"புதிதாகச் சேர்ந்தவர்கள், பழைய ஊழியர்கள், ஓய்வு பெற்றோர் என அனைவரும் ஒரு பொதுவான இலக்கிற்காக ஒன்றிணைந்து நிற்கிறோம்”

போயிங் இயந்திர வல்லுநர்கள் தங்கள் வேலைநிறுத்தத்தில் என்ன ஆபத்து இருக்கிறது என்பதை விளக்குகிறார்கள்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

வாஷிங்டன், ஓரிகான் மற்றும் கலிபோர்னியா மாநிலங்களில் 33,000 போயிங் இயந்திர வல்லுநர்களின் வேலைநிறுத்தத்தின் முதல் நாள் தொழிலாள வர்க்கத்தின் மாபெரும் சக்தியைக் காட்டியுள்ளது. சர்வதேச இயந்திர வல்லுநர்கள் சங்கத்தின் (International Association of Machinists  - IAM) தலைமையால் ஆதரிக்கப்பட்ட, கிட்டத்தட்ட 95 சதவீத ஒப்பந்தத்தை நிராகரித்து, வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக 96 சதவீதத்தினர் வாக்களித்தபின்னர், வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்குப் பின்னர் தொழிலாளர்கள் வேலையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். 

வாஷிங்டன் மாநிலத்தின் எவரெட் (Everett) நகரில் 2024 செப்டம்பர் 13 அன்று வேலைநிறுத்தம் செய்யும் போயிங் தொழிலாளர்கள்

இந்த வேலைநிறுத்தம் அதன் தற்போதைய நெருக்கடிக்கான செலவுகளைத் தொழிலாளர்களின் முதுகில் சுமத்த முனைந்து வரும் வான்வழி பெருநிறுவனத்திற்கு எதிரான ஒரு அடியாகும். இது ஒரு முக்கிய அமெரிக்க ஏற்றுமதியாளரும் மற்றும் பிரதான பாதுகாப்பு ஒப்பந்ததாரருக்கும் எதிரான வெளிநடப்பைத் தடுக்க முயற்சித்துவரும் பெருநிறுவனம் மற்றும் பைடென்-ஹாரிஸ் நிர்வாகத்துடன் இணைந்து செயற்பட்ட IAM அதிகாரத்துவத்தை நிராகரிப்பதாகவும் உள்ளது. 

போயிங் இயந்திர வல்லுனர்கள் நாடெங்கிலுமான மற்றும் உலகெங்கிலுமான தொழிலாளர்களின் உண்மையான உணர்வுகளை வெளிப்படுத்தி வருகின்றனர். வாழ்க்கைத் தரங்கள் மீதான தாக்குதல்கள், சமூக சமத்துவமின்மையின் அதிகரிப்பு மற்றும் அடிப்படை சமூக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்குத் தொழிலாள வர்க்கத்திற்குள் பிரமாண்டமான எதிர்ப்பு உள்ளது. போயிங் தொழிலாளர்கள் எடுத்துள்ள நிலைப்பாடானது இந்த உணர்வுகளுக்குக் குரல் கொடுக்கிறது. 

மறியல் அணிவகுப்பு போராட்டத்தில் இருந்த தொழிலாளர்கள் உலக சோசலிச வலைத் தள நிருபர்களுக்குச் சியாட்டில் பகுதியில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவின் தாக்கத்தை விவரித்தனர். மேலும், IAM ஆல் ஒரு தசாப்தத்திற்கும் அதிகமான ஒப்பந்த நீட்டிப்புகளால் இந்த நிலைமை எவ்வாறு மோசமடைந்துள்ளது என்பதையும் விளக்கினர். குறிப்பாகப் போயிங் நிறுவனம் மற்றும் பாதுகாப்பு ஒப்பந்ததாரர் மெக்டொனெல் டக்ளஸ் (McDonnell Douglas)  ஆகியவற்றுக்கு இடையே 1997 ஆம் ஆண்டு ஏற்பட்ட இணைப்புக்குப் பின்னர் போயிங் நிர்வாகம் தரம் மற்றும் பாதுகாப்பு தரங்களை முற்றிலும் கைவிட்டதைப் பற்றியும் அவர்கள் பேசினர். 

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter

“நான் இராணுவத்தில் அதிக பணம் சம்பாதித்தேன்” என்று சமீபத்தில் போயிங் நிறுவனத்தில் பணியமர்த்தப்பட்ட ஒரு இளம் தொழிலாளி உலக சோசலிச வலைத் தள செய்தியாளர்களிடம் தெரிவித்தார். “மெக்டொனால்ட்ஸ் அதிகம் சம்பாதிக்கிறது. ஆல்டி அதிகம் சம்பாதிக்கிறது. சியாட்டில் பகுதியில் ஒரு குடும்ப வீட்டிற்கு வாடகை தோராயமாக $3000- $4,000 டாலர்கள் ஆகும். இங்கு எப்படி வாழ முடியும் என்று தெரியவில்லை. கண்டிப்பாக முடியாது” என்றார். “புதிதாக பணியமர்த்தப்பட்டவர்கள், பழைய ஊழியர்கள், ஓய்வு பெற்றவர்கள், நாங்கள் ஒரு பொதுவான இலக்கிற்காக ஒன்றாக நிற்கிறோம்: நம் ஒவ்வொருவருக்கும் நம் குடும்பங்களுக்கும் சிறந்த வாழ்க்கைத் தரத்திற்கு ஆகும்”  என்று மேலும் குறிப்பிட்டார்.

தொழிலாளர்களின் ஓய்வூதியங்களை தியாகம் செய்த IAM  ஆல் ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு மோசடி வாக்கெடுப்பில் திணிக்கப்பட்ட 2014 கூட்டு உடன்படிக்கையின் விரிவாக்கத்தின் உள்ளடக்கத்தில் போயிங் தொழிலாளர்களின் வெவ்வேறு தலைமுறைகளுக்கு இடையிலான தொடர்பு குறிப்பாக முக்கியமானது. வாக்களிப்பிற்கு முந்தைய மாதங்களில், போயிங் 10,000 புதிய ஊழியர்களை நியமித்ததை தொழிலாளர்கள் நினைவு கூர்ந்து, உடன்பாட்டிற்கு இசைவு கொடுக்க உதவினால் மேலதிக கொடுப்பனவுகளில் கையெழுத்திடுவதாக உறுதியளித்தனர். பின்னர், ஒரு தொழிலாளி நினைவுகூர்ந்தார், “அவர்களில் பாதிப்பேர் அவர்களின் மேலதிக கொடுப்பனவு பெறுவதற்கு முன்னரே பணிநீக்கம் செய்யப்பட்டனர், தொழிற்சங்கம் ஒன்றும் செய்யவில்லை.” 

ஆனால், இன்று இளம் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தை பலமாக ஆதரிக்கின்றனர். “போயிங் நிறுவனத்தில் பணிபுரிவது மிகவும் சிறந்தது என்று கேட்டு நான் இப்பகுதியில் வளர்ந்தேன், “ என்று ஒரு புதிய ஊழியர் உலக சோசலிச வலைத் தள செய்தியாளர்களிடம் தெரிவித்தார். “ஆனால் இப்போது நான் இங்கே இருக்கிறேன், எனது பில்களை செலுத்துவது கடினம். வீட்டுச் செலவு சாத்தியமற்றது”, இந்த வேலைநிறுத்தம் சாமானிய தொழிலாளர்களாலேயே தொடங்கப்பட்டது, IAM  தலைமையால் அல்ல என்று அந்தத் தொழிலாளி தெரிவித்தார். “நாங்கள் இதை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்பதை தொழிலாளர்கள் கலந்துரையாடி தொழிற்சங்க தலைமைக்குக் காட்டியுள்ளனர்,” என்று அவர் கூறினார். 

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter

1989 ஆம் ஆண்டிலிருந்து போயிங்கில் நான்கு வேலைநிறுத்தங்களை சந்தித்த ஒரு மூத்த தொழிலாளி, கடந்த மூன்று தசாப்தங்களாக IAM-ஆல் ஆதரிக்கப்படும் சலுகை ஒப்பந்தங்கள் காரணமாக உண்மையான வருமானத்தில் தொழிலாளர்கள் அனுபவித்த கடுமையான வீழ்ச்சியை விளக்கினார். 

“கடந்த 10 ஆண்டுகளாக சம்பள உயர்வு இல்லை. எனது வாங்கும் சக்தி 1992 இல் இருந்ததை விட இன்று குறைவாக உள்ளது. நான் பணியமர்த்தப்பட்டபோது, குறைந்தபட்ச ஊதியத்தை விட இரண்டரை மடங்கு அதிகமாக சம்பாதித்து வந்தேன். தங்கள் வேலையில் மிக உயர்ந்த வருவாயை அடைந்த தனிநபர்கள் குறைந்தபட்ச ஊதியத்தை விட நான்கு மடங்கு அதிகமாக சம்பாதித்தனர். 

“இன்று, மக்கள் குறைந்தபட்ச ஊதியத்தில் பணியமர்த்தப்படுகிறார்கள், எங்கள் அதிகபட்சம் குறைந்தபட்ச ஊதியத்தை விட இரண்டு அல்லது இரண்டரை மடங்கு மட்டுமே. எமது வாங்கும் சக்தி கணிசமாக குறைந்துள்ளது” என்று அவர் குறிப்பிட்டார்.

போயிங்கின் தொழிலாளர்களை இலாப நோக்கத்திற்காகச் சுரண்டுவது குறித்து அவர் தொடர்ந்து கூறினார், “மக்கள் முழுநேர வேலையாக ஜெட் விமானங்களைக் கட்டியெழுப்ப வேண்டிய அவசியம் இருக்கக் கூடாது, இன்னும் நாம் போராடும் விதத்தில் போராட வேண்டும்... நிறுவனம் நம்மை ஒருமுறைக்கு பயன்படுத்தக்கூடியவர்களாகப் பார்க்கிறது. நாம் ஒருமுறை பயன்படுத்தக்கூடியவர்கள் அல்ல. ” 

ஜனவரியில் அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானத்தின் கதவு வெடித்ததற்கு வழிவகுத்த போயிங் மற்றும் அதன் விநியோகஸ்தர் ஸ்பிரிட் ஏரோசிஸ்டம்ஸ் (Spirit AeroSystems  - முதலில் போயிங்கால் பிரிக்கப்பட்டு பின்னர் மீண்டும் கையகப்படுத்தப்பட்டது) ஆகியவற்றின் மோசமான பாதுகாப்பு மற்றும் தரமான தரநிலைகள் குறித்தும் இந்தத் தொழிலாளி கருத்து தெரிவித்தார்.   

எவரெட் (Everett) ஆலைக்கு வெளியே மறியல் அணிவகுப்புகள் 

“உங்களுக்குத் தெரியும், அது நடந்திருப்பது மிகவும் அருவருப்பான விஷயம். ஆனால் அவர்கள் அந்தப் பிரச்சினையை ஆராய்ந்து மதிப்பீடு செய்தபோது, அந்தப் பிரச்சினை பல வருடங்களுக்கு முன்னரே இருந்து வந்ததாக நான் உறுதியளிக்கிறேன். [கதவுப் பிளக்குகளை அகற்றிய] மெக்கானிக் நிர்வாகம் சொன்னதைச் செய்துகொண்டிருந்தார்…. நீங்கள் ஆழமாக ஆராய்ந்து பார்த்தால், இது தான் தற்போதைய நிலை என்று நீங்கள் கண்டுபிடிப்பீர்கள். ” 

மற்றொரு தொழிலாளி தெரிவித்ததாவது: “கூட்டு ஒப்பந்த நீடிப்பின்போது பழைய நிர்வாகம் எங்களைக் காட்டிக்கொடுத்தது, பின்னர் இந்தத் தலைவர்கள் வெளியேற்றப்பட்டதாக அவர்கள் கூறினர். ஆனால் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டிய நேரம் வந்தபோது, அது ‘பழைய முதலாளியைப் போலவே புதிய முதலாளியாக’ மாறியது.”  

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter

ஆலைக்குச் சற்று வெளியே IAM மாவட்டம் 751 (IAM District 751) அதிகாரிகளுக்காக ஆடம்பரமான புதிய தலைமையகம் கட்டப்பட்டு வருவது குறித்து பல தொழிலாளர்கள் கோபத்துடன் பேசினர். அதேநேரத்தில், IAM ஆனது வேலைநிறுத்த சம்பளத்திற்காக வாரத்திற்கு 250 டாலர்கள் மட்டுமே வழங்குகிறது, இது வேலைநிறுத்தத்தின் மூன்றாவது வாரம்வரை ஆரம்பிக்காது. இது தொழிலாளர்களைப் பட்டினி போடும் மற்றும் மலிவுக் கூலியில்  இரண்டாவது ஒப்பந்தத்தை ஏற்க அவர்களை நிர்பந்திக்கும். 

ஒப்பந்த வாக்கெடுப்புக்கு முன்னதாக, போர்க்குணமிக்க தொழிலாளர்களின் ஒரு குழு, விற்றுத்தள்ளப்பட்ட ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பை ஏற்பாடு செய்யவும், அதிகாரத்தையும் முடிவெடுப்பையும் IAM  எந்திரத்திடமிருந்து சாமானியத் தொழிலாளர்களுக்கு மாற்றுவதற்கும் போராட போயிங் சாமானிய தொழிலாளர் குழுவை நிறுவியது. 

அதன் நிறுவக அறிக்கையில், இந்தக் குழு இவ்வாறு அறிவித்தது: 

முதல் படி இந்த ஒப்பந்தத்தைக் குப்பையில் போடுவது. ஆனால் நாம் விஷயங்களை நம் கையில் எடுக்க வேண்டும். ஒரு “இல்லை” என்ற வாக்கு, IAM அதிகாரத்துவத்தினர் நம்மைக் செவிமடுப்பார்கள் நிச்சயமாக என்று நாம் நினைத்துக்கொண்டே நேரத்தை வீணடிக்க முடியாது. அவர்களின் ரொட்டிக்கு மறுபுறம் வெண்ணெய் போடப்பட்டிருப்பதால் அவர்களின் நிலைப்பாட்டை மாற்ற வாய்ப்பில்லை. 

தொழிற்சங்க அதிகாரிகள் வேலைநிறுத்தத்திற்கு தயாராக எதுவும் செய்யவில்லை என்றும், IAM மாவட்ட 751 தலைவர் ஜான் ஹோல்டன் (Jon Holden) மற்றும் பிற அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர் என்றும், அவர்களின் ஒப்பந்தம் கிட்டத்தட்ட ஒருமனதாக நிராகரிக்கப்பட்டு வேலைநிறுத்தத்திற்கு வாக்களித்ததால் தெளிவாக அதிர்ச்சியடைந்துள்ளனர் என்றும் பல  சாமானிய  குழு உறுப்பினர்கள் உலக சோசலிச வலைத் தளத்திற்கு தெரிவித்தனர். வெளிநடப்பின் முதல் நாளில், மாவட்ட 751 அதிகாரிகள் எவரெட் (Everett) ஆலையின் பல வாயில்களில் மறியல் போராட்டங்களை நிறுத்தவில்லை என்று அவர்கள் கூறினர். 

“அவர்கள் எந்த வேலைநிறுத்த சலுகைகளையும் வழங்க விரும்பவில்லை  எனவே அவர்கள் மூன்றாவது வாரத்திற்கு முன்னர் மற்றொரு ஒப்பந்தத்தை கொண்டு வர முயற்சிப்பார்கள் என்று நான் நம்புகிறேன்,” என்று ஒரு உறுப்பினர் கூறினார். வேலைநிறுத்த ஊதியம் உடனடியாக வழங்கப்பட வேண்டும் என்றும் IAM இன் சொத்துக்களில் உள்ள 300 மில்லியன் டாலர்களில் இருந்து நிதியளிக்கப்பட வேண்டும் என்றும் குழு அழைப்பு விடுத்தது. 

IAM ஆதரவு ஒப்பந்தம் பாரியளவில் நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மாவட்ட 751 தலைவர் ஹோல்டன், ஒப்பந்தத்தில் உறுப்பினர்களின் கவலைகள் என்ன என்பதை அறிய ஒரு கணக்கெடுப்பை நடத்தும் என்று கூறினார். இது ஒரு சிடுமூஞ்சித்தனமான சூழ்ச்சியைத் தவிர வேறொன்றுமில்லை. 

40 சதவீத சம்பள உயர்வு மற்றும் ஓய்வூதியங்களை மீட்டெடுப்பது உள்ளிட்ட தொழிலாளர்களின் கோரிக்கைகள் எதனையும் மீண்டும் கொண்டுவரப்பட்ட ஒப்பந்தம் பூர்த்தி செய்யவில்லை. ஒரு கணக்கெடுப்பின் நோக்கம் தகவல்களை சேகரிப்பதாகும், இதனால் தொழிற்சங்க அதிகாரத்துவமும் நிறுவனமும் இங்கேயும் அங்கேயும் ஒரு சில பைசாக்களைச் சேர்த்து, ஒப்பந்தத்தை தொழிலாளர்கள் கோரிய ஒன்றாக மறுவடிவமைக்க முடியும். 

IAM தொழிற்சங்க இயந்திரத்தின் இந்தச் சூழ்ச்சிகள் பைடென்-ஹாரிஸ் நிர்வாகத்துடன் நெருக்கமான ஒத்துழைப்புடன் நடத்தப்பட்டு வருகின்றன. இது கடந்த வாரம் ஹோல்டனுக்கும் தற்காலிக தொழிலாளர் துறை செயலர் ஜூலி சு (Julie Su) க்கும் இடையிலான சந்திப்பில் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஜனநாயகக் கட்சியும், அத்துடன் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் குடியரசுக் கட்சியினரும், ஈரான், ரஷ்யா மற்றும் சீனாவுக்கு எதிரான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் போர் முனைப்புக்கு போர் விமானங்கள், குண்டுவீச்சு விமானங்கள் மற்றும் ஏவுகணைகளின் பிரதான விநியோகஸ்தராக உள்ள போயிங் நிறுவனத்திற்குப் பின்னால் முழுமையாக உள்ளனர். 

சோசலிச சமத்துவக் கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் ஜெரி வைட் வாஷிங்டன் எவரெட்டில் போயிங் மறியல் போராட்டத்தில் 

பெருநிறுவனங்கள் கட்டுப்படுத்தும் இரண்டு கட்சிகளுக்கு மாறாக,  சோசலிச சமத்துவக் கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் ஜெரி வைட் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களைச் சந்தித்து, அனைத்து தொழிலாளர்களையும் போயிங் நிறுவன தொழிலாளர்களின் போராட்டத்தை ஆதரவளிக்குமாறு அழைப்பு விடுத்தார்.

இன்னும் இரண்டு மாதங்கள் தேர்தலுக்கு இருக்கையில், ஜனாதிபதித் தேர்தலில் டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகிய இரு வேட்பாளர்களும் தொழிலாள வர்க்கத்தின் நலன்களுக்கு முற்றிலும் எதிரானவர்களாக இருக்கிறார்கள். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது பாசிச தாக்குதல்களை ஊக்குவித்து வரும் ட்ரம்ப், தொழிலாளர்களை இன மற்றும் சமூக ரீதியாகப் பிரிக்க  முயல்கிறார். 

ஆயினும் போயிங்கில் வேலைநிறுத்தப் போராட்டங்களில், நடைமுறையளவில் ஒவ்வொரு தேசியத்தைச் சேர்ந்த தொழிலாளர்களும் அவர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கான ஒரு பொதுவான வர்க்கப் போராட்டத்தில் ஒன்றுபட்டுள்ளனர். 

கமலா ஹாரிஸ் மற்றும் ஜனநாயகக் கட்சியினரைப் பொறுத்த வரையில், அவர்கள் உலகெங்கிலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் போர்களைத் தீவிரப்படுத்துவதில் வெறித்தனமாக உள்ளனர். காஸா இனப்படுகொலையிலிருந்து அணுஆயுத போராக வெடிக்க அச்சுறுத்தும் ரஷ்யா மற்றும் சீனாவுக்கு எதிரான போர்கள் வரையில் அவர்கள் தீவிரமாக உள்ளனர்.  

இந்த வேலைநிறுத்தம் தொழிலாள வர்க்கத்தின் மகத்தான சக்தியைக் காட்டுகிறது. ஆனால் தொழிலாளர்கள் இதை IAM தொழிற்சங்கத் தலைவர்களின் கரங்களில் விட்டுவிட முடியாது. இவர்கள் தொழிலாளர்களைச் சோர்வடையச் செய்வதற்கும் மற்றொரு விற்றுத்தள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் மீது வாக்களிக்க அவர்களை நிர்பந்திப்பதற்கும் பைடென்-ஹாரிஸ் நிர்வாகத்துடன் சேர்ந்து சதி செய்வார்கள்.

இங்குள்ள தொழிலாளர்கள் ஒரு சாமானிய தொழிலாளர் குழுவை உருவாக்கியுள்ளனர். அதன்மூலம் முடிவெடுக்கும் திறனும் அதிகாரமும் தொழிற்சாலைத் தளத்தில் உள்ள தொழிலாளர்களின் கரங்களில் இருக்கும். அவ்விதத்தில்,  வாஷிங்டன் அரசுத் தொழிலாளர்கள், ஆசிரியர்கள், துறைமுகத் தொழிலாளர்கள், இரயில்வே தொழிலாளர்கள், வாகனத்துறை தொழிலாளர்கள், ஐரோப்பாவில் உள்ள எயர்பஸ் தொழிலாளர்கள் என அனைவரும் ஒரே போராட்டத்திற்கு முகங்கொடுத்து வருகின்றனர். இத் தொழிலாளர்களுடன் போயிங் தொழிலாளர்கள் ஐக்கியப்பட வேண்டும். 

செவ்வாய்கிழமை நடந்த ட்ரம்ப் மற்றும் ஹாரிஸுக்கு இடையிலான “விவாதமும்”, மேலும் இரு கட்சிகளும் வலதுபுறமாகத் தொடர்ந்து நகரும் நிலையில், ஜெரி வைட் கூறுகையில், போயிங் வேலைநிறுத்தமானது சமத்துவமின்மை, சர்வாதிகாரம் மற்றும் போருக்கு எதிராகத் தொழிலாள வர்க்கத்தின் ஒரு எதிர்-தாக்குதலின் தொடக்கமாக இருக்கக்கூடிய சாத்தியக்கூறைக் கொண்டுள்ளது என்றார். வைட் குறிப்பிட்டதைப் போல, இது, சாமானிய தொழிலாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்தால் மட்டுமே போராட்டத்தை வெல்ல முடியும். 

அதனால் தான் போயிங் தொழிலாளர்களில் ஒரு பிரிவானது, வேலைநிறுத்தத்தை சோர்வடையச் செய்வதற்கும் மற்றொரு பிரிவு விற்றுத்தள்ளப்பட்ட ஒப்பந்தத்தைத் திணிப்பதற்குமான முயற்சிகள் குறித்து தொழிலாளர்களை எச்சரிப்பதற்காக, போயிங் தொழிலாளர்கள் சாமானிய தொழிலாளர் குழுவை உருவாக்க முன்வந்துள்ளனர். “நமது போராட்டத்தை ஒட்டுமொத்தத் தொழிலாள வர்க்கத்தின் ஒரு இயக்கமாக மாற்றுவதே, போயிங் தொழிலாளர்களுக்கு முன்னிருக்கும் ஒரே பாதையாகும். மேலும், அவர்கள் நம்முடன் இருக்கும் அதே பிரச்சினைகளுக்காகப் போராடி வருகின்றனர்” என்பதை சாமானிய தொழிலாளர் குழு தெளிவுபடுத்தியது. 

சாமானிய தொழிலாளர் குழுவைத் தொடர்பு கொள்ள, (406) 414-7648 என்ற எண்ணுக்கு ஒரு குறுஞ்செய்தி அல்லது boeingworkersrfc@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும். எங்களைத் தொடர்புகொள்ள, இந்தக் கட்டுரையின் (ஆங்கிலத்தில்) கீழே உள்ள படிவத்தை நிரப்பவும். 

Loading