முன்னோக்கு

பிரான்சில் ஒரு வலதுசாரி அரசாங்கத்தை மக்ரோன் நியமிப்பதும் மெலோன்சோனின் திவால்நிலையும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

புதிய பிரெஞ்சு பிரதமர் மிஷேல் பார்னியர் பதவி பதவியேற்பு விழாவின் போது கலந்து கொண்டார். வியாழன், செப்டம்பர் 5, 2024 பாரிஸ் [AP Photo/Stephane de Sakutin]

ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் மிஷேல் பார்னியரை பிரதம மந்திரியாக நியமித்திருப்பது பிரெஞ்சு ஜனநாயகத்தின் ஒரு வரலாற்று முறிவைக் குறிக்கிறது. ஜூலை 7 தேர்தல்களில் முதலாவதாக வந்த ஜோன்-லூக் மெலோன்சோனின் புதிய மக்கள் முன்னணியில் (New Popular Front - NFP) இருந்து ஒரு பிரதமரைத் தேர்ந்தெடுக்க மக்ரோன் மறுத்துவிட்டார். அதற்கு பதிலாக, ஏழு வார கால பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர், அவர் ஒரு சிறுபான்மையான, வலதுசாரி அரசாங்கத்தை நியமித்துள்ளார். இது, நாஜி ஒத்துழைப்புவாத விச்சி ஆட்சிக்குப் பின்னர் அதிதீவிர வலதுசாரி ஆதரவில் தங்கியிருக்கும் பிரான்சின் முதல் அரசாங்கமாக இருக்கும்.

பிரான்சில் குடியேறுவதற்கு ஐந்தாண்டு தடை உட்பட, ஆழமான ஐரோப்பிய ஒன்றிய (EU) சிக்கன நடவடிக்கைகள் மற்றும் வன்முறையான புலம்பெயர்ந்தோர் எதிர்ப்பு நடவடிக்கைகளின் நேட்டோ கூட்டணியின் ஆதரவாளரான பார்னியரை அதி தீவிர வலதுசாரி தேசிய பேரணி (RN) ஆதரிப்பதாகக் கூறியுள்ளது.

புதிய அரசாங்கம் குறித்த முன்னொருபோதும் இல்லாத ஏழு வாரங்கள் நீடித்த பேச்சுவார்த்தைகளானது, வாக்காளர்களின் வாக்குரிமையைப் பறிக்கவும், பிரான்சிலும் உலகெங்கிலும் தொழிலாளர்களால் நிராகரிக்கப்பட்ட கொள்கைகளைத் திணிக்கவும் நோக்கம் கொண்டிருந்தது. ரஷ்யாவை எதிர்த்துப் போரிட உக்ரேனுக்கு நேட்டோ துருப்புகளை அனுப்புவதற்கான மக்ரோனின் அழைப்பு, மேற்கு ஐரோப்பா எங்கிலும் 89 சதவீதமான எதிர்ப்புக்களை சந்தித்துள்ளது. மேலும், அந்நாட்டின் இராணுவக் கட்டமைப்புக்கு நிதியாதாரம் வழங்குவதற்கான பாரிய வேலைநிறுத்தங்களை முகங்கொடுத்த நிலையில், கடந்த ஆண்டு அவர் திணித்த ஓய்வூதிய வெட்டுக்கள் 91 சதவீத மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளன. ஆயினும் வங்கிகளும் இராணுவ-போலிஸ் எந்திரமும் மக்கள் மீது போர் மற்றும் சிக்கன நடவடிக்கைகளைத் திணிக்க ஒரு அதிவலதுகளின் அரசாங்கத்தின் பின்னால் அணிதிரண்டுள்ளன.

சனிக்கிழமை 7 செப்டம்பர் அன்று அரசாங்கத்திற்கு எதிராக எதிர்ப்பு போராட்டங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பார்னியேர் ஒரு கொடூரமான சிக்கன வரவுசெலவுத் திட்டத்தை தயாரித்து வருகையில் வெடிப்பார்ந்த வர்க்க மோதல் உருவாகி வருகிறது. பிரெஞ்சு மக்களில் 57 சதவீதத்தினர் பார்னியர் மீது அவநம்பிக்கை கொண்டிருப்பதாகவும், 74 சதவீதத்தினர் மக்ரோன் தேர்தல்களைப் புறக்கணித்துள்ளார் என்று நம்புவதாகவும் கருத்துக்கணிப்புகள் காட்டுகின்றன. எவ்வாறிருப்பினும் மக்ரோன்-பார்னியேர் ஆட்சியை எதிர்த்துப் போராடுவதற்கு, தொழிலாளர்கள் இன்றியமையாத அரசியல் முடிவுகளை எடுக்க வேண்டும். அனைத்திற்கும் மேலாக, மக்ரோனுக்கு உதவியாக சேவையாற்றிய மெலோன்சோன் மற்றும் புதிய மக்கள் முன்னணியின் திவால்நிலை மீது அரசியல் முடிவுகளை எடுக்க வேண்டும்.

கோடை காலம் முழுவதும், NFP க்கு வாக்களித்த மில்லியன் கணக்கான தொழிலாளர்களை அணிதிரட்டுவதை NFP தவிர்த்து வந்தது. சோசலிச சமத்துவக் கட்சி (PES) எச்சரித்ததைப் போல, மெலோன்சோனின் அடிபணியாத பிரான்ஸ் (France Unbowed - LFI) கட்சி, சோசலிஸ்ட் கட்சி (PS), பசுமைக் கட்சி மற்றும் ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி (PCF) ஆகியவற்றால் NFP உருவாக்கப்பட்டமை ஒரு முன்னோக்கிய அடி அல்ல, மாறாக தொழிலாளர்களுக்கு அமைக்கப்பட்ட ஒரு பொறியாகும். ஜூலை 7 தேர்தல்களுக்குப் பின்னர், சோசலிச சமத்துவக் கட்சி பின்வருமாறு எழுதியது:

எவ்வாறாயினும், புதிய மக்கள் மக்கள் முன்னணி, அதன் சொந்த திவாலான, சந்தர்ப்பவாத தேர்தல் மூலோபாயத்தின் விளைபொருளாக, தேர்தலுக்குப் பின்னர் வலதுபுறம் நோக்கி கூர்மையாக ஊசலாடுகிறது. இது தேசிய பேரணி கட்சிக்கு எதிராக மக்ரோனுடன் கூட்டணியில் நுழைந்தது. அத்தோடு, மக்ரோனையும் அவரது குழுமக் (Ensemble) கூட்டணியையும் வலுப்படுத்த அதன் சொந்த வேட்பாளர்களை விலக்கிக் கொண்டது. தேர்தலுக்குப் பிறகு, முதலாளித்துவ அரசில் வலதுசாரி சக்திகளுடனான பேச்சுவார்த்தைகளில் முழுக் கவனம் செலுத்திய மெலன்சோன், பலமுறை மக்ரோனிடம் தன்னை பிரதம மந்திரியாக நியமிக்குமாறு கேட்டுக் கொண்டார். ஆனால், அதை மக்ரோன் செய்ய மறுத்துவிட்டார்.

மெலோன்சோனின் மூலோபாயத்தின் பிற்போக்குத்தனத் தன்மை குறித்த சோசலிச சமத்துவக் கட்சியின் மதிப்பீட்டை நிகழ்வுகள் ஊர்ஜிதப்படுத்தியுள்ளன. தொழிலாளர்களை அணிதிரட்டாததன் மூலமும், மக்ரோனை நவ-பாசிசவாதத்தின் ஒரு ஜனநாயக எதிர்ப்பாளராக பொய்யாக ஊக்குவிப்பதன் மூலமும், இது, குழுமம் மற்றும் RN க்கு இடையிலான நடைமுறையளவில் ஒரு கூட்டணியின் அடிப்படையில் ஒரு வலதுசாரி அரசாங்கத்தை உருவாக்க மக்ரோனுக்கு கால அவகாசத்துக்கான நேரத்தை வழங்கியது.

மெலோன்சோன் போன்ற பிரமுகர்களும் புதிய மக்கள் முன்னணி போன்ற அமைப்புகளும் ஒரு திட்டவட்டமான செயல்பாட்டிற்கு சேவை செய்கின்றன: அதாவது, வலதை நோக்கி வன்முறையாக பாய்ந்து கொண்டிருக்கும் அரசு எந்திரத்திற்கும், ஆளும் வர்க்கத்திற்கு அரசியல் மறைப்பை வழங்குவதற்கும், தொழிலாள வர்க்கம் அதன் சொந்த வேலைத்திட்டத்தில் சுயாதீனமான அரசியல் தலையீட்டைத் தடுக்கும் செயல்பாட்டிற்கும் இவை சேவை செய்கின்றன.

மெலோன்சோனும் புதிய மக்கள் முன்னணியும் ஒவ்வொரு பிரதான முதலாளித்துவ நாட்டிலும் அவற்றின் சமதரப்பினரைக் கொண்டுள்ளன: ஐக்கிய இராஜ்ஜியத்தில் ஜெர்மி கோர்பின், ஜேர்மனியில் இடது கட்சி, அமெரிக்காவில் பேர்ணி சாண்டர்ஸ் மற்றும் அலெக்ஸாண்ட்ரியா-ஒக்காசியோ கோர்டெஸ் ஆகியோர்கள் ஆவர். ஒவ்வொரு விஷயத்திலும், இந்த பிரமுகர்கள் மற்றும் கட்சிகளின் பங்கு முழு அரசியல் அமைப்புமுறையும் இன்னும் வலதிற்கு மாறுவதற்கு வசதி செய்வதாக உள்ளது.

இந்த சட்டவிரோத ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் எதிராக இடதுசாரி உணர்வை அணிதிரட்டி, தொழிலாள வர்க்கத்தில் வேலைநிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்புகளின் எதிர்த்தாக்குதல் தயாரிக்கப்பட்டு கட்டியெழுப்பப்பட வேண்டும். தொழிலாள வர்க்கத்தில் தற்போதுள்ள ஒழுங்கிற்கு எதிரான பரந்த, புறநிலைரீதியிலான புரட்சிகர எதிர்ப்பானது, புதிய மக்கள் முன்னணி மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களில் உள்ள அதன் கூட்டாளிகளின் மரணகரமான பிடியில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும்.

கடந்த ஆண்டு, மக்ரோனின் ஓய்வூதிய வெட்டுக்களை நிறுத்தவும் மற்றும் அவரது அரசாங்கத்தை வீழ்த்தவும் ஒரு பொது வேலைநிறுத்தத்தை பெரும்பான்மையான பிரெஞ்சு மக்கள் ஆதரித்ததாக கருத்துக் கணிப்புகள் காட்டுகின்றன. எதிர்ப்புக்கள் ஒடுக்கப்பட்டு, வெடிக்கும் கோபத்திற்கு மத்தியில், மக்ரோன் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு கூட இல்லாமல் ஓய்வூதிய வெட்டுக்களை திணித்தார். ஆயினும் தொழிற்சங்க அதிகாரத்துவங்கள், மெலோன்சோனின் ஆதரவுடன், ஓய்வூதிய சீர்திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னர் வேலைநிறுத்தங்களை சர்வசாதாரணமாக முடித்துக் கொண்டன. இது போர் தொடர்ந்து தீவிரமடைவதற்கும் உத்தியோகபூர்வ பிரெஞ்சு அரசியலில் அதிவலதை நோக்கிய ஒரு விரைவான திருப்பத்திற்கும் பாதை அமைத்துக் கொடுத்தது.

பல தசாப்தங்களாக புதிய மக்கள் முன்னணியை உருவாக்கிய கட்சிகளால் வர்க்கப் போராட்டம் ஒடுக்கப்பட்டு வரப்படுவதானது, ஒரு பிற்போக்குத்தனமான மற்றும் புலம்பெயர்ந்தோர்-விரோத அடித்தளத்தில் சமூக கோபத்திற்கு வாய்வீச்சுடன் முறையீடு செய்ய அதி தீவிர வலதுசாரி தேசிய பேரணியை (RN) அனுமதிக்கிறது. முதலாளித்துவத்திற்கு எதிரான தொழிலாளர்களின் சர்வதேச வர்க்க ஐக்கியத்திற்கு எதிராக ஜனரஞ்சகவாதம் மற்றும் தேசியவாதத்தை மெலோன்சோன் ஊக்குவிப்பது, சோசலிஸ்ட் கட்சி, பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மெலோன்சோனின் காட்டிக்கொடுப்பால் கசப்படைந்துள்ள தொழிலாளர்களுக்கு அதி தீவிர வலதுசாரி தேசிய பேரணியை ஒரு ஏற்கத்தக்க தெரிவாக தோற்றத்தில் ஊக்குவிக்கவும் உதவுகிறது. ஒரு நவ-பாசிசவாத ஜனாதிபதியின் கீழ், அவர் பிரதம மந்திரியாக இருக்கக்கூடும் என்று 2022 இல் மெலோன்சோன் கூறியதில் இது எடுத்துக்காட்டப்படுகிறது.

மக்ரோன் மற்றும் அதி தீவிர வலதுசாரி தேசிய பேரணியுடனான ஒப்பந்தங்களை வெட்டுவதற்கு, ஒரு புதிய மக்கள் முன்னணி அரசாங்கத்தைத் திணிக்க முயற்சிப்பதன் மூலமாக, தொழிலாள வர்க்கத்தால் ஜனநாயகத்தைப் பாதுகாக்க முடியாது என்பதுடன், வலதை நோக்கிய முதலாளித்துவ ஸ்தாபகத்தின் வன்முறையான திருப்பத்தை எதிர்க்கவும் முடியாது. பாசிசம், ஏகாதிபத்தியப் போர் மற்றும் முதலாளித்துவத்திற்கு எதிராக, தொழிலாளர்களின் அதிகாரத்திற்கான மற்றும் சோசலிசத்திற்கான ஒரு சர்வதேச போராட்டத்தின் அடிப்படையில், தொழிலாள வர்க்கத்தில் ஒரு இயக்கம் கட்டியெழுப்பப்பட வேண்டும்.

இதற்கு, ஒரு உண்மையான புரட்சிகர வேலைத்திட்டத்தைச் சுற்றி, புதிய மக்கள் முன்னணியுடன் பிணைந்துள்ள தொழிற்சங்க அதிகாரத்துவங்களில் இருந்து சுயாதீனமாக, தொழிலாள வர்க்கத்திற்குள் சாமானிய தொழிலாளர் போராட்ட அமைப்புகளைக் கட்டியெழுப்புவது அவசியமாகும். இதற்கு சோசலிச சமத்துவக் கட்சி பின்வரும் கோரிக்கைகளை முன்மொழிகிறது:

ஏகாதிபத்திய போர் வேண்டாம்! ரஷ்யாவுடனான போரை நிறுத்து, நேட்டோவைக் கலைத்து, ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கில் இருந்து பிரெஞ்சு துருப்புகளைத் திரும்பப் பெறு!

பெரும்பான்மை மக்களால் நிராகரிக்கப்பட்ட ரஷ்யாவுக்கு எதிரான நேட்டோவின் போர் விரிவாக்கம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். கடந்த ஆண்டு, மக்ரோனின் ஓய்வூதிய வெட்டுக்களால் நிதியாதாரம் வழங்கப்பட்ட, இராணுவத்துக்கு செலவிடுவதற்காக திணிக்கப்பட்ட இராணுவ வரவு-செலவு திட்டக்கணக்கு இரத்து செய்யப்பட வேண்டும். நேட்டோவைக் கலைப்பதற்கும் மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவில் அதன் முன்னாள் காலனித்துவ சாம்ராஜ்ஜியத்தில் பிரான்சின் போர்கள் உட்பட ஏகாதிபத்திய போர்களை நிறுத்துவதற்குமான தொழிலாள வர்க்கத்தின் ஒரு சர்வதேச போராட்டத்தின் பாகமாக, நேட்டோ இராணுவ கூட்டணியை விட்டு பிரான்ஸ் வெளியேற வேண்டும்.

காஸா இனப்படுகொலையை நிறுத்து! இனப்படுகொலையை எதிர்ப்பவர்கள் மீது வழக்குத் தொடரக் கூடாது!

பிரான்சிலும் சர்வதேச அளவிலும் உள்ள தொழிலாளர்கள் இஸ்ரேலிய ஆட்சிக்கு ஆயுதங்கள் உற்பத்தி மற்றும் வினியோகத்தை தடுக்க வேண்டும். சர்வதேச நீதிமன்றங்களால் இனப்படுகொலை குற்றம் சாட்டப்பட்டுள்ள இஸ்ரேலிய அதிகாரிகள், அதேபோல் இந்த இனப்படுகொலையில் உடந்தையாக இருந்த பிரெஞ்சு மற்றும் நேட்டோ அதிகாரிகள் மீது குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும். யூத-விரோத குற்றச்சாட்டுக்களின் பேரில் காஸா இனப்படுகொலையை எதிர்ப்பவர்கள் மீதான வழக்கு விசாரணை முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும். இஸ்ரேலிய ஆட்சியின் இனப்படுகொலைக்கான தங்கள் ஆதரவைப் பயன்படுத்தி, யூதர்களின் நண்பர்களாகவும் யூத-எதிர்ப்பு எதிர்ப்பாளர்களாகவும் தங்களைப் பொய்யாகக் காட்டிக்கொள்ளும் தீவிர வலதுசாரி சக்திகளின் முயற்சிகளை தொழிலாளர்கள் எதிர்க்க வேண்டும்.

பிரான்சின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்போம்!

வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை இலக்கு வைத்து நடத்தப்படும் வன்முறையான ஒடுக்குமுறை மற்றும் பாரிய கைதுகள் குறித்த மக்ரோனின் நீண்டகால வரலாறு, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவி மேலெழுந்து வரும் பொலிஸ் அரசின் நரம்பு மையமாக உள்ளது என்பதைக் காட்டுகிறது. உத்தியோகபூர்வ பிரெஞ்சு மற்றும் ஐரோப்பிய அரசியலின் மையத்தில் அதிதீவிர வலதுசாரிகளின் துரிதமான எழுச்சியானது, இந்த எந்திரம் ஒரு பாசிசவாத சர்வாதிகாரமாக அபிவிருத்தி காணும் தெளிவான மற்றும் தற்போதைய அபாயத்தை வெளிப்படுத்துகிறது. பிரான்சின் கலகம் அடக்கும் இராணுவ பொலிஸ் பிரிவுகளுடன் சேர்த்து நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவி கலைக்கப்பட வேண்டும்.

அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோரைத் துன்புறுத்துவதை நிறுத்து! தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்திற்காக!

தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்கு, தேசியவாதத்தைத் தூண்டுவதன் மூலம் அதை பிளவுபடுத்தும் முதலாளித்துவத்தின் முயற்சிகளுக்கு சமரசமற்ற விரோதம் தேவைப்படுகிறது.

பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் தற்போது பரவலாகக் காணப்படும் பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராக தொழிலாளர்கள் போராட வேண்டும்: புலம்பெயர்ந்தோரின் மீதான அரச தடைகள் மற்றும் துன்புறுத்தல், அகதிகள் தங்க வைக்கப்படும் பாரிய தடுப்பு முகாம்களை நிர்மாணித்தல் மற்றும் NFP ஆல் ஆதரிக்கப்படும் இஸ்லாமிய மத ஆடைகளை தடை செய்யும் அவமானகரமான சட்டங்களே இவைகளாகும்.

மக்ரோனின் ஓய்வூதிய வெட்டுக்களை இரத்து செய்! வங்கி பிணையெடுப்புகளை பறிமுதல் செய்! வேலைகள், சமூகநலத் திட்டங்களுக்கு பில்லியன் கணக்கில் ஒதுக்கீடு!

மக்ரோனின் சட்டவிரோத ஓய்வூதிய வெட்டுக்கள் இரத்து செய்யப்பட வேண்டும். வேலைகள் மற்றும் சமூக திட்டங்களுக்கு அங்கே பணமில்லை என்ற பொய்யை தொழிலாளர்கள் நிராகரிக்க வேண்டும். சமீபத்திய தசாப்தங்களில் நிதியப் பிரபுத்துவத்தால் ஐரோப்பிய ஒன்றிய பிணையெடுப்புகளில் சூறையாடப்பட்ட டிரில்லியன் கணக்கான பொது நிதிகள் பறிமுதல் செய்யப்பட்டு பிரெஞ்சு மற்றும் ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தின் சமூகத் தேவைகளைப் பூர்த்தி செய்ய பயன்படுத்தப்பட வேண்டும். இதற்கு தொழிலாளர்களை அணிதிரட்டுவதும், நிதியச் சந்தைகள் மற்றும் பொலிஸ் அரசின் கைகளில் இருந்து பொருளாதார வாழ்வின் மீதான கட்டுப்பாட்டை அகற்றுவதற்கு பணியிடங்களில் சாமானிய ஜனநாயக அமைப்புக்களை உருவாக்குவது அவசியமாகும்.

ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகளுக்காக!

போர், பாசிசம், இனப்படுகொலை, சிக்கன நடவடிக்கைகள் மற்றும் முதலாளித்துவத்திற்கு எதிராக பிரான்சில் உள்ள தொழிலாளர்களின் சிறந்த கூட்டாளிகள் ஐரோப்பா மற்றும் சர்வதேச அளவிலுள்ள தொழிலாளர்கள் ஆவர். ஏனைய ஐரோப்பிய ஒன்றிய அரசாங்கங்களுடன் ஒருங்கிணைந்து காட்டுமிராண்டித்தனமான சிக்கன நடவடிக்கைகளை திணிப்பதற்கான நடவடிக்கைகளை பார்னியர் தயாரிப்பு செய்கையில், ஐரோப்பிய தொழிலாள வர்க்கம் சிக்கன நடவடிக்கைகள் மற்றும் முதலாளித்துவத்திற்கு எதிரான ஒரு போராட்டத்தில் அரசியல்ரீதியாக ஐக்கியப்படுத்தப்பட வேண்டும்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரெஞ்சு பிரிவான சோசலிச சமத்துவக் கட்சி தொழிலாள வர்க்கத்தில் ஒரு சோசலிச தலைமையைக் கட்டியெழுப்ப போராடி வருகிறது. அது சமூக மற்றும் பொருளாதார வாழ்வை தனியார் இலாபத்திற்காக அல்லாமல் சமூகத் தேவைகளின் அடிப்படையில் மறுஒழுங்கமைக்க, அதிகாரத்தைக் கைப்பற்றுவதையும், இப்போதிருக்கும் அரசு நிறுவனங்களை அகற்றி, ஒரு தொழிலாளர்’ அரசை ஸ்தாபிப்பதையும் நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும்.

தொழிலாள வர்க்கத்தின் இந்த புரட்சிகர தாக்குதல் ஒரு ஐரோப்பிய மற்றும் சர்வதேச இயக்கமாக அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். இதன் மூலம், முதலாளித்துவ ஐரோப்பிய ஒன்றியத்தை, ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகளைக் கொண்டு பிரதியீடு செய்ய வேண்டும்.

Loading