மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
கடந்த புதன் கிழமையன்று, சோசலிச சமத்துவக் கட்சி (SEP), உலக சோசலிச வலைத்தளம், சர்வதேச இளைஞர்கள் மற்றும் சமூக சமத்துவத்திற்கான மாணவர்கள் அமைப்பு (IYSSE) மற்றும் சர்வதேச தொழிலாளர் குழுக்களின் சாமானிய தொழிலாளர் கூட்டணி (IWA-RFC) ஆகியன, காங்கிரஸின் கூட்டு அமர்வுக்கு இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆற்றுகின்ற உரையை எதிர்த்து, வாஷிங்டன் டி.சியில் ஒரு சக்திவாய்ந்த பேரணியை நடத்தியது.
SEP யின் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் நூற்றுக்கணக்கான வர்க்க உணர்வுள்ள தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்றனர். அதே நேரத்தில், ஆயிரக்கணக்கானோர் வாஷிங்டன் முழுவதும் நெதன்யாகுவின் ஆத்திரமூட்டும் வருகைக்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்தனர். பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு சட்டவிரோதமானது என்றும், காஸாவில் உண்மையான இறப்பு எண்ணிக்கை குறைந்தது 186,000 என்று லான்செட் வெளியிட்ட சில வாரங்களுக்குப் பிறகும் மற்றும் சர்வதேச நீதிமன்றம் (ஐ.சி.ஜே) தீர்ப்பு வெளிவந்த சில நாட்களுக்குப் பிறகும், காங்கிரசுக்கு நெத்தன்யாகுவின் வருகையும் உரையும் நடந்தது.
SEP யின் பேரணி, காங்கிரஸ் முன் நெதன்யாகுவின் உரை இடம்பெற்ற நேரத்தில் நிகழ்ந்தது. அங்கு இந்த பாசிச போர்க் குற்றவாளி இனப்படுகொலையை பாதுகாப்பதுக்கு தொண்டை கிழிய குரல் கொடுத்தார். “இது நாகரிகங்களின் மோதல் அல்ல. இது காட்டுமிராண்டித்தனத்திற்கும் நாகரிகத்திற்கும் இடையிலான மோதல். இது மரணத்தை மகிமைப்படுத்துபவர்களுக்கும் வாழ்க்கையை பரிசுத்தமாக்குபவர்களுக்கும் இடையிலான மோதலாகும்” என்று அவர் கூறினார்.
நெதன்யாகு இனப்படுகொலை எதிர்ப்பு போராட்டக்காரர்களை “தெஹ்ரானின் பயனுள்ள முட்டாள்கள்” என்று கண்டித்தார். மேலும் அவரது வருகைக்கு எதிரான போராட்டம் உட்பட, “ஈரான் அமெரிக்காவில் இஸ்ரேல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு நிதியளிக்கிறது மற்றும் ஊக்குவிக்கிறது” என்று அபத்தமாகக் கூறினார்.
உண்மை என்னவென்றால், நெதன்யாகு உலகின் மிகவும் அவமானகரமான அரசியல்வாதியாக இருக்கிறார், ஒரு போர்க்குற்றவாளியாக பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளார். 21 ஆம் நூற்றாண்டின் மிகப் பெரிய போர்க்குற்றங்களை வெட்கமின்றி செய்து வருகின்ற இஸ்ரேலிய அரசாங்கத்திற்கும் அதன் ஏகாதிபத்திய ஆதரவாளர்களுக்கும் எதிராக உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
காஸா இனப்படுகொலைக்கு எதிராக நடந்த அனைத்து ஆர்ப்பாட்டங்களுக்கிடையில், SEP யின் பேரணி தனித்துவமானது. SEP யின் ஒவ்வொரு பேச்சாளரும் ஒரு புரட்சிகர சோசலிச மூலோபாயத்தை முன்வைத்தனர். பல்வேறு போலி இடது அரசியல் போக்குகளால் அழைக்கப்பட்ட எண்ணற்ற ஆர்ப்பாட்டங்களுக்கு மாறாக, இது ஒரு ட்ரொட்ஸ்கிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்துக்காக போராடும் பேரணியாக இருந்தது.
காஸாவில் இனப்படுகொலை, உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போர் மற்றும் வளர்ந்து வரும் மூன்றாம் உலகப் போர் ஆகியவற்றை நிறுத்த ஒரு சக்திவாய்ந்த போர் எதிர்ப்பு இயக்கத்தை உருவாக்குவதற்கான ஒரு அரசியல் முன்னோக்கை SEPயின் பேரணி வழங்கியது.
இந்தப் பேரணி SEP யின் உதவி தேசிய செயலாளரான லோரன்ஸ் போர்ட்டர், அமெரிக்கா மற்றும் பிற ஏகாதிபத்திய சக்திகளின் முழு ஆதரவுடன் இஸ்ரேலிய அரசாங்கத்தால் படுகொலை செய்யப்பட்ட எண்ணற்ற பாலஸ்தீனியர்களின் நினைவை மதித்து ஒரு கணம் அமைதி வணக்கத்துடன் அறிமுக உரையைத் தொடங்கினார்.
போர்ட்டர் பின்வருமாறு கூறினார்:
உண்மையைச் சொல்ல நாங்கள் இங்கு வந்துள்ளோம். இனப்படுகொலை மற்றும் போருக்கு எதிரான போராட்டத்திற்கு தொழிலாள வர்க்கத்தின் மகத்தான வலிமை மற்றும் அதிகாரத்தை அணிதிரட்ட வேண்டும் மற்றும் ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியினரிடமிருந்து அதன் அரசியல் சுயாதீனம் தேவைப்படுகிறது.
போர்ட்டர் பின்னர் 2024 அமெரிக்க தேர்தலில் SEP இன் துணை ஜனாதிபதி வேட்பாளரான ஜெர்ரி வைட்டை அறிமுகப்படுத்தினார். டொனால்ட் டிரம்பின் கீழ், அமெரிக்க பாசிச இயக்கத்தின் அச்சுறுத்தல் வளர்ந்து வரும் அதே வேளை, போருக்கு எதிரான போராட்டமானது தொழிலாளர்கள் தங்கள் வேலைகள், ஊதியங்கள் மற்றும் வாழ்க்கைத் தரங்களை பாதுகாப்பதுக்கான போராட்டத்துடன் இணைக்க வேண்டும் என்பதை ஜெர்ரி வைட் சிறப்பாக எடுத்துக் காட்டினார்.
ஜெர்ரி வைட் பின்வருமாறு கூறினார்:
அமெரிக்க காங்கிரசில் போர்க்குற்றவாளிகள் மற்றும் பெருநிறுவன சிறிய அடுக்குகள், காஸாவின் கசாப்புக்காரனை இன்று தங்கள் இரத்தத்தை நனைத்த அறைகளுக்கு, எதிர்ப்புக்கு மத்தியில் வரவேற்கிறார்கள். சோசலிச சமத்துவக் கட்சி அமைதி, தரமான வேலைகள் மற்றும் ஜனநாயக உரிமைகளுக்காக போராடுவதற்காக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்கான ஒரு வேலைத் திட்டத்தை முன்னெடுத்து வருகிறது.
அவர் முடித்தார்:
காஸாவில் இடம்பெற்றுவரும் இனப்படுகொலைக்கு எதிரான உலகளாவிய ஆர்ப்பாட்டங்கள், தொழிலாள வர்க்கம் முன்பை விட ஐக்கியப்பட்டுள்ளன என்பதை நிரூபிக்கின்றன. இன்று போர், காலநிலை நெருக்கடி, பெருந்தொற்றுநோய், சமத்துவமின்மை அல்லது வறுமைக்கு தேசிய தீர்வுகள் கிடையாது. இவை உலக பிரச்சினைகள், இவற்றுக்கு உலக ரீதியான தீர்வுகள் தேவை.
முதலாளித்துவ வர்க்கம் லாபத்திற்காக சமூகத்தை அடிபணிய வைப்பதையும், அதன் காலாவதியான தேசிய-அரசு அமைப்பு முறையையும், மனிதகுல முன்னேற்றத்துக்காக தொழிலாள வர்க்கம் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் மற்றும் பொருளாதார, அரசியல் வாழ்க்கையை ஒரு பகுத்தறிவான, உலகளாவிய மற்றும் ஜனநாயக அடிப்படையில் மறுசீரமைக்க வேண்டும். அதுதான் சோசலிசத்திற்கான போராட்டம் ஆகும்.
ஜெர்ரி வைட்டைத் தொடர்ந்து, காஸா இனப்படுகொலை, உக்ரேனில் போர் மற்றும் புவிசார் அரசியல் குறித்து விரிவாக WSWS ல் எழுதி வரும் எழுத்தாளர் ஆண்ட்ரே டாமன், ஏகாதிபத்திய பிரச்சாரத்தை அம்பலப்படுத்தினார்.
ஏகாதிபத்தியம், முடிவில்லாமல் மீண்டும் மீண்டும் இஸ்ரேல் “தன்னை தற்காத்துக் கொள்வதற்கான உரிமையைக்” கொண்டிருக்கிறது என்று கூறி வருகிறது. அவர் மேலும் கூறுகையில்,
பலாத்காரம் மூலம் அதன் நிலத்தை கைப்பற்றும் நோக்கத்துடன், சிறையில் அடைக்கப்பட்ட ஒரு மக்கள்தொகைக்கு எதிராக “தன்னைத் தற்காத்துக் கொள்ள உரிமை இஸ்ரேலுக்கு இல்லை”. இந்த காரணத்திற்காக, சர்வதேச நீதிமன்றம் கடந்த வாரம் ஒரு தீர்ப்பில் தெளிவுபடுத்தியது போல், ‘1967 முதல் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனிய பிரதேசங்களில்’ இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு ‘சட்டவிரோதமானது.’
காஸா இனப்படுகொலை மற்றும் நாசிக்கள் மேற்கொண்ட இனப் படுகொலைகளுக்கு (Holocaust) இடையிலுள்ள சமாந்திரத்தை டாமன் பின் வருமாறு வரைந்தார்:
போலந்துக்கு எதிரான அழித்தொழிப்பு யுத்தம் தொடங்கப்படுவதற்கு முன்னர் தனது தளபதிகளுடன் உரையாற்றிய அடோல்ஃப் ஹிட்லர், ஆர்மீனியர்களை நிர்மூலமாக்கியதைப் பற்றி இப்போது யார் பேசுகிறார்கள்? என்று கேட்டார். செங்கிஸ்கானைப் பின்பற்றி, முழு மக்களுக்கும் எதிராக, இரக்கம் இல்லாமல் போரை நடத்த வேண்டும் என்று ஹிட்லர் தனது படையினருக்கு கட்டளையிட்டார்.
ஆர்மீனிய இனப்படுகொலையில் ஹிட்லர் பின்பற்றிய முன்னுதாரணத்தைப் போலவே, அமெரிக்க ஏகாதிபத்தியமும் பாலஸ்தீனியர்களை அழித்தொழிப்பதை, இரக்கமின்றி போரை நடத்துவதில் பின்பற்றப்பட வேண்டிய எடுத்துக்காட்டு என்று பார்க்கிறது. உக்ரேனியர்கள் அல்லது ரஷ்யர்கள் அல்லது சீனர்கள் அல்லது தைவானியர்களை மட்டுமல்ல, மில்லியன் கணக்கான அமெரிக்க தொழிலாளர்களை, அமெரிக்க ஏகாதிபத்தியம் புதிய உலக ஒழுங்கை உருவாக்குவதற்காக, இரத்தம் மற்றும் சிதறிய குடல்களுடன் போரில், பலி கொடுக்கத் தயாராக இருக்கிறது.
இன்று, உலகெங்கிலும் காட்டுமிராண்டித்தனத்தின் அலைகளைத் தடுக்க நாங்கள் அணிவகுத்துச் செல்கிறோம், ஒவ்வொரு ஏகாதிபத்திய தலைநகரிலிருந்தும் ஒரு நீரோடை போல பாய்வோம். இன்று, போருக்கு எதிரான போரை நடத்துகிறோம்.
2022ல் ஐக்கிய வாகனத் தொழிலாளர் சங்கத்தின் (UAW) தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சோசலிச வாகனத் தொழிலாளி வில் லெஹ்மன் அடுத்ததாகப் பேசினார். தனது உரையில், IWA-RFC இன் தலைவராக, அவர் அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் உள்ள தொழிலாளர்களிடையே போருக்கு வளர்ந்து வரும் எதிர்ப்பில் கவனம் செலுத்தினார்:
எனது ஆலையிலும், நான் பேசும் வாகனத் தொழிலாளர்களுடனும் போர் எதிர்ப்பு உணர்வு பொதுவாக இருந்து வருகிறது. போரில் கொட்டப்படும் டிரில்லியன் கணக்கான டாலர்கள், அதிக ஊதியம், வீடு, கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற அவசரத் தேவைகளைப் பூர்த்தி செய்யப் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை தொழிலாளர்கள் அறிவார்கள்.
ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் நடந்த போர்களை நாம் மறந்துவிடவில்லை. இது நாட்டின் வளங்களை வடிகட்டியது. ஒரு மில்லியனுக்கும் அதிகமான பொதுமக்களின் மரணத்திற்கு வழிவகுத்தது மற்றும் முன்னெப்போதும் இல்லாத அளவிலான கண்காணிப்பு மற்றும் நமது ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களை நியாயப்படுத்த பயன்படுத்தப்பட்டது.
லெஹ்மன் பின்னர் UAW தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் பொய்களை அம்பலப்படுத்தினார். காஸா இனப்படுகொலைக்கு எதிரானது என்று தன்னை விளம்பரப்படுத்தும் அதே நேரத்தில் UAW, பைடென்-ஹாரிஸ் நிர்வாகத்தை இறுதிவரை ஆதரித்து வருகிறது. லெஹ்மன் மேலும் கருத்து தெரிவிக்கையில்:
UAW இன் அறிக்கை சாமானிய தொழிலாளர்கள் சார்பாக அல்ல. மாறாக, எங்கள் நிலுவைத் தொகையிலிருந்து ஆறு இலக்க சம்பளத்தை எடுக்கும் தொழில் வல்லுநர்கள் மற்றும் ஒட்டுண்ணிகளின் வீங்கிய எந்திரமாக UAW செயற்பட்டு வருகிறது. சமீபத்திய ஆண்டுகளில் மட்டுமே மோசமடைந்துள்ள முறையான ஊழலின் விளைவாக, அவர்கள் பல ஆண்டுகளாக கூட்டாட்சி நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் உள்ளனர்.
காஸாவில் இடம்பெற்றுவரும் இனப்படுகொலையை எதிர்ப்பது குறித்து UAW இன் தலைவர் ஷான் ஃபைன் சில அர்த்தமற்ற அறிக்கைகளை வெளியிட்டுள்ளார். அதே நேரத்தில், அவர் பைடென் மற்றும் இப்போது ஹாரிஸுக்காக முழு தொண்டையும் கிழிய அளவிற்கு பேசி ஆதரவளித்து வருகிறார். இதற்கிடையில், இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகளுக்கு ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை உற்பத்தி செய்யும் UAW ஆலைகளில், UAW அதிகாரத்துவம் உற்பத்தியை மேற்கொண்டு வருகிறது. ஆதலால், இனப்படுகொலை, போர் மற்றும் முதலாளித்துவத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தில் ஒரு இயக்கம் கட்டப்பட வேண்டும்.
அடுத்த பேச்சாளராக. சர்வதேச இளைஞர்கள் மற்றும் சமூக சமத்துவத்திற்கான மாணவர்கள் அமைப்பின் (IYSSE) தேசியக் குழுவின் உறுப்பினரான ஆண்டி தோம்சன் வந்தார். தோம்சன் இளைஞர்கள் மீது இனப்படுகொலையின் தாக்கம் குறித்து தனது கருத்துக்களை மையமாகக் கொண்டு, “அதன் இன சுத்திகரிப்பு கொள்கையின் ஒரு பகுதியாக இஸ்ரேலிய அரசானது, பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் கலாச்சார நிறுவனங்களை குறிவைத்துள்ளது. உண்மையில், அவர்கள் ஒரு முழு கலாச்சாரத்தையும் அழிக்க முயற்சிக்கிறார்கள்” என்று குறிப்பிட்டார்.
உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போர் அதிகரித்து வருவதையும், மேலும் நூறாயிரக்கணக்கானவர்களைக் கொன்றும், மேலும் அணு ஆயுத பிரளயத்தை அச்சுறுத்திவரும் இந்தப் போரை தோம்சன் கண்டனம் செய்தார்.
போல்ஷிவிக்-லெனினிஸ்டுகளின் இளம் காவலர் அமைப்பின் தலைவரான உக்ரேனிய சோசலிசவாதி போக்டான் சிரோடியுக் கைது செய்யப்பட்டதில் அவர் கவனத்தை ஈர்த்தார், இந்த அமைப்பு IYSSE உடன் இணைந்திருக்கிறது என்று கூறிய அவர், மேலும் தெரிவிக்கையில்:
செலென்ஸ்கி அரசாங்கம் போக்டானின் கருத்துக்களுக்காகவே அவரை சிறையில் அடைத்துள்ளது. ரஷ்யர்கள், உக்ரேனியர்கள் மற்றும் அனைத்து நாட்டின் தொழிலாளர்கள் சகோதரர்கள் என்றும், அவர்களை போருக்கு எதிரான ஒரு இயக்கத்தில் ஒன்றிணைக்க வேண்டும் என்றும் அவர் நம்பிக்கை கொண்டிருந்தார். புரட்சிகர சோசலிசத்திற்கான போராளியாக இருப்பதற்காகவே போக்டன் கைது செய்யப்பட்டுள்ளார். இது, ஏகாதிபத்திய யுத்தம் மற்றும் முதலாளித்துவ அமைப்பு முறைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகும்.
குடியேற்றம் மற்றும் அமெரிக்க அரசியல் குறித்து பரவலாக எழுதிவரும் WSWS எழுத்தாளரான எரிக் லண்டன் அடுத்த பேச்சாளராக இருந்தார். “மனித உரிமைகள்” பற்றிய ஏகாதிபத்தியத்தின் மோசடியை அம்பலப்படுத்திய அவர், பின்வருமாறு சுட்டிக்காட்டினார்,
ஆளும் வர்க்கம் உள்நாட்டில் ஜனநாயகத்தை நசுக்கிவரும்போது, வெளிநாட்டில் ஜனநாயகத்தை பரப்புவதாக எவ்வாறு கூற முடியும்? தேசியவாதம், இனவெறி மற்றும் தீவிர தேசபக்தி ஆகியவற்றின் நச்சு கலவை, அரசியல் சுற்றுச்சூழல் அமைப்புக்கு விஷம் கொடுத்துள்ளது. முதலாளித்துவ ஆட்சியின் அனைத்து நிறுவனங்களும் -பெரு நிறுவன ஊடகங்கள், தொழிற்சங்க அதிகாரத்துவங்கள், உச்சநீதிமன்றம் மற்றும் இரண்டு பிரதான கட்சிகள் - ஒரு தன்னலக்குழு உயரடுக்கின் நலன்களுக்கு முற்றிலும் அடிபணிந்துள்ளன. இது அரசுக் கொள்கையில் 90 சதவீத அடித்தளத்தில் உள்ளவர்களுக்கு எந்தவொரு செல்வாக்கையும் கொண்டிருப்பதிலிருந்து விலக்குகிறது.
புலம்பெயர்ந்தோர் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது, இரு கட்சிகளினுடைய இரக்கமற்ற தாக்குதலை விவரித்த பின்னர், எரிக் லண்டன் ஒரு சோசலிச பதிலீட்டை முன்வைத்து பின்வருமாறு குறிப்பிட்டார்:
ஜனநாயகத்தின் பாதுகாப்பு மற்றும் புலம்பெயர்ந்தோரின் உரிமைகள் ஆகியன ஏகாதிபத்திய போருக்கு எதிரான போராட்டத்திலிருந்து பிரிக்க முடியாதவை.
சோசலிச சமத்துவக் கட்சி அனைத்து தடுத்து வைக்கப்பட்டுள்ள புலம்பெயர்ந்தோரின் விடுதலையையும், அனைத்து நாடுகடத்தும் நடவடிக்கைகளை நிறுத்துவதையும், நாடுகடத்தல் அச்சுறுத்தலுக்கு எதிராக புலம்பெயர்ந்த மற்றும் புலம்பெயர்ந்தோர் அல்லாத தொழிலாளர்களை ஒன்றிணைக்க அண்டை வீடுகள், பள்ளிகள் மற்றும் பணியிடங்களில் உள்ள சாமானிய குழுக்களின் வலையமைப்பை மேம்படுத்துவதற்கும் கோருகிறது. அத்தோடு, வாழ்க்கைத் தரங்கள் வீழ்ச்சியடைந்து வருவதற்கு பொறுப்பானவர்கள் புலம்பெயர்ந்தோர் என்று பாசிசவாதிகளின் தவறான வழிநடத்துதலை அம்பலப்படுத்துவதுடன், பெருநிறுவனங்களும் மற்றும் இரண்டு கட்சிகளுமே இதற்கு பொறுப்பு என்று தொழிலாளர்களுக்கு கல்வியூட்ட வேண்டும்.
எரிக் லண்டனின் உரைக்குப் பிறகு, இந்த பேரணியில் கல்துகொண்ட சோசலிச சமத்துவக் கட்சியின் தலைவரும், உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவருமான டேவிட் நோர்த் உரையாற்றினார். நியூரம்பேர்க்கில் உள்ள சர்வதேச இராணுவ தீர்ப்பாயத்திற்கு அமெரிக்காவிற்கான தலைமை ஆலோசகராக இருந்த ரொபர்ட் எச். ஜாக்சனின் தொடக்க அறிக்கையை மேற்கோள் காட்டி டேவிட் நோர்த் தனது உரையைத் தொடங்கினார். நவம்பர் 21, 1945 அன்று ஜாக்சன் வழங்கிய உரை பின்வருமாறு:
நாஜி தலைவர்களாகிய இவர்கள் ஒரு காலத்தில் உலகின் பெரும்பகுதியை ஆதிக்கம் செலுத்தி, அதில் பெரும்பகுதியை பயங்கரத்துக்குள் உள்ளாக்கினர். இந்த சக்தியை, இந்த மனிதர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை உணருவது இப்போது கடினம். ஒரு தனிநபராக, அவர்களின் தலைவிதி உலகிற்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்தது.
இந்த கைதிகள் தங்கள் உடல்கள் தூசிக்குத் திரும்பிய பின்னர் உலகில் இருக்கும் மோசமான தாக்கங்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள் என்பதில் இந்த விசாரணையின் முக்கியத்துவம் உள்ளது. அவை இன வெறுப்புகள், பயங்கரவாதம் மற்றும் வன்முறை, ஆணவம் மற்றும் அதிகாரத்தின் கொடுமை ஆகியவற்றின் வாழ்க்கை அடையாளங்கள் என்பதை நாங்கள் காண்பிப்போம். அவை மூர்க்கமான தேசியவாதங்கள் மற்றும் இராணுவவாதம், சூழ்ச்சி மற்றும் போர்களின் அடையாளங்கள், அவை ஐரோப்பாவை தலைமுறைக்கு பிறகு தலைமுறையாக மூழ்கடித்தது, அவை இளைஞர்களை நசுக்கியது, அவை வீடுகளை அழித்தது, அவை வாழ்க்கையை வறுமைக்கு தள்ளியது. அவர்கள் கருத்தரித்த தத்துவங்களுடனும், அவர்களுக்கு எந்தவொரு மென்மை என்பது அவர்களின் பெயர்களுடன் இணைக்கப்பட்டுள்ள அனைத்து தீமைகளுக்கும் ஒரு வெற்றியும் ஊக்கமும் என்று அவர்கள் வழிநடத்திய சக்திகளால் அவர்கள் தங்களை அடையாளம் கண்டுள்ளனர். நாகரிகம், சமூக சக்திகளுடன் எந்த சமரசத்தையும் வழங்க முடியாது, இது அந்த சக்திகள் இப்போது துல்லியமாக உயிர்வாழும் மனிதர்ளுடன் தெளிவற்றதாகவோ அல்லது சந்தேகத்திற்குரியதாகவோ சமாளித்தால் புதுப்பிக்கப்பட்ட வலிமையைப் பெறும்.
டேவிட் நோர்த் மேலும் தனது கருத்தை தெரிவிக்கையில்:
உண்மை என்னவென்றால், 79 ஆண்டுகளுக்கு முன்பு ஜாக்சன் கூறிய ஒவ்வொரு வார்த்தையையும் அமெரிக்காவின் தலைவர்களுக்கு எதிராக குறைவற்ற பலத்துடன், இன்று நாம் நிற்கும் இடத்திலிருந்து இன்னும் கொஞ்சம் தூரத்தில் கூடியிருக்கும் ஜேர்மனி, பிரான்ஸ், பிரிட்டனின் ஆளும் வர்க்கத்தின் தலைவர்கள் மற்றும் ஏகாதிபத்திய ஆட்சியாளர்களின் முழு கூட்டத்துக்கு எதிராகச் சொல்லலாம்.
பின்னர் அவர் சமகால போர் எதிர்ப்பு இயக்கத்திற்கும், அவர் பங்கேற்றிருந்த வியட்நாம் போருக்கு எதிரான இயக்கத்திற்கும் இடையிலுள்ள சமாந்திரத்தை வரைந்தார்.
இங்கே நாம் ஒரு அரை நூற்றாண்டு கழித்து, இன்னும் பெரிய குற்றங்களுக்கு எதிராக எதிர்ப்புத் தெரிவிக்கிறோம் என்பதிலிருந்து நாம் என்ன பாடங்களை வரைய வேண்டும்? பாடம் என்னவென்றால், வரலாற்று அறிவின் பிரச்சினை, உலகெங்கிலும் உள்ள புரட்சிகர போராட்டங்களின் அனுபவங்களிலிருந்து அரசியல் பாடங்களை எடுக்கும் திறன் ஆகியவை அப்போது நாம் எதிர்கொண்ட பெரிய பிரச்சினையாகும். ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் முக்கியத்துவம் அதுதான். மார்க்சிஸ்டுகள் முன்னோக்கு என்று அழைத்து முன்வைக்கும் முயற்சிகளை, மற்ற ஆர்ப்பாட்டங்களில் எதுவும் சொல்லப்படவில்லை
போர் எதிர்ப்பு இயக்கத்தை கட்டியெழுப்ப வழிகாட்ட வேண்டிய அடிப்படைக் கொள்கைகளை நோர்த் பின்வருமாறு வலியுறுத்தினார்:
ஒரு போர்-எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு தொழிலாள வர்க்கத்தை ஒரு சர்வதேச சக்தியாக அணிதிரட்டுவது அவசியமாகும். இதற்கு தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்தை ஸ்தாபிதம் செய்வது அவசியமாகும். அதற்கு முதலாளித்துவவாதிகளுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதோ, ஒரு அமைதியான கொள்கையை ஏற்குமாறு அவர்களுக்கு முறையிடுவதோ அதன் நோக்கமாக இருக்கவில்லை. மாறாக, தொழிலாள வர்க்கம் இந்தக் கொடூரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்பினால், அவர்கள் எதிர்காலத்தைப் பாதுகாக்க விரும்பினால், அவர்கள் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்பதை அவர்களுக்கு விளக்கும் ஒரு முன்னோக்கு அவசியப்படுகிறது.
அமெரிக்க தேர்தலில் சோசலிச சமத்துவக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோசப் கிஷோர் நடத்திய உரையுடன் இந்த பேரணி முடிவடைந்தது. காஸா இனப்படுகொலைக்கு வரலாற்று பின்னணியை மதிப்பாய்வு செய்த கிஷோர் பின்வருமாறு கூறினார்:
தற்போதைய இனப்படுகொலை என்பது ஒரு முக்கால் நூற்றாண்டுக்கு மேலான இடப்பெயர்வு, ஆக்கிரமிப்பு மற்றும் வன்முறையின் விளைவாகும். இது சியோனிசத்தின் இறுதிப் புள்ளியாகும், இது உலகப் பொருளாதாரத்தின் ஒரு சகாப்தத்தில் தீவிர தேசியவாதத்தின் சித்தாந்தமாகும். இது, பல யூதத் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் பகிர்ந்து கொண்ட சோசலிச மற்றும் சர்வதேச கருத்துக்களுக்கு எதிராக, அதன் தோற்றத்தில் இயக்கப்பட்ட ஒரு சித்தாந்தமாகும். இது ஒரு அரசின் அடிப்படையை உருவாக்கியது, அதன் அடித்தளத்திலிருந்து மத்திய கிழக்கில் ஏகாதிபத்தியத்தின் அரணாக சியோனிசம் செயல்பட்டு வருகிறது.
கிஷோர் அமெரிக்காவில் அதிகரித்து வரும் அரசியல் நெருக்கடியைப்பற்றி குறிப்பிட்டார். மேலும், பைடென் தனது ஜனாதிபதி மறுதேர்தல் பிரச்சாரத்தை முடித்த பின்னர், ஞாயிற்றுக்கிழமை ஒரு புதிய கட்டத்தை எட்டியதைப்பற்றி கிஷோர் பின்வருமாறு குறிப்பிட்டார்:
ஜனநாயகக் கட்சி வேட்பாளராக தொடர்வதிலிருந்து பைடென் ராஜினாமா செய்த நிலையில், “இனப்படுகொலை ஜோ” விலிருந்து “கொலைகாரி கமலா” வுக்கு வெளிச்சம் அனுப்பப்படுகிறது. நெத்தன்யாகுவின் வருகை குறித்த பரந்தளவிலான சீற்றம் குறித்து அக்கறை கொண்ட ஹாரிஸ், புதன்கிழமை இடம்பெற்ற காங்கிரஸின் கூட்டு அமர்வுக்கு தலைமை தாங்க வேண்டாம் என்று தேர்ந்தெடுத்தபின் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார். இருந்த போதிலும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தொடர்ச்சியான ஆதரவு, மற்றும் நெதன்யாகுவுக்கு ஹாரிசின் உத்தரவாதங்கள் ஆகியன தனிப்பட்ட முறையில் வழங்கப்படும்.
அமெரிக்க ஆளும் வர்க்கம் இந்த குற்றத்தை ஆதரிக்கிறது, ஏனெனில் இஸ்ரேல் நீண்ட காலமாக மத்திய கிழக்கில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பாலமாக பணியாற்றி வருகிறது. ஆனால், “பாலஸ்தீனிய பிரச்சினையின்” “இறுதி தீர்வை” ஒரு உலகப் போரின் அங்கமாக அவர்கள் காண்கிறார்கள்.
கிஷோர் சக்திவாய்ந்த முறையில் பேரணியை பின்வருமாறு கூறி முடித்தார்:
நாம் எதிர்கொள்ளும் சவால்களை எதிர்கொள்ள, கடந்த கால அனுபவங்களை முன்வைப்பது, சோசலிசத்தின் மார்க்சியத்தின் பெரிய மரபுகளை மீண்டும் பயன்படுத்துவது அவசியமாகும். இந்த மரபுகள் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவான ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாற்றில் பொதிந்துள்ளன. மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் எதிர்கொள்ளும் பெரிய கேள்விகளுக்கு வேறு எங்கும் பதில் இல்லை. ஏனென்றால், இது மாபெரும் போராட்டங்களின் சிறந்த அனுபவங்களை உள்ளடக்கியிருக்கிறது. முதலாளித்துவம் மனிதகுலத்தை பேரழிவை நோக்கி நகர்த்தி வருகிறது. தொழிலாள வர்க்கம் வேறு சமூக ஒழுங்குக்காக போராட வேண்டும்.
பேரணிக்குப் பிறகு, பங்கேற்பாளர்கள் போர் எதிர்ப்பு இயக்கத்தை நிர்மாணிப்பதற்கான மூலோபாயத்தை உருவாக்க ஒரு விமர்சன கலந்துரையாடலில் பங்கேற்றனர். கூட்டாக, உலக ஏகாதிபத்திய மையத்தில் சோசலிச எதிர்ப்பு போர் எதிர்ப்பு இயக்கத்தின் வளர்ச்சியில் SEP ஏற்பாடு செய்த பேரணியும் புதன்கிழமை கூட்டமும் ஒரு முக்கியமான மைல்கல்லைக் குறித்தன. வரும் நாட்களில், உலக சோசலிச வலைத்தளம் அரசியல் முக்கியத்துவம் குறித்த புதிய கருத்துகளையும் பேரணி மற்றும் கூட்டத்தின் முழு வீடியோவையும் வெளியிடும்.