முன்னோக்கு

ஜூலியன் அசான்ஞ் விடுதலை செய்யப்பட்டுள்ளார், ஆனால் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டம் தொடர்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய அரசாங்கங்களின் குற்றங்களை அம்பலப்படுத்திய ஜூலியன் அசான்ஞ், சூனிய வேட்டைக்குள்ளாகி, ஐந்து வருட சிறைவாசம் மற்றும் கிட்டத்தட்ட 15 வருட துன்புறுத்தலுக்குப் பிறகு, கடந்த திங்களன்று ஐக்கிய இராச்சியத்தின் பெல்மார்ஷ் சிறைச்சாலையிலிருந்து சுதந்திர மனிதராக வெளியேறினார். புதன்கிழமை பிற்பகல், வடக்கு மரியானா தீவுகளில் உள்ள ஒரு அமெரிக்க நீதிமன்றம், ஆஸ்திரேலியாவுக்குத் திரும்பும் அசான்ஞ்சை நாடு கடத்துவதற்கான அமெரிக்க முயற்சியை முடிவுக்குக் கொண்டுவந்து, ஒரு மனு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

ஜூலியன் அசான்ஞ் புதன்கிழமை, மரியானா தீவுகளின் சைபனில் உள்ள பெடரல் நீதிமன்றத்தை விட்டு வெளியேறுகிறார். June 26, 2024. [AP Photo/Eugene Hoshiko]

அசான்ஞ் எப்போதுமே வருங்கால சந்ததியினரால் சுதந்திரமான பேச்சு மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கான போராளியாகவே பார்க்கப்படுவார். அவர் மீதான துன்புறுத்தல்கள் நவீன வரலாற்றில் மிக மோசமான சூனிய வேட்டைகளில் ஒன்றாக பார்க்கப்படும்.

உலக சோசலிச வலைத் தளம் ஜூலியன் அசான்ஞ் விடுதலை செய்யப்பட்டதற்கு தனது அன்பான வாழ்த்துக்களையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கிறது. அசான்ஞ் மீதான துன்புறுத்தலுக்கு எதிராகப் போராடுவதில் சிறந்த பங்களிப்பை செய்த அனைவரையும் நாங்கள் வாழ்த்துகிறோம். இவர்களில் முதன்மையானவர்கள் அவரது மனைவி ஸ்டெல்லா அசான்ஞ், அவரது தந்தை ஜோன் ஷிப்டன் மற்றும் அவரது சகோதரர் கேப்ரியல் ஷிப்டன் ஆவர்.

அசான்ஜை பாதுகாப்பதில் முன்னணியில் இருந்தவர்களில் இசைக்கலைஞர் ரோஜர் வாட்டர்ஸ் மற்றும் மனித உரிமை பிரச்சாரகர் கிரேக் முர்ரே ஆகியோர் அடங்குவர். அசான்ஞ்சின் விடுதலைக்காக அயராது போராடிய துணிச்சலான பத்திரிக்கையாளர் ஜோன் பில்ஜர், மற்றும் பிரபல தகவல் வழங்குவபரான டேனியல் எல்ஸ்பெர்க் ஆகியோர் இந்த நாளை பார்ப்பதற்கு இன்று உயிரோடு இல்லை என்பதை வருத்தத்துடன் குறிப்பிடுகிறோம்.

அசான்ஜை விடுவிப்பதற்கான பைடென் நிர்வாகத்தின் முடிவு, ஒரு பெரிய அரசியல் பின்னடைவாக இருப்பதுடன், அவருக்கு எதிரான வழக்கு ஆரம்பத்தில் இருந்தே ஒரு மோசடி என்று அமெரிக்க அரசாங்கம் நடைமுறையில் ஒப்புக்கொண்டுள்ளது. அமெரிக்க ஏகாதிபத்தியம் 'ஜனநாயகத்தின்' பெயரால் உலகம் முழுவதும் போர் தொடுத்து வரும் மோசடியை, அமெரிக்காவில் ஒரு துணிச்சலான பத்திரிகையாளர் மீதான அரசியல் விசாரணை அம்பலப்படுத்தும் என்று வெள்ளை மாளிகை கணக்கிட்டு முடிவை எடுத்துள்ளது.

அசான்ஜ் மீதான துன்புறுத்தல் என்பது பொய்கள் மற்றும் அவதூறுகளின் கீழ்த்தரமான பிரச்சாரமாகும். புஷ், ஒபாமா, டிரம்ப் மற்றும் பைடென் உட்பட நான்கு அடுத்தடுத்த வந்த ஜனாதிபதி நிர்வாகங்கள் இந்த துணிச்சலான பத்திரிகையாளரை மௌனமாக்க முயன்றன.

'பயங்கரவாதத்திற்கு எதிரான போரின்' ஒரு பகுதியாக ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்காவின் சட்டவிரோத ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து, 2006 இல் ஜூலியன் அசான்ஞ்ச் விக்கிலீக்ஸை நிறுவினார். விக்கிலீக்ஸ், தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, தீவிரமான பத்திரிகையாளர்கள் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்ய ஒரு துணிச்சலான மற்றும் பயனுள்ள முன்முயற்சியை மேற்கொண்டிருந்தது: அரசாங்கம் மறைத்து வைத்திருக்க விரும்பும் சட்டவிரோத செயல்களை அது அம்பலப்படுத்தி வருகிறது.

2010 இல், ஜூலியன் அசான்ஞ் மற்றும் விக்கிலீக்ஸ், அமெரிக்க இராணுவம் செய்த பரந்த போர்க்குற்றங்களை வெளிப்படுத்தும் ஆவணங்களின் தொடர்களை வெளியிட்டனர். ஈராக் போர் பதிவுகள் மற்றும் ஆப்கான் போர் நாட்குறிப்பு ஆகியவை 1970 களின் பென்டகன் ஆவணங்களுக்குப் பிறகு ஏகாதிபத்திய குற்றத்தின் மிக விரிவான அம்பலப்படுத்தல்களாக இருந்தன.

ஈராக் மீதான படையெடுப்பு மற்றும் ஆக்கிரமிப்பின் ஒரு பகுதியாக, அமெரிக்கப் படைகளால் 66,081 பொதுமக்கள் கொல்லப்பட்டதை ஈராக் போர் நாட்குறிப்புகள் விவரிக்கின்றன. விக்கிலீக்ஸ் கூட்டுப் படுகொலை வீடியோவையும் வெளியிட்டது. இந்த வீடியோ, ஈராக்கில் அமெரிக்கப் படைகளால் இரண்டு ராய்ட்டர்ஸ் பத்திரிகையாளர்கள் உட்பட ஒரு டசின் நிராயுதபாணியான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதைக் காட்டுகிறது.

நவம்பர் 2010 இல், விக்கிலீக்ஸ் நூறாயிரக்கணக்கான அமெரிக்க இராஜதந்திர தகவல்களின் பகுதிகளை வெளியிடத் தொடங்கியது. ஆட்சிக் கவிழ்ப்பு சதித்திட்டங்கள், வெளிநாட்டு அரசியல்வாதிகளை அமெரிக்க இரகசிய சொத்துக்களாக வளர்ப்பது மற்றும் உலகெங்கிலும் உள்ள ஜனநாயகத்தின் மீதான பிற தாக்குதல்கள் உட்பட ஏகாதிபத்திய அரசியலின் தினசரி சட்டவிரோத செயல்களை இவை அம்பலப்படுத்தியுள்ளன.

இதற்கு பதிலடியாக, அமெரிக்க உளவுத்துறை அமைப்புகள் ஜூலியன் அசான்ஞ்ஜை அழிக்கும் தாக்குதலை தூண்டிவிட்டன. இது சுதந்திரமான ஊடகங்களை களையெடுப்பதற்கும், அமெரிக்க தேசியப் பாதுகாப்புக் கருவியில் ஊடகங்களை முழுமையாக ஒருங்கிணைப்பதற்கும் திட்டமிட்ட முயற்சியின் ஒரு பகுதியாக இருந்தது.

அரசால் ஒழுங்கமைக்கப்பட்ட கட்டமைப்பின் இலக்காக அசான்ஞ் இருந்தார். இது தொடங்கப்பட்ட வழிமுறைகள் குறிப்பாக முக்கியமானவை. அசான்ஜ் மீதான துன்புறுத்தலுக்கு பார்வையாளர்களை உருவாக்குவதற்காக, அவர்கள் அவரது நற்பெயரை முற்றிலும் கருமையாக்கினர். வெளிப்படையாக அரசால் வழங்கப்படும் ஜோடனைகளாக இருந்தாலும், பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் நம்பப்பட வேண்டும் என்று வலியுறுத்தும் வசதி படைத்த, உயர்-நடுத்தர-வகுப்பு போலி-இடதுகளின் பாலின அரசியலை அரசு கணக்கிட்டுப் பயன்படுத்தியது.

அடையாள அரசியலில் மயங்கிய நடுத்தர வர்க்க அடுக்குகளுக்கு ஒரு கடை விரிப்பாக செயல்பட்டுவரும் பிரிட்டனில் உள்ள கார்டியன் பத்திரிகையானது, இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு சட்டப்பூர்வ தன்மையை வழங்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்தது.

டிசம்பர் 2010 இல், சுவீடனை சேர்ந்த வழக்குரைஞர்கள் அசான்ஞ்சுக்கு எதிராக பாலியல் முறைகேடு தொடர்பான புனையப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஒரு வழக்கைத் தொடங்கினர். இவை அனைத்தும் பின்னர் கைவிடப்பட்டன. அசான்ஞ்சை நாடு கடத்த சுவீடன் அதிகாரிகள் மேற்கொண்ட முயற்சிகள் (அவர் அங்கிருந்து அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படலாம்) 2012 இல் லண்டனில் உள்ள ஈக்குவடார் தூதரகத்தில் அவர் தஞ்சம் புக வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டார்.

சர்வதேச சோசலிச அமைப்பு, 2012 இல் பொதுமக்கள் 'அசான்ஞ் மீதான இந்த வன்புணர்வு குற்றச்சாட்டுகளை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும்' என்று கோரியது. சோசலிச மாற்றீடு என்ற அமைப்பு, அசான்ஞ்சுக்கு எதிரான 'வன்புணர்வு பற்றிய கடுமையான குற்றச்சாட்டுகள்' 'விசாரிக்கப்பட வேண்டும்' என்று வலியுறுத்தியது.

ஜூலியன் அசான்ஞ்சுக்கு எதிரான சூனிய வேட்டையானது, ரஷ்யாவிற்கு தப்பி ஓடியதன் மூலம் அசான்ஞ்சின் தலை விதியிலிருந்து தப்பிய எட்வர்ட் ஸ்னோவ்டனையும், ஒபாமா நிர்வாகத்தால் ஏழு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்ட செல்சியா மேனிங்கையும் கைது செய்து விசாரணை நடத்தும் பழிவாங்கும் பிரச்சாரத்திற்கு இணையாக இருந்தது.

2016 ஆம் ஆண்டில், விக்கிலீக்ஸ் Podesta மின்னஞ்சல்களை வெளியிட்டது, இது பெர்னி சாண்டர்ஸுக்கு எதிராக 2016 ஆம் ஆண்டுக்கான முதன்மைத் தேர்தல்களை மோசடி செய்வதற்கும், ஹிலாரி கிளிண்டனுக்கு பயனளிப்பதற்கும் ஜனநாயகக் கட்சியின் முறையான முயற்சிகளை ஆவணப்படுத்தியது. இந்த வெளிப்பாடுகளுக்கு விடையிறுக்கும் வகையில், ஜனநாயகக் கட்சியின் தேசியக் குழுவின் தலைவரான டெபி வாசர்மேன் ஷுல்ட்ஸ் அவமானகரமான முறையில் ராஜினாமா செய்தார்.

ஆனால், ஜனநாயகக் கட்சி எதிர் தாக்குதலைத் தொடங்கியது. 2016 அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் செல்வாக்கு செலுத்துவதற்காக விக்கிலீக்ஸ் ரஷ்ய அரசாங்கத்துடன் 'கூட்டு' சேர்ந்ததாக ஜனநாயகக் கட்சி பொய்யாகக் குற்றம் சாட்டியது. 2016 இல் டொனால்ட் ட்ரம்பிடம் ஹிலாரி கிளிண்டன் தோற்ற பிறகு, ஜனநாயக கட்சி ஸ்தாபனமும் அமெரிக்க ஊடகங்களும் முடிந்தவரை, அசான்ஜ்க்கு இன்னும் மோசமான விரோதிகளாக மாறின.

அசான்ஞ்சுக்கு எதிராக பொதுக் கருத்தை விஷமாக்குவதற்கு அமெரிக்க ஊடகங்கள் மற்றும் போலி-இடதுகளின் பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட பிரச்சாரம், 2018 இல் அசான்ஞ் உளவு பார்த்ததாக ட்ரம்ப் நிர்வாகம் முறையாக குற்றம் சாட்டுவதற்கான சூழ்நிலையை உருவாக்கியது. ஏப்ரல் 2019 இல், பிரிட்டிஷ் போலீஸ் ஈக்குவடார் தூதரகத்திற்குள் நுழைந்து அசான்ஞ்சை இழுத்துச் சென்று, பெல்மார்ஷ் சிறையில் ஐந்து ஆண்டுகள் அடைத்தது.

நியூயார்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட் மற்றும் வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் ஆகியவை அசான்ஞ்சின் கைதையும், அவர் அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படுவதையும் உற்சாகத்துடன் ஆதரித்தன. ஜெஃப் பெசோஸின் வாஷிங்டன் போஸ்ட் மிகவும் வெளிப்படையாக, அசான்ஞ் 'நீண்ட காலத்திற்கு முன்பே தனிப்பட்ட பொறுப்பை ஏற்றிருக்க வேண்டும்' என்று அறிவித்தது.

“திரு. அசான்ஜ் மீது மறுக்க முடியாத குற்றம் சுமத்துவதன் மூலம் நிர்வாகம் நன்றாகத் தொடங்கியுள்ளது' என்று நியூயார்க் டைம்ஸ் அவரது கைதை பாராட்டியது. தி கார்டியன், ட்ரம்ப்பின் பிரச்சார உதவியாளர் பால் மனஃபோர்ட் உடன் அசான்ஞ் சந்திப்புகளை நடத்தியதாக, பொய்யாகவும் அபத்தமாகவும் கூறி பழிவாங்கும் அவதூறுகளின் தொகுப்பை வழிநடத்தியது.

அனைத்து முக்கிய முதலாளித்துவ பத்திரிகைகளும் அரசாங்கத்தின் உத்தரவின் பேரில் பொய்களை அச்சடித்து அசான்ஜை இழிவுபடுத்துவதற்காக நாற்றம்கண்ட சாக்கடையில் இறங்கியிருந்தன. இந்தக் கோரத்துக்கு எந்தக் கண்டனமும் இருக்கவில்லை.

அசான்ஞ்ஜின் ஆதரவாளராகவும் பாதுகாவலராகவும் தன்னைக் காட்டிக் கொண்ட ஜெர்மி கோர்பின், 2015 முதல் 2020 வரை தொழிற் கட்சித் தலைவராக இருந்த காலத்தில், பெல்மார்ஷ் சிறையில் அசான்ஞ் சிறை வைக்கப்பட்டது பற்றி முற்றிலும் அமைதியாக இருந்தார்.

அசான்ஞ் மீதான சூனிய வேட்டையில் இணைந்த அல்லது எதுவும் வாய்திறந்து பேசாத போலி-இடது அமைப்புகளைப் போலல்லாமல், ட்ரொட்ஸ்கிச இயக்கம் (உலக சோசலிச வலைத் தளம் (WSWS) மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு - ICFI) சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்திற்குள் ஆதரவைத் திரட்டும் பிரச்சாரத்தை ஆரம்பித்தது. பெரும் துன்புறுத்தலை அனுபவித்த ஒரு இயக்கமாக, நாங்கள் உடனடியாக அசான்ஞ்சுடன் ஒற்றுமையை வெளிப்படுத்தி நின்றோம். அவரைப் பாதுகாத்து நின்றதில் எங்களின் பங்களிப்பை எண்ணி நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்.

நூற்றுக்கணக்கான கட்டுரைகளில், WSWS அசான்ஞ்சுக்கு எதிரான வலதுசாரி சூனிய வேட்டையை கண்டித்துள்ளது. அசான்ஞ் மீதான துன்புறுத்தல் பற்றிய எங்கள் கட்டுரைகள் நூறாயிரக்கணக்கான முறை வாசகர்களால் வாசிக்கப்பட்டுள்ளன. WSWS மற்றும் ICFI ஆகியவை, பில்கர் போன்ற முன்னணி பத்திரிகையாளர்களை பேச்சாளர்களாக உள்ளடக்கிய பேரணிகளை நூற்றுக்கணக்கான பங்கேற்பாளர்களுடன் உலகம் முழுவதும் நடத்தியுள்ளன. 2018 ஆம் ஆண்டில், 'இணைய தணிக்கைக்கு எதிர்ப்பை ஒழுங்கமைத்தல்' என்ற இணையவழி வெபினார் கூட்டத்தை நாங்கள் நடத்தினோம். இந்தக் கூட்டத்துக்கு அசான்ஞ், ஈக்குவடார் தூதரகத்தில் இணைய அணுகல் துண்டிக்கப்படுவதற்கு சற்று முன்பு தனது வாழ்த்துக்களை அனுப்பியிருந்தார். (இந்த கட்டுரைகளின் தேர்வை இங்கே அணுகலாம்.)

அசான்ஞ் சுதந்திரமாக இருந்தாலும் கூட, ஜனநாயக உரிமைகளுக்கு எதிரான உலகளாவிய முதலாளித்துவ தாக்குதல் வேகமெடுத்து வருகிறது. ஏகாதிபத்தியத்தின் ஒவ்வொரு தந்திரோபாய பின்வாங்கலுக்கும், இன்னும் கொடூரமான எதிர் தாக்குதல் உள்ளது. அசான்ஞ்ஜை விடுவிப்பதற்கான பைடென் நிர்வாகத்தின் முடிவு, ஜனநாயகக் கோட்பாடுகளால் தூண்டப்பட்டது என்றோ அல்லது ஜனநாயக உரிமைகளுக்கான ஆபத்து கடந்துவிட்டது என்றோ எந்தப் பிரமையும் இருக்கக்கூடாது. உண்மை என்னவென்றால், இந்த நிலைமைகள் இருக்கும் வரை, அசான்ஞ் ஒருபோதும் ஆபத்திலிருந்து வெளியேற மாட்டார்.

உண்மையில், பொது நலன் கருதி உண்மைத் தகவல்களை வெளியிட்டதுக்காக, உளவுச் சட்டத்தின் மீறல்களை ஒப்புக்கொள்ளும்படி ஒரு பத்திரிகையாளரை மோசமாக சித்திரவதை செய்ததன் மூலம், பைடென் நிர்வாகம் பத்திரிகை சுதந்திரத்தின் மீதான தாக்குதலுக்கு ஒரு ஆபத்தான புதிய முன்னுதாரணத்தை அமைத்துள்ளது.

அசான்ஜின் துன்புறுத்தலுக்குப் பின்னால் உள்ள அடிப்படை நிலைமைகள் (உலகளாவிய போர் மற்றும் சமூக சமத்துவமின்மையின் தீவிர நிலைகள்) நீடிப்பது மட்டுமல்லாமல் அவை மேலும் தீவிரமடைந்து வருகின்றன. 47,000க்கும் அதிகமான பாலஸ்தீனியர்களைக் கொன்ற காஸாவில் நடந்துவரும் இனப்படுகொலைக்கு அமெரிக்க மற்றும் நேட்டோ சக்திகள் ஆதரவு அளித்து வருகின்றன. உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போரை பாரிய அளவில் விரிவுபடுத்துவதற்கான திட்டங்கள் நடந்து வருகின்றன, இதில் நேட்டோ துருப்புக்களை நேரடியாக அனுப்புவதும் அடங்கும்.

உக்ரேனில், சோசலிசத்திற்கான துணிச்சலான போராளியும், போரை எதிர்த்து வருபவருமான போக்டன் சிரோடியுக், ஜெலென்ஸ்கி ஆட்சியை எதிர்த்ததற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். காஸாவில் இனப்படுகொலைக்கு எதிரான எதிர்ப்பைக் குற்றமாக்குவதற்கான பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ள பைடென் நிர்வாகம், அமைதியான போராட்ட எதிர்ப்பாளர்களை, ஆயிரக்கணக்கணக்கில் வன்முறையாக கைது செய்துள்ளது.

அசான்ஞ்சை விடுதலை செய்வதற்கான அதன் பிரச்சாரத்தின் போது, ​​WSWS ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டம் என்பது, தொழிலாள வர்க்கத்தில் வேரூன்றி இருக்க வேண்டும் என்றும் சோசலிசத்திற்கான மற்றும் ஏகாதிபத்திய போருக்கு எதிரான போராட்டத்துடன் இணைக்கப்பட வேண்டும் என்றும் விளக்கியது. இந்த மையப் பாடம், அதிகரித்துவரும் உலகளாவிய ஏகாதிபத்தியப் போரின் மத்தியில் பெருகிய முறையில் முக்கியத்துவம் பெறுகிறது: ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டம் என்பது முதலாளித்துவ அமைப்புக்கு எதிரான போராட்டத்தில் இருந்து பிரிக்க முடியாததாகும்.

Loading