முன்னோக்கு

ஏகாதிபத்தியத்தின் இரு கட்சி அரசியல்: தாராளவாத ஜனநாயகக் கட்சியினரும் பாசிச குடியரசுக் கட்சியினரும் காஸாவில் இனப்படுகொலை மற்றும் உக்ரேனில் பினாமி போருக்கு நிதியளிக்க ஒன்றுபடுகின்றனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தொடர் வாக்கெடுப்புகளில், அமெரிக்க பிரதிநிதிகள் சபையானது, $95 பில்லியன் டாலர் கூடுதல் இராணுவ நிதிக்கு, இரு கட்சிகளின் ஆதரவை வழங்கியது: உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ பினாமி போருக்கு $61 பில்லியன் டாலர்களும், காஸாவில் அதன் இனப்படுகொலைக்கு மத்தியில் இஸ்ரேலுக்கு ஆயுதம் வழங்குவதற்காக $26 பில்லியன் டாலர்களும், மற்றும் ஈரானுடனான இராணுவ மோதல் மற்றும் தைவானை சீனாவிற்கு எதிரான போர் தளமாக கட்டமைக்க $8 பில்லியன் டாலர்களும் வழங்கப்படவிருக்கின்றன.

இராணுவ தந்திரோபாய ஏவுகணை அமைப்பு (ATACMS) [AP Photo/John Hamilton/U.S. Army ]

இந்த கூடுதல் நிதி ஒதுக்கீடுகள், அமெரிக்காவிற்குள் முடுக்கிவிடப்பட்ட போர் தயாரிப்புகளை நோக்கமாகக் கொண்ட நான்காவது மசோதாவுடன், சமூக ஊடக வலையமைப்பான TikTok ஐ சீன அரசாங்கத்தின் ஒரு கருவியாகக் குற்றம் சாட்டி, தடை செய்வது போன்ற ஒரு சட்டத்துடன் இணைக்கப்படும். செனட் சபை, இந்த வார இறுதியில் அதை நிறைவேற்ற உள்ளது.

இதன் விளைவாக வரும் சட்டம் பைடென் நிர்வாகத்தின் உலகளாவிய போர்க் கொள்கைக்கு காங்கிரஸின் ஒப்புதலை வழங்கும். கிழக்கு ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் தூர கிழக்கு நாடுகள் ஆகிய மூன்று தனித்தனி பிராந்தியங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் அமெரிக்கத் தலையீடுகள் அனைத்தையும் ஒன்றாக இணைக்கும் என்பதால், இது உலக அரசியலில் ஒரு அடிப்படை மாற்றத்தை வெளிப்படுத்துகிறது.

அமெரிக்க ஆளும் உயரடுக்கு ரஷ்யா, ஈரான் மற்றும் சீனாவுடனான அதன் மோதல்களை, மூன்றாம் உலகப் போரின் ஆரம்பக் கட்ட போராட்டத்தின் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட போர்க் களங்களாக கருதுகிறது. ஆனால், வீழ்ச்சியடைந்து வரும் பொருளாதாரத்தைக் கொண்டிருக்கின்ற, வலிமையான இராணுவ சக்தியான அமெரிக்க ஏகாதிபத்தியம், சாத்தியமான எந்தவொரு சவாலுக்கும் எதிராக தனது உலகளாவிய மேலாதிக்கத்தை தக்கவைத்துக்கொள்வதற்கான கடைசி முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

170 மில்லியன் மக்கள் பயன்படுத்தும் டிக்டோக் செயலியை மூடுவதற்கு எதிர்ப்பு மசோதா தயாராகி வரும் நிலையில், பல சந்தர்ப்பங்களில் அமெரிக்க பெருநிறுவன ஊடகங்களால் தணிக்கை செய்யப்பட்ட தகவல்களைப் பெறுவதற்கு, ஏகாதிபத்தியப் போரானது, ஜனநாயகம் மற்றும் உள்நாட்டில் சுதந்திரம் ஆகியவற்றுடன் பொருந்தாது என்பதைக் குறிக்கிறது.

முடுக்கிவிடப்பட்ட உள்நாட்டு அடக்குமுறையானது, ஆளும் உயரடுக்கிற்கு முழுமையான அரசியல் எதிர்ப்பை மௌனமாக்குவதற்கும், பொருளாதார ரீதியாகவும், இறுதியில் மனித வாழ்விலும் இத்தகைய ஒரு போர் ஏற்படுத்தும் பிரமாண்டமான தியாகங்களை உழைக்கும் மக்கள் மீது திணிப்பதற்கும் அவசியமானதாகும். ரஷ்யா, ஈரான் மற்றும் சீனாவிற்கு எதிரான போர் என்பது அமெரிக்க தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான போரைக் குறிக்கிறது.

இரு முதலாளித்துவக் கட்சிகளையும் ஒருங்கிணைத்த போர் மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஒரு கிறிஸ்தவ அடிப்படைவாதியும், தீவிர பிற்போக்குவாதியுமான சந்தேகத்திற்குரிய “ஹீரோவான” பிரதிநிதிகள் சபை சபாநாயகர் மைக் ஜோன்சனுக்கு ஆதரவாக இரு கட்சிகளும் ஒன்றிணந்தது. அவர் கடந்த வாரம் மார்-ஏ-லாகோவில் டிரம்பின் ஆசீர்வாதத்தைப் பெற்றார். மேலும், இந்த வார இறுதியில் வாஷிங்டனில் பைடென் மற்றும் பிரதிநிதிகள் சபையிலுள்ள சிறுபான்மையினரின் தலைவர் ஹக்கீம் ஜெஃப்ரிஸின் கைதட்டலையும் பெற்றார்.

ஜோன்சன், குடியேற்ற எதிர்ப்பு கூறு இல்லாமல் போர் நிதி மசோதாவை நிறைவேற்றும் முடிவிற்கு முன் டிரம்புடன் ஆலோசனை நடத்தினார். புலம்பெயர்ந்தோர் மீதான தாக்குதலில் “என்னுடன் சேருங்கள்” என்று பைடென் டிரம்பிற்கு அழைப்பு விடுத்தபோது, ​​இந்த ஒற்றுமை அமெரிக்க நிதியப் பிரபுத்துவத்தின் மைய முன்னுரிமையான உலகப் போரில் பலனளித்தது. ஜோன்சன் கேபிடலில் நடந்த ஒரு செய்தி மாநாட்டின் போது “நான் என்னை ஒரு போர்க்கால பேச்சாளராக கருதுகிறேன்” என்று கூறினார்.

இந்த இரு கட்சி ஒப்பந்தத்தின் முழு அர்த்தமும், காஸாவில் இஸ்ரேலிய இனப்படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்த மாணவர்களைக் கண்டிக்கும் பைடென் மற்றும் ஜோன்சன் ஆகியோரின் தனித்தனி அறிக்கைகளில் வெளிப்படுத்தப்பட்டது. மார்ஜோரி டெய்லர் கிரீன் தலைமையிலான ஒரு சில பாசிச குடியரசுக் கட்சியினர் ஜோன்சனை பதவியில் இருந்து அகற்றும் முயற்சிக்கு எதிராக, பிரதிநிதிகள் சபையின் ஜனநாயக கட்சியின் சிறுபான்மைத் தலைவர் ஹக்கீம் ஜெஃப்ரிஸ், ஜோன்சனை ஆதரிப்பதாக சுட்டிக்காட்டினார்.

கூடுதல் தேசிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து சபையில் சனிக்கிழமை ஒன்பது வாய்மூல வாக்கெடுப்பு வாக்குகள் இருந்தன: இறுதி வாக்கெடுப்பில் நான்கு மற்றும் ஐந்து திருத்தங்கள் அல்லது நடைமுறை இருந்தன. பெரும்பான்மையான ஜனநாயகக் கட்சியினர் ஒன்பது பேரில் ஏழு பேர்கள், ஜோன்சன் மற்றும் குடியரசுக் கட்சியின் தலைமையுடன் இணைந்து வாக்களித்தனர். உக்ரேனுக்கு நிதியளிப்பது தொடர்பான அனைத்து ஐந்து வாக்குகளிலும், ஜனநாயகக் கட்சியினர் ரஷ்யாவிற்கு எதிரான பினாமிப் போரைத் தொடர்வதற்கு ஆதரவாக ஒருமனதாக வாக்களித்தனர்.

உக்ரேனுக்கான நிதியுதவி மசோதாவின் இறுதி நிறைவேற்றம் குறித்த வாக்கெடுப்பு நடைபெற்றபோது, ​​ஜனநாயகக் கட்சியினர் சிறியளவிலான உக்ரேனியக் கொடிகளை தூக்கி அசைத்தனர். வாக்கெடுப்பு முடிந்ததும், அவர்கள் “உக்ரேன், உக்ரேன்” என்ற கோஷங்களைத் எழுப்பினர். மேலும் அவர்கள் நாற்காலியில் அமைதியாக இருக்கும்படி கட்டளையிடப்பட்டனர். “இடது” ஜனநாயகவாதிகள் என்று அழைக்கப்படும், அமெரிக்காவின் ஜனநாயக சோசலிஸ்டுகளின் (DSA) அலெக்ஸாண்டிரியா ஒகாசியோ-கோர்டெஸ் மற்றும் அவரது “படையில்” உள்ளவர்கள் உக்ரேனில் போரைக் கொண்டாடுவதில் இணைந்து கொண்டனர்.

சனிக்கிழமை இடம்பெற்ற வாக்கெடுப்பானது, சமகால அமெரிக்க அரசியலில் மிக முக்கியமான யதார்த்தத்தை நிரூபித்தன. 2024 தேர்தல் போட்டியில் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி பைடென், மற்றும் போர்வெறியர்களின் தலைவரும் குடியரசுக் கட்சியின் முன்னாள் ஜனாதிபதியுமான டிரம்ப் ஆகியோருக்கு இடையே “குறைந்த தீமை” எதுவும் இல்லை. வெள்ளை மாளிகையின் கட்டுப்பாட்டை மீளப் பெறுவதற்கான குடியரசுக் கட்சியின் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப்பின் உந்துதல், அனைத்து அரசியல் எதிர்ப்புகளுக்கும் எதிரான சர்வாதிகார நடவடிக்கைகளின் பாசிச அச்சுறுத்தல்களுடன் சேர்ந்துள்ளது.

டிரம்பை விட பைடென் “குறைந்த தீமையானவர்” என்ற கூற்று, பெருநிறுவன ஊடகங்கள், ஜனநாயக சோசலிஸ்டுகள் அல்லது ஒட்டுமொத்த போலி-இடதுகளாக இருந்தாலும், ஜனநாயகக் கட்சிக்கு மன்னிப்புக் கோருபவர்களின் முக்கிய வாதமாக உள்ளது. வேலைநிறுத்தங்களை நிறுத்த அல்லது மட்டுப்படுத்த தொழிற்சங்கங்களைப் பயன்படுத்தி, அனைத்து COVID பாதுகாப்பு நடவடிக்கைகளையும் முடிவுக்குக் கொண்டு வந்தும் பெருந்தொற்றுநோய் தொடர்கின்ற நிலையில், மில்லியன் கணக்கானவர்களை மீண்டும் வேலைக்குத் தள்ளி, பெருவணிகத்தின் நலன்களுக்கு சேவை செய்து வருகின்ற பைடென் நிர்வாகத்திற்கு குறிப்பிடத்தக்க சீர்திருத்த சாதனைகளை அவர்களால் கோர முடியாது.

“குறைவான தீமை” என்ற வாதம் மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே பைடென் நிர்வாகத்தின் மீதான பரந்த அதிருப்தியை ஒப்புக்கொள்வதாக இருக்கிறது. அதே நேரத்தில், டிரம்ப் இன்னும் மோசமாக இருப்பார் என்று அறிவிக்கிறது. ஆனால், வார இறுதியில் பிரதிநிதிகளின் சபை நடவடிக்கைகள் இரண்டு கட்சிகளை அல்ல, மாறாக ஒரு கட்சியைக் காட்டியது. அல்லது இரண்டு கட்சிகள் ரஷ்யாவிற்கு எதிராக மட்டுமல்ல, உலகம் முழுவதும் போருக்காக ஒன்றுபட்டிருந்ததை காட்டியது.

இரு கட்சிகளின் போருக்கான நிதியானது, தொழிலாள வர்க்கம் அரசியல்ரீதியாக அதன் நலன்களுக்காக போராடாமல் இருக்கும்வரை, அது எதிர்கொள்ளும் ஆபத்துகளைக் எடுத்துக் காட்டுகிறது. இரு கட்சி அமைப்பு என்பது ஒரு மூடிய கதவு ஆகும். இரு கட்சிகளும் பெருநிறுவன நலன்களால் கட்டுப்படுத்தப்படுகின்றன, இலாப அமைப்புமுறை மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலகளாவிய நிலைப்பாட்டை பாதுகாப்பதில் ஒற்றை எண்ணத்துடன் இவை உறுதியாக உள்ளன.

2024 தேர்தலில் மையப் பிரச்சினை, முதலாளித்துவ அரசியலில் இருந்து தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்திற்கான போராட்டமாகும். ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதிக்கான சோசலிச சமத்துவக் கட்சியின் வேட்பாளர்கள், ஜோசப் கிஷோர் மற்றும் ஜெர்ரி வைட் ஆகியோர் தங்கள் பிரச்சார தொடக்கத்தில் கூறியதாவது:

டிரம்பும் பைடெனும் தொழிலாளர்களின் நலன்களுக்காக பேசவில்லை, மாறாக பெருநிறுவனங்கள் மற்றும் பில்லியனர்களின் நலன்களுக்காக பேசுகிறார்கள். ஜனநாயகக் கட்சியினரும் குடியரசுக் கட்சியினரும் அவர்கள் உடன்படாததை விட அதிகமாக ஒப்புக்கொள்கிறார்கள். அவர்கள் போர், சிக்கன நடவடிக்கை, செல்வந்தர்களுக்கான பிணை எடுப்பு ஆகியவற்றில் உடன்படுகிறார்கள்.

அணுவாயுதத்தால் அழிப்பதன் மூலம் மனிதகுலத்தை அச்சுறுத்தும் இரட்டை முதலாளித்துவக் கட்சிகளின் போர்க் கொள்கைகளை எதிர்க்க அமெரிக்க தொழிலாள வர்க்கம் முன்வர வேண்டும். இதற்கு சர்வதேச அளவில் தொழிலாளர்களுடன் சோசலிச கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு பொதுவான வேலைத்திட்டத்தில் ஐக்கியப்பட்டு, போருக்கு மூலகாரணமான முதலாளித்துவ இலாப அமைப்புமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

Loading