மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
சர்வதேச தொழிலாளர் குழுக்களின் சாமானிய தொழிலாளர் கூட்டணி (IWA-RFC), கல்லூரி வளாகங்களில் பொலிஸ் அரசு அடக்குமுறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு நடவடிக்கை எடுக்க தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுக்கிறது. காஸாவில் இனப்படுகொலைக்கு எதிராக மாணவர்கள் எடுக்கும் துணிச்சலான நிலைப்பாட்டிற்கு தொழிலாள வர்க்கத்தின் பரந்தளவிலான ஆதரவு தேவைப்படுகிறது. பேச்சு சுதந்திரத்திற்கான அடிப்படை உரிமை மீதான தாக்குதலை முடிவுக்குக் கொண்டுவர, தேசிய மற்றும் சர்வதேச வேலைநிறுத்தத்தில் உச்சகட்டமாக போராட்டங்கள், பாரிய பொதுக்கூட்டங்கள் மற்றும் பல்கலைக்கழக வளாகங்களுக்கு தொழிலாளர் பிரதிநிதிகள் அடங்கிய குழுக்கள் போன்றவற்றை ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.
அமெரிக்காவில், இராணுவச் சட்டத்தின் (martial law) ஆரம்ப கட்டங்களை தொழிலாளர்கள் கண்டு வருகின்றனர். போர்-எதிர்ப்பு போராட்டங்களுக்கு எதிராக பொலிசைப் பயன்படுத்துவதில் நீண்ட வரலாறு இருந்தாலும், ஒரு இனப்படுகொலைக்கான எதிர்ப்பை சட்டவிரோதமாக்கும் முயற்சிக்கு எந்த முன்மாதிரியும் இல்லை. இது, அமெரிக்க அரசாங்கத்தால் வெளிப்படையாக ஆதரிக்கப்படுகிறது.
அமைதியாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக, இரு கட்சிகளாலும் கட்டுப்படுத்தப்படும் உள்ளூர் அரசாங்கங்கள், மற்றும் வெள்ளை மாளிகையின் ஒருங்கிணைப்புடன், ஆயிரக்கணக்கானோரை அடித்து கைது செய்ய, ட்ரோன்கள் மற்றும் ஸ்னைப்பர்களின் ஆதரவுடன், பல்கலைக்கழக வளாகங்கள் கலகத் தடுப்பு போலீஸ் வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டுள்ளன. “ஒழுங்கை மீட்டெடுப்பதற்கு” இது அவசியம் என்று கூறினாலும், UCLA வில் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களை பட்டாசுகள் மற்றும் மழுங்கிய ஆயுதங்களால் தாக்க்கின்ற அதிதீவிர வலதுசாரிகளுடன் பொலிசார் இணைந்து பணியாற்றி வருகின்றனர். 1970 ல் கென்ட் மாநிலத்தில் நடந்ததைப் போன்ற வெளிப்படையான மாணவர் படுகொலைகளுக்கு, தேசிய காவலர்களை பல்கலைக்கழகங்களுக்கு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
ஒடுக்குமுறைக்கான ஒருமித்த ஆதரவு, வர்க்க ஆட்சியின் கருவியாக அரசியல் அமைப்பின் தன்மையை அம்பலப்படுத்துகிறது. இரு கட்சிகளும் (ஜனநாயக கட்சி மற்றும் குடியரசுக் கட்சி) 2022 இல் இரயில்வே ஊழியர்களின் தேசிய வேலைநிறுத்தத்தை தடை செய்வதற்காக தங்கள் கருத்து வேறுபாடுகளை களைந்தன.
இரண்டாம் உலகப் போரின் முடிவில் இருந்து காணப்படாத, பாரிய அளவிலான செல்வாக்கற்ற இராணுவ விரிவாக்கம் மற்றும் போர்க் குற்றங்களை தயாரிப்பு செய்வதில், “உள்நாட்டு போர்முனையில்” ஒழுங்கைக் கொண்டுவருவது அவசியமான முதல் படியாகக் கருதப்படுகிறது. முதல் நிகழ்வில், இதன் பொருள் ரஃபா மீதான இஸ்ரேலிய படையெடுப்பு, காஸா பகுதியில் ஏழு மாத கால இனப்படுகொலையில் இதுவரை நடந்த மிக மோசமான அட்டூழியமாக இருக்கும்.
காஸாவில் நடந்துவரும் இனப்படுகொலை மற்றும் ஈரானுக்கு எதிரான அமெரிக்கப் போர்த் திட்டங்கள் ஆகியவை வளர்ந்து வரும் உலகப் போரில் ஒரு போர் முன்னரங்கில் உள்ளன. ஜனநாயக கட்சியும், குடியரசுக் கட்சியும், இஸ்ரேலுக்கு மட்டுமின்றி உக்ரேனிலும் தைவானிலும் உள்ள இராணுவத்திற்கு நிதியுதவி வழங்க வாக்களித்துள்ள நிலையில், பல்கலைக் கழக வளாக ஒடுக்குமுறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளன. தைவான் எதிர்காலத்தில் சீனாவுக்கு எதிரான போரில் பொதுவான இழையாக செயல்படும்.
ஊதியங்கள், ஓய்வூதியங்கள், சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் சமூகத் திட்டங்களை அழிப்பதன் மூலம் நிதியளிக்கப்படும் இந்தப் போர்களில் போரிட தொழிலாளர்களும் அவர்களது குழந்தைகளும் அனுப்பப்படுவார்கள். ஏற்கனவே இந்தப் போர்களில் நூறாயிரக்கணக்கான உயிர்கள் கொல்லப்பட்டுள்ளன. அதே நேரம், அணு ஆயுதப் போர் அழிவும் அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன.
போருக்கான அரசியல் மறைப்பாக நீண்ட காலமாகப் பயன்படுத்தப்பட்ட “மனித உரிமைகள்” மற்றும் “ஜனநாயக” சாக்குப் போக்குகள் என்பன கந்தலாகியுள்ளன. பசுமைக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜில் ஸ்டெய்ன் உட்பட, பெரும் எண்ணிக்கையில் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட யூதர்கள் கைது செய்யப்பட்டுள்ளதால், எதிர்ப்பு போராட்டங்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்யப்பட்ட யூத-எதிர்ப்பு பொய்யையும் மில்லியன் கணக்கானவர்கள் காண்கிறார்கள். உண்மையில், இவை வெளிநாட்டுச் சந்தைகள், இயற்கை வளங்கள் மற்றும் உலகளாவிய விநியோகச் சங்கிலிகளின் மேலாதிக்கத்திற்கான ஏகாதிபத்தியப் போர்களாகும்.
இந்தப் போர்களின் தலைமை சக்தி வாஷிங்டன் டி.சி.யில் உள்ளது. ஆனால், ஜேர்மனி உட்பட உலகம் முழுவதும் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீதான தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. அங்கு மத்திய கிழக்கு, இங்கிலாந்து மற்றும் பிரான்சில் நியாயமான அமைதிக்காக யூதக் குரல் ஒழுங்குபடுத்திய மாநாட்டை பொலிஸ் தடுத்து நிறுத்தியது. உக்ரேனில், இளைஞர்கள் தெருவில் பிடிக்கப்பட்டு போர் முன்னரங்குக்கு அனுப்பப்பட்டுவரும் நிலையில், உக்ரேன் மற்றும் ரஷ்யாவில் உள்ள முதலாளித்துவ அரசாங்கங்களை எதிர்த்துவரும் சோசலிஸ்ட்டான போக்டன் சிரோடியுக்கை, உக்ரேன் பொலிஸ் அரசு கைது செய்துள்ளது.
வெளிநாட்டில் ஏகாதிபத்திய யுத்தம், உள்நாட்டில் தொழிலாள வர்க்கத்தின் சமூக உரிமைகள் மீதான தாக்குதலுடன் சேர்ந்துள்ளது. அமெரிக்க பெருநிறுவனங்கள் கடந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து கிட்டத்தட்ட ஒரு மில்லியன் பணிநீக்கங்களை அறிவித்துள்ளன. இது ஒரு திட்டமிட்ட கொள்கையின் ஒரு பகுதியாகும், இது அரசாங்கம் மற்றும் மத்திய வங்கிகளால் ஒருங்கிணைக்கப்பட்டு அதிக பணவீக்கம் மற்றும் தன்னியக்கத்தை பயன்படுத்தி பாரிய வேலையின்மையை உருவாக்குகிறது. பெருந்தொற்றுநோய் தொடங்கிய பிறகு அதிகரித்து வரும் வேலைநிறுத்த அலைகளை அடித்து நொறுக்குவதே இதன் நோக்கமாகும்.
மாணவர்கள் துணிச்சலான நிலைப்பாட்டை எடுத்துள்ளனர். ஆனால், அவர்களின் நடவடிக்கைகள் தொழிலாள வர்க்கத்திலிருந்து இன்னும் சக்திவாய்ந்த இயக்கத்தை எதிர்பார்க்கின்றன. அவர்கள் எழுப்புகின்ற பிரச்சினைகளுக்கு பலகலைக்கழக வளாகங்களில் மட்டும் அல்ல, மாறாக தொழிற்சாலைகள், பொருட்களை சேமித்து வைக்கும் கிட்டங்கிகள், ரயில் பாதைகள் மற்றும் கப்பல்துறைமுகங்களில் மட்டுமே தீர்க்க முடியும். தொழிலாளி வர்க்கம், தனது உழைப்பின் மூலம் அனைத்து செல்வங்களையும் உருவாக்கும் பூமியில் மிகவும் சக்திவாய்ந்த சமூக சக்தியாக உள்ளது. இனப்படுகொலை மற்றும் போருக்கு முடிவுகட்ட அந்த சக்தியைப் பயன்படுத்த வேண்டும்.
“இனப்படுகொலை ஜோ” பைடென் மற்றும் பிற போர்-ஆதரவு அரசியல்வாதிகளை ஆதரிக்கும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களால் நிறைவேற்றப்பட்ட நேர்மையற்ற போர்நிறுத்த தீர்மானங்களால் தொழிலாளர்கள் திருப்தியடைய முடியாது. புதனன்று, ஐக்கிய வாகனத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் ஷான் ஃபைன், தொழிற்சங்கம் பாரிய கைதுகளை “ஒருபோதும் ஆதரிக்காது” என்று அறிவித்தார். அது டிசம்பரில் நிறைவேற்றப்பட்ட வெற்று போர்நிறுத்தத் தீர்மானத்தை சுட்டிக்காட்டி, கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுவிக்கவும், “போருக்கு ஆதரவளிப்பதை நிறுத்தவும் அதிகாரங்களுக்கு” அழைப்பு விடுத்தது.
ஆனால் ஃபெயினும் அவரது UAW தொழிற்சங்க அதிகாரத்துவமும் பைடெனை ஆதரித்துள்ளன. மேலும் இவர்கள், பைடெனின் டெட்ராய்ட் விஜயத்தின் போது எதிர்ப்பாளர்களிடமிருந்து அவரைக் காப்பாற்றுவதற்காக கலகத் தடுப்புக் பொலிஸாருடன் கூட வேலை செய்தனர். இரண்டாம் உலகப் போருக்காக அமெரிக்க தொழில்துறை முழு அளவில் அணிதிரட்டப்பட்டதைக் குறிக்கும் வகையில், ஒரு குண்டுவீச்சு விமானத்தின் உருவம் பொறித்த, மற்றும் “ஜனநாயகத்தின் ஆயுதக் களஞ்சியம்” என்ற சொற்றொடருடன் கூடிய போர்-ஆதரவு அங்கியை ஃபைன் அணிந்திருந்தார். இன்று ஃபைன் “ஜனநாயகத்திற்காக” அல்ல, இனப்படுகொலைக்காக, அதே காரியத்தைச் சாதிக்க பைடெனுக்கு உடந்தையாக இருக்க விரும்புகிறார்.
ஃபைன் மற்றும் பிற தொழிற்சங்க அதிகாரத்துவத்தினர், பைடென் மற்றும் அமெரிக்க பெருநிறுவனங்களுடன் இணைந்து பெருமளவிலான பணிநீக்கங்களுக்கு எதிரான போராட்டத்தை நாசப்படுத்த வேலை செய்கின்றனர். கடந்த இலையுதிர்காலத்தில் ஒரு புதிய தேசிய ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டதில் இருந்து ஆயிரக்கணக்கான வாகனத் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். மேலும் UAW தொழிற்சங்கமானது, கடந்த வெள்ளிக்கிழமை கடைசி நிமிடத்தில் 7,000 டெய்ம்லர் டிரக் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தை கைவிட்டது.
ஆனால் மே 2028 இல், UAW வேலைநிறுத்த நடவடிக்கைக்கு தயாராகி வருவதாக அவர் கூறுகிறார். ஆனால், தொழிலாளர்கள் இதற்கு செயல்பட நான்கு ஆண்டுகள் முழுவதுமாக காத்திருந்தால், எத்தனை புதிய போர்கள் தொடங்கியிருக்கும், மற்றும் அதனைப் பாதுகாக்க என்ன உரிமைகள் கூட மிச்சமிருக்கும்?
தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் கைகளில் இருந்து, சாமானிய தொழிலாளர்கள் முன்முயற்சியை எடுக்க வேண்டும். அவர்கள் பல ஒப்பந்தப் போர்களில் செய்ததைப் போல, வேலைநிறுத்த நடவடிக்கையைத் தயாரிப்பதற்கு, அதிகாரத்துவத்தில் இருந்து சுயாதீனமாக, சாமானிய தொழிலாளர் குழுக்களை அமைக்க வேண்டும். தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தங்களை அனுமதிக்கக் கோரி, தொழிலாளர்கள் தொழிற்சங்க கூட்டங்களை எடுத்துக் கொள்ள வேண்டும், அல்லது தங்கள் சொந்த கூட்டங்களை சாமானிய தொழிலாளர் குழுக்கள் ஏற்பாடு செய்ய வேண்டும். குறிப்பாக, பல்லாயிரக்கணக்கான பட்டதாரி மாணவர்கள் மற்றும் நூறாயிரக்கணக்கான தொழிற்சாலை தொழிலாளர்களை உள்ளடக்கிய UAW இன் முழு உறுப்பினர்களும் இதற்கு அழைக்கப்பட வேண்டும்.
தொழிற்சங்க அதிகாரத்துவத்தினர் இதனை ஏற்க மறுத்தால், அல்லது காலப்போக்கில் இதனை ஸ்தம்பிக்க வைக்க முயன்றால், தொழிலாளர்கள் அவர்களை வெளியே தூக்கி வீசிவிட்டு, அடித்தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட தலைவர்களை அவர்களுக்குப் பதிலாக நியமிக்க வேண்டும், மாறாக, தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக விருப்பத்தை வலிந்து திணிக்கத் தயாராக இருக்கும் தொழில் அதிகாரிகளை அல்ல.
ஆளும் வர்க்கம் சுயநினைவுக்கு வந்தவுடன் இதனை கடந்து போகும், ஆதலால், தொழிலாளர்களுக்கு இது ஒரு தற்காலிக நெருக்கடி என்று நம்புவதை விட ஆபத்தானது எதுவுமில்லை. 1914 மற்றும் 1939 இல் இருந்ததைப் போலவே, போர் என்பது ஒரு தவறான கொள்கையில் இருந்து உருவானது அல்ல, மாறாக முதலாளித்துவ அமைப்பு முறையின் முறிவின் விளைவாகும்.
அதன் நலன்களைப் பாதுகாப்பதற்காக, பெருநிறுவன தன்னலக்குழு கடக்க விரும்பாத கோடு எதுவும் இல்லை. அதே ஆளும் வர்க்கம் எதிர்ப்பு போராட்டங்களைத் தாக்குவது, தொற்றுநோய்க்கான பொது சுகாதாரத்தை நாசமாக்கி, மில்லியன் கணக்கான உயிர்களைக் காவு கொடுத்து, டொனால்ட் ட்ரம்ப் தலைமையில் வளர்ந்து வரும் பாசிச இயக்கத்தை உருவாக்கியுள்ளது என்பதை நினைவுகூர வேண்டும். முதலாளித்துவத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த நெருக்கடிக்கு முற்போக்கான தீர்வு எதுவும் இல்லை.
இதன் பொருள், போருக்கு எதிரான போராட்டம் சோசலிசத்திற்கான போராட்டத்துடன் இணைக்கப்பட வேண்டும், மற்றும் மனிதத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அவர்கள் ஏகபோகமாக வைத்திருக்கும் வளங்களைப் பயன்படுத்துவற்கு, பெரும் பணக்கார போர்வெறியர்களின் சொத்துக்களை கையகப்படுத்த வேண்டும்.
போருக்கு எதிரான போராட்டம் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தொழிலாளர்களால் ஒரு பொதுவான சர்வதேச போராட்டமாக நடத்தப்பட வேண்டும். போர் மற்றும் சர்வாதிகாரத்திற்கு எதிராக ஒரு பரந்தளவிலான சோசலிச இயக்கத்தை கட்டியெழுப்பும் ஒரு முக்கியமான படியாக, மே 4, 2024 அன்று, சர்வதேச இணையத்தள மே தின பேரணியில் கலந்து கொள்ளுமாறு உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு, சர்வதேச தொழிலாளர் குழுக்களின் சாமானிய தொழிலாளர் கூட்டணி அழைப்பு விடுக்கின்றது.