மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
ஐக்கிய இராச்சியம் எங்கிலுமான நகரங்களில் இந்த வாரம் வெடித்த புலம்பெயர்ந்தோருக்கு எதிரான கலகங்கள், 1930களுக்குப் பிந்தைய பிரிட்டனில் ஒரு பாசிச இயக்கத்தை அபிவிருத்தி செய்வதற்கான மிகவும் ஒருங்கிணைந்த முயற்சிகளைப் பிரதிநிதித்துவம் செய்கின்றன.
கடந்த திங்களன்று இங்கிலாந்தின் சவுத்போர்ட்டில் மூன்று சிறுவர்கள் படுகொலை செய்யப்பட்டதைப் பற்றிக் கொண்டு, டோமி ரோபின்சன் உட்பட அதிவலது வாய்வீச்சாளர்கள், அந்தக் குற்றவாளி தஞ்சம் கோரிய ஒரு முஸ்லீம் என்று பொய்யாக கூறி, மசூதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் விடுதிகள் மீது படுகொலைத் தாக்குதல்களைத் தூண்டிவிட்டனர். இந்த தாக்குதல்கள் வாரயிறுதி நாட்கள் வரையிலும் தொடர்ந்து வந்துள்ளது.
குண்டர்கள், புலம்பெயர்ந்தோரின் வீடுகள் மற்றும் கடைகளைத் தாக்கியும், ஜன்னல்களை உடைத்தும், சொத்துக்களுக்கு தீ வைத்துள்ளனர். மேலும், கறுப்பின மற்றும் சிறுபான்மை இளைஞர்களை சரீரரீதியில் தாக்கியுமுள்ளனர். இந்த வாரம், சீர்திருத்த ஐக்கிய இராஜ்ஜிய நாடாளுமன்ற உறுப்பினர்களான ரிச்சார்ட் டைஸ் மற்றும் நைஜல் ஃபாராஜ் ஆகியோரால் “அக்கறை கொண்ட பிரிட்டிஷ் குடிமக்கள்” என்று இந்த கலகக்காரர்கள் பாதுகாக்கப்பட்டுள்ளனர்.
இங்கிலாந்து கொடிகளை தமது உடல்களில் போர்த்தியிருந்த கலகக்காரர்கள், அதிவலது சின்னங்களை அணிந்திருந்ததோடு, தங்களை “தேசபக்தர்களின் இராணுவம்” என்று தம்மை விவரித்தனர். முஸ்லீம் “கற்பழிப்பாளர்கள்” என்று முத்திரை குத்தியதுடன், “எங்கள் குழந்தைகளைக் காப்பாற்ற” தஞ்சம் கோருவோரை பாரியளவில் நாடு கடத்தக் கோரினர். அவர்களின் தீவிர அடிப்படையானது, அதிதீவிர வலதுசாரி செயற்பாட்டாளர்களால் ஆனது, கொள்ளை மற்றும் நாசவேலைகளில் ஈடுபடுத்த லும்பன் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை அவர்களுக்குப் பின்னால் இழுத்துச் செல்கின்றனர்.
கடந்த சனிக்கிழமை ட்ரஃபால்கர் சதுக்கத்தில் 30,000 பேரை ஒன்றுகூட்டிய ரோபின்சன் மற்றும் அவரது ஆதரவாளர்களால் அணிதிரட்டப்பட்ட சக்திகள், காஸா இனப்படுகொலையை எதிர்த்த நூறாயிரக்கணக்கானவர்களை விட அதிகமாக உள்ளனர். வார இறுதியில், பல நகரங்களில் பாசிச-எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களிடமிருந்து புலம்பெயர்ந்த சமூகங்களை பாதுகாக்க வந்த உள்ளூர்வாசிகள் பாசிசவாதிகள் எண்ணிக்கையை விட அதிகமாக இருந்தனர். ஆனால் கலகக்காரர்கள் புலம்பெயர்ந்தவர்களைத் தாக்கி நாஜிக்களின் வணக்கம் செலுத்தும் முன்னொருபோதும் இல்லாத காட்சிகள், ஒரு மரணகதியிலான எச்சரிக்கையாக உள்ளது.
மசூதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் தங்கியுள்ள விடுதிகள் மீதான தாக்குதலில் இருந்து பாதுகாப்பது உட்பட, புலம்பெயர்ந்தோர் மற்றும் தஞ்சம் கோருவோரை பாதுகாக்க முன்வருவது தொழிலாள வர்க்கத்தின் கடமையாகும். ஆனால், இந்த கேடு விளைவிக்கும் சமூக அபிவிருத்தியின் மூலகாரணத்திற்கு எதிரான அவசியமான அரசியல் போராட்டத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட்டு இதைத் தொடர முடியாது.
இந்தக் வார கலவரங்கள் எங்கிருந்தோ வரவில்லை. பாசிசவாத மற்றும் அதிவலது போக்குகளின் வளர்ச்சி ஏகாதிபத்திய அரசியல் மற்றும் முதலாளித்துவ சீரழிவின் ஒரு செறிவான வெளிப்பாடாகும். பிரிட்டனின் சூறையாடும் ஏகாதிபத்திய போர்களை முன்னெடுத்துச் செல்வதற்கும், தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளுக்கு எதிரான போரைத் திணிப்பதற்கும், ஆளும் உயரடுக்குகள் வெடிப்பார்ந்த சமூக பதட்டங்களை வலதுசாரி, புலம்பெயர்ந்தோர்-விரோத திசையில் திசைதிருப்ப அதிதீவிர தேசியவாதம் மற்றும் வெளிநாட்டவர் எதிரான திசையில் ஊக்குவித்து வருகின்றனர்.
பிரிட்டனின் அபிவிருத்திகள் உலகளாவிய நிகழ்ச்சிப்போக்குகளைப் பிரதிபலிக்கின்றன. அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப் தலைமையில் ஒரு பாசிசவாத ஜனாதிபதி பதவிக்கான சாத்தியக்கூறு உள்ளது. பிரான்சில், மரின் லு பென்னின் தேசிய பேரணி ஒரு பிரதான அரசியல் சக்தியாக எழுந்துள்ளது. அதேவேளையில் ஜேர்மனியில் அதிவலது ஜேர்மனிக்கான மாற்றீடு (AfD) கட்சி ஆதரவைப் பெற்று வருகிறது. இத்தாலி, ஹங்கேரி மற்றும் பின்லாந்தில் அதிவலது அரசாங்கங்கள் ஆட்சி செய்கின்றன.
பல தசாப்தங்களாக வளர்க்கப்பட்ட இதுபோன்ற இயக்கங்கள், ஆளும் வர்க்கம் இராணுவவாதம், போர் மற்றும் சிக்கன நடவடிக்கைகளை நோக்கி அப்பட்டமாக திரும்பியதன் விளைபொருளாக இருக்கின்றன.
தொழிற் கட்சியின் உள்துறை செயலர் யெவெட் கூப்பர் இந்த வார கலகங்கள் “பிரிட்டனை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை” என்று அறிவித்தார். யதார்த்தத்தில், அடுத்தடுத்து வந்த தொழிற் கட்சி மற்றும் பழமைவாத அரசாங்கங்கள்தான் பிரிட்டனின் தெருக்களில் நடந்த நச்சு நிகழ்வுகளுக்கு பொறுப்பாகும்.
நவ-நாஜிக்களில் தங்கியிருக்கும் ஜெலென்ஸ்கியின் சர்வாதிகார ஆட்சியை ஆதரித்து, உக்ரேனில் நேட்டோவின் பினாமிப்-போருக்கு பில்லியன் டாலர்களை பாய்ச்சுகின்ற நிலையில், தொழிற் கட்சியானது அதிவலதுசாரிகளின் “வன்முறை மற்றும் குண்டர்தனத்தை” கண்டனம் செய்கிறது. காஸாவில் பாலஸ்தீனர்களுக்கு எதிராக இனப்படுகொலை போர் தொடுப்பதற்கான இஸ்ரேலின் பாசிசவாத அரசாங்கத்தின் “உரிமையை” ஸ்டார்மர் பாதுகாக்கிறார். அங்கு 186,000 க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர், அதில் பெரும்பான்மையானவர்கள் பெண்களும் குழந்தைகளும் ஆவர்.
“வன்முறை ஒழுங்கின்மையை சமாளிக்க” ஒரு தேசிய போலிஸ் பிரிவு உட்பட அதிவலதை எதிர்த்துப் போராடுவதற்கான சட்டம்-ஒழுங்கு நடவடிக்கைகள் குறித்த ஸ்டார்மரின் அறிவிப்பை சோசலிச சமத்துவக் கட்சி நிராகரிக்கிறது. எப்பொழுதும் போல, முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பம் உட்பட இதுபோன்ற ஒடுக்குமுறை நடவடிக்கைகளின் உண்மையான இலக்கு இடதுசாரிகள் ஆவர். இது ஏற்கனவே காலநிலை மாற்றம் குறித்த போராட்டங்களுக்கு வெறுமனே திட்டமிட்டதற்காக, எண்ணெயை நிறுத்து (Just Stop Oil) என்ற அமைப்பின் ஆர்வலர்கள் மீது விதிக்கப்பட்ட நீண்டகால சிறைத்தண்டனைகளால் சுட்டிக்காட்டப்படுகிறது .
சோசலிசத்தின் மீதான பல தசாப்த கால தாக்குதல்
சமூக துன்பங்களை சுரண்டுவதற்கான அதிவலதின் திறனானது, உத்தியோகபூர்வ “இடது” கட்சிகள் மீதும், தொழிலாள வர்க்கம் மற்றும் சோசலிசத்தின் மீதான அவற்றின் பல தசாப்த கால தாக்குதல்கள் மீதும் ஒரு குற்றப்பத்திரிகையாகும்.
டோனி பிளேயர் மற்றும் கோர்டன் பிரெளனின் கீழ், தொழிற் கட்சி சமூக சீர்திருத்தக் கொள்கைகளை நிராகரித்து, நிதிய தன்னலக்குழுவின் ஒரு தாட்சரிச கட்சியாக மாறியது. “வர்க்கப் போர் இறந்துவிட்டது” என்று பிளேயர் அறிவித்த நிலையில், தொழிலாள வர்க்கம் அரசியல்ரீதியாக வாக்குரிமை இழந்திருந்தது.
வர்க்கப் போரின் ஒரு பக்கம் மட்டுமே முடிவுக்கு வந்தது. 1989க்குப் பின்னர் இருந்து பில்லியனர்களின் செல்வவளம் 1,000 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது, 2010 க்குப் பின்னர் இருந்து பில்லியனர்களின் எண்ணிக்கை மும்மடங்காக 164 ஆக அதிகரித்துள்ளது. அதே காலகட்டத்தில், தொழிற்சங்க அதிகாரத்துவத்தால் கண்காணிக்கப்பட்ட முன்கண்டிராத குறைந்த வேலைநிறுத்த நடவடிக்கைகள் மூலமாக நடைமுறைப்படுத்தப்பட்ட ஊதிய ஒடுக்குமுறையின் மூலமாக ஒரு சராசரி தொழிலாளி 10,200 பவுண்டு வருமானத்தை இழந்தார்.
ஐக்கிய இராச்சியத்தின் மக்கள்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் வறுமையில் வாழ்கின்றனர், மேலும் 25 சதவீத குழந்தைகள் ஆகும். கிட்ட்ட 3 மில்லியன் மக்கள் உணவு வங்கிகளை நம்பியுள்ளனர். ஐக்கிய இராச்சியத்தில் உள்ள ஏழ்மையான 10 சதவீத குடும்பங்களுக்கு, 2019-20 உடன் ஒப்பிடும்போது வாழ்க்கைத் தரம் 20 சதவீதமாகறைந்துள்ளது, இது வருமானத்தில் 4,600 பவுண்டுகள் வீழ்ச்சியாகும்.
இதன் அடித்தளத்தில், தொழிற் கட்சியானது போர் மற்றும் இராணுவவாதத்தை தழுவியுள்ளது. பிளேயர் பிரிட்டிஷ் துருப்புக்களை ஐந்து முறை போருக்கு உத்தரவிட்டார், இது பிரிட்டிஷ் வரலாற்றில் வேறு எந்த பிரதம மந்திரியையும் விட அதிகமாகும். 2003 இல் ஈராக் மீதான சட்டவிரோத படையெடுப்பு மற்றும் ஆக்கிரமிப்பு உட்பட போர் குற்றங்களை நியாயப்படுத்த இஸ்லாமிய மக்களுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரம் ஆயுதமாக பயன்படுத்தப்பட்டது. “பயங்கரவாதத்திற்கு எதிரான போர்” என்பது உள்நாட்டில், முஸ்லீம்களை அரக்கத்தனமாக சித்தரிக்கும் மூலோபாயம் போன்ற கொள்கைகளுடன், மற்றும் புலம்பெயர்ந்தோர் மற்றும் தஞ்சம் கோருவோருக்கு எதிரான ஒரு “விரோதமான சூழல்” வளர்த்தெடுக்கப்பட்ட நிலையில், அடிப்படை ஜனநாயக மற்றும் சட்ட உரிமைகளை தூக்கியெறிய பயன்படுத்தப்பட்டது.
தொழிற்சங்க அதிகாரத்துவம் தொழில்துறை நடவடிக்கையை ஒடுக்கி வருகின்ற அதேவேளையில், போலி-இடதுகளின் பிரதிநிதிகள் பாலினம், இனம் மற்றும் அடையாள அரசியலை ஊக்குவித்து வருகின்றனர். இது டோரிக்கள் மற்றும் அதிவலதுகளால் ஊக்குவிக்கப்பட்ட அதே வழிகளில் தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்த சேவையாற்றுகிறது.
தொழிற் கட்சியின் வலதுசாரித் தாக்குதல் 2008 இல் உலக நிதிய நெருக்கடியின் முழுச் சுமையையும் தொழிலாள வர்க்கத்தின் முதுகில் பிரெளன் சுமத்துவதில் முடிவடைந்து, 14 ஆண்டுகள் பழமைவாதிகளின் ஆட்சிக்கு வழிவகுத்தது. இதன் விளைவாக விளைந்த “சிக்கன நடவடிக்கைகளின் யுகம்” தேசியவாதம் மற்றும் வெளிநாட்டவர் விரோத வெறியின் மிகவும் மூர்க்கமான வடிவங்களுடன் கைகோர்த்திருந்தது. இது 2016ல், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான சர்வஜன வாக்கெடுப்பில் உச்சம் கண்டது.
சோசலிச சமத்துவக் கட்சியானது இந்த பொது வாக்கெடுப்பை புறக்கணிக்க அழைப்பு விடுத்தது. இது “தொழிலாள வர்க்கத்தின் அரசியல் வாழ்க்கையை ஒரு தேசியவாத பாதையில் மேலும் நகர்த்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு முன்முயற்சியாகும், இதன் மூலம் ஐக்கிய இராஜ்ஜியம் மற்றும் ஐரோப்பா எங்கிலும் அதிவலதைப் பலப்படுத்தி தைரியப்படுத்தி, அவ்விதத்தில் அரசியல் வாழ்வை இன்னும் கூடுதலாக ஒரு தேசியவாத பாதையில் நகர்த்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு முன்முயற்சியாகும்” என்று எழுதியது.
“இடது விலகல்” ஐரோப்பிய ஒன்றித்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான வாக்களிப்பை ஆதரித்த சோசலிச தொழிலாளர் கட்சி (SWP) மற்றும் சோசலிஸ்ட் கட்சி (SP) போன்ற போலி-இடது குழுக்கள், தொழிலாள வர்க்கத்தை பிரிட்டிஷ் ஆளும் வர்க்கத்தின் மிகவும் வலதுசாரி கன்னைகளுக்கு அடிபணிய செய்ய உதவின. இது ஜோர்ஜ் காலோவே மற்றும் நைஜல் ஃபாராஜ் இடையே ஏற்பட்ட “இடது-வலது” கூட்டணியில் சுருக்கமாக எடுத்துக்காட்டப்பட்டது. சோசலிச சமத்துவக் கட்சி எழுதியது போல்: “பிரிட்டிஷ் தேசியவாதத்தின் பூதத்தை விடுவிக்க உதவிய அவர்கள், அதன் விளைவுகளுக்கு அரசியல் ரீதியாக பொறுப்பாளிகளாவர்.”
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான பிரச்சாரம் ஃபாராஜின் ஐக்கிய இராஜ்ஜிய சுதந்திரக் கட்சியின் எழுச்சியையும் இறுதியில் போரிஸ் ஜோன்சன் பிரதமராக அமர்த்தப்பட்டதையும் கண்டது. அவர்கள் டோரி கட்சியை முன்னெப்போதினும் பகிரங்கமாக ஒரு பாசிசவாத திசையில் நகர்த்தினர், ஆங்கிலக் கால்வாய் வழியாக அகதிகள் படகில் வருவதுக்கு எதிராக இராணுவ-பாணியிலான பிரச்சாரங்கள் மூலமாக முஸ்லீம்களையும் தஞ்சம் கோருவோரையும் இழிவுபடுத்தி வருகின்றனர், இது “ருவாண்டா தீர்வில்” உச்சக்கட்டத்தை அடைந்தது.
தொழிற் கட்சித் தலைவர் ஜெர்மி கோர்பின் இந்த வலதுசாரி தாக்குதலுக்கு தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை திட்டமிட்டு தடுத்தார். கட்சி மீதான பிளேயரிசவாதிகளின் கட்டுப்பாட்டை முடிவுக்குக் கொண்டுவர விரும்பிய அவரது மில்லியன் கணக்கான ஆதரவாளர்களைக் கோர்பின் காட்டிக்கொடுத்தார். மேலும் அவர், வெளியேற்றத்தில் இருந்து வலதுசாரிகளைப் பாதுகாத்ததுடன், நேட்டோ மற்றும் திரிசூல அணுஆயுதங்களுக்கான ஆதரவு, சிரியா மீதான குண்டுவீச்சு மீது சுதந்திரமான வாக்கெடுப்புக்கு அனுமதி, மேலும் டோரியின் வெட்டுக்களை அமல்படுத்த தொழிற் கட்சி கவுன்சில்களுக்கு அறிவுறுத்தியது உட்பட அதன் முக்கிய கொள்கைகளை நிலைநிறுத்தினார். கெய்ர் ஸ்டார்மருக்கு அதிகாரம் மாற்றப்படுவதில் உச்சமடைந்த “இடதுசாரி யூத-எதிர்ப்புவாதம்” என்ற இட்டுக்கட்டப்பட்ட குற்றச்சாட்டுக்களை சவால் செய்ய மறுத்து, தொழிற் கட்சி அங்கத்தவர்களுக்கு எதிரான வேட்டையாடலுக்கு கோர்பின் சரணடைந்தார்.
ஓராண்டு கால தேர்தல் பிரச்சாரத்தின் போது மன்னரையும் நாட்டையும் பாதுகாப்பதாக உறுதியளித்த ஸ்டார்மர், பிரிட்டிஷ் அரசியல் வரலாற்றில் மிகவும் வலதுசாரி அரசாங்கத்திற்கு தலைமை தாங்குகிறார். பிரிட்டனின் அணு ஆயுத திட்டத்தின் மீது ஒரு “ மூன்று தனித்தனி பாதுகாப்பு” க்கு அவர் சூளுரைத்துள்ள அதே நேரத்தில், வயதானவர்களுக்கு குளிர்கால எரிபொருள் கொடுப்பனவுகளை இரத்து செய்வது உட்பட £23 பில்லியன் பவுண்டுகள் செலவினக் குறைப்புகளைத் திட்டமிடுகிறார்.
முஸ்லீம்-விரோத கலகங்களுக்கு முந்தைய வாரங்களில், தொழிற் கட்சியானது ஈரானுக்கு எதிராக எதிராக போர்வெறி நிலைப்பாட்டை எடுத்துள்ளததுடன், அமெரிக்க தலைமையிலான இராணுவ கட்டமைப்பின் ஒரு பகுதியாக மத்திய கிழக்கிற்கு கப்பல்களையும் விமானங்களையும் அனுப்பியது. தஞ்சம் கோருவோரை இலக்கு வைக்கும் அதன் உள்நாட்டுக் கொள்கைகள் இந்த வெளியுறவுக் கொள்கை நோக்கங்களுடன் பின்னிப்பிணைந்துள்ளன, கூப்பர் சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை நாடுகடத்துவதற்கான சோதனைகள் மற்றும் கைதுகளின் “கோடைகால தாக்குதலுக்கு” உறுதியளித்துள்ளார்.
தொழிலாள வர்க்கத்தின் சோசலிசத்திற்கான போராட்டம்
இவ்வார பாசிசவாத கலகங்களுக்கு அவற்றின் பதிலிறுப்பில், சோசலிச தொழிலாளர் கட்சி, போர் கூட்டணியை நிறுத்து மற்றும் இனவாதத்திற்கு எதிராக நில் போன்ற அமைப்புக்கள், அதிவலதுகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் தொழிற் கட்சி வகிக்கும் பாத்திரம் குறித்து மௌனமாக உள்ளன. மாறாக, ஸ்டார்மர் அரசாங்கம் இடதிற்கு தள்ளப்பட்டுவிட்டது என்று கூறி அதைச் சுற்றி தங்கள் அணிகளை அவை நெருக்கிக் கொள்கின்றன. சோசலிச தொழிலாளர் கட்சி, “தொழிற் கட்சி பதவிக்கு வந்ததில் இருந்து பாலஸ்தீனர்களுக்கு சலுகைகள், கொடுப்பனவுகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் தடுப்புக்காவல் மையங்களுக்கு விட்டுக்கொடுப்புகளுக்குள் தள்ளப்பட்டுள்ளது,” என்று கூறியதுடன், “கோரிக்கைகளுக்கு இணங்க தொழிற் கட்சி தள்ளப்படலாம் என்பதற்கான ஒரு அறிகுறி இது” என்று நிறைவு செய்கிறது.
சோசலிச தொழிலாளர் கட்சியும் அதேபோன்ற இதர அமைப்புகளும் தொழிற் கட்சி மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்துடன் பிணைந்துள்ள வசதியான நடுத்தர வர்க்கத்தின் நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்கின்றன. அவர்கள் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்திற்கு எதிராக இயக்கப்படும் அரசியல் ஏமாற்றுக்காரர்கள் ஆவர்.
காஸா இனப்படுகொலைக்கு எதிரான பாரிய எதிர்ப்பு போராட்டங்கள், 2022-23 வேலைநிறுத்த அலை மற்றும் கோர்பினுக்குப் பின்னால் உள்ள இயக்கம் உட்பட, கடந்த தசாப்தத்தில் திரளான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் இடது நோக்கி நகர்ந்திருப்பதைக் கண்டுள்ளது. ஆனால் ஒவ்வொரு முறையும் தொழிலாள வர்க்கத்தை தொழிற் கட்சிக்கு அரசியல்ரீதியாக அடிபணியச் செய்வதும், சோசலிசத்திற்கான போராட்டத்தைத் தடுப்பதும்தான் அதன் பலவீனம் ஆகும். இங்குதான் அதிவலதின் பலத்தின் ஆதாரம் உள்ளது.
ஏப்ரல் 2019 இல், டேவிட் நோர்த் டெட்ராய்டில் வாய்ன் அரசு பல்கலைக்கழகத்தில், ஜேர்மனியில் அதிவலதின் மறுவாழ்வு குறித்து, “பாசிசவாத அச்சுறுத்தலும் அதை எப்படி எதிர்த்துப் போராடுவது” என்பது குறித்தும் ஒரு அறிமுக விரிவுரையை வழங்கினார்.
முசோலினி மற்றும் ஹிட்லரின் கீழ் 1920கள் மற்றும் 30களில் பாசிசத்தின் தோற்றமானது ரஷ்யப் புரட்சிக்கு ஆளும் வர்க்கத்தின் நனவான விடையிறுப்பாக இருந்தது என்றும், மேலும், சோசலிசத்திற்காக போராடுவதற்கு பாரிய கம்யூனிஸ்ட் கட்சிகளை தொழிலாள வர்க்கத்தில் கட்டியெழுப்ப வேண்டும் என்று நோர்த் விவரித்தார்.
“வர்க்கப் போராட்டம் ஒடுக்கப்பட்ட பல தசாப்தங்களுக்குப் பிறகு இப்போது உலகம் முழுவதும் அது நடைபெறத் தொடங்கியுள்ளது... இது, நிலவும் நிலைமைகளுக்கு எதிராக உலகம் முழுவதிலும் உள்ள தொழிலாள வர்க்கத்தினுள் வளர்ந்து வரும் இயக்கமாகும். ஆளும் உயரடுக்குகள் இதைப் பார்க்கின்றன. இது எங்கே போகிறது என்பது அவர்களுக்குத் தெரியும். அவர்கள் இந்த அச்சுறுத்தலை உணர்கிறார்கள். இந்த அச்சுறுத்தலுக்கு அவர்களின் விடையிறுப்பு இன்னும் கூடுதலாக வலதை நோக்கி நகர்ந்து, பாரிய மோதல்களுக்கு தயாரிப்பு செய்யத் தொடங்குவதாகும். அதனால் தான் அவர்கள் பாசிசவாத இயக்கங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கத் தொடங்குகிறார்கள்” என்று அவர் விளக்கினார்.
நோர்த் இவ்வாறு நிறைவு செய்தார்: “உழைக்கும் மக்களின் பெரும் பெருந்திரளுக்கு ஒரு அரசியல் வேலைத்திட்டத்தை, ஒரு முன்னோக்கை வழங்குவதே சவாலாகும், அதற்காக நீங்கள் ஒரு நனவான புரட்சிகர இயக்கத்தை, ஒரு நனவான அரசியல் கட்சியை அபிவிருத்தி செய்வது அவசியமாகும். அப்படிச் செய்யப்பட்டால், புறநிலை நிலைமைகள் செயல்படுத்தப்பட்டால், பாசிசம் தோற்கடிக்கப்பட முடியும் என்பது மட்டுமல்ல, நாம் ஒரு சோசலிச சமூகத்தை நிறுவ முடியும். இதுதான் எங்கள் முன்னோக்கு ஆகும்.”
சோசலிச சமத்துவக் கட்சியும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் உள்ள நமது சகோதரக் கட்சிகளும், சோசலிசத்திற்கான உலகளாவிய போராட்டத்தில், போர், சிக்கன நடவடிக்கைகள் மற்றும் பாசிசத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் அனைத்து பிரிவுகளையும் ஐக்கியப்படுத்தி, ஒரு சர்வதேச போர்-எதிர்ப்பு இயக்கத்தை அபிவிருத்தி செய்வதற்காக போராடி வருகின்றன. அதிவலது அபாயத்திற்கு தொழிலாள வர்க்கம் வழங்க வேண்டிய பதில் இதுவேயாகும்.