முன்னோக்கு

"பொதுமக்களின் கருத்தையும்" மீறி ரஃபா படுகொலையை பாதுகாப்பதற்கு வெள்ளை மாளிகை உறுதியளிக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

ரஃபாவில் உள்ள அகதிகள் முகாம்களில் இருந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது, இஸ்ரேலிய விமானம் மேற்கொண்ட தாக்குதலில், ஞாயிறன்று 45 பேர்களும் செவ்வாய் கிழமை 21 பேர்களும் கொல்லப்பட்டனர். புதன் கிழமையன்று, இஸ்ரேலியர்களால் மேற்கொள்ளப்பட்ட இந்த விமானத் தாக்குதல்களை பைடென் நிர்வாகம் அங்கீகரித்துள்ளது.

இந்த தாக்குதல்கள், வெற்றிகரமாக “ஹமாஸ் செயற்பாட்டாளர்களையும் ஹமாஸ் கூட்டமைப்பையும்” கொல்லும் நோக்கத்தில் “மட்டுப்படுத்தப்பட்டு”, “இலக்கு வைக்கப்பட்டு” மேற்கொள்ளப்பட்டது என்று வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜோன் கிர்பி கூறினார். இந்தப் படுகொலைகள் மற்றும் ரஃபா மீதான இஸ்ரேலின் பரந்த தாக்குதலை ஏற்றுக்கொள்வதோடு பைடென் நிர்வாகம், வரம்பற்ற அளவில் போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைகளுக்கு நிதியுதவி செய்யும் உரிமையை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.

அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் ஜோன் கிர்பி [AP Photo/Andrew Harnik]

“ஜனாதிபதி ஒரு மாற்றத்தைக் கருத்தில் கொள்வதற்கு முன் அவர் இன்னும் எத்தனை எரிந்த சடலங்களைப் பார்க்க வேண்டும்?” என்று ஒரு நிருபர் கிர்பியிடம் கேட்டதற்கு, இது தொடர்பான “கொள்கை மாற்றங்கள் எதுவும் இருக்காது” என்று கிர்பி அப்பட்டமாக அறிவித்தார்.

இத்தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா மீதான கண்டனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் வெள்ளை மாளிகை ஏதாவது செய்யுமா என்று கிர்பியிடம் கேட்கப்பட்டபோது, ​​அவர் பின்வருமாறு பதிலளித்தார்:

மக்கள் கருத்துக் கணிப்புகளின் அடிப்படையில் ஜனாதிபதி முடிவுகளை எடுப்பதில்லை அல்லது கொள்கைகளை நிறைவேற்றுவதில்லை. அவர் நமது சொந்த தேசிய பாதுகாப்பு நலன்களை அடிப்படையாகக் கொண்டு தனது முடிவுகளை எடுக்கிறார்.

இந்த அறிக்கையானது, காஸா இனப்படுகொலைக்கான அமெரிக்க அனுசரணையை பெருமளவில் எதிர்த்துவரும் பெரும்பான்மையான மக்களின் கருத்துக்களுக்கு எதிராக, தான் நனவுடன் செயல்படுவதாக அரசாங்கத்தின் தரப்பில் பகிரங்கமாக ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மக்களின் விருப்பத்தால் தீர்மானிக்கப்படுவதில்லை. ஆனால், அரசின் தேசிய பாதுகாப்பு நலன்களால் தீர்மானிக்கப்படுகிறது என்பதை இது அடிப்படைக் கொள்கையாக வலியுறுத்துகிறது. அதாவது, அரசு சார்பாக செயல்படும் நிதிய தன்னலக்குழுவின் உலகளாவிய நலன்களால் அதன் கொள்கை தீர்மானிக்கப்படுகிறது.

கிர்பியின் அறிக்கைக்கு பதிலளித்து, சோசலிச சமத்துவக் கட்சியின் அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளரான ஜோசப் கிஷோர் விளக்குகையில், “இதைவிட ஒரு தெளிவான அறிக்கை இருக்க முடியாது. இனப்படுகொலை மற்றும் விரிவடைந்துவரும் உலகப் போருக்கு எதிரான பாரிய எதிர்ப்பு போரட்டங்கள் மட்டுமே அரசாங்கக் கொள்கையை மாற்றாது, இது முதலாளித்துவ ஆளும் உயரடுக்கால் கட்டளையிடப்படுகிறது” என்று குறிப்பிட்டார்.

[twitter]

https://twitter.com/jkishore?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1795869815988515123%7Ctwgr%5E1401e24aeaa8811cc5dd7a714c2ad7aedf8fe9c4%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.wsws.org%2Fen%2Farticles%2F2024%2F05%2F30%2Faxhe-m30.html

[/twitter]

இதுபற்றி கிஷோர், “யாராவது ஒருவர் திரு. கிர்பிக்கு அமெரிக்க சுதந்திரப் பிரகடனத்தை நினைவூட்டலாம். அதில், அரசாங்கங்கள் மனிதர்களிடையே நிறுவப்பட்டு, அவர்களின் நியாயமான அதிகாரங்களை ஆளப்படுபவர்களின் ஒப்புதலிலிருந்து பெறப்படுகின்றன. எந்தவொரு அரசாங்க வடிவமும் இந்த நோக்கங்களை அழிக்கும் போதெல்லாம், அதை மாற்றியமைப்பது அல்லது அதை ஒழித்துக்கட்டுவது மக்களின் உரிமை. ...’' என்று மேலும் குறிப்பிட்டார்.

ஒரு அரசாங்கம் தான் விரும்பியதைச் செய்வதே “ஜனநாயகம்” என்ற கருத்தை பைடென் நிர்வாகம் முன்னெடுத்து வருகிறது. இதில் தேர்தல்கள் என்பது பெரும்பான்மையான மக்களால் எதிர்க்கப்படும் கொள்கைகளை சட்டபூர்வமாக்க, அத்தி இலையை வழங்கி மறைப்பதற்கான ஒரு சம்பிரதாய நிகழ்வாகும்.

2020 இல் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது, ​​பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனியர்களைக் கொன்று குவிப்பதற்கும், இரண்டு மில்லியன் மக்களைப் பட்டினியில் வதைப்பதற்கும் இஸ்ரேலை அனுமதிப்பதே தனது நோக்கமாக இருக்கும் என்று பைடென் எப்போது பொதுமக்களிடம் கூறினார்?.

பிரதிநிதித்துவம் செய்யும் அரசாங்கத்திற்கு கூடுதலாக, மக்கள் விருப்பத்தின் வெளிப்பாடு கோட்பாட்டு ரீதியாக எதிர்ப்பின் மூலம் நிறைவேற்றப்படுகிறது, அல்லது முதல் திருத்தத்தின் மொழியில், “மக்கள் அமைதியான முறையில் ஒன்றுகூடி, குறைகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கத்திடம் மனு அளிக்கும் உரிமையின்” மூலம் நிறைவேற்றப்படுகிறது.

ஆனால், அமெரிக்காவில் அமைதியான முறையில் ஒன்றுகூடுவது குற்றமாக்கப்படுகிறது. கடந்த இரண்டு மாதங்களில், காஸா இனப்படுகொலைக்கு எதிராக அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தியதற்காக கிட்டத்தட்ட 3,000 அமெரிக்கர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அமெரிக்க அரசாங்கம் சமூகத்தைப் பற்றிய முழுமையான சர்வாதிகாரப் பார்வையை ஏற்றுக்கொண்டிருக்கிறது. இதில் அரசின் தேசிய பாதுகாப்பு நலன்களைப் பாதுகாப்பது - நிதிய தன்னலக்குழுவின் நலன்களின் பாதுகாவலராக - அதன் அடிப்படை ஆதாரமாகும், மேலும் எந்த எதிர்ப்பையும் வலுக்கட்டாயமாக ஒடுக்க வேண்டும்.

இந்த மாத தொடக்கத்தில் கூட்டுப் படைகளின் முன்னாள் தளபதி மார்க் மில்லி மற்றும் பாதுகாப்பு நிறுவனமான பலன்டிரின் தலைமை நிர்வாக அதிகாரி அலெக்ஸ் கார்ப் ஆகியோருக்கு இடையே நடந்த கலந்துரையாடலின் போது, இந்த கருத்தாக்கம் வெளிப்படுத்தப்பட்டது. போர்-எதிர்ப்பு போராட்டங்கள் “நம் சமூகத்தில் ஒரு தொற்று நோய் என்று கார்ப் கூறினார்... நீங்கள் இந்த மக்களை தடுக்க விரும்பினால், நீங்கள் கடுமையாக இருக்க தயாராக இருக்க வேண்டும்”.

காஸா இனப்படுகொலை, வெளிநாட்டில் அப்பட்டமான குற்றச்செயல்கள் மற்றும் உள்நாட்டில் சர்வாதிகாரத்தை தழுவுவதில் ஒரு குறிப்பிடத்தக்க திருப்புமுனையை குறிக்கிறது. காஸாவில் நடத்தப்படும் பாரிய குற்றங்கள், உலகம் முழுவதிலும் போரைத் தீவிரப்படுத்துவதற்கான வெறித்தனமான உந்துதலுக்கு மத்தியில், இன்னும் பாரிய குற்றங்கள் வரவுள்ளன என்பதை காட்டுகிறது. கட்டுப்பாடற்ற இராணுவவாதம் மற்றும் ஏகாதிபத்திய காட்டுமிராண்டித்தனம் ஆகியவை வர்க்க மேலாதிக்கத்தின் அனைத்து நிறுவனங்களாலும் ஊக்குவிக்கப்படுகின்றன, ஊடகங்கள் அதற்கு ஒதுக்கப்பட்ட பாத்திரத்தை வகித்து வருகின்றன.

புதன்கிழமை வெளியான ஒரு கட்டுரையில், நியூ யோர்க் டைம்ஸ் கட்டுரையாளர் பிரட் ஸ்டீபன்ஸ் இஸ்ரேல், பொதுமக்களை எண்ணிக்கையில் கொல்ல அனுமதிக்கப்படுகிறதா அல்லது அணு ஆயுதம் ஏந்திய ரஷ்யாவுடனான அமெரிக்கப் போரின் அளவைப் பற்றி போரை நடத்துவதில் ஏதேனும் கட்டுப்பாடுகளை கொண்டிருக்கிறதா என்று கண்டனம் செய்தார்.

“யுத்தங்கள் கசப்பானவை அல்ல, அதைச் சரியாக செய்வதற்கு விஷயங்கள் ஒரு குறிப்பிட்ட வழியில் இருக்க வேண்டும் என்ற கோல்டிலாக்ஸ் அணுகுமுறை எப்போதும் இல்லை” என்று ஸ்டீபன்ஸ் கூறினார். “நீங்கள் வெற்றியின் பாதையில் இருக்கிறீர்கள் அல்லது தோல்விக்கான பாதையில் இருக்கிறீர்கள்.” இதனை வேறு வார்த்தைகளில் கூறுவதானால், போரை “கட்டுப்படுத்தும்” எந்தவொரு முயற்சியும், சர்வதேச சட்டத்தை கடைபிடிப்பதன் மூலமாகவோ அல்லது சுய பாதுகாப்பு மூலமாகவோ கொண்டிருப்பது தோல்விக்கான செய்முறையாகும். வெற்றி மிருகத்தனத்தின் மூலம் வருகிறது.

ஸ்டீபன்ஸ் எழுதினார்:

தேசங்கள்... ஒவ்வொரு போரும் முன்வைக்கும் தீமைகளின் மோசமான தேர்வை அவர்கள் எதிர்கொண்டிருப்பினும், தார்மீக ரீதியாக தூய்மையான தோல்விகளின் மீது தார்மீக ரீதியாக சமரசம் செய்யப்பட்ட வெற்றிகள் தலைவர்களை நியமனம் செய்ய முனைகிறது.

ஸ்டீபன்ஸின் இந்த அறிக்கை 1939 ஆம் ஆண்டு அடோல்ஃப் ஹிட்லர் ஜேர்மன் உயர் அதிகாரிகளுக்கு முன் வழங்கிய உரையை கிட்டத்தட்ட திருடி எடுத்திருக்கிறது. அதில் அவர் ஜேர்மன் இராணுவத்தை போர்க்குற்றங்களைச் செய்யுமாறும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட போர்ச் சட்டங்களை மீறுமாறும் வலியுறுத்தினார்.

ஹிட்லர் அறிவித்தார்:

நமது பலம், நமது வேகத்திலும், கொடூரத்திலும் உள்ளது. செங்கிஸ் கான் மில்லியன் கணக்கான பெண்கள் மற்றும் குழந்தைகளை முன்கூட்டியே திட்டமிட்டு மகிழ்ச்சியான இதயத்துடன் படுகொலை செய்ய வழிவகுத்தார். வரலாறு அவரை ஒரு அரசின் நிறுவனராக மட்டுமே பார்க்கிறது.

நாசி தலைவர்களின் குற்றச் செயல்களுக்கு இவற்றையும் பிற அறிவுரைகளையும் கண்டித்து, நியூரம்பெர்க் விசாரணையில் வழக்கறிஞர்களில் ஒருவரான செர்ஜி ருடென்கோ பின்வருமாறு கூறினார்:

போரின் சட்டங்கள் மற்றும் பழக்கவழக்கங்களை சிடுமூஞ்சித்தனமான முறையில் கேலி செய்வது மிகக் கடுமையான குற்றம் என்பதை குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தெரியும். அவர்கள் இதை அறிந்திருந்தனர். ஆனால் ஒட்டுமொத்தப் போரிலும் வெற்றியைக் கொண்டு வருவதன் மூலம், தங்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அது பாதுகாக்கும் என்று அவர்கள் நம்பினர். ஆனால் வெற்றி அவர்களின் குற்றங்களின் குதிகால் அளவுக்குகூட வரவில்லை.

இராணுவ வன்முறை மற்றும் உள்நாட்டில் சர்வாதிகாரத்தை நோக்கிய வெளிப்படையான திருப்பம், ஒரு சமூக ஒழுங்கின் இறுதி வீழ்ச்சியின் அடையாளமாகும்.

யுத்த காலங்களில், அரசு தன்னை வர்க்க ஆதிக்கத்தின் ஒரு கருவியாக வெளிப்படையாக வெளிப்படுத்துகிறது. இப்பிரச்சினை அரசு மற்றும் அதன் நிறுவனங்களை ஈர்க்கவில்லை, மாறாக முழு அரசு எந்திரத்தையும் அது பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளும் சமூக வர்க்கத்தையும் எதிர்க்கும் திறன் கொண்ட ஒரு சமூக இயக்கத்தை வளர்க்கிறது.

அந்த சமூக சக்தியானது முதலாளித்துவ ஆளும் உயரடுக்கை தோற்கடிக்கும் பொருளாதார மற்றும் சமூக சக்தியைக் கொண்ட சர்வதேச தொழிலாள வர்க்கமாகும். முதலாளித்துவ சுரண்டலுக்கு எதிராக போராடுவதிலும் ஏகாதிபத்திய போரை எதிர்ப்பதிலும் மற்றும் அதன் நலன்களுக்கு இடையே உள்ள தொடர்புகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தி, தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்ட வேண்டும். முதலாளித்துவத்தை ஒழித்து சோசலிசத்தை நிறுவுவதற்கான போராட்டத்தில் தொழிலாள வர்க்கம் ஒன்றுபட்டு அணிதிரள வேண்டும்.

Loading