இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
திங்கள் அன்று, பல்கலைக்கழக கல்விசாரா தொழிற்சங்க கூட்டணி (UNATUA) அரசாங்கத்தின் நிச்சயமற்ற ஒரு தொகை வாக்குறுதிகளை ஏற்றுக்கொண்டு தொழிலாளர்களின் எந்தவொரு கோரிக்கைகளையும் வெல்லாமல் அதன் உறுப்பினர்களால் 75 நாட்கள் நடத்தப்பட்ட ஊதிய உயர்வு வேலை நிறுத்தத்தை கைவிட்டுள்ளது. நாட்டின் 17 அரச பல்கலைக்கழகங்களில் இருந்து சுமார் 13,000 கல்விசாரா ஊழியர்கள், நீண்டகால ஊதிய முரண்பாடுகளை திருத்துவதன் ஊடாக 15 சதவீத ஊதிய உயர்வும் மாதாந்த இழப்பீட்டுக் கொடுப்பனவில் (MCA) 25 சதவீத அதிகரிப்பும் கோரி மே 2 அன்று தங்களது போராட்டத்தை தொடங்கினர்.
தொழிலாளர்களின் கோரிக்ககைகளை விக்கிரமசிங்க அரசாங்கம் வெளிப்படையாக நிராகரித்ததுடன், அவர்கள் மீது பொலிஸ் அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டதோடு, “மாணவர்களின் எதிர்காலத்தை நாசம்“ செய்வதாக தொழிலாளர்கள் மீது ஊடகங்கள் விஷமத்தனமான பிரச்சாரத்தை முன்னெடுத்தன. இவை அனைத்தையும் எதிர்கொண்டு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் உறுதிப்பாட்டுடன் ஈடுபட்டனர். இந்த நிலையில், பல்கலைக்கழக கல்விசாரா தொழிற்சங்க கூட்டணி அதிகாரத்துவம் எடுத்த தீர்மானம், அதன் உறுப்பினர்களை ஒட்டுமொத்தமாக காட்டிக்கொடுப்பது ஆகும்.
அதன் காட்டிக்கொடுப்பை நியாயப்படுத்தும் முயற்சியில், தொழிற்சங்க கூட்டணியின் துணைத் தலைவர் தம்மிக்க எஸ். பிரியந்த, வேலைநிறுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டமை “தற்காலிகமானது” என ஊடகங்களுக்கு கூறினார். கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த உடனான கலந்துரையாடலின் பின்னர், தொழிற்சங்க தலைமைத்துவமானது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் சம்பத் அமரதுங்கவுடன் ஒரு உடன்பாட்டை எட்டியுள்ளதாக அவர் கூறிக்கொண்டார்.
முன்னர் ஜனாதிபதி விக்கிரமசிங்க முன்மொழிந்தவாறு, ஒரு “நிபுணர் குழு” ஊடாக அடுத்த ஆண்டு ஜனவரிக்குள் “சரியான” ஊதியத் திருத்தத்தை செய்யவும், அந்தக் குழு எம்.சி.ஏ. அதிகரிப்பு சம்பந்தமாகவும் அதன் வேலையை “வெகு சீக்கிரம்” ஆரம்பிக்கும் எனவும் அந்த அதிகாரிகள் வாக்குறுதி வழங்கியுள்ளதாக பிரியந்த கூறினார்.
2016 இல் முதன் முறையாக பல்கலைக்கழக கல்வி சாரா தொழிற்சங்கங்கள் தமது கோரிக்கைகளை எழுப்பியதில் இருந்து முன்னர் இருந்த அரசாங்கங்கள் இதே போன்ற நிச்சயமற்ற வாக்குறுதிகளையே வழங்கின. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தொழிற்சங்க அதிகாரத்துவம் இந்தகைய வாக்குறுதிகளை “வெற்றி” என முன்வைத்து சகல நடவடிக்கைகளையும் நிறுத்தியது.
விக்கிரமசிங்க, திறைசேரியில் போதுமான வருமானம் இல்லாததால் அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்காக இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் எந்த நிதியும் ஒதுக்க முடியாது என தொடக்கத்தில் இருந்தே வலியுறுத்தியுள்ளார். “உங்களுக்கு ஊதிய அதிகரிப்பை வழங்க பெறுமதி சேர் வரியை 3 இல் இருந்த 4 சதவீதமாக நான் அதிகரிக்க வேண்டும் என விரும்புகிறீர்களா?” என அவர் கத்தினார்.
ஊதிய உயர்வுக்கான அரச ஊழியர்களின் கோரிக்கை வலுப்படுவதை எதிர்கொண்ட விக்கிரமசிங்க, தொழிலாளர்களின் கோரிக்கைகளை பரிசோதிக்க உதய நாணயக்காரா தலைமையில் ஒரு “நிபுணர் குழு” அமைக்கப்படும் என கூறினார். அரசாங்கத்தின் அப்பட்டமான சூட்சுமமான அந்தக் குழுவின் முன்மொழிவு, தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ள தொழிலாளர்கள் விடுக்கும் கோரிக்கைகளை தடம்புரளச் செய்வதற்காக தொழிற்சங்க தலைமைத்துவத்திற்கு ஒரு சாக்குப் போக்கை வழங்கியது.
75 நாள் வேலைநிறுத்தத்தின் போதான கல்விசாரா ஊழியர்களின் சம்பளத்தை குறைக்கவோ அல்லது கடன் தவணைக் கொடுப்பனவுகளை வெட்டிக்கொள்ளவோ மாட்டேன் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர் உறுதியளித்ததாக பாராட்டிய பிரியந்த, தொழிற்சங்கம் வேலைநிறுத்தத்தைக் காட்டிக் கொடுத்ததை ஒரு வெற்றியாக முன்வைத்தார். வேலைநிறுத்தம் செய்ய மற்றவர்களையும் ஊக்குவிக்கும் விடயமாக கருதி இந்த தொழிற்சங்க நடவடிக்கையை நிறுத்த ஏங்கிய அரசாங்கம், இந்த வாக்குறுதியைக் காப்பாற்றுவதாகத் தெரியவில்லை.
பல்கலைக்கழக தொழிற்சங்க அதிகாரத்துவம் சகல தொழிற்சங்க நடவடிக்கைகளையும் முடிவுக்குகொண்டு வருவதற்கு முன்னர் அதன் உறுப்பினர்களுடன் ஆலோசிக்காது, தலைவர்களின் முடிவை அறிவிக்க பல்கலைக்கழகங்களில் திடிரென கூட்டங்களுக்கு அழைப்பு விடுத்தது. ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவுகள் வருகைதந்திருந்த தொழிலாளர்களுக்கு முன்வைக்கப்பட்டன. அங்கு கலந்துறையாடலுக்கோ வாக்கெடுப்புக்கோ அனுமதி இருக்கவில்லை.
உறுப்பினர்களின் இத்தகைய உரிமைகைள் வெளிப்படையாக மீறப்பட்டதை, திங்களன்று மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் கூடப்பட்ட சுமார் 400 தொழிலாளர்கள் பங்குபற்றிய கூட்டத்தில் காணக்கூடியதாக இருந்தது. பல்கலைக்கழக கல்விசாரா தொழிற்சங்க கூட்டணியின் பங்காளியான பல்கலைக்கழ தொழிற்சங்க கூட்டணியினால் இந்தக் கூட்டம் கூட்டப்பட்டிருந்தது.
மொரட்டுவ பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டணியின் தலைவர் கயான் பீரிஸ், சம்பள உயர்வுக்கான அரச ஊழியர்களின் வேலைநிறுத்தங்களே கல்விசாரா ஊழியர்களின் போராட்டத்துக்கு குழிபறித்தது என கூறிக்கொண்டார். கல்விசார தொழிலாளர்களை ஏனைய துறையில் உள்ள அவர்களி்ன வர்க்க சகோதர சகோதரிகளுக்கு எதிராக நிறுத்தும் ஒரு மோசமான முயற்சியில் இறங்கிய பீரிஸ், “ஒரு துறையின் கோரிக்கைகள் நிறைவுசெய்யப்பட்டால் அதை ஏனைய துறைகளுக்கும் வழங்க வேண்டிவரும் என அரசாங்கம் கருதுகிறது…. இந்த நிலைமை காரணமாக நாம் முன்னேற முடியாத நிலையில் இருந்தோம்” என அறிவித்தார்.
இலங்கை தேர்தல் ஆணைக்குழு, செப்டெம்பர் அல்லது நவம்பரில் நடத்தத் திட்டமிட்டிருக்கும் ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதியை அறிவித்தால், தொழிலாளர்கள் எந்தவொரு தொழிற்சங்க நடவடிக்கையையும் மேற்கொள்ள முடியாது என பீரிஸ் பொய்யுறைத்தார்.
இந்தக் காட்டிக்கொடுப்பை நியாயப்படுத்தும் முயற்சியில், மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் மக்கள் விடுதலை முன்னணியால் (ஜே.வி.பி.) கட்டுப்படுத்தப்படும் அனைத்து பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் அசோக சந்தன, “நாம் அனைவரும் ஒன்றாக இந்த நடவடிக்கையை தொடங்கி ஒன்றாகவே முடிவுக்குக் கொண்டுவந்தமையானது ஒரு வெற்றி ஆகும்… நாம் வெறுமனவே பணத்துக்காகப் போராடவில்லை”, என அறிவித்தார்
மொரட்டுவ பல்கலைக் கழகத்தின் தொழில்நுட்ப ஊழியரும் சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) உறுப்பினருமான தேஹின் வசந்த, தொழிற்சங்க அதிகாரத்துவத்தையும் அதன் திவாலான வேலைத் திட்டத்தையும் சவால் செய்து, இந்தக் கூட்டத்தில் சுருக்கமாக உறையாற்றினார். அவர் பேசுவதை நிறுத்த முயற்சித்தும் அது பழிக்காததால், தொழிற்சங்க தலைமைத்துவத்தினர் அவரது உரை கேட்காமல் இருக்க கத்தி கூச்சலிடத் தொடங்கினர்.
“சோ.ச.க.யும் நானும், அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் கல்விசாரா ஊழியர்களின் கோரிக்கைகளை வென்றெடுப்பது சாத்தியம் இல்லை என போராட்டம் தொடங்கியதில் இருந்தே வலியுறுத்தினோம். அது இப்போது உறுதியாகி விட்டது,” எனக் கூறிய வசந்த, தீர்க்கமான போராட்டத்தை முன்னெடுத்த தனது சக தொழிலாளர்களை பாராட்டினார்.
“நீங்கள் இந்தப் போராட்டத்தில் எமக்கு முன்னால் வைக்கப்பட்டுள்ள பாரதூரமான அரசியல் பிரச்சினைகளில் ஆழமாக கவனம் செலுத்த வேண்டும். தொழிற்சங்க தலைவர்கள் விருப்பம் இன்றியே இந்த வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தனர். அவர்கள் கல்வி அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் “உறுப்பினர்களின் அழுத்தம் காராணமாகவே இந்த வேலை நிறுத்த்திற்கு அழைப்புவிடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டோம்” என ஏற்றுக்கொண்டுள்ளனர்.
“எமது ஊதியக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதும் தொழிலாள வர்க்கம் மீதான தாக்குதல்களும், விக்கிரமசிங்க அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்படும் சர்வதேச நாணய நிதிய வேலைத்திட்டத்தி்ன் ஒரு பாகம் ஆகும். தொழிலாளர்கள் இந்த அரசாங்கத்திற்கு மற்றும் அதன் சிக்கன வேலைத்திட்டத்திற்கு எதிராக அணிதிரள வேண்டும்.
“இந்தப் போராட்டத்தை தொழிற்சங்கங்களின் கீழ் நடத்த முடியாது. அத்தகைய போராட்டத்தை ஒழுங்கமைக்க, தொழிற்சங்கத் தலைமைத்துவத்தில் இருந்து பிரிந்து, சுயாதீன நடவடிக்கைக் குழுக்களை கட்டியெழுப்புவது அவசியமாகும். சோ.ச.க.யும் உலக சோசலிச வலைத் தளமும் வழங்கியுள்ள வேலைத்தி்ட்டத்தை கிரகித்துக்கொள்ளுங்கள்,” என வசந்த கூறினார்.
பல்கலைக்கழக கல்வி-சாரா ஊழியர்களின் 75 நாள் உறுதிப்பாடான வேலைநிறுத்தமானது தொழிலாளர்கள் தமது வேலைகள், ஊதியங்கள் மற்றும் சமூக நிலைமைகளை பாதுகாக்க வேண்டுமெனில், அது, விக்கிரமசிங்க அரசாங்கத்துக்கும் அது அமுல்படுத்தும் சர்வதேச நாணய நிதிய சிக்கன தாக்குதல்களுக்கும் எதிரான ஒரு அரசியல் போராட்டத்தால் மட்டுமே சாத்தியமாகும் என்பதையே மீண்டும் சுட்டிக்காட்டுகின்றது.
சர்வதேச நாணய நிதிய கட்டளைகளைத் தொடர்ந்து, கொழும்பு தற்போது வெளிநாட்டுக் கடன்களைத் திருப்ப செலுத்தவும் முதலீடுகள் மற்றும் முதலாளித்துவ முறைமையை ஊக்குவிக்கவும் தொழிலாளர்களையும் ஏழைகளையும் பிழிந்தெடுத்து அரசாங்க வருவாயை அதிகரிக்கின்றது.
இந்த சமூகத் தாக்குதல்களுக்கு எதிராகப் போராடுவதற்குப் பதிலாக, பல்கலைக்கழக கல்விசாரா தொழிற்சங்கங்கள் உட்பட சகல துறைகளினதும் தொழிற்சங்க அதிகாரத்துவங்கள், ஒரு துறைத் தொழிலாளர்களை ஏனைய துறைத் தொழிலாளர்களுக்கு எதிராக நிறுத்தியும், தனிதனியான மற்றும் சிதறிய போராட்டங்களுக்கு அழைப்புவிடுத்தும், அழுத்தம் கொடுத்து அரசாங்கத்தின் பாதையை மாற்ற முடியும் எனப் பொய்யாக கூறிக்கொண்டும், வேண்டுமென்றே தொழிலாளர்களை பிளவுபடுத்துகின்றன.
தேர்தலின் போது தொழிலாளர்கள் தமது உரிமைகளுக்காக வேலைநிறுத்தம் செய்யவோ போராடவோ முடியாது என்ற தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் கூற்றுக்கள் அப்பட்டமான பொய் ஆகும். இந்தப் புரளியானது பாராளுமன்ற எதிர்கட்சிகளான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஜே.வி.பி.யினாலும் அவற்றின் தொழிற்சங்கங்களாலுமே ஊக்குவிக்கப்பட்டுள்ளன. இந்த முதலாளித்துவ சார்பு கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு சர்வதேச நாணய நிதியத்துடன் அடிப்படை முரண்பாடுகள் எதுவும் கிடையாது. அவை தேர்ந்தெடுக்கப்படுமாயின் விக்கிரமசிங்க மற்றும அவரின் அரசாங்கத்தி்ன் அதே கொடூரத்தனத்துடன், தனது சர்வதேச நாணய நிதிய சிக்கின நடவடிக்கைகளை அமுல்படுத்தும்.
சோ.ச.க., கல்விசாரா ஊழியர்களின் போராட்டத்தை முன்கொண்டு செல்ல ஒரு மாற்றீட்டு வேலைத்திட்டத்தை முன்மொழிந்து முறையான வகையில் அவர்களின் வேலைநிறுத்தத்தில் தலையீடு செய்தது. இது உலச சோசலிச வலைத் தளத்தில் பல கட்டுரைகளை ஆங்கிலம், சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் வெளியிட்டதுடன், அதன் முன்னோக்கு தொடர்பாக கலந்துரையாடல் செய்ய. ஜூன் 14 அன்று பகிரங்க இணையவழிக் கூட்டமொன்றையும் நடத்தியது.
சோ.ச.க. உறுப்பினர் வசந்த, மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் விளக்கியது போல, பல்கலைக்கழக கல்வி-சாரா ஊழியர்கள் தமது 75 நாட்கள் நடந்த போராட்டத்தின் அரசியல் படிப்பனைகளை மறு பரிசீலனை செய்ய வேண்டும். அனைத்துக்கும் மேலாக, முதலாளித்துவ-சார்பு தொழிற்சங்க அதிகாரத்துவங்களின் கைகளில் போராட்டம் விட்டு வைக்கப்பட்டால் தொழிலாளர்களால் முன்னோக்கி செல்ல முடியாது.
தமது கோரிக்கைகள் மற்றும் வெற்றியடையவதற்கு தேவையான தொழிற்சங்க மற்றும் அரசியல் நடவடிக்கைகள் தொடர்பான ஒரு ஜனநாயக ரீதியான கலந்துறையாடலை நடத்துவது, தற்போதுள்ள தொழிற்சங்க கட்டமைப்புக்குள் சாத்தியம் இல்லை. கலந்துரையாடுவதற்கு முயற்சிக்கின்ற, அல்லது தற்போதுள்ள தொழிற்சங்க தலைமைத்துவத்தையும் அவற்றின் வேலைத்திட்டத்தையும் விமர்சிக்க முயற்சிக்கின்ற தொழிலாளர்கள், சரீர அச்சுறுத்தல் விடுப்பது உட்பட நடவடிக்கைகளால் அடக்கப்படுவர்.
தொழிற்சங்க எந்திரங்களில் இருந்து சுயாதீனமாகி, ஜனநாயக அடிப்படையில் கட்டுப்படுத்தப்படும் நடவடிக்கைக் குழுக்களை அமைப்பதன் மூலம், பிரச்சினைகளைத் தொழிலாளர்கள் தங்கள் கைகளில் எடுத்துக்கொள்ள வேண்டும், என நாம் வலியுறுத்துகின்றோம்.
அத்தகைய அமைப்புகளால், அரசாங்கம் மற்றும் அதன் அதிகரித்துவரும் சமூகத் தாக்குதல்களுக்கு எதிரான பொதுப் போராட்டத்திற்கான வழிகளை அபிவிருத்தி செய்ய, ஏனைய வேலைத் தளங்கள், பெருந்தோட்டங்கள் மற்றும் தொழிலாள வர்க்க சுற்றுச் சூழல்களில் அமைக்கப்பட்டுள்ள நடவடிக்கை குழுக்களுடன் ஒத்துழைக்க முடியும். அவை, தொழில், சம்பள வெட்டுக்கள் மற்றும் அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீதான அடக்குமுறைக்கு எதிராக, தற்போது போராட்டங்களில் இறங்கியிருக்கும் சர்வதேச வர்க்க சகோதர சகோதரிகளுடனும் உறவுகளை ஏற்படுத்திக்கொள்ள முடியும்.
விக்கிரமசிங்க ஆட்சிக்கும் அதன் சர்வதேச நாணய நிதிய சிக்கன நடவடிக்ககைளுக்கும் எதிராக, ஒரு அரசியல் போராட்டத்தை முன்னெடுக்காமல், மற்றும் சோசலிச கொள்கைகளை அமுல்படுத்தும் தொழிலாளர்-விவசாயிகளின் அரசாங்கத்திற்காகப் போராடாமல் இந்தக் கோரிக்கைகளில் எதையும் வெல்ல முடியாது.
உங்களுக்கும் ஏனைய தொழிலாளர்களுக்கும் நடவடிக்கை குழுக்களை அமைக்கவும் போராட்டத்தை முன்னோக்கி கொண்டுசெல்லவும் உதவுவதற்கு சோ.ச.க. தயாராக உள்ளது. நாம் சோ.ச.க.யை தொடர்புகொள்ளுமாறு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களுக்கு அழைப்பு விடுக்கின்றோம்.
மேலும் படிக்க
- வர்க்கப் போராட்டங்களை எதிர்வரும் தேர்தல்களுக்கு அடிபணியச் செய்யும் இலங்கை தொழிற்சங்கங்களின் முயற்சியை எதிர்த்திடு! அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கு தயார் செய்! சோசலிச கொள்கைகளுக்காகப் போராடு!
- இலங்கை பல்கலைக்கழக ஊழியர்களின் வேலைநிறுத்தம் சம்பந்தமாக சோ.ச.க./IYSSE நடத்திய கூட்டத்திற்கு உறுதியான பிதிபலிப்பு கிடைத்தது
- சிறந்த சம்பள உயர்வை வென்றெடுக்கவும் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கவும் விக்கிரமசிங்க அரசாங்கத்திற்கு எதிராக அரசியல் பொது வேலைநிறுத்தத்தை தயார் செய்வோம்!
- ஆசிரியர்களுக்கு எதிரான இலங்கை ஜனாதிபதியின் அச்சுறுத்தல்களை நடவடிக்கை குழு கண்டனம் செய்கின்றது