முன்னோக்கு

டிரம்ப் பாசிச வெறித்தனத்தை வெளிப்படுத்தி குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டை முடித்து வைத்தார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரும், முன்னாள் அதிபருமான டொனால்ட் டிரம்ப், குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டின் இறுதி நாளில் உரையாற்றுகிறார். Thursday, July 18, 2024, in Milwaukee [AP Photo/Nam Y. Huh]

அரசியல் சீரழிவின் நிகரற்ற காட்சியாக இருந்த குடியரசுக் கட்சியின் தேசிய மாநாடு வியாழன் இரவு அக்கட்சியின் வேட்பாளரான முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் உரையுடன் முடிவடைந்தது. இந்த மாநாடு, குடியரசுக் கட்சி ஒரு பாசிச அரசியல் அமைப்பாக மாறியதைக் குறித்தது.

கடந்த சனிக்கிழமையன்று நடந்த படுகொலை முயற்சியை அடுத்து, டிரம்ப் தனது தொனியை மாற்றி மேலும் ஒருங்கிணைக்கும் செய்தியை ஏற்றுக்கொள்வார் என்று குடியரசுக் கட்சித் தலைவர்களிடமிருந்து பரிந்துரைகள் இருந்தன. அவர் உரையாற்ற ஆரம்பித்ததும், முன்னாள் ஜனாதிபதி, ஜூலை 13 நிகழ்வுகளை 15 நிமிடங்களுக்கு ஒரு பாவமான மற்றும் அடக்கமான தொனியில் மறுபரிசீலனை செய்தார். அந்த தாக்குதலின் போது தான் கடவுளால் பாதுகாக்கப்பட்டதை அறிந்திருந்ததால் தான் அமைதியாக இருந்ததாகக் கூறினார்.

டிரம்ப் 'ஐக்கியம்' தேவை என்று திரும்பத் திரும்பப் பேசினார். ஆனால், அவர் கோடிட்டுக் காட்டிய பாசிச நிகழ்ச்சி நிரலுக்குப் பின்னால் அனைவரும் ஐக்கியப்பட வேண்டும் என்பதே இதன் பொருளாகும். அவர், அழுக்குப் பொய்களின் மேல் அழுக்குப் பொய்களைக் குவித்தார். அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் 'படையெடுப்பு' என்று கூறப்படுவதைக் கண்டித்து, அமெரிக்காவில் நடக்கும் குற்றங்கள், வறுமை மற்றும் பிற சமூகத் தீமைகளுக்கு புலம்பெயர்ந்தவர்களைக் குற்றம் சாட்டினார். அவரது முதல் பதவிக்காலத்தில் மேற்கொண்ட, பெற்றோர்களிடமிருந்து குழந்தைகளைப் பிரிப்பது உட்பட, பாரிய நாடுகடத்தல்கள், தடுப்புக்காவல்கள் மற்றும் பிற கொடுமைகளை குறிப்பிட்டு கொண்டாடினார்.

இதற்கு, குடியரசுக் கட்சியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஏறக்குறைய ஒவ்வொரு முக்கிய அதிகாரியும் உட்பட 18,000 பேர் கொண்ட அங்கிருந்த கூட்டம், அடிக்கடி டிரம்ப் வாய்மொழி வழியாக கடவுளைப் பற்றி நிரம்பி வழிந்த ஒவ்வொரு குறிப்புக்கும், கைத்தட்டலுக்குப் பிறகு கைதட்டி ஆரவாரம் செய்தது.

அவரது வாக்குறுதிகளைப் பொறுத்தவரை, மிகவும் 'நேர்மறையான' அணுகுமுறையை கொண்டிருக்கிறது. டிரம்ப்  வெள்ளை மாளிகைக்குத் திரும்பியவுடன், அனைத்து போர்களும் பிற மோதல்களும் முடிவுக்குக் கொண்டு வரப்படும், எல்லைச் சுவரை கட்டி முடித்து அமெரிக்க-மெக்சிகோ எல்லை மூடப்படும், மேலும் வரலாற்றில் மிகப்பெரிய பொருளாதாரம் உருவாக்கப்படும் என்று அவர் வலியுறுத்திக் கூறினார். இந்த அதிசயம் எவ்வாறு நிறைவேறும் என்பது குறித்து, 90 நிமிடங்கள் நீடித்த ஒரு பாரிய குழப்பமான விளக்கக்காட்சியில் அவர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter

உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவர் டேவிட் நோர்த், X ட்டுவிட்டரில், 'டிரம்பின் மனக் குழப்பமான, நீண்ட சலிப்படைய வைக்கும் பேச்சு, ஹிட்லரின் வாய்வீச்சு பற்றிய ட்ரொட்ஸ்கியின் விளக்கத்தை நினைவுபடுத்துகிறது“ என்று குறிப்பிட்டார். “உணர்ச்சியற்ற வடிவமற்ற தன்மை, ஒழுக்கமான சிந்தனை இல்லாமை, அறியாமை, புறக்கணித்தல்... தேசிய சோசலிசத்தின் பிச்சைக் கிண்ணத்தில் அனைத்து வகையான அதிருப்திகளையும் ஐக்கியப்படுத்தும் வாய்ப்பை அவர்கள் ஹிட்லருக்கு வழங்கினர்“ என்று ட்ரொட்ஸ்கி குறிப்பிட்டார். (ஹிட்லரின் தேசிய சோசலிசம் என்பது நாசிசம் ஆகும்)

பெருநிறுவன ஊடகங்கள் இந்த நாற்றம்கண்ட மற்றும் பிற்போக்குத்தனமான காட்சியை முறையான மற்றும் ஆழமான அரசியல் நிகழ்வாக கடமையுடன் முன்வைத்தன. CNN வர்ணனையாளரும், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவருமான வான் ஜோன்ஸ், 'கடந்த முறை, 2008ல் ஒபாமாவின் மாநாட்டில் இது போன்ற உணர்வை அடைந்தேன். அதேபோன்று, இங்கும் ஏதோ நடக்கிறது' என்று குறிப்பிட்டார். ஜேர்மனி நியூரம்பேர்க்கில் நடந்த ஹிட்லரின் பேரணியுடன் இதனை ஒப்பிட்டிருந்தால், மிகவும் பொருத்தமாக இருந்திருக்கும்.

உண்மையில், ஜேர்மன் பாசிசத்தின் கலாச்சாரம் பற்றி ட்ரொட்ஸ்கி எழுதியது அதன் சமகால அமெரிக்க பதிப்பிற்கு மிகவும் பொருந்தும்: 'சமூகத்தின் இயல்பான வளர்ச்சியின் போக்கில், தேசிய உயிரினத்திலிருந்து கலாச்சார மலமாக அகற்றப்பட வேண்டிய அனைத்தும் இப்போது தொண்டையிலிருந்து வெளியேறுகின்றன; முதலாளித்துவ சமூகம் ஜீரணிக்கப்படாத காட்டுமிராண்டித்தனத்தை வாந்தி எடுக்கிறது. இதுதான் தேசிய சோசலிசத்தின் உடலியலாகும்'.

வோல் ஸ்ட்ரீட் மற்றும் பெருவணிக அமெரிக்காவிற்கு நீண்டகாலமாக மிகவும் வெளிப்படையான வக்கீலாக இருந்துவரும் குடியரசுக் கட்சியை, உழைக்கும் மனிதனின் புதிதாக மறுஉருவாக்கம் செய்யப்பட்ட கட்சியாக, அதன் வேலைத்திட்டத்தின் உண்மையான உள்ளடக்கத்தை மறைக்க திட்டமிட்ட முயற்சி நடந்தது. டிரம்ப் தனது துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் துணைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட செனட்டர் ஜே.டி.வான்ஸின் புதன்கிழமை ஏற்பு உரையில் உச்சக்கட்டமாக, பல பேச்சாளர்கள் தங்கள் தாழ்மையான தோற்றத்தை வலியுறுத்தினர்.

உண்மையில், ஒவ்வொரு மாநாட்டுப் பிரதிநிதிகளும் அறிந்தது போல, அவர்கள் அங்கீகரித்த மாநாட்டுத் தளம், பெரும் பணக்காரர்கள் மீது வரிக் குறைப்புகளைப் பொழியும், புதைபடிவ எரிபொருள் ஏகபோகங்களால் சுற்றுச்சூழலை நாசமாக்க மானியம் அளிக்கும் மற்றும் முதலாளித்துவ தன்னலக்குழுக்களால் ஏழைகள் மற்றும் உழைக்கும் மக்களைச் சுரண்டுவதை ஆழமாக்கும்.

டிரம்பின் கூற்றுகளுக்கு மாறாக, அவர் வெள்ளை மாளிகைக்கு திரும்பினால், அமெரிக்க முதலாளித்துவம் ஆதாமின் தோட்டத்திற்குள் நுழையப்போவது கிடையாது. படுகொலை, போர் மற்றும் நிர்வாகத்தின் வீழ்ச்சி ஆகியவற்றை கொண்டிருக்கும் மற்றொரு ஜனாதிபதித் தேர்தல் ஆண்டில், குறைந்தபட்சம் 1968ல் இருந்து அனுபவித்து வரும் பிரமாண்டமான அரசியல் நெருக்கடிக்குள் அமெரிக்கா மூழ்கிக் கொண்டிருக்கிறது.

நான்கு தசாப்தங்களில் ஜனாதிபதி அல்லது ஜனாதிபதி வேட்பாளர் மீது நடத்தப்பட்ட முதல் தாக்குதலில், டிரம்ப் மரணத்திலிருந்து தப்பிய இரண்டு நாட்களுக்குப் பிறகு குடியரசுக் கட்சியின் மாநாடு தொடங்கியது.

குடியரசுக் கட்சியின் மாநாட்டுப் பிரதிநிதிகளும், தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளும், மிகவும் நெருக்கமாகப் போட்டியிட்ட அனைத்துப் 'போர்க்கள' மாநிலங்களிலும், குறுகியதாக இருந்தாலும், டிரம்ப்  முழுவதுமாக முன்னணியில் இருப்பதைக் காட்டும் கருத்துக் கணிப்புகளில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பைடெனின் பிரச்சாரத்தின் சரிவு ஒரு குறைபாட்டைக் கொண்டுள்ளது. மாநாட்டில் கலந்துகொண்ட பேச்சாளர்கள் பலருக்கு எந்த வேட்பாளருக்கு எதிராகப் போட்டியிடுவார்கள் என்று தெரியவில்லை. 81 வயதான பைடெனின் வயது மற்றும் திறமையின்மை குறித்து மகிழ்ச்சியடைவது, ஜனநாயகக் கட்சியினர் பைடெனுக்குப் பதிலாக இளைய வேட்பாளரை நியமித்தால், 78 வயதான டிரம்ப் பாதிக்கப்படக்கூடும்.

அதே நேரத்தில், ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி ஜோ பைடெனின் மறுதேர்தல் பிரச்சாரம் கடந்த மாதம் அவரது விவாத நிகழ்ச்சியின் தோல்வியைத் தொடர்ந்து இறுதி வீழ்ச்சியில் உள்ளது.

கடந்த மாதம் இடம்பெற்ற விவாதத்தில் அவரது பேரழிவுகரமான செயல்பாட்டிற்குப் பிறகு, பைடென் பதவி விலக பிடிவாதமாக மறுத்துவிட்டார். ஆனால் ஜனநாயகக் கட்சியின் முழுத் தலைமையும் அவருக்கு எதிராக நகர்த்த முடிவு செய்துள்ளதாக இப்போது பரவலான செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. மூன்றாவது தடவையாக கோவிட் நோயினால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தலில் இருந்து, நடக்கும் நிகழ்வுகளை ஜனாதிபதியே பார்த்துக்கொண்டிருக்கிறார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கு மூன்றரை மாதங்கள் உள்ள நிலையில், முழு அமெரிக்க அரசியல் அமைப்பும் ஆழ்ந்த நெருக்கடியிலும், அரசு எந்திரத்தில் உள் பிளவுகளிலும் சிக்கியுள்ளது.

ஆளும் வர்க்கத்தினுள், இரு கட்சிகளும் வெளிநாடுகளில் போரைத் தீவிரப்படுத்துவதில் உறுதியாக இருந்தாலும், வெளியுறவுக் கொள்கை தொடர்பான பிரச்சினைகளில் பிளவுகள் மையமாக உள்ளன. ட்ரம்பின் மறுதேர்தல் ஒரு கட்டுப்பாடற்ற சமூக வெடிப்பைத் தூண்டலாம் என்ற ஆழமான கவலைகள் ஆளும் உயரடுக்கின் சில பகுதிகளுக்குள் உள்ளன.

இந்த கவலைகள் அனைத்திற்கும் அடித்தளமாக இருப்பது, அமெரிக்காவில் வர்க்க மோதல்கள் தீவிரமடைந்து அதன் புரட்சிகர தாக்கங்கள் குறித்து இரு முதலாளித்துவக் கட்சிகளின் அச்சம் ஆகும்.

தொழிலாள வர்க்கத்தின் தீர்க்கமான கேள்வி, இந்த அரசியல் நெருக்கடியில் அதன் சொந்த வேலைத்திட்டம் மற்றும் அதன் சொந்த முன்னோக்குடன் தலையிடுவதாகும். குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டின் அரசியல் பிற்போக்குத்தனத்தின் சீரழிந்த காட்சியானது, ஆளும் வர்க்கம் மற்றும் ஒட்டுமொத்த முதலாளித்துவ அமைப்பும் காட்டுமிராண்டித்தனத்திற்குள் இறங்குவதை வெளிப்படுத்திக் காட்டுகிறது.

Loading