மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
குடியரசுக் கட்சியின் தேசிய மாநாடு விஸ்கான்சினில் உள்ள மில்வாக்கியில், முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீதான படுகொலை முயற்சி மேற்கொள்ளப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு திங்கள்கிழமை தொடங்கியது. இந்த நிகழ்வானது, அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் பிற்போக்குத்தனம் மற்றும் பின்தங்கிய அனைத்தையும் உள்ளடக்கிய பாசிச அரசியலின் களியாட்டமாக இருந்தது.
இற்றைக்கு சரியாக 60 ஆண்டுகளுக்கு முன்பு, ஜூலை 1964 இல், குடியரசுக் கட்சியானது, செனட்டர் பேரி கோல்ட்வாட்டரை நியமித்தது. மாநாட்டுத் தளத்தில் இடம்பெற்ற வலதுசாரிகளின் வெறியாட்டத்தால், அவ்விடம் “பசு அரண்மனை” என்று பொருத்தமாக பெயரிடப்பட்டது. இதன் பின்பு, நாட்டின் பெரும்பகுதியில் வெடித்த கிளர்ச்சி, நவம்பர் ஜனாதிபதி தேர்தலில் கோல்ட்வாட்டரின் பெரும் தோல்விக்கு வழிவகுத்தது. ஆனால், ட்ரம்பை தனது முதல் நாளில் முறையாகப் பரிந்துரைத்த மில்வாக்கி மாநாட்டு பன்றிக் தொழுவத்திலிருந்து வெளிவருவதை ஒப்பிடும்போது, பசு அரண்மனையின் நடவடிக்கைகள் அரசியல் நேர்மைக்கு ஒரு முன்மாதிரியாக இருந்தது.
இந்த மாநாட்டின் தொடக்கத்தில், திங்கள்கிழமை பிற்பகல் டிரம்ப் தனது துணை ஜனாதிபதி தேர்தலில் தனக்குத் துணையாக போட்டியிடும் ஓஹியோ செனட்டர் ஜே.டி.வான்ஸைத் தேர்ந்தெடுத்ததாக அறிவித்தார்.
வான்ஸ் பாசிச போலி-ஜனரஞ்சகவாதத்தையும் சிலிக்கான் பள்ளத்தாக்கின் தன்னலக்குழுக்களின் தொடர்புகளையும் தன்னகத்தே கொண்டிருக்கிறார். அவர் முன்னாள் பேபால் தலைமை நிர்வாக அதிகாரி பீட்டர் தியேல் நிறுவிய சிலிக்கான் பள்ளத்தாக்கு நிறுவனமான மித்ரில் மூலதன மேலாண்மையில், ஒரு துணிகர முதலீட்டாளராக மில்லியன் கணக்கில் சம்பாதிக்கிறார்.
வான்ஸ், ஹில்பில்லி எலிஜியின் (Hillbilly Elegy) ஆசிரியர் ஆவர். ஹில்பில்லி எலிஜி ஆனது, கந்தலாண்டியாக இருந்த ஒருவர் தன்னிச்சையாக பணக்காரராக ஆகியவரின் சுயசரிதை ஆகும். அது முதலாளித்துவ நெறிமுறைகளின் தனித்துவம் மற்றும் சுதந்திர நிறுவனத்தைக் கொண்டாடுகிறது. அதில், வறுமை என்பது “அரசாங்கங்களோ, பெருநிறுவனங்களோ அல்லது வேறு எவராலும் உருவாக்கப்படாத ஒரு நிலை” என்ற அறிவிப்போடு அவரது சமூகத் தத்துவம் தொகுக்கப்பட்டுள்ளது. அதன்படி வறுமை என்பது ஏழைகளின் தவறு.
அரசியல் ரீதியாக, 2016 இல் ட்ரம்பின் குடியரசுக் கட்சி விமர்சகராக இருந்த வான்ஸ் (டிரம்பை சாத்தியமான “அமெரிக்கன் ஹிட்லர்” என்று சரியாகக் குறிப்பிட்டார்) இப்போது, ஒரு குட்டி நாய் போன்று ட்ரம்பின் பாதுகாவலராக மாறியுள்ளார். அவர் ட்ரம்பின் ஜனவரி 6, 2021 பாசிச சதியை ஆதரித்தார் மற்றும் கிளர்ச்சியின் ஒரு பகுதியாக கைது செய்யப்பட்ட பாசிஸ்டுகளுக்கு நிதி திரட்டினார். கடந்த வார இறுதியில் பென்சில்வேனியாவில் நடந்த பேரணியில், ட்ரம்ப் மீதான படுகொலை முயற்சிக்கு பதிலளித்து, ஜனநாயகக் கட்சியை பொறுப்பாக அறிவித்தவர்களில் வான்சும் ஒருவர்.
முன்னாள் டிரம்ப்பின் ஆலோசகர் ஸ்டீவன் பானன், டர்னிங் பாயின்ட் யுஎஸ்ஏ (Turning Point USA) நிறுவனர் சார்லி கிர்க் மற்றும் முன்னாள் ஃபாக்ஸ் நியூஸ் நிகழ்ச்சி தொகுப்பாளர் டக்கர் கார்ல்சன் உட்பட குடியரசுக் கட்சியில் உள்ள முக்கிய பாசிஸ்டுகளால் வான்ஸ் துணை ஜனாதிபதி வேட்பாளராக பெரிதும் உயர்த்தப்பட்டார்.
வான்ஸின் தேர்வு குடியரசுக் கட்சி மாநாட்டின் இலட்சணத்தைக் காட்டுகிறது. குடியேற்றவாசிகள் மற்றும் “உலகளாவியவாதிகளுக்கு” (யூதர்களுக்கான குறியீட்டு வார்த்தை) எதிராக ஒரு கொச்சைப்படுத்திய உரையைத் தொடங்கிய பிரதிநிதி மார்ஜோரி டெய்லர் கிரீனுக்கு மாநாட்டில் ஒரு முக்கிய இடம் ஒதுக்கப்பட்டது. மாநாட்டில் ஒரு முக்கிய உரையை கிர்க் வழங்கினார். இவர், ஒரு கிறிஸ்தவ அடிப்படைவாதி, யூத எதிர்ப்பு, இனவெறி மற்றும் பாசிச “பெரிய மாற்றுக் கோட்பாட்டின்” ஆதரவாளர் ஆவார். அவர் தேவாலயத்தையும் அரசையும் பிரிப்பது என்பது அரசியலமைப்பில் இல்லாத ஒரு “புனைவு” என்று அழைத்தார்.
ஜனநாயகக் கட்சியின் கொள்கைகள் மீதான மக்களின் வெறுப்பை சுரண்டும் முயற்சியில், பாசிஸ்டுகள் மற்றும் வாய்வீச்சாளர்களின் மாநாடு, தங்களை “உழைக்கும் மக்களின்” பாதுகாவலர்களாகக் காட்டிக்கொண்டது. மாநாட்டின் முதல் நாள் தோன்றிய ட்ரம்ப், காயம்பட்ட காதில் கட்டு, கிறிஸ்தவ கடவுளின் மகிமை மற்றும் “தெய்வீக ஏற்பாட்டின்” உருவகமாக முன்வைக்கப்பட்டார்.
இந்த மாநாடு மற்றும் வான்ஸின் தேர்வு என்பது, படுகொலை முயற்சியைத் தொடர்ந்து ஜனநாயகக் கட்சியினரின் “ஐக்கியத்துக்கான” அழைப்புகள் மற்றும் வேண்டுகோள்களுக்கு ட்ரம்பின் பதிலடியாகும். ஜனநாயகக் கட்சியினரின் கோழைத்தனத்திற்கு குடியரசுக் கட்சியினர் எப்போதும் போல, பல்லை உடைத்து பதிலடி கொடுக்கிறார்கள்.
ஜனநாயகக் கட்சியினரின் ஐக்கியத்துக்கான முயற்சிகள் திங்களன்று தொடர்ந்தன. பொலிட்டிகோவின் படி, துணைத் ஜனாதிபதி கமலா ஹாரிஸ், வான்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு தனிப்பட்ட முறையில் வாழ்த்து தெரிவிப்பதற்காக அவரை அழைத்தார். மேலும் “சிபிஎஸ் நியூஸ் முன்மொழிந்த துணை ஜனாதிபதிக்கான விவாதத்தில் இருவரும் சந்திக்க முடியும் என்ற நம்பிக்கையை” ஹாரிஸ் வெளிப்படுத்தினார்.
ட்ரம்ப் மீதான படுகொலை முயற்சிக்கு ஜனநாயகக் கட்சியினரின் உடனடி பதில், அவர்களின் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தை நிறுத்துவதாகும். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு “நமது அரசியலில் சூட்டைக் குறைக்குமாறு” அவர் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, டிரம்பைத் தாக்கும் விளம்பரங்களை பைடென் காலவரையின்றி நிறுத்தி வைத்துள்ளார்.
பைடெனின் பிரச்சாரமானது, மரணத்துக்கு காத்திருக்கும் ஒருவரின் தன்மையைப் பெற்றுள்ள நிலையில், ஜனநாயகக் கட்சியை ஆதரிக்கும் அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் பிரிவுகள், இரண்டாவது ட்ரம்ப் ஜனாதிபதி பதவிக்கான சாத்தியக்கூறுடன் சமரசம் செய்து கொள்கின்றன. திங்களன்று வாஷிங்டன் போஸ்ட்டில் வெளியான தலையங்கம், “வெப்பத்தை குறையுங்கள், வெளிச்சத்தை பாய்ச்சுங்கள்” என்ற தலைப்பில் இந்த சமிக்ஞை கொடுக்கப்பட்டது.
படுகொலை முயற்சிக்கு ட்ரம்பின் சொந்த பதிலைப் பாராட்டுவதற்கு போஸ்ட் செல்கிறது. “மிக முக்கியமாக, ஜனாதிபதி பைடனுடனான ஒரு அசாதாரண உரையாடலின் போது, அவர் [ட்ரம்ப்] தேசிய ஐக்கியத்துக்கு அழைப்பு விடுத்தார். இந்த அதிர்ச்சிகரமான சம்பவத்திற்குப் பிறகு, அவரது கூட்டாளிகள் மற்றும் ஆலோசகர்களில் சிலர் வருந்தத்தக்க வகையில் எதிர் தூண்டுதலில் ஈடுபட்டிருந்தாலும் கூட, திரு டிரம்பின் வார்த்தைகள் எரியூட்டுவதுக்கு பதிலாக தீவிரமடைகின்றன” என்று போஸ்ட் குறிப்பிட்டது.
“தனிப்பட்ட இறப்புடன் மற்றும் தேசிய பேரிடர் கொண்ட இந்த மோதலானது, நாட்டின் அரசியல் காய்ச்சலைத் தணிக்கவும், ஒரு புதிய திசையை அமைக்கவும் திரு. டிரம்பிற்கு ஒரு பொன்னான வாய்ப்பு” என்று போஸ்ட் பின்னர் அறிவித்தது.
இந்த விருப்பமான சிந்தனையை போஸ்ட் உண்மையிலேயே நம்பினால், அது மாயையாகும். ஹிட்லர் பல படுகொலை முயற்சிகளில் இருந்து உயிர் தப்பினார். ஆனால், இந்த அனுபவங்கள் மனிதாபிமான உணர்வுகளை தூண்டியது என்பதற்கு எந்த ஆதாரமும் கிடையாது.
இருப்பினும், டிரம்புடன் “ஐக்கியத்தை” உருவாக்குவதில் ஜனநாயகக் கட்சியினரின் முக்கிய அக்கறை, அவரது பாசிச அரசியல் அல்ல, மாறாக, அவரது வெளியுறவுக் கொள்கையாகும். குறிப்பாக, உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போராகும். திரைக்குப் பின்னால், ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சித் தலைவர்களுக்கிடையில் ஜனாதிபதி மாற்றம் ஏற்பட்டால், போரின் விரிவாக்கம் தொடர்வதை உறுதிசெய்வது குறித்து தொடர்ந்து விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
குறிப்பிடத்தக்க வகையில், நேட்டோ சக்திகளின் கைத்தேங்காயாக இருக்கும் உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி, இந்த வார இறுதியில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில், “டொனால்ட் டிரம்ப் ஜனாதிபதியானால், நாங்கள் ஒன்றாக வேலை செய்வோம் என்று நான் நினைக்கிறேன், ஆகவே அதுபற்றி எனக்கு கவலையில்லை” என்று கூறினார்.
டிரம்ப் ஒரு பிறழ்வு அல்ல. 2016ல், ஜனாதிபதி பதவிக்கு டிரம்ப் முதன்முதலாக உயர்ந்த நேரத்தில், உலக சோசலிச வலைத் தளம் குறிப்பிட்டது போல், அவர் அமெரிக்க ஜனநாயகத்தின் ஈடன் தோட்டத்தில் (ஆதாம் ஏவாள் தோட்டம்) ஊடுருவும் நபர் அல்ல. பாசிசம் மற்றும் சர்வாதிகாரத்தை நோக்கிய ஆளும் வர்க்கத்தின் திருப்பம், தீவிரமடைந்து வரும் உலகப் போரின் அரசியல் வெளிப்பாடாகவும், சமூக சமத்துவமின்மையின் தீவிர வளர்ச்சியாகவும் உள்ளது.
2024 தேர்தல் என்பது, காஸாவில் இடம்பெற்றுவரும் இனப்படுகொலை மற்றும் ரஷ்யாவிற்கு எதிரான போரை அணுவாயுத மோதலாக விரிவாக்கிவரும் ஜனநாயகக் கட்சிக்கும், அமெரிக்க பாசிசத்தின் ஒரு புதிய முத்திரையை உயிர்த்தெழுப்புகின்ற குடியரசுக் கட்சிக்கும் இடையேயான போட்டியாகும். மேலும், “ஐக்கியத்துக்கான” அழைப்புகள் தெளிவுபடுத்துவது போல, இரு கட்சிகளுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் முற்றிலும் தந்திரோபாய தன்மை கொண்டவை. இவை முற்றிலும் அழுகி நாற்றம்கண்ட முதலாளித்துவ ஆளும் உயரடுக்கின் நலன்களின் வெவ்வேறு வெளிப்பாடுகள் ஆகும்.
அமெரிக்காவிலும் உலகெங்கிலும் உள்ள ஜனநாயகத்தின் தலைவிதி, பெருநிறுவன மற்றும் நிதிய தன்னலக்குழு மற்றும் முதலாளித்துவ இலாப அமைப்பு முறைக்கு எதிரான தொழிலாள வர்க்க இயக்கத்தின் வளர்ச்சியுடன் முற்றிலும் இணைக்கப்பட்டுள்ளது.