மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
2006 ஆம் ஆண்டுக்கு பிறகு தெற்கு லெபனான் மீது இஸ்ரேல் தனது மிகப்பெரிய தாக்குதலை கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இதில் 100க்கும் மேற்பட்ட விமானப்படை போர் விமானங்கள் அடங்கும். 40க்கும் மேற்பட்ட இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை கூறியுள்ளது.
சிறிது காலம் கழித்து, லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா போராளிகள், கடந்த மாதம் பெய்ரூட் மீதான தாக்குதலில் அதன் மூத்த இராணுவத் தளபதி ஃபுவாட் ஷுக்ரை படுகொலை செய்ததற்கு பதிலடியாக, இஸ்ரேலிய இராணுவ நிலைகள் மீது தாக்குதலைத் தொடங்கியுள்ளதாக அறிவித்தனர்.
லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் மத்திய கிழக்கு முழுவதும் அமெரிக்க ஆதரவு இராணுவ விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக இருப்பதுடன், அதன் மைய இலக்கு ஈரான் ஆகும். காஸாவில் 40,000 க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்ட இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு அமெரிக்கா ஒரே நேரத்தில் இஸ்ரேலுக்கு நிதியுதவி செய்கிறது.
லெபனானில் நடந்த தாக்குதல்களில் மூன்று பேர் கொல்லப்பட்டனர், இஸ்ரேல் தரப்பில் இறப்புகள் எதுவும் இல்லை. இஸ்ரேலிய போர்க்கப்பலின் மேலே இஸ்ரேலிய வான் பாதுகாப்பு ஏவுகணை வெடித்ததில் இஸ்ரேலிய சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டார். இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, “நாட்டின் மையத்தில் உள்ள ஒரு மூலோபாய இலக்கு மீது ஹஸ்புல்லா ஏவிய அனைத்து ட்ரோன்களையும் இடைமறித்ததாக” கூறினார்.
2006 ஆம் ஆண்டு தெற்கு லெபனானை இஸ்ரேல் 34 நாட்கள் ஆக்கிரமித்த பின்னர், தற்போதைய இஸ்ரேலிய தாக்குதல் மிகவும் தீவிரமாக இருக்கிறது.
“லெபனானிலுள்ள ஹிஸ்புல்லாவின் தாக்குதல்களுக்கு எதிராக இஸ்ரேலிய நடவடிக்கைகள் பற்றி விவாதிக்க” அமெரிக்க பாதுகாப்பு மந்திரி லாயிட் ஆஸ்டின் இஸ்ரேலிய பாதுகாப்பு மந்திரி யோவ் கேலண்டுடன் வார இறுதியில் இரண்டு முறை பேசுகையில், அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய அதிகாரிகள் தாக்குதல்களில் நெருக்கமான ஒருங்கிணைப்பில் இருப்பதாக தெளிவுபடுத்தியுள்ளனர். லெபனான் மீது தாக்குதல் நடத்தும் முன் அமெரிக்காவுக்கு தகவல் தெரிவித்துள்ளதாக இஸ்ரேல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை, அமெரிக்க பாதுகாப்பு மந்திரி லாயிட் ஆஸ்டின் இரண்டு அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்களை மத்திய கிழக்கில் இருக்கும்படி உத்தரவிட்டதாகவும், அதில் ஒன்றை அமெரிக்காவுக்கு மீண்டும் அனுப்பும் திட்டத்தை மாற்றியதாகவும் பென்டகன் தெரிவித்துள்ளது.
அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் சீன் சாவெட், லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலை ஆதரித்து, “இஸ்ரேலின் தற்காப்பு உரிமையை நாங்கள் தொடர்ந்து ஆதரிப்போம்” என்று அறிவித்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு நேர்காணலில், அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன், “தொடர்ச்சியான தொடர்பில் இருப்பதாகவும், இஸ்ரேலுக்கு எதிரான ஹிஸ்புல்லா தாக்குதல்களின் அச்சுறுத்தலை நாங்கள் சில காலமாக கண்காணித்து வருகிறோம்” என்றும் கூறினார்.
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஒரு அறிக்கையில், லெபனான் மீதான தாக்குதல்களைத் தொடரப்போவதாக நெதன்யாகு அச்சுறுத்தினார், இந்த தாக்குதல் “கதையின் முடிவு அல்ல” என்று அறிவித்தார். “எங்கள் நாட்டைப் பாதுகாக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய நாங்கள் உறுதியாக இருக்கிறோம்... யார் நமக்குத் தீங்கு விளைவித்தாலும் - நாங்கள் அவருக்குத் தீங்குகளை விளைவிப்போம்” என்று குறிப்பிட்டார்.
கடந்த ஏப்ரல் மாதம், இஸ்ரேலிய தாக்குதலில் டமாஸ்கஸில் கூடியிருந்த ஈரானிய இராணுவ அதிகாரிகள் குழுவினர் கொல்லப்பட்டனர். அதற்கு பதிலடியாக, ஈரான் 300 ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய போதிலும், கிட்டத்தட்ட அனைத்தும் இடைமறிக்கப்பட்டன.
ஜூலை மாதம், பெய்ரூட்டில் நடத்திய தாக்குதலில் ஃபுவாத் ஷுக்ரை இஸ்ரேல் படுகொலை செய்தது. அதைத் தொடர்ந்து ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஈரானில் உள்ள இராணுவ விருந்தினர் மாளிகையில் படுகொலை செய்யப்பட்டார்.
அமெரிக்க வெளிநாட்டு உதவியை இஸ்ரேல் மிகப்பெரியளவில் பெறுவதுடன், அக்டோபர் 2023 முதல் $12.5 பில்லியன் ஆயுதங்களைப் பெற்றுள்ளது. அமெரிக்கா இஸ்ரேலுக்கு எஃப்-35 உட்பட டசின் கணக்கான மேம்பட்ட போர் விமானங்களை வழங்கியுள்ளது. இந்த மாத தொடக்கத்தில், ஐம்பது F-15 ரக போர் விமானங்கள், அதிநவீன நடுத்தர குண்டுவீச்சு விமானத்திலிருந்து ஏவும் ஏவுகணைகள், அல்லது AMRAAM கள், 120 மிமீ டாங்கி வெடிமருந்துகள், மிகவும் பலமாக வெடிக்கும் ஏவுகணைகள் மற்றும் தந்திரோபாய வாகனங்கள் உட்பட இஸ்ரேலுக்கு $20 பில்லியன் டொலர் ஆயுத விற்பனைக்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், இஸ்ரேல்தான் மத்திய கிழக்கில் அணு ஆயுதங்களை வைத்திருக்கும் ஒரே நாடாகும்.
அக்டோபர் முதல், தெற்கு லெபனானில் கிட்டத்தட்ட 500 பேரை இஸ்ரேல் கொன்றுள்ளது. 2006 லெபனான் மீதான படையெடுப்பு மற்றும் ஈரான், சிரியா மற்றும் யேமன் மீதான தாக்குதல்களை விட அதிகமாகும். அதே நேரத்தில், கிட்டத்தட்ட 50 இஸ்ரேலிய படையினர்கள் மற்றும் பொதுமக்கள் ஹிஸ்புல்லாவின் தாக்குதல்களால் கொல்லப்பட்டனர்.
இஸ்ரேலிய தாக்குதல்களின் பின்னணியில், ஹமாஸ் மற்றும் இஸ்ரேலிய அதிகாரிகளுக்கு இடையே பணயக் கைதிகள் பரிமாற்றம் பற்றிய பேச்சுவார்த்தைகள் உடன்பாடு எட்டப்படாமல் ஞாயிற்றுக்கிழமை தடைபட்டன. இந்த கலந்துரையாடல்களில் சிஐஏ இயக்குனர் வில்லியம் பேர்ன்ஸ் மற்றும் இஸ்ரேலின் மொசாட் உளவுத்துறை அமைப்பின் தலைவர் டேவிட் பார்னியா ஆகியோர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
200,000 பாலஸ்தீனியர்களைக் கொன்ற காஸா இனப்படுகொலையின் பின்னணியில் லெபனான் மீதான இஸ்ரேலிய தாக்குதல் நடைபெறுகிறது என்று லான்செட் இதழ் தெரிவித்துள்ளது.
லெபனானுக்கு எதிரான இஸ்ரேலிய விரிவாக்கமானது, நெதன்யாகு ஜூலை 24 அன்று அமெரிக்க காங்கிரஸில் ஆற்றிய உரையைத் தொடர்ந்து வருகிறது. நெதன்யாகுவின் கருத்துக்கள் காஸா இனப்படுகொலையை நியாயப்படுத்துவதும் பாதுகாப்பதும் மட்டுமல்ல, லெபனான், யேமன் மற்றும் ஈரானைக் குறிவைத்து அமெரிக்கத் தலையீட்டிற்கான வாதமாக இருக்கிறது.
அமெரிக்க துணைத் ஜனாதிபதி கமலா ஹாரிஸ் தனது உரையில், “ஈரான் மற்றும் அதன் ஆதரவு போராளிகளான ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா போன்றவற்றுக்கு எதிராக இஸ்ரேல் தன்னைத் தற்காத்துக் கொள்ள முடியும் என்பதை நான் எப்போதும் உறுதி செய்வேன்” என்று கூறினார். - இது, காஸாவிற்கு அப்பால் போரை விரிவுபடுத்துவதற்கான ஒரு பயனுள்ள பச்சை விளக்காகும்.
இஸ்ரேலும் அமெரிக்காவும் கடந்த அக்டோபர் 7 நிகழ்வுகளைப் பயன்படுத்தி, அமெரிக்க ஆட்சியின் கீழ் மத்திய கிழக்கை மறுஒழங்கமைப்பதற்கான நீண்டகால திட்டங்களை ஈரானைக் குறிவைத்து செயல்படுத்தி வருகின்றன.
முன்னாள் காலனிகளில் ஏகாதிபத்திய மேலாதிக்கத்தை மீட்டெடுக்கும் நோக்கத்துடன் மத்திய கிழக்கில் அதிகரித்துவரும் போர், ரஷ்யா மற்றும் சீனாவை முக்கிய இலக்குகளாகக் கொண்டு, உலகம் முழுவதும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலகளாவிய தாக்குதலின் ஒரு பகுதியாக உள்ளது.
காஸா இனப்படுகொலைக்கு பைடென் நிர்வாகம் அதன் அனுசரணைக்காக பரவலாக இழிவுபடுத்தப்பட்டாலும், ஜனாதிபதிக்கான ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹாரிஸ், இஸ்ரேலுக்கான அமெரிக்க ஆதரவில் எந்த வரம்புகளையும் நிராகரித்து, இந்தக் கொள்கையை மட்டுமே தொடரப்போவதாகத் தெளிவுபடுத்தியுள்ளார்.
கடந்த வாரம் நடைபெற்ற ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாட்டில் உரையாற்றிய ஹாரிஸ், “நான் தெளிவாகச் சொல்கிறேன், தன்னைத் தற்காத்துக் கொள்வதற்கான இஸ்ரேலின் உரிமையை நான் எப்போதும் பாதுகாப்பேன் என்று கூறினார்.