதாக, ஜனாதிபதி ஜோ பைடனின் ஜனநாயகக் கட்சியும் டொனால்ட் ட்ரம்பின் குடியரசுக் கட்சியும் ஆதிக்கம் செலுத்தும் இரு கட்சி முறைமையைத் தக்கவைத்துக்கொள்வதில் உறுதியாக உள்ளன.

ஜனநாயகக் கட்சி குறிப்பாக மூன்றாம் தரப்பு வேட்பாளர்களைப் பற்றி அக்கறை கொண்டுள்ளதுடன், ஊடகங்களின்படி, வரவிருக்கும் தேர்தலில் போட்டியிடும் அத்தகைய வேட்பாளர்களை விலக்குவதற்கான “முழுப் போரில்” ஈடுபட்டுள்ளது. அமெரிக்காவில் அது நமது சகோதர கட்சியான சோசலிச சமத்துவக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோசப் கிஷோர் மற்றும் துணை ஜனாதிபதி வேட்பாளர் ஜெர்ரி வைட் ஆகியோர் தேர்தலில் போட்டியிடுவதைத் தடுக்க விரும்புகிறது.

2021 இல் ஆஸ்திரேலியாவில், அப்போதைய லிபரல்-தேசிய கூட்டணி அரசாங்கம், எதிர்க் கட்சியான தொழிற்கட்சியின் ஆதரவுடன், ஒரு அரசியல் கட்சியை பதிவு செய்வதற்கும், வாக்குச் சீட்டில் தங்கள் கட்சியின் பெயரை வைத்திருப்பதற்கும் தேவையான உறுப்பினர்களின் எண்ணிக்கையை 500 லிருந்து 1,500 ஆக மூன்று மடங்காக உயர்த்தியது. எல்லாவற்றிற்கும் மேலாக, இது சாதாரண மக்கள் சோசலிச வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதைத் தடுப்பதற்கான தெளிவான நடவடிக்கையாகும்.

ஆஸ்திரேலியாவில் உள்ள நமது சகோதர கட்சி இந்த பிற்போக்கு சட்டத்தை தொடர்ந்து எதிர்த்து வரும் அதே நேரம், கட்சியை அதிகாரப்பூர்வமாக பதிவு செய்ய தேவையான எண்ணிக்கையிலான தேர்தல் தொகுதி உறுப்பினர்களை சேர்க்க பிரச்சாரம் செய்கிறது.

இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே, சமூக அழிவு, சமத்துவமின்மை மற்றும் போருக்கு எதிராக போராடுவதற்கும் ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்காகவும் சோசலிச கொள்கைகளை முன்னெடுத்துச் செல்லும் ஒரே கட்சியாகும். சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கையை அரசாங்கம், பாராளுமன்ற எதிர்க்கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களுமாக அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். இலாப முறையின் கட்டமைப்பிற்குள் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளுக்கு எந்த தீர்வும் கிடையாது.

சோசலிச சமத்துவக் கட்சியின் வேலைத்திட்டம், அனைத்து வெளிநாட்டுக் கடனையும் தள்ளுபடி செய்வதையும், வங்கிகள், பெருநிறுவனங்கள் மற்றும் பெருந்தோட்டங்களையும் தேசியமயமாக்குவதையும், அவற்றை தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதையதும் முன்மொழிகின்றது. இந்த கொள்கைகளை சர்வதேச சோசலிசத்திற்கான போராட்டத்தின் ஒரு பகுதியாக, தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்கான போராட்டத்தின் மூலம் மட்டுமே செயல்படுத்தப்பட முடியும்.

எங்கள் கட்சி, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் சகோதரக் கட்சிகளுடன் சேர்ந்து, அனைத்து முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக, தங்களின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளுக்காகப் போராடுவதற்கான நடவடிக்கைக் குழுக்களை அமைக்குமாறு தொழிலாளர்களையும் கிராமப்புற மக்களையும் வலியுறுத்துகிறது.

சோசலிசக் கொள்கைகளை நடைமுறைப்படுத்த தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்கான ஒரு ஐக்கியப்பட்ட போராட்டத்தை அபிவிருத்தி செய்வதற்காக, இந்த நடவடிக்கைக் குழுக்களின் பிரதிநிதிகளை அடிப்படையாகக் கொண்டு, ஜனநாயகத்துக்கும் சோசலிசத்துக்குமான தொழிலாளர்களதும் கிராமப்புற வெகுஜனங்களதும் மாநாட்டைக் கட்டியெழுப்புவதற்கு நாங்கள் பிரச்சாரம் செய்கிறோம்.

தொழிலாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் சோசலிச எண்ணம் கொண்ட புத்திஜீவிகளை, ஜனநாயக உரிமைகள் மீதான சமீபத்திய தாக்குதலை எதிர்க்குமாறும், அதற்கு எதிரான எங்கள் கட்சியின் பிரச்சாரத்தை ஆதரிக்குமாறும், இலங்கையிலும் சர்வதேச அளவிலும் சோசலிசத்திற்கான போராட்டத்தை தீவிரப்படுத்த சோசலிச சமத்துவக் கட்சியில் இணையுமாறும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

Loading