பாலஸ்தீனத்தில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு சட்டவிரோதமானது என்று சர்வதேச நீதிமன்றம் அறிவித்துள்ளது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு சட்டவிரோதமானது என்று வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்த சர்வதேச நீதிமன்றம் (ICJ), அதை அனுமதிப்பதை நிறுத்துமாறு அனைத்து நாடுகளுக்கும் உத்தரவிட்டது, இது இஸ்ரேலிய அரசாங்கம் மற்றும் அதன் ஏகாதிபத்திய ஆதரவாளர்கள் மீதான ஒரு பேரழிவுகரமான கண்டனமாகும்.

தலைமை நீதிபதி நவாஃப் சலாம் ஜூலை 19, 2024 வெள்ளிக்கிழமை, நெதர்லாந்தின் ஹேக்கில் உள்ள சர்வதேச நீதிமன்றம் அல்லது உலக நீதிமன்றத்தில் தீர்ப்பைப் படிக்கிறார். [AP Photo/Phil Nijhuis]

“1967 முதல் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனிய பகுதிகள்” மீது 56 ஆண்டுகால இஸ்ரேலின் மேலாதிக்கம் “சட்டவிரோதமானது” என்று நீதிமன்றம் திட்டவட்டமாக தீர்ப்பளித்தது. ஆக்கிரமிக்கப்பட்ட பிராந்தியங்களில் மேற்குக் கரை, கிழக்கு ஜெருசலேம் மற்றும் காஸா ஆகியவை அடங்கும். அங்குள்ள மக்கள் இஸ்ரேலால் மேற்கொள்ளப்பட்டுவரும் இனப்படுகொலையில் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர்.

காஸா மக்களுக்கு எதிரான இஸ்ரேலின் போரின் குற்றங்களுக்கு அப்பால், இனப்படுகொலையை நடத்திவரும் ஒட்டுமொத்த கட்டமைப்பே சட்டவிரோதமானது என்றும், ஏகாதிபத்திய சக்திகள் அதை செயல்படுத்துவதும் சட்டவிரோதமானது என்றும் நீதிமன்றம் அதன் பரந்த தீர்ப்பில் கண்டறிந்துள்ளது.

“ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனிய பிராந்தியத்தில் இஸ்ரேலின் சட்டவிரோத இருப்பை முடிவுக்குக் கொண்டுவர தேவையான வழிமுறைகளை நடைமுறைப்படுத்த அனைத்து நாடுகளும் ஐக்கிய நாடுகள் சபையுடன் ஒத்துழைக்க வேண்டும்” என்று நீதிமன்றம் அறிவித்தது. சட்டவிரோத ஆக்கிரமிப்பை பராமரிக்க நாடுகள் “ஆதரிக்கவோ அல்லது உதவி செய்யவோ கூடாது” என்று அது மேலும் கூறுகிறது.

“இஸ்ரேலுக்கு தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ள உரிமை உண்டு” என்ற வாதங்களின் அடிப்படையில், காஸா மீதான இனப்படுகொலைக்கு நிதியுதவி மற்றும் ஆயுதமளிப்பதற்கான ஏகாதிபத்திய சக்திகளின் நியாயப்படுத்தல்களை மறுக்கையில், “இஸ்ரேலின் பாதுகாப்பு கவலைகள் பலவந்தமாக பிராந்தியத்தைக் கையகப்படுத்துவதைத் தடுக்கும் கோட்பாட்டின் மீது மேலோங்கி நிற்க முடியாது” என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

பாலஸ்தீன மக்களுக்கு எதிரான இஸ்ரேலின் போருக்கு அமெரிக்காவின் ஆதரவு “இரும்பு போன்றது” என்று பைடன் நிர்வாகம் டசின் கணக்கான முறை கூறியுள்ளது. காஸா இனப்படுகொலை தொடங்கியதில் இருந்து, அமெரிக்கா இஸ்ரேலுக்கு 6.5 பில்லியன் டாலர் ஆயுதங்களை வழங்கியுள்ளதுடன், இன்னும் 14 பில்லியன் டாலர் வழங்க உறுதியளித்துள்ளது. இதில் 14,000 க்கும் மேற்பட்ட 2,000 பவுண்டு குண்டுகளும் அடங்கும்.

இந்த ஆயுதங்களின் உதவியுடன், இஸ்ரேல் அக்டோபர் முதல் 186,000 அல்லது அதற்கு மேற்பட்ட காஸா மக்களைக் கொன்றிருக்கலாம் என்று தி லான்செட்டில் வெளியிடப்பட்ட ஒரு கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.

இந்த தீர்ப்பை அறிவிக்கையில், சர்வதேச நீதிமன்றத்தின் தலைவர் நவாப் சலாம் பின்வருமாறு கூறினார்,

ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனிய எல்லையை இணைப்பதன் மூலமும், நிரந்தர கட்டுப்பாட்டை வலியுறுத்துவதன் மூலமும், பாலஸ்தீனிய மக்களின் சுயநிர்ணய உரிமையை தொடர்ந்து மீறுவதன் மூலமும், இஸ்ரேல் தொடர்ந்து துஷ்பிரயோகம் செய்து, ஆக்கிரமிப்பு நாடு என்ற தனது நிலையை தக்க வைத்திருக்கிறது. இது சர்வதேச சட்டத்தின் அடிப்படைக் கொள்கைகளை மீறுவதோடு ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனிய பிராந்தியத்தில் இஸ்ரேலின் இருப்பை சட்டவிரோதமாக்குகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை இந்த தீர்ப்புக்கு விடையிறுக்கையில், இங்கிலாந்தை தளமாகக் கொண்ட தொண்டு நிறுவனமான ஆக்ஸ்ஃபோம் (Oxfam), இஸ்ரேல் “மேற்குக் கரை மற்றும் கிழக்கு ஜெருசலேமில் இனவெறி குற்றத்தை இழைத்து வருகிறது, இது மிக மோசமான சர்வதேச குற்றங்களில் ஒன்றாகும்” என்று கூறியுள்ளது.

ICJ வழக்கில் பாலஸ்தீனத்தின் வழக்கறிஞர் பிலிப் சாண்ட்ஸ் இந்த தீர்ப்புக்கு பதிலளித்தார்:

இந்த நீதிமன்றத்திலிருந்து நான் கேட்ட தெளிவான மற்றும் தொலைநோக்கு முடிவு இதுதான். அதன் சட்டபூர்வ விளைவுகள் ஐயத்திற்கு இடமின்றி உள்ளன, அதன் அரசியல் விளைவுகள் கணிசமானவை. […] பல நடைமுறை விளைவுகளுக்கு மத்தியில், ஜெருசலேமில் உள்ள அமெரிக்க மற்றும் பிற தூதரகங்கள் சட்டவிரோதமானவை மற்றும் சர்வதேச சட்டம் மதிக்கப்படுவதற்கு அவை அகற்றப்பட வேண்டும் என்பதை நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

இஸ்ரேல் கிழக்கு ஜெருசலேமை முழுவதுமாக இணைத்து ஜெருசலேமை தனது தலைநகராக அறிவித்தது. சட்டவிரோத ஆக்கிரமிப்பை முழுமையாக ஏற்றுக்கொண்ட அன்றைய டிரம்ப் நிர்வாகம், அமெரிக்க தூதரகத்தை ஜெருசலேமுக்கு மாற்றியது, இந்த நடவடிக்கையை பைடென் நிர்வாகம் ஆதரித்தது.

அல் ஜசீராவுக்கு அளித்த பேட்டியில், சர்வதேச சட்ட நிபுணர் வில்லியம் ஷபாஸ் கூறினார்: “[ஆலோசனை தீர்ப்பு] இஸ்ரேலுக்கு எதிராக மட்டும் இயக்கப்படவில்லை. இது இஸ்ரேலின் நண்பர்களுக்கு எதிராக இயக்கப்படுகிறது மற்றும் குடியேற்றக் கொள்கை, வன்முறை நடவடிக்கைகள் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட பிராந்தியங்களில் தொடர்ந்த துன்புறுத்தல் ஆகியவற்றிற்கு அவர்கள் எந்த வகையிலும் பங்களிக்க முடியாது என்று அவர்களிடம் கூறுகிறது.”

இந்த தீர்ப்புக்கு பதிலளித்த ஒரு அறிக்கையில், சர்வதேச மன்னிப்புச் சபை பின்வருமாறு கூறியது: “சர்வதேச நீதிமன்றம் அதன் கருத்தை வழங்கியுள்ளது, முடிவு தெளிவாகவும் சந்தேகத்திற்கு இடமின்றியும் உள்ளது: பாலஸ்தீனிய பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமித்திருப்பதும் இணைப்பதும் சட்டவிரோதமானது, மேலும் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக பாகுபாடு காட்டும் அதன் சட்டங்களும் கொள்கைகளும் இனப்பாகுபாடு மற்றும் இனவெறி மீதான தடையை மீறுகின்றன.”

இஸ்ரேலிய அதிகாரிகள் ICJ ஐ கண்டனம் செய்தும், அந்த முடிவின் உள்ளடக்கத்தையே மீளஉறுதிப்படுத்தியும் பதிலிறுத்தனர். அதாவது இஸ்ரேல் பாலஸ்தீனிய பிராந்தியங்கள் அனைத்தையும் மேலாதிக்கம் செய்யவும் இணைத்துக் கொள்ளவும் முயன்று வருகிறது.

“நீதிமன்றத்தின் தார்மீக போதனையை நாங்கள் ஏற்க மாட்டோம்” என்று இஸ்ரேலிய தேசிய பாதுகாப்பு மந்திரி இட்டாமர் பென்-க்விர் கடுமையான தொனியில் கூறினார்.

இதுகுறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்:

யூத மக்கள் தங்கள் சொந்த தேசத்தில் வெற்றி பெறுபவர்கள் அல்ல - நமது நித்திய தலைநகரான ஜெருசலேமிலோ அல்லது யூதேயா மற்றும் சமாரியாவிலுள்ள நமது மூதாதையர்களின் நிலத்திலோ இல்லை. ஹேக்கின் எந்தவொரு தவறான முடிவும் இந்த வரலாற்று உண்மையை சிதைக்காது, மேலும் எங்கள் தாயகத்தின் அனைத்து பிராந்தியங்களிலும் இஸ்ரேலிய குடியேற்றங்களின் சட்டபூர்வத்தன்மையை சவால் செய்ய முடியாது.

ICJ என்பது ஐக்கிய நாடுகள் சபையின் மிக உயர்ந்த சட்ட அமைப்பாகும். காஸா மீதான இஸ்ரேலிய ஆக்கிரமிப்பின் சட்டபூர்வத்தன்மை குறித்து தீர்ப்பளிக்க ஐக்கிய நாடுகள் பொதுச் சபை 2022 இல் விடுத்த வேண்டுகோளுக்கு பதிலளிக்கும் வகையில் வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலிருந்து வேறுபட்டது, ஏற்கனவே அதன் தலைமை வழக்கறிஞர் இஸ்ரேலை இனப்படுகொலை செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.

வெள்ளிக்கிழமை வெளிவந்த தீர்ப்பு, இஸ்ரேலிய அரசாங்கம் மற்றும் அதன் ஏகாதிபத்திய ஆதரவாளர்கள் மீதான பேரழிவு தரும் சட்டபூர்வ குற்றச்சாட்டாக இருந்தாலும், உண்மை என்னவென்றால், பல நீதிமன்ற தீர்ப்புகள் மற்றும் ஐ.நா. தீர்மானங்களைப் போலவே, இதுவும் நடைமுறை முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கவில்லை.

அமெரிக்க காங்கிரசில் ஒரு கூட்டு உரையை வழங்க நெதன்யாகு ஜூலை 24 அன்று வாஷிங்டனுக்கு விஜயம் செய்வதற்கு முன்னதாக இந்த தீர்ப்பு வந்துள்ளது, அதில் ஒரு போர்க்குற்றவாளியான பிரதம மந்திரி அவரது ஏகாதிபத்திய எஜமானர்களுக்கு ஒரு முன்னேற்ற அறிக்கையை வழங்குவார். அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய சக்திகள், காஸாவில் இனப்படுகொலையை ஆதரிக்க முற்றிலும் தீர்மானகரமாக உள்ளன. இது, உலகில் நவகாலனித்துவ மேலாதிக்கத்திற்கான அவற்றின் விருப்பத்தை மறுஉறுதிப்படுத்த சேவையாற்றுகிறது.

காஸாவில் இனப்படுகொலையை எதிர்த்து முடிவுக்குக் கொண்டுவரும் பணி தொழிலாள வர்க்கத்தின் மீதே தங்கியுள்ளது. ஏகாதிபத்திய போர் மற்றும் காட்டுமிராண்டித்தனத்திற்கு எதிராக, சோசலிசத்திற்கான போராட்டத்தில் ஒரு தீர்க்கமான கூறாக, உலகெங்கிலும் இருந்து தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் ஒரு சர்வதேச இயக்கத்தைக் கட்டியெழுப்புவதன் மூலம் மட்டுமே இது நிறைவேற்றப்பட முடியும்.

வாஷிங்டனில் நெத்தன்யாகு உரையாற்றும் நாளில் சோசலிச சமத்துவக் கட்சி, சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பு (IYSSE) மற்றும் சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணி (IWA-RFC) ஏற்பாடு செய்துள்ள பேரணி, இந்த இயக்கத்தைக் கட்டியெழுப்புவதில் ஒரு தீர்க்கமான படியாக இருக்கும். இந்த முக்கிய நிகழ்வில் சாத்தியமான அளவுக்கு பரந்தளவில் கலந்து கொள்ளுமாறு நாங்கள் வலியுறுத்துகிறோம்.

Loading